Thursday 29 February 2024

காரணங்கள் வேண்டாம்!

ஒரு காலகட்டத்தில் KLIA  விமான நிலையம் நாட்டிற்குப் பெருமை தரும் விமான நிலையமாக விளங்கியது.

இப்போதோ அதன் தரம் தாழ்ந்து பிற நாட்டவர் மலேசியரைத்  தாழ்ந்த பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.  அந்த நிலையத்தில் என்ன தான் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்ய அத்துணை வசதிகள் இருந்தும்  அதனை ஏன் செய்ய்வில்லை என்பது தான் கேள்வி.

நம்முடைய குறைபாடுகள் எல்லாம் யாராவது  கொண்டு வந்து சொல்ல வேண்டும்  என்கிற மனநிலையில் நாம் இருக்கிறோம்.   சொல்லவிட்டால்....?  "குறையேதும் இல்லை கண்ணா" என்று கண்களைப் பொத்திக் கொள்கிறோம்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்ல வேண்டும்?  அது என்ன மக்கள் பணத்தில் ஜாலி  செய்வதற்கா?  பிற நாடுகளில் உள்ள சிறந்தவைகளை நம் நாட்டிகுக் கொண்டு வரவேண்டும்.  அதன் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்:  மக்கள் பயன் பெற வேண்டும்.

பிரச்சனை என்னவென்றால்  அதிகாரிகள் தங்களது  பணத் தேவைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே  தவிர தங்களது கடமை என்னவென்பதையே  மறந்துவிடுகிறார்கள்!  என்ன செய்வது? யாருக்கு என்ன வரும் என்பது தெரியாமல்  எதுவாக இருந்தாலும் பதவிகளைத் தூக்கிக்கொடுத்தால் இப்படித்தான் நாட்டிற்கு அவப்பெயர் வருவதைத் தடுக்க முடியாது.

இதில் என்ன  அதிசயம் என்றால்  பயணிகளுக்கு மிகச் சிறப்பான பயண அனுபவத்தைக் கொடுக்கும் விமான நிலையம் என்றால் அது வியட்னாமின் "நோய் பாய் இண்டர்நேசனல் ஏர்போர்ட் என்று பயணிகளால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது!  வியட்னாம் நாட்டைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? வேலை தேடி மலேசியா வந்தவர்கள், அவர்கள் வசிக்கும் இடங்களில் பக்கத்து வீட்டு நாய்கள் காணாமல் போய்விடும் என்பது தான் நமக்குத் தெரியும்! அவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதும்  நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அவர்களது நாட்டின் விமான நிலையம்  இன்று நம்பர் ஒன் என்கிற பாராட்டைப் பெறுகின்றது என்றால் அவர்கள் உழைப்பாளிகள். ஏன் நமக்கு உழைக்கத் தெரியாதோ?  அப்படித்தானே புள்ளிவிபரங்கள் கூறுகின்றன!

நாம் ஒரு சோம்பேறி கூட்டம் என்பதைத்தான் இந்த செய்தி கூறுகிறது. ஒரு வேளை இவர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்களோ!  காரணங்கள் சொல்ல வேண்டாம். இவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு இளைஞர் கூட்டத்தை வேலைக்கு அமர்த்துங்கள்.

ஒட்டுமொத்த மலேசியர்களைச் சோம்பேறிகள் என்று சொல்லும் செய்தி!

Wednesday 28 February 2024

அட பாவிகளா!

 

குழந்தைகள் துன்புறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை மறுப்பதற்கில்லை.  தண்டனைகள் கடுமையாக இல்லை  என்பதைத் தவிர  வேறு காரணங்கள் என்னவாக இருக்கும்?

கார்களில் குழந்தை மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  குழந்தைகளைக் கார்களில் தூங்க வைத்துவிட்டு,   காரை பூட்டிவிட்டுப் போவது,   திரும்பிவந்து  பார்த்தால்  உயிரற்ற உடல்.  இது போன்ற சம்பவங்கள்  தொடர்ந்தாற் போல நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டது கூட இல்லை.

பெற்றோர்கள் முன்பெல்லாம் குழந்தைகளைக் காரில் விட்டுவிட்டுப் போவதில்லை.  அப்படி ஒரு பழக்கத்தை அவர்கள்   ஏற்படுத்திக் கொண்டதில்லை. இப்போது பெற்றோர்கள் சாதாரணமாக இதனைச் செய்கின்றனர்.  என்ன புரிதலோடு இதனைச் செய்கின்றனர்  என்பதை நம்மாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

கார்களில் நிறைய குழந்தை மரண சம்பவங்கள் நடைபெறுகின்றன.  கைக்குழந்தைகள்,  வளர்ந்த குழந்தைகள் இப்படி எத்தனையோ குழந்தைகள். உள்ளே பூட்டிக் கொண்டு திறக்க முடிவதில்லை. இது போன்ற துர்சம்பவங்கள் அடிக்கடி நடப்பது  பெற்றோர்களின்  அக்கறைமின்மையைத் தான் காட்டுகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் குழந்தைகளைத் தூங்க வைக்க குடிக்கும் பாலில் போதை மருந்துகள் அல்லது மதுபானங்களைக் கலப்பது.  இது புதிதல்ல என்றாலும்   குழந்தைகள் இப்படிப் பலவாறு  சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

சமீபகாலங்களில் இது போன்ற, இன்னும் அதைவிட,  சித்திரவதைகள்  நடந்து கொண்டிருக்கின்றன.  அப்பன் போதைக்கு அடிமையாக இருந்தால்  அவனது குழந்தைகள் படாதபாடு படுகின்றனர். சொல்லொன்னாத்   துயரங்களை அனுபவிக்கின்றனர்.  பல சம்பவங்கள் சம்பவிக்கின்றன.

இதையெல்லாம் பார்க்கும் போது என்னவென்று சொல்லுவது?  போதைப்பொருள், மது போன்றவைகளுக்கு அடிமையானவர்களைத் திருத்த வழியே இல்லையா?  தண்டனைகள் இவர்களைக் காப்பாற்றுமா?

கடவுள் தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

Tuesday 27 February 2024

உழைப்பா? அது என்னா?

இப்போதெல்லாம்  உழைப்பு என்றாலே ஏதோ கேலி பொருளாகிவிட்டது!  இதற்கெல்லாம் காரணம் பெருமைமிக்க அசியல்வாதிகள்! 

உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் போய்  ஏமாற்றிச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டாக்கியதில்  அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

ஏன் கஷ்டப்பட வேண்டும்?  பணம் வேண்டும் ஆனால் கஷ்டப்படக் கூடாது என்பது தான் இன்றைய மனநிலை.  கஷ்டப்படக் கூடாது என்று எப்போது நினைக்க ஆரம்பித்தோமோ அன்றையிலிருந்தே வெளி நாட்டவர்கள் நாம் செய்யும் வேலைகளுக்கு ஆபத்தை விளைவித்துவிட்டார்கள்!

இப்போது நமது வேலைகளை வெளிநாட்டவனுக்குக் கொடுத்துவிட்டு நாம் அலைமோதிக் கொண்டிருக்கிறோம்.  

உழைப்பைத் தவிர வேறு எதுவும் நமக்கு உயர்வைத் தராது என்பதை ஏன் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை?   உழைப்பால் முன்னேறியவனை நாம் முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.  அரசியல்வாதிகளைக்  முன்னுதாரணமாகக் கொண்டால் நாமும் நமது குடும்பமும் நடுத்தெருவுக்குத் தான் வரும்.   அவர்களுக்கு எந்தக் காலத்திலும் நிம்மதி என்பதே இல்லை.

முன்னாள் பிரதமர்களைக் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்!  அந்தப்பக்கம் பெரிய பெரிய அதிகாரிகளைத் திரும்பிப் பாருங்கள்!  தங்களுக்கு என்ன ஆகுமோ  என்று  சரியாகத் தூங்கக்கூட  முடியாமல்  தத்தளித்துக் கொண்டிருக்கும்  மனிதர்களைப் பாருங்கள்!  ஏன் நமது இனத்  தலைவர்கள் மட்டும்  தப்பிவிடுவார்களா என்ன?  மற்றவர்களின் உழைப்பில தங்களை உயர்த்திக் கொண்ட யாராக இருந்தாலும் அதற்கானத் தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.!   தப்பிக்க வழியில்லை!

உழைப்பின் பெருமையை இப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.  அதனால் தான் நாம்  பின் தங்கியே  இருக்கிறோம்.  நம்முடைய உழைப்புத்தான் நமக்கு உயர்வைத் தரும்.  கொள்ளையடிக்கும் பணம் பிந்நாள்களில்  நமக்குச் சிறுமையைத்தான்  கொண்டுவரும்.

நமது உயர்வு என்பது நாம் உழைத்துச் சம்பாதித்த பணம். அதுவே நம்மை உயர்த்தும் உயர்வைத் தரும்.

Monday 26 February 2024

இவர்கள் இனத்துரோகிகளா?

 

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் வருகின்ற பள்ளி ஆண்டில் கணினி வகுப்பு  நிறுத்தப்படும் என்கிற செய்தி தீயாய் பரவி வருகிறது.

அது மட்டும் அல்ல சிலாங்கூரில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் அத்தோடு மலேசிய ரீதியிலும் தமிழ்ப்பள்ளிகளில்  கணினி கற்பிக்கப்படாது என்கிற செய்தியும் பரவி வருகிறது.

நிச்சயமாக இது ஒரு நம்ப முடியாத செய்தி என்பதில்  ஐயமில்லை.

கல்வி அமைச்சுக்கு அப்படி ஒரு நிதிச்சுமை ஏற்படுகிறதென்றால் அது தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் அல்ல  சீனப் பள்ளிகள் தேசியப்பள்ளிகள் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தான்  கணினி கல்வி நிறுத்தப்படும்  என்கிற நிலை ஏற்படும்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் என்றால்? அது எப்படி?  கல்வி அமைச்சுக்கு அப்படி ஒரு அதிகாரத்தை யார் கொடுத்தார்கள்?  எல்லாப் பள்ளிகளுமே கல்வி அமைச்சின் கீழ் தான் செயல்படுகின்றன.  "இங்கே உண்டு! அங்கே இல்லை!"  என்று  தங்கள் விருப்பத்திற்கு  ஏற்ப கல்வி அமைச்சு செயல்பட முடியுமா?  அப்படி என்றால் அப்புறம் கல்வி அமைச்சர்,துணை அமைச்சர், கல்வி இயக்குனர் - இவர்களெல்லாம் யார்? அறிவு கெட்டவர்களா? 

இந்த செய்தியைப் படிக்கும் போதே நமக்கு ஒன்று தெரிகிறது.  ஏதோ சில முட்டாள்கள் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள்! அவ்வளவு தான்.  ஒரு சிலர் சேர்ந்து எதையும் செய்ய முடியும் என்றால்  தேசியப் பள்ளிகளின் நிலை என்னாவது?  சீனப்பள்ளிகள் நாளுக்கு நாள் தேசியப் பள்ளிகளுக்கு மிரட்டலாக விளங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது. அவர்களை அசைக்க முடியவில்லையே!  தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன் இதுபோன்ற  மிரட்டல்கள்?  பொருளாதார பலம் இல்லென்றால் இதுபோன்ற செய்திகள் எல்லாம் கசிந்து கொண்டு தான் இருக்கும்.

இதன் நோக்கம் தான் என்ன?  கல்வி அமைச்சருக்குக் காவடி எடுக்க வேண்டும்!  பிரதமருக்குப் பால் காவடி எடுக்க வேண்டும்!  அப்புறம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தூது அனுப்ப வேண்டும்! அவரைப் பார்க்க வேண்டும்! இவரைப் பார்க்க வேண்டும்!  இப்படி ஒரு நெருக்கடியைக் கொடுப்பதற்கு என்றே சுற்றிக் கொண்டிருக்கிறது! ஒரு கூட்டம்.

