Sunday 31 December 2023

வளர்ச்சி வரவேற்கத்தக்கது!

 

இந்த 2023-ம் ஆண்டு இந்தியர்களின் தொழில் சார்ந்த வளர்ச்சி  எப்படி இருந்தது என்று கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.

 தமிழர்கள் வணிகத்தில் இன்னும் முனைப்புக் காட்ட வேண்டும்  என்று தான் சொல்லத்  தோன்றுகிறது. பலவேறு தொழில்களில் நாம் ஈடுபடுகிறோம்.  சென்ற  ஆண்டைப் பார்க்கும் போது உணவகத் தொழிலில் தான் நாம் அதிகம் ஈடுபாடு காட்டுகிறோமோ என்று தோன்றுகிறது.

தவறு என்று நாம் சொல்ல வரவில்லை.  எங்குப் பார்த்தாலும் உணவகங்கள் திறப்புவிழா காண்கின்றன.  பழைய பாணியில் இல்லாமல்  எல்லாம் நவீன பாணி உணவகங்களாக  இருக்கின்றன. 

உணவகங்களுக்கு ஆள் பற்றாக்குறை என்று சொன்னாலும்  உணவகங்கள்  திறப்புவிழா  தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

ஆனாலும் ஒரு வகையில் நாம் திருப்தி அடையலாம்.  நமக்கு என்ன தொழில் தெரியுமோ  அதில் ஈடுபடுவது தான்  சரியானது.  அதைத் தான் இன்று நமது சமூகத்தினர் செய்து கொண்டிருக்கின்றனர்.

இளைஞர் பலர் கணினி தொழிலில் ஈடுபடுவதும்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  நல்ல முயற்சியே.  ஆனால் நிறைய உழைப்பு தேவை. மேலும் இந்தத் துறை  வெளிநாட்டவரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொழில்.

வேறு பல தொழில்களிலும் நமது இளைஞர்கள் பரவலாகச் செய்து வருகின்றனர். எல்லாம் வரவேற்கக் கூடிய  முயற்சிகளே.  இன்னும் நாம் வளர வேண்டும்.  பல்வேறு தொழில்களில் ஈடுபட வேண்டும்.  வரும் புதிய ஆண்டில் இன்னும் பல முயற்சிகளை நம்  இளைஞர்கள்  மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய நிலையில்  உணவகங்கள் தான் நம் இளைஞர்களுக்குக்  கைகொடுக்கின்றன.  பரவாயில்லை.  ஏற்றுக்கொள்ளலாம். அவரவர் தெரிந்த தொழில்களில் ஈடுபடுவது தான்  சிறப்பு. அந்த வகையில் நம் வளர்ச்சியின் முதல் கட்டம்  உணவகத்துறை தான்.  வருங்காலங்களில்  இங்கிருந்து தான்  நமது தொழில்கள் கிளைவிட்டுப் பரவ வேண்டும்.

வருகின்ற ஆண்டில் தொழில்துறையில் நமது பங்கு அதிகமாயிருக்கும் என நம்பலாம்!

Saturday 30 December 2023

மித்ரா முடக்கப்படுமோ??

 

      நன்றி: வணக்கம் மலேசியா

மித்ரா  அமைப்பு இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு இனி தெக்கூன் முன்னுக்குத் தள்ளப்படுகிறதோ  என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது  சமீபத்திய நடவடிக்கைகள்.

தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர்  டத்தோ எவோன் பெனெடிக் அவரது துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இருவரும் சந்தித்து உரையாடிருக்கின்றனர்.

அந்த உரையாடலின் போது டத்தோ ரமணன் அவர்கள்  இப்போது இந்தியர்களின் தொழில் முனைவர் மேம்பாட்டிற்காக தெக்கூன் மூன்று கோடி வெள்ளி ஒதுக்கியிருக்கிறது என்பதோடு அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதாகப் பெசியிருப்பதாகவும் தெரிகிறது.

டத்தோ ரமணன்   அவர்களின் பரிந்துரையை வரவேற்கிறோம்.  மூன்று கோடி வெள்ளி என்பது போதாது தான்.  இத்தனை ஆண்டுகள் தெக்கூன் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை.  அதனால்  அந்தப் பணம்  இந்திய தொழில் முனைவர்களுக்குச் சரியாக சென்று சேரவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். ஆனால் இப்போது மித்ராவில் ஏற்பட்டிருக்கும் சச்சரவினால்  தெக்கூன் பலரின் கவனத்தை  ஈர்த்திருக்கிறது.

