Monday 31 July 2023

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது!

 

பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன!

ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல். அதில் இரண்டு மாநிலங்கள் பாஸ் கட்சிக்கு உரியது. அதனால் அது பற்றி நாம் அதிகக் கவலைப்படுவதில்லை.  அது மலாய்க்கரர்களின் தலையெழுத்து!

ஆனால் நம்மால் அப்படியெல்லாம் சும்மா இருந்துவிட முடியாது. இந்தியர்களின் எதிர்காலமும் இதில் அடங்கும்.

நாம் நீண்ட காலம் தேசிய முன்னணி கூட்டணியில் ஏமாற்றப்பட்டவர்கள். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக. கடைசியில் நம்மை அவர்கள் பழங்குடி மக்களின் நிலைக்குத் தள்ளிவிட்டனர். அதற்காக  ம.இ.கா.வுக்கு ஒரு சபாஷ்!

இப்போது நடப்பது, எந்த ஒரு கட்சிக்கும் போதுமான பலம் இல்லாததால், இதுவும் ஒரு கூட்டணி தான். அதன் பலன் தான் ஒற்றுமை அரசாங்கம்.  பிரதமர் அன்வார் தான் நினைத்தது போல செயல்பட முடியாத ஒரு சூழலில் தான் அவர் இருக்கிறார்.   இருந்தாலும் தன்னால் முடிந்ததை அவர் செய்கிறார் என்று தான் சொல்ல முடியும்.

எதிர்தரப்பைப் பாருங்கள். யாரையாவது நமபக்கூடிய ஒரு மனிதரைச் சொல்லுங்கள்.  எல்லாரும் ஊழல் புரிந்தவர்கள். சரி, அதை விட்டாலும் அவர்கள் நாணயஸ்தர்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு யாரையாவது  சுட்டிக்காட்ட முடியுமா?  நாம் முன்னாள் பிரதமர் முகைதீனையே எடுத்துக் கொள்ளுங்கள். இவர் இந்தியர் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர். நமது கோவில்கள், நமது மொழி, நமது முன்னேற்றம்  இது பற்றி கவலை உள்ளவரா,  சொல்லுங்கள்?  நமது மலாய் ஆட்சியாளர்கள்  தேர்தல் நேரத்தில் "அல்லா" பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்று சொல்லியும் அவர் எழுப்புகிறார். அவர்  மலாய் ஆட்சியாளர்களை மதிக்கவில்லை என்பது தானே பொருள்?   அது மட்டுமா? தேர்தல் நெருங்க நெருங்க அவர் நடப்பது "கிறித்துவ" ஆட்சி என்று நிச்சயமாக சொல்லுவார்!  எதிர்பார்க்கலாம்!

அடுத்து அவர்களின் பெருந்தலைவர் என்றால் டாக்டர்  மகாதிர்.  இவரை ஒரு தலைவர் என்று சொல்லவே அருகதையற்றவர்.  ஓர் இந்தியராக இருந்தும் இந்தியர்களின் பரம எதிரியாக செயல்பட்டவர்.  துன் சாமிவேலு அவர்களால் தொடங்கப்பட்ட "மைக்கா ஹோல்டிங்ஸ்"   அதன்  மொத்த அழிவுக்குக் காரணமே இவர்தான்.  நாட்டின் நலன்,மக்களின் நலன் என்பதைவிட தனது நலன், தனது குடும்ப நலன் - இப்படித்தான் அவர்  செயல்படுவார்!

இன்றைய பிரதமர் அன்வார் தான் இவர்களில் மாறுபட்டவராகத் தோன்றுகிறார். நம் இனத்தவர் மீது அக்கறை உள்ளவராகச் செயல்படுகிறார்.  அவருக்கு நாம் போதுமான நேரம் கொடுக்க வேண்டும். இப்போதே நம்மைக் கைவிட்டு விட்டார் என்று  புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

நாம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். நம் பிரதிநிதிகளும் நமது பிரச்சனைகளைப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய நிலை என்பது நாம் பழங்குடி மக்களை விட நமது தரம் உயர்த்தப்பட வேண்டும்.

தேர்தல் பிரச்சாரத்தை அதிகம் நம்பிவிடாதீர்கள்!


Sunday 30 July 2023

நாட்டுப்பற்று இல்லாத ஒரு மனிதர்!

 

டாக்டர் மகாதிர், நமது முன்னாள் பிரதமர், அரசியலில் எப்படி நுழைந்தவர் என்பதை நம் நாடே அறியும்.

அவரது பலமே இனங்களிடையே அச்சத்தை தோற்றுவிப்பது தான். இப்போது அவர் புதியதோர் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறார். அதாவது சீனர்களையும், இந்தியர்களையும் வந்தேறிகள் என்றும் இந்த நாட்டை உங்கள் நாடு  என்று சொந்தம் கொண்டாடாதீர்கள் என்று மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

இப்படி சொல்லுவதின் மூலம் தாநும் ஒரு  வந்தேறி என்பதை மற்றவர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகக் கூட இருக்கலாம். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அவர் தனது  செல்வாக்கைப் பயன்படுத்தி  தனது இந்தியர் அடையாளத்தை வலுக்கட்டாயமாக  அழித்தார் என்பது வரலாறு. ஆகவே அவரும் வந்தேறி தான். அதற்கு இன்றும் சான்றுகள் உண்டு.

ஆமாம், அவர் ஏன் இப்போது, இந்த சட்டமன்ற தேர்தல் காலத்தில், அவர் மீண்டும் வந்தேறிகள் பிரச்சனையை எழுப்ப வேண்டும்?  இனக்கலவரத்தை  தூண்டுவதற்கு தேர்தல் காலம் தான்  சரியான காலம் என்பதை  அவர் உணர்ந்திருக்கிறார்.  காரணம் அதன் பலனை அவர் 22 ஆண்டுகாலம்   அனுபவித்தவர். மீண்டும் வாய்ப்பில்லை என்று அவருக்குத் தெரியும்.    ஆனாலும் முயற்சி செய்து பார்க்கிறார்!

விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ இந்த முறை விதி அவருக்குக் கை கொடுக்கவில்லை.  அரசியலில் நுழையும் போது மே 13 கலவரத்தில் மூலம் தான் அரசியலுக்குள் நுழைந்தார்.  அதையே தான் இப்போது அரசியலிலிருந்து விரட்டியடிக்கும் போதும் 'கலவரம்'  தான் தனக்குரிய மரியாதை என்று நினைக்கிறார்!  நாடாளுமன்றத்  தேர்தலில் அவருக்கு  போதுமான அடி விழுந்துவிட்டது. ஆனாலும் அது முழுமை அடையவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அது முழுமை அடையும்

ஆனாலும் நாடு அமைதியாக இருப்பதில் அவருக்கு நாட்டமில்லை. தான் எப்படி கலவரத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ போகும் போதும் அப்படியே தான் போக வேண்டும் என்று அவர் நினைக்கிறார்!  ஆனாலும் அப்படி ஒரு தண்டனை அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. மலேசியர்கள் விழித்துக் கொண்டனர். இந்த இன அரசியலுக்குள் யாரும் விழ தயாராக இல்லை. 

மக்களை அச்சப்படுத்தி,  குழப்பம் விளைவித்து, பயமுறுத்தி அரசியல் விளையாட்டு விளையாடுவதில் மக்கள் தயாராக இல்லை. டாக்டர் மகாதிருக்கும் விளையாடும் வயதில்லை. அவரும் பொறுப்புணர்ந்து  நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டுப்பற்று என்பதெல்லாம் டாக்டர் மகாதிர் அகராதியில் இல்லை!

Saturday 29 July 2023

பேராசிரியர் இம்முறை போட்டியிடவில்லை!


 பினாங்கு மாநில துணை முதல்வர்,  பேராசிரியர் இராமசாமி அவர்கள் இம்முறை  எந்தத் தொகுதியிலும் நிறுத்தப்படவில்லை.  அதாவது இந்தப் பதினைந்தாவது  தேர்தலில்  அவர்  போட்டியிடவில்லை.

இது அரசியல். நம்மால் எதனையும் கணிக்க முடியாது.  எது முடியும் எது முடியாது என்பதை நம்மால் சொல்ல முடியாது.

நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது  அவர் வகித்த துணை முதல்வர் பதவி  யார் நிரப்புவார்  என்பது தான்.  அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம்.  எந்த குப்பனும் வரலாம் எந்த சுப்பனும் வரலாம்.  நமக்கு அதில் பிரச்சனையும் இல்லை.

ஆனால் நமக்குத் தேவை இராமசாமி போன்ற தலைவர்கள் தான். நல்ல படிப்பாளிகள்,  தமிழர் பிரச்சனைகளை அறிந்தவர்கள், நமது சமூகத்தை நல்ல முறையில் வழி நடத்துபவர்கள் - அவர்களைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.

பேராசிரியர் இராமசாமி அவர்கள் தேர்தலில் போட்டி இடவில்லை  என்றாலும் அவர் தொடர்ந்து இந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம்  விரும்புகிறது.

நல்ல தலைவர்களை இந்த சமூகம் நீண்ட நாள்களாகக் கொண்டிருக்கவில்லை.  துன் வி.தி.சம்பந்தனுக்குப் பிறகு  வந்தவர்கள் அனைவருமே  இந்த சமூகத்தைக் கைவிட்டுவிட்டனர். இராமசாமி அவர்கள் மாநில அளவில் தான் துணை முதல்வராக இருந்தாலும்  அவருடைய செல்வாக்கு என்னவோ  மலேசிய அளவில்  இல்லை என்று சொல்லிவிட முடியாது.  அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார்.

நம்முடைய  விண்ணப்பம் என்னவென்றால்  அவர் துணை முதல்வராகத் தொடர்ந்தால் நமக்கு மகிழ்ச்சியே.  அப்படி ஒரு வாய்ப்பில்லை  என்று வந்தால்  அந்தப் பதவி மீண்டும் ஒரு தமிழருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பது தான்.  தமிழர் மட்டும் அல்ல தமிழ் அறிந்தவராகவும் இருக்க வேண்டும். தமிழர் பிரச்சனைகளை அறிந்தவராக இருக்க வேண்டும். ஜ.செ.க. வுக்கு தலை ஆட்டுபவராக இருந்தால்  எதுவும் நடக்காது. சீனர்கள் பிரச்சனைகள் வெற்றிகரமாக முடியும். தமிழர் பிரச்சனைகள் அனைத்தும் தள்ளாடும்.  அதற்காகத்தான் நாம் அஞ்சுகிறோம்.

பேராசிரியர்  தேர்தலில் போட்டியிடவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது தான்.  அது பினாங்கு மாநில அரசியல். அவர் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவருடைய சேவை தொடர வேண்டும். நமது இனம் காக்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர் செய்த பணிகள் தொடர வேண்டும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Friday 28 July 2023

இளைஞர்களே! தவற விடாதீர்கள்!

 



மித்ரா, இந்திய சமூக  உருமாற்றத் திட்டத்தின் கீழ் நமது இளைஞர்களுக்காக பல பயிற்சி திட்டங்களை  அறிவித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றுமே இல்லாமல், எந்தவொரு பயிற்சியும் இல்லாமல், எந்தவொரு வேலையும் இல்லாமல், நாங்கள் சிறைக்குப்  போயே ஆவோம் என்று அடம் பிடிக்காமல் ஏதோ ஒரு பயிற்சியைக் கற்றுக் கொண்டு நல்ல, கௌரவமாக பிழைப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பது தான் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்திய சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா அமைப்பு.

இப்போது அவர்கள் பல பயிற்சிகளை இந்திய இளைஞர்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமே தேடிப்போய் தான் அந்தப் பயிற்சிகளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.  வீடைத் தேடி ஒன்றும் வராது. முயற்சி என்பது நம்முடையதாக இருக்க வேண்டும்.

இதைப் படிக்கும் இளைஞர்கள் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள மித்ராவின் அகப்பக்கத்துக்குப் போனால் இன்னும் விரிவாக பல செய்திகள் கிடைக்கும்.

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதிக்குள் செய்திட வேண்டும். முதலில் வரும் 150 விண்ணப்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமைக் கொடுக்கப்படும் என்று மித்ரா கூறுகிறது.

வாருங்கள் இளைஞர்களே! வரலாறு படைப்போம்!