சீனப்பள்ளிகளுக்கு இல்லாத ஒரு நெருக்கடி, தேசிய பள்ளிகளுக்கு இல்லாத ஒரு நெருக்கடி  ஏன் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் அடிக்கடி  ஏற்படுகிறது? இனத்துரோகிகள் நம்மிடையே அதிகம் என்றே தோன்றுகிறது. அவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்கள் உங்களுக்குச் சாபமாக வரும். நான்கு தலைமுறைக்கான சாபத்தை  இப்போது உங்கள் பிள்ளைகளின் தலையில் சுமத்திவிட்டுப் போகிறீர்கள். சமுதாயத்தை ஏமாற்றியவனின் குடும்பம் நிம்மதி இல்லாமல் அலைந்து திரியும்! அதுவும் அவன் படித்தவனாக இருந்தால்...?

Sunday 25 February 2024

கண் திறந்தது!


 உள்நாட்டு வர்த்தகர்களின் உரிமம் முடக்கம்! நல்ல செய்தி தான். தொழில் செய்ய வேண்டுமென்றால்  தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும்.

ஆனால் ஒரு சிலர் அலுங்காமல், குலுங்காமல். நோகாமல், நொறுங்காமல்  தொழில் செய்ய விரும்புகின்றனர்! அதாவது அவர்கள் எதுவுமே செய்யமாட்டார்கள் ஆனால் மாதம் முடிந்தால்  பணம் கைக்கு வந்து விட வேண்டும். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்  கொடுத்த மிக வலுவான தொழில்  ரகசியம் அது!  அதனைப் பின் தொடர்ந்தவர்கள்  பலர்  தொழிலே செய்யத் தெரியாமல்  சோர்வடைந்து போனார்கள்!

உழைப்பே இல்லாமல்  ஒரு பருப்பும் வேகாது!  ஆனால் என்ன செய்வது? அப்படித்தான்  ஒரு சாரார் தங்களை உயர்த்திக் கொண்டார்கள்! அதற்குத்தான் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறது!  முழுமை அடையவில்லை என்றாலும் ஆரம்பமே ஆரவாரமாய் இருக்கிறது!

வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் பல கோடிகளைச் செலவு செய்கிறது. கருத்தரங்குகள், செமினர்கள்,  பயிற்சிகள், கடன்வசதிகள் என்று ஏகப்பட்ட உருட்டல்கள்!  ஆனாலும் பலன் என்னவோ சிறிய அளவில் தான். ஏதோ அதாவது கிடைக்கிறதே என்று மனநிறைவு அடைய வேண்டியது தான்.   ஆர்வம் இல்லாத ஒருவனை என்ன உருட்டல் உருட்டினாலும் சுருட்டிக் கொண்டுதான் இருப்பான்!

அதற்குப் பதிலாக  ஆரவமுள்ளவனுக்கு ஆதரவளித்தால்  அவன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கதிகமாக இருக்கும். இந்த உண்மையை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள்  தெரிந்து கொண்டால் போதும்.

நமது வருத்தமெல்லாம் தங்களது உரிமத்தை உள்நாட்டவருக்குக் கொடுத்தால் கூட பரவாயில்லை ஆனால் வெளிநாட்டவருக்குக் கொடுக்கிறார்களே அவர்கள் மன்னிக்கத் தகாதவர்கள். இன்று பெரிய அளவில் வெளிநாட்டவரின்  வியாபாரத்திற்குக் காரணம்  இது போன்ற சில்லறைகள் தான்.  

அதற்கான சரியான நேரம் வரும், நடவடிக்கை எடுக்கப்படும்  என்றெல்லாம் காத்துக்கிடக்கும் நேரத்தில்  ஏதோ இப்போதாவது ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததே அது வரைக்கும் மகிழ்ச்சி!   ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே அதற்கு என்ன செய்வது?  இன்று கணினித்துறையெல்லாம் அவர்கள் கையில் தானே! எந்த அளவுக்கு நாம் இளிச்சவாயர்கள் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்!

இன்றையநிலையில் 'பரவாயில்லையே!' என்கிற சொல்லுகிற அளவுக்குதான் நடவடிக்கைகள்  ஆரம்பமாகியிருக்கின்றன! போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.  போக முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Saturday 24 February 2024

இது என்ன புதுசா?

 

எத்தனையோ ஆண்டுகளாக வெளி நாட்டுத் தொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு கும்பல்  இனிமேல் தான் வெளிச்சத்திற்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் மேல் இடத்து விஷயம் என்பதால்  யாராலும்  அவர்களை அசைக்க முடியவில்லை.  இப்போதும் கூட அசைக்க முடியுமா என்பதும்  இன்னும் தெளிவில்லை.   ஒர் அனுமானம் தானே தவிர நம்மாலும் எதையும் கணிக்க முடியாது.

அரசாங்கம் இத்தனை ஆண்டுகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அவர்களை வரவைப்பதும், தெருவில் நிறுத்துவதும், அவர்கள் ஓடுவதும் ஒளிவதும் அனைத்தும்  இவர்களுக்குத் தமாஷாகப் போய்விட்டன. . அவர்கள் அவர்களது நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கில் செலவு  செய்து கொண்டு இந்நாட்டுக்கு வருகின்றனர். கடைசியில் பலர் பிச்சை எடுக்கும்  நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.   ஏமாற்றப்பட்டோமே என்று தற்கொலை செய்து கொண்டவர்களும்  உண்டு. கேட்க நாதியில்லை என்கிற நிலைமை.

இங்குள்ளவர்கள் பணத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டு உயர்ந்தரகக் காரில் ஊர்வலம் வருகின்றனர்.  எப்படியோ இருந்த நாடு, செல்வம் கொழித்த ஒரு நாடு எப்போது டாக்டர் மகாதிர் பிரதமராக வந்தாரோ அப்போதிருந்தே  நாட்டை ஏழரை பிடித்து ஆட்டுகிறது!  இன்னும் அதன் பிடியிலிருந்து நாடு விடுதலை அடைய  முடியவில்லை.

இதுவரை என்ன நடந்தது என்பது பற்றிப் பேசுவதில் பயனில்லை. ஏதோ இப்போதாவது  நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்களே அதுவரை மகிழ்ச்சி தான்.  வங்காளதேசிகளும்  நாங்கள் ஏமாந்து கொண்டே இருக்க முடியாது என்பதை செயலில் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.  ஆமாம், ஆர்ப்பாட்டம் அது இது  என்று நடந்தால் தான் அரசாங்கம் திரும்பிப்பார்க்கும்  என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். 

பணவெறி கொண்ட அதிகாரிகளால் நாட்டின் பெயரே  கெட்டுப் போய்விட்டது! அது பற்றிக் கவலைபடுவோர் யாருமில்லை.  எல்லாத் துறைகளிலும்  இலஞ்சம், ஊழல் பெருகிவிட்டது.  அதன் பலனை  இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.  கேள்விகள் கேட்டால் அது எங்கள்  உரிமை என்று  சொல்லுகின்ற அளவுக்கு நிலைமை  முற்றிப்போய்விட்டது!

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பிரச்சனை நமக்குப் புதிது அல்ல என்று சொன்னாலும்  நடவடிக்கை எடுக்கப்படுகிறதே அது புதிது  என்று மனநிறைவு கொள்வோம்!

Friday 23 February 2024

டாக்டரா அல்லது முனைவரா?

 

                                                                          டாக்டர் மு.வ.
டாக்டர் மு.வ. என்றால் அறியாத தமிழர் இல்லை. தமிழ் இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமை அவர். 

மருத்துவம் பார்க்கும் டாக்டரை விட மு.வ. அவர்கள் தான் புகழின் உச்சியில் இருந்தவர்.  அது ஒரு காலம்.  மருத்துவம் பார்க்கும் டாக்டரை நாம் பார்த்திருப்போம்.  அவர் நமக்கு சிகிச்சை அளித்தவர் என்பது தெரியும். அதற்கு மேல் தெரிய நியாயமில்லை.

டாக்டர் மு.வ. அவர்களின் காலத்தில் முனைவர் என்கிற வார்த்தை பயன்பாட்டில் இல்லை. அதனால் டாக்டர் என்னும் வார்த்தையே அவரோடு கெட்டியாய் ஒட்டிக் கொண்டது.

ஆனால் இன்றைய நிலைமை வேறு.  அந்த இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கின்றன. ஒன்று மருத்துவர் இன்னொன்று  மருத்துவம் அல்லாத பிற துறைகளில் பி.எச்.டி. பட்டம்பெற்றவராக இருக்கலாம்.  அதற்கு டாக்டர் மு.வ. ஓர் எடுத்துக்காட்டு.

இங்கு நாம் தரத்தில் எது உயர்ந்தது  எது தாழ்ந்தது என்று பேச வரவில்லை. இரண்டுமே கடுமையான கல்விகள் தாம்.  இருவருமே டாக்டர் என்கிற வார்த்தையைப்  பயன்படுத்தினால்  குழப்பங்கள் ஏற்படுவது சகஜம் தான். அதனால் தான்  முனைவர் என்கிற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த செய்தி இது. மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  டாக்டர் மாரிமுத்து  அவர்களைப்பற்றி ஒரு நிருபர் எழுதியது:  டாக்டர் மாரிமுத்து அவர்கள்  பேராசிரியராகவும் இருக்கிறார்.  மருத்துவ  டாக்டராகவும்  இருக்கிறார்! என்று குறிப்பிட்டிருந்தார்.  

இப்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.  டாக்டர் என்றால் மருத்துவர். முனைவர் என்றால் ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர்,  டாக்டர் என்று  பயன்படுத்தினால், குழப்பங்கள் வரத்தான் செய்யும்.  சமீபகாலங்களில்  நான் ஏமாந்து போயிருக்கிறேன்.

முனைவர்கள் யாரும் இப்போது டாக்டர் என்கிற சொல்லை  பயன்படுத்துவதில்லை.  பொது மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்ள முனைவர்கள், டாக்டர்  என்கிற சொல்லை தவிர்க்க வேண்டும். வலிந்து  டாக்டர் என்னும் போது  குழப்பத்தை ஏற்படுத்தும்.

முனைவர், முனைவர் தான். எத்தனை, எவ்வளவு  ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்  முனைவர் பட்டம் பெறுகின்றனர். அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். டாக்டர் டாக்டராக இருக்கட்டும். முனைவர் முனைவராக இருக்கட்டும்.  அதுவே சரி!

Thursday 22 February 2024

குப்பைகளை எங்கும் கொட்டலாம்!


குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் கொட்டலாம் என்பது நமது நாட்டு சட்டமாக இருக்க வேண்டும்!  

அதனால் தான் எந்தவொரு சட்டத்தையும் நாம்  மதிப்பதில்லை. இப்போது ஒவ்வொரு வீடுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதனைப் பயன்படுத்தும் பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. வாழ்த்தலாம்!

ஒருவகையில் அவர்களை மன்னித்துவிடலாம்.  ஆனால் மன்னிக்க முடியாதவர்கள்   என்று ஒரு குழுவினர் இருக்கின்றனர்.  அவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் என்று  நாம் சொன்னாலும் அரசாங்க ஊழியர்கள் அவர்களை மன்னித்து விடுவார்கள். தேவை எல்லாம் சில ஆயிரங்கள் கைமாறினால் போதும்!

தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற கழிவுகளை ஆற்றில் கொண்டு போய் ஊற்றுகிறர்களே  இவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரிகிறது. தொழிற்சாலைகளுக்குத் தெரியாதா? அரசாங்க ஊழியர்களுக்குத் தெரியாதா?  அந்த ஆறுகளை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள்  என்பது யாருக்குமே தெரியாதா?  எல்லாருக்கும் தெரியும்.  ஆனால் அவ்வளவும் அலட்சியம்.   யரோ பயன்படுத்துகிறார்கள் நமக்கு என்ன என்கிற அலட்சியம்.

தொழிற்சாலைகளுக்குச் செலவு குறைகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு இலஞ்சம் கிடைக்கிறது. எவனோ சாகிறான்! நமக்கென்ன?  என்பது ஆபத்தான மனநிலை.

என்னமோ இத்தனை ஆண்டுகள் நமது அரசாங்க ஊழியர்களின்  நிலை அப்படித்தான்.  இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம்  தெரிகிறது.  பிரதமர் அன்வார் வருகைக்குப் பின்னர்  தான் நடவடிக்கைகள் ஆரம்பமாகிருக்கின்றன. இலஞ்சம் எல்லாத் துறைகளிலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.  இப்போது  தான் ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன!  நமக்கு அதிலே மகிழ்ச்சி தான்.

நாடு சுத்தமான நாடாக இருக்க வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் சிங்கப்பூரையே உதாரணம் காட்டிக் கொண்டிருப்பது?   ஏன் நம்மால் முடியவில்லை? பள்ளிகளில் பக்திக்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம். பக்தியாக மாணவர்களை  வளர்க்கிறோம்.  பக்திக்கும் சுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லையோ!  இங்கு பக்தியாக  வளர்க்கப்படும் மாணவர்கள் தான் நாளை அதிகாரிகளாக பதவிகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இலஞ்சம்  வாங்குகிறார்கள் என்றால் பக்தியோடு இலஞ்சமும் கற்றுக் கொடுக்கப்படுகிறதோ!

இப்போது நாடு மாறி வருகிறது என்பதிலே நமக்கு மகிழ்ச்சியே.  மக்கள் மனதிலும் மாற்றங்கள்  ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் நாடு சுத்தமான நாடு,   மக்கள் பொறுப்பான மக்கள் - இது போதும் நாம் பெருமை கொள்ளலாம்! 

Wednesday 21 February 2024

கவலை வேண்டாம்!

மித்ராவின் பெயரைச் சொல்லி அடித்துக் கொள்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும்.  நாம் கவலைப்பட ஒன்றுமில்லை! அடித்துக் கொள்வதும் கடித்துக் கொள்வதும் அவர்களுக்குச் சாதாரணம்.  எலும்புத் துண்டுகளுக்கு அடித்துக் கொள்பவர்களுக்காக நாம் ஏன் பாவ புண்ணியம் பார்க்க வேண்டும்?  எப்படியும் அவர்களுக்கு ஏற்கனவே கடித்துத் துப்பிய எலும்புகள்  கிடைகத்தான் செய்யும்!

நம்முடைய தேவை எல்லாம் மித்ரா செயல்பட வேண்டும். மாண்புமிகு பிரபாகரன் தனது பணியைத் தொடங்கி விட்டாரா என்பது தெரியவில்லை.  இப்போதைக்கு  அவர் பெயர் தான் முன்னணியில் இருக்கிறது.  பிரதமரின் நியமனம் என்பதால் வேறு யாரும் போட்டிக்கு  இல்லை.

வெளியே என்ன நடந்தாலும் அதனைப் பற்றியெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை அவர் செய்ய வேண்டும் என்பது தான் இந்த  சமுதாயத்தின்   ஆசை.  எங்களின் குரலுக்குத் தான்  அவர் செவிசாய்க்க வேண்டும்.

இதற்கிடையே ஒரு சில கருத்துகளைக் கூறுவதும் நமது கடமை.  மாமிகு பிரபாகரனுக்கு முதல் எதிரி என்றால் அது ம.இ.கா.வினர் தான். சமீபத்தில் அல்லது இன்னும் இழுபறியாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் அந்த கோயில் பிரச்சனையை மறந்துவிட வேண்டாம். தாங்கள் செய்ய வேண்டிய ஒரு பிரச்சனையை  இழுத்தடித்து கடைசியில் கோயில் இடிபட்டதற்கு பிரபாகரன் தான் காரணம்  என்கிற சூழலை ஏற்படுத்திவிட்டார்கள்!

ம.இ.கா.வினர் தங்களது குழி பறிக்கும் வேலையைத் தொடரத்தான் செய்வார்கள்!  பிரபாகரன் நல்ல பெயரோடு இருப்பதை ம.இ.கா.வினர் விரும்பமாட்டார்கள்.  பெயரைக் கெடுக்க வேண்டும் அல்லது அவர் செயல்படாமல் இருக்க வேண்டும் - அது தான் அவர்களின் மாபெரும் இலட்சியம்!  அதனை அவர்கள் தொடர்ந்து செய்யத்தான் செய்வார்கள். அவரை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதிலே குறியாய் இருக்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அரசியலில் அயோக்கியத்தனம்  என்பது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எங்களுக்கு அது பற்றி கவலையில்லை.  ஆனால் எதற்காக அவர் மித்ராவின் தலைவராக  நியமிக்கப்பட்டாரோ அதன் வேலைகள் நடக்க வேண்டும்.  இருக்கும் காலத்தில் ஒரு பத்தாயிரம் வியாபாரிகளை உருவாக்கினேன் என்று பெருமிதம் பட வேண்டும்.  மித்ராவில் இருக்கும் போது ஏதாவது சாதனைகள் செய்ய வேண்டும்.

மாமிகு பிரபாகரன் வெற்றிகரமாக பல சாதனைகள் செய்வார் என எதிர்பார்க்கிறேன்! வாழ்த்துகள்!

Tuesday 20 February 2024

பழங்குடி நீதிபதி!

 


                                                     

                         நீதிபதியானார் மலைவாழ்  மகள் ஸ்ரீபதி!

தமிழ் நாடு, திருவண்ணாமலை, ஜவ்வாது மலையில் வாழும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பழங்குடி மக்களின் முதல் நீதிபதி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அவரது பெயர் ஸ்ரீபதி. வயது 23. ஏலகிரியில் கல்வி கற்றவர். கல்வித்தகுதி:B.A.B.L.  சட்டப்படிப்பை முடித்தவர்.  திருமணமானவர். கணவருக்கு ஓட்டுநர் வேலை.

கல்விக்குக் கணவர் தடையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரிட்சை எழுதுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் தான் பிரசவம் நடந்தது. அப்படி ஒரு சூழ்நிலையிலும் அவர் சென்னை சென்று பரிட்சை எழுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். 

அது தான் அவரது பெரும் சாதனை என்று  சொன்னாலும் பழங்குடி மக்களின் முதல்  நீதிபதி என்கிற பெருமை அவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.   அது மட்டும் அல்ல இன்று அந்த பழங்குடி மக்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாக  அவர் விளங்குகிறார்.  முதல் பெண் என்கிற போது தான் பல சிக்கல்கள்.  ஒருவர் வந்துவிட்டால் இனி அவர்கள் இனத்தில் பல பெண்கள் வந்துவிடுவர்!  பெற்றோர்களுக்கு ஓரு முன்னுதாரணம். படிக்கும்  பெண் குழந்தைகளுக்கு ஓரு முன்னுதாரணம். அந்த பழங்குடி மக்களுக்கே ஒரு பெரிய முன்னுதாரணம்.

எந்த இனமாக இருந்தாலும்  அனைவருக்கும் ஒரே மாதிரி கொள்கை தான். இது நடக்காது என்று நாம் சொல்லலாம். ஒருவர்  செய்து காட்டிவிட்டால் அதனைப் பார்த்தே பலர் பின் தொடர்வர்.  அந்த காலத்தில் தோட்டங்களில் வாழும் போது ஏதோ ஒரு குடும்பம் ஒரு டாக்டரை உருவாக்கியது.  அதன் பின்னர் இன்றுவரை பல டாக்டர்கள் உருவாகிவிட்டார்கள்.

இப்படித்தான் நாம் வாழ வேண்டியுள்ளது.  எப்போதும் நமக்கு ஒரு முன்னுதாரணம் தேவைப்படுகிறது.  மலைவாழ் மக்கள் என்னும் போது பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.  எல்லாத் தரப்பிலிருந்தும்  அவர்களுக்கு அடி விழுகிறது. நிம்மதியாக வாழக்கூட வழியில்லை. அப்படி ஓர் இடத்திலிருந்து அவர்கள் வருகின்றனர். அந்த வாழ்க்கை முறையிலிருந்து  ஒரு நீதிபதி  உருவாகிறார் என்றால் அது தான் வெற்றி!

விரைவில் நீதிபதி பதவி ஏற்கும் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள்!

Monday 19 February 2024

இன்னும் கடுமை தேவை!

 

நாட்டின்போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது  என்பது ஒன்றும் ரகசியமல்ல!

ஆனால் அது போக்குவரத்துத் துறையில் அதிகம் என்னும் போது  நமக்குச் சஞ்சலத்தை  ஏற்படுத்துகிறது. அதுவும் விரைவு பஸ் ஓட்டுநர்கள், லோரி ஓட்டுநர்கள் இப்போது கார்களை ஓட்டுபவர்கள் கூட போதைப்பொருள் உட்கொள்கின்றனர் என்னும் போது சாலைபாதுகாப்பு என்பதே இல்லை  என்கிற நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

பஸ் ஓட்டுநர்கள் போதையர்கள் என்றால் பயணம் செய்யும் பயணிகளின் நிலை என்னாவது? காலை நேரம் என்றால் வேலைக்குப் போகும் மக்கள், ஒன்றா இரண்டா?   காலை நேரத்தில் ஆயிரக் கணக்கானவர்கள்  பொது போக்குவரத்துகளை நம்பியே இருக்கின்றனர்.  இப்படி போதையை ஏற்றிவிட்டு பேரூந்துகளை  இயக்கினால் பயணம் செய்யும் மக்கள் நிம்மதியாக எப்படி  பயணம்  செய்ய முடியும்?

ஓட்டுநர்களைக் கண்காணிக்க வேண்டும் என்பது உண்மை தான்.  இப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். செய்திகள் என்னவோ பெருநாள் காலங்களில் தான் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வருகின்றன.  அது போதாது என்பது தான்  நாம் சொல்ல வருவது. 

சோதனைகள் அடிக்கடி நடைபெற வேண்டும்.  மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.  போதையில் உள்ளவன் எதனைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. போதையில் இருக்கும் போது அவன் வேறொரு உலகத்தில்  பயணம் செய்து கொண்டிருக்கிறான்!  ஆனால் பரிதாபத்துக்கு  உரியவர்கள் மக்கள் அல்லவா?  அதற்கு என்ன தீர்வு என்பது தான் நம் முன் உள்ள கேள்வி.

அரசாங்கத்தில்,  இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனையின் பேரில் தான் அனைத்தும் நடக்கின்றன. நமக்குத் தெரிந்ததெல்லாம்  காவல்துறை தான் இன்னும் அதிக அக்கறை எடுக்க வேண்டும்.  குற்றம் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.  கடுமை என்றால் அதன் பொருள் ஒவ்வொருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்கள் மீண்டும் போதைப்பொருள் பக்கமே போகாதபடி  என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும்.

பொது மக்களின் நலன் கருதியே நாம் பேசுகிறோம். போதைப்பொருள் நம் நாட்டில் பெரும் பிரச்சனை தான். அதற்கு ஒரு முடிவு காண வேண்டும். அதற்குக் கடுமையான தண்டனைத் தவிர  வேறு எதுவும் நமக்குத் தோன்றவில்லை.

வாழ்க மலேசியா!

Sunday 18 February 2024

.........இராவணன் ஆண்டால் என்ன?