ஆனாலும் டத்தோ ரமணன் அவர்களுக்கு நாம் ஞாபகத்திற்குக் கொண்டுவருவது:  இந்தப் பணம்  இந்திய தொழில் முனைவோருக்கு மட்டுமே இருக்க வேண்டும்.  அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டாலும்  அப்படித்தான் இருக்க வேண்டும்.  அதாவது நூறு விழுக்காடு  தொழில் முனைவோருக்காவே இருக்க வேண்டும்.  

உண்மையைச் சொன்னால் இப்போது தெக்கூன் மட்டுமே இந்திய தொழில் முனைவோருக்குக்  கைகொடுக்கும்  என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.  மித்ராவைப் பற்றி நம்மால் எதனையும் கணிக்க முடியவில்லை.  முன்னாள்  ஒற்றுமைத்துறை அமைச்சர் செய்த சில அடாவடித்தனங்களால் அந்த அமைப்பு பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் ஒற்றுமைத்துறை அமைச்சு என்றால்  அதற்குக் கடைசி  காலம் நெருங்குகிறதோ என்று  நினைக்கத் தோன்றுகிறது. 

நம்முடைய ஆலோசனை எல்லாம் கடனுதவி வெவ்வேறு வகையில்  நமக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன.  நாம் தான் அதனைத் தேடிப் போக வேண்டும்.  இப்போதைய தொழில் முனைவோர் அனைவரும் மலாய் மொழியில்  பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்கின்றனர். கொஞ்சம் சிரத்தை எடுத்தால்  எல்லாமே சாத்தியந்தான்.

முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்!  வாழ்த்துகள்!

Friday 29 December 2023

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆபத்தா?


பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆபத்து என்பதாக அடிக்கடி  செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  அதாவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது.

ஆனால் பிரதமரோ அது பற்றி வரும் கேள்விகளுக்கு அது பற்றி சிந்திக்க தமக்கு நேரமில்லை என்பதாகச் சொல்லி  கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கேள்விகளைப் புறந்தள்ளிவிடுகிறார்!

அவர் சொல்லுவது சரிதான். தேவையற்ற கேளவிகளுக்குப் பதில் சொல்லத் தேவை இல்லை தான்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது  அதனைக் கவிழ்ப்பது, இடைஞ்சல் கொடுப்பது  என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று.

இந்த பிரதமரின் அரசாங்கத்தில் தவறு நேர்ந்தால் அதனைச் சுட்டிக் காட்டுங்கள்.  கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டால்  அதற்கான நடவடிக்கை எடுங்கள்.   வீதி ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பது  அல்லது  ஜனநாயகத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள்.   அது தான் எதிர்கட்சிகளின் வேலை. 

தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்பது  மக்களின் கடமை. அதனையும் செய்யும் உரிமை நமக்கு உண்டு. எல்லாம் ஜனநாயக ஆட்சியில் அனைத்தும் உண்டு.

இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தான்  எங்கள் வேலை என்று அதற்காகவே பிறந்தோம் என்பது போல செயல்படுவது சிறுபிள்ளைத்தனமாகவே நமக்குத் தோன்றுகிறது. அன்று பட்டுக்கோட்டையார் சொன்னாரே 'ஆளும் வளரணும்  அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி'  என்பது போல  அறிவு வளர வேணடும்.  சும்மா என்னவோ பெரிய மனிதர்களைப் போல ஆடை அணிந்துவிட்டால் அறிவு வளர்ந்து விட்டதாக  பொருளில்லை.

ஏதோ ஒரு காலகட்டத்தில் ஷெரட்டோன் நடவடிக்கை என்று சொல்லி  அரசாங்கத்தைக் கவிழ்த்தார்கள்.  அதிலிருந்து பதவி என்றால் என்ன என்கிற  ஆசை, ஆர்வம் எல்லாம் எதிர்கட்சியினருக்கும்  வந்துவிட்டது போலும்.  இப்போது துபாயில் கவிழ்க்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.  நடக்கட்டும்.   நமக்கு என்னவோ வேலையற்ற வீணர்களின் வீணான வேலை என்பதாகத்தான் படுகிறது.

நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும்  என்பது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை.  எப்படியாவது  மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும். பொய்களைப் பரப்பியாவது பதவிக்கு வரவேண்டும்.

ஒற்றுமை அரசாங்கம் மீதமுள்ள இன்னும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும்.  அது தான் நடக்கும்!

Thursday 28 December 2023

தண்ணீரின் விலை 5.00 வெள்ளியா?

 

பெரும் தங்கும் விடுதிகளில் ஒரு  கிளாஸ் தண்ணீர் ஐந்து வெள்ளி என்றால்  அதனைத் தூக்கி வீசிவிட்டுப் போவோம்!  காரணம் அங்கு அதன் விலை அப்படித்தான் இருக்கும் என நாம் அறிவோம்.