Thursday 27 July 2023

எல்லாவற்றிலும் முதலிடம் பெறுங்கள்!

 


நம் மலேசியர்களிடம் எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற  எண்ணம் அரைகுறையாகத் தான் இருக்கிறதே தவிர முழுமையாக இன்னும் வரவில்லை  வீட்டில் பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அவர்களைத்தான்  பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் 'வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள் வெளியே அவசியமில்லை' என்று சொல்லி பிள்ளைகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்! நம் வீடு தான் நமது பொறுப்பு வெளியே நமது பொறுப்பல்ல என்பது சுயநலம் தான். என்ன செய்வது?

இந்த நிலையில் தான் துப்புரவு பணியாளர்    ஒருவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்  தெரிவித்திருக்கிறார் மலாய்ப் பெண்மணி ஒருவர்.  அடிக்கடி பயணம் போகும் அவருக்கு  எண்ணைய் நிலையங்களில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்.  ஆனால் அன்று அனைத்தும் பொய்யாகி விட்டன!

தாப்பா நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற போது தான்  அவருக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. இது நாள் வரை பார்த்தது வேறு; இன்று பார்த்தது வேறு.  அந்தப் பெண்மணியின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்: "கழிவறைகள்  கண்ணாடியைப் போல சுத்தமாக இருந்தன. அந்தத்  துப்புரவு பணியாளர்  மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். என்னிடம் மிகவும் கனிவோடு பேசினார்" என்று அந்த துப்புரவு பணியாளரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அந்த மலாய்ப் பெண்மணி!

அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில்  தனது கருத்தை தெரிவிக்க எந்த வசதியும் இல்லாததால் அந்த துப்புரவு பணியாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது முகநூலில்  அவரின் செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆமாம், அவர் செய்கின்ற அவரது வேலை குத்தகை அடிப்படையில் நடக்கிறது. அதனை நிரந்தர பணியாக மாற்ற உதவும்படி அவரது முயற்சிக்கு அதரவளித்து அதனை வைரலாக்கும்படி  கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனைத்தான் அந்தப் பெண்மணி வைரலாக்கி அந்த துப்புரவு பணியாளருக்கு உதவும்படி  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முன்பொருமுறை படித்த  உலக நாயகன் கமலஹாசன் பற்றியான செய்தி. அவரது தாயார் சொல்லுவாராம் "நீ குப்பை அள்ளினாலும் அதிலும் முதன்மையானவனாக வரவேண்டும்" என்று. அதைத்தான் அவர் செய்து காட்டியிருக்கிறார். சினிமா உலகில் அவர் தான் முதன்மையானவர்! அதே போல இந்த துப்புரவு பணியாளர் தனது துப்புரவு பணியில் முதன்மையானவர். பாராட்டுகள்! 

உங்கள் பணி நிரந்தரமாக வாழ்த்துகள்!

Wednesday 26 July 2023

நமக்கு எந்த தகுதியும் இல்லை!

 

                                                                   Dato Abdul Malik

ஊழல் தடுப்பு ஆணையம் இப்போது யார் யாரையோ கைது செய்து கொண்டிருக்கிறது.

ஆணையத்தைப் பொறுத்தவரை கைது செய்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள்  என்று அவர்கள் சொல்லுவதில்லை. நாமும் அதனை எதிர்பார்ப்பதில்லை.  குற்றவாளி என்று சொன்னால் போதுமான ஆதாரங்கள் இன்றி யாரையும் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. விசாரணைகள்,  தொடர் விசாரணைகள்  என்று அது ஒரு நீண்ட காலப் போராட்டம். ஒரு நாளைக்குள் முடிவுக்கு வரக்கூடிய ஒன்றல்ல.

நம்மில் சிலர் பண்ணுகின்ற அட்டகாசங்களைப் பார்க்கும் போது  நமக்கு அது வேதனையைத் தருகிறது.  டத்தோ மாலிக்  ஒரு தமிழர் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழர் என்றால் சிலருக்குக் கொண்டாட்டம்.  ஒரு தமிழன் நல்ல நிலையில் இருந்தால் வயிறு எரியும். அவன் கெட்டுப் போனால்  மனம் பூத்துக் குலுங்கும்! தமிழன் முன்னுக்கே வரக்கூடாது  என்று அலையும் ஒரு கூட்டம் தான் பறையடித்துப் பல்லைக்காட்டுகிறது!

இன்று, நமது நாட்டில், தமிழ் முஸ்லிம்கள், செட்டியார் சமூகத்தினர்  - இவர்கள் தான் நமது அடையாளங்கள்.  வியாபாரிகள், பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் என்றால் வேறு தமிழர்கள் யாரையும் நம்மால்  சுட்டிக்காட்ட முடியவில்லை.  

இந்த சூழ்நிலையில் நம்மில் ஒருவர்  மீது   ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டு வந்தால் அதனைப் பறை அடித்து கொண்டாட வேண்டுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.  அவர் தவறு செய்தாரா என்று நிருபிக்க  ஓரிரு நாள் போதாது.  தப்பு செய்தவன் உப்புத் தின்று தான் ஆக வேண்டும். அதில் சந்தேகமில்லை.  டத்தோ மாலிக் ஊழல் புரிந்திருந்தால் அதற்கானத் தண்டனையை அவர் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். 

ஊழல் தடுப்பு ஆணையம் எத்தனையோ சீன வணிகர்களைக் கைது செய்திருக்கிறது. இலஞ்சம் வாங்கியதாக எத்தனையோ மலாய்க்காரர்களைக் கைது செய்திருக்கிறது.   அந்த சமுகத்தினர்கள்  என்ன சொன்னார்கள்? "நீ தவறு செய்திருந்தால் தண்டனையை அனுபவி" என்பது தான் அவர்களின் நிலை. அதற்கு மேல் செய்ய என்ன இருக்கிறது? அவர்கள் யாரும் அந்தக் கைதுகளைப் பறை அடித்துக் கொண்டாடவில்லை. 

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஒரு தமிழர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம். அத்தோடு நிற்பதில்லை. ஒரு சமூகத்தையே கேவலப்படுத்துகிறோம். அதாவது நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்கிறோம்.

தொழில் செய்பவர்களுக்குப் பல இடையூறுகள் உள்ளன. தொழில் செய்பவர்களுக்கு அது புரியும். டத்தோ மாலிக் பல இடையூறுகளைக் கடந்து வந்தவர். இளம் வயதிலேயே சாதனைகள் பல புரிந்தவர். இன்றைய நிலைக்கு அவர் வருவதற்குப் பல கஷ்டங்களை அவர் அனுபவித்திருப்பார்.  சும்மா யாரும் அவருக்குப் பணத்தை தூக்கி கொடுத்து விடவில்லை.

நண்பர்களே! யாரையும் உங்கள் விருப்பத்திற்குத் தீர்ப்பிடாதீர்கள். உங்களால் முடியாததை டத்தோ மாலிக் செய்து காட்டியிருக்கிறார். ஏன் உங்களால் முடியவில்லை? நீங்கள் தான் மற்றவர் வீழ்ச்சியைக் கண்டு களிப்படைகிறீர்களே!  எல்லாமே நமக்குப் பாடம் தான்.  டத்தோ மாலிக் போன்றவர்கள் இன்று வீழ்ச்சி அடைந்தாலும்  நாளையே பழைய நிலைக்கு வந்து விடுவார்.  அந்தத் திறமை அவருக்கு உண்டு.  அது தான் தமிழர்களின் தனித்திறமை. நீங்கள் என்ன செய்வீர்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாது! 

தமிழர்களுக்குள்ளே தட்டிக் கொடுத்து முன்னேற உதவுங்கள்!

Tuesday 25 July 2023

தாயில்லாமல் நானில்லை!!

 

பொது இடங்களில்  குழந்தைகள் திடீரென உச்சா போவதும், தீடீரென ஆயி போவதும் புதிது ஒன்றுமல்ல!

இது போன்ற காட்சிகளை நாம் தினசரி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  இதனைப் படம் பிடித்து முகநூலில் போடும் போது அது ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல  வைரல் ஆகி விடுகிறது!

பொது இடங்களில் இப்படி நடப்பது  சரியில்லை என்று தெரிகிறது. இயற்கை உபாதைகளைக் கழிக்க உடனடி இடம் இல்லாத போது எங்கோ ஒரு சிறிய இடம் இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வது மனித இயல்பு.

அந்தத் தாய் என்ன செய்வது என்று தெரியாமல் தான் அப்படி எளிதான வழியைக் கையாண்டிருக்கிறார்!  பிரச்சனை என்னவென்றால் அந்தத் தாயும்,  இப்படித்தான் அவருடைய தாயும்,   அவரைப் பழக்கப் படுத்தியிருக்கிறார்!  இப்போது இந்தத் தாய் அவருடைய அடுத்த தலைமுறையை  இப்போதே பழக்கப்படுத்துகிறார்!

ஆனாலும் நமது நாட்டில் கழிப்பிடங்கள் நிறையவே இருக்கின்றன. கடைகளில் அந்த வசதிகள் இருக்கின்றன. ஆபத்து அவசரத்திற்கு பொதுவாக எல்லா இடங்களிலும் அந்த வசதிகள் இருக்கின்றன. இந்தத் தாய் குறுக்கு வழியைப் பயன்படுத்தியிருக்கிறார். அவ்வளவு தான்.  இப்போது 'அவசரம்'  யாருக்கு? குழந்தைக்கா அல்லது தாய்க்கா? நமக்கு என்னவோ தாய்க்குத் தான் அவசரம் என்று தோன்றுகிறது!  அதன் காரணமாகத்தான் அருகிலேயே களத்தில் இறங்கிவிட்டார்!

இருந்தாலும் இது போன்ற செயல்கள் வரவேற்கத்தக்கது அல்ல. குழந்தைகளைத் தவறான முறையில் வழி நடத்துகிறோம். அதற்குக் காரணமானவர்களே பெற்றோர்கள் தான்! பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் மலேசியரிடையே இன்னும் வரவில்லை. சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். கடைப்பிடிக்க மட்டும் தயங்குகிறோம்.

முன்பெல்லாம் வசதிகள் இல்லை என்று சொல்லி தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தோம். இப்போது அப்படி ஒரு நிலைமை இல்லை. சுத்தம் சுகம் தரும் என்பெதெல்லாம் பள்ளியோடு போயிற்று.  கடைப்பிடிக்கின்ற பழக்கம் தான் இல்லை.

ஆனால் என்ன சொன்னாலும் சரி, பெற்றோர்கள் மட்டுமே, பொறுப்புக்கு உரியவர்கள். வேறு யாரும் அல்ல. பெற்றோர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். வருகின்ற தலைமுறை வியாதிகள் இல்லாத  தலைமுறையாக இருக்க வேண்டும்.

சொத்துகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக வியாதியற்ற சமூகமாக வருங்கால தலைமுறை இருக்க வேண்டும்!

Monday 24 July 2023

கல்விக்கான உதவி தேவை தான்!!


மித்ராவின் தலைவர் டத்தோ ரமணின் அறிவிப்பை நாம் மனம் திறந்து வரவேற்கிறோம்.

பொதுவாகப் பார்க்கும் போது இந்த முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது  என்று சொல்லலாம். இந்த முறை என்றில்லாமல் வருங்காலங்களிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது இந்திய சமுதாயத்தின் தேவை.  அதற்கு மித்ரா அமைப்பு கைக் கொடுக்கும் என நம்பலாம்.

கல்வி கற்பவருக்குப் பண உதவி என்பது தேவையாக இருக்கலாம். அது மித்ராவுக்கு, பணத்தை வெளியாக்குவதில் ,  எளிமையான வழி என்பதும் உண்மை. அதனை நாம் குறை சொல்ல ஒன்றுமில்லை என்று சொன்னாலும் வேறு சில துறைகளை மித்ரா மறந்துவிடக் கூடாது.

இந்தியர் பொருளாதாரம் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். உதவிகள் மறுக்கப்படுகின்றன என்று கூக்குரல் இடுகிறோம். அந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவது  என்பதற்கான வழிமுறைகள்  கூட நம்மிடம் இல்லை

சரி, அது பற்றி நாம் காலங்காலமாகப் பேசி ந்மக்கு எந்த வழியும் தெரியவில்லை. இன்னும் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.

