Thursday 31 March 2022

தொழிற்சாலை மூடப்பட்டது!

 

                                                                            PAU
நாட்டில் என்னன்னவோ கலப்படங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன!

அதைத் தடுக்க வேண்டிய அரசாங்க அதனைச் செய்வதில்லை. காரணம் கேட்டால் நமக்கே மயக்க வரும். கலப்படங்கள் செய்யும் நிறுவனங்களை நடத்துபவர்களே அரசியல்வாதிகள் தான் என்கிறார்கள்! அவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள்!  ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். ஆளுபவர்களும் அவர்களாக இருக்கிறார்கள்!

பினாங்கு மாநிலத்தில்  நாம் சாப்பிடும் உணவான "பாவ்" தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை நடத்தப்படும் விதம் நம்மை அலற வைக்கும்! அங்கு கலப்படம் இல்லையென்றாலும்  ஒரு தொழிற்சாலை எப்படி நடத்தக் கூடாதோ அப்படி நடத்தப்படுகிறது!

ஏற்கனவே இது போன்ற தொழிற்சாலைகள் பற்றி எழுதியிருக்கிறோம். மீண்டும் மீண்டும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!  உணவு தயாரிக்கும் இடத்தில் நாய்கள் சுற்றுகின்றன! பூனைகள் சுற்றுகின்றன! கரப்பான் பூச்சிகள்  உணவை ருசி பார்க்கின்றன.  கரப்பான், பல்லிகளின் கழிவுகள் கிடக்கின்றன! எலிகள் சுற்றுகின்றன! பக்கத்திலேயே கக்கூஸ்  வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன!

இதையெல்லாம் சொல்லும் போது இந்த  Pau, Dimsum fishball  போன்ற சங்கதிகளையெல்லாம் எப்படி சாப்பிடுவது என்கிற அச்சம் வரத்தான் செய்யும்!

சரி இப்படியெல்லாம் செய்கிறார்களே அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன?  இரண்டு வாரங்கள்  தொழிற்சாலையை  மூட வேண்டும்! ஒரு ஐயாயிரம் வெள்ளி அபராதம்! இந்த தண்டனை என்பதெல்லாம் அவர்களுக்குத் தங்கபஸ்பம்  சாப்பிடுவது போல! பணத்தை தூக்கி வீசிவிட்டு தங்களது அடுத்த வேலையை ஆரம்பித்துவிடுவார்கள்!

நம்மைக் கேட்டால் தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டலாமே! தொழிற்சாலை நடத்தும் முதலாளிகளுக்கு  பத்து ஆண்டு சிறை என்று ஒரு சட்டம் போட்டால் இப்படியெல்லாம் நடக்குமா? யாராவது செய்யத் துணிவார்களா? உணவுத் துறை என்பது மனிதர்களுடைய உடல்நலம்  சம்பந்தப்பட்டது. இப்போதே நாம் சாப்பிடும் உணவுகளில்  ரசாயனக் கலப்பு அதிகமாக இருப்பது தெரிகிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! இப்போது இவர்களும் இப்படிச் செய்தால்  யாரிடம் முறையிடுவோம்?

தொழிற்சாலை மூடப்பட்டது என்பதெல்லாம் நமக்குச் செய்தி அல்ல. பத்து ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் செயல்படுகிறார்களே அது தான் செய்தி! இத்தனை ஆண்டுகள்  அந்த உரிமம் இல்லாமல் செயல்படுகிறவர்களை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை? ஆள் பற்றாக்குறை அது தான் பதில்! நாமும் நம்புகிறோம்!

Wednesday 30 March 2022

அற்பனுக்கு வாழ்வு வந்தால்....!

 
                                        UITM Lecturer hates to lecture B40 students!
UITM விரிவுரையாளர், ரோஷானா தாகிம், ஒரு மாணவனைப் பற்றிப்  பேசிய ஒரு சொல் அவருக்கே ஆபத்தாக முடிந்தது! 

அவர் நல்லதைச் சொல்ல முயன்றிருந்தாலும் அது கெடுதலான வார்த்தையாகவே பொது மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது!  என்ன செய்வது? நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள்! உடம்பில் கொழுப்பு ஏறிவிட்டால் குறைப்பது கஷ்டம் தான்!

மாணவன் ஒருவனிடம் கணினி இல்லை. தந்தைக்கு வேலை இல்லை. தாயார்  இல்லை. அவன் என்ன செய்வான்?  அந்த மாணவன் கணினிக்குப் பதிலாக தனது ஸ்மார்ட் ஃபோனை பயன் படுத்தியிருக்கிறான். அதில் வந்தது தான் இந்தப் பிரச்சனை!

அந்த விரிவுரையாளர் நல்லபடியாகவே அந்த மாணவனிடம் அறிவுரைகளைக் கொட்டித் தீர்த்திருக்கலாம்!  அறிவுரை இலவசம்! கேட்டால் என்ன! கேட்காவிட்டால் என்ன!  ஆனால் அவருக்கு  நாக்கில் சனி வந்து இறங்கிவிட்டது! அதனால் தான் தன்னை மறந்து போனார்!

அவர் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் கடுமையானது. அதனால் தான் அனைவரும் பொங்கி எழுகின்றனர்.

"அதனால் தான் B40 யைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு நான் படித்துக் கொடுக்க விரும்புவதில்லை!"

அப்படியென்றால் பணக்காரர்கள் படிக்கும்  பள்ளிகளை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்தத் தகுதி அவருக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். அங்கே அவரை வரவேற்க யாரும் தயாராக இல்லை. அதனால் தான் அவர் இங்கே விரிவுரையாளராக இருந்து கொண்டு இருக்கிறார்!

ஆனால் அதைவிட முக்கியமான ஒன்றை அவர் மறந்துவிட்டார் என்பது தான் பலருக்கு அவர்மீது கோபம். B40 மக்கள் யார்? இன்று ஆசிரியர்களில் பலர் B40 மக்களிடையே இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் T20 மக்களிலிருந்து  வர வாய்ப்பில்லை. T20 தரப்பினருக்கு  உள்நாட்டுக் கல்வியே தேவையில்லை!

குறிப்பிட்ட இந்த விரிவுரையாளரான ரோஷானா அவர்கள் நிச்சயமாக B40 மக்களிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். அவர் மட்டும் அல்ல. அங்கு விரிவுரையாளர்களாக இருக்கும் அனைவருமே B40  பின்னணியிலிருந்து  வந்தவர்கள் தான்.

இங்கு நாம் ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். B40 ஏழ்மை நிலைமையிலிருந்து வருபவர்களில் பலருக்குக் கை கொடுப்பது  ஆசிரியர் தொழில் தான். அதன் பின்னர் மருத்துவ தாதியர் தொழில். இதையெல்லாம் கடந்து தான் வேறு துறைகளுக்கு மாற வேண்டும்.

B40 மக்களைக் கேவலமாகப் பேசும் ஒரு விரிவுரையாளருக்கு என்ன கிடைக்க வேண்டுமா அது நிச்சயம் கிடைக்கும்.  ஏழ்மை நிலையில் இருப்பவர்களைக் கைதூக்கி விட வேண்டுமே தவிர அவர்களை மட்டம் தட்டி அவர்களை இயங்க விடாமல் செய்வது மிகவும் கொடுமை.


Tuesday 29 March 2022

எச்சரிக்கிறோம்! விலகி இருங்கள்!

 

                                                           LOW SIEW HONG

பாஸ் கட்சியிலிருந்து கடுமையான எச்சரிக்கை  ஒன்று முஸ்லிம் அல்லாத மலேசியர்களுக்கு  விடுக்கப்பட்டிருக்கின்றது!

ஒரு பக்கம் தனித்து வாழும் இந்து  தாயான லோ சியு ஹொங் + அவருடைய மூன்று குழந்தைகள். இன்னொரு பக்கம் இஸ்லாமிய பாஸ் கட்சியினர்.

இஸ்லாமிய கட்சியின் எச்சரிக்கை என்பது:   இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட லோ-வின் மூன்று  குழைந்தைகள் மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாங்கள் அதனை எதிர்ப்போம்.. அவர்களின் மதமாற்றத்திற்காக யார் பாடுபட்டாலும் இந்நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பொங்கி எழுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்பு  லோவின் மூன்று குழந்தைகளின் புகைப்படங்களைப் பத்திரிக்கைகளில் போட்டு அவர்களை அவமதிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை அனைத்து ஊடகங்களும் பின்பற்றுகின்றன. அது ஒரு தடை.

இப்போது பாஸ் கட்சியிடமிருந்து இப்படி ஓர் எச்சரிக்கை.  மதமாற்றும் விஷயத்தில் எங்களுக்கு எந்த நியாயமும் தேவையில்லை! நீதிமன்றம், வழக்கறிஞர்கள் - அது யாராக இருந்தாலும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் பாஸ் கட்சியின்  தகவல் பிரிவு  தலைவர்.  வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே அவர் தரப்பு தோல்வியைத் தழுவும் என்று அவரே முன்னறிந்துவிட்டார்! ஆக, அவர் செய்வதோ சொல்வதோ தவறு என்பது அவருக்கே தெரியும் என ஊகிக்கலாம்!

மனிதர்களால் தீர்த்துக் கொள்ளப்பட முடியாத  விஷயம் என்று ஒன்று இருந்தால் அதைத் தீர்த்து வைக்க வேண்டிய இடம்  நீதிமன்றங்கள் தான். நியாயம் கிடைக்கும் என்பதால் தான் நாம் நீதிமன்றம் போகிறோம்.

ஆனால் பாஸ் கட்சியினர் அதற்கும் உலை வைக்கின்றனர். நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தை இஸ்லாமியர் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்  என்கின்றனர் பாஸ் கட்சியினர்.

ஒன்றை அவர்கள் உணரவில்லை. நல்லவர்கள் என்கிற ஒரு பிரிவினர் எல்லா சமயங்களிலும் இருக்கின்றனர்.  எல்லா இனத்தவர்களிலும் இருக்கின்றனர். நல்லவர்களுக்கு எப்போதுமே காலம் உண்டு.

சத்தியமே வெல்லும்!

Monday 28 March 2022

புதிய கூட்டணி உருவாகுமா?

 

                                    Gerakan Pejuang Nasional (GPN) - the next Ruling Party?

நாட்டில் பெரிய அரசியல் மாற்றங்கள் வருமா என்று மலேசியர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிதாக மாபெரும் கட்சியாக மாறக் கூடிய வாய்ப்புகள்  டாக்டர் மகாதிரால் ஆரம்பிக்கப்பட்ட பெஜுவாங் கட்சிக்கு  உண்டா என்று கொஞ்சம்  ஆராய்ந்து பார்ப்போம்!

சமீபத்தில் நடைபெற்ற ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பெஜுவாங் வேட்பாளர்கள் அனைவரும் சரியான அடிவாங்கியிருக்கிறார்கள் என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல!

அவர்கள் வெகு வரைவில் எதிர்பார்க்கப்படும் 15-வது பொதுத்  தேர்தலில் போட்டியிட்டால் நிலைமை என்னவாகும்? பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை! அதே அடி தான்! டெபாசிட்  பறி போகும் நிலை தான் அதிகம்!

மலேசிய அரசியலில் டாக்டர் மகாதீரின் சகாப்தம் முடிந்து போன கதை. மேலும் அவருடைய வயதுக்கு அவரிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்கவும்  முடியாது.

இப்போது அவர் ஓர் அகண்ட கூட்டணியை அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். அந்த கூட்டணியில் பெஜுவாங், பெர்சத்து, பியாகம் ராக்யாட்,  பாஸ், கெரக்கான், வாரிசான்  போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு "கெராக்கான் பெஜுவாங் நேஷனல்" என்னும் பெயரில் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த கட்சிகள் எல்லாமே ஏதோ வயதானவர்களைக் கொண்ட ஒரு கட்சியாகத்தான் நமக்குத் தெரிகின்றன.  டாக்டர் மகாதிர் ஓடி ஆடி கட்சிக்காக வேலை செய்யும் நிலையில் இல்லை! மற்றத் தலைவர்களும் ஏறக்குறைய அவருடைய நிலைமையில் தான் இருக்கின்றனர். இளம் இரத்தம் என்பது குறைவு.  எவ்வளவு தான் பெரும் ஆளுமைகளைக் கொண்டிருந்தாலும் அடிமட்ட வேலைகளைச் செய்ய தொண்டர்கள் வேண்டும். இந்தப் புதிய கட்சியால் அத்தகைய அடிமட்டத்  தொண்டர்களை ஈர்க்க முடியுமா என்பதும் ஒரு கேள்வி.