அதுவே சாதாரண உணவகங்களில்  நிலை வேறு.  அங்குப் பெரும்பாலும்  20 காசுகள் அல்லது மிஞ்சிப் போனால் ஒரு வெள்ளி.  இதனை  நாம் பார்த்திருக்கிறோம். 

ஆனால் பெரும் ஓட்டலுமல்ல சாதாரண உணவகம் தான். அங்கு ஒரு கிளாஸ் தண்ணிரின் விலை  ஐந்து ரிங்கிட் என்றால்  நமது மனநிலை எப்படி இருக்கும்?  அதுவும் சுற்றுலா நகரமான லங்காவியில் இது நடந்திருக்கிறது!

லங்காவி நகரம் என்பது சுற்றுலா பயணிகளிடையே  மிகவும் பிரபலம். வெளிநாட்டுப் பயணிகள் மட்டும் அல்ல உள்நாட்டிலிருந்தும் நிறைய பேர் விடுமுறைகளில் அங்கு வருகைப் புரிகின்றனர். அரசாங்கமும் சுற்றுப்பயணிகள்  லங்காவிக்கு வருவதை ஊக்குவிக்கின்றது.

ஆனால் சில வியாபாரிகள் செய்கின்ற இது போன்ற விஷமத்தனங்கள்  அந்த தீவின் பெயரையே நாறடித்து விடுகின்றது. ஒரு கிளாஸ் தண்ணீர்  இந்த விலை என்றால் மற்ற பொருள்களின் விலை எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இத்தனைக்கும்  'டியுட்டி - ஃபிரீ' நகரம்  என்கிறார்கள்.

இவ்வளவும் செய்துவிட்டு  அந்த உணவகத்தின் முதலாளி  தனது வேலையாள் செய்த தவறு என்று வேலையாள் மீது பழி போடுகிறார்! முதலாளியின் உத்தரவு இல்லாமல்  ஒரு தொழிலாளி தனது விருப்பத்திற்கு  விலையைப் போட முடியுமா? இத்தனை ஆண்டுகளாக அந்த தொழிலாளி அந்த விலையில் தான் தண்ணீரை விற்பனைச் செய்திருக்கிறார்.  அப்போதெல்லாம் அது தவறு என்று அவர் சொல்லவில்லை!  யாரோ ஒருவர் கண்டுபிடித்தார் அதனை  ஊடகத்தில் பதிவு செய்தார்.  இப்போது அது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.  அது தவறு என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி அல்ல எனச் சொல்லுகிறார்! 

எப்படியோ இது போன்று ஏமாற்றுபவர்களை ஊடகங்கள் உடனடியாக வெளியே கொண்டுவந்து விடுகின்றன. அவர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.   இது போன்ற ஏமாற்று வேலைகள் பரவலாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது.  விலைவாசி ஏறிவிட்டது என்று சொல்லி வியாரிகள் தங்கள் விருப்பத்திற்கு விலைகளை ஏற்றிவிடுகின்றனர்.

சாதாரண ஆறின தண்ணீர் ஒரு கிளாஸ்  ஐந்து வெள்ளி  என்றால் வெது வெது சுடு நீர்  பத்து வெள்ளியாக இருக்குமோ!

Wednesday 27 December 2023

முகக் கவசம் கட்டாயம்!

 

இனி கல்விக்கூடங்களில்   முகக்கவசம் கட்டாயம் என்பதாக  கல்வி  அமைச்சு கூறுகிறது.  

ஆமாம். கோவிட்-19பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல மரண எண்ணிக்கையும்  கூடிக் கொண்டே போகிறது.

எது எப்படியிருப்பினும் மக்களின் பதுகாப்பு  என்பது முக்கியம். அதுவும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியம்.  வந்தபின் பாதுகாப்புக் கொடுப்பதைவிட ஆரம்பத்திலேயே  நாம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால்  பிரச்சனைகளைக் குறைத்து விடலாம். 

அதைத்தான் கல்வி அமைச்சு கூறுகிறது. நமக்கு அது தேவை என்றால் அதனைக் கடைப்பிடித்துத் தான் ஆக வேண்டும். பள்ளிப் பிள்ளைகளின்  நலன் தான் முக்கியம்  என்பதாகக் கல்வி அமைச்சு கூறுகிறது. நம் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தான் அறிவுரைக் கூறி   முகக்கவசம் ஏன் முக்கியம் என்பதை விளக்கி  அவர்களுக்கு  வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

ஒன்றுமில்லை ஏற்கனவே பெருந்தொற்றின் போது  நாம் என்ன செய்தோம்?   மாணவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்ய வேண்டும்  என்பதைச் சுகாதார அமைச்சு கூறிய வழிகாட்டல்களின் படி  அப்போது என்ன செய்தோமோ அதனையே இப்போதும் செய்ய வேண்டும். அவ்வளவு தான்.    மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்கள்,  மற்றும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வேலையாள்களும் செய்து தான் ஆக வேண்டும்.   அது கட்டாயம்.