நமக்குத் தெரிந்த ஒரு வழியைக் காதில் போட்டு வைப்போம். நடுத்தரத் தொழிலில் உள்ளவர்கள், சிறு,குறு தொழிலில் உள்ளவர்கள் இன்னும் அதற்குக் கீழே போனால்  தள்ளு வண்டுகளில் சிறிய வியாபாரங்களில் உள்ளவர்கள் இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் உதவி பெற தகுதியுள்ளவர்கள் தான்.

ஆனால் இங்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் என்றால் தள்ளு வண்டிகளில், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார்களில், சிறு லோரிகளில் வியாபாராம் செய்பவர்கள் தான். இவர்கள் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். இவர்கள் றான் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.  

இவர்களைப் போன்றவர்களைத்தான் மித்ரா அதிகக் கவனத்தில் கொள்ள  வேண்டும்.  இவர்கள் தான் கடனுக்காக மித்ராவின் முன் வாசலில் நிற்பவர்கள்!  அவர்களின் தேவை அதிகம்.  ஆனால் அவர்கள் தேவை எல்லாம் ஒரு சில ஆயிரங்கள் தாம். இலட்சக்கணக்கில் அவர்கள் கடன் கேட்பதில்லை என்பது உண்மை.

இவர்களைத்தான் நாம் சிறிய வியாபாரிகள் என்கிறோம். பண முதலீடு இல்லாமல் ஏதோ ஒரு சிறிய தொகையைக் கொண்டு போராடிக்கொண்டு இருப்பவர்கள். இன்னும் ஓர் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்தால் தங்களது தொழிலை இன்னும் சிறப்பாக, இலாபகரமாகக் கொண்டு செல்ல முடியும் என்னும் நம்பிக்கை உடையவர்கள்>

ஆனால் இப்போது மித்ரா கடைப்பிடிக்கும் நடைமுறைகள்  இவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. கடன் வாங்க மனு செய்யும் மனுபாரங்கள்  பெரும் தொழிலுக்குத்தான் உபயோகமாக இருக்கும். இவர்களுக்கல்ல.  பாரங்களை எளிமையாக்குங்கள் என்பதே நமது வேண்டுகோள். தங்களது வியாபாரங்களைப்  பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு நிதி உதவி செய்யுங்கள்.  வங்கி செய்கின்ற நடைமுறைகளை நீங்களும் பின்பற்றினால் ஆகப்போவது ஒன்றுமில்லை!

புதிய நடைமுறைகளைக் கொண்டு வாருங்கள். எளிதாக்குங்கள். பட்டுவாடா செய்யுங்கள்!

Sunday 23 July 2023

மணிப்பூர் பற்றி எரிகிறது!

 

                             இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது! 

இந்தியாவின் வட மாநிலங்களின் ஒன்றான மணிப்பூர் என்கிற சிறிய   மாநிலம்,  பற்றி எரிவதாக சமீபத்திய செயதிகள் கூறுகின்றன. மலைகள் நிறைந்த மாநிலம் அத்தோடு மலைவாழ் மக்கள்  அதிகம் வாழும் ஓர் இந்திய மாநிலம்.

இந்த மாநிலத்தின் அமைப்பை எடுத்துக் கொண்டால் அது வங்க தேசம், சீனா, மியான்மார் போன்ற நாடுகளை ஒட்டியும் உள்ள ஒரு மாநிலம் என்று சொல்லப்படுகின்றது. அந்த மக்களும் பார்ப்பதற்கு சீனர் அல்லது பர்மியர் போன்ற தோற்றம் உடையவர்கள்  போலத் தோற்றத்தைக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது நடப்பது இனக் கலவரம்  என்று சொல்லப்படுகின்றது. சுமார் 77 நாள்கள் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டபின்னரும் இந்தியப் பிரதமர் தனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார். அதில் உண்மை இருக்கலாம். காரணம் அவர் வெளி நாடு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அந்த செய்தி அவருக்குப் போய்ச்  சேராமல் இருந்திருக்க வாய்ப்புண்டு.

இனக்கலவரம் என்று சொன்னாலும் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது அது அப்படித் தோன்றவில்லை. மதக்கலவரங்களில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஸ்ரீலங்காவில் இன அழிப்பு நடந்ததே  அதுவே இங்கும் நடந்தேறியிருக்கிறது.  அப்பாவி மக்கள் மீதான அதே பாணி தாக்குதல்.

சுமார் 300 கோவில்கள்  எரியூட்டப்பட்டிருக்கின்றன. 1500 வீடுகள் சாம்பலாகி விட்டன. எல்லாமே அதிகாரப்பூர்வமற்ற செய்திகள். பிரதமருக்கு இந்த செய்திகள் கொடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனராம்! உடனடி நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்.

இதற்கிடையே மேலும் சில செய்திகள் நம்மை அதிரச் செய்கின்றன. மதக் கலவரங்கள் என்றால், குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் ஏதோ ஒரு திருவிழா போன்றே கொண்டாடப்படும்! பெண்கள், குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவர்.  அது போதாது என்பதனால் இளம் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர்.  சுற்றிலும் இளைஞர் கூட்டம், கைகளில் கம்புகளோடு  இரண்டு இளம் பெண்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்டதாம்.

நாட்டின் பிரதமரோ "இப்படி நூற்றுக்கணக்கில் நிகழ்வுகள்  தினசரி  நடக்கின்றன! நான் என்ன செய்ய முடியும்?" ஏன்று தனது இயலாமையை இயம்பியிருக்கிறார்! நம்மால் என்ன செய்ய முடியும்?

மணிப்பூரில் நடக்கும் இந்த அழிப்பு வேலை எப்போது முடிவுக்கு வரும்  என்று நம்மால் சொல்ல முடியாது. முடியும் வரை அது தொடரத்தான் செய்யும். போராளிகள் பின் வாங்கி விட்டால் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விடும் 

அழிப்பு தொடரும் என்றே தோன்றுகிறது!

Saturday 22 July 2023

மளிகைக்கடைகளின் சுத்தமோ! சுத்தம்!

 

இப்போதெல்லாம் வருகின்ற செய்திகள் நம்மை அதிர்ச்சியில்  உறைய  வைக்கின்றன.

சுத்தம், சுகாதாரம் என்று பேசுகிறோமே தவிர அதை கடைப்பிடிப்பதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதுவும் குறிப்பாக  மளிகைக்கடைகள், பேரங்காடிகள்  என்று எதை எடுத்துக் கொண்டாலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

நம்மைக் கேட்டால் அரசாங்கத்தைத்தான் குறை சொல்லுவோம். நம்மால் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் 1,00,000 வெள்ளி அபராதம் விதித்தால்  அதற்குப் பின்னர் யாரும் செய்யத் தயங்குவார்கள். இப்போது அவர்கள் சும்மா ஓர் நூறு வெள்ளிக் கொடுத்து பிரச்சனையை மூடி மறைத்து 
 விடுகிறார்கள்.

இது முற்றிலுமே அரசாங்கத்தின் தவறாகத்தான் நான் நினைக்கிறேன். கடுமையான அபராதம் இல்லாத நிலையில் நாட்டில் எதுவும் நடக்கும். கடுமையான அபராதம் ஒன்றே இது போன்ற பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

எலி தின்றபிறகு தான் மனிதர் சாப்பிடுவது என்றால் இது என்ன கொடூரம் என்று தான் தோன்றுகிறது. எலி என்பதே ஒரு விஷப்பிராணி.  அது எத்தகைய விஷம் வாய்ந்தது என்று இதற்கு முன் பல செய்திகளைப் படித்திருக்கிறோம். அது சாப்பிடுவதை  மனிதர் சாப்பிட்டால்  நிச்சயம் அது சாவில் தான் போய் முடியும். தெரியாமல் சாப்பிட்டாலும் அது வேறுவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆனாலும் இது போன்ற பிரச்சனைகளைச் சுகாதார அமைச்சால் தீர்க்க முடியவில்லை என்று தான் தோன்றுகிறது. சட்டங்கள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை  ஒன்று இலஞ்சம் வந்து புகுந்து விடுகிறது. அல்லது இனம் மூக்கை நுழைக்கிறது. இந்த நிலையில் எங்கே நீதி கிடைக்கப் போகிறது?  சுத்தத்தைப் பற்றி கவலைப்பட ஆளில்லை! இது தான் நிலைமை!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பவர்களுக்கு என்றென்றும் கத்தி தலைக்கு மேல்  தொங்கிக் கொண்டுதான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் செய்வது நமக்கே திரும்பி வரும்!

இது போன்ற உணவு பொருட்களில் எலிகளை மேய விடுவது மகா பாவம். இது மகா அலட்சியம்.  அது மளிகைக் கடையோ அல்லது பெரும் அங்காடியோ  மிகவும் கண்டிக்கத் தக்க ஓர் அலட்சியம். இது மளிகைக் கடையாக இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். பேரங்காடிகள் தங்களது உணவு பொருட்களை பாதுகாப்போடு தான் வைத்திருப்பார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! அதுவே எமது வேண்டுகோள்!

Friday 21 July 2023

கை நீட்டுவதை குறையுங்கள்!


 மாணவர்களை அடிப்பதே குற்றச்செயல் என்பது தான் இன்றைய நிலைமை.

ஆனாலும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. காரணம் தெரியவில்லை. சொல்லப்படுகின்ற காரணம்  பையன் வீட்டுப்பாடம் செய்யவில்லை  மற்றும்  வகுப்பில் பாடத்தில் கவனம் செலுத்ததுவதில்லை.

இதெல்லாம் எப்போதும் நடப்பது தானே! இதற்கா தண்டனை! என்கிற நிலைமைக்கு நாமும் வந்துவிட்டோம்.

பெற்றோர்கள்  பையனின் கல்வியில் கவனம் செலுத்தியிருக்கலாம். கல்வியில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஆசிரியர்கள்  எந்தத் தண்டனையும் கொடுக்க மாட்டார்கள்.  பெற்றோர்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை.

ஆசிரியர்கள்  இயற்கையாகவே தங்களது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் அக்கறை உண்டு.   அது எல்லா ஆசிரியர்களுக்கும் உரியது தான்.  ஒரு சில மாணவர்கள் குறும்பு செய்வதால்  வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களையும் அது பாதிக்கும் என்பதால் தான் ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.  முதலில் அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.  பெற்றோர்கள் சொன்னாலும் பிள்ளைகள் கேட்பதில்லை என்பது தான் இன்றைய நிலைமை.

இப்படி ஒரு நிலைமையில் தான் ஆசிரியர்கள் "எக்கேடு கெட்டாவது போ!" என்று கைகழுவி விடுகிறார்கள்! மாணவர்கள்  மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை உள்ளவர்கள் பிரம்பை கையில் எடுக்கிறார்கள்! அது தவறு என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை!

நமது பெற்றோர்கள் அந்தக் காலத்தில் சொல்வதுண்டு.  முழங்காலுக்குக் கீழே அடியுங்கள் என்பார்கள். அது கொஞ்சம் பாதுகாப்பு அவ்வளவு தான். இங்கே கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது!  கன்னம், கழுத்து, தோள்பட்டை  என்று அடித்துக் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.   கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் என்றே சொல்லலாம்.

என்னதான் சால்ஜாப்புகளைச் சொன்னாலும் கடைசியில் ஆசிரியர் மேல் தான் பழி விழும். மாணவர்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது? அவர்கள் அறியாமல், புரியாமல் செய்கின்ற தவறுகளுக்கு  ஆசிரியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.  ஆசிரியர் தொழிலில் இது போன்ற ஆபத்துகள் இருக்கத்தான் செய்யும். தெரிந்தது தான்.

ஆசிரியர்கள்  கை நீட்டுவதைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர நம்மால் வேறு எதனையும் சொல்ல இயலாது.

Thursday 20 July 2023

சபாஷ்! இது தான் சரியான தண்டனை!

       RUSIAH SABDARIN, NUR NATASHA ALLISYA HAMALI , CALVINA  ANGAYYUNG

ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியரை என்ன செய்யலாம்? முக்கலாம்! முணகலாம்! முணுமுணுக்கலாம்! அதற்கு மேல் வேறு எதனையும் செய்ய இயலாது!  காரணம் அவர்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்களாக இருப்பார்கள்! அல்லது ஏதோ பிரபலம் ஒன்றுக்கு எதற்கும் உதவாதவர்களாக இருப்பார்கள்!