மித்ரா அமைப்பில்  சமீப காலமாக ஒரு சில அரசியல்வாதிகள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் யார் என்றும் தெரிகின்றது. அசிங்கப்படுவது, அசிங்கப்படுத்துவது என்பது அவர்களது இயல்பு.  இந்தியர்கள் முன்னேறவே கூடாது  என்பதில்  மிகக்கண்டிப்பாக இருப்பவர்கள்.  அவர்களுக்கு இந்திய அரசியல்வாதிகள் தான் முன்னேற வேண்டும் - அது தான் இந்தியர்களின் முன்னேற்றம்!  அவர்கள் படித்த படிப்பு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறது!

நமக்கு இதுபற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.   இன்றைய நிலையில்  மித்ராவில் அதிகாரம் படைத்தவர் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  மாண்புமிகு பிரபாகரனா அல்லது மாண்புமிகு  சரஸ்வதி கந்தசாமியா?    இருவருடைய பங்களிப்பு என்ன என்பது இன்னும் தெளிவில்லை. தெரியவே வேண்டாம் என்பதற்காக ஒரு சிலர்  வேலை செய்கின்றனர். பிரதமர் தான் விளக்கம் அளிக்க வேண்டும். 

பிரதமரைப் பொறுத்தவரை பிரபாகரனைத்தான் தலைவராக  அறிவித்திருக்கிறார்.  அவர் தனது பணியைத் தொடங்கி விட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. முதலில் அவரது பணியை அவர் ஆரம்பிக்க வேண்டும். அவரது அலுவலகம் ஒற்றுமைத் துறையில் தான் இருக்க வேண்டும். தனது பணியைச்  செய்வதில் சுணக்கம் காட்டாமல் உடனடியாக தனது பணியைத் தொடங்க வேண்டும்.

பொது மக்களைப்  பொறுத்தவரை 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்கிற போக்கில் தான் இருக்க வேண்டும். நாம் ஏன் கவலைப்பட  வேண்டும்? அடித்துக் கொண்டால் அடித்துக் கொள்ளட்டுமே! பதவிக்காக அடித்துக் கொள்வது அவர்களுக்கு என்ன புதுசா?

அவர்களைப்பற்றி நமக்குக் கவலை வேண்டாம். நம்முடைய தேவை எல்லாம் நமக்கு மித்ராவின் வேலைகள்  நடக்க வேண்டும்.  அவர்களுடைய வேலைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு வேலைகள் விரைவாக நடக்க வேண்டும்.  இனிமேலும் சாக்குப் போக்குகள் வேண்டாம். மித்ராவின் முதல் கடமை வியாபாரம் செய்கிறவர்களுக்கான உதவி. அதன் பின்னர் கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள்.  இதனில் கவனம் செலுத்தினாலே போதும். வருங்காலங்களில் எந்தப் பிரச்சனையும் எழாது.

யார் தலைவர்? அடித்துக் கொள்ளட்டும்! ஆனால் மித்ராவின் பணி நிறுத்தப்படக் கூடாது  அது தொடர வேண்டும்.  கடந்த கால அனுபவங்களைக் கொண்டு மித்ரா  இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது தான் நமது ஆசை.

நமது குழப்பவாதிகள் தங்களது கீழறுப்பு வேலைகளை நிறுத்தப் போவதில்லை. இதனைச் சமாளித்துத்தான்  மித்ரா செயல்பட வேண்டும்.

நிச்சயமாக நல்லது நடக்கும் என நம்புகிறோம்! 

Saturday 17 February 2024

வர்த்தகப் பயிற்சிகள் தேவை!


வியாபாரத் துறையில் காலெடுத்து வைக்கும் முன்னர்  முக்கியமாக நமக்குத் தேவை  குறைந்தபட்சம் சில பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க  வேண்டும்.

வர்த்தகம் பற்றி அறியாதவர்கள் ஆரம்பகாலத்திலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு கடையை மூடிவிட்டு ஓடிவிடுகின்றனர். அதன்பின்னர் வியாபாரம் என்றாலே 'ஐயோ வேண்டாம்!' என்று  பலருக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விடுகின்றனர்!

ஓரளவு நேரடியாக நிறுவனங்களில் வேலை செய்து அதன் மூலம் வியாபார நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொண்டு பின்னர் சொந்தமாக தொழிலை ஆரம்பிப்போரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் தொழிலைப் புரிந்து வைத்திருப்பார்கள்.  ஆனால் வியாபார உலகமே வேறு உலகம்  என்பதைப் புரிந்து  கொள்ளாமல் வருபவர்கள் கஷ்டப்பட வேண்டிவரும்.  குறைந்தபட்சம் வியாபாரத்துறையில்  கொடிகட்டிப் பறந்தவர்களைப் பற்றி புத்தகங்களின் மூலமாவது அறிந்தவர்கள் விஷயம் தெரிந்தவர்களாக எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்களை - அவர்களின் அனுபவங்களை - நமது அனுபவங்களாக மாற்றிக் கொள்ளலாம்.

தொழிலைப்பற்றி ஒன்றுமே தெரியாது  ஆனால் தொழில் ஆசை  உண்டு என்பவர்களுக்கு  ஆங்காங்கே உள்ள மாநில வர்த்தக சங்கங்கள் அவர்களுக்கு ஏற்ற கருத்தரங்குகளுக்கு  ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நமது இளைஞர்களுக்கு நிறைய பயிற்சிகள் தேவை. நோக்கம்  வியாபாரங்களைப் பற்றி புரிந்து கொள்ளவது.

கருத்தரங்குகளில் வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள்  கலந்துகொண்டு தங்களது  அனுபவங்களைப்   பகிர்ந்து  கொள்ள வேண்டும்.  இப்போதும் இதுவெல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வர்த்தக சங்கங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றன. பெரும்பாலும் தலை நகரங்களைச் சேர்ந்த சங்கங்கள் தான் செய்கின்றன. முடிந்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சங்கங்கள் செய்ய வேண்டும். சிறு வணிகம் முதல் பெரிய வணிகம் வரை ஆலோசனைகள் தர வேண்டும். முக்கியம் சிறு வணிகங்கள்.

மித்ரா அமைப்பு இது போன்ற பயிற்சிகளுக்கு உதவ முன் வர வேண்டும். மித்ராவின் முக்கிய நோக்கமே இந்திய வணிகர்களை உருவாக்குவது தான்.

இனி மேலும் சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டிராமல் சம்பந்தப்பட்டவர்கள் களத்தில் இறங்க வேண்டும். வணிகர்களை உருவாக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Friday 16 February 2024

குற்றம் புரிந்தவர் யார்?


 புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறாகள் சிலர்!

ஆமாம்!  பத்து நாடாளுமன்ற உறுப்பினர், பிரபாகரனின்  கல்வித் தகுதி என்ன என்பது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றனர்! கல்வித்தகுதி  பற்றி கவலைப்பட வேண்டியவர்கள்  அவரது  தொகுதியைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அவரும் ஒரு தவணையை முழுமையாக முடித்துவிட்டு  அடுத்த தவணையும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.  இந்த நேரத்தில் ஏன் இந்த ஆராய்ச்சி?

சமீபகாலமாக பிரபாகரனின் பெயரைக் கெடுக்கும் வேலையில்  ம.இ.கா.வினர் ஈடுபட்டிருக்கின்றனர்  என்பது அவர்களின் நடவடிக்கைகளிருந்தே தெரிந்து கொள்ளலாம்.  கோவில் பிரச்சனை ஒன்றில்  எந்தவித அக்கறையும் காட்டாமல் பத்து ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்துவிட்டு, பிரபாகரன் தலையிட்டு அதனை  முடித்துவைக்கும் தருவாயில், உள்ளே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தான் ம.இ.கா.வினர்.  பிரபாகரனுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது  என்பதில் மிகத்தீவிரமாக அவர்கள் இருக்கின்றனர்!

இந்தக் 'கல்வித்தகுதி' யின் பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பவர்கள்  யார் என்று நம்மாலும் எளிதில் அனுமானிக்க முடியும். அவர் கல்வித்தகுதி குறைவானவர்  என்று சொன்னால் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் ம.இ.கா.வினர்.  ஆமாம் அறுபது ஆண்டு  கால ஆட்சி என்றால்  சும்மாவா?  குண்டர்களின்  தலைமத்துவத்தில் குண்டர் கும்பல்களைத் தானே உருவாக்க முடியும்?  கல்வியாளர்களையா உருவாக்க முடியும்?   இன்று சிறையிலிருக்கும் அதிகப்பட்சமான  15% இந்திய இளைஞர்கள்  எல்லாம் அவர்களின் உருவாக்கம் தானே!

இதுவே படித்த தலைமைத்துவம் என்றால்  நமது நிலை இப்படியா இருக்கும்?  ஆனால் என்ன செய்வது? படித்தவர்களை நாம் மதிப்பதில்லையே! அதற்கான பலனை அனுபவிக்கத்தான் வேண்டும்.

நமது சமுதாயத்தில் படிக்காதவர்கள் இல்லை என்றால் அப்படி ஒரு நிலையை உருவாக்கியதில் பெரும்பங்கு ம.இ.கா.வுக்குத் தான்!  அது தான் உண்மை.  அரசியலை இந்தியர்களின்  அழிவுக்குப் பயன்படுத்தியபவர்கள் அவர்கள்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இவர்கள்?  பார்ப்போம்!



Thursday 15 February 2024

குற்றவாளிகளுக்கும் வயது வரம்பா?

 

குற்றவாளிகள் வயதானவர்களாக இருந்தால் அவர்களை மன்னித்து விடலாமா?

எந்த வயதானாலும் குற்றவாளி குற்றவாளிதான். அதற்கு வயது விதிவிலக்கல்ல.  குற்றம் செய்பவர் எந்த வயதிலும் குற்றங்கள் செய்யலாம். வயதானவர் என்றுதெரிந்து தானே  குற்றம் செய்கிறார்? தண்டனைக்கும் வயதுக்கும்  என்ன தொடர்பு?

ஒரு சில குற்றங்கள்  யார் வேண்டுமானாலும் செய்யலாம் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு  வயதே தேவை இல்லை!   அதற்குத் தேவை எல்லாம் மனசாட்சி மட்டும் தான்.

பதவியில் இருந்த போது பல கோடிகளைத் திருடிய கேடிகள் பதவியிழந்த  பிறகு சட்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை மறந்துவிடுகின்றனர்.  ஆளுகின்றபோது இருக்கும் அதிகாரம் ஆளாதபோது அனைத்தும் பறந்தோடிவிடும்  என்பதைக்கூட அறியாத  அப்பாவிகளா இவர்கள்?

இன்று குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பாலியல் சித்திரவதைகளுக்கு வயதையா பார்க்கமுடியும்?  கடுமையான தண்டனைகள் தான் கொடுக்க வேண்டி வரும். 

குற்றங்கள் என வரும் போது சமரசம் செய்து கொள்ள ஒன்றுமில்லை. ஒரு சில குற்றங்கள் மரண தண்டனைக்கு உட்பட்டவை.  இப்போது அதுவும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு விட்டது.  சில குற்றங்களுக்கு மரண தண்டனை தேவை தான் என நினைக்கத் தோன்றுகிறது. தேவையற்ற கொலை, அப்பாவிகள் கொலை அதுவும் கொடுரமான கொலை - இதற்கெல்லாம் பாவ புண்ணியம் பார்க்க முடியுமா?  கஞ்சா போன்ற கொடுமையான  குற்றங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனை பரப்புவதன் மூலம் இலட்சக்கணக்கான மக்களைப்  பாதிப்படைய செய்கின்றன. இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களை எப்படி மன்னிப்பது?

குற்றம் என்று வரும் போது வயது பற்றிய கவலையில்லை. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். குற்றம் புரிந்தவர் யார் என்பது  நமக்குத் தேவையற்ற  ஒன்று. குற்றம் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட  வேண்டும்.

நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே! அன்றே பாடிவிட்டுப் போனார் புலவர்! அதுவே நமது நிலை!

Wednesday 14 February 2024

யாரைத்தான் நம்புவதோ...?

 

மித்ரா அமைப்பை வைத்துக் கொண்டு,  விஷயம் தெரிந்த சிலர் பந்தாட்டம் ஆடுகிறார்கள் என்றே தோன்றுகிறது!

பிரதமர் தான் மித்ராவை ஒற்றுமை அமைச்சிலிருந்து பிரதமர் துறைக்கு மாற்றினார். எல்லாரும் வரவேற்றோம்.  அவரே இப்போது ஒற்றுமைத் துறைக்கு மீண்டும் மாற்றியிருக்கிறார். காரணம் தெரியவில்லை. அது அவரது உரிமை.  காரணம் தெரிந்தாலும்  ஆகப்போவது ஒன்றுமில்லை!

எங்கிருந்தாலும் மித்ரா தனது பணியினைத் தொடர்ந்து செய்யத்தான்  செய்யும். அது அவர்களது கடமை.

இப்போது ஏதோ  கையெழுத்து வேட்டை நடைபெறுகிறதாம். மித்ராவை  மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்ற வேண்டும் என்பதாக.  சில ஆண்டுகளுக்கு முன்னர் மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருந்த போது  பெரும்பாலும் ம.இ.கா. வினர் பயன்பெற்றதாக அப்போது செய்திகள் வெளியாயின. இப்போது மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்ற வேண்டும் என்னும் போது  இதற்கும் ம.இ.கா. விற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அன்று பயன்பெற்றவர்கள் மீண்டும்  பயன்பெற வேண்டும்  என்று நினைக்கலாம் அல்லவா?  அதனை யாரும் எதிர்க்கவில்லையே!

ஆனால் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு  எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்த அமைச்சில் இருந்தாலும் மித்ரா தனது பணியைச் செய்து தான் ஆக வேண்டும்.  அதற்காகத்தானே அது உருவாக்கப்பட்டது?

இப்பொழுது என்ன தான் பிரச்சனை?  ஏற்கனவே ஒற்றுமைத்துறையின் அமைச்சராக இருந்தவர்  மித்ராவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதாவது பூட்டுப்போட்டு பூட்டி வைத்திருந்தார்.  அதை வைத்து அவர் என்ன 'அரசியல்' செய்தாரோ  நாம் அறியோம் பராபரமே! அது மீண்டும் நடக்கக் கூடாது  என்பது கூட இவர்களின் கோரிக்கையாக இருக்கலாம். அதனாலேயே பிரதமர் துறைக்கு மாற்றுங்கள் என்பதாகக் இவர்கள் சொல்லலாம்!

ஆனால் ஒன்றை நினவிற் கொள்ளுங்கள்  நண்பர்களே. பிரதமர் அன்வார்,  தான் ஊழலுக்கு எதிரானவர் என்று தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறார். இப்போது தான் முதலைகள் வலையில் விழ ஆரம்பித்திருக்கின்றன.  ம.இ.கா. முதலைகள் மட்டும் எத்தனை நாளுக்கு வேளியே? பார்க்கத்தானே போகிறோம்!

அதனால் நான் சொல்ல வருவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் மித்ரா எந்தவொரு அமைச்சுக்கு மாற்றப்பட்டாலும்  அதன் பணியை செவ்வனே செய்யும் என்று நம்பலாம்.  திருட்டுப் பட்டம் பெற யாரும் விரும்ப மாட்டார்கள். கடந்து ஓர் ஆண்டாக மாண்புமிகு ரமணன் தலைவராக இருந்தார்.  அவர் தேவையற்ற பலருக்கு வாரி வாரி வழங்கினார் என்பதாகப் பொதுவாகப் பேசப்படுகிறது. அதனால் அவர் கழட்டப்பட்டு இப்போது மாண்புமிகு  பிராபகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

பிரபாகரன் இத்தனை நாள் வெளியே வராமல் இருந்தார்.  கோயில் விஷயத்தில் ம.இ.கா. காரன் பெயரைக் கெடுத்தான். இப்போதும் அவர் பெயரைக் கெடுக்க தயாராகி விட்டான்!  எத்தனை நாள் தாக்குப் பிடிப்பாரோ!

இன்றைய நிலையில் ம.இ.கா. திருந்தவில்லை! மக்கள் அவர்களை நம்பவில்லை!  அதனால் மக்களைக் குழப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்!

Tuesday 13 February 2024

வறுமை ஒழிப்பு!

 

வறுமை ஒழிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை ஒழித்தே ஆகவேண்டும் என்பது எல்லா நாடுகளுக்கும் உள்ள முதற்கட்ட பணி.  மலேசியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

'தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்  ஜெகத்தினை அழித்திடுவோம்'  என்றார் பொங்கி எழுந்த பாரதி.  வளமான ஒரு நாட்டை வறிய நாடாக மாற்றியவர்கள் நாட்டுக்கு 'விசுவாசமான' அரசியல்வாதிகள்.

அரசியல்வாதிகளுக்கு வறுமை என்றால் தெரியவில்லை. அதுவும் இந்தியரிடையே வறுமை என்றால் அவர்கள் சிரிக்கின்றனர். ஏன் இப்படி ஒரு நிலை?

நம் வாழ்க்கை முறை எந்தக் காலத்திலும் தாழ்ந்து போனதில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக நமது துரோகிகளால் தாழ்த்தப்பட்டோம். அதுவும் நமது இன துரோகிகளால்!

இந்தியர்களின் பிரச்சனைக்குத் தீர்வே காண முடியாதா?  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நமது உரிமைகள் மறுக்கப்பட்டு  அந்த உரிமைகள் மூலம் பயன் அடைபவர்கள்  வேற்று இனத்தவர். அதாவது  நம்முடைய உரிமைகளைப் பிடுங்கி வேறொருவருக்குத் தானம் கொடுக்கின்றனர்! அதனாலேயே நாம் இன்று நடுவீதிக்கு வந்துவிட்டோம். நமது பெண்கள் இன்று சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை  தேடி போகின்ற  அவல நிலை.

நம்மை விட சிறிய நாடான சிங்கப்பூர் நமது பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி வேலை கொடுக்கிறது. நம்மால்  அந்தச் சிறிய நாட்டுடன் போட்டி போட முடியவில்லை! அந்த அளவுக்கு நாட்டிற்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டு, டாக்டர் மகாதிர், நாட்டை இலஞ்ச ஊழலுடன்  சீரழித்தார்  அதன் பலனை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

இன்று மற்ற இனத்தவரை விட அதிகம் பாதிப்படைவர்கள் இந்தியர்கள் தான். வேலை கொடுத்தாலே நமது பிரச்சனைகளில் பாதி குறைந்துவிடும். வேலையும் கொடுப்பதில்லை, கொடுப்பதற்கு வேலையும் இல்லை, சிறு வியாபாரங்களில் ஈடுபட்டாலும்  அதனையும் நகராண்மை கழகத்தினர் உடைத்துப் போட்டுவிடுகின்றனர். அருகிலேயே மலாயக்காரர்கள் கடைபோட்டு வியாபாரம் செய்கின்றனர். இது போன்ற முரண்பாடுகளை எங்கே போய் சொல்லுவது?  பார்ப்பவர்கள் யாரை முட்டாள்  என்று சொல்லுவார்கள்?

வறுமை ஒழிப்பு என்பது தேவை ஆனால் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் தான் என்பது தேவையில்லை!  அது அனைத்து மலேசியர்களுக்குமான தேவை!

Monday 12 February 2024

திருமணங்கள் சொர்க்கத்தில் .........!

 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பது நீண்ட நாள்களாக நம்மிடையே பழக்கத்தில்  உள்ள நம்பிக்கைத்தரும் ஒரு சொற்றொடர்.

ஆனாலும் இன்றைய நிலையில் அப்படியெல்லாம் சொல்ல முடியுமா? ஏனோ தெரியவில்லை காலநிலை சரியாக இல்லை! திருமணம் என்பதே  தமாஷான  நிகழ்வாகப் போய்விட்டது!

ஆடம்பரத் திருமணங்கள் நம்மிடையே பெருகிவிட்டன. ஏழை சமுதாயம் என்று சொல்லப்படுகின்ற இந்திய சமுதாயம் இன்று திருமணத்திற்காக  ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்கின்றனர்.  திருமணம் மட்டும் அல்ல, பிறந்தநாள் போன்ற வைபவங்களும் அமர்க்களப்படுகின்றன.

திருமணம் என்பது வாழ்வில் ஒரு முறை  என்று சொல்வது உண்மைதான். அது கடைசிவரை  நிலைத்து  நிற்க வேண்டும் என்பது தான்  நமது ஆசை.  நமக்கு ஆசை இருந்து என்ன பயன்?  மணம் புரிபவர்களுக்கு இருக்க வேண்டுமே? அது தான் பிரச்சனையே. ஓரிரு ஆண்டுகளில் பெண்கள்  'சிங்கள் மதர்' நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  என்ன பிரச்சனை என்பதே புரியவில்லை!

பொதுவாக நாம் சொல்ல வருவது  திருமண செலவுகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். அது எந்தக் குடும்பமாக இருந்தாலும் சரி . சீனர்களோ, மலாய்க்காரர்களோ நம் அளவுக்கு ஆடம்பரத்தைக் காட்டுவதில்லை.  நமக்கு மட்டும் ஏன் இது போன்ற ஆடம்பரங்கள் என்பது தான்  விளங்கவில்லை.  பணம் என்று எடுத்துக் கொண்டால்  நாம் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்ற சமூகமாக இருக்கிறோம். மூன்றாவது பெரிய சமூகமாக இருக்கும் நாம் பொருளாதார ரீதியில் மிகவும் கீழான நிலையில் பாதிக்கப்பட்ட சமூகம்.   ஆனால் ஆடம்பரச் செலவுகளில் நாம் தான் முதலிடம்!

நமது மக்களுக்கு நாம் விடுக்கும் செய்தி ஒன்றுதான்.  பணம் மரத்தில் காய்ப்பதில்லை.   செலவு செய்வதில் கஞ்சத்தனமாகவே  இருங்கள்.  எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி பணம் உங்களுடையது, மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ  என்று யாருக்கோ பயந்து வாழ்க்கை நடத்த முடியாது.  நம் உழைப்பால்  வந்த பணம்.  செலவு செய்வதில் நாம் அலட்சியம் காட்ட முடியாது.

பணமிருந்தால் தர்மம் செய்யுங்கள்.  தர்மம் தலைகாக்கும்  என்பார்கள். அது உங்கள்  திருமண வாழ்க்கயை இன்னும் பலமடங்கு சந்தோஷத்தைக்  கொண்டுவரும்.   அந்தத்  திருமண வாழ்க்கை தான்  சொர்க்கத்தில்  நிச்சயக்கப்படும் வாழ்க்கை.

Sunday 11 February 2024

மாண்புமிகு சரஸ்வதி கந்தசாமி அவர்களுக்கு.....!

 

மாண்புமிகு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுக்கு,

'வணக்கம் மலேசியா' இணைய இதழுக்கு நீங்கள் கொடுத்த நேர்காணலைக் கேட்க நேர்ந்தது.  ஒரு சில தகவல்கள் கிடைத்தன. 

குறிப்பாக மித்ராவைப் பற்றியான செய்திகள் நமக்கு இன்னும் ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன.  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான மித்ராவின்  வரவு செலவுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறீர்கள். உண்மை இருக்கலாம். அதனை நாமும்  நம்புகிறோம்.

ஆனாலும் அதுபற்றி நாங்கள் பேசப்போவதில்லை. மித்ரவின் கடந்த காலங்களைப்பற்றி 'எக்கேடாவது கெட்டுப் போகட்டும்' என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம்! என்ன தான் செய்வது? திருடர்கள்,  பக்கத்தில் வழக்குரைஞர்களை வைத்துக் கொண்டு  திருடுகிறார்கள்!கேள்வி கேட்டால் "எங்கள் மேல் வழக்குப் போடுங்களேன்!" என்று  நம்மைப் பார்த்து நகைக்கிறார்கள்!   திட்டம் போட்டு திருடும் கூட்டத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது!  அதுவே அழுகிச் சாகும்!

இப்போது நாங்கள், எங்கள் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.  மித்ரா இப்போது உங்கள் கையில். இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு உங்களின் கையில்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் எத்தனை வியாபாரிகளை அல்லது தொழிலதிபர்களை உருவாக்க  உங்களிடம் திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?  என்பது தான் எங்களது கேள்வி.  அதாவது சிறுதொழில் செய்பவர்கள், குறுந்தொழில்  செய்பவர்கள் அத்தோடு பெருந்தொழிலில் ஈடுப்பட்டிருப்பவர்கள்  அனவருக்கும் சேர்த்துத்தான்.

முக்கியமாக சிறு தொழிலில் உள்ளவர்கள்  எத்தனை பேர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப் போகிறீர்கள். இருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். புதியவர்களை உருவாக்க வேண்டும்.  குறுந்தொழில் என்பதும் வளர்ந்து வரும் தொழிலதிபர்கள். அவர்களுக்கான உதவிகள் நிறையவே தேவைப்படுகின்றன.  இன்று பலர் குறுந்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். இவர்களுக்கான தேவைகள் அதிகம். இவர்கள் தான் அடுத்தக்கட்டத்திற்குப் போக வேண்டியவர்கள்; கவனிக்கப்பட வேண்டியவர்களும் கூட.   அத்தோடு இன்றைய தொழிலதிபர்கள். அவர்களை நாம் ஒதுக்கிவிட முடியாது.  அவர்களும் வளர வேண்டும். அடுத்தக் கட்டத்திற்குப் போக வேண்டும்.  

இப்போதைய தொழில் அதிபர்கள் மித்ராவின் பணத்தைக் கொள்ளையடித்து விடுவார்கள் என்கிற குற்றச்சாட்டும்  உண்டு. ஆனால் இதனை எளிதில் கையாலலாம்.  இந்த மூன்று பிரிவினருக்கும் அதாவது ஒவ்வொரு பிரிவினருக்கும்  அவர்களின் பட்ஜெட் எவ்வளவு என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.  முதல் பிரிவினரை அதிகம் உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்கான தொகை சிறிது தான். இரண்டாவது பிரிவினருக்கு அதிகமாகவே தேவைப்படும். காரணம் இவர்கள் வளர வேண்டும். இவர்களின் வளர்ச்சி தான் நமது பலத்தைச் சொல்லும்.  மூன்றாவது பிரிவினர் குறைவு ஆனால் தொகையோ பெரிது.

ஆனாலும்  ஒவ்வொரு பிரிவினருக்கும் தோரயமான பட்டியல் ஒன்றைத்  தயாரித்திருந்தால் இது ஒன்றும் பிரச்சனையல்ல.

நாங்கள் இனி மித்ராவின் பழைய கால திருடர்களைப் பற்றி பேசுவதை விரும்பவில்லை. அவர்கள் அகப்பட போவதுமில்லை.  அதனால் அடுத்த நான்கு ஆண்டுகளில் எத்தனை பேரை வியாபாரத்துறைக்குக் கொண்டு வரப்போகிறீர்கள் என்பது  தான் எங்களது  எதிர்பார்ப்பு.

திருடர்களைக் கண்டுபிடிப்பது  என்பது ஒரு பக்கம் இருந்தாலும் வருகின்ற நான்கு ஆண்டுகளில்  உங்களின் செயல்திட்டம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி! வணக்கம்!

Saturday 10 February 2024

சீன நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

 


சீனப் பெருநாளன்று நமது  எண்ணங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்:

சீனர்கள் தங்களது மொழி மீது பற்றுள்ளவர்கள் - தமிழர்களும் தமிழ் மீது பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் சீனர்கள் கையில் - நமது பொருளாதாரம்  அவர்களை மிஞ்ச வேண்டும்.

சீனர்கள் கல்வித்துறையில் நம்மை மிஞ்சி விட்டார்கள் - நாம் அவர்களை மிஞ்ச வேண்டும்.

சீனர்கள் உலகெங்கிலும் வியாபாரம் செய்கிறார்கள் - உலகத்தையே நம் கையில் வைத்திருந்தோம்  நம்மால் முடியாதா?

காடோ மேடோ அங்கே சீனர்கள்  வியாபாரம் செய்கிறார்கள் - ஏன் நமது முஸ்லிம் தமிழர்கள்  செய்யவில்லையா? மற்ற தமிழர்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

சீனர்களுக்கு வேலை என்றால் அது வியாபாரம் மட்டும் தான் - நமக்கும் வேலை என்றால் வியாபாரம் என்பதாக அமைய வேண்டும். 

தாங்கள் பிழைக்க வியாபாரமே சிறந்த வழி என்கிறார்கள் சீனர்கள் - நமது பிழைப்பும் வியாபாரமாக இருக்க வேண்டும்.

வியாபாரத்தின் வழி யாரையும் நம் கையில் வைத்திருக்கலாம் - அது தான் நமது கொள்கையாகவும் இருக்க வேண்டும்.

சீனர்கள் தங்களது பொருளாதார பலத்தினால் நாடுகளைக் கூட வாங்குகிறார்கள் - நமக்குப் பலம் தான் வேண்டும். யாது ஊரே யாவரும் கேளிர் என்பது தான் நமது மரபு.


இந்த எண்ணங்களோடு நாம் இந்தப் புத்தாண்டை நண்பர்களோடு கொண்டாடுவோம்.  பொருளாதார சக்தி தான் உயர்வைத் தரும். நம்மைத் தலை நிமிர வைக்கும்.

வாழ்த்துகள்!

Friday 9 February 2024

என்ன கொழுப்பு இவர்களுக்கு?

 

வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்குக்  கொடுமையோ கொடுமைகள் நடக்கின்றன. சட்டங்கள் கடுமையாக இல்லாவிட்டால் அவர்களுக்கு எதுவும் நடக்கும், எப்படியும் நடக்கும்!

பெண்கள் ஏதோ தங்களது நாட்டிலிருந்து, பிழைப்புக்காக,  இங்கு வந்து வேலை செய்கின்றனர்.  பாவம்  ஏழைப்பெண்கள்.  ஆனால் இங்குள்ள சில பிச்சைக்காரர்கள் இந்தப் பெண்களை வேலையில் அமர்த்திக்கொண்டு  அவர்களைப் படாதபாடு படுத்துகின்றனர்.

ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தியதுமே  தங்களை ஏதோ கோடிஸ்வரர்களாக நினைக்கும் பெண்கள் தான் இப்படியெல்லாம் நினைக்கின்றனர்.  உண்மையில் பணக்காரர்கள் இப்படி நினைப்பதில்லை.  நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி என்னவோ மாறப்போவதில்லை! அதன் வேலையைத் தான் அது காட்டும்.  அப்படித்தான் இந்தப் புது எஜமானர்களும்!  

தங்களுக்கு ஏதோ ஒரு அப்பாவிப் பெண் கிடைத்துவிட்டால்  போதும்! அவரை 24 மணி நேரம் வேலை வாங்குவதும், சாப்பாடு ஒழுங்காகக் கொடுக்காமலும், அவர்களை அடிப்பதும், சூடு வைப்பதும்  சொல்லி மாளாது இவர்களின் கொடுமைகள்.  அதுவும் தமிழ் நாட்டிலிருந்து வரும் பெண்களை இவர்கள் மனிதர்களாகக் கூட கருதுவதில்லை.  இவர்கள் செய்த கொடுமைகளினால்  பலர் இறந்திருக்கின்றனர்.  இப்படிப்பட்டவர்களைத் தூக்கில்  போட வேண்டும். அது தான் தண்டனை. இதைவிட குறைவான தண்டனைகளெல்லாம் இவர்களுக்கு  வலியை ஏற்படுத்தாது.

இவர்களைப் போன்ற புது புது எஜமானர்களுக்குத் தண்டனை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும்.  குற்றத்தின் கடுமை தெரிந்தால்  மட்டுமே இவர்கள் பயப்படுவார்கள்.  இப்போது தண்டனைகள்  கடுமையாக இல்லை.  அதனால் பரவலாக வீடுகளில் இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன.

வருங்காலங்களில்  தண்டனைகள்  கடுமையாக்கப்பட வேண்டும். வீட்டுப் பணிப்பெண்கள் என்றாலும் அவர்களும் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்.  இங்கு யாருக்கும் யாரும் அடிமைகள் அல்ல.  அவர்கள் செய்யும் வேலைக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.  இதில் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. எல்லாமே உயர்ந்தவர்கள் தான்.

அரசாங்கம் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கடுமையானதாகக் கருத வேண்டும்!

Thursday 8 February 2024

ஏன் பழைய மடிக்கணினிகள்?



மித்ரா அமைப்பைப் பற்றி பேசுவதை நான் விரும்புவதில்லை. காரணம் குறை சொல்லுவதால் அதுவே பழக்கத்திற்கு வந்துவிடுகிறது!

துணை அமைச்சர் ரமணன் அதன் தலைவராக இருந்த போது  அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அனைத்தையும் கொடுத்து முடித்துவிட்டார்  அதுவே தனது சாதனை என்பதாகக் கூறிவருகிறார்.

நம்மால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்திருக்கிறார். அது தேவையற்ற செலவு  என்பதாகவே  பேசப்படுகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  மடிக்கணினி என்பது மிகவும் போற்றக்கூடிய விஷயம்.  ஆனால் பழைய கணினிகளைக் கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது.  புதிதாகக் கொடுத்தால் என்ன கெட்டுவிட்டது? ஒன்றை நாம் புரிந்து கொள்கிறோம்.  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினி கொடுப்பதை  யாரோ விரும்பவில்லை.  அது ரமணனாக  ஏன் இருக்க முடியாது?  ஏனென்றால் எல்லா செயல்திட்டங்களுக்கும்  முடிவெடுக்க வேண்டியவர் மித்ராவின் தலைவரான ரமணன் தான்.  அவர் புதிய கணினிகள் கொடுத்தால் யாரும் அவரை அடிக்கப் போவதில்லை! உண்மை தானே?

அவர் பழைய மடிக்கணிகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?  புதிதாகக் கொடுக்க அவருக்கே விருப்பம் இல்லையென்றால்  அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிதா  என்று அவர் யோசித்திருக்கலாம். அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை.  காரணம்  அவர் தமிழ்ப்பள்ளி மாணவர் அல்ல.  ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்குப் புதிய கணினிகளா?  ஆதனால் தான் அவர் பழைய கணினிகளைக் கொடுக்கத் துணிந்தார்.

சம்பளம் வாங்காமல் அவர் வேலை செய்கிறார்  என்கிற கதைகள் எல்லாம் நமக்கு வேண்டாம். அதனை எப்படி பின்வாசல் வழியாக  வாங்குவது என்பது எங்களுக்கும் தெரியும்.  இன்னும் ம.இ.கா. வின் பழைய நினைப்போடு இரூக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது மக்கள் மாறிவிட்டார்கள். ம.இ.கா. அரசியல் எடுபடாது.  அதனால் தான் வெகு விரைவில்  அவரிடமிருந்து மித்ரா பறிக்கப்பட்டது!

உங்களின் கடந்த காலத்தின் மீது எங்களுக்கு அக்கறை இல்லை. நிகழ்காலத்தில் நீங்கள் செய்யும் சேவை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது நீங்கள் இருக்கும் அமைச்சிலும் இந்தியர்களுக்குப் பெருமளவில் சேவை செய்ய முடியும். பார்ப்போம்!

Wednesday 7 February 2024

வாரத்திற்கு ஐந்து கொலைகளா?

 

மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமான செய்தி தான். எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் என்ன செய்வது? காவல்துறைத் தலைவரே  சொல்லிவிட்டார். நாம் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.

இவர் வந்த பிறகு தான் ஊழல்களில் சிக்கிய பல போலிஸ்காரர்களைக் கம்பி எண்ண வைத்திருக்கிறார்.  தலைமை எப்படியோ அப்படித்தானே குடிகளும்?  தலைமை சுறுசுறுப்பாக இயங்குகிறது. கைது செய்கிறது. நடவடிக்கை எடுக்கிறது.

முக்கியமானது  மலேசிய நாட்டில் ஒவ்வொரு வாரமும்  சுமார் ஐந்து கொலைகள் நடப்பதாகக் கூறியிருப்பது தான்  மிகவும் சங்கடமான செய்தி.   இந்த கைதுகளுக்கும் கொலைகளுக்கும் தொடர்புகள் இருக்குமோ?   வேண்டாம்! தேவையற்ற சந்தேகங்கள்!

மற்ற நாடுகளின் புள்ளி விபரங்கள் தெரியவில்லை. இது என்ன நல்ல விஷயமா?  சில தினங்களுக்கு முன்னர் தான் கிள்ளான் நகரை "கொலம்பியா" வோடு ஒப்பிட்டிருந்தார் காவல்துறைத் தலைவர். அதுவும் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி தான். இதில் என்ன சஙகடங்கள் என்றால் இத்தனை ஆண்டுகள் தலைமை பதவியில் இருந்தவர்கள்  இதனை எல்லாம் வெளிக் கொணரவில்லை. வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.  ஆனால் இவரோ அனைத்தையும் போட்டு உடைக்கிறார்!  ஊழல்களை உடைக்கிறார்! காவல்துறையின் பலவீனங்களை உடைக்கிறார்.  நல்லது தான்.   நல்லது நடக்க வேண்டுமானால் ஒளிவுமறைவு இருக்கத் தேவையில்லை!

கிள்ளான் நகரில் ஏன் இந்த அளவுக்குக் குற்றச் சம்பவங்கள்? குற்றம் சொல்ல நம்மிடம்  ஆதாரம் ஏதுமில்லை.  ஆனாலும் செவிவழி அங்கு நடக்கும் பயங்கரத்தைக் கேள்விப்பட்டது  உண்டு.  காவல்துறை ஏன் அதனைச் சரி செய்ய முடியவில்லை என்பது நமக்குத் தெரியாது.  நாம் கேள்விப்பட்டது என்பது உண்மை தான் என்று தெரிகிறது.

ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது.  கிள்ளான் 'கொலம்பியா' ஆனதற்குக் காரணம் இலஞ்சம் ஊழல் தான்.  பணத்தை வாங்கிக் கொண்டு  குற்றச்செயல்களை அதிகரிக்கச் செய்வதாக இருக்கலாம்.  காவல்துறைக்கு முடியாது என்று ஒன்று உண்டோ?   ஒரு குற்றவாளியைப் பிடிக்கவில்லை என்றால் அவனை 'முடித்து' விட  அவர்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?

எப்படியோ நம்மால் ஜீரணிக்க முடியாத  ஒரு செய்தியைக் காவல்துறைத் தலைவர் வெளியே கொண்டு வந்திருக்கிறார். அது தான் கொலம்பியா! காவல்துறை இதற்கு ஒரு முடிவைக் காணும் என்று நமபலாம். வெளியே கொண்டு வந்துவிட்டார்   என்று சொல்லும் போது அதற்கு ஒரு முடிவு காணமலா விடுவார்?

கிள்ளான் சீக்கிரம் சமாதான நகராக மாறலாம்! 

Tuesday 6 February 2024

இளைஞர்கள் பொறுமை காக்க வேண்டும்!

 பொது சாலைகளில் கார் பயணங்கள் எல்லாம் மிகவும் சிக்கலான பிரச்சனையாக  போய்க் கொண்டிருக்கிறது.

அதுவும் வயதானவர்கள் கார் ஓட்டினால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே நாம் இருக்க வேண்டும்.   அவர்கள் தவறான முறையில் கார் ஓட்டுகிறார்கள் என்பது பொருள் அல்ல.  விபத்துகள் நடக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் கார்களைச்  செலுத்துகிறார்கள்  என்பது தான் பொருள்.

இப்படி நிதானத்துடன் கார்களைச் செலுத்துபவர்களை  திட்டுவதும், வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இது போன்ற சம்பவங்கள் நடந்து  கொண்டு தான் இருக்கின்றன.  வயதானவர்களுக்கும், பெண்மணிகளுக்கும் மரியாதைக் கொடுக்கத்தான்  வேண்டும். அது நமது கடமை.

விபத்துகள்  நடைபெற யார் காரணமாக இருக்கிறார்கள்? பெரும்பாலும் இளைஞர்கள்தான். எல்லாமே அவசரம், அவசரம், அவசரம்! என்ன தான் செய்ய?  இவர்களுடைய செயல்களினால்  தேவையற்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

விபத்துகளை மிக எளிதாக  கடந்து சென்று விடுகின்றனர் இந்த இளைஞர்கள்.  ஆனால் யோசித்துப் பாருங்கள் அதன் பின்விளைவுகளை. எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர்?  நீதிமன்றம், வழக்குகள் என்று  எத்தனை  துன்பங்கள்?

நாள் தோறும் விபத்துகள். யாரால் நடைபெறுகின்றன? அனைத்தும் இளையவர்களால் தான். கொஞ்சம் கூட பொறுமையில்லை. காராக இருந்தாலும் சரி,  லோரி, பேருந்துகள் என்று எந்த வாகனங்களாக இருந்தாலும் சரி நடைபெறும் விபத்துகள் அனைத்துக்கும் காரணமானவர்கள் இளைஞர்கள் தான்.  இவர்களைப் போலவே பெரியவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.

நாட்டில் நடைபெறும் விபத்துகள் அனைத்தும் சரியான முறையில்  சாலைவிதிகளைப் பின்பற்றாததினால் தான். சாலைவிதிகளைப் பின்பற்றும்  முதியவர்கள் மீது கைவைப்பதை மிகவும் கடுமையாகக் கருத வேண்டும்.

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்!

Monday 5 February 2024

இந்த வீணடிப்புகளுக்கு யார் காரணம்?

 

இந்த வீணடிப்புகளுக்கு யார் காரணம்?

நாரவாயன்  தின்று கொழுப்பதற்கு நல்லவாயன் சம்பாதித்துக் கொடுக்க வேண்டியுள்ளது! 

சட்டவிரோதக்  குடியேறிகள்  நாட்டுக்குள் எப்படி வந்தார்கள்?  மேலே  விண்ணிலிருந்து குதித்து வந்தார்களோ! எப்படி நாட்டுக்குள் நுழைந்தார்கள்?    எப்படி உள்ளூர் வியாபாரங்களைக் கைப்பற்றினார்கள்?   நாட்டில் என்ன அதிசயங்களா நடந்து கொண்டிருக்கிறது?

அரசாங்கத்தில் பணிபுரிந்தவன் தான்  இந்த சட்டவிரோதிகளை உள்ளே விட்டவன்!  இப்போது அவர்களை சட்டவிரோதிகள்  என்று சொல்லி அவர்களை கைது செய்பவனும் அவனே!

நாட்டில் என்ன தான் கொடுமை நடக்கிறது?   சாதாரண கொடுமை அல்ல. பிற நாட்டவர்களை தாராள மனசுடன் உள்ளே விடுவது!  அப்புறம் ஏன் வந்தாய் என்று கைது செய்வது என்பது கொடுமையிலும் கொடுமை.  உள்ளே வர அனுமதி கொடுத்தவன் பை நிறைய பணத்தோடு  உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்! பணம் கொடுத்தவன்  வாழ்க்கையையே இழந்துவிட்டு  கலங்கிக் கொண்டிருக்கிறான்!

மனிதனுக்குப் பணம் அவசியம் தான்.  அதனை மனசாட்சியோடு சம்பாதிக்க வேண்டும்.   வெளிநாடுகளிலிருந்து  வரும் ஏழைகளை வயிற்றில் அடித்துப் பிழைப்பவனின்   வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! கடவுள் அவனை மன்னிப்பது  கிடையாது!

இப்போது விடிய விடிய கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களே  இதற்கு முன்னர்  என்ன செய்தனர்?  விடிய விடிய பணத்தை எண்ணி  பாக்கெட்டுகளில் திணித்தனர்!   அப்போதும் அரசாஙத்திற்கு நட்டம் இப்போதும் அரசாங்கத்திற்கு நட்டம்!   நாட்டின் மதிப்புமிக்க பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது.  மக்களின் வரிப்பணம்  வண்டி வண்டியாகக் கடத்தப்படுகிறது.

நாட்டுக்கு விசுவாசமற்ற ஊழியர்கள்  நாட்டுக்கு ஏகப்பட்ட நட்டத்தை ஏற்படுத்துகின்றனர்.  யார் இவர்களைக் கேட்பது?  நட்டத்துக்கு மேல் நட்டம், என்ன தான் செய்ய?  ஒரு பக்கம் நாட்டுக்குள் வர அனுமதிப்பதும்  நாட்டுக்கு நட்டம் தான்.  உள்ளே விட்டு,  பின்னர் அவர்களைக் கைது செய்வதும்  நாட்டுக்கு நட்டம் தான்.   அரசாங்க ஊழியர்களால்  நாட்டுக்கு  ஏகப்பட்ட ஏன் கோடிக்கணக்கில் நட்டம், நட்டம், நட்டம்!

இந்த வீணடிப்பகளுக்கெல்லாம்  காரணம் அரசாங்க ஊழியர்கள் தான்!இவர்களை என்ன செய்யலாம்? அப்படியே நடவடிக்கை எடுத்தாலும்  மன்னிப்பு வாரியம் இருக்கிறது மன்னிப்பதற்கு!

Sunday 4 February 2024

இது முன்னோட்டமா?

 


முன்னாள் பிரதமர் நஜிப் இப்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

தனக்கு மன்னிப்பு வாரியம் மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதாக மனு செய்திருந்தார். அவரது தண்டனை காலம்   பன்னிரெண்டு ஆண்டுகள். மன்னிப்பு வாரியம் அதனை ஆறு ஆண்டுகளாக குறைத்தது. அவர் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 210 மில்லியன்  ரிங்கிட்அதனை  50 மில்லியன் ரிங்கிட்டாக குறைத்தது மன்னிப்பு வாரியம்.

மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவு நஜிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அவர்கள் முழுமையான விடுதலையை எதிர்பார்த்தனர்.   அபராதமும் அதிகம் என நினைக்கின்றனர்.   ஏறக்குறைய  அம்னோவின் நிலைப்பாடும் அது தான்.

ஆனால் மக்கள் என்ன நினைக்கின்றனர்?  அவர் முழுமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தான் மக்கள் நினைக்கின்றனர். அவருக்கான அபராதமும் குறைவதை மக்கள் விரும்பவில்லை. மக்கள் பணம்,  அவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். அரசியல்வாதிகளின் திருட்டுத்தனத்தை மன்னிப்பு வாரியம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தான் மக்களின் நிலை.

அல்லது வேறு வகையிலும் மன்னிப்பு வாரியம் இதனைக் கையாண்டிருக்கலாமோ என்று நினைக்கது தோன்றுகிறது. சிறைத்தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிட்டு  அபராதத்தை முழுமையாகக் கட்டசொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காரணம் அது மக்களின் வரிப்பணம்.  நாட்டின் பொருளாதாரச் சிக்கலுக்குப் பணம் மிகத்தேவையான காலகட்டம் இது.   அதனை விட்டுவைக்கக் கூடாது.  பணத்தை கட்டாயமாக வசூலிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டு.

நஜிப் அவர்களின் வழக்கக்குப்பின்னர் இன்னும் பல வழக்குகள்  வரிசைக்கட்டி நிற்கின்றன. எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள். பல கோடிகளைக் கபளீகரம் செய்திருக்கின்றனர்.   வருங்காலங்களில்  அவர்களும் மன்னிப்பு வாரியத்திடம் மனு செய்யத்தான் செய்வார்கள். அப்போதும் அரசாங்கம் இப்போது செய்வதையே செய்ய வேண்டிய சூழல் வரத்தான் செய்யும். 

குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்மானிக்கின்றது. மன்னிப்பு வாரியம் அவர்களை மன்னித்து  தண்டனையைக் குறைக்கிறது.  அதைக்கூட மன்னித்துவிடலாம்.  அபராதத்தைக் குறைப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படியென்றால் நீதிமன்றம், தீர்ப்பு என்பதெல்லாம் வேடிக்கைக்குத் தானா!

Saturday 3 February 2024

ஏன் இது நடக்கிறது?

 

தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கல்வி அமைச்சுக்கும் ஏன் கல்வி அமைச்சருக்கும்  கூட  ஏதோ அங்காளி  பங்காளி சண்டையோ என்னவோ தெரியவில்லை! 

அதுவும் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் இந்த சண்டை கொஞ்சம் கூடுதலாகவே கேட்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!  பினாங்கு மாநிலத்தில் ஜ.செ.க. அரசாங்கம் தானே ஏன் இதுபற்றி அவர்கள் வாய் திறப்பதில்லை?  இப்படி ஒரு நிகழ்வு சீனப்பள்ளிகளுக்கு ஏற்பட்டால்  அவர்கள் வாய் திறக்காமல் இருப்பார்களா?

அதனால் தான் நாம் ஜ.செ.க. வை  நம்ப முடிவதில்லை.  அவர்கள் சீனர் நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், அவர்கள் மொழிக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்  என்பதையெல்லாம் நாம் அறிந்து தான் இருக்கிறோம்.  அது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது!  தமிழ்ப்பள்ளிகள் என்றால் அவர்களின் காதுகள் அடைத்துக் கொள்ளும்!

மலாய் பள்ளிகளுக்கு இது தேவையற்ற பிரச்சனை.  காரணம் தமிழ்த்தாய் வாழ்த்து என்பதுபோல எப்போதாவது அங்கு நடப்பது இல்லை. அது ஒவ்வொரு நாளும்  நடப்பது. அதனை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் நமது பள்ளிகளில் அது எப்போதாவது நடக்கும் ஒரு நிகழ்வு, அதற்கு ஏன் இத்தனை தடங்கல்கள் என்பது தான் நமது கேள்வி.  அதுவும் நமது பத்தாவது பிரதமர், அன்வார் இப்ராகிம்,  வந்த பிறகு தமிழ் பள்ளிகளுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள்!   இதன் மூலம் அவர் இந்தியர்களுக்கு விடுக்கும் செய்தி தான் என்ன?  ஏன் இத்தனை பகைமை உணர்வு?

அரசியல்வாதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டும். ஏன் இன்றைய அரசாங்கத்தில் இந்தியப் பிரதிநிதிகளே இல்லையா?  அவர்கள் வாய் திறப்பதற்கே வாய்ப்பில்லையா?  உங்கள் தலவர் கட்டளையிட்டால் தான் வாய் திறப்பீர்களோ?

கல்வி அமைச்சர் உரை நிகழ்த்தாமல் போனது அது இந்தியர்களை அவமானப்படுத்தும் விஷயம்.  அது பிரதமரின் உத்தரவாக இருக்கலாம்.  இதையே சீனப்பள்ளிகளுக்கு அவர் செய்யத் துணிவாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

கோளாறு என்பது நம்மிடம் தான். அது ஏன் சீனப்பள்ளிகளுக்கு நடக்கவில்லை நமது பள்ளிகளுக்கே நடக்கிறது என்பதை ஆராய வேண்டும்.  யார் திரைமறைவில் என்பது வெளியாகத்தான் செய்யும்!

Friday 2 February 2024

எதைப்பற்றியும் கவலை வேண்டாம்!

 

"பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு!" கவியரசு கண்ணதாசனின் கனல் வரிகள்!

அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று அனைத்தையும் காதில் ஏற்றிக் கொண்டிருந்தால் எதுவும் ஆகாது! 

உனக்கு  நாட்டுப்பற்று இல்லை என்று சொன்னால்  "ஆமாம் நாட்டுப்பற்று இல்லை! என்ன செய்ய? எனக்கு ஒரு வேலை கூட கொடுக்க முடியாத உனக்கு என்ன பற்றை எதிர்பார்க்கிறாய்?"  

உனக்கு மொழிப்பற்று இல்லை என்று சொன்னால் "ஆமாம் இல்லைதான்! நான் என்ன தான் படித்துக் கிழித்தாலும் ஓர் அரசாங்க வேலை கூட உன்னால் கொடுக்க முடியவில்லையே!  என்ன மொழிப்பற்றை எதிர்பார்க்கிறாய்?  உனக்கு ஒரு மொழியை உருவாக்கிக் கொடுத்ததே நாங்கள் தானே!"

உன் தாய் மொழி பள்ளி எதற்கு என்று கேட்கிறாய்?    "தாய்மொழிப் பல்ளிகள் எங்களுக்கு அவசியம் தேவை.  கல்வி எங்களுக்கு அவசியம். நாங்கள் என்ன மதப்பிரச்சாரத்துக்கா தாய்மொழி வேண்டும் என்கிறோம். எங்களது மொழி  எங்களது உரிமை. அந்த உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை!"

கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளை நாங்கள் தான் எதிர்த்தோம்,  நீங்கள் அல்லவே?  "யார் சொன்னார்?  இந்நாட்டில் பயங்கர்வாதிகளுக்கு  எதிராக எத்தனை உயிர்களை நாங்கள் தியாகம்  செய்திருக்கிறோம். அது போதாதா?  எனக்குத் தெரிந்த ஒரு தமிழர், இரத்தினம்  என்பவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர். நேரடியாக நான்  பார்த்திருக்கிறேன்.   இன்னும் எங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து கொண்டுதானே இருக்கிறோம்."

அதனால் நண்பர்களே!  பைத்தியக்காரனின் உளறல்களுக்கெல்லாம்  உங்களைச் சுருக்கிக் கொள்ளாதீர்கள்.  நாம் நமது வேலையைப் பார்ப்போம். நமது குடும்பங்களை வளர்த்தெடுப்போம்.  கல்வியில் சிறந்து விளங்குவோம். வியாபாரங்களில் ஈடுபடுவோம்.   வியாபாரத்தை ஊக்கப்படுத்துவோம்.

கடைசியாக ஒன்று சொல்வேன்.  நமது வியாபாரங்களை ஊக்குவியுங்கள். ஐந்து காசு கூடுதல் என்றாலும் தமிழர்களிடமே வாங்குங்கள்.  நமது பணம் நம் இனத்தாரிடமே பழக்கத்தில் இருக்கட்டும்.  இங்கு நாம் சீனர்களைப் பின்பற்ற வேண்டும்.  அவர்கள் தங்களது இனத்தாரிடமே வாங்கும் பழக்கம் உடையவர்கள்.  அதுவே நமக்கும் - அந்தப் பழக்கம் வர வேண்டும்.

ஆமாம் எதைப்பற்றியும் கவலை வேண்டாம். பைத்தியக்காரனைப் பைத்தியம் பிடித்து அலைய விடுங்கள். நம் முன்னேற்றம் தான் அவனது பைத்தியத்தை இன்னும் அதிகமாக்கும். அது தான் நமக்கு வேண்டும். அது போதும்!

Thursday 1 February 2024

ஊழல் மலிந்துவிட்டதா?


 நாட்டில் ஊழல் மலிந்துவிட்டதா என்று கேட்டால் அதற்கான பதில் வெறும் 'ஆம்!' இல்லை! எத்தனை 'ஆம்!' வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்! அந்த அளவுக்கு நாட்டில்  ஊழல் மலிந்துவிட்டது!

இந்த அபரிதமான ஊழல் வளர்ச்சிக்கு  யார் காரணம்?  வேறு யாரும் அல்ல.  நாட்டின் மிகப்பெரிய விசுவாசியான, நாட்டுப்பற்று மிக்க, இனப்பற்றுமிக்க முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரைத் தவிர  வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும்?

இதில் அதிசயம் என்னவென்றால்  இவருக்குப் பின் வந்தவர்களும் அவரது வழியை முற்றிலுமாக பற்றிக் கொண்டனர் என்பது தான்!  யாரும் அதனை விடத் தயாராக இல்லை என்பது சோகம்!

இன்று நாட்டில் வெளிநாட்டவரின் அதிகமான  எண்ணிக்கைக்குக் காரணம் இந்த ஊழல் தான்.  அதனை ஒழிக்க ஏன்  யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால் அதில் ஒரு சிலருக்குப் பணம் கொட்டோ கொட்டு என்று  கொட்டுகிறது!   அந்த வருமானத்தை எப்படி தடுப்பது?   தடுக்க வழி தெரியவில்லை அதனால் வெளிநாட்டவரின் வருகை  பொறாமை  அளிக்கும் அளவுக்கு மிஞ்சிவிட்டது! 

இப்போது நமது பத்தாவது பிரதமர், அன்வார் இப்ராகிம் வருகைக்குப் பின்னர் தான் இலஞ்சம், ஊழலுக்குக் காரணமானவர்கள் மீது  சட்டம் பாய ஆரம்பித்திருக்கிறது!  அதனால் தான்  இத்தனை ஆண்டுகள்  சட்டத்தையே மதிக்காத  ஆண்ட அரசியல்வாதிகள் இப்போது கதற ஆரம்பித்திருக்கின்றனர்!   விசுவாசமில்லை,  ஒற்றுமை இல்லை,  அழிந்துவிடுவோம்  என்றெல்லாம் ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

மலாய்க்காரர்கள் அழிந்துவிடுவார்கள் என்று பேசும் டாக்டர் மகாதிர் தான்  இந்த இலஞ்ச ஊழலின் தந்தை என்று அடித்துக் கூறலாம். அவர்  தான் நாட்டை அழித்தவர், கல்வியை அழித்தவர், ஒற்றுமையை அழித்தவர் எல்லாவற்றையும் விட நாட்டின் மாண்பை அழித்தவர்! உலக அரங்கில் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியவர்.

ஒரு காலத்தில் மலேசியா என்றாலே  வலிமையான நாடு  என்கிற பெயர் இருந்தது.   இப்போது எதுவும் இல்லை. ஏதோ  வங்காளதேசம் போல் காட்சியளிக்கிறது!  இந்த ஊழல்வாதிகளினால் நாட்டில் வேலை இல்லை! நமது  இளைஞர்கள் வெளிநாடுகளை நோக்கி ஓடுகின்றனர். 

இப்போதுள்ள நிலைமையில் ஊழலை ஏற்றுமதி செய்யலாம்!