இது போன்ற பெருந்தொற்று என்பது ஆபத்தானது என்பது நமக்குத் தெரியும்.   உலகையே உலுக்கிய ஒரு தொற்று நோய். பல இலட்சம் பேரை காவு வாங்கிய ஒரு தொற்று.  இப்போது அந்நோய்  கட்டுப்பாட்டில்  உள்ளது என்பது உண்மை தான்.

நம் நாட்டைப்பொறுத்தவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதனை ஓரளவு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட்டோம்.  ஆனாலும் அதற்கு முடிவே இல்லை என்பது போல  அவ்வப்போது வெவ்வேறு வடிவத்தில் தலைநீட்டிக் கொண்டு தான் இருக்கிறது.  அதற்கான தடுப்பு முறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு தான் வருகின்றன.

என்ன செய்வது?  சுகாதார அமைச்சு சொல்லுவதைத்தான்  நாம் கேட்க வேண்டும். கல்வி அமைச்சு சொல்வதைத்தான் மாணவர்கள் செவி சாய்க்க வேண்டும்.  எல்லாம் மாணவர்களின் நலனுக்குத்தான்.

மாணவர்களே!  முகக்கவசம் அணியுங்கள். நெருக்கமாக இருக்காதீர்கள். எஸ்.ஒ.பி. விதிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். இதுவும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.  வாழ்க மலேசியா!

Tuesday 26 December 2023

ஏன் இந்த அவசரம்?

 


மித்ரா அமைப்பு சமீபத்தில் தான் பிரதமர் துறைக்கு மாற்றம் கண்டது.

அந்த மாற்றத்தைத் தான் பலரும் விரும்பினர். காரணம் மித்ரா சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால்  அதற்குப் பிரதமர் துறை தான் சரியான தீர்வு என்பதாகப்  பலரும் கூறிவந்தனர்.  அதனைப் பலரும் வரவேற்றனர். ஒரே காரணம்  பிரதமர் துறையின் நம்பகத்தன்மை.

ஆனால் என்ன காரணமோ இந்தியர்கள் எதனை விரும்புகிறார்களோ  அதற்கு நேர்மாறாக செயல்படுவதே நமது பிரதமரின் இயல்பாகப் போய்விட்டது!  காரணம் தெரியவில்லை.  அவர் பிரதமர் ஆனதிலிருந்து அப்படித்தான் செயல்படுகிறார்!  இந்தியர்கள் விரும்பியது போல எதுவும் நடக்கவில்லை. காரணம் அவர் மலேசியர்களின் பிரதமர்! இந்தியருக்கு மட்டும் அல்ல என்பது தான்.

மித்ரா அமைப்பு ஏற்கனவே ஒற்றுமைத்துறை அமைச்சிலிருந்த போது பலவேறு புகார்கள். யார் மீது? ஒற்றுமைத்துறை அமைச்சர் மீது தான்.  அவரால்,  எழுப்பட்ட புகார்கள் மீது எந்த பதிலையும் கூற முடியவில்லை! மழுப்பலான பதிலைத் தவிர  வேறு எந்த பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.  நாடாளுமன்றத்திலும் அவருடைய பதில்கள் அப்படித்தான் அமைந்தன.  கடைசிவரை அந்த மழுப்பலோடு அவர் விடைப்பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் தான்  மித்ரா பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது. ஏதோ  நமக்குத் திருப்தி அளித்ததோ இல்லையோ, டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  தன்னால் முடிந்ததைச்  செய்தார். கல்விக்கு ஆக்கபூர்வமாகச்  செய்தார்.  ஒரு சில வேண்டாத வேலையும் செய்தார். இருப்பினும் அவரைப் பாராட்டலாம்.  தொடர்ந்து அவரின் பார்வையில்  இருந்திருந்தால்  இன்னும் கொஞ்சம் நல்ல காரியங்களையும் செய்திருப்பார்.

இப்போது அந்த அமைப்பை மீண்டும் ஒற்றுமைத்துறைக்கே கொண்டு வருவது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கே மாற்றிவிட்டு அதற்குச் சப்பைக்கட்டு கட்டும்   வேலையில் சிலர் ஈடுப்பட்டிருக்கின்றனர். பிரதமர் அதைப் பார்ப்பார் இதைப் பார்ப்பார், அதைக் கவனிப்பார் இதைக் கவனிப்பார், அவரைக் கேட்டுத்தான் அனைத்தும் நடக்கும்  என்றெல்லாம் கதைக்கின்றனர்.