முன்பெல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் இது போன்ற எதற்கும் உதவாத மலாய் மொழி ஆசிரியர்கள்  இருப்பார்கள். இவர்களை யாரும் ஒன்றும் கேட்க முடியாது. வருவார்கள்! போவார்கள்! அப்படித்தான் செயல்பட்டார்கள்! அது ஒரு காலம்!

ஆனால் இன்றைய நிலைமை வேறு! மாணவர்களே ஆசிரியர் மேல் வழக்குத் தொடுக்கும் காலம்.  சபாவில் அது தான் நடந்தது.  ஏழு மாத காலம் பள்ளிக்கு வராத ஒர் ஆங்கில ஆசிரியர். தட்டிக்கேட்க ஆளில்லை.   ஆசிரியர்  சண்டப்பிரசண்டம்  செய்வதை யார் தடுக்க முடியும்? மாணவர்கள் பொறுத்துப் பார்த்தார்கள. அதில் குறிப்பாக மூன்று மாணவிகள் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார்கள.

ஆசிரியர் மீது வழக்குத் தொடுத்தார்கள். ஆசிரியருக்குப் பக்கபலமாக  இருந்த பள்ளி முதல்வர், கல்வி அமைச்சு, அரசாங்கம் என்று அத்தனை பேரையும் கோர்ட்டுக்கு இழுத்தார்கள்.   அந்த மாணவிகள் நான்காம் பாரத்தில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆங்கில ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்கள.  தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்த ஆசிரியர் தவறி விட்டார் என்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்த போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கோர்ட்டுக்குப் போவதைத் தவிர  வேறு வழி தெரியவில்லை.

அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு இப்போது தான் வெளியாகிருக்கிறது.  அந்த மாணவிகள் தொடுத்த வழக்கு  சரியானது தான் என்பதாக  நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது  அத்தோடு அந்த மாணவிகளுக்குத் தலா ஐம்பதினாயிரம் ரிங்கிட் இழப்பிடு வழங்கவும்  உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மாணவர்கள் ஆசிரியர் மீது வழக்குப் போடுவது என்பதெல்லாம்  நாம் விரும்புவதில்லை தான். ஆனால் சோம்பேறிகளை யார் என்ன செய்ய முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர் மாதத்திற்குப் பத்து, பதினைந்து நாள்களாவது மருத்துவமனையில் தான் இருப்பார்.  மருத்துவ விடுமுறை தான். என்ன செய்வது? 

ஆசிரியர் தொழில் புனிதமானது என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஒரு சிலர் அதனை அவர்கள் பகுதி நேர தொழில் போல செய்கிறார்கள். ஆனாலும் இப்போது ஆசிரியர் தொழிலில் உள்ளவர்கள் கூடுமானவரை தங்களது  கடமைகளைச் செவ்வனே செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். எல்லாரையும் ஒரே தட்டில் நிறுக்க முடியாது.

தவறு செய்பவர்களுக்குத் தண்டனை உண்டு!  அது தான் தர்மம்!

Wednesday 19 July 2023

மாநில அரசாங்கத்திற்கு நன்றி:

 

      நன்றி: வணக்கம் மலேசியா                          செபஸ்தியார் கலைக்கூடம்

செபஸ்தியார் கலைக்கூடம் மீண்டும் திறக்கப்பட்ட செய்தி மகழ்ச்சியூட்டுகிறது. 

பொதுவாக இந்த கலைக்கூடத்தைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த கலைக்கூடத்தைப் பற்றியான செய்திகளை நமது செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். 

அது ஒரு நல்ல சேவை. நாட்டுப்புற கலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் சூழலில் அதனைத் தூக்கி நிறுத்த அதன் நிறுவனர் இருதயம் செபஸ்தியார் எடுத்த முயற்சிகளைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த சில தினங்களாக வந்த செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின.  அங்கிருந்து காலி செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.  கலைப்பொருள்கள் அனைத்தும் வீதிக்கு வந்துவிட்டன. மிகவும் அதிர்ச்சியான செய்தி என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் நம்மிடையே ஒரு கேள்வி உண்டு. இந்த கட்டடத்தைப் பயன்படுத்த  மாநில அரசாங்கம் 2009-ம் ஆண்டு அனுமதி அளித்திருக்கிறது. அப்போது ம.இ.கா.வின் உதவியோடு அனைத்தும் நடந்திருக்கின்றன. நாம் வாழ்த்துகிறோம்.

ஆனால் அந்தக் கட்டடம் நிரந்தரமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதா  அல்லது குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதா போன்ற விபரங்கள் நம்மிடம் இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் நேரத்திற்குத் தகுந்தாற் போல  தாளம் போடுபவர்கள்!  அதனை நாம் அறிந்தது தான்.

ஒரு கட்டடத்தைப் பயன்படுத்த  அரசாங்கம் அனுமதி அளித்தால் அதனை நிரந்தரமாகப் பய்ன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்.  பின்னால் பிரச்சனைகள் வரக்கூடாது என்கிற ஒரே காரணம் தான். பொதுவாக இந்தியர்கள் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலும் ஏதோ ஒரு வகையில் இது போன்றே அகப்பட்டுக் கொள்கிறோம். அரசாங்கம் வைக்கும் கண்ணியில் மாட்டிக் கொள்கிறோம். எவனோ ஒரு தலைவன் 'நான் பார்த்துக் கொள்கிறேன்'  என்று சொன்னால் அவனை நம்பி விடுகிறோம்.  கடைசியில் அவன் பேரிலேயே அதனை மாற்றிக் கொள்வான்!  இதெல்லாம் நம் கண் முன்னால் நடந்தவை தான்!

இப்போது மீண்டும் பயன்படுத்த அனுமதி கிடைத்திருக்கிறது. நல்லது தான். தேர்தல் நேரம் அல்லவா! கிடைக்காததும் கிடைக்கும். எத்தனை நாளைக்கு என்கிற கேள்வியும் நமக்கு எழ வேண்டும். முடிந்தவரை அதனை நிரந்தரமாக்க இப்போதே வேலையை ஆரம்பிக்க வேண்டும். மாற்றிடம் கிடைத்தால் அதுவும் நிரந்தரமாக கிடைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இப்போது ஏற்பட்ட 'வீதிக்குக் கொண்டு வந்த அவமானம்' மீண்டும் வராதபடி அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். எத்தனை நாளைக்கு இப்படி நாம் அவமானப்படுவது?

இதனைத் தேர்தல் கால 'பாவபுண்ணியம்'  என்கிற ரீதியில் தான் கிடைத்திருக்கிறது! இனியாவது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள், செபஸ்தியாரே!

Tuesday 18 July 2023

மோசடிகளை நிறுத்த வழி தெரியவில்லை!

 

இன்று காலை எனக்கு வந்த தொலைபேசி அழைப்பின் காரணமாக இந்த கட்டுரை எழுத நேர்ந்தது.

குறிப்பாக உங்கள் கைப்பேசிக்கு  'மக்காவ் மோசடி கும்பல்' லிடமிருந்து  அழைப்புக்கள் வந்தால்  ஒன்றை கவனிக்கலாம். அந்த அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று குறிப்பிடாமல் வெறும் "MALAYSIA"  என்றே காட்டும். இப்படி காட்டினாலே ஏதோ வில்லங்கமான அழைப்பு என்று புரிந்து கொள்ளலாம்.

எனக்கு வரும் இந்த அழைப்பைத் தவிர்க்கலாம் என்று பார்த்தாலும்  அவர்கள் நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் விடமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை நாம் அவர்களுடைய வாடிக்கையாளர்கள். எந்த ஒரு முதலீடும் இல்லாமல் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது  அவ்வளவு  எளிதில் அவர்களது பிடியிலிருந்து நம்மைத் தப்பிக்க விடமாட்டார்கள்! "முயற்சி திருவினையாக்கும்" என்பதை இவர்களிடமிருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!

நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் அந்த அழைப்புகளைத் துண்டித்துவிட வேண்டியது தான். நம்மால் பேசி அவர்களைக் கவிழ்க்க முடியும் என்றால் நாம் அவர்களிடம் பேசலாம். அது நம்மால் முடியும். நமது பேச்சிலிருந்தே அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அனுபவம் இல்லாதவர்கள்  தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு சில விஷயங்களையாவது  நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். காவல்துறையினர் நம்மிடம் தொலைப்பேசியில் பேச மாட்டார்கள். அது முதல் விஷயம்.  வங்கியிலிருந்து அழைப்புகள் வரலாம்.  ஆனால் உங்கள் வங்கிக் கணக்கு எண் அவர்களுக்குத் தெரியும். அதனால் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.   அப்படியே கேட்டால் நேரடியாக 'வங்கிக்கு வருகிறேன்' என்று  சொல்லி அவர்களைப் போய் பாருங்கள்.

வங்கிக்கணக்கு, அடையாளை அட்டை எண்  போன்றவற்றை யாரிடமும் கொடுக்காதீர்கள்.  இப்போதெல்லாம் பாரங்களைப் பூர்த்தி செய்யுங்கள்  என்று சொல்லி எது எதற்கோ விளம்பரங்கள் வருகின்றன.  அங்கிருந்து தான் உங்களுடைய அனைத்துத் தகவல்களும் இந்த மோசடி கும்பல்களிடம் போய் சேருகின்றன. விளம்பரங்கள் கொடுப்பவர்களே இந்த மோசடி கும்பல்கள் தான்!  அது எந்த விளம்பரமாக இருந்தாலும் சரி உங்கள் வங்கி எண்களைக் கொடுத்து விடாதீர்கள்.

இன்று நாட்டில் பெரும் பெரும் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கூட குறைந்ததாகத் தெரியவில்லை.  ஒவ்வொரு நாளும் மோசடி  செய்திகள் வருகின்றன. பிரச்சனை என்னவென்றால் இப்படி ஒரு மோசடி நடக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. யாரும் எந்தவொரு செய்தியும் படிப்பதில்லை.  பத்திரிக்கைகள் தான் படிப்பதில்லை. கணினி மூலம் கூட படிக்கலாம். செய்திகள் வருகின்றன ஆனால் யாரும் அதனை முக்கியம் என்று கருதுவதில்லை.

மோசடிகள் தொடர்கின்றன. நிறுத்தத் தான் வழி தெரியவில்லை! சீக்கிரம் அதற்கான வழிகள் காணப்படும் என நம்பலாம்!

Monday 17 July 2023

தலைமை ஆசிரியர்களே! கொஞ்சம் உதவுங்கள்!

 


தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு என்கிற நம் முழக்கம் இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாக நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்ன வென்றால் தமிழ்ப்பள்ளிகளிலேயே  நமது எதிரிகளைத்  தமிழன் என்று சொல்லி  சோறு போட்டு வளர்த்து வருவது தான். என்ன செய்வது? தகுதி இருந்து விட்டால்  அவன் தமிழன் என்கிறோம்!

சமீபத்தில் ஒரு டிக்டாக் செய்தியைக் காண நேர்ந்தது.. இப்போது பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க புதிய புதிய நடைமுறைகள் வந்துவிட்டன.  படித்த பெற்றோர்கள் தப்பித்து விடுகின்றனர். படிக்காத பெற்றோர்கள் நிலை என்ன? 

கணினி பயன்படுத்தத் தெரியாத பெற்றோர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவது பள்ளிகளின் கடமை. கல்வி அமைச்சும் ஏழ்மையில் உழலும் பெற்றோர்களுக்குக் கணினி அறிவு இருக்காது என்பது தெரியும்.  பள்ளிகள் அவர்களுக்கு உதவலாம்.  இது ஒன்று தலை போகின்ற காரியம் அல்ல.

இப்படி கணினி அறிவ் இல்லாத பெண்மணி ஒருவர் தனது மகளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க  சென்ற போது அந்தப் பள்ளியினர் அவர் குழந்தையைப்பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டனர்.  அவர் 'ஆன்லைனில்'  மனு செய்யவில்லை என்கிற காரணம் காட்டி அவர்கள் நிராகரித்து விட்டனர். 

