Monday 29 May 2017

சிக்கனமே நம்மை உயர்த்தும்!

 இது  தான் யதார்த்தம். நம்மிடம் சிக்கனம் இல்லை என்றால் நம்மால் எந்தக் காலத்திலும் பணத்தைப் பார்க்க முடியாது. பணத்தைச் செலவு செய்வதில் கவனம்! கவனம்! என்று சொல்லுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

இப்போது உள்ள விலைவாசிக்கு எப்படிச் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது என்று நாம் எல்லாருமே சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். குறைவான விலைவாசியின் போது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தீர்களா? அப்படி என்றால் விலைவாசி குறைவோ, கூடவோ சிக்கனம் என்பது நம்மோடு கூடவே ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்.

சிக்கனம் என்பது உங்களது தேவைகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள் என்று யாரும் சொல்லவில்லை. தேவையற்றவைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள் என்பது தான் முக்கியம். நாம் செய்கின்ற செலவுகள் அனைத்தையும் பட்டியலிட்டால் நமக்குத் தெரியும் நாம் எங்கு மிகவும் தாராளமாக இருக்கிறோம்; தாராளமற்று இருக்கிறோம் என்பது. ஒரு பிச்சைக்காரனுக்குப் போடும் போது கொஞ்சம் தாராளமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவும் போது தாராளமாக இருக்கலாம். அது அவசியம். ஆனால் பிரச்சனை அங்கு அல்ல. நமக்குச் சொந்தமாக செலவு செய்கிறோமே அங்கு தான் நாம் ஏகப்பட்ட ஒட்டைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். புகைப்பது சுகாதாரக் கேடு என்பது நமக்குத் தெரியும். மது அருந்துதல் உடல் நலக்கேடு என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அதனை நாம் விட்டபாடில்லை. புகைப்பது என்பது நமக்கு நாமே தயாரித்துக் கொள்ளும் பிணப்பெட்டி என்பது நமக்குப் புரிகிறது. இருந்தாலும் அந்தப் பிணப்பெட்டியோடு ஒவ்வொரு நிமிடமும் நாம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்!

ஒவ்வொரு மனிதனும் தான் பிடிக்கும் புகைப்பழக்கத்தை விட்டாலே பல நூறு வெள்ளிகளை சேமிக்க முடியும். மது அருந்துவதை நிறுத்தினாலே பணம் மட்டும் அல்ல குடும்பத்தையும் ஒரு வளமான வாழ்க்கைக்குக் கொண்டு செல்ல முடியும். குடும்பத்தலைவன் மது அருந்தினால் அவனது  பிள்ளைகளும் அப்பனையே வழிகாட்டியாகக் கொள்ளுவார்கள். நாம் வேறு எதனையும் செய்ய வேண்டாம். நாம் சிகிரெட் பிடிக்காமல் இருந்தால் போதும். நாம் மது அருந்தாமல் இருந்தால் போதும். நாம் சிக்கனத்திற்கு வந்து விடுவோம்.

இன்றைய நிலையில் நாம் அதிகமாகச் செலவழிப்பது புகை பிடிப்பதற்கும், மது அருந்துவதற்கு மட்டுமே! இவைகளை நிறுத்தினாலே நம் கையில் எப்போதும் பணம் இருக்கும். குடும்பத்தில் குடும்பத்தலைவர் சிக்கனமாக இருந்தாலே அந்தக் குடும்பம் வாழ்க்கையில் உயர்வைக் கண்டு விடும்.

மீண்டும் சொல்லுகிறேன் சிக்கனமே நமக்கு உயர்வைக் கொண்டு வரும்! சிக்கனத்தோடு, சிறப்பாக வாழ முயற்சி செய்வோம்!

Friday 26 May 2017

கதறும் குடும்பத்தினர்....


ரேமன் கோ குடும்பத்தினர் கதறுகின்றனர். ஆனால் அவரைக் கடத்திய கல் நெஞ்சர்களுக்கு மனம் இறங்கவில்லை.

ஆம், போதகர் ரேமன் கோ கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகிவிட்டன. இந்த நிமிடம் வரை அவரைப்பற்றி எந்த ஒரு தடையமும் - எந்த ஒரு த்கவலும் - இல்லை.

ஒவ்வொரு முப்பது நாட்களுக்குப் பிறகு நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு காவல்துறைத் தலைவர் "அங்கு ஒருவரை கைது செய்திருக்கிறோம்; இங்கு ஒருவரை கைது செய்திருக்கிறோம்" என்று தான் சொல்லுகிறாரே தவிர, வேறு ஏதும் நம்பிக்கை தரும் செய்திகளாக ஒன்றும் இல்லை.

அவரின் மனைவியும் பிள்ளைகளும் இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பின்னர் மன அமைதி இன்றி ஒவ்வொரு நாளும் இறைவனிடம் கையேந்தி நிற்கின்றனர்.ஒரு சமயப் போகதர், எத்தனையோ உடைந்த உள்ளங்களை உயர்த்திப் பிடித்தவர் இன்று யார் பிடியில் சிக்கியிருக்கிறார் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை.

அவர் ஒரு தீவிரவாத மதக்கும்பலிடம்  சிக்கியிருக்கிறார் என்று சந்தேகப்பட்டாலும் அதனையும்  நிருபிக்க எந்த ஆதாரமும் இல்லை. வெறும் ஊகங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது மட்டும் புரிகிறது.



வேறு கோணத்தில் பார்க்கும் போது ஒரு சமயப் போதகர் கடத்தலில் காவல்துறை மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ளதோ என்று நாம் நினைக்கவும் தோன்றுகிறது. ஒரு கடத்தலை நூறு நாட்கள் ஆன பின்னரும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால்......நாம் எப்படி அதனை ஏற்றுக் கொள்ளுவது?  காவல்துறையை விட கடத்தல்காரர்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று தானே அதன் பொருள்!

எது எப்படி இருப்பினும் நமது நாட்டு காவல்துறையை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்களின் நடவடிக்கையை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே இந்தக் கடத்தல் சம்பவத்தை ரேமன் கோ குடும்பத்தினர் ஐநா சபைவரை கொண்டு சென்றிருக்கின்றனர்.

அவரின் விடுதலைக்காக நாமும் பிரார்த்திப்போம்!

Thursday 25 May 2017

எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர்!


எவரஸ்ட் சிகரத்தை ஏறியவர்கள் பலர் இருக்கிறார்கள்; பல  இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் என்று எடுத்துக் கொண்டால் முதன் முதலில் எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டவர்கள் மலேசியத் தமிழர்களான எம்.மகேந்திரேனும், என். மோகனதாஸ் அவர்களும் தான்.

இந்தச் சாதனை அந்த இரு தமிழர்களால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்டது. 1997 ஆண்டு, மே மாதம், 23-ம் தேதி, காலை மணி (மலேசிய  நேரம்) 11.55 க்கு மகேந்திரன் முனியாண்டி அந்தச் சிகரத்தில்  தனது முதல் காலடித்தடத்தைப் பதித்தார். அவருடன் சென்ற மோகனதாஸ் நாகப்பன் சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து 12.10 க்கு மகேந்திரனுடன் சேர்ந்து கொண்டார். அதுவே எவரஸ்ட் சிகரத்தின் தமிழனின் முதல் காலடித்தடம்! அந்த எவரஸ்ட் சிகரம் சுமார் 8,848 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த இருவருமே அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மலேசிய மலை ஏறும் பத்து பேர் கொண்ட குழுவில் இடம் பெற்ற மலையேறிகள். அந்தக் குழுவில் மலயேறி வென்றவர்கள் இவர்கள் இருவர் மட்டும் தான்.


                          டத்தோ மோகனதாஸ்       டத்தோ மகேந்திரன்

இந்த இருபது ஆண்டு நிறைவு  விழாவினை இந்திய விளையாட்டு மன்ற அறவாரியம் அந்த வெற்றியினை நினைவு கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தது. எவரஸ்ட் சிகரத்தில் முதல் காலடியைப் பதித்த எம்.மகேந்தரன், இரண்டாவது தடம் பதித்த என்.மோகனதாஸ்  ஆகியோருடன் மற்றும் அந்தக் குழுவில் இடம் பெற்ற மற்றவர்களுக்கும் சிறப்புக்கள் செய்யப்பட்டன.

வென்றவர்கள் தமிழர்கள் என்பதாலேயே இவர்களின் சாதனை அரசுத் தரப்பில் ஏற்றுக்கொள்ளப் பட வில்லை! இவர்களுக்குக் கிடைத்த டத்தோ விருது கூட எதிர்கட்சி ஆட்சியுலுள்ள பினாங்கு மாநிலம் கொடுத்த பின்னர் தான் கூட்டரசு அரசாங்கம் கொடுக்க முன் வந்தது! பினாங்கு மாநில அரசங்கம் 2010 - ம் ஆண்டு டத்தோ விருது கொடுத்து இருவரையும் கௌரவித்தது. அதன் பின்னர் தான் 2011-ல் கூட்டரசு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது!

இன்றையச் சூழலில் எத்தனையோ வேதனைகளச் சுமந்து கொண்டு தான் நாம் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் சமய அடிபபடையில் இயங்கும் அரசாங்கம் நமது சாதனைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

நமது சாதனைகள் சரித்திரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. அதனால் நம்முடைய சாதனைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே இன்றைய நமது நிலை. அதனையே இந்திய விளையாட்டு மன்ற அறவாரியம் செய்கிறது. நாம் அவர்களைப் பாராட்டுகிறோம்!

Wednesday 24 May 2017

கேள்வி - பதில் (47)


கேள்வி

ரஜினி அரசியலுக்கு வரத்தான் வேண்டுமா?

பதில்

வரத்தான் வேண்டும் என்று அவர் நினைக்கிறார். தமிழர்கள் இருகரங்கூப்பி அவரை வரவேற்ற போது அவர் தமிழர்களை எட்டி உதைத்தார். இப்போது உங்களுக்கு வயாதாகிவிட்டது அரசியல் வேண்டாம் என்கிற போது 'நான் வருவேன்!'  என்று அடம் பிடிக்கிறார்!

ஒரு காலக் கட்டத்தில் "இந்தத் தமிழ் நாட்டை ஆண்டவனால் கூடக் காப்பாற்ற முடியாது!"  என்று சொன்னவர். அப்போது நீங்கள் வந்து காப்பாற்றுங்கள் என்று மக்கள் கெஞ்சினர். அப்போது அவர் கண்டு கொள்ளவில்லை.

அப்போது தமிழகத்தின் மீது அவரின் பார்வை வேறு விதமாக இருந்தது. இப்போது அவரின் பார்வை வேறு விதமாக மாறி விட்டது!

அரசியலுக்கு வர வேண்டும் என்றால் வலுவானக் காரணங்கள் இருக்க வேண்டும். அப்படி அரசியலுக்கு வர வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் அதற்கான அடிப்படை வேலைகளை அவர் எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எதனையுமே செய்யவில்லை. ஓர் அந்நியராகவே வாழ்ந்து கொண்டு சினிமாவில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இப்போது மக்கள் கேட்பதெல்லாம்: அவர் ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்தாரா?  நெடுவாசலுக்குக் குரல் கொடுத்தாரா?  ஏன்? கடைசியாக பாகுபலி சத்தியராஜ் பிரச்சனையில் குரல் கொடுத்தாரா? ஒன்றுமே இல்லை! தன்னைத் தமிழராக எந்த இடத்திலும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.

இப்போது ஏன்? அவருக்கு என்ன பிரச்சனை? அவர் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பவர்கள் யார்? இப்போது அவருக்கு எதிர்ப்பு தமிழர்களிடமிருந்து தான் கிளம்புகிறது. தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அவரை ஆதரிக்கிறார்கள். காரணம் உண்டு. தமிழர்கள் தமிழகத்தை ஆட்சி புரிவதை இந்தத் திராவிடப்பிரிவனர் விரும்பவில்லை. வழக்கம் போல தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறார்கள். அத்தோடு தமிழகப் பிராமணர்களும் ரஜினியே ஜெயலலிதாவுக்குச் சரியான மாற்று என்று அவர்களும் ரஜினி வருவதை விரும்புகிறார்கள்.

சரி! நான் தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரியில் பிறந்தேன் என்கிறார். அதனால் நான் தமிழன் என்கிறார். அதுவும் சரி. ஆனால் அவர் பிறந்த கிராமத்திற்கு இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார்? ஏதாவது பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்திருக்கிறாரா? அந்தக் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? ஒன்றுமே இல்லை! சொந்த, பிறந்த மண்ணுக்கே ஒன்றும் செய்யாதவர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்?

அவருக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்று ஒரு மண்ணும் இல்லை! அவர் ஒரு நோயாளி என்பது அனைவருக்கும் தெரியும். வயதானக் காலத்தில் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் வெளி நாடுகளில் இலவச சிகிச்சை பெறலாம். அப்படியும் இல்லாவிட்டால் பெரும் பெரும் மருத்துவ நிபுணர்களை தமிழ் நாட்டுக்கு வரவழைத்து சிகிச்சைகள் பெறலாம். இதைக் கண்கூடாக ஜெயலலிதா விஷயத்தில் நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி சொல்லுவதற்கும் காரணங்கள் உண்டு. என்னதான் ரஜினி கோடிகணக்கில் பணம் சம்பாதித்தாலும் அவரின் மனைவி, பிள்ளைகள் கையில் தான் கஜானா இருக்கிறது! பணம் உள்ளே போகுமே தவிர, பணம் வெளியாக வாய்ப்பே இல்லை! அவர் படித்த பள்ளிக்கே அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்றால் அவர் என்ன அந்த அளவுக்கு ஈரம் இல்லாத மனிதரா?  ஆனால் அவர் குடும்பத்தினர் செய்கின்ற தவறுகளுக்கு அவர் தான் குற்றம் சாட்டப்படுகின்றார்!

வயதான காலத்தில் அவரும் இந்த இலவசங்களுக்கு ஆசை படுகின்ற நிலைமை அவரது குடும்பம் அவருக்கு ஏற்படுத்திவிட்டது என்று நாம் நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அவர் அரசியலுக்கு வரத்தான் வேண்டும் என்கிற நிலைமையை அவருடைய சுற்றுப்புறங்கள் உருவாக்குகின்றன.  ஆனால் சராசரி தமிழன் "இந்தச் சினிமா நடிகர்களால் நாம் ஏமாந்தது போதும்!" என்று நினைக்கிறான். அவர் நல்ல நடிகராகவே இருக்கட்டும்!  அது தான் நமது ஆசை!

இனி மேலும் இனி மேலும் சினிமா நடிகர்கள் தமிழர்களை ஆட்சி செய்ய நினைப்பது தவிர்க்கப்பட வேண்டும்!





Monday 22 May 2017

ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?


நான் ரஜினியின் ரசிகன். அவர் நடித்த கபாலி படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை தியேட்டரிலும் பல முறை இணையத்திலும் பர்த்தவன். அவர் நடித்த படங்களில் கபாலி படமே எனக்குப் பிடித்தமானப் படம்.

அவரின் ரசிகன் நான். அவ்வளவு தான். அதற்கு மேல் வேறு வகையான ஒட்டும் இல்லை உறவும் இல்லை!