பிரதமருக்கு  ஏன் வேறு வேலைகள் இல்லையோ?   மித்ரா  அவ்வளவு முக்கியமா என்ன? அவருக்கு இருக்கும் வேலையில் மித்ரா என்ன அவ்வளவு முக்கியமா? அவருக்கு மலாய்க்காரர் பிரச்சனையோ பெரிய பிரச்சனையாக அவரைக் குத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மித்ராவைப் பற்றி அவருக்கு என்ன கவலை?

நமக்கு என்னவோ மித்ரா வை இரவோடு இரவாய் ஒற்றுமைத் துறைக்கு கடத்திக்கொண்டு போய் விட்டதாகவே தோன்றுகிறது!

Monday 25 December 2023

இனி பணக்காரர் உணவா?

 

மலேசியர்களின் பிரபல காலை உணவான  ரொட்டி சானாய் இப்போது பணக்காரர்களின் உணவாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது அதன் விலை.

சமீபகாலம் வரை அதன் விலை ரி.ம. 1,50 காசு தான். சில இடங்களில் அதன் விலை ஒரு வெள்ளியாகத்தான் இருந்து வந்தது.  ஏன் நீண்ட காலமாக அதன் விலை ஒரு வெள்ளி தான்.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.  அதன் விலை ஒரு நிலையில் இல்லை.  அவரவர் விருப்பதிற்கு ஏற்ப அதன் விலையை ஏற்றுகின்றனர்  குறைக்கவும் செய்கின்றனர். 

ஒரு மலிவான உணவு என்கிற நிலை மாறி  இப்போது  அதுவும்  விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்ட ரொட்டி சானாய் ஒன்றுக்கு  9.00 (ஒன்பது) வெள்ளி கொடுத்திருக்கிறார்!  அது மட்டுமா?  முட்டை ரொட்டிக்கு  11.00 வெள்ளியும், நாசி லெமாக்கின் விலை 10.00 வெள்ளியுமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு வேளை இந்த உணவு பட்டியல்  விமான நிலையங்களிலோ அல்லது பெரும்  ஹோட்டல்களிலோ என்றால்  நாம் புரிந்து கொள்ளலாம்.  சாதாரண  உணவகங்களில் இந்த விலை என்றால் அதனை ஏற்றுக்கொள்வது  கடினமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போது சாதாராண உணவகங்களும் இப்படித்தான் செய்கின்றன என்பதும் நடைமுறையில் உள்ளன. 

போகிற போக்கைப் பார்த்தால் இதற்கும் கூட அரசாங்கம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்  என்கிற நிலை வரலாம்.  ரொட்டி சானாய், நாசி லெமாக் போன்றவை மிக எளிமையான உணவுகள்.  மிகச் சாதாரண மனிதர்களே அதன் வாடிக்கையாளர்கள்.  அதன் விலையை விருப்பத்திற்கு ஏற்றுவார்களானால்  யார் என்ன செய்ய முடியும்?

எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் உண்டு. விலையேற்றம் என்றால் விருப்பத்திற்கு விலையை ஏற்றுவது அல்ல.

ஒன்று மட்டும் தெரிகிறது. இன்றைய நிலையில் 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்'   என்கிற நிலைமையில் தான் உணவகங்கள் செயல்படுகின்றன.   யார் என்ன சொல்வது என்கிற நிலையில் தான் செயல்படுகின்றன.

ரொட்டி சானாய், நாசிலெமாக் போன்ற காலை உணவுகள்  இனி பணக்காரர் பட்டியலில் சேருமோ!

Sunday 24 December 2023

விருந்திலும் இப்படியா?

 

என்ன கொடூர மனிதர்கள்?  திருமணம் முடிந்தாயிற்று. அதாவது தாலி கட்டியாயிற்று.      இனி திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  திருமண விருந்து தான் பாக்கி.  அதுவும் முடிந்துவிட்டால்  எல்லாம் சுபம், அவ்வளவு தான்.

ஆனாலும்  ஒரு சிக்கல்   விருந்து தொடங்கும்  நேரமாகிவிட்டது.  சமையல் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  நிறுவனம் இன்னும் வந்து சேரவில்லை. நேரம் ஆக ஆக அவர்கள் வரவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இப்போது மணப்பெண் வீட்டாருக்குப் பெரும் சிக்கல்.  "எங்கடா போய் தொலைஞ்சீங்க!" என்று ஏசுவதைத் தவிர வேறு எதையும் செய்யுக்கூடிய  நிலையில் அவர்கள் இல்லை.  ஆமாம் 1000 பேருக்கு சாப்பாடு ஏற்பாடுகள் செய்துவிட்டு, 13,000 வெள்ளியையும்  கொடுத்து ஏமாந்து விட்டு இப்போது    கடைசி நேரத்தில்  கழுத்தை அறுத்துவிட்டார்களே என்று நினைக்கும் போது யாரிடம் சொல்லி புலம்புவது?