அதன் பின்னர் அவர் தேசிய பள்ளிக்குச் சென்றார். அதே பிரச்சனை தான். ஆனால் அவர்கள்  எந்த மறுப்பும் சொல்லவில்லை. அதற்கான பாரங்களைப்  பூர்த்தி செய்து  அவரின்  குழந்தை முதலாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  அதன் பின்னர், போக்குவரத்துக் காரணமாக,  அவரின் இரண்டு குழந்தைகளும் அந்தப் பள்ளியிலேயே சேர்க்கப்பட்டனர்.  

'தமிழ்ப்பள்ளியே என் தேர்வு' என்கிற முழக்கம் ஒரு பக்கம்.  ஒரு சில தலைமை ஆசிரியர்களின்  திமிரான போக்கு ஒரு பக்கம். அந்த முழக்கத்தைப் பற்றி  அவர்களுக்குக் கவலை இல்லை.  நமக்கென்ன என்கிற அலட்சியமே தவிர வேறொன்றும் இல்லை.

ஆசிரியர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நம்முடைய பூர்வீகம் எல்லாம் தோட்டப்புறங்கள் தான். அவர்கள் படிக்காதவர்கள். அங்கிருந்து வந்தவர்கள் தான் இன்றைய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள். உங்களுக்கும் யாரோ ஒருவர் உதவியிருக்கிறார். இல்லாவிட்டால் நீங்கள் இருக்கும் இடமே வேறு.

ஆசிரியப் பெருமக்களே!  ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்று தான் கல்வி நமக்குப் போதிக்கிறது.  யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஏழை என்பதற்காக, கல்வி அறிவு அற்றவர் என்பதற்காக யாரையும் தூக்கி எறியாதீர்கள்!

கல்வி தான் நமது ஆயுதம்! மறந்துவிடாதீர்கள்!

Sunday 16 July 2023

வாழ்த்துகிறோம் நண்பனே!

               


 நம் மலேசிய நாட்டில் தமிழர் ஒருவர் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார் என்றாலே நாம் மகிழ்ச்சி அடைவதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  

காரணம் பொருளாதார ரீதியில் நலிந்து கிடக்கும் சமுதாயத்தில்  நாலு தமிழர்கள் தொழில் செய்ய முனைகிறார்கள் என்றால்  அவர்களை வரவேற்க நினைப்பதில் தவறில்லை.

குறிப்பிட்ட "கார சாரம்" உணவகம் இப்போது பங்சாரில்  திறந்திருப்பது தனது பதினோராவது கிளையை.  வாழ்த்துவது நமது கடமை.

ஒரு பக்கம் உணவகத் தொழிலில் ஆள் பற்றாக்குறை  என்கிற புலம்பல். இன்னொரு பக்கம் ஒரு சில  உணவகங்கள்  புதிது புதிதாக கிளைகளைத் திறக்கின்றன. ஒன்று மட்டும் தெரிகிறது.  முறையாக உணவகங்களை நடத்துவோருக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படுவதில்லை!

குறிப்பாக இந்த காலகட்டத்தில் ஒரு நிறுவனம் பதினோரு கிளைகளை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அதுவும் நாடு இப்போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கின்ற நேரம். மக்களிடம்  வேலை இல்லாப் பிரச்சனைகள் உண்டு. இன்னும் பல தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை.  உணவு பொருட்களின் விலையேற்றம்.  இன்னும் ஏறக்கூடிய சூழல் உண்டு.  ஆள்பற்றாக்குறை என்கிற கோஷமும் எழுந்து கொண்டிருக்கிறது! ஆனாலும் ஒன்றைப் பார்த்து நாம் வியக்க வேண்டியுள்ளது. Food Panda  வின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது! யாரைப் பார்த்தாலும் அவர்களது சேவையைத் தான் பயன்படுத்துகின்றனர். வெளியே போகாதபடி வாகன நெரிசல்கள்.  அதனால் உணவுகள் வீடைத் தேடி வருகின்றன!  இதிலிருந்து என்ன தெரிகிறது?  உணவுக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.

இது போன்ற ஒரு நிலையில் இன்னொரு உணவகக் கிளையையும் திறக்கிறோம் என்பது வியப்பு ஒன்றுமில்லை.   தேவை இருக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்வது  உணவகங்களின் கடமை.

ஆனால்  உள்ளூரில் என்னவோ  நமது  இளவயதினரை இந்த உணவகங்கள் ஏன் ஈர்க்கவில்லை  என்பது தான்  நமக்குப் புரியவில்லை.  நமது இளைஞர்கள் ஓர் அலுவலக சூழலைத்தான் விரும்புகின்றனர். முதலாளிகள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். உணவகங்கள் ஓர் அலுவலகம் போல இயங்க வேண்டும். கௌரவமாக நடத்தப்பட வேண்டும். இப்போதுள்ள தலைமுறை இதனைத்தான் விரும்புகிறது.  

புதிய கார சாரம் உணவகத்தை வாழ்த்துகிறோம். சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற நமது வாழ்த்துகள். இன்னும் பல உணவகங்கள் திறக்கப்பட வேண்டும். தமிழர்கள் வியாபாரத் துறையில் வியத்தகு  முன்னேற்றத்தை அடைய வேண்டும்!

Saturday 15 July 2023

இவர்களுக்கு என்ன கேடு வந்தது?

 

இன்றைய காலகட்டம் குழந்தைகளுக்கு ஏற்ற  காலகட்டம் என்று சொல்வதற்கில்லை.

குழந்தைகளுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஆனால் எதுவும் கிடைக்கும் மனநிறைவு இல்லை. நம் வீடுகளில் குழந்தைகள் பண்ணுகின்ற அட்டகாசங்களை நாம் தினம் தினம் பார்க்கின்றோம். பொதுவாகச் சொன்னால் நம்மால் சகிக்க முடியவில்லை!

அதனால் என்ன ஆகிறது? முடிந்தவரை அவர்களை ஏதோ ஓரு பள்ளிக்கு அனுப்பி நமது பாரத்தைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறோம்! அதாவது நமது பாரத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விடுகிறோம்! 'இந்தா இந்த சுமையை நீ சுமந்துக்கோ!'

அதுவும் நமது பாலர்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசம். நல்ல பயிற்சி உள்ள ஆசிரியர்கள் என்றால் இந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்று புரிந்து வைத்திருப்பார்கள். பயிற்சி பெறாதவர்கள்  கையாளத் தெரிவதில்லை. சிடுமூஞ்சிகள் குழந்தைகளைப் பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்?  ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருமே சிடுமூஞ்சிகள்!  என்ன நடக்குமோ அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைக் கடிக்கிறாராம்! இது பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியாமலா இருக்கும்?  ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பிரச்சனைப் பெரிதாகி பொதுவெளியில் வரும்வரை நிர்வாகம் வாய் திறப்பதில்லை! என்னதான் இரும்புத்திரை போட்டு மறைத்தாலும் அது வெளியே வந்து தான் ஆகும்.

பாலர்பள்ளியில் குழந்தை ஒருவன் நீச்சல் குளத்தில்  விழுந்து  இறந்து போனான். அது எப்படி, என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவில்லை. காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பெற்றோர்  தங்களுக்கு நீதி வேண்டும் என்று காலில் செருப்பு அணியாமல் வெறுங்காலில் பதினைந்து மைல் தூரம் நடந்து வந்து  காவல்துறை தலைமை அலுவலகத்தில் தங்களது மனுவை அளித்தனர்.

ஒரு பக்கம் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குப் போதைப்பொருள் கொடுத்து தூங்க வைக்கின்றனர்.  இன்றைய குழந்தைகள் படாதபாடு படுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.  எங்கே தவறு நடக்கின்றது என்று புரியவில்லை. குழந்தைகள் படுசுட்டிகளாக இருக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் படுமட்டிகளாக இருக்கின்றனர்! இன்றைய இளம் பெற்றோர்கள் பொறுப்புகளை வேலைக்காரி அல்லது பள்ளி ஆசிரியர்களிடம் தள்ளிவிட வேண்டும் என்பதில்  தான் குறியாய் இருக்கின்றனர்!

குழந்தைகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அது தான் அவர்களின்  இயல்பு. குற்றம் நம்முடையது தான். அது தான் சட்டமும் சொல்லுகிறது.  நாம்  தான் திருத்தப்பட வேண்டியவர்கள்! குழந்தைகள் அல்ல!

Friday 14 July 2023

நீதி கிடைக்க அம்னோ போராடும்!

 

                                                     டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து இப்போது சிறையிலிருப்பது மலேசியர்கள் அறிந்ததே.

அது நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. முறையீடு, மேல் முறையீடு என்று அனைத்தையும் முயற்சி செய்திவிட்டு கடைசியில் எதுவும் செய்ய முடியாமல் சிறை சென்றார் நஜிப்.

ஆனாலும் நஜிப் பொறுத்தவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்கிறார். அதோடு அவரின் ஆதரவாளர்களும் அவருக்கு நீதி வேண்டும் என்கிறார்கள்.

அவர் என்ன தான் சொல்ல வருகிறார் என்று  அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் புரிகிறது. ஆனால் மலேசியர்களுக்கு அது புரியவில்லை. அதிலுள்ள சட்ட சிக்கல்களைப்பற்றி சராசரியான நமக்குப் புரிய நியாயமில்லை.

தவறு செய்தார். இப்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்த நியாயமும் நமக்குத் தெரியவில்லை.  ஆனாலும் ஒரு சாரார் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறார்கள்!  நீதி கிடைத்துவிட்டது, அதைத்தான் இப்போது அவர் அனுபவித்துக்  கோண்டிருக்கிறார்.  இன்னும் என்ன நீதி வேண்டும்?

அவருடைய வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஏத்தனையோ ஜாம்பவான்கள் அவரின் விடுதலைக்காகப் போராடினர். அவருக்காக வாதாடினர். ஆனாலும் அவரின் வழக்கு நிற்கவில்லை. தோல்வியில் தான் முடிந்தது! அப்படியென்றால் அவரின் பக்கம் நியாயமில்லை அதனால் தோல்வியில் முடிந்தது என்பது தானே  பொருள்?

இப்போது நஜிப் என்ன சொல்ல வருகிறார்? தனக்கு நீதி வேண்டும் என்கிறார். அது தான் நமக்குப் புரியவில்லை!  நீதி இல்லாமலா அவரைச் சிறையில் போட்டார்கள்? நமக்கு நீதி பற்றி தெரியாததால்  தலை வால் எதுவும் புரியவில்லை!

சரி, நீதிமன்றம் தவறு செய்துவிட்டது.  இப்போது நீதி வேண்டும் என்று யாரைப் பார்த்துக் கேட்கிறார்?  ஒற்றுமை அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்கிறாரா? அரசாங்கம் என்ன செய்யும்? நீதிமன்றம் சொல்வதைத்தானே  அரசாங்கம் கேட்கும். அது தானே நடைமுறை.

நீதி கிடைக்க அம்னோ போராடும்! போராடட்டும்! நீதி அவருக்குச் சாதகமாக இருந்தால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் விடுதலையானால்  அதற்கும் சரியான  காரணங்கள் இருக்க வேண்டும். 

நீதி கிடைக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் அல்ல! அரசியல்வாதிகள் குறுக்கு வழிகளைத்தான் நீதி என்கிறார்களோ!

Thursday 13 July 2023

அதிகமானோர் வெற்றி!


 

இந்த ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வில் அதிகமானோர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது நல்ல செய்தி.

தரமான மாணவர்கள் உருவாக்கப் படுகின்றார்கள். பல்கலைக்கழகங்களிலும் தரமான மாணவர்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள் என்பது வரவேற்கக் கூடிய செய்தி.

இப்படி தரமான மாணவர்களை எஸ்.டி.பி.எம். மூலம் வெளியாகிய வேளையில் இவர்கள் அனைவருக்கும் மேற்கல்வி பெற கல்வி அமைச்சு எந்த வகையில் தயாராக இருக்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை. 

இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை இங்கும், பல்கலைக் கழகத்திற்குப்  போக நாம் போராட வேண்டிய சூழலில் தான் இருக்கின்றோம்.  கல்வி அமைச்சு நமக்கு எதனையும் தூக்கிக் கொடுத்து விடுவதில்லை!  கேட்காமல் எதுவும் கிடைக்காது என்பது தான்  இன்றைய நிதர்சனம்.

ஆனால் வருங்காலங்களில் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தகுதியின் அடிப்படையில் மாணவர்களைச்  சேர்க்கும் முறை வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.   வளர்ந்துவிட்ட ஒரு சமூகம் இன்னும் கையேந்துவதை அந்த சமூகமே விரும்பாது. அந்த நாள் வரும் என்பதை எதிர்பார்க்கலாம்.