இப்போது அவர் அரசியலுக்கு வந்தால் ...? நான் ஆதரிக்கவில்லை. ஏன்? தமிழகத்தை சினிமா நடிகர்கள் ஆண்டது போதும்.  கடந்த ஐம்பது ஆண்டுகள் அவர்களது ஆட்சி தான். இந்த ஐம்பது ஆண்டுகள் அவர்கள் தமிழகத்தை அப்படி ஒன்றும் பூத்துக்குலுங்கும் பூமியாக மாற்றி விடவில்லை!  உண்மையைச்  சொன்னால் ஐம்பது ஆண்டுகள் நிறைவில் தமிழகம் வறண்ட பூமியாக மாறிவிட்டது; விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. தமிழகம்  சாராய வருமானத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!

இவைகளே போதும். நடிகர்கள் நடிக்கத்தான் லாயக்கு என்று. ஒரு நாட்டை வழி நடத்த அவர்கள் தகுதி இல்லாதவர்கள்!

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பெரிதாக ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. தமிழகத்திற்கு எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.

அரசியலுக்கு வருபவர்கள் நேர்மையளர்களாக இருக்க வேண்டும். இந்த ஐம்பது ஆண்டுகளில் அப்படி யாரையும் நாம் பார்க்கவில்லை. அதனால் தான் நேர்மையைப்பற்றி பேசும் போதெல்லாம் கர்மவீரர் காமராஜர், கக்கன் காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.

ரஜினி நேர்மையாளரா என்று நமக்குத் தெரியாது. அவர் நடிக்கும் படங்களுக்கு அவர் எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று யாருக்கும் தெரியாது. அவர் படங்கள் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு அவருடைய ரசிகர்கள் அதிகமான விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கிறார்கள். அரசாங்கம் கொடுத்திருக்கும் விலை வேறு. ஆனால் தியேட்டர்கள் கொடுக்கும் விலை வேறு.  இந்த "அதிகமான"  விலை என்பது கறுப்புப்பணம்.என்பதோடு மட்டும் அல்ல இந்தப்பணம் நடிகர்களுக்குத்தான்  போய்ச் சேர்கிறது என்று சொல்லப்படுகிறது! அப்படி என்றால் தனது ரசிகர்களுக்குக் கூட அவர் உண்மையானவராக  இல்லை!

தனது ரசிகர்களுக்கே இந்த நிலை என்றால் தமிழ் நாட்டு மக்களுக்கு அவர் எப்படி உண்மையானவராக இருப்பார்.......?

சினிமாவில் அவர் எப்படி நல்லவராக இருக்கிறாரோ அப்படியே இருப்பது தான் அவருக்கு நல்லது. மற்றபடி அவர் அரசியலுக்கு வருவது என்பது: ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு" கொடுத்த தமிழனை எட்டி உதைப்பதற்குச் சமம்!  கர்னாடக மாநிலத்தவர் தமிழருக்கு எதிராவனவர்கள் என்பதை உறுதிபடுத்துவதாக அமையும்!

அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்!

Saturday 20 May 2017

கல்வியைப் புறக்கணிக்கிறோமா?..


கல்வியைப் புறக்கணிக்கின்ற சமுதாயமா நாம்?  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை; இப்போது நிறைய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக, வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அனைத்தும் சரி தான். ஆனாலும் ஏதோ, எங்கோ ஒரு மூலையில் திருப்தி இல்லாத ஒரு மன நிலை.

தோட்டப்புறங்களில் நமது மக்கள் வேலை செய்த போது அங்கு தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அந்தப் பள்ளிகளில் படித்து முடித்தவுடன் மேலும் படிக்க பட்டணம் போக வேண்டும். ஒரு சிலர் கல்வியைத் தொடர்ந்தனர். பலரால் தொடர முடியவில்லை. வறுமை தான் காரணம்.

ஆனால் இவைகள் எல்லாம் ஓரளவு களையப்பட்டுவிட்டன. இப்போது பலர் தோட்டப்புறங்களைக் காலி செய்து விட்டனர்.  பட்டணப்புறங்களுக்கு அருகிலேயே வாழ்வதால் கல்வி கற்கும் வசதிகள் அதிகம். ஆனால் அதைவிட செலவுகளும் அதிகம். பெற்றோர்கள் தங்களால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கின்றனர். இது மேம்போக்கான ஒரு பார்வை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போனால்.........?  நம்மிடையே குடிகாரச் சமுதாயம் என்று ஒன்று இருப்பதை மறந்துவிடக் கூடாது.
எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கூட்டம்.  இவர்களை வைத்தே பணம் சம்பாதிக்கும் இன்னொரு அடிதடிக் கூட்டம். இது போன்ற குடிகாரர்களை ஆள் நடமாட்டம் இல்லாத சிறு சிறு தோட்டங்களில் இவர்களை வைத்து வேலை வாங்குவது, அவர்களுக்குச் சரியான சம்பளத்தைக் கொடுக்காமல், ஏதோ பெயருக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு, சாராயத்தைக் கொடுத்தே அவர்களை நிரந்தர அடிமையாக வைத்திருப்பது.....என்று இப்படிப் பல தொல்லைகளை அவர்கள் அனுபவிக்கின்றனர். எப்போதும் குடிபோதையில் இருப்பவன் பிள்ளைகளின் கல்வி, பிறந்த சான்றிதழ், அடையாளக்கார்டு என்பதைப்பற்றி எல்லாம் எங்கே கவலைப்படப் போகிறான்!

இப்படி ஒரு குடும்பத்தை ஒரு காலக்கட்டத்தில்  நான் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு சீனக்குடும்பம் அவர்களின் பிள்ளைகளை அருகிலிருந்த ஒரு சீனப்பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு தமிழ்க்குடும்பம் பிள்ளைகள் பள்ளிக்குப் போக வேண்டுமே என்கிற உணர்வே இல்லாமல் இருந்தார்கள். கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் அவர்களும் அவர்கள் பிள்ளைகளை அந்தச் சீனப்பள்ளிக்கே அனுப்பியிருக்கலாம். அதுவும் இல்லை. பின்னர் எங்கள் குழுவினரே பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டோம்.

இப்போதும் இவர்களைப் போன்ற நிலையில் உள்ளவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நிரந்தரக் குடிகாரனாக இருந்தால் மனைவியால் என்ன செய்ய முடியும்? பள்ளிகளைப் பார்க்காத பிள்ளைகள் தான் உருவாகுவார்கள். ஆனால் இவர்களும் கணிசமான  அளவில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு தமிழ்ப்பெண்ணை மணந்த வங்காளதேசி கூட தனது பிள்ளைகள் மலாய்ப்பள்ளிக்கு அனுப்புகிறான். அவனுக்கு இருக்கின்ற அக்கறைக் கூட நமது இனத்தவருக்கு இல்லையே என்று நினைக்கும் போது நமக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

இது போன்ற பலவீனப்பட்ட குடும்பங்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்துகிறானே இன்னொரு அடிதடி தமிழன் அவனை நினைக்கும் போது அதுவும் நமக்கு வேதனயைத் தருகிறது. அவனது குடும்பமே விளங்காமல் போகும் என்பதை விளங்காமல் செய்கிறானே ...அவனை நாம் என்ன செய்வது?

எவ்வளவு தான் இடர்ப்பாடுகள் இருந்தாலும் இந்தச் சமூகம் தலைநிமிர்ந்து வாழும், வளரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு!

வாழ்க, தமிழினம்!






Friday 19 May 2017

கேள்வி - பதில் (46)


தொடர்ச்சி - கேள்வி - பதில் (45)


தமிழ் நாட்டு அரசியலில்  எதுவும் நடக்கும் என்பதால் ரஜினிக்கு நாம் செய்யும் பரிந்துரை இது தான்:

தமிழ் நாட்டு மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்று சொல்லுகிறீர்கள். உங்கள் மனைவி ஒரு தமிழ்ப்பெண். நீங்கள் தமிழனாக மாறுவதில் எந்தச் சிரமமும் இல்லை.

முதலில் கோட்டையில் பணிபுரிபவர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும். தமிழையும் படித்தவர்களாக இருக்க வேண்டும். சட்டமன்ற, நாடளுமன்றத்தில் இன்னும் அதிகமானத் தமிழர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மேற்கு வங்காள அரசு போல  எல்லா மொழிப்பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப் பட வேண்டும்.

மதுக் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும்.வெளி நாட்டுக் குடிபானங்கள் தடைசெய்யப்பட்டு உள்ளுர் குளிர்பானங்கள் ஊக்குவிக்கப்பட வேள்டும்.

கர்னாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிடையே உள்ளப் பிரச்சனைகள் களையப்பட வேண்டும்.  களையப்பட முடியாத நிலையில் எதுவும் இருந்தால் அந்தந்த மாநிலங்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்றால்; எல்லாப் பிரச்சனைகளும் காலங்காலமாக அப்படியே நிற்கும். தீர்வு பிறக்காது.

மீனவர் பிரச்சனை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். ஒரு மீனவர் சுடப்பட்டாலும்  உடனடியானத் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும். 100 சிங்களவர்களாது சுட்டுக்கொல்லப்பட வேண்டும். அதேபோன்று  இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். அது மத்திய அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை என்பதெல்லாம் சும்மா சாக்குப்போக்கு என்பது நமக்கும் தெரியும்.

நீங்கள்  "44 ஆண்டுகள் தமிழ் நாட்டில் வாழ்கிறேன். நான் தமிழன் தான்" என்கிறீர்கள். நன்று! நன்று!  கருணாநிதியும், ஜெயலலிதாவும் அப்படித்தான் சொன்னார்கள்! அவர்களால் தமிழன் ஏமாந்தான் என்பது தான் நிதர்சனம்!

ஒர் ஐம்பது ஆண்டுகள் நாங்கள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம். பிற மாநிலத்தவரை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது என்பது இயற்கையே! காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அனைத்தும் வெளிப்படையாகவே உள்ளது!

மொழியை இழந்தோம்; கலாச்சாரத்தை, பண்பாட்டை இழந்தோம்;.  காடு மேடுகளை இழந்தோம்; ஆற்று மணலை இழந்தோம்.  இப்படி இழந்தோம், இழந்தோம் இழந்தோம்.....! வேறு எதனையும் இந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழர்கள் பார்க்கவில்லை.

நாங்கள் சொல்ல வருவது எல்லாம் இது தான்:  ஏதோ உங்களைச் சுற்றியுள்ள சில பிராமணர்கள் சொல்லுகிறர்களே என்பதற்காக அரசியலுக்கு வராதீர்கள். அப்படியே நீங்கள் வந்தாலும் முதலில் அவர்களுக்குத்தான் முதல் ஆப்பு! அரசாங்கக் கோவில்களில் பிராமணர்கள் மட்டும் தான் அர்ச்சர்கள் என்பதை நீங்கள் மாற்ற வேண்டி வரும்! கபாலியில் நீங்கள் பேசிய வசனங்களை எல்லாம் அமல்படுத்த வேண்டி வரும்!

உண்மையைச் சொன்னால் அரசியல் உங்களுக்கு எந்த வகையிலும்  சரிபட்டு வராது! அரசியலுக்கு வந்து கெட்ட பெயர் வாங்குவதைவிட சினிமாவே உங்கள் உலகமாக இருக்கட்டும்.

தமிழ் நாட்டில் இன்னொரு தமிழர் அல்லாதார் தமிழர்களை ஆள நினைப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. நாங்கள் அதனை எதிர்ப்போம்! உலகத்தமிழர்கள் அனைவருமே  எதிர்ப்பார்கள் என்பதே  உண்மை!






கேள்வி - பதில் (45)


கேள்வி

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று மீண்டும் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவே?

பதில்

கேள்விகள் மக்களால் எழுப்பப்படவில்லை. இந்த முறை அவரே அந்தக் கேள்வியை எழுப்பினார். அவர் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இது நாள்வரை தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு எழாமல் இருந்திருக்கலாம்.. ஆனால் ஏனோ அப்படி ஓர் ஆசை இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கிறது! அவரே முதலில் அந்தக் கருத்தை வெளியிட்டுவிட்டு இப்போது அது பற்றி பேச வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்!

அப்படி ஒரு ஆசை அவருக்கு ஏற்படக் காரணம் ஜெயலலிதாவின் மரணமாக இருக்கலாம்.  அல்லது கருணாநிதி முடங்கிப் போனதும் ஒரு காரணமாக  இருக்கலாம்.

இப்போதைக்கு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் காலியாக இருக்கிறது. சொல்லும்படியான தலைவர்கள் யாரும் இல்லை. அப்படியே இருந்தாலும் அனைவருமே ஜெயலலிதாவைப் போலவே, கருணாநிதியைப் போலவே ஊழலில் சிக்கியவர்கள்! அதனால் தான் நாங்கள் அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று அனைவருமே போட்டிப் போட்டுக் கொண்டு சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள்! அம்மாவின் ஆட்சி என்றாலே புரிந்து கொள்ள வேண்டும்! அது ஊழல் ஆட்சி தான்! அப்படியே ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தாலும் அதுவும் அப்பாவைப் போலவே ஊழல் ஆட்சி தான்!

இப்போதைய வெற்றிடம் ரஜினிக்குச் சாதகம் என்பது உண்மை. ஆனால் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்னும் குரல் தமிழக இளைஞர்களிடையே இப்போது ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் உண்மை. நிச்சயமாக ரஜினி இன்னொரு கருணாநிதியாகவோ, ஜெயலலிதாகவோ இருக்கமாட்டார் என்றும் நம்பலாம். அவருடைய நேர்மையைப் பற்றி நாமும் கேள்விப் பட்டிருக்கிறோம்.

ஆனால் அரசியல் என்பது அனைவரையுமே மாற்றிவிடும்! ஒரு நேர்மையான மனிதர் என்று சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். கூட அவருடன் இருந்த ஊழல்வாதிகளால் மாறிப்போனாரே!  ஏன், ஜெயலலிதா மீது அவருக்கு இருந்த மயக்கத்தினால் இன்று தமிழகமே குடிமயக்கத்தினால் மயங்கிப்போய் இருக்கின்றதே! ஒரு நேர்மையான மனிதரால் ஒரு நேர்மையற்ற அரசியலைத் தானே கொடுத்துவிட்டுப் போக முடிந்தது! அன்று அவர் செய்த பிழையினால் இன்று தமிழகம் தலைநிமிர முடியாமல் தடுமாறுகிறதே!

தொடர்ச்சி..........கேள்வி-பதில்  (46)

Thursday 18 May 2017

மலேசிய ஐ..எஸ் பயங்கரவாதி தற்கொலை...?


மலேசியாவின் ஐ.எஸ் பயங்கரவாதியும் உலக அளவில் மிகவும்  ஆபத்தானவன் என்று கூறப்பட்ட முகமட் வாண்டி முகமட் ஜெடி கடந்த ஏப்ரல் 29 அன்று ஒரு  தீவிரவாதத் தாக்குதலின் போது சிரியா, ராக்காவில் கொல்லப்பட்டதாகக்  காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபக்கர் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே வாண்டியின் மனைவி, நோர் மாமுடா ஆமட் இந்தச் செய்தியை வெளிபபடுத்திருந்தாலும் இப்போது இது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக டான்ஸ்ரீ காலிட் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

முகமட் வாண்டி ஐ.எஸ். ,மலேசியப்பிரிவுக்குத் தலைமை வகித்தவன். மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை உருவாக்கவும் நாட்டில், கலவரங்களை ஏற்படுத்தவும்,  அதற்கான நிதி உதவிகளைக் கொடுத்து உதவவும் அவனது முக்கிய பணி. அவனோடு கைகோர்த்தவர்களில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்  இதுவரை இங்கு கைது செய்யபட்டுள்ளனர். இதில் ஒருசில காவல்துறையினரும்  அடங்குவர்.

வாண்டி,  மலாக்கா, டுரியான் துங்களைச் சேர்ந்தவன். இவனும் இவனது மனைவியும் 2014 -ம் ஆண்டு ஜனவரியில் சிரியாவிற்குப் பயணம் செய்தனர். இவர்களுக்கு அங்கேயே பிறந்த இரண்டு குழந்தைகள் உண்டு. இப்போது இவரது மனைவி என்ன சொல்லுகிறார்?  தனது கணவரின் பணி இப்படி இடையிலேயே போய்விட்டாலும் அவரின் பணியை நான் தொடருவேன் என்கிறார். அவரின் குழந்தைகளும் வருங்காலங்களில் தனது பெற்றோர்களின் பணியைத் தொடரும் வாய்ப்பும் உண்டு.


ஆனாலும் வாண்டியின் கடைசி காலம் மகிழ்ச்சியுடைதாக இல்லை. மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காரணம் ஐ.எஸ். தலைவர்கள் எதிர்பார்த்தது போல் வாண்டியின் செயல்பாடுகள்  மலேசியாவில் சரியான பலனைத் தரவில்லை.  முற்றிலும் ஒரே இஸ்லாமிய சமூகமாக இருந்திருந்தால் ஏதாவது  பலன் கிடைத்திருக்கலாம்.

ஆனால் மலேசியா என்பது ஒரு சமயம் சார்ந்த நாடல்ல.  பல்வேறு  சமயத்தின்ர் வாழ்கின்ற நாட்டில் இது போன்ற தீவிரவாதங்கள் எடுபடாது என்பதை ஏனோ வாண்டி உணரவில்லை!

மலேசியாவில் வாண்டியின் மிகப்பெரும் சாதனை என்றால் அது ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் மட்டுமே! பூச்சோங்கில் அந்த வெடிக்குண்டு சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

வாண்டியின் மரணத்தில் கூட பல சந்தேகங்கள் உள்ளன.  தனக்குக் கொடுக்கப்பட்டப் பணத்தை தவறாகக் கையாண்டதாக ஒரு குற்றச் சாட்டு உண்டு. அதன் தொடர்பில் அவன் 'தேடப்பட்டு' வந்தாகவும் கூறப்படுகின்றது. அதனால் அவனே தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இது ஒரு சோகக் கதை.மக்கள் அமைதியாக வாழ்கின்ற ஒரு நாட்டுலிருந்து இருபத்து நான்கு மணி நேரமும் குண்டு வெடிப்பும் கலவரமும் கொண்ட ஒரு நாட்டுக்குக் குடியேறும் போது அதன் எதிரொலி எப்படி இருக்கும் என்பதை இந்த் வாண்டியின் வாழ்க்கை அனைவருக்கும் நல்ல பாடம்!

Saturday 13 May 2017

நீங்கள் கோழி பிரியரா...?


இப்போது நம்மைச் சுற்றிச்சுற்றி  வருகிற வியாதிகள் அனைத்துக்கும் நமது உணவு பழக்கங்களே காரணம். உணவுகள் தான் காரணம் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். ஆனால் என்ன செய்வது?  இருக்கின்ற உணவுகளைத் தானே, கிடைக்கின்ற உணவுகளைத் தானே நாம் சாப்பிட முடியும்? வேறு வழி இல்லையே!

"இருக்கின்ற, கிடைக்கின்ற" என்பதெல்லாம் பொறுப்பற்ற பதிலாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்ய வேண்டுமே தவிர பொறுப்பற்ற முறையில் நாம் நடந்து கொள்ளக் கூடாது. . இது நமது உடல் நலம் சம்பந்தப்பட்டது.

வியாதிகள் நம்மைக் கேட்டு வருவதில்லை. எப்போது வரும், நமது உடம்பில் எத்தனை ஆண்டுகளாக ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தீடீரென்று மருத்துவர்கள் ஏதாவது வியாதியைப் பற்றிச் சொல்லும் போது நாம் அதிர்ச்சி அடைகிறோம். அதிர்ந்து போகிறோம். ஒடிந்து போகிறோம்.

மிகவும் சுறுசுறுப்பான ஒரு மலாய் நண்பரை எனக்குத் தெரியும். வயது ஐம்பத்தைந்துக்குள்  இருக்கலாம். எப்போது சிரித்துப் பேசுபவர் சமிபத்தில் மிகவும் சோர்ந்த நிலையில் அவரப் பார்த்தேன். நான் அப்படி அவரைப் பார்த்ததில்லை. தாடி கொஞ்சம் வளர்ந்திருந்தது. "உன்னைப் போலவே எனக்கும் தாடி" என்று சுவாரஸ்யமில்லாமல் என்னைப் பார்த்துப் பேசினார். என்ன காரணம் என்று விசாரித்தேன்.  "எனக்குப் 'பை பாஸ்' நடக்கப் போகிறது" என்று கொஞ்சம் வருத்ததோடு சொன்னார். நான் அவரைப் பயப்பட வேண்டாம். இந்த மாதிரி இருதய சிகிச்சை எல்லாம் இப்போது சர்வ சாதாரணம்; நவீன சிகிச்சை முறையில் இதுவும் சாதாரணமாகிவிட்டது என்று ஆறுதல் கூறினேன்.

இருந்தாலும் பயம் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் போகக் கூடிய ஒன்றா? அதுவும் இருதய சிகிச்சை!

ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லுவேன். கோழி சாப்பிடுவதில் நமது மலேசியர்கள் போல உலகத்தில் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள்.  நமது வீடுகளில் வளர்க்கும் கோழிகளை (கம்பத்துக் கோழி) நீங்கள்  சாப்பிட்டால் நீங்கள் விதிவிலக்கு! ஆனால் சந்து பொந்துகள், பக்கத்துக் கடைகள், மினி மார்கெட், சுப்பர் மார்கெட் கண்ட கண்ட இடங்களிலெல்லாம்  விற்கிறார்களே - இறைச்சி கோழி என்கிறார்களே - அந்தக்கோழிப் பிரியர் என்றால் - அதனை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அதனைக் குறைத்துக் கொள்ளுங்கள். நமது நாட்டில் முக்கால்வாசி வியாதிகளுக்கு இந்தக் கோழிகள் தான் முக்கிய காரணம் என்பதை நான் அடித்துச் சொல்லுவேன். இறைச்சிக்காக என்று சொல்லி சராசரியாக வளர வேண்டிய கோழிகளை ஊசிகளைப் போட்டு அவைகளைப் பெருக்க வைப்பதும், மிகவும் அபாயகரமான தீவனங்களைப் போட்டு வளர வைப்பதும் - மிக மிகக் கொடுமையான ஒரு விஷயம். அவைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற உணவுகளாகட்டும், போடுகின்ற ஊசிகளாகட்டும் அனைத்தும் விஷத் தனமை உள்ளவை  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோழிகள் அனைத்தும் இயற்கையாக வளரவில்லை; நடக்கக் கூட முடியாத ஊனமுற்ற கோழிகள்!   சாதாரணமாக வளரும் அந்தக் கோழிக் குஞ்சுகளை, ஊசிகள் போட்டு, உணவுகளைத் திணித்து அவைகளை நடக்க முடியாமல் செய்து, ஊனமாக்கி நாம் சாப்பிட சந்தைகளுக்கு அனுப்புகிறார்களே - கொடுமையிலும் கொடுமை! இந்தக் கோழிகள் சாப்பிடுகின்ற உணவுகள், ஊசிகள்  அனைத்தும் நமது உடம்புக்கும் செல்லுகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்!

நாம் இறைச்சிக் கோழி என்கின்ற (பிரைலெர் கோழி) சாப்பிடுகின்ற ஒவ்வொரு கணமும் ஒன்றை  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோழிகளின் மீது என்னன்ன விஷம் திணிக்கப்படுகிறதோ அந்த விஷம் நமது உடலிலும் செலுத்தப்படுகிறது என்பதை மறவாதீர்கள்!

நீங்கள் கோழி பிரியர் என்றால் முடிந்தவரை நாட்டுக் கோழி பக்கம் போங்கள்! முடிந்தவரை உங்கள் வியாதியைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

Friday 12 May 2017

இந்தியர்களுக்கு இன்னொரு அரசியல் கட்சி..!


மலேசிய இந்தியர்களுக்காக புதிய அரசியல் கட்சி  ஒன்று உதயமாகிறது!

இந்த முறை களத்தில் இறங்குபவர் ஹின்ராஃப் பி.வேதமூர்த்தி.  ஏற்கனவே இந்தியர் என்று பெயர் தாங்கி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு ஒரு சில கட்சிகள். அதே சமயத்தில் இந்தியர் பெயர் தாங்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் - ஆனால் அரசில் பங்கு பெற இயலாத - இன்னும் சில கட்சிகள்!

நமது நாட்டில் இந்தியர்களுக்காக ஏகப்பட்ட அரசியல் கட்சிகள், ஏகப்பட்ட தமிழ் தினசரிகள், ஏகப்பட்ட அரசு சாரா இயக்கங்கள் இன்னும் ஏகப்பட்ட, ஏகப்பட்ட  நிறையவே இருக்கின்றன!

இவைகள் எல்லாம் சேர்ந்து தான் இப்போது இந்தியர்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களை ஒரு இஞ்சி கூட நகர விடாமல் அவர்களை அப்படியே  அந்த நிலையிலேயே வைத்திருக்கின்றன!

ஆனால் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒரு லாபம் உண்டு. அவர்களுக்கு அரசாங்க மானியம் கொஞ்சம் தாரளாமாகவே கிடைக்கின்றன. அதனால் ஏதோ அவர்களின் பிள்ளைகுட்டிகள் கொஞ்சம் தாரளமாக இருக்கின்றனர்! அத்தோடு சரி! பரவாயில்லை, அவர்களும் இந்தியர்கள் தானே!

ஹின்ராஃப் இயக்கத்தின் ஆரம்பம் மிகவும் கடினமான ஒரு பணி. எங்கெங்கெல்லாம் இந்து கோவில்கள் உடைக்கப்பட்டனவோ அங்கெல்லாம் அவர்கள் இருந்தார்கள். சில தடுக்கப்பட்டன.  சில நொறுக்கப்பட்டன! வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  மிகப்பல அநியாங்களை எல்லாம் தட்டிக் கேட்டார்கள். ஆளுங்கட்சியில் இருந்தவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்த போது ஹின்ராஃப் மட்டும் தான் வாய் திறந்து அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இந்தியர்களிடையே அவர்களுக்கு நல்லதொரு மரியாதையும் மதிப்பும், வரவேற்பும்  இருந்தது என்பது உண்மை. அதனை வைத்தே கோலாலம்பூரில் ஒரு மாபெரும் பேரணியை  அவர்கள் நடத்தினார்கள்!  மலேசியா கண்டிராத பேரணி அது! நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்த பேரணி அது!

ஆனால் இப்போது இந்தியர்களின் ஆதரவு ஹின்ராஃப் இயக்கத்திற்கு  எந்த அளவில் உள்ளது  என்று  பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டியுள்ளது!

சில ஆண்டுகளுக்கு முன்னர் வேதமூர்த்தி துணை அமைச்சராக நாட்டின் அமைச்சரவையில் இருந்தவர். இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை வைத்திருந்தவர்> ஆனாலும் அவரது திட்டங்கள் எதனும் நிறைவேறாமல் இருப்பதற்கு ஆளுங்கட்சியான ம.இ.கா. மிக மிக விழிப்பாக இருந்தது! அனைத்துக்கும் முட்டுக்கட்டைப் போட்டது!  தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்ததும் வேதமூர்த்தி அமைச்சரவையில் இருந்து விலகினார்! அத்தோடு அவரது - இந்தியர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அனைத்தும் - கனவாகிப் போயின! ம.இ.கா.வும் எதனையும் கண்டு கொள்ளவில்லை!!

ஆனாலும் இன்றைய நிலையில் ஹின்ராஃப் தேர்தலில் போட்டி இடுவதால் யாருக்கு என்ன பயன்?  அவர்கள் வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்! ம.இ.கா. எங்கெல்லாம் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அங்கெல்லாம் ஹின்ராஃப் தனது வேட்பாளரை நிறுத்தும் என்பது மட்டும் நிச்சயம்! பொதுவாக ம.இ.கா.வின் மேல் இந்தியர்களின் ஆதரவு என்பது கொஞ்சம் வருந்தத்தக்க நிலையில் தான் உள்ளது!   அவர்களோடு ஹின்ராஃப்  சேர்ந்து கொண்டால் - அவர்களோடு சேர்ந்து மற்ற எதிர்கட்சிகளும் சேர்ந்து கொண்டால் - ம.இ.கா.வுக்கு இது தான் கடைசித் தேர்தலாக இருக்குமோ?  ஒருசில இடங்களையாவது ம.இ.கா. தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் கடைசியாக அவர்கள்  பிரதமர் மூலம் அறிமுகப்படுத்திய இந்தியர்களின் முன்னேற்றதிற்கான மாபெரும் வியூகப் பெருந்திட்டத்தில்  கொஞ்சமேனும் நடமுறைப் படுத்தியிருக்க வேண்டும். வெறும் வாய்ச் சவடால்களும், வெறும் காகிதங்களும் இனி எடுபடாது என்பதை ம.இ.கா. புரிந்து கொள்ள வேண்டும்.

நிச்சயமாக ஹின்ராஃப் இயக்கத்தின் முதல் எதிரியாக ம.இ.கா. பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை!  பொதுவாக அதே நோக்கத்தில் தான் இந்தியர்களின் பார்வையும் இருக்கிறது என்பதும் உண்மை!

இந்தப் புதிய அரசியல் கட்சியின் வரவால் இந்தியர்களின் வாக்குகள்  சிதறியடிக்கப்படும் எனச் சொல்லலாம்! மற்றபடி இவர்கள் எதனையும் சாதிக்கப் போவதில்லை. சாதிப்பார்கள் என நம்புவதற்கும் வலுவான காரணங்கள் இல்லை!~

நம்முடைய வாக்குகளை நமக்கு நாமே அடித்துக் கொண்டும் பிரித்துக் கொண்டும்  இருக்கப் போகிறோம்!  இது தான் நமது அரசியல்!

ஹின்ராஃப் தொடரட்டும் தனது பணியை! வாழ்த்துக்கள்!



Sunday 7 May 2017

இன்றைய பொழுது இனிய பொழுதாகட்டும்!

இன்று காலையில் நான் முதலில் சந்தித்த நபர் என்னைப் பார்த்து முதலில் கேட்ட கேள்வி: நல்லா இருக்கிங்களா...?

நான் கொடுத்த பதில்:  ஓ! அற்புதமாக இருக்கிறேன்! நீங்கள்...?

எனது பதிலில் அவருக்குத் திருப்தி இல்லை போலும்!  ஏற இறங்க பார்த்துவிட்டு ஒன்று பேசாமல் போய்விட்டார்!

அவர் என்னிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை!  காலை நேரம். அப்போது தான் விழித்தெழுந்து வெளி உலகைப் பார்க்கின்ற நேரம்.

நாம் எப்படி இருந்தால் என்ன?   நாம் நல்லா இருக்கிறோம் என்னும் நினைப்பாவது நமக்கு இருக்க வேண்டும் அல்லவா? நாம் நல்லாத்தான் இருக்கிறோம் என்று சொல்லுவதைக் கூட சிலர் விரும்பவதில்லை!  அப்படி சொன்னால் கூட ஒரு சிலர் "கண்பட்டு விடும்" என்று  நினைக்கிறார்கள்!

மற்றவர்கள் கண்பட்டு விடுமாம்! அப்படிச் சொல்லுவதால் அன்றைய தினம் பூராவும் அல்லல் பட வேண்டி வருமாம்!

அடாடா...! மனிதர்களில் சிலர் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்! நமக்கு வராத எண்ணங்கள் எல்லாம் அவர்களுக்கு வருகின்றனவே!

காலை நேரத்தில் நல்ல வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். நல்லதையே சிந்திக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். போகின்ற போக்கில் நல்ல வார்த்தைகளையே விதைக்க வேண்டும். அப்படியே அன்றைய தினம் முழுவதும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதின் மூலம் நிச்சயமாக நமக்கு நல்லதொரு திருப்தி ஏற்படும். இன்றைய தினத்தில் நாம் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறோம் என்று மனைதிலே ஒரு மகிழ்ச்சி!

இப்படியெல்லாம் மற்றவர்களை நாம் மகிழ்ச்சிப் படுத்துவதால் நமக்கு என்ன லாபம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்ன லாபம்?  மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதன் மூலம் நாமும்  மகிழ்ச்சி அடைகிறோம். நமக்கும் மனதிலே ஒரு தெம்பு ஏற்படுகிறது.  நம்மாலும் நாலு பேருக்கு உதவியாக இருக்க முடிகிறதே என்னும் நம்பிக்கை ஏற்படுகிறது.

இன்று மனிதர்களிடம் மகிழ்ச்சி என்பது அருகிவிட்டது. எந்நேரமும் ஏதோ ஒரு பிரச்சனை. ஏதோ ஒரு புலம்பல். ஏதோ ஒரு கஷ்டம். ஏதோ ஒரு நஷ்டம். ஆமாம்! அது என்ன? அந்த ஒரு மனிதருக்குத் தானா கஷ்டம், நஷ்டம் எல்லாம்? கஷ்டம், நஷ்டம் என்பதெல்லாம் எல்லாருக்கும் பொதுவானது தான்.

பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை! பிரச்சனைகளோடு தான் மனிதன் வாழ வேண்டும்! பிரச்சனைகளாகவே இருக்கின்றனவே என்று மூலையில் முக்காடு போட்டா உட்கார்திருக்க முடியும்? நல்ல எண்ணங்கள், நல்ல வார்த்தைகள், நல்ல செய்திகள் எல்லாமே நல்ல....நல்ல..... என்று யோசியுங்கள் அனைத்தும் நல்லதாகவே முடியும்!  அது தான் நல்ல வார்த்தைகளுக்குள்ள சக்தி!

இன்றைய பொழுது மட்டும் அல்ல ஒவ்வொரு பொழுதையும் இனிய பொழுதாகட்டும்! வாழ்த்துகள்!

Friday 5 May 2017

நீங்கள் கஞ்சனா....? அப்படியே இருங்கள்..!


நீங்கள் கஞ்சனா.....? இருந்துவிட்டுப் போங்கள்! உங்களை நான் பாராட்டுகிறேன்! அது உங்கள் வீட்டுப் பணம்; அதனை செலவழிப்பது என்பது உங்கள் விருப்பம். நீங்கள் தான் அதன் உரிமையாளர். உரிமையாளர் என்ன விரும்புகிறாரோ அதனை அவர் செய்துவிட்டுப் போகட்டும்! நாம் ஏன் அவர்களுக்கு இடையூறாக  இருக்க வேண்டும்?

ஒரு நண்பரை எனக்குத் தெரியும். வாலிப வயதிலேயே அனைவரும் அவரைக் கஞ்சன் என்றார்கள்! பிறகு அவர் பெயரே கஞ்சனாக மாறிவிட்டது! சாகும் வரை அவர் கஞசன் தான்! அவருடைய பெயரோடு சேர்த்துக் கஞ்சன் என்று சொன்னால் தான் அவர் யார் என்று மற்றவர்களுக்குப் புரியும்!

ஆனால் அவர் இறக்கும் போது அவருக்குக் கடன் இல்லா  சொந்த வீடு இருந்தது.  அவர் பிள்ளைகள் எந்த அளவுக்குப் படிக்க முடியுமோ அந்த அளவுக்குப் படிக்க வைத்திருந்தார். அதில் ஒருவர் 'டிப்ளோமா"  பெறும் அளவுக்குப் படித்திருந்தார். அவர் பிள்ளைகள் அனைவரும் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள்.. எல்லாரிடமும் கார்கள் இருக்கின்றன.. சாதாரணத் தோட்டத் தொழிலாளர் தான் அவர். அவரைக் கேலி பேசிய பலருக்கு சொந்த வீடுகள் இல்லை! அப்படியே இருந்தாலும் வங்கியில் கடன் உள்ள வீடுகள் தான்!

என்னுடைய உறவு முறையில் ஒருவர். அவர் மகா மகாக் கஞ்சப் பிரபு! தோட்டத் தொழிலாளி தான். கஞ்சப் பிசினாரி என்பார்களே அதன் அர்த்தம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஒரு வேளை அவரைப் போன்றவர்களாகத்தான் சொல்லுவார்களோ? எதற்கும் அசராதவர். தோட்டத் தொழிலாளியாக இருந்த போதே அவரிடம் அனைவரும் வட்டிக்குக் கடன் வாங்குவார்கள்! உறவு முறைகள் யாரும் அவரை நெருங்க முடியாது!  சீனி என்கிற அல்லது சர்க்கரை என்று சொன்னாலும் சரி அவரின் குடும்பத்தினர் கண்ணால் கூடப் பார்த்ததில்லை!

அவருக்குப் பெரிய மனிதர் வாழ்கின்ற ஒரு தாமானில் வீடுகட்ட ஒரு நிலம் வைத்திருந்தார். அந்த இடத்திலேயே ஒரு வீடும் கட்டிக் கொண்டார்.  காய்கறிகள் பயிரிட வீட்டைச் சுற்றி போதுமான நிலம் இருந்தது. காய்கறிகள் பயிரிட்டார். பக்கத்தில் இருந்த பெரிய மனிதர்கள் எல்லாம் அவரது வாடிக்கையாளர்கள். அங்கும் அவருக்கு ஒரு வருமானம். அவரது பிள்ளைகள் நன்கு படித்து அரசாங்க உத்தியோகத்தில், வெளி மாநிலங்களில் இருக்கிறார்கள். வீட்டில் தொலைபேசி இல்லை; கைப்பேசி இல்லை.  தொலைக்காட்சி பெட்டி இல்லை. கார் இல்லை. சனிக்கிழமைகளில் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் வரட்டும், வராவிட்டால் "போங்கடா!, போங்க!" அவ்வளவு தான்! எப்படியோ அவர்களே  வருவார்கள்!

இப்படிப்பட்ட மனிதரிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது என்ன? அருகில் இருக்கும் ஒரு சீனர் கடையில் காலையில் போய் காப்பி குடிப்பது! எப்படி?  "அங்குப் போனால் பத்திரிக்கை படித்து விடுவேன், ஓசியில்! இன்னொன்று அங்கு சீனர்கள் வருவார்கள். அவர்களிடன் எங்கு நிலம் வாங்கலாம், எங்கு வீடு வாங்கலாம் என்று அவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுவேன்! தமிழனிடம் போனால் அரசியல் தான் பேசுவான்!  முன்னேறனும்'னா சீனப் பயல்களிடம் தான் பேசனும்!" இன்னும் அவரிடம் அந்தத் தேடல் இருக்கிறது!  வயதோ 90 ருக்கு மேலே!  வியாதி என்று ஒன்றுமில்லை. அப்படியே வந்தாலும் வியாதிக்குத் தீனி போடாமலே வியாதியையே கொன்று விடுவார்!

இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. குறிப்பாக நாம் நினைவில் கொள்ள வேண்டியவை ஒரு சில, இவர்களுக்குச் சொந்த வீடுகள் உள்ளன. பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கிறார்கள். கையில் பணம் எப்போதும் இருக்கும். வேலையிலிருந்து  ஓய்வு பெற்றாலும் புதிதாக வேறு ஒரு வருமானத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள்! இவர்கள் அரசியல்வாதிகளை நம்புவதில்லை!

இப்போது சொல்லுங்கள். கஞ்சர்கள் கேலிக்குறியவர்களா? இல்லவே இல்லை! இவர்களால் தான் நமது பொருளாதாரம் இப்போது இருக்கிற நிலைமையில் இருக்கிறது! இல்லாவிட்டால் அதுவும் பூஜியம்! அவர்கள் மற்றவர்கள் பணத்தை திருடவில்லை; கொள்ளையடிக்கவில்லை! அது அவர்கள் பணம். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதனை அவர்கள் செய்யட்டும்.

அதனால்:  நீங்கள் கஞ்சனா? அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்! யாருக்கு என்ன நஷ்டம்!


Thursday 4 May 2017

வயதானால் என்ன? உடற்பயிற்சி அவசியம்!


உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் என்னும் வரைமுறையெல்லாம் ஒன்றுமில்லை! மனிதனின் உடல் இயக்கங்களில் பிரச்சனைகள் இல்லாதவரை உடற்பயிற்சி அவசியம் தேவை. வயது வித்தியாசங்களினால் அல்லது நோய்களின் தாக்கங்களால் குறைத்துக் கொள்ளலாம் அல்லது கூட்டிக்கொள்ளலாம்./ ஆனால் ஏதோ ஒரு வகையில் பயிற்சியைத் தொடருங்கள்.

இன்று காலை ஒரு மலாய்ப் பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது. அவரை முன்பும் பார்த்திருக்கிறேன். இன்று கொஞ்சம் அருகில் பார்க்க நேர்ந்தது.

காலை நேரத்தில் அவர் சைக்கிளில் வலம் வருவார். வயது..? அவரின் முகச் சுருக்கங்களை வைத்துப் பார்க்கும் போது கிட்டத்தட்ட எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதாகத்தான் இருக்க வேண்டும்.  கருப்புக் கண்ணாடி ஒன்றை அணிந்திருப்பார், ஒரு வேளை "காட்டரேக்" ஆகக் கூட  இருக்கலாம்.

ஆனால் பாட்டி மிகச் சுறுசுறுப்பானவர்  எப்படிப் பார்த்தாலும் ஒரு மணி நேரமாவது அந்தச் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருப்பார்! அவரின் வயதை ஒத்தவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை! இந்த வயதிலும் அவர் இப்படிச் சுறுசுறுப்பாக இயங்குகிறாரே என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

இன்னொரு தமிழ் அன்பரைத் தெரியும். இவருக்கு "ஹார்ட்  அட்டாக்" வந்து ஒரு பக்கத்துக் காலும் ஒரு பக்கத்துக் கையும் பாதி செயல் இழந்தவர். தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று ஒய்ந்திருக்கவில்லை; ஒப்பாரி வைக்கவுமில்லை!  தினசரி நடைப்பயிற்சி செய்வார். கையில் கனமாக எதையோ  கட்டிக் கொண்டு அதனைத் தூக்கிக் கொண்டே பயிற்சி செய்வார்! ஒரு நாள், இரு நாள் அல்ல! தொடர்ந்து சில ஆண்டுகள் தொடர் பயிற்சி. சமீபத்தில் அவரை நான் பார்க்க நேர்ந்த போது அவர் நம்மைப் போலவே எவ்விதத் தடங்களுமின்றி  நடக்கிறார்.கைகள் சரளமாக இயங்குகின்றன.

நாம் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி - அதுவும் நோயினால் பாதிக்கப்பட்ட்டிருந்தாலும் சரி - நம்மால் முடிந்தவரை சிறு சிறு பயிற்சிகளையாவது  நாம் செய்யப்பழக வேண்டும். நமது  உடம்பு ஒத்துழைத்தால் பெரிய பெரிய பயிற்சிகளைப் பற்றி பின்னர் யோசிக்கலாம். ஆனால் கடுமையானப் பயற்சி என்றால் டாகடரின் ஆலோசனையை நாடுங்கள்>

மற்றபடி எளிய பயிற்சிகள், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி இவைகள் எல்லாம் நமது உடம்பை ஆரோகியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

பயிற்சி செய்வோம்! பயனடைவோம்!
                        

Monday 1 May 2017

கொலைக் கைதி எம்.பி.ஏ.பட்டம் பெற்றார்!


படித்து பட்டம் பெறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பது எவ்வளவு உண்மையோ அதே போல நாம் எங்கிருந்தாலும் படிப்பு  என்பது ஒரு தடையல்ல!.

இந்த முறை காஜாங் சிறைச் சாலை ஒரு கொலைக் கைதியை ஒரு எம்.பி.ஏ. பட்டதாரியாக மாற்றி இருக்கிறது!

அவரது அறியாத வயதில் - 14 வயது - கொலைக் குற்றவாளியாக 2005 - ம் ஆண்டு  காஜாங் சிறைக்குள் புகுந்த அந்த சிறுவன், ஆதம், (உண்மைப் பெயர் அல்ல)  இன்று 2017 ஆண்டு, மலாயாப் பல்கலைக் கழகத்தில்  நடந்த பட்டமளிப்பு விழாவில் வர்த்தக நிர்வாகத்  துறையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். ஆதாம் திறந்த வெளி பல்கலைக்கழக (ஒப்பன் யூனிவர்சிட்டி) மாணவர் ஆவார்.. அவருக்குக் கல்வித் தாகம் இன்னும் தணியவில்லை. அடுத்து முனைவர் பட்டத்துக்கும் தன்னைத் தயார் செய்து வருகிறார்.

தனது குடும்பத்தினரை ஒருசேரப்  பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக ஆதம் கூறுகிறார். பட்டமளிப்புக்கு முன்னர் தனது குடும்பத்தினரோடு ஒன்று சேர்ந்து உணவருந்தியது மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்கிறார் ஆதம்.

தன்னுடைய விடுதலை என்பது எப்போது என்பதை அறியாத நிலையில் - ஒரு நாள் தான் விடுதலையாகி வந்ததும் - தனது தாய்க்கும் குடும்பத்துக்கும் உதவியாக ஏதேனும் தொழில் செய்து காப்பாற்றுவேன் என்கிறார் அவர். மற்றவரிடம் நான் வேலை செய்தால் தான் ஒரு கொலைக் குற்றவாளி என்கிற முத்திரை எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் என்பது எனக்குத் தெரியும் என்கிறார்.


இப்போது முப்பது வயதாகும் ஆதம்  சபா மாநிலத்தைச்  சேர்ந்தவர்.இவரை போன்றே இன்னும் 33 பேர் பட்டதாரிகள் ஆவதற்காக காஜாங் சிறையில் வரிசையில் நிற்கின்றனர். அவர்களும் தங்களது இலட்சியத்தில் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்! நல்ல குடிமக்களாக அவர்கள் வாழ வேண்டும் என்பதே நமது ஆசையுங் கூட!

இந்த நிமிடத்தில் நாம் ஒருவரைப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். தினம் தினம் தூங்கி தூங்கி எழுந்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை அன்று அந்தச் சிறையில் துவான் அஜிப் என்கிற ஒரு சிறை அதிகாரி "சும்மா தூங்கிக் கொண்டிருக்காதே, உன்னுடைய எதிர்காலத்தை நினைத்து உன்னை வளர்த்துக் கொள்ளப் பார்" என்று கூறிய அந்த அறிவுரை தன்னை மாற்றி அமைத்துவிட்டது என்கிறார் ஆதம்.

ஒரு காடு எரிய ஒரு தீக்குச்சி போதும்!