இருந்தாலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு  ஏதாவது செய்ய வேண்டுமே என்று  நினைத்து  உடனடியாகக் களம் இறங்கினார்கள்.  ஆனால் அவர்களுக்குச் சுமார் 400 பேருக்குத் தான் சமைத்துப் போட    முடிந்தது.  பலவித உணவுகளைச் சுவைக்க வேண்டியவர்கள்  ஏதோ ஒரு கோழி  கறியோடு  முடித்துக் கொண்டார்கள்.  இன்னும் ஒரு சில புண்ணியவான்கள்  அப்பம் பாலேக் போன்ற உணவு பொருள்களைக்  வாங்கிக் கொடுத்து  அவர்களுக்கு  உதவினார்கள்.  ஏதோ ஒரு வகையில் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி!

இப்போது நம் நாட்டில்  நிறையவே ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.  பெயர், ஊர் எல்லாம் தெரிந்து கொண்டு அவர்களின் வங்கிப் பணத்தைக் களவாடுகிறார்கள். நிறையவே தில்லுமுள்ளுகள்  நடந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் திருமணங்களில்  கூட இப்படி நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை..  ஏன் நம்  இந்தியர் திருமணங்களில்  நாம் இப்படிக் கேள்விப்பட்டதுமில்லை.  ஒரு வேளை  நாம் செய்கின்ற முறை சரியானதாகக்  கூட இருக்கலாம்.  நாம் ஆன்லைனில் ஆர்டர் செயவதில்லை.   நேரடியாகவே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி  நாம் முடிவெடுக்கிறோம். அதுவே சிறந்த முறையாக இருக்கலாம்.  அல்லது நமது திருமணங்களில் இப்படி நடப்பதை நான் அறியாமல் இருக்கலாம்.

ஒன்றை நாம் குறிப்பட வேண்டும்.  இப்படி ஒரு நிறுவனம் நடத்துவதே சாதாரண விஷயமல்ல. அதுவே நமது தொழிலாகிவிட்டது. அதனை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். ஏமாற்றிப் பிழைப்பது என்பது நீண்ட நாள் ஓடாது.  சிறிது காலம் ஏமாற்றலாம். நீண்ட நாள் ஓடாது.

ஏமாற்று வேலை என்பது கொஞ்சம் நாள் தான்  தாக்குப் பிடிக்கும். அந்தப் பிழைப்பு நமக்கு வேண்டவே வேண்டாம்!

Saturday 23 December 2023

இனி உங்களுக்கு யோகம் தான்!


 உண்மையைச் சொல்லுங்கள். யாருக்கு யோகம் வரும்?  'செய்வன திருந்தச் செய்'  என்கிறார்களே, அதனைக் கடைப்பிடிக்கிறார்களே,  அவர்களைத்தான் யோகம் தேடி வரும் . 

செய்வதைத் திருந்தச் செய்தால் அனைத்தும் உங்களைத் தேடி வரும். இதனை முதல் கடமையாக நமது அரசியல்வாதிகள் கடைப்பிடித்திருந்தால் நம் இனத்தவரின் நிலையே வேறு. 

ஆனால் அனைத்தும் இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது. ஈப்போ ராஜா  பெர்மேஸ்வரி  பைனுன் மருத்துவமனையில் பாதுகாவலாராக  பணிபுரியும் யோகேஸ்வரிக்கு மாட்சிமை தங்கிய பேரரசர், தனது பிறந்த நாளில்,  பி.பி.என். விருது கொடுத்து  பெருமைப்படுத்தியிருக்கிறார்.

யோகேஸ்வரி அப்படி என்ன சாதனைப் புரிந்திருக்கிறார்?  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், வாகனக்கள் -   இவர்களுக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கிறார்.  மருத்துவமனையில் எந்த இடத்திற்குப் போக வேண்டும்,  எந்த இடத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும் - இப்படி சிறிய சிறிய உதவிகள், வாகனங்களை நிறுத்துவதற்கு வழி காட்டுதல்  போன்ற எல்லா வழிகளிலும் அவர் உதவியாக இருப்பது மருத்துவமனைக்குப் போகும் பொது மக்கள்   அவருக்கு நல்ல பாராட்டுகளைக் கொடுத்தனர்.