எஸ்.டி.பி.எம். எடுத்த மாணவர்களில் பலர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான வாய்ப்பைத் தேடிச் செல்வர்.  வசதி உள்ள மாணவர்கள் வெளிநாடு போக வேண்டும் என்பதற்காகவே எஸ்.டி.பி.எம். தேர்வை எடுக்கின்றனர். 

எஸ்.டி.பி.எம். தேர்வை எடுத்தவர்களில் பலர் வசதியின்மை காரணமாக அத்தோடு கல்வியை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள். ஆனாலும் பரவாயில்லை.  எஸ்.பி.எம். கல்வியைவிட எஸ்.டி.பி.எம். கல்வி  இன்னும் உயர்வானது தான்.  வேலை வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும். ஆனால் மெட் ரிகுலேஷன் கல்வி என்பது உயர்கல்விக்குப் போக வாய்ப்பு அளிக்கும். வேலை வாய்ப்பை அளிக்காது. வேலை சந்தையில் அதற்கு மரியாதை இல்லை!

எப்படியோ தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேல் படிப்பைத் தொடர வாய்ப்புக்  கிடைத்தால்  நமது சமுதாயமே மகிழ்ச்சி அடையும்.  வெளிநாடு படிக்கப் போனாலும் நமக்கு மகிழ்ச்சியே. படித்தது போதும் இனி வேலை தேடுவோம் என்கிற நிலையில் இருந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே. காரணம் எஸ்.பி.எம். தேர்வை விட அதிகமான தகுதியை வைத்திருக்கிறீர்கள்!

வாழ்த்துகள்!

Wednesday 12 July 2023

வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள்!

 

               டத்தோ நெல்சன் ரெங்கனாதன், ம.இ.கா.கல்விக்குழு தலைவர்

மெட் ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு சுமார் 206  இந்திய மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதாக ம.இ.கா. கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கனாதன் கூறியிருக்கிறார். மறுக்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்ய கல்வி அமைச்சின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ம.இ.கா.வின் இந்த முயற்சிக்கு மனதாரப் பாராட்டுகிறோம். இந்த கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டால் இந்தப் பிரச்சனையை யார் முன்னெடுப்பார் என்று தெரியாத நிலையில் ம.இ.கா. அதனைக் கையில் எடுத்திருப்பதை  வரவேற்கிறோம்.

ஒரு விஷயம் நமக்கு இன்னும் புரியவில்லை. 206 மாணவர்கள்  இடம்  மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் போது தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.  அதாவது 2500 இந்திய மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கிய பின்னர் அது போதாமல் 206 மாணவர்கள்  மறுக்கப்பட்டிருக்கின்றனரா என்பது தெரியவில்லை. அல்லது குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டு அந்தக் குறைவான இடங்களில்  கூட இந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று எடுத்துக் கொள்வதா? தெரியவில்லை!

எத்தனை இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன் கல்விக்கு இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்பது ம.இ.கா. கல்விக் குழுவுக்கே தெரியுமா  என்பதும்  தெரியவில்லை.  அதனைத் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கல்வி அமைச்சுக்கும்  இல்லை. பொது வெளியில் அதனை அறிவிக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் கல்வி அமைச்சுக்கு இல்லை.

பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் கல்வி அமைச்சு வெளியிடாமல் கப்சிப் என்று இருந்தாலே ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். எங்கோ தவறு நடந்திருக்கிறது. இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப்   பட்டிருக்கிறார்கள் என்பதை கல்வி அமைச்சு கப்சிப் என்று இருப்பதன் மூலம்  நமக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.

வேறு வகையிலும் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மெட் ரிகுலேஷன் நுழைவு என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை.  கதவு இன்னும் திறந்தே இருக்கிறது.  இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பதாகத்தான் அது காட்டுகிறது. 

இன்னும் ஓர் ஆச்சரியமும் நமக்கு உண்டு. சீனர்கள் பக்கமிருந்து எந்தவொரு  சத்தத்தையும்  காணோம். இரண்டு ஆண்டு கால பக்காத்தான் ஆட்சியின் போது இந்தியர்களுக்கான இடங்களைச் சீனர்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்று  ம.இ.கா. குற்றம் சாட்டியது. அது உண்மை தான். சீனர்களுக்கான இடத்தை கல்வி அமைச்சு நம்மிடமிருந்து அபகரித்து  அங்கே அலுங்காமல் குலுங்காமல் அப்படியே கொடுத்து விடுகிறது. ஆனால் நமக்கு மட்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பரிசீலனை, பரிசீலனை, பரிசிலனை!

பார்ப்போம்! நமது ஜ.செ.க. ஜால்ராக்களின் ஜால்ராக்களை!

Tuesday 11 July 2023

பெரிகாத்தானை ஏன் ஆதரிக்க வேண்டும்?

 

பெரிகாத்தான் நேஷனல், இன்றைய அரசியலில், தலையாய எதிர்க்கட்சி.

நிச்சயமாக அந்த கட்சியில் நம்மில் ஒரு சிலர் சேர விரும்புவதை  மறுக்க  இயலாது. அங்கு சேர விரும்புபவர்கள் ஏதோ ஒரு சில தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். அந்த நோக்கத்தோடு அங்கு போகிறவர்கள் ஒரு சில முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்களையும் கொண்டு செல்ல விரும்பத்தான் செய்வார்கள்.

பெரிகாத்தான் தான் ஓரு பல்லின கட்சியாக காட்டிக் கொள்ள விரும்புகிறது.  அதனால் எப்பாடுபட்டாவது இந்தியர்களை ஈர்க்க விரும்புகிறது.  ஆனால் அது அனைத்தும் தேர்தல்வரை தான். அதற்கு அப்புறம் நம்மைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்! இப்போது அவர்களின் நோக்கம் எல்லாம்  ஆளும் கட்சியில் உள்ள இந்தியர்களின் வாக்குகளைப் பிரித்து அவர்களை வெற்றி பெறாதபடி செய்வது மட்டும் தான். ஒற்றுமை அரசாங்கத்தைச்  சீர்குலைக்கும் நோக்கம் மட்டுமே.

நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.  பெரிக்காத்தான் இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவுவார்கள் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அவர்கள் தங்களை மலாய்க்காரர்களின் கட்சியாகவே அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். பல்லினம் வேண்டாம் என்பதே அவர்களின் தலையாய நோக்கம்.

முதலில் அவர்களின் தலைவர்களைக் கவனியுங்கள். இப்போதைக்கு நமக்குப் பளிச் என தெரிபவர்கள்  முன்னாள் பிரதமர்களான  டாக்டர் மகாதீரும், முகைதீன் யாசினும்.   நிச்சயமாக இவர்கள் எந்த வகையிலும் இந்தியர்களுக்குச் சாதகமானவர்கள் அல்ல.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் இரண்டு ஆண்டுகால ஆட்சியில்  முகைதீன் யாசின் உள்துறை அமைச்சராக இருந்த  போது, பக்காத்தான் உறுதி அளித்தது போல, இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை வேண்டுமென்றே அவர் புறக்கணித்ததாக அவரது கட்சியினரே குற்றம் சொன்னார்கள்.   அவர் கையொப்பம் இட மறுத்தது தான் காரணம்!

டாக்டர் மகாதிர் பற்றி இன்னுமா நாம் சொல்ல வேண்டும்? மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனையே இவரால் உருவாக்கப்பட்டது தான். எல்லா வகையிலும் இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடைபோட்டவர். அந்த மலபார் புத்தி இன்றளவும் அவரிடம் உண்டு.

அது சரி. பிரதமர் அன்வார் இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்த்து விடுவாரா என்கிற கேள்வியும் எழத்தான் செய்யும். நான் செய்வேன் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார்.  இதற்கு முன்னரும் சரி, இப்போதும் சரி என்னால் முடியும் என்று தைரியமாக  யாராலும்  சொல்ல முடியவில்லையே! இத்தனை ஆண்டுகள் நம்பக் கூடாதவர்களை எல்லாம் நம்பினோம்  இனி  இவரை நம்புவோமே!

இனி வாக்கு உங்கள் கையில். பெரிக்காத்தானை  நம்பத்தான் வேண்டுமா?

Monday 10 July 2023

இந்தியர்களின் ஆதரவு யாருக்கு?

 

நம் நாட்டில் நாம் இப்போது ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம்.

அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு கேள்வி: இந்தியர்களின் வாக்கு யாருக்கு என்பது தான்.  நாம் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும்  நமது வாக்கு எங்கு போகிறதோ அவர்கள் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எல்லாத் தொகுதிகளிலும் அப்படி ஒரு நிலைமை இல்லையென்றாலும் பல தொகுதிகளில் அப்படி ஒரு நிலைமை உண்டு என்பது தான் பலரின் கருத்து.

இந்தியர்கள்  பல கட்சிகளில் இருக்கின்றனர். நமக்கு அதில் ஆட்சேபணை இல்லை. அது அவர்கலின் சுதந்திரம். ஆனால் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நமது சமூகம் அதிகமாக ம.இ.கா.வை நேசித்தவர்கள். அக்கட்சியை நம்பி நாம் ஏமாந்தது என்னனவோ உண்மை. அங்கிருந்தவர்கள் பலர் பி.கே.ஆர். கட்சியில் இருக்கின்றனர். ஜ.செ.க. விலும் பல இந்தியர்கள் இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் நமது நலனுக்கு நல்லது என்றால் அது ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சிலர் அதற்குள்ளாகவே அன்வார் பிரதமராக வந்தார். இந்தியர்களுக்கு என்ன செய்துவிட்டார் என்கிற கேள்வி  இப்போது எழுப்பக் கூடாது. போதுமான அவகாசம் அவருக்கு இல்லை. கூடவே ஊழல் கட்சியான அம்னோ ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  மலாய்க்காரர்களைத் திருப்தி படுத்துகின்ற வேலையும் அவருக்கு உண்டு. இப்படி பல சிக்கல்களையும் அவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் நினைத்தது போல் அவரால் செயல்பட  முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரே காரணம்  நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததே.

நாம் சொல்ல வருவதெல்லாம் உறவுகளே! பொறுத்திருங்கள். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பொறுத்திருந்து விட்டோம். இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருக்கத்தான் வேண்டும். போதிய பலம் நாடாளுமன்றத்தில்  கிடைத்துவிட்டால் அப்போது தான்  பிரதமர் அன்வார் சுயம்புவாக இயங்க முடியும்.  அன்வார் மேல் நம்பிக்கை வையுங்கள். முடிந்தவரை அவர் இந்தியர்களுக்கு உதவியாகத்தான் இருப்பார். இன்றைய சூழல் அவருக்குச் சாதகமாக இல்லை.

என்னைக் கேட்டால்,  என்னுடைய அறிவுரை என்னவென்றால்,   ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தான் இந்தியர்களின் ஆதரவு இருக்க வேண்டும். அது தான் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாம் ஆதரவு அளிக்கவில்லை என்றால்  சட்டமன்றங்கள் முகைதீன் யாசின் கைகளுக்குப் போய்விடும்.  அவரின் சட்டமன்றம் நமக்கு எதிராகத்தான் செயல்படும். அவர் இந்தியர்களைப் பற்றி கவலைப்படாதவர்.

அதனால் ஒற்றுமை அரசாங்கத்தை மாநிலம் எங்கும் அமைப்பதே நமது எதிர்காலத்திற்கு நல்லது.

Sunday 9 July 2023

சிலாங்கூர் அரசாங்கத்தில் இடம் பெறுவர்!

 


வருகின்ற 15-வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் மீண்டும் வெற்றி பெற்றால் அந்த அரசாங்கத்தில்  ம.இ.கா. வும், ம.சீ.ச. வும் இடம் பெறும் என்பதாக பி.கே.ஆர். கட்சியின் சிலாங்கூர் மாநிலத்  தலைவர்  அமிருடின் ஷாரி  உறுதி அளித்துள்ளார்.

இந்த இரண்டு கட்சிகளுமே மாநிலத் தேர்தலில் ஒதுங்கி நிற்போம் என அறிவித்துவிட்ட நிலையில்  பி.கே.ஆர். மாநிலத் தலைவரின் இந்த அறிவிப்பு வரவேற்கக் கூடிய ஒன்று என நிச்சயம் நம்பலாம்.