மக்களிடையே உள்ளே இன்னொரு கேள்வி. இரண்டாவது முறையாக  நாட்டின் பிரதமராக வந்த டாக்டர் மகாதீர் திடீரென அரசாங்கம்  கவிழ்ந்து போகும் அளவுக்கு ஏன் காரணமாக அமைந்தார்? அப்போது ஏற்பட்ட அந்த அமளி இன்னும் ஓயவில்லையே!  இத்தனைக்கும் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட  ஓர் அரசாஙத்தை அவர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவர அவரே காரணமானாரே! 

வயது மூப்பின் காரணத்தால் அவர் இப்படி எல்லாம் தடம் புரண்டு போனார் என்று சொல்வதற்கில்லை. அவர் திட்டம் போட்டே செயலாற்றினார் என்பது தான் உண்மை!

டாக்டர் மகாதிர் உண்மையில் ஒரு நம்பகமான மனிதர் அல்ல. அவரால் ஆரம்பிக்கப்படும் கட்சியும் நம்பக்கூடியதாக இல்லை! அவருடன் கூட்டுச் சேர்பவர்களும் அவரைப் போன்றே  ஒத்தக்கருத்து உடையவர்கள்! அவர்கள் மேல்மட்டு மக்களின் பிரதிநிதிகள்!  கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் உயர்வுக்குப் பாடுபடும் அளவுக்கு அவர்கள் கீழே இறங்கி  வரமாட்டார்கள்!

புதிய கூட்டணி உருவாகாது! வெறும் செய்தியாகவே போய்விடும்!

Sunday 27 March 2022

இனத் துரோகிகள்!

   

ஏற்கனவே அமுக்கப்பட்ட ஒரு பிரச்சனை இப்போது வெளி வந்திருக்கிறது.  மற்றபடி புதிது ஒன்றுமில்லை. நம் இனத்தில் துரோகிகளுக்குத் தான் பஞ்சமில்லையே! நம்மவனை வைத்தே நம்மை அமுக்குவது ஒன்றும் நமக்கும் புதிதல்லவே! அதற்கென்று தானே ம.இ.கா என்று ஒன்றை நாம்  வைத்திருக்கிறோம்!

இது "வணக்கம் மலேசியா" இணைய இதழில் வந்த செய்தி. படிக்க மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும் நமது இனத்துக்கு துரோகம் செய்ய, நமது மொழிக்குத் துரோகம் செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதிலும் இவர்கள் படித்தவர்கள் என்கிற பெருமை வேறு!  ஓர் இனத்துக்கோ, மொழிக்கோ துரோகம் செய்வதற்கு என்ன படிப்பு  வேண்டிக்கிடக்கு?  அதற்கு ஒரு முட்டாள், ஒரு மடையன் போதுமே!

நடந்தது இது தான். கின்ராரா தமிழ்ப்பள்ளிக்கு இஸ்லாமிய பாடம் போதிக்க ஒரு இஸ்லாமிய ஆசிரியர் வந்து சேர்ந்தார். அந்த நேரத்தில் கலைக்கல்வி பாடம் போதிக்க ஆசிரியர் இல்லை. ஆசிரியர் மாற்றப்பட்டார். அப்போது தலைமை ஆசிரியர் இஸ்லாமிய பாடம் போதிக்க வந்த ஆசிரியரைக் கலைக்கல்வி பாடம் போதிக்க பயன்படுத்திக் கொண்டார். அவர் தமிழ் மொழியில் பாடத்தை நடத்தியிருந்தால் எந்த பிரச்சனையும் எழுந்திருக்காது. அவர் பாடத்தை  நடத்தியதோ மலாய் மொழியில்! பரிட்சை என்று வரும்போது மாணவர்கள் நிலையை அந்த தலைமையாசிரியர் கவனத்தில் கொள்ள முடியாத அளவிற்கு அவருக்கு வேலை பளு!

இங்கே ஒன்றை நாம் நினைவுறுத்துகிறோம். தங்களுடைய தவறுகளை மறைக்க தலைமையாசிரியர்கள் இன்னொரு தவறைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஒரு ஆசிரியர் மாற்றப்பட்டால்  இன்னொரு ஆசிரியர் மாற்றலாகி வருவார். அது தான் நடைமுறை. இவர்கள் எதற்குமே முயற்சிகள் செய்யாமல் அக்கறையற்று இருக்கின்றனர். இவர்கள் குடும்பப் பிரச்சனைகளுக்காக எதுபற்றியும் கவலை கொள்வதில்லை.  அப்புறம் தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிருபிக்க என்னன்னவோ தில்லுமுல்லுகளைச் செய்ய வேண்டியுள்ளது!

தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பொதுவாகவே மாணவர் நலனில் அக்கறை உள்ளவர்கள் . அதனால் தான் நமது பள்ளிகள் பல விஷயங்களில் சிறந்து விளங்குகின்றன.  இடை இடையே சில செருகல்களும் உள்ளன. என்ன செய்வது? "வாயைத் திறந்தால் மாற்றிவிடுவார்கள்! மேலே உள்ளவர்கள் சொல்வதைக் கேட்டால் பதவி உயர்வு கிடைக்கும்!"  என்று திட்டம் போட்டு நம்மைக் காட்டிக் கொடுக்கின்றனர். அதனால் தான் சீனப்பள்ளிகளில் காணப்படும் ஒற்றுமை நமது பள்ளிகளில் சிதைந்து விடுகிறது!

ஆனால் ஒன்று. தப்புச் செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும்!
                           

Saturday 26 March 2022

ஆசிரியர் இல்லை! வகுப்பு இல்லை!

 


ஆசிரியர் இல்லையாம்! அதனால் தமிழ் வகுப்பு இல்லையாம்!

அதுவும் இத்தனை ஆண்டுகள் தமிழ் வகுப்புகள் நடந்து கொண்டு வந்த ஒரு பள்ளியில் அந்தப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மாற்றப்பட்டதினால்  இனி தமிழ் வகுப்பு இல்லை என்று கைவிரித்து விட்டதாம் பள்ளி நிர்வாகம்!

அதனால் சொல்லுகிறார்கள் தலை சரியில்லை என்றால் வால் தலையாகிவிடும்!  கல்வி அமைச்சில் வேலை செய்கின்றவர்கள் வாலாக செயலாற்றுகிறார்கள்! அதனைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பார்த்து வியந்து போகிறார்!

இப்படி எல்லாம் முட்டாள்தனத்தை எங்காவது பார்த்திருப்போமா?  நம் நாட்டில் கண்முன்னே பார்க்கிறோம். என்னமாய்  பதிலை வைத்திருக்கிறார்கள்! ஆசிரியர் இல்லையாம்! அதனால் வகுப்புகள் இல்லையாம்!

அப்படியென்றால் தலைமையாசிரியரின் வேலை தான் என்ன? அவர் காலில் போட்டிருக்கும் பூட்ஸ்ஸை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாரா? ஆசிரியர் இல்லையென்றால் இனிமேல் ஆசிரியர் கிடைக்கமாட்டாரா? நாட்டில் வேறு ஆசிரியர்களே இல்லையா?

நாட்டில் ஆசிரியர் பாற்றாக்குறையா?  அப்படியென்றால் கல்வி அமைச்சின் வேலை தான் என்ன?  வெட்டிப் பிளக்கிறார்களோ! ஆசிரியர் பற்றாக்குறை என்பது கல்வி அமைச்சின் வேலை. ஆசிரியர் இல்லையென்றால் தலைமை ஆசிரியரின் வேலை. தலைமை ஆசிரியர் ஏன் தனது கடமையைச் செய்யவில்லை என்பது தான் கேள்வி.

ஆசிரியர் பற்றக்குறையைத் தீர்க்க சுலபமான வழி மற்ற நாடுகளிலிலிருந்து ஆசிரியர்களைத் தருவிப்பது தான். சிங்கப்பூர், இலங்கை, தமிழ் நாடு போன்ற இடங்களிலிருந்து வருவித்துக் கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கையேந்துவதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லவே!

காலங்காலமாக நம்மைத் தூக்கி சுமக்கும் ம.இ.கா. வினர் எங்கே ஓடி ஒளிவார்கள் என்று பார்ப்போம்! எதிர்கட்சியினர் பேச்சு சபை ஏறாது என்பதை நாம் உணர்ந்த்திருக்கிறோம்.

ஆசிரியர் உண்டு! வகுப்பு உண்டு!

Friday 25 March 2022

பெண்களே! படித்தது போதும்!

 

                                        Girls' High Schools closed in Afghanistan.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது!

பாவம்! தாலிபான்கள் ரொம்பவம் தடுமாறுகிறார்கள்! பயங்கரவாதிகளாக இருந்தவர்கள்! இப்போது அவர்கள் நினைத்தது போலவே ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றிவிட்டார்கள்! அடுத்து என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை! அவர்களை ஆதரித்து வந்த  ஒருசில இஸ்லாமிய நாடுகளுக்கும் புரியவில்லை!

அதென்னவோ தாலிபான்களைப்  புரிந்து  கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல! பெணகள் கல்வி கற்கக்கூடாது என்பது அவர்களின் வாதம்.  அப்படி ஒரு வாதத்திற்கு அவர்கள் வரக்காரணம் என்ன, நமக்குத் தெரியவில்லை!

கடந்த ஏழு மாதங்களாக இடைநிலைக் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டு  இப்போது தான் மீண்டும் பள்ளிகள் ஆரம்பமாகின. ஆனால் பள்ளிகள் தொடர முடியவில்லை. ஓரிரு நாட்களே இயங்கிய பள்ளிகள் உடனடியாக தடை செய்யப்பட்டன.

இப்போது மீண்டும் முன்பு போலவே ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள பெண்களின் கல்விக்குத் தடையைக் கொண்டுவந்திருக்கிறார்கள் தாலிபான்கள். இதன் பின்னணி என்ன என்பது பரம இரகசியம்!

ஏற்கனவே உலகில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளனன.  எல்லா நாடுகளிலும் பெண்கள் கல்வி கற்கத்தான் செய்கின்றனர்.  பெண்களின் கல்விக்குத் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா நாடுகளிலும் உயர்கல்வி அவர்களுக்கு  மறுக்கப்படவில்லை. பெண்கள் டாக்டர்கள், இஞ்சினியர்கள், கணக்கர்கள் என்று எல்லாத் துறைகளிலும் அவர்கள் ஆளுமை செலுத்துகின்றனர். ஏன் நமது நாட்டிலேயே நாட்டின்  மிக உயர்ந்த பதவியான மத்திய வங்கியான,  பேங்க் நெகாரா  மலேசியா ஆளுநராக ஒர் பெண்மணியான டாக்டர் ஸெட்டி அக்தார் அஸிஸ்  இருந்திருக்கிறாரே!

ஏனைய நாடுகளில் பெண்களின் முன்னேற்றம் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. பெண் டாக்டர்கள் இல்லையென்றால் பெண்களுக்கான பிரசவத்தைப் பார்ப்பவர்கள் யார்? அப்படியானால் இன்னொரு சட்டத்தையும் கொண்டு வரலாம்!   திருமணத் தடை சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே!

இவர்களைப் போன்ற கோமாளிகளை ஆதரிக்க நம் நாட்டிலும் பாஸ் போன்ற அரசியல்கட்சிகள் இருப்பது வெட்கக் கேடானது! அப்படியானால் பாஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் பெண்கள் கல்விக்குத் தடை போடலாமே! போட்டுப் பார்க்கட்டுமே, என்ன ஆகும் எனப் பார்க்கலாம்!

இது போன்ற முட்டாள்தனங்களுக்கு நாம் ஆதரவு கொடுக்கக் கூடாது. பெண்கள் முன்னேற வேண்டும்.

நாம் சொல்ல வருவதெல்லாம் சக இஸ்லாமிய நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு நெருக்கதல்களை ஏற்படுத்த வேண்டும்.   பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். மீசை தாடி, கரடுமுரடான முகம், கையில் ஏந்நேரமும்  துப்பாக்கி,  எறிக்குண்டு  - இப்படியே வாழ்ந்துவிட்ட அவர்களுக்கு வெளி உலகத்தோடு ஒத்துப்போக முடியவில்லை!

பெண்களே! உங்கள் கல்வியை நிறுத்தாதீர்கள்! முடிந்தமட்டும் படியுங்கள்! நீங்கள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை!

Thursday 24 March 2022

சாலைகளைக் கவனியுங்கள்!

 


இன்று பெரும்பாலான சாலை விபத்துகள் கைபேசிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன!

ஓர் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் வாகனங்களைப் பாயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டினர் கைபேசிகளில் பேசிக்கொண்டே  வாகனங்களில் பயணிக்கின்றனர்..  "நாங்கள் எல்லாம் அதில் நிபுணர்கள்! எங்களுக்கு ஒண்ணும் ஆகாது!" என்று வீண் பெருமை பேசுகின்றனர்.

ஓர் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். விபத்து என்று வரும்போது அது உங்களை மட்டும் தான் பாதிக்கும் என்றால் யாரும் அதுபற்றிப் பேசப்போவதில்லை! நீங்கள் எக்கேடு கெட்டால் யாருக்கு என்ன நட்டம்? ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் விபத்து உங்கள் எதிரே வருபவரைப் பாதிக்கும் என்றால் எல்லாக் கேடுகளும் உங்களுக்கு வரவேண்டும் என்றுதான் அவர்கள் சபிப்பார்கள்!

நீங்கள் எப்போது பேச வேண்டும் என்பதில் ஒரு வரையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.  நீங்கள் காரை ஓட்டாமல் வேறு யாராவது ஓட்டுகிறார் என்றால்  அப்போது நீங்கள்  ஃபோனில் அரட்டை அடித்தால் கூட யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை! நீங்கள் மட்டும் தான் ஓட்டுகிறீர்கள் என்றால் கரை நிறுத்திவிட்டுத் தான் பேச வேண்டும்.

வாகனங்களைச் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்துவது  சட்டப்படி குற்றம். இப்படி ஒரு சட்டம் இருப்பதே எல்லாருக்கும் மறந்து போய்விட்டது!

அரசாங்கத்தின் அறிவுரை, காவல்துறையினரின் அறிவுரை, பொதுமக்களின் அறிவுரை -  சொல்லவருவதெல்லாம் ஒன்றே.  தயவு செய்து நீங்கள் கார்களை ஒட்டும்போது அல்லது வேறு வாகனங்களை ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பது தான். அது ஆபத்தை விளைவிக்கும்.  மரணங்கள் சம்பவிக்கும். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

சமீப காலமாக நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பல விபத்துகள்  யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விபத்துகள்.நிறைய மரண சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதிலும்  சில மிகவும் கொடுமையான சம்பவங்கள்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் விபத்து நடந்த இடத்திலேயே முடிந்து போனார்கள். மிகவும் துன்பமான ஒரு விஷயம். எப்படி இந்த விபத்து நடந்தது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் கைபேசிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

விபத்துகள் கூடாது என்பது தான் அனைவரின் ஆசையும். அதிலும் கைபேசிகளைப் பயன்படுத்தும் போது வருகின்ற விபத்துகள் நம்மால் மறக்க முடியாது. அது எல்லாக் காலங்களிலும் நம்மோடு ஓட்டிக் கொண்டிருக்கும். நம்மை நிம்மதி இல்லாமல் செய்துவிடும்.

சாலைகளைப் பயன்படுத்தும் போது  கைபேசிகள் வேண்டாம். தவிர்க்க முயற்சி செய்யுங்கள். "அது இல்லாமல் உயிர் வாழ முடியாது!" என்கிற வீர வசனம் எல்லாம் வேண்டாம்! ஆபத்துகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எந்நேரத்திலும் தாக்கலாம்.

சாலைகளில் பயணிக்கும் போது சாலைகள் தான் முக்கியம்!  கைபேசிகள் அல்ல!

Wednesday 23 March 2022

ரம்லான் மாதம் வரை பொறுத்திருங்கள்!

 

இப்போதைய நாடாளுமன்றத் தொடரில் கட்சித்தாவலைத் தடுக்கும் சட்ட மசோதா  நிறைவேற்றப்படவில்லை! அதற்கான காரணங்களையும் பிரதமர் கூறிவிட்டார்!.

ஆனாலும் எதிர்க்கட்சியினர் விட்டபாடில்லை. அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மீறப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க  மாட்டோம்  என்று போர்க்கொடி தூக்கிவிட்டனர்!

இப்போது ரம்லான் மாதத்தில் நடக்கப்போகும் சிறப்பு  நாடாளுமன்ற கூட்டத்தில் கட்சித்தாவலை தடுக்கும் சட்டம் விவாதிக்கப்படும் என்பதாக  பிரதமர் கூறியிருப்பதாக அறிவிப்பு வெளியாகிருக்கிறது.   சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த மசோதா பற்றியான விவாதம் ஒரு நாளில் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அடுத்த நாளும் விவாதம் தொடரும் என்பதாகவும்  கூறப்படுகிறது.

ஒன்று புரிகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் கொஞ்சம் கூர்மையாகவே வருவார்கள் என்று தோன்ற இடமிருக்கிறது! அதனால் தான் முன்கூட்டியே  'விவாதம் தொடரலாம்' என்று சொல்லிவைக்கிறார்கள்!

அப்படி ஒன்றும் ஓரே குரலில் இந்த மசோதாவை அனைவரும் ஆதரிப்பார்கள் என்று சொல்ல இடமில்லை. பணத்தைக் கொடுத்து யாரையும் வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக இந்த மசோதாவை ஆதரிக்கப்போவதில்லை! பல உள்குத்து வேலைகளும் நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்!

காலங்காலமாக அரசியலைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் அவ்வளவு எளிதில் இந்த மசோதாவை ஆதரிக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நல்லதை, நாட்டுமக்களுக்கு நல்லதை செய்யும் எதனையும் அவர்கள் ஆதரிக்கப் போவதில்லை.

கட்சிதாவல் தடுக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் அமோகமாக வெற்றி பெற வேண்டும் என்பது மக்களின் கனவு. அந்த மசோதா விவாதிக்கப்படும் போது  எத்தனை பேர் கட்சி மாறுவார்களோ  அதனையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

ரம்லான் மாதம் புனித மாதம். நல்லது நடக்க பிரார்த்திப்போம்!

Tuesday 22 March 2022

நாடாளுமன்றம் நிராகரித்தது!

 

                                                         No bail under SOSMA!
விசாரணையின்றி  ஒருவரை 28 நாள்கள் தடுத்து வைக்கும் "சோஸ்மா" சட்டத்தை, இன்னும் ஐந்து ஆண்டுகள்  நீடிக்க வைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை,  இன்று கூடிய மக்களவை நிராகரித்தது.

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை  யாரும் சென்று காண முடியாத  அளவுக்கு மிகவும் கடுமையான சட்டம் என்பதை மலேசியர்கள் அறிவர். அவர்கள் வழுக்குரைஞராக இருக்கலாம் அல்லது அவர்களது உறவுகளாக இருக்கலாம். ஊகும்! மன்னிக்கவும்! முடியவே முடியாது! என்பது சட்டம்.

இது போன்ற சட்டங்கள் நமது நாட்டுக்குத் தேவையில்லை என்பது தான் அந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் சொல்லுகின்ற காரணம். தீவீரவாதிகள் என்பவர்கள் எல்லா நாடுகளில் உள்ளனர். நமது நாட்டிலும் அவர்கள் உள்ளனர். 

தீவிரவாதிகளைக் கைது செய்தாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இன்று உலகளவில் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கையில் குண்டுகளோடு பல்வேறு ஆயுதங்களோடு தான் தங்களது இலக்கை நோக்கி சுற்றி வருகின்றனர். அவர்களைக் கூட கைது செய்யக்கூடாது. காரணம்  அவர்களை நேரடியாகவே  விசாரணை செய்து அவர்களுக்கான தண்டனையைக் கொடுக்கலாம். அது தவறு என்று யாரும் சொல்லப்போவதில்லை. தவறு செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

ஆனால் ஒருவரை வெறுமனே தீவிரவாதி என்று சொல்லி எந்த ஒரு காரணமுமின்றி கைது செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது. சமீபகாலத்தில் விடுதலைப்புலிகள் என்று சொல்லி பலரைக் கைது செய்தனர். மிகவும் கோமாளிததனமான ஒரு குற்றச்சாட்டு! ஆனால் என்ன செய்வது? "நாங்கள் நினைத்தால் எதனையும் செய்வோம்!" என்கிற ஆணவம் தான் மிஞ்சி நின்றது. வெறும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து  அவர்கள் தீவிரவாதிகள் என்பதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டனர்! கேலிகூத்தே தவிர வேறு என்ன?

பொதுவாகவே இந்த சோஸ்மா சட்டத்தினால் யாருக்கு என்ன பயன்? காவல்துறை எந்த விசாரணையுமின்றி ஒருவரை சிறையில் போடலாம். அரசியல் பழிவாங்கள் கூட நடக்கத்தான் செய்கிறது! யாரும் கேள்வி கேட்க முடியாது. காவல்துறை எந்த சிரத்தையும் எடுத்து வேலைசெய்ய வேண்டிய அவசியமில்லை. சோஸ்மா என்றால் காவல்துறைக்கு வேலை இல்லை!

இப்படி ஒரு சட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்க முடியாதபடி நாடாளுமன்றம் நிராகரித்ததற்காக மிக்க நன்றி!

Monday 21 March 2022

பொறுப்பற்ற பாதுகாவலர் நிறுவனங்கள்!

 


பள்ளிக்கூடங்களில் பாதுகாவலர்களாக வேலை செய்பவர்கள் யாருடைய பொறுப்பில் இருக்கிறார்கள் என்கிற கேள்வி இப்போது எழுகிறது!

நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூடங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டவரகள் அல்ல. ஆனால் அவர்கள் குறைந்தபட்சம்,  பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம்.

பாதுகாவலார்கள்,  பாதுகாப்பு நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள். வேலைக்கு அமர்த்தும் முன் அவர்கள் பாதுகாவலர்களாக வேலை செய்யும் தகுதி உடையவர்களா என்பதை காவல்துறையுடன் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி இருந்தால் அவர்கள் பாதுகாவலர்களாக வேலை செய்யும் தகுதியை இழந்துவிடுவார்கள். பாதுகாவலர் வேலைக்கு முக்கியத்தகுதி என்பது எந்தக் குற்றப்பின்னணியும் இருக்கக் கூடாது என்பது தான்.

சமீபத்தில்  பள்ளிக்கூட பாதுகாவலர் ஒருவர்  குற்றப்பின்னணி உடையவர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். ஏற்கனவே அவர் பாலியில் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்.  கடைசியாக ஒரு பெண்ணை பள்ளியில் மறைவான இடத்தில் எரியூட்டி கொலை செய்திருக்கிறார்.. இந்த விசாரணையின் போது  அவர் மீதான குற்றங்கள் தெரிய வந்திருக்கின்றன.

பள்ளிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தினசரி போய் வருகின்றனர். இது போன்ற பாதுகாவலர்களால் எந்த நேரமும் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது தான் பெற்றோர்களின் கவலை.

இதில் முக்கிய குற்றவாளிகள் என்றால் பாதுகாவலர் நிறுவனங்கள் தான். காவல்துறையின் அனுமதி இல்லாமல் அவர்களால் யாரையும் வேலைக்கு அமர்த்த முடியாது. அப்படி அவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்றால்  அந்த நிறுவனங்கள் குற்றம் புரிகின்றன என்று பொருள். அந்த நிறுவனங்கள் குற்றம் புரிந்தாலும் யாருடனோ அந்த நிறுவனங்கள் சமரசம் செய்து கொள்கின்றனர் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஆனால் அந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.  அத்தகைய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பது  தவறு அல்ல.

குற்ற இழைத்தவர்கள் எந்தவித தயக்கமுமின்றி ஆங்காங்கே வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். சமீபத்தில்  பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. காவல்துறை விசாரித்ததில் அந்த ஓட்டுனர் மீது ஏற்கனவே கஞ்சா அடித்துவிட்டு  பேருந்து ஓட்டி விபத்துகளைச் சந்தித்தவர் என்று தெரிய வந்தது! அதில் விசேஷம் யாதெனில் அவர் போலிசாரால் தேடப்பட்டு வந்தவர்! அது தான் டாப்!

என்னவோ நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கு! நாம் சொல்லுவதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  எது எப்படி இருந்தாலும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர்கள் பொங்கி எழுவார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை!

காவல்துறை அலட்சியம் காட்டினால்  பொது மக்களுக்கு வருவது என்னவோ துன்பம் தான்!

Sunday 20 March 2022

போரை நிறுத்துக!


 "போரை நிறுத்துக!" என்பது தான் உலக மக்களின் ஒன்றுபட்ட குரலாக இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஆனாலும் யாரும் கேட்பதாக இல்லை!  ரஷ்யா போரை நிறுத்துவதாகவும் இல்லை. அதே சமயத்தில் இன்றைய நிலையில் அதிகமாக 'வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கும்' யுக்ரேனும் தனது வீம்புத்தனத்தை விடுவதாகவும் இல்லை.

பொதுவாக எந்த நாடாக இருந்தாலும் சரி மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். யுக்ரேனும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் போர் வேண்டாம் என்பதைத்தான் விரும்புகின்றனர். ஆனால் பல சமயங்களில் நாட்டை ஆள்பவர்கள் மக்கள் மீது போரைத் திணிக்கின்றனர்.

இந்தப் போரினால் யுக்ரேனுக்குப் பெரிய அளவில் பாதிப்பு என்பதை மறுப்பதற்கில்லை. சுமார் ஒரு கோடி மக்கள் இதுவரை நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர். அகதிகளாக பல அண்டை நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்ந்து கொண்டிருக்கின்றனர். சொந்த நாட்டிலிருந்து, சொந்த மண்ணிலிருந்து, சொந்த வீடுகளிலிருந்து  புலம் பெயர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை விடத்  துயரம் உலகில் எதுவும் இல்லை. அகதிகளாக வருபவர்களுக்குத் தான் அந்த வலி புரியும்.

வெளியேறுபவர்களில் அனைவரும் பெண்களும் குழந்தைகளும் தான் அதிகம் என்கின்றன செய்திகள். ஆண்களில் பெரும்பாலும் நாட்டைக் காப்பாற்ற கையில் ஆயுதங்களை ஏந்திவிட்டனர். நாட்டில் சமாதானம் ஏற்படும் போது எத்தனை பெண்கள் சுமங்கலிகளாக வீடு திரும்புவார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆண்கள் இல்லாத நாடாக மாறவும் சாத்தியங்கள் உண்டு. இதனால் எத்துணை பெரிய பாதிப்பு என்பது உடனடியாகத் தெரியாது. ஆனால் மக்களிடையே ஏற்படுகின்ற அந்த வன்மம் ஆண்டு கணக்கில் நீடிக்க வாய்ப்புண்டு. சமாதானமே கொண்டு வரமுடியாத ஒரு சூழல் என்றென்றும் தொடரும்.

நல்ல தலைமை இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது இந்தப் போரிலிருந்து நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.  யுக்ரேன் தன் நாடு இருக்கின்ற சூழல் நன்றாகத் தெரிகிறது. அது ரஷ்யாவின் அண்டை நாடு. தனது அண்டை நாட்டில் "நேட்டோ" படைகள்  வருவது தனக்கு ஆபத்து என்பது ரஷ்யா புரிந்து வைத்திருக்கிறது. யுக்ரேன்  அதிபர்  ஒரு யூதர். அவர் ரஷயாவுக்கு எதிரானவர். அவர் யூதர் என்கிற காரணத்தால் "நேட்டோ" படைகள் வருவதை அவர் விரும்புகிறார். ஒன்றைக் கவனிக்க வேண்டும். மக்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அவர்களது  அதிபர் போரை விரும்புகிறார். அவர் ரஷ்யாவை அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். இது மேலோட்டமான ஒரு பார்வை.

நாட்டில் சமாதானம் வேண்டும் என்று நினைத்திருந்தால் பேச்சு வார்த்தைகளின் மூலமே இதற்கு ஒரு தீர்வைக் கண்டிருக்கலாம். இப்போது போரை நிறுத்துக என்று எல்லாத் தரப்பும் வேண்டுகோள் விடுக்கின்றன. எதுவும் ஆகவில்லை. போர் நீடிக்கிறது. அதன் பயனாய் விலைவாசிகள் ஏறிவிட்டன. எல்லா நாடுகளையும் அது பாதிக்கிறது.

நாம் "போரை நிறுத்துக!" என்று மீண்டும் சொல்லுவதைத் தவிர வேறு எதனையும் சொல்லும் நிலையில் இல்லை!


Saturday 19 March 2022

இளையோர்களே! கொஞ்சம் உதவுங்கள்!

 

            35 விழுக்காட்டினர் பூஸ்டர் ஊசி இன்னும் செலுத்தவில்லை!

இதுவரை தடுப்பூசி போட்ட பெரியவர்களில் - 60 வயதுக்கு மேற்பட்டோர்களில் - சுமார் 65 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டிருக்கின்றனர்  என்கிற செய்தி வரவேற்கத்தக்க செய்தி அல்ல!

பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடக்கூடாது என்கிற நோக்கம் எதுவும் இல்லை. ஆனால் இவர்களில் பலர் தாங்களாகவே போய் இதனைச் செய்ய இயலாதவர்களாக இருக்கின்றனர் என்பது தான் உண்மை.

ஆக, அவர்களுக்குத் தேவையெல்லாம் சிறியவர்களின் உதவி. குறிப்பாக அவர்களின் பிள்ளைகளின் உதவி அல்லது நண்பர்களின் உதவி. ஊசி போடுமுன் இருக்கின்ற நடைமுறைகளை அவர்களால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நடமுறைகளைக் கடந்த பின்னர் தான் ஊசி போட வேண்டிவரும். அதற்கு அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இவைகளையும் பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு செய்தியையும், குறிப்பாக பிள்ளைகள், புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாத வயதானோர்களின் மரண எண்ணிக்கையே கூடுதலாக இருப்பதாக சுகாதார அமைச்சுக் கூறுகிறது. அதனால் அவர்கள் அவசியம் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டே ஆக வேண்டும். மற்றும் ஒரு பிரச்சனையும் உண்டு. தடுப்பூசி போடாத பெரியவர்களின் மூலம் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கோரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம்! அதற்கான சாத்தியங்கள் உண்டு.

இன்னும் இவர்கள் வெளியே சுற்றுபவர்களாக இருந்தால்  இவர்கள் மூலம் தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் உண்டு.  கோரோனா வென்பது  ஒருவரோடு முடிந்து போகிற விஷயம் அல்ல. இது பரவக்கூடிய தன்மை உடையது என்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஒருவரோடு போகிற விஷயம் என்றால் நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையுடையது கோரோனா.

அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம், இளைய  தலைமுறையினரே,  உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குக் கொஞ்சம் தயை செய்யுங்கள். அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள். 

பெரியவர்களுக்குப் பூஸ்டர் ஊசி  போடுவதன்  மூலம்  அதன் பலன் அவர்களுக்கு மட்டுமல்ல,  நமக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களும் பயன் அடைகின்றனர். தொடர்பு உள்ளவர்களும் பயன் அடைகின்றனர். பொது நலனும் இங்கே உள்ளது.

இப்போது நாம் கொரோனா நோயினால் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். முடிந்தவரையில் நாம் நமது கடமைகளைச் சரியான முறையில் செய்வோம். மற்றவர்களுக்குத் தொற்று பரவாமலிருக்க நாம் நமது கடமைகளைச் சரியாகக் கடைப்பிடிப்போம்.

பெரியவர்களைக் கவனியுங்கள். அவர்களைப் பூஸ்டர் ஊசி போட வையுங்கள். வருங்காலம்  நன்றாகவே அமையட்டும்!

Friday 18 March 2022

ஜொகூர் சுல்தான் பாராட்டுக்குரியவர்!

 

                                             "Declare your Assets" says Johor Sultan
ஜொகூர் சட்டமன்றத்தேர்தலில்,  பாரிசான் வெற்றிபெற்றால், முன்னாள் மந்திரி பெசார் மீண்டும் பொறுப்புக்கு வருவார் என்று சொல்லப்பட்ட போதிலும், எதிர்பார்த்தபடி, அவரால் வர இயலவில்லை!

அவர் ஏன் வரவில்லை என்பதற்கான காரணிகள் இந்நேரம் பலருக்கும் புரிந்திருக்கும்.

இப்போது ஜொகூர் அரண்மனை  புதிய நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெறுபவர்கள் சுத்தமான கைகளாக இருக்க வேண்டும் என்று அரண்மனை விரும்புகிறது. நல்லது தான். பொது மக்கள் அதனை விரும்புவார்கள். நாட்டை ஆட்சி செய்கிறோம் என்று சொல்லி எல்லாக காலங்களிலும் திருடர்களும் கொள்ளையர்களும் தான் பதவியில் அமருகிறார்கள்! நமக்கும் அது ஏமாற்றத்தைத்தான் தந்து கொண்டிருக்கிறது!

ஆனால் ஜொகூர் அரண்மனை இந்த  முறை சில மாற்றங்களைக்  கொண்டு வந்திருக்கிறது.

ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்களது பின்னணியும் ஆராயப்படும் எனவும் கூறியிருப்பது ஆச்சரியம் தான். அரண்மனை  கூறுவது போலவே பின்னணியும் முக்கியம். இப்போது பணம் உள்ளவர்கள் மிகவும் எளிதாக அரசியலில் புகுந்துவிடுகிறார்கள். இவர்களது பின்னணி யாருக்கும் தெரிவதில்லை.  அதனால் தான் இன்று பல டத்தோக்கள  சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்!

இன்னொன்றும்  முக்கியம்  எனக் கருத இடமிருக்கிறது.  ஆட்சிக்குழுவில் இருப்பவர்களின் கல்வித்தகுதி அத்தோடு இலஞ்ச ஊழலில் சிக்கியிருப்பவர்களா போன்ற விவரங்களை எம்.ஏ.சி.சி. உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வித்தகுதி என்பது நம்மைப் பொறுத்தவரை முக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். இன்று நமது ம.இ.கா. வினர் எந்த ஒரு பிரச்சனையிலும் வாய் திறப்பதில்லை! அவர்களின் எதிர்காலத்துக்கு அது  நல்லது என்றாலும் இந்தியர்களின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அது நல்லதல்ல! அதனால் தான் எதிர்கட்சியினர் அனைத்தையும் பேச வேண்டியுள்ளது! இலஞ்ச ஊழலில் சம்பந்தப்படாதவர்களே  ஆட்சிக்குழுவில் இடம்பெற முடியும் என்பது நல்லதொரு திட்டம்!

ஆனால் இப்போது இருக்கும் இந்த வேகமும் துடிப்பும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை. இது நாள்வரை அப்படி இருந்ததில்லை.  இனிமேல் இருக்கலாம். மாநில வளர்ச்சி என்பதே முக்கியம். அதுதான் நமது இலட்சியமும் கூட!


Thursday 17 March 2022

பொதுத் தேர்தலுக்கு அவசரமில்லை!

 

                                                              No Rush for GE 15 - PM

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நல்ல நேரத்தில் தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.

ஆமாம்,  பொதுத்தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மை தான். என்ன அவசரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.  பொதுத் தேர்தல் நடத்த வேண்டியது அடுத்த ஆண்டே தவிர 'உடனடியாக' என்று எதுவுமில்லை! 

அதுவும் அம்னோ உதவித்தலைவர் பேசுவது ரொம்ப ரொம்ப அதிகம்! மலாக்கா தேர்தலில் ஜெயித்துவிட்டால் என்ன? ஜொகூர் தேர்தலில் ஜெயித்துவிட்டால் என்ன?  அதற்காக இந்த நாடே அவர் பேசுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா? மிகவும் அபத்தமான ஓர் அரசியல்வாதி!

இவர்கள் நினைக்கும் போதெல்லாம் தேர்தல் வைப்பதற்கு இங்கு என்ன மக்களாட்சி நடக்கிறதா அல்லது அம்னோவின் கோமாளி ஆட்சி நடக்கிறதா? இரண்டு மாநில சட்டமன்றத்தில் வெற்றி என்பது இந்த அளவுக்கு அகம்பாவத்தைக் கொண்டுவரும் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

இந்த அளவு வாய்கிழிய பேசுகிறவர்களுக்கு இந்த வெற்றியின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தார்களா  கொரோனா தொற்று பெரும்பாலான வாக்காளர்களை வாக்களிக்க முடியாமல் செய்துவிட்டது என்பது உண்மை தானே! எதிர்க்கட்சிகள் மக்களைச் சந்திக்க முடியவில்லை. கூட்டங்கள் நடத்த முடியவில்லை. காவல்துறை கெடுபிடி வேறு எதிர்க்கட்சியினருக்கு!   

உண்மையைச் சொன்னால் இந்த இரண்டு மாநில வெற்றிகள் அம்னோவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கக் கூடாது!  இது ஒரு கேவலமான வெற்றி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஆமாம் தலைவர்கள் மேல் பல ஊழல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதே கேவலமானது  தான்!

நல்ல வேளை! பிரதமர் சரியான நேரத்தில் சரியாகக்  கடிவாளம் போட்டிருக்கிறார். "ஆடாதடா ஆடாதடா மனிதா! ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா!" என்கிற பாடல்வரிகள் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியவில்லை!

இவர்களுடைய ஆட்டம் பாட்டம் எப்படி திசையை மாற்றிக்கொள்ளும் என்பது தெரியவில்லை! அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம்! அது அவர்கள் கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம்! ஆனால் அந்த ஆயுதம் கைக் கொடுக்குமா  என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காரணம் நாடாளுமன்றத்தின் மேல்  மாமன்னரின் கடைக்கண் பார்வையும் உண்டு என்பதும் அம்னோவுக்கும் தெரியும்!  அதனால் கவிழ்ப்பதற்கு வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்!

நம்மைப் பொறுத்தவரை பொதுத் தேர்தலுக்கான  தருணம் இதுவல்ல. அடுத்த ஆண்டு தான் அதன் காலம் முடிவடைகிறது. அப்போது, அந்தக்   காலகட்டத்தில், தேர்தலை வைப்பது தான் அரசாங்கத்தின் கடமை. அது தான் ஜனநாயக மரபு. இதில் எந்த மாற்றமும் தேவையில்லை! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிவிட முடியாது!

இந்த விடயத்தில் அம்னோவுடன் நாம் கைகுலுக்க முடியாது!

Wednesday 16 March 2022

எங்களைவைச்சி காமடி கீமடி பண்ணலியே!

 


மித்ரா (இந்தியர் உருமாற்றத் திட்டம்)! இது பற்றி பேசப்போகுமுன் ஒரு சில விஷயத்தைக் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.

மித்ரா என்றாலே (இதற்கு முன்னர் செடிக்) நமக்கு ஏனோ  "எதற்கும் பயனில்லை!" என்கிற எண்ணம் இந்தியர்களிடையே ஏற்பட்டுவிட்டது! நல்லது செய்தால் நாம் அதனைப் பாராட்டுவோம். எதுவும் நடக்கவில்லை என்றால் "போடா! போ!" என்று ஒதுக்கிவிட்டுப் போவோம்! அவ்வளவுதான்! "யாரை நம்பி நாம் பிறந்தோம் போங்கடா போங்க!" இந்த சமூகம் யாரையும் நம்பியில்லை! நமது கையை நம்பியவர்கள் நாங்கள்!

மித்ரா உதவித்திட்டம் பிரதமர் அமைச்சின் கீழ் வரும் என  நாம் எதிர்பார்த்திருந்தோம்.  ம.இ.கா. தலைவர் கேட்டுக் கொண்டதை பிரதமர் காதில் போட்டுக் கொள்ளவில்லை!

மேலே காணும் அறிவிப்பைக் காணும் போது அது மீண்டும் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் தான் வருகிறது. 

ஒற்றுமத்துறை அமைச்சர் என்றாலே அவர் தொடர்ந்தாற் போல இந்தியர்களைக் கேலி செய்பவராகவே தோன்றுகிறார்! மித்ரா மீதான எந்த ஒரு கேள்விக்கும்  பதில் அளிக்க மறுக்கிறார். சிரிக்கிறார்! கிண்டல் பண்ணுகிறார்! முகத்தைக் கல்லுளிமங்கிணியைப் போல வைத்துக் கொள்கிறார்! 

இவரே மித்ராவுக்குச் சரியான ஆள் என்று பிரதமரே நினைக்கும் அளவுக்கு இவர் செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது! அதனால் தான் பிரதமரும் இதுபற்றி கண்டுகொள்வதில்லை! ம.இ.கா. வினரும் 'அவரே நல்ல தேர்வு!' என்று நினைக்கும் அளவுக்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். ஆமாம் ஜனநாயகத்தில் யார் வந்தால் யாருக்கு இலாபம் என்பது தானே கணக்கு!

அமைச்சர் ஹலிமா கேள்வி கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  காமடிபீஸாக நினைத்து செயல்படுகிறார்!  பதிலளிக்க வேண்டிய நேரத்தில் 'போய்! தோசை சாப்பிடுங்கள்!'  என்று கிண்டலடிக்கிறார்! நாடாளுமன்றத்தை ஏதோ தன் வீட்டுத் தகரக்கொட்டகையாக நினைக்கிறார்! அங்கு விற்கும் தகரக்கொட்டைகையில் நாசிலிமா வாங்கி சாப்பிடுகிறவர்  போல பேசுகிறார்!

இப்போது மீண்டும் அவருடைய அமைச்சே மித்ராவுக்குப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது மேலும் சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும். முன்பு என்ன நடந்ததோ மீண்டும் அது தான் நடக்கும்! அப்போது என்ன என்ன மழுப்பல்கள் மூலம் கடந்து சென்றாரோ அதனையே தொடர்ந்து செய்வார் என எதிர்பார்க்கலாம்!

ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த முறையும்  ஒற்றுமைத்துறை அமைச்சும்-ம.இ.கா.வும்  சேர்ந்து வழக்கம்போல இந்தியர்களை உருமாற்றும் என நமபலாம்!

நமது மக்களை வைத்து ஹலிமாவும் விக்னேஸ்வரனும் காமடி பண்ணுகிறார்கள்!
                              

அதற்குள் பயமுறுத்தலா!

 

                      15- வது பொதுத் தேர்தல் நடத்த அம்னோ முடிவு எடுக்குமா!

அம்னோவின் பயமுறுத்தல் நாடகம் தொடங்கிவிட்டது!அம்னோவின் பொதுப்பேரவை இன்னும் ஓரிரு தினங்களில் கூடுகிறது! அரசியல் கட்சிகள் கூடுவது, கலைவது என்பதெல்லாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் இந்த முறை அம்னோ கூடுவது என்பது அடுத்த 15-வது பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று பிரதமரைப் பயமுறுத்துவது  தான் நோக்கம்!

சமீப காலங்களில் நடந்து முடிந்த மலாக்கா, ஜொகூர் சட்டமன்றத் தேர்தல்கள்  அம்னோவுக்கு ரொம்பவும் தெனாவெட்டை அளித்திருக்கிறது என்பதை அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அழிவின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு கட்சி தீடீரென இரண்டு மாநில வெற்றிகளால் தனது வழக்கமான   அட்டூழிய அரசியலைக் கையில் எடுத்திருக்கிறது! அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானான்! அதே கதை!

அவர்கள் பேசுகின்ற பாணி கூட மாறிவிட்டது.  ஒரு வகையான எச்சரிக்கை! பிரதமருக்கு எச்சரிக்கை! பொது மக்களுக்கு எச்சரிக்கை! அடிமட்ட அம்னோ தொண்டர்கள்  அடுத்த பொதுத் தெர்தலை வைக்க வேண்டும் என விரும்புகிறார்களாம்! அதனால் யாவரும் அவர்களுக்கு அடிபணிய வேண்டுமாம்!

உண்மையைச் சொன்னால் 15-வது பொதுத்தேர்தல்  என்பது அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் நடைபெற வேண்டும். இன்னும் ஓர் ஆண்டு இருக்கையில் எந்த அவசரமும் தேவை இல்லை. இப்போது அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு  எந்த ஆபத்திலும் அவசரத்திலும் இல்லை. எதிர்க்கட்சிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு,  சுமுகமாகவே அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுத்தேர்தல் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.  இன்னும் ஓர் ஆண்டு இருக்கையில் ஏன் இந்த அவசரம் என்பது தான் கேள்வி.

இப்போது அரசாங்கமும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற ஒரு நேரம். கொரோனா தொற்றும் முற்றிலுமாக ஒழிந்தது என்று சொல்ல முடியாது. தொழிற்சாலைகள் இப்போது  தான் ஆங்காங்கே  மீண்டும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களும் பல நெருக்கடிகளில் இருக்கின்றனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இது தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பதும் தெளிவில்லை.

இந்த நேரத்தில் ஏன் இந்த கூப்பாடு? அம்னோ மட்டும் தேர்தலை வையுங்கள் என்றால் போதாது. எல்லாக் கட்சிகளும்  ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால்  அதனை யோசிக்கலாம்.

அம்னோ செய்வது அராஜகம் என்றே நமக்குத் தோன்றுகிறது. இது தான் சரியான நேரம் என்று நீங்களாகவே முடிவெடுத்து முக்கி முணகிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லாக் கட்சிகளுக்குமே அடுத்த ஜூலை மாதம் தான் சரியான நேரம் என்று சொல்லும் போது உங்களுக்கு மட்டும் அப்படி யென்ன  இப்போது தான் நல்ல நேரம்?    

பிரதமர் இஸ்மாயில் அனைவருக்கும் பிரதமர்.  அம்னோவுக்கு மட்டும் அல்ல! இதை உணர்ந்து கொண்டு அவர் செயல்பட வேண்டும்.

                                                          

Tuesday 15 March 2022

உப்புதானா பிரச்சனை?

 

                                                 அதிக உப்பு?  ரொம்ப தப்பு!

"உப்பில்லா பண்டம் குப்பையிலே!"  நாம் எல்லாரும் அறிந்த பழமொழி தான். உப்பு இல்லாவிட்டால் அது குப்பைக்குப் போக வேண்டிய ஒரு பொருள்! வாயில் வைக்க முடியாது!

"உப்பு மீறினால் மண்ணுக்குள்ளே!" என்று இப்போது எல்லாரும் பேச ஆரம்புத்திருக்கிறார்கள்!  நமது சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அவரும் உடல்நலனைக் காத்துக்கொள்ள உப்பைக் குறையுங்கள்  என்று அறிவுரைக்  கூறியிருக்கிறார்.

தலைமை இயக்குனர் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார்.  உணவுப்  பொருள்களைத் தயாரிக்கும்  நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் உப்பின் அளவைக் குறிப்பிட வேண்டும் என்பதையும் நினைவுறுத்தியிருக்கிறார். 1983-ம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். 

ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  அதனைப் பின்பற்றுவதில்லை என்பதாகத்தான் நாம் விளங்கிக் கொள்கிறோம். அப்படியென்றால் சுகாதார அமைச்சின் பணியாளர்கள்  அந்தக் கட்டாயச் சட்டத்தை வழக்கம் போல்  கண்டுகொள்வதில்லை என்றாகிறது! அதனால் தான் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் எந்தச் சட்டத்தையும் பின்பற்றுவதில்லை!

யார் என்ன செய்கிறார்களோ செய்யவில்லையோ, சட்டம் சொல்லுகிறதோ சொல்லவில்லையோ நாம்  உப்பைப் பொறுத்தவரை சில வரைமுறைகளை வகுத்துக்கொள்வது நல்லது.

உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அது நல்லது. ஆரோக்கியமற்ற உணவு முறைகளினால் ஒரு கோடி  பத்து  இலட்சம் மக்கள்  ஒவ்வொரு ஆண்டும் உலகைவிட்டு விடைபெறுகின்றனர்!  அதில் முப்பது இலட்சம் பேர் உப்பு சம்பந்தமான வியாதிகளினால் மரணம் எய்துகின்றனர்!

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொண்டால் நல்லது. இனிப்பு அதிகம் சாப்பிட்டால் இனிப்பு நீர் வருவதாக நம்மிடையே ஒரு கணக்கு உண்டு. உப்பு அதிகம் சாப்பிட்டாலும் அதே பிரச்சனை தான். அதனால் இனிப்பு நீர் வராது! ஆனால் உப்புநீர் வரலாம் தானே! அல்லது ஏதோ ஒரு வியாதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஓர்  எளிமைக்காக உப்புநீர் என்று சொன்னேன்! அவ்வளவு தான்!

உப்பு அதிகம் சாப்பிட்டால் ஆபத்து உண்டு என்பது தான் நாம் சொல்லவருவது. இதையும்  "உப்புச் சப்பில்லாத" விஷயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

குறைந்தபட்ச சம்பளம் அமல்!

 

குறைந்தபட்ச சம்பளமான ரி.ம. 1500 வெள்ளி சிக்கிரம் அமலுக்கு வரும் என்பதாக  மனிதவள அமைச்சர்  கூறியிருப்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி தான். 

அடுத்த ஆண்டு என்று தள்ளிப்போடாமல் அல்லது ஆண்டு இறுதி என்று கூறாமல்  விரைவில்  அமலுக்கு வரும் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் என்று எடுத்துக் கொள்ளலாம்.

15-வது பொதுத்தேர்தல்  வரப்போகிறது என்கிற பேச்சு இப்போது அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பே இதனை அமலுக்குக் கொண்டு வரவேண்டும். கொண்டு வந்தால் தான்  நடப்பு அரசாங்கத்திற்குக் கொஞ்சம் கூடுதல் பெயர் கிடைக்கும்! அரசியல் என்பது இப்படித்தான் இருக்கும் நாமும் அறிவோம்!

இதனை நாம் வரவேற்கும் வேளையில் இன்னொரு தரப்பு பற்றி நாம் பேசுவதில்லை. நகர்ப்புறங்களில் உள்ளவர்களைப் பற்றி பேசுவதற்கு ஒருசிலராவது கிடைத்துவிடுகிறார்கள். ஆனால் தோட்டப்புறங்களில் உள்ளவர்களைப் பற்றி பேச எப்போதுமே ஆள் கிடைப்பதில்லை. அவர்களைப்பற்றி பேச தொழிற்சங்கம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தும் போதும் இன்னொரு ஐந்து வெள்ளி, இன்னொரு பத்து வெள்ளி என்று தான் போகுமே தவிர பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.  அது ஏனோ அந்தத்  தோட்டத்துறை மட்டும் அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது! எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை!

என்ன தான் இது பற்றிப் பேசினாலும், அரசாங்கமே ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தாலும்  இந்த புதிய அறிவிப்பு மூலம் பயன் அடையப்போகிறவர்கள் யார்? தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தான் இவர்களின் நோக்கம் என்றால் தொழிற்சாலைகள் அப்பாற்பட்டு பணிபுரியும் ஊழியர்கள் நிலை என்ன? 

நாட்டில் ஏகப்பட்ட சிறு சிறு நிறுவனங்கள் இயங்குகின்றன. கடைகளில் பணிபுரிவோர் பலர் இருக்கின்றனர்.இரண்டு மூன்று பேர் வேலை செய்கின்றவர்கள், ஐந்தாறு பேர் வேலை செய்கின்ற நிறுவனங்கள் பல இயங்குகின்றன. இவர்களுடைய நிலை என்ன? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படி இருப்பினும் ஏதோ ஒரு தரப்பு இந்த புதிய குறைந்தபட்ச சம்பளம் மூலம் பயன் பெறுகின்றனரே என்று ஆறுதல் அடையலாம். இப்போது உள்ள விலைவாசியேற்றம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அது இயல்பு தான்! விலையேற்றம் என்று சொல்லுகிறோமே தவிர விலையிறக்கம் என்று எந்தக்காலத்திலும் நாம் சொல்லுவதில்லையே!

இந்தப் புதிய குறைந்தபட்ச சம்பளத்தை காலதாமதம் இல்லாமல் வெகு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். கொடுக்கிறோம் என்று உறுதி அளித்தபின்னர் ஏன் அதனை தாமத்தப்படுத்த வேண்டும்?

Monday 14 March 2022

இனி உங்கள் பாடு!

 

                                                 MIC President Tan Sri SA. Vigneswaran

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ம.இ.கா. வினருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது உண்மைதான்!

இனி வருங்காலங்களில் அவர்களின் "உண்மை" தான் அவரகளுக்குக் கை கொடுக்கும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.  இது  நாள் வரை அது மட்டும் தான் அவர்களிடம் இல்லாத ஒரு குறை! இந்த வெற்றியின் மூலம் அரசாங்கத்தோடு  ஒட்டிக் கொண்டிருந்த சில சில்லறைக்கட்சிகள் "சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்!"  என்று  தெறித்து ஓடும்  என நம்பலாம்!

இந்த வெற்றியைப் பற்றி கருத்துரைக்கையில் ம.இ.கா. தலைவர் "இதற்கு முன் ஆதரவு வழங்குவதிலிருந்து  ஒதுங்கியிருந்த இந்திய சமூகத்தினர் இப்போது மீண்டும் ம.இ.கா.வை ஆதரித்ததோடு அவர்களது நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது" என்பதாகக் கூறியிருக்கிறார்!

இந்த ஆதரவை நீங்கள் எப்படிப்  புரிந்து கொண்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்திய சமூகத்தினர் ஏன் ஒதுங்கி இருந்தனர் என்பது  உங்களுக்குத் தெரிந்த கதை தான். அதன் விரிவான பட்டியலே உங்களிடம் உண்டு. அதனை நீங்கள்  இப்போது எடுத்துப் பார்த்தாலும் இந்திய சமூகம் ஒதுங்கி இருந்தது சரிதான்  என்று நீங்களே  ஒப்புக்கொள்வீர்கள்! 

எது எப்படியோ தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே இந்தத் தேர்தலின் மூலம்  எதிர்பாராத அளவுக்கு நல்ல அறுவடை செய்திருக்கின்றன! வாழ்த்துகிறோம்!

ஆனால் இத்தோடு உங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். இது நாள்வரை அப்படித்தான் உங்கள் செயல்கள் அமைந்திருந்தன.  இப்போது நீங்கள் மாற வேண்டும்.

இங்கு நாம் பெரும்பாலும் ம.இ.கா. வைப்பற்றிதான் பேசுகிறோம். ஒன்றை ம.இ.கா.வினர் புரிந்துகொள்ள வேண்டும்.  சீனர்களைப்பற்றி நாம் பேச ஒன்றுமில்லை.    சீனர்களைப் பிரதிநிதித்து யார் வந்தாலும் சீனர்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்குத் தூக்கவும் தெரியும் தொப்பென்று போடவும் தெரியும்! 

ஆனால் இந்தியர்களின் நிலை வேறு. காலங்காலமாக ம.இ.கா.வினரால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம். அதனால் தான் ம.இ.கா. என்றாலே சாமிவேலுவின் பெயர் இன்றும் அடிபடுகிறது!  இப்போது அவரது பாணி அரசியல் நமக்குத் தேவை இல்லை! நம்முடைய எடுத்துக்காட்டு என்றால் அது வீ.தி.சம்பந்தன் அவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை சாமிவேலுவின் பெயர் தான் அடிபடுகிறது!

இந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ம.இ.கா.  விற்கு  ஒரு புதிய அத்தியாயமாக இருக்க வேண்டும்.  ஒரு புதிய பாதையை அமைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இந்தியர் நலன் சார்ந்த விஷயங்களில்  விட்டுக் கொடுக்கும் போக்கு இனிமேலும் இருக்கக் கூடாது. 

ஒரு சட்டமன்ற உறுப்பினரால் பள்ளிக்கூடத்திற்கு ஒரு பாதை போட்டுக் கொடுக்க முடியவில்லை. இறந்த பின் 31-வது நாள்   சடங்குகள்செய்ய இடமில்லை. இதெல்லாம் சாதாரண விஷயங்கள்.  இதைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏன் அந்தப் பதவி என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

இனி  மேலும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை. கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

வேறு என்ன? பந்து உங்கள் கைகளில்! இனி உங்கள் பாடு!

Sunday 13 March 2022

மாபெரும் வெற்றி!

 

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ஒரு முடிவுக்கு வந்தது!

ஒரு இக்கட்டான சூழலில் நடந்த இந்தத் தேர்தல் ஆளும் பாரிசான் கட்சிக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தேர்தலாக அமைந்துவிட்டது.  பாரிசான் கட்சியினரே எதிர்பாராத ஒரு வெற்றி என்று சொல்லலாம்.

பொதுவாகவே கொவிட்-19 தொற்று பாரிசான் கட்சியினருக்கு  மிக நல்ல சகுனத்தைக் கொண்டு வந்திருக்கிறது  என்று தாராளமாகச் சொல்லலாம். மலாக்கா மாநிலத்தில் கிடைத்த வெற்றியையும் இதனோடு சேர்த்துக் கொள்ளவும் செய்யலாம்.

வாக்குப் பதிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. தொற்று நோயின் காரணமாக பலர் வீட்டைவிட்டு வெளியாகவில்லை. இது எதிர்பார்த்தது தான்!  புதிய வாக்காளர்களான 18-வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அவ்வளவாக வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை! இன்னும் அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை!

இது போன்ற காரணங்கள் எல்லாம் பாரிசான் கட்சிக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இந்த வெற்றியின் காரணத்தினால் இன்னும் ஓரிரு  மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வரக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.  அல்லது நாடாளுமன்ற தேர்தல் கூட வரலாம்.

இந்த சமீபகால வெற்றிகள் பாரிசான் கட்சிக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.  அது மட்டும் அல்லாமல் ஒரு புதிய உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஆமாம் அவர்கள் எதிர்பார்ப்பது அதே மலாக்கா பாணி, அதே ஜொகூர் பாணி அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வரும் என நினைக்கிறார்கள். அதே பாணி அவர்களுக்கு வெற்றியை வாரிக் கொடுக்கும் என்றால் ஏன் வேறு மாநிலங்களுக்கும் அதே பாணியை விரிவுபடுத்தக் கூடாது? இது அரசியல்! நேர்மை, நியாயம் பற்றிப் பேசினால் இருக்க வேண்டிய இடம் வேறு!

எப்படியோ பாரிசான் கட்சியின் வெற்றிக்கு நாம் எதிரியல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது நடக்க வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். விலைவாசிகளைக் கட்டுப்படுத்தாமல்  மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கக் கூடாது. விலைவாசி மட்டும் அல்ல, வேலை வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும், உயர்கல்வியில் சம வாய்ப்புக்களை வழங்க வேண்டும், அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும், இலஞ்ச ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் -  இது போன்ற விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நாம் ஏன் அரசாங்கத்தை எதிர்க்கிறோம்?

இந்த மாபெரும் வெற்றி மக்கள் பாரிசானுக்குக் கொடுத்த மாபெரும் அங்கீகாரம். அதை நன்மையாக்குவதும் தீமையாக்குவதும் பாரிசான்  கையினிலே!

Saturday 12 March 2022

தேர்தல் களம் காணும் ஜொகூர் மாநிலம்!

 

யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!

இப்போது அந்த மணியோசை வருவதற்காகத் தான் மலேசியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜொகூர் யானை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமையலாம்! அதனால் தான் ஜொகூர் மாநிலம் அதிக எதிர்பார்ப்பை, இன்றைய நிலையில், கொண்டிருக்கிறது!

ஆமாம், ஜொகூர் மாநிலத்தின் 15-வது பொதுத் தேர்தல் இன்று சனிக்கிழமை 12-3-2022. கடந்த காலங்களில் ஒரே கட்சி ஆட்சி தான் தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறது. எந்த அளவுக்கு அக்கட்சி மாநிலத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றன!

நல்ல கேள்வி தான்!  ஆனால் முன்னாள் ஆட்சியாளர்கள் அது பற்றி அதிக அக்கறைக் காட்டவில்லை! ஒரே காரணம் தான். அவர்களது குடிகளுக்குச் சிங்கப்பூரில் வேலை கிடைப்பதையே பெரிய பாக்கியமாகக் கருதி வந்திருக்கின்றனர்! மற்றபடி இவர்கள் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டவில்லை! ஆனாலும் தங்களது வாழ்க்கை முன்னேற்றத்தில் மட்டும் அதிகம் முனைப்புக் காட்டியிருக்கின்றனர்.  ஆளும் அரசியலில் இருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்கள்! அது தான் அவர்களது சாதனை!

அரசியலில் பழையவர்களை ஓரங்கட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவர்களிடம் பண பலம் உண்டு. அதனை வைத்தே அவர்கள் மீண்டும் மீண்டும்  தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்து விடுகிறார்கள். மக்களும் தங்களுக்குத் தனிப்பட்ட முறையில்  காரியம் ஆனால் போதும் என்கிற மன நிலையில் தான் இருக்கிறார்கள்.  பொதுவான, நாட்டுக்கு நன்மை தரும் விஷயங்களில், யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஆனாலும் இந்த மாநிலத் தேர்தலில் நல்ல முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்றே கருதுகிறோம்.

Friday 11 March 2022

முகக்கவசங்கள்

 

கோவிட்-19 தடுப்புக்காக நாம் அணியும் முகக்கவசங்கள் இன்று மானுடத்துக்கே  பெரும் சவலாக வளர்ந்து கொண்டிருக்கிறது! 

மக்கள் நாலாப்பக்கமும் பல இடையூறுகளைச் சந்தித்து வருகிறார்கள். அனைத்துக்கும் நாமே தான் காரணம். நாம் எந்த ஒரு ஒழுங்கு முறையையும் கடைப்பிடிக்காததால் அதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம்!

இப்போது நாம் அணிந்து கொள்ளும் முகக்கவசங்கள் கூட மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியாத மாறி வருகிறது! ஏதோ ஒரு வியாதிக்கு முகக்வசம் அணிந்தால் ஏதோ ஒன்று புதிதாக  முளைத்துக் கொண்டு வருகிறது! ஒன்றிலிருந்து இன்னொன்று ஆரம்பம்! இதற்கு முடிவே இல்லையோ!

நமது நாட்டில் மட்டும் கடந்த 2020 ஆண்டில் சுமார் 90 டன்  எடை கொண்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள் ஒவ்வொரு நாளும் குப்பைத் தொட்டிகளுக்குள் தஞ்சம்  புகுந்திருக்கின்றன!

இது நமது நாட்டு நிலவரம் மட்டும் தான். இதையே உலக அளவில் பாருங்கள்.  ஐயோ! நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! இவைகளையெல்லாம் எரித்துப் போட்டுவிடலாம் என்றால் அதன் மூலம் வேறு என்ன வியாதி வருமோ என்கிற அச்சமும் வருகிறது! இதையே கடலில் கொண்டு போய் கொட்டினால் கடலில் உள்ள நீந்துவன அனைத்தும் ஏதோ ஒரு புதிய உணவு என்று நினைத்து சாப்பிடவும் சாத்தியம் உண்டு!

ஏற்கனவே பாவம்! நாம் சாப்பிடுகின்ற கடல் மீன்கள்,   மீன்களாகவே தெரியவில்லை! ஏதோ பிளாஸ்டிக் பொருள்களைச் சாப்பிடுவது போல்  மீன்களையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்!  மீன்களுக்கு எது உணவுப் பொருள், எது பிளாஸ்டிக், எது முகக்கவசம் என்கிற வேறுபாடுகள்  இல்லாமல் அனைத்தையும்  வெளுத்து வாங்குகின்றன! கடைசியில் அங்குச் சுற்றி இங்குச் சுற்றி மீண்டும் நமது வயிற்றுக்குத் தான் போகின்றன! 

நமது கவலையெல்லாம்  நாட்டில் இப்போது இல்லாத குப்பைகளா? இருக்கின்ற குப்பைகளுக்கே ஒரு தீர்வு  காணமுடியாத நிலையில்  இப்போது  புதிதாக இன்னொன்று  வந்து உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என்ன செய்ய?

மேற்கு நாடுகளின் நிலை வேறு! அவர்கள்  அவர்களின் குப்பைகளைத்  தூக்கி  ஏதோ ஒரு வெளி நாட்டுக்கு,  தங்களுக்கு வேண்டிய நாடுகளுக்கு, பணத்தைக் கொடுத்தாவது அனுப்பி விடுவார்கள்! இதெல்லாம் அவர்களுக்கு சகஜம்! நாம் எங்கேயும் அனுப்ப முடியாது!

பார்ப்போம்!  இதற்கான தீர்வு  காணப்படும் வரை பொறுத்திருப்போம்!

அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியுமா?

 

                                                 வட்டி முதலைகளின் பயமுறுத்தும் வேலை!

வட்டி முதலைகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

வட்டி முதலைகள் அல்லது ஆலோங் இது நமது நாட்டில் பயன்படுத்தும் வார்த்தை. தமிழ் நாட்டில் கந்துவட்டி என்று கூறுகிறார்கள். பெயரில் தான் வித்தியாசம் மற்றபடி செயல்பாடுகள் எல்லாம் ஒன்று தான்!

ஏதோ ஆபத்து அவசரத்துக்காக வட்டி முதலைகளிடம்  மக்கள் போகிறார்கள். அதுவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அங்கும் சரி இங்கும் சரி அவர்களிடம் பணக்காரர்கள் யாரும் போவதில்லை. அடித்தட்டு மக்கள் தான் அவர்களின் வாடிக்கையாளர்கள். ஆனால் அவர்கள் ஐநூறோ, ஆயிரமோ வாங்கிவிட்டு படுகிற பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. அவர்கள் ஆயுள்வரை அந்தக் கடனைக் கட்டி முடிக்க விடமாட்டார்கள்!

இந்த முதலைகள் எப்போதோ நம்மிடையே இருந்து முற்றிலுமாக  ஒழிக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் அவர்கள் ஒழிந்தபாடில்லை! அவர்கள் ஒழிக்க முடியாதவர்கள் என்கிற எண்ணம் நமக்கும் வந்துவிட்டது! காரணம் அரசியல்வாதிகள்  இதில்  சம்பந்தப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது! அரசியல்வாதிகள் என்றால் அவர்களோடு மோத யாரும் தயாராக இல்லை! காவல்துறை மட்டும் முடியுமா?

ஆனாலும் இப்போது அவர்கள் எடுத்திருக்கும் ஒரு சில நடவடிக்கைகளுக்காக காவல்துறையைப் பாராட்டுவோம். 

காவல்துறை இப்போது நாடெங்கிலும் சுமார் 44 பேரை கைது செய்திருப்பதாக புக்கிட் அமான் அறிவித்திருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கை, வழக்கம் போல, தலைகளைத் தவிர  வால்களாகத்தான் இருக்கும் என நம்பலாம்! மற்றபடி ஆட்டிவைக்கும் சூத்திரதாரிகளின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது  என்பது திண்ணம். அந்த எல்லைக்கு அவர்கள் போகமாட்டார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 வாகனங்கள், 107 கைத் தொலைபேசிகள், 55 ATM கார்டுகள்,  27 காசோலைகள் - இவைகளைப் பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அளவுக்கு அவர்களுக்குத் துணிச்சலைக் கொடுத்தவர்கள் யார்?  மேலிடத்து ஆதரவு இல்லாமல் இப்படியெல்லாம் இவர்கள் இயங்க முடியாது என்பதை நாமும் புரிந்து கொள்கிறோம்! அதுவும் வாகனங்களைப் பறித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள்ள துணிச்சல்  அசாத்தியமானது! இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் அசாத்தியமான மனிதர்கள்!

காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்காக நாம் பாராட்டுகிறோம். ஆனால் இந்த 'வால்கள்' மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை எங்கே கொண்டு போகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Thursday 10 March 2022

வாருங்கள்! மலை ஏறுவோம்!

 

                            "எவரஸ்ட்"  ரவி தனது மலையேறும் குழுவினருடன்!

மலை ஏறுவது அதுவும் உலகில் உயரமான எவரஸ்ட் மலையை ஏறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

மலை ஏறுபவர்களுக்கெல்லாம் அவர்கள் வெற்றி பெற நினைப்பது எவரஸ்ட் மலையை அடைவது தான்.  உலகில் உயரமான மலையை அடைவது என்பது  மலையேறுபவர்களின் கனவு!

ஆனால் நமது ரவிசந்திரன்  தர்மலிங்கம் இரண்டுமுறை எவரஸ்ட் சிகரத்தை அடைந்திருக்கிறார்.  2006 - 2007 - ம் ஆண்டு அந்த சாதனையைப் புரிந்திருக்கிறார். அதனால் தான் அவரை அனைவரும் எவரஸ்ட் ரவி என அழைக்கிறார்கள்.

இந்த எவரஸ்ட் பயணங்களின்  போது அவர் தனது கைகளில் உள்ள எட்டு விரல்களை இழந்திருக்கிறார். ஆனால் அந்த இழப்பு என்பது அவரது மலையேறும் ஆர்வத்தைக் குறைத்துவிடவில்லை! அவருக்கு அது ஊக்குவிப்பாகவே அமைந்தது! அது தான் மலையேறுபவர்களின் தன்னம்பிக்கை!

வருகிற  மார்ச் 24-ம்  தேதி மீண்டும் எவரஸ்ட் பயணத்தை மேற்கொள்கிறார்  எவரஸ்ட் ரவி. இந்தப் பயணம் இரண்டு மாதங்கள் நீடிக்கும்.   இம்முறை அவரோடு ஐந்து பேர் மலையேறுகின்றனர். இதில் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த இரு பெண்களும் கலந்து கொள்கின்றனர். எவரஸ்ட் சிகரத்தை எத்தனையோ பெண்கள் ஏறி இறங்கியிருக்கின்றனர். இந்த இரு மலேசியப்  பெண்களும்  சிகரத்தை அடைய நமது வாழ்த்துகள்!

இன்னொரு விசேஷமும் உண்டு. இந்த முறை  இளங்கோவன் ராஜமுத்து என்கிற 63 வயதான மலையேறியும் கலந்து கொள்கின்றார். இந்தக் குழுவில் இவரே அதிக வயதான மனிதர். அப்படி இவர் சிகரத்தை ஏறி வெற்றி பெற்றால் மலேசியாவின் மிக அதிக வயதான மனிதர் என்கிற சாதனைக்குரிய மனிதராகத் திகழ்வார்! அவர் அந்த சாதனையைப் புரிய வேண்டும் என நாம் வாழ்த்துவோம்!

எவரஸ்ட் ரவியும்  இளங்கோவனும்  வருகின்ற காலங்களில்  நல்ல நோக்கங்களைக்  கொண்டுள்ளனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலையேறுதலில் ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க பல திட்டங்களை வைத்துள்ளனர். வருங்காலங்களில் நமது சந்ததியினர் தொடர்ந்து சாதனைகள் புரிய வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அதே ஆசைகள் உண்டு.

இளைய தலைமுறையினர் மலையேறுதலில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா!  வாருங்கள் இளைஞர்களே! நாமும் மலையேறுவோம்!

வங்காள தேசிகள் தேவைதானா?

 


நமது நாட்டில் மீண்டு வங்களாதேசிகளின் 'படையெடுப்பு' நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை முதாலாளிகளே நேரடியாக வங்களாதேசிகளைத் தருவிப்பார்கள்   என்று அரசாங்க கூறினாலும் முதலாளிகளே முகவர்களைத்  தான் நாடுவார்கள் என்பது ஒன்றும் இரகசியமில்லை!

ஆனாலும் ஒரு சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே நமது நாட்டில் நாட்டிற்குள் திருட்டுத்தனமாக புகுந்தவர்கள் என்று சொல்லி  பலரைச்  சிறைப்படுத்தி  சோறு போட்டு வளர்க்கிறோம்.

இன்னும் பலர் அகதிகள் என்று சொல்லி அவர்களும் நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களைப் பிச்சை எடுக்கவும் அனுமதி கொடுத்திருக்கிறோம்!

இதில் ஒரு பகுதியினர் தான் மியான்மார் நாட்டு அகதிகள்.      அவர்கள் அகதிகள் என்றாலும்  அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுக்கலாம். சமீபத்தில் கூட ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. இரண்டு மியான்மார் சிறுவர்கள் குப்பைகளிலிருந்து எடுத்து சாப்பிட்ட பின் வாந்தியெடுத்து இறந்து போனதாக செய்திகள் வெளியாயின.

இந்த மியான்மார் அகதிகள் இஸ்லாமிய மதத்தினர். நமது நாடு இஸ்லாமிய நாடு என்று மார்தட்டுவதில் யாருக்கும் பெருமை இல்லை. ஏன் இந்த அகதிகளுக்கு நாம் உதவுவதில் மட்டும் தயக்கம்  காட்டுகிறோம்? இங்குள்ள இஸ்லாமியர்களை விட  அவர்கள் கீழ்த்தரமானவர்களா? ஏதோ ஒன்று இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே சீனப்பெருஞ்சுவரை  எழுப்புகிறது!

இந்த அகதிகளுக்கு இங்கு தங்கும் இடம் கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கொடுத்து அவர்களைக் கௌரவமாக வாழவைப்பது நமது கடமையாகவே நான் நினைக்கிறேன். அவர்களும் பல இடங்களிலும் வேலை செய்து வருகின்றனர். அதனை அவர்கள் அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டும். அவர்களும் இந்நாட்டில் வாழ வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.

யாரோ ஒரு சில அரசியல்வாதிகள் பயன்பெறுகிறார்கள் என்பதற்காக வங்களாதேசிகளையே கட்டிக்கொண்டு அழுவது  நமது நாட்டிற்கு அவப்பெயரைத் தான் கொண்டு வரும்! 

நமது நாட்டிற்குத் தேவை வங்காளதேசிகள் அல்ல! இங்கு ஏற்கனவே அகதிகள் என்கிற பெயரில் பல நாட்டு மக்கள்  இருக்கின்றனர். அவர்களையும் வாழவைப்பது நமது கடமை.

Wednesday 9 March 2022

இவர்களை விசாரிக்க ஏன் தாமதம்?

 


வழக்கம் போல ஒரு சில விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை!

யாரையோ காப்பாற்றுவதற்குத் தாமதம் செய்யப்படுகிறதோ என்று நமக்குத் தோன்றுகிறது.

தனித்து வாழும் தாய் லோ, அவரது மூன்று குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளும் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்தக் குழந்தைகளை மதமாற்றம் செய்தவர்கள்  சட்டம்  அறியாதவர்கள் என்று சொல்லவிட  முடியாது. சட்டம் அறியாதவர்கள் என்றால் அவர்களுக்கு மதமாற்றம் செய்ய உரிமை இல்லை!

சட்டம் அறியாதவர்களால் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. சட்டத்தை அறிந்தவர்களே பிரச்சனையை ஏற்படுத்தி, குழப்பங்களை ஏற்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்!

சட்டம் அறிந்தவர்கள் தான் இப்போது அந்தத் தாய்க்கு  நிம்மதி இல்லாமல் செய்கின்றனர். 

கஞ்சா அடிக்கும் கணவனுக்குக் கொடுக்கும் மரியாதையை ஒரு  தனித்து வாழும் தாய்க்கு அவர்கள் கொடுக்க மறுக்கிறார்களே  என்னும் போது இவர்களுக்கு ஒரு தாய் அனுபவிக்கும் துயரம் என்ன என்பது ஏன்  தெரியவில்லை என்பது  தான் நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!

சமயம் என்று பேசும் போதே ஒரு தாயின் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்திருக்க வேண்டும். சமயப் போதகர்கள் தாயைப்பற்றி அறியாதவர்களா?  "தாயின் காலடியில் சொர்க்கம்" என்பதை  அறியாதவர்களா நாம்? நாமே அறிந்திருக்கும் போது  சமய அறிஞர்கள் அறியாதவர்களாகவா  இருக்க முடியுமா?  

ஒரு தாயை இப்படியெல்லாம்  அலைக்கழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை  என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.  தாய் ஒரு மதத்தைச் சார்ந்தவர். அவருடைய அத்துணைக் குழந்தைகளும் வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் என்றால் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்? தாய் எந்த தவற்றையும் செய்யவில்லை. செய்தவர்கள் யார்? அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்று கேட்க நமக்கும் உரிமை இருக்கிறது அல்லவா?

சமய அறிஞர்களும்  "இது சரிதானா?" என்கிற கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். நாளை இந்த அவலநிலை உங்களுக்கும்   ஏற்படலாம்  என்பதையும் மறந்துவிடக் கூடாது. வெளி நாடுகளில் உங்கள் பிள்ளைகள் யாரைக் கும்பிடுகிறார்களோ! இப்போது இங்கே உங்கள் அராஜகம்  அதிகமாகிக் கொண்டே போகிறது என்பது உங்களுக்கே தெரியும்! 

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்!  தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி! மறுக்கப்பட நியாயமில்லை என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்!

Tuesday 8 March 2022

தொற்று தொடரும்!

 

                                தொற்று தொடரும்!  வாழப்பழகிக் கொள்ளுங்கள்!   

பிரதமர் கொடுத்த சுருக்கமான செய்தி இது தான். தொற்று தொடரும்! அதோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்! 

இனி வேறு வழியில்லை.  மூடப்பட்ட அனைத்தும் திறந்து விடப்படுகின்றன. வெளி உலகத்தைப் பார்க்கலாம். வெளி நாடுகளைப் பார்க்கலாம். வெளி மாநிலங்களைப் பார்க்கலாம். சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகப் பார்க்காதவற்றை இப்போது பார்க்கலாம்.

வீட்டில் அடைந்து கிடந்த நாள்கள் போதும் போதும் என்றாகிவிட்டது! பலரை அது பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டது. வீடுகளில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டன! வீடுகளில் அடைந்து கிடப்பதை யாரும் விரும்பவதில்லை! ஏன் பள்ளிப்பிள்ளைகள் கூட வீடுகளில் அடைந்து கிடப்பதைக் கவலையோடு தான் பார்க்கிறார்கள்! ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்கும் இதனால் 'டென்ஷன்' ஏற்படுகிறது!

ஆமாம் இதற்கெல்லாம் ஒரு  முடிவு கட்டுவதுதான் பிரதமரின் அறிவிப்பு. வரும் ஏப்ரல் 1-ம் தேதி  (ஒன்றாம் தேதி)  அனத்துக் கட்டுப்பாடுகளும்  நீக்கப்படுகின்றன. ஒன்றே ஒன்றை தவிர! அது என்ன? உங்கள் முகக்கவசத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள். முகக்கவசத்தை வழக்கம் போல் அணிந்து கொள்ளுங்கள். அது ஓரளவு உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும்.

இந்த நேரத்தில் ஓர் எச்சரிக்கையும் நாம் கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டு விட்டதாக  செய்தி வந்தாலும்  நாம் நிதானமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும். " காஞ்சமாடு  கம்பு தோட்டத்தில புகந்த" கதையாகி விடக்கூடாது! 

நாம் நிதானமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். நமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தேவை என்றால் மட்டும் பயணங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.  கூட்டம் கூடும் இடங்களுக்குப் போவதை குறைத்துக் கொண்டு கூட்டம் குறைந்த பின்னர் போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.  

சினிமாப் படங்களை முதல் நாளே பார்க்க வேண்டும் என்கிற ஆசைகளைத் தள்ளிப் போடலாம்! ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் கூட பார்க்கலாம். அதைவிட தொலைகாட்சிகளில் பார்க்கக் கூடிய வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. செலவும் மிச்சம். வீட்டிலிருந்தே பார்க்கலாம்.

இதையெல்லாம் அரசாங்கம் சொல்லித்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  எல்லாம் நமது பாதுகாப்புக்காக, நமது நலனுக்காக, நமது சுற்றுபுறத்தின் சுமைகளைக் குறைப்பதற்காக, மக்களிடையே நோய் பரவாமல் இருப்பதற்காக - நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள்.

ஒன்றைப் புரிந்து கொள்வது அவசியம். நமது நாட்டில் பெரும்பாலானோர் கோரோனாவிலிருந்து விடுபட தடுப்பூசி போட்டிருக்கின்றனர். நம்மிடையே போடாதவர்களும் உண்டு. போலி சான்றிதழ்களை வைத்திருப்போரும் உண்டு. இப்படி போடாத நபர்களிடமிருந்து நமக்குப் பாதிப்பு ஏற்படலாம்! இது சாத்தியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான்  நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் அனைத்தையும் நீக்கினாலும்  தொற்று என்னவோ முழுமையாக நீக்கப்படவில்லை. இன்று அரசாங்க செய்வதெல்லாம் இத்தனை கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது  அதனால் நாம் இந்தக் கெடுபிடிகளைத் தளர்த்துவோம் என்கிற ரீதியில் தான் இந்த நோயை அணுகுகிறார்கள்!

நமது கடமை என்ன?  நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்வோம்!
     

Monday 7 March 2022

இது சரியான கேள்வி?

 

                                        சிங்கப்பூரால் முடியும்! நம்மால் முடியாதா?

ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் இம்முறை வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என நம்பலாம்.

வருகிற சனிக்கிழமை 12-3.2012 அன்று சட்டமன்றத்  தேர்தல். இளைஞர் பலர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.  அதுவே ஒரு மாற்றம்!

இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எழாத பல கேள்விகள் இந்தத் தேர்தலில் எழுப்பப்பட்டிருக்கின்றன!

ஜொகூர் - சிங்கப்பூர் இரண்டும் அண்டை நாடுகள்.  ஒன்று மாநிலம் இன்னொன்று தனி நாடு.   உண்மையைச் சொன்னால் சிங்கப்பூர் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் பயனாய் ஜொகூர் மாநிலம் அதற்கு ஈடான வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை!

அதற்கான காரணங்கள் என்ன? நாம் மிகவும் பிந்தங்கி இருக்கிறோம். ஏன் பணத்தையே எடுத்துக் கொண்டால்  சிங்கப்பூருடைய ஒரு வெள்ளியை நாம் மூன்று வெள்ளி கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது! அந்த அளவு பின்னடைவு!

நமது இளைஞர்களுக்குப்  போதுமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கவில்லை. சிங்கப்பூர் மட்டும் இல்லாவிட்டால் ஜொகூர் மலேசியாவில் மிகவும் பிந்தங்கிய மாநிலமாக மாறியிருக்கும்! அந்த அளவுக்கு ஜொகூர் மக்களைச் சிங்கப்பூர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!

இலஞ்ச ஊழல் என்றாலே சிங்கப்பூரை நம்மால் தொட முடியாத இடத்தில் இருக்கிறோம்!  உலகளவில் பார்க்கும் போது கூட மிகவும் இலஞ்ச ஊழல் குறைந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. நமது நாட்டில் இலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது!  இலஞ்சம் இல்லாமல் காரியங்கள் நடக்காது! இலஞ்சத்திற்கு வழிகாட்டிகள் நமது அரசியல்வாதிகள்!

எப்படிப்  பார்த்தாலும்  சிங்கப்பூரின் பொருளாதார  வளர்ச்சி  என்பது தான் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். எந்தவிதமான இயற்கை வளங்கள் இல்லாத ஒரு நாடு சிங்கப்பூர்.  எல்லாவித வளங்களையும் கொண்ட ஒரு மாநிலம் நமது  ஜொகூர்.  ஆனால் நடப்பது என்ன? நாம் தான் அவர்களிட,இருந்து பாடம் கற்க வேண்டியிருக்கிறது!

இது நாள்வரை ஜொகூர் மாநிலத்தை வழிநடத்தியவர்கள்  தூர நோக்குப் பார்வையற்றவர்கள்.  மாநில முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டவர்கள்! மக்களைப்பற்றி சிந்திக்காதவர்கள்.  பொதுவாக ஏதோ அரைகுறை அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு மாநிலத்தை அவர்கள் கையில் ஒப்படைத்திருந்தோம்!

ஜொகூர் மக்களே! இது தான் தக்க தருணம். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லையென்றால் அப்புறம் உங்கள் பாடு அவர்கள் பாடு! இது நாள்வரை நாம் பார்த்தவர்கள் எல்லாம்  ஏமாற்றுப் பேர்வழிகள்! 

நல்லது நடக்க வேண்டுமென்றால் அது உங்கள் கையில் தான