நோயாளிகள், பொது மக்களின் பாராட்டுகள் இவைகள் அனைத்தும் அவரை பேரரசரிடம் விருது பெறுகின்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டது.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான்.  உண்மையும், நேர்மையும், உழைப்பும்  இருந்து விட்டால்  நமக்குப் பட்டம் பதவியெல்லாம் தானாக தேடி வரும்.  இது தான் உலக இயல்பு.  யோகேஸ்வரிக்கு யாரும் சிபாரிசு செய்யவில்லை. அவர் வேலையை அவர் செய்தார். பொது மக்களின் பாராட்டுதலைப்  பெற்றார்.  அது ஊடகங்களில் வைரலானது.  கடைசியில் பேரரசரின்  பார்வைக்கும் சென்றது.  நல்ல செயல்கள் செய்யும் போது  அனைத்தும் அவர் பக்கம் துணை நிற்கும்.  அது தான் நின்றது.

யோகேஸ்வரி பெரிய பதவியில் இல்லை. அவர் செய்கின்ற  அந்த சாதாரண தொழிலில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.மக்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார். மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்.

அது போதுமே! பேரரசரின் விருது பெற!

Friday 22 December 2023

உணவுகளில் தொடரும் அவலங்கள்!

 

சான்விச் எதற்காக வாங்குகிறோம்.?  ஏதோ ஓர் அவசரத்துக்காக  அல்லது தற்காலிகப் பசியைப் போக்க அல்லது    ருசிக்காக - இப்படிப்  பல காரணங்கள் உண்டு.


ஆனால் ஒரு வயதான பெண்மணி அதனைச் சாப்பிட்ட பின் இறந்து போனார். அதுவும நம் நாட்டடில்.  இறந்து போன பின் யார் என்ன செய்ய முடியும்? அதற்குப் பல்வேறு  காரணங்கள்  இருக்கலாம். ஆனால் போன உயிர் போனது தானே. என்னசெய்ய முடியும்?

இந்த சம்பவம் நடந்தது  திரங்கானு மாநிலத்தில்.  நெடுஞ்சாலை, ஓய்வுப்பகுதியில்  வாங்கப்பட்ட    அந்த சன்விச் ஒரு மாதுவின் உயிரைப் பறித்திருக்கிறது.  அது தான் செய்தி.

இது போன்ற சான்விச் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிம்  சிறுவியாபாரிகள்  கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.  கெட்டுப்போன அல்லது அதன் நாள் முடிந்த பின்னர் அதனை விற்பனைச் செய்வது என்பது தகாத செயல். அது வாடிக்கையாளர்களுக்குக் கெடுதலை ஏற்படுத்தும்.

ஆனால் நாள் தள்ளிப்போனதை  விற்பனைச் செய்யக்கூடாது என்று  தெரிந்தும், தெரியாதது போல் விற்பனை செய்வது  கண்டிக்கதக்க செயல்.  அதனைச்  சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போது ஒரு பெண்மணி இறந்து போனார் என்பதுசாதாரண விஷயமல்ல.   நஞ்சு கலந்து உணவைச் சாப்பிட்டிருக்கிறார் அதனால் தான் இறந்து போனார்   என்பது  இப்போது அந்தப் பாதையில் பயணம் செய்பவர்கள்  அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  இனி அந்த பாதையில் பயணம் செய்பவர்  யாரும் எந்த உணவுப் பொருளையும்  அந்த ஓய்வுப்பகுதியில்  வாங்கமாட்டர்கள் என நம்பலாம்.

ஒருவர் செய்யும் தவறினால் எல்லா வியாபாரிகளும்  பாதிக்கப்படுகின்றனர்.  இதனை வியாபாரிகள்  புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் அனைவருமே சிறு வியாபாரிகள். இப்போது தான் வியாரத்துறையில் காலெடுத்து வைத்திருக்கின்றனர்.  ஆரம்பமே அவர்களுக்கு இப்படி ஓர் ஆபத்தா?

வியாபாரம் செய்பவர்கள், எந்த இனத்தவராக இருந்தாலும் சரி,  நாணயம் இருக்க வேண்டும். கெட்டுப்போன உணவுப்பொருள்களை விற்று  பணம் சம்பாதிப்பது கேவலமானது. சும்மா கேவலம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.  சிறைக்குப் போகும் சாத்தியமும் உண்டு.

இது போன்ற அவலங்கள் தொடரக்கூடாது  என்பதே நமது வேண்டுகோள்!


Thursday 21 December 2023

எந்த மாற்றமும் தேவை இல்லை!

 

மித்ரா பற்றியான புதியதொரு பிரச்சாரம்  கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. யார் இதன் பின்ணனியிலிருந்து இயக்குகிறார்கள் என்பது  நேரடியாக யார் மீதும் குற்ற சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மித்ரா இப்போது பிரதமர் துறையின் கட்டுப்பாட்டில்  இருந்து வருகிறது. அதன்  நிதி பங்கீடும்  ஓரளவு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எப்படியோ நம் அனைவரையுமே அவர்களால் திருப்திபடுத்த முடியாது.  ஆனாலும்  செல்லுகின்ற பாதை சரியான பாதை தான்.

இந்த நேரத்தில் மித்ரா அமைப்பை ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்ற வேண்டும்  என்று  குரலொலி கேட்கின்றது!  இது ஏன் என்று நமக்குத் தெரியவில்லை. 

ஒற்றுமைத் துறையில் இருந்த போது தான்  அதனை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும்  என்று பேசியவர்கள் ஜனநாயக செயல் கட்சியினரும்,  பி.கே.ஆர். கட்சியினரும் தான். அதை அனைவரும் ஏற்றனர்.  காரணம் அது தேவையாக இருந்தது. இப்போது அவர்களே மாற்றம் வேண்டும் என்று சொல்லுவது  எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பிரதமர் துறைக்கு மாற்றியது நல்ல முடிவு. அதனை நாம் வரவேற்கிறோம். காரணம் கணக்கு வழக்கெல்லாம் பக்காவாக வைக்கப்படும். ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. 

ஒற்றுமைத்துறைக்கு மீண்டும் மாற்றுவது  சரியான முடிவாக இருக்காது. அது மீண்டும் பாழைய நிலைக்கே  திரும்பும் என்பதே நமது எதிர்பார்ப்பு.  மீண்டும் அது அரசியல்வாதிகளின் கைகளுக்கே  போகும் என்பதுதான்  நமது  அனுபவம்.  யாரோ சிலருக்கு அது பயன்படுமே தவிர  மற்றபடி எதிர்பார்க்கும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்க நியாயமில்லை.

எப்படியோ  நாம் நமது கருத்தைத் தான் சொல்ல முடியும். மற்ற்படி  அதற்கு மேல் பிரதமர் தான் அதற்கான முடிவை எடுக்க வேண்டும்.

மித்ராவுக்கு, இன்றைய நிலையில், எந்த மாற்றமும் தேவையில்லை!


Wednesday 20 December 2023

தெக்குன் உங்களுக்கு உதவும்

 

இனி 'மித்ரா' வைக் கூப்பிட்டு திட்ட வேண்டிய அவசியமில்லை. தொலைபேசியில் அவர்களை அலறவிட வேண்டிய அவசியமில்லை. டிக்டோக்கில்  உங்களுடைய  திறமையைக் காட்ட வேண்டியதில்லை.

மித்ராவின் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் மிகச்
 சாமர்த்தியமாக  அந்தப் பிரச்சனையை 'தெக்கூன்' பக்கம் திருப்பிவிட்டிருக்கிறார்!

நான் அவரைக் குறை சொல்ல மாட்டேன். வேறு ஒரு வழியைக் காட்டியிருக்கிறார்.  நாம் எப்போதுமே 'தெக்கூன் மலாய்க்காரர்களுக்கானது'  என்று ஒரு கணக்கு வைத்திருக்கிறோம். ஆனால் அது அப்படியில்லை. இந்தியர்களுக்கும்  உதவத்தான் செய்கிறார்கள். நாம் நம்பத்தயாராக இல்லை.  ஏன்? என் மகன் கூட கடன் வாங்கி அதைக் கட்டியும் முடித்துவிட்டார்.  ஏன் மித்ராவை அணுகவில்லை என்று கேட்டேன்.  "அவன்களுக்கு வியாபாரம் என்றால்  என்னவென்று தெரியாது!" என்றார்.

சரி   தெக்கூன்  செய்த இந்தியர்களுக்கான  கடன் உதவிகளைப் பார்ப்போம்:
          
இந்த ஆண்டு நவம்பர் வரை: 2100 இந்திய வியாபாரிகளுக்கு  மூன்று கோடியே தொண்ணுற்றொன்பது  இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு சுமார் 1800 இந்திய வியாபாரிகளுக்காக மூன்று கோடி  ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தெக்கூன் 1998 - ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார்  24,790  இந்திய வியாபாரிகள்  43 கோடி 75 இலட்சம்  கடனுதவி பெற்றிருக்கின்றனர்.

தெக்கூன் கடனுதவி மலாய்க்காரர்களுக்கு  மட்டும் என்பது ஒருவேளை  ஆரம்ப காலகட்டத்தில் இருந்திருக்கலாம்.  அது அங்கு வேலை செய்பவர்களின் மனப்பாங்கு அப்படி  இருந்திருக்க வேண்டும்.  ஆனால் தெக்கூன் என்பது அனைத்து இனத்தவருக்குமானது.   

நமது பிரச்சனையெல்லாம் மலாய்க்காரர் வேலையிலிருந்தால் அங்கே  போவதைத் தவிர்க்கிறோம்.  நமக்குக் கிடைக்காது என்று உறுதியாக நம்புகிறோம்.  ஆனால் இந்திய வியாபாரிகளும் பெரும் அளவில் பயன் பெற்றிருக்கின