அரசாங்கத்தில் இடம் பெறும் என்பதை வரவேற்றாலும் அதற்கு மேல் எந்த ஒரு விளக்கமும் இல்லை. அதனால் நமக்கும் அதுபற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் நல்லதொரு பங்களிப்பு அவர்களுக்கு இருக்கும். இந்த இரு கட்சிகளுமே தங்களுக்கான அங்கீகாரம் வேண்டும்  என நினைக்கின்றன. மக்களிடமிருந்து  அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை, இனி கிடைக்காது, என்பது அவர்களுக்கே தெரியும். அவர்கள் இனி ஆளுங்கட்சியின் துணையோடு தான் தங்களது கட்சியை அடையாளம் காடட வேண்டும்!

சிலாங்கூர் மாநிலம் பெரிய மாநிலங்களில் ஒன்று.  இந்தியர்களும் கணிசமான அளவில் அங்கு இருக்கின்றனர்.  இன்னும் அந்த மாநிலத்தில் பிரச்சனைகள் இருக்கத்தான்  செய்கின்றன. கணபதிராவ் பிரச்சனைகள் முடித்துவிட்டுத் தான் வெளியேறுவார் என்று பார்த்தோம்! அவர் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று நாடாளுமன்றத்திற்கு ஓடிவிட்டார். இதோ! ஒரு கோயில் பிரச்சனை. அதற்கு அவர் ஒரு முடிவு கண்டிருக்க வேண்டும். கல்விக்காக நிறையவே பாடுபட்டிருக்கிறார். ஆனால் கோயில் பிரச்சனை என்பது மட்டும் எல்லா மாநிலங்களிலும்  அப்படியே தான் இருக்கின்றன! அதனைத் தீர்த்து வைக்க முடியவில்லை! நமது அறிவுரை என்னவென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள்  முடிந்தவரை கோயில் பிரச்சனைகளை அவர்கள் பதவிகளில் இருக்கும் காலத்திலேயே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.  இழுத்துக் கொண்டே போக அனுமதிக்கக் கூடாது என்பதே நமது அறிவுரை.

எது எப்படியிருப்பினும் ஒற்றுமை அரசாங்கம் அந்த இரு கட்சிகளுக்கும்  ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை அரசாங்கத்தில் பதவிகள் கொடுத்து அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கொடுப்பதை  நாம் வரவேற்கிறோம்.

அவர்கள் சேவையைத் தொடர்ந்தால் அவர்களுக்கான அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்கத்தான் செய்யும்.  பொதுவாக ம.இ.கா. அந்த வகையில் மிகவும் பலவீனமான கட்சி.  அவர்களிடம் இருந்த சேவை மனப்பான்மை  எப்போதோ அவர்களிடமிருந்து போய்விட்டது.  அதனால் தான் இன்று அவர்கள் மக்களின் ஆதரவை இழந்து நிற்கிறார்கள்.

ஒற்றுமை அரசாங்கத்தில் அந்த இரு கட்சிகளும் பங்கு பெறுவதில் நமக்கு மகிழ்ச்சியே!

Saturday 8 July 2023

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!

 

                                              களத்தில் முகமட் அஸ்வான் ஜமாலுடின்

பொதுவாக கைப்பேசிகள் பற்றியான  அறிவு ஏதோ ஓர் அளவுக்குத் தான் என்னிடம்  உள்ளது  நமக்கு அந்தப்பக்கம் எந்த வேலையும் இல்லை! அதனால் அதனைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் இல்லை.

ஆனால் பினாங்கு, கப்பளா பத்தாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  தனது சாதாரண கைப்பேசிகளை வைத்துகொண்டு,  திருமண வைபவங்களில் படங்களை எடுத்துக்  கொண்டு  கலக்கி வருகிறார். அது என்னையும் ஆச்சரியப் படுத்துகிறது. 

அவருடைய பெயர் முகமட் அஸ்லான் ஜமாலுடின், வயது 27. ஆரம்ப காலத்தில் இலவசமாக, திருமணப் படங்களை எடுத்து அதன் தரம் எப்படி என்பதைக் கேட்டுத்  தெரிந்து கொண்டு அதன் பின்னர் அதனையே ஒரு தொழிலாகவும் மாற்றிக் கொண்டார். இதற்கெல்லாம் ஒரு திறன் வேண்டும், ஆர்வம் வேண்டும், கலை ஆர்வம் இருக்க வேண்டும். அது அவரிடம் இருந்தது.

இப்போதெல்லாம் கையில் நவீன கருவிகளை வைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சிகளைப் படம் எடுப்பவர்கள் நிறையவே வந்துவிட்டனர். அதற்காக அவர்கள் நிறையவே கட்டணமும்  வாங்குகின்றனர்.  ஆனால் அஸ்லான் தனது கட்டணத்தைக் குறைத்து ரி.ம.200 வெள்ளியைத்தான் கட்டணமாகப் பெறுகிறார்.  சிக்கனம் என்று சொன்னாலும் தரமும் இருப்பதால் அவரின் சேவைக்கு நல்ல மரியாதையும் உண்டு.

இன்று பல அதிநவீன கருவிகளைக் கொண்ட  படபிடிப்பாளர்கள் வேலையின்றி தவிக்கும் வேளையில்  அஸ்லானுக்கு மட்டும் அடுத்த ஆண்டுவரை  முன்பதிவு செய்யபட்டிருகின்றனவாம்!  அவருடைய வேலை நாள்கள் என்றால் ஒவ்வொருவாரமும் மூன்று நாள்கள் தாம். வெள்ளி, சனி, ஞாயிறு. பெரும்பாலான திருமணங்கள் அன்றைய கிழமைகளில் தான்  நடைபெறுகின்றன.  அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் அவர்  முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறாராம்/

நம் இளைஞர்கள்  நவினமான கைப்பேசிகளை வைத்திருக்கின்றனர்.  எதற்கு எதற்கோ பயன்படுத்துகின்றனர். எப்படிப் பயன்படுத்தினாலும் சரி  கடைசியில் அதன்  தொழிலநுட்பங்களைப் பயன்படுத்தி  ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  அல்லது கற்றுக் கொள்ளுங்கள். இப்போதுள்ள நவீன கருவிகளின் மூலம் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. வெறும் பொழுது போக்கு என்று எண்ணாமல் அதனை ஒரு தொழிலாக மாற்றி அமையுங்கள்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிற சொலவடையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.  மற்றபடி அதன் ஆயுதத்தைப் பற்றி நாம் சிந்தித்ததில்லை. இதோ ஓர் இளைஞர் அதனை நிருபித்துக் காட்டியிருக்கிறார்.

இளைஞர் பட்டாளம் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம்!
       

Friday 7 July 2023

துரித மீ 1,150 கோடி உண்கிறோம்!

 

நம் நாட்டில்  'மீ'  என்றால் அறியாதவர் யாருமில்லை. ஒரு வேளை நூடல்ஸ்  என்கிற வார்த்தை நமக்குப் புதிதாக  இருக்கலாம். அது தமிழ் சினிமாவின் மூலம் நமக்கு அறிமுகமான பெயர். ஆனால் நமக்கோ அதனை  அன்று முதல் இன்றுவரை  மீ  என்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம். ஒரு காலகட்டத்தில்  மீ என்பதே ஆங்கிலச்சொல் என்கிற எண்ணமே, என்னைப்போன்றவர்களுக்கு,  ஓங்கி நின்றது.

இப்போது நமது வீடுகளில் ஏதோ ஒரு வகை மீ  இருந்து கொண்டு தான் இருக்கும். நாம் தினசரி நமது உணவுகளில் பயன்படுத்திக் கொண்டுதான்  இருக்கிறோம். மீகூன் போன்றவை  நாம் அடிக்கடி பயன்படுத்துபவை. மேலே காணப்படும் துரித மீ  நம் வீடுகளில்  அவசியம் இருக்கும். ஆபத்து அவசர வேளைகளில் இதனை விட்டால் வேறு ஒன்றுமில்லையே!

பொதுவாகச் சொன்னால் சீனர் சமூகம் எங்கிருக்கிறதோ அங்கே  மீ வகைகள் தவிர்க்க முடியாதவை. அதனால் தான் நாம் இளம் வயதிலிருந்தே மீ வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம்.  அது நம் அன்றாட உணவு வகைகளில் ஒன்றாகிவிட்டது.

துரித மீ வியாபாரத்திற்கு எந்தவொரு எல்லையுமில்லை. கடைகளில் அடுக்கி அடுக்கி கணக்குவழக்கில்லாமல் வைத்திருக்கிறார்கள். ஒரு கடையில் கிடைக்கவில்லை என்றாலும் ஏதோ ஒரு கடையில் கிடைக்கத்தான் செய்யும்.

அதன் அளவுக்கு அதிகமான வியாபாரத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்? மலேசியர்களைப் பொறுத்தவரை அது விலை மலிவு என்பது தான் காரணமாக இருக்க வேண்டும். அதுவும் கையில் காசு இல்லையென்றால் நாம் எங்கே போவது?  உணவகங்களில் விலையோ எல்லாரும் சாப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்து போய் இருக்கும் போது துரித மீ தான் கைகொடுக்கும். குறிப்பாக ஏழைகள், அன்றாடங் காய்ச்சிகள், இவர்களுக்கு அதிகம் கைகொடுப்பது துரித மீகள் தான். பார்க்கப்போனால் அது ஏழைகளின் உணவு என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே போய் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது போன்ற துரித மீகளை வைத்துக் கொண்டு தான் நாள்களைக் கடத்த வேண்டும்!  வேறு என்ன செய்ய?உணவகங்கள் அருகில் இல்லை. சமைக்கத் தெரியாது. அப்போது உடனடியாகப் பசியைத் தீர்ப்பது துரித மீ மட்டும் தான்!

இந்த துரித மீ யைத்தான் மலேசியர்களாகிய நாம்,  ஒர் ஆண்டிற்கு  ஆயிரத்து நூற்று ஐம்பது கோடி மீயை உட்கொள்கிறோம் என்பதாக  அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. துரித மீ யின் தாயகமான சீனா ஓர் ஆண்டிற்கு நான்காயிரத்து ஐனூறு கோடி மீ உட்கொள்ளப்படுவதாக - அதுவே உலகின் முதலிடத்தைப் பிடித்திருப்பதாகவும்  அந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது!

Thursday 6 July 2023

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் மற்றும் மலேசிய சீனர் சங்கமும் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன.

அம்னோ கட்சியினருக்கு இது முக்கியமான தேர்தல். வாழ்வா சாவா தேர்தல். இந்த நிலையில் அவர்கள் ம.இ.கா.வுக்கும் ம.சீ.ச.வுக்கும் போட்டியிட தொகுதிகளை ஒதுக்குவார்கள்  என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர்கள் நிலையே அம்மணமா அல்லது அலங்காரமா என்று அவர்களுக்கே தெரியாது! இதில் வேறு இந்த கோவணாண்டிகளை வைத்துக்கொண்டு கோட் சூட்டெல்லாம் போடலாம் என்று நினைப்பதே தவறு!  ஒதுங்கி விடுவதே நல்லது என்கிற நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இந்நாள் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குப் பெரும் மிரட்டலாக  இருக்கிறார்! அவர் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லியே அரசியலில் வளர்ந்தவர்.  தேர்தல் நெருங்க நெருங்க அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருவார்  என எதிர்பார்க்கலாம்.  தீடீரென இந்த நாடு கிறிஸ்துவ நாடாக மாற்றிவிட்டார்கள் எனக் கூப்பாடு போடுவார்! மலாய்க்காரர்கள் சொந்த நாட்டில்  இரண்டாம் தர பிரஜையாக ஆகிவிட்டார்கள் என கிராமத்துக்குக் கிராமம் போய் தண்டோரா போடுவார்!  இவருக்கு ஜால்ரா அடிக்க டாக்டர் மகாதிர் கூடவே ஓடுவார்!   இப்படி பேசுவதை  மலாய் மக்கள் விரும்புவார்கள்  எனத் தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார் முகைதீன்!

தேசிய முன்னணியிலிருந்து இந்த இரண்டு கட்சிகளும் விலகிய பின்னர்  அம்னோ தான் தனித்துப் போட்டியிடுகிறது. அதன் பலம் என்ன  அதாவது மலாய்க்காரரிடையே அதன் பலத்தைக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளது அம்னோ. பொதுவாகப் பார்த்தால் அம்னோ கோட்டையும் முன்பே சரிந்து போய்விட்டது!  இப்போதும் கூட  அது தனது முந்தைய பலத்தைக் காட்ட இயலாது என்பது தான் பொதுவான கருத்து. அந்த அளவுக்கு மக்கள் மனதில்  ஒரு வெறுப்பை சம்பாதித்துவிட்டார்கள்!  அவர்களை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்!

சமீபத்தில் இலஞ்சம்  ஊழல் ஒழிப்பு ஆணையம்  வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் அதிகமான ஊழல்  கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தான் நடந்திருக்கின்றன என்று கூறுகிறது.  ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் சுமார் 65 விழுக்காட்டினர்! இங்கு அரசியல்வாதிகள் எனக் கூறும்போது அது பெரும்பாலும் அம்னோவினரைத்தான் குறிவைக்கிறது. இவர்கள் பெயர் தான் நாளிதழ்களில்  நாறடிக்கப்பட்டு வந்தன! உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை ஐயனே!

எப்படியோ இந்த சட்டமன்ற தேர்தல் பொதுவில் வித்தியாசமானது. பழைய ஆரவாரங்கள் எதுவும் இருக்கப் போவதில்லை. அம்னோ மீண்டும் எழுமா என்கிற கேள்வி மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றது. டாக்டர் மகாதிர்  தனது கடைசி காலத்தில் இருக்கிறார். அவர் ஓர் அழிவு சக்தி என்பது பலருக்குப் புரிகிறது. அவர் தொட்டது துலங்காது என்பது தான் அவருடைய அந்திமகால நியதி!

Wednesday 5 July 2023

நாசிலெமாக் 'பல்லி!'

 

நாசி லெமாக் நாம் தினசரி சாப்பிடும் உணவு.  பெரும்பாலும் காலை உணவு.

நான் பள்ளி போன போது நாசி லெமாக் மட்டுமே கிடைக்கும். விற்பனையில் வேறு எதுவும் இல்லை. அப்போது சம்பலில் அவர்கள் போடுவது எல்லாம் ஊடாங்  அல்லது சமயங்களில் நெத்திலி சம்பல். அது கடற்கரை நகரம் என்பதால் ஊடாங் தான் பெரும்பாலும் கிடைக்கும்.

இப்போதெல்லாம் நாசி லெமாக்கில் எல்லாவற்றையுமே போட்டு சம்பல் என்கிறார்கள்!  கோழி என்பதெல்லாம் மிகச் சாதாரணம். எனக்கு அதில் உடன்பாடில்லை.! காலை நேரத்தில் கோழி சம்பல் நாசி லெமாக்? வேண்டவே வேண்டாம்.

இப்போது சமீப காலங்களில் சிறு நெத்திலிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதனால் சம்பலில் நெத்திலிகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படியே நெத்திலிகள் கிடைத்தாலும் பெரிய நெத்திலிகளாகவே இருக்கின்றன.

சமீபத்தில் நான் சாப்பிட்ட போது பெரிய நெத்திலிகள் தான்.  பெரிது என்றால்?  பல்லி அளவு பெரிது என்று தாராளமாகச் சொல்லலாம்!  ஆனால் அது பல்லி அல்ல!

இப்போது சம்பலில் அவர்கள் பயன்படுத்தும் நெத்திலி  என்பது உண்மையில் சிறு மீன்கள். நிச்சயமாக சிறு மீனா, பல்லியா என்கிற வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை!  

எப்படியோ அந்த வியாபாரி  நெத்திலி, மீன், பல்லி என்கிற வித்தியாசம் தெரியாமல் சம்பலில் கலந்துவிட்டிருக்கிறார்.  எப்படிப் பார்த்தாலும் அது வியாபாரி மீதான குற்றம் தான்.  இது மனிதர் சாப்பிடும் உணவு என்பது  அவருக்குத் தெரியும். அவர் தான் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது கடைகளில் சாப்பிடுவதே அலர்ஜியை ஏற்படுத்துகிறது.  சுத்தமில்லாத உணவு என்கிற  நினைப்பு தான் வருகிறது. 

இதனால் தான் நாம் ஒன்றை உணவகங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. உணவகங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்கவில்லை என்றால், அவர்களுடன் பகைமையை ஏற்படுத்திக் கொண்டால், ஊழியர்களுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டால்  அவர்கள் நிச்சயமாக பல வழிகளில் உணவகங்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுவார்கள்!  இது தான் நடந்து கொண்டிருக்கிறது!

நாசி லெமாக் என்பது மலேசியர்களின் காலை உணவு. பணம் மட்டுமே குறி என்பவர்கள் தயவு செய்து உணவு சம்பந்தமான விஷயங்களுக்கு வராதீர்கள். பணம் வேண்டும் அதே சமயத்தில் தரமான சாப்பிடும் உணவை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இது போன்ற தொழிலுக்கு வர வேண்டும்.

பல்லி நாசி லெமாக் வேண்டவே வேண்டாம்!

Tuesday 4 July 2023

பேராசிரியரை தொடர விடுவார்களா?

 

பினாங்கு துணை முதலமச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்களை நாட்டில் அறியாதவர்  யாரும் இருக்க முடியாது. ஒரே காரணம் தான். அவர் தான் ஒரு மாநிலத்தின்  துணை முதலமைச்சர்.  ஓர் தமிழர்.  அதற்கு முன்னர் துணை முதல்  அமைச்சர் என்கிற  வார்த்தையை எந்த ஒரு தமிழனும்  மலேசிய நாட்டில் கேட்டதில்லை! இவர் பெயர் தான் முதன் முதலாக தமிழர்களின் காதில் ஒலித்த பெயர்.

கடந்த  மூன்று தவணைகளாக பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அதன் மூலம் மாநில துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர். சுமார் பதினைந்து ஆண்டுகளாக  அவர் துணை முதலமைச்சராகப் பணியாற்றி வருபவர்.

இந்த தவணை, வருகின்ற பொதுத் தேர்தலில், போட்டியிடுவதற்கான வாய்ப்பு இவருக்கு அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.  போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் துணை முதல்வர் பதவி கிடைக்குமா என்பதும் ஐயமே.

ஆனால் அரசியலில் என்னன்னவோ நடக்கும். வலுவுள்ளவன் பிழைத்துக் கொள்வான் என்பார்கள்.  பேராசிரியரே கேட்பது போல இந்த ஒரு முறை அவருக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கலாம். துணை முதல்வராகவும் பதவி கொடுக்கலாம். 

பேராசிரியர் ஓரு கல்வியாளர். தமிழர்களின் பிரச்சனைகளைப் புரிந்தவர். அவர் பதவியில் இருந்து கொண்டு இன்னும் செய்ய வேண்டியவை நிறையவே உண்டு. குறிப்பாக மொழிக்கும், தமிழரின் பொருளாதார உயர்வுக்கும் செய்ய வேண்டியவை இன்னமும் உண்டு.  இந்த கடைசி வாய்ப்பைக் கொடுத்தால் அதனையும் ஓர் அளவு அவரால்  திருப்திகரமாக செய்து முடிக்க  முடியும் என நம்புகிறேன்.

பொருளாதார வளர்ச்சி என்பது தமிழர்களுக்குத் தேவையான ஒன்று.  எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள், போனார்கள் - கடைசியில் அவர்கள் தான் வளர்ச்சி அடைந்தார்களே தவிர இந்த இனத்தை அவர்களால் வளர்ச்சி அடைய செய்ய முடியவில்லை.

அரசியலில் இன்று ஒருவர் போனார் நாளை ஒருவர் வருவார். ஆனால் சமுதாய உயர்வை மதிப்பவர் எத்தனை பேர்?  அதுவும் வருபவர் எல்லாம் வழக்கறிஞராக வருகிறார்கள். வருபவர்களில் பலர் அங்கே பேர் போட முடியாமல் அரசியலுக்கு வருகிறார்கள் என்பது பொதுவான பார்வை! இருந்தாலும் யாரையும் குற்றம்சாட்ட  விரும்பவில்லை.

இங்கு நாம் குறிப்பிட விரும்புவது பினாங்கு துணை முதல்வர் பதவி என்பது ஒரு தமிழருக்கான பதவி. அந்த பாரம்பரியம் தொடர வேண்டும். அதனை நாம் விட்டுவிட முடியாது. ஏற்கனவே கூட ஜார்ஜ்டவுன் மேயராக ஓர் இலங்கைத் தமிழரான  D.S. இராமநாதன் இருந்திருக்கிறார்.  நல்ல  கல்வியாளர்.  அது நமது பாரம்பரியம். அதனை நாம் விட்டுவிட முடியாது.

அதைத்தான் ஜ.செ.க. உணர வேண்டும். ஏதோ ஓர் இந்தியர் என்று இந்தப் பிரச்சனையை அணுகாமல் தொடர்ந்து பேராசிரியர் இராமசாமி அவர்களையே அந்தப் பதவிக்கு, குறைந்தபட்சம் இன்னும் ஒருதவணை, நியமனம் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். தமிழர் நலனே எங்களுக்கு முக்கியம். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும்.

Monday 3 July 2023

இது தான் அதிகப்பிரசங்கித்தனம்!

 

ஒரு சிலர் பண்ணுகின்ற அழிச்சாட்டியங்கள்  மூலம் நமது மக்கள் அனைவரையும் முட்டாளாக்கி விடுகின்றனர்!

அதில் ஒன்று தான் சமீபத்தில் அம்பாங் தமிழ்ப்பள்ளியைப் பற்றிய அவதூறு. ஏதோ தெரிந்தவர் போல அவதூறை அள்ளி வீசுகின்றனர். நாமும் அதனை நம்பும்  கட்டாயத்திற்கு உள்ளாக்கிப்படுகின்றோம்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி அறவாரியம் சமீபத்தில் கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதற்கான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.  நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம்.

பொதுவாக பள்ளிகளில் ஐந்து இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்றால்  அவர்களுக்கான வழிபாட்டுத்தலம் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை.

அம்பாங் தமிழ்ப்பள்ளியில் பதினாறு  இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அத்தோடு பள்ளியில் பணிபுரிபவர்களில் ஐந்து பேர் இஸ்லாமியர்கள். ஆக அவர்களுக்கான  வழிபாட்டுத்தலம் என்பது கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக நடப்பில் இருந்து கொண்டு இருக்கிறது. இப்போது நடந்தது என்பது கொஞ்சம் சீரமைப்புப் பணிகள். வழிபாட்டுத்தலத்தை  சீரமைத்துக் கொடுத்தது  ஏதோ ஓர் இஸ்லாமிய அமைப்பு. 

இவ்வளவு தான் நடந்த பிரச்சனை. இதற்குத் தான் காது,  மூக்கு வைத்து ஏதோ அதிசயத்தைக் கண்டு பிடித்தது  போல  ஒருவர் டிக்டாக்கில் மார்தட்ட,  வழக்கம் போல  டிக்டாக்கிகள்  அதனை பெரிதுபடுத்த அனைவரும், நான் உள்பட, பொங்கி எழுந்துவிட்டோம்!

இது நாம் அனைவருக்கும் ஒரு பாடம்.  டிக்டாக்கில் பலவாறு பல செய்திகள்  வரும். நாம் தெரிந்து கொள்கிறோம்.  குறிப்பாக நமது தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி வரும்போது  கொஞ்சம் தெரிந்து கொண்டு, கொஞ்சம் புரிந்து கொண்டு தான் எழுத வேண்டும். 

சராமாரியாக அனைவரையும் குற்றஞ்சாட்டுவதும், சவடால்தனமாக எழுதுவதும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த குறிப்பிட்ட செய்தியை வெளிபடுத்திய நண்பர் அதனை டிக்டாக்கில் போடுவதற்கு முன்பு, நேரடியாக பார்த்த அந்த நண்பர்,  அதனை பள்ளியில் விசாரித்திருக்கலாம். அவர் தெளிவு பெற்றிருப்பார். எந்தவொரு பிரச்சனையும் எழுந்திருக்காது.

நண்பர்களே!  எதை எழுத வேண்டும், எதை எழுதக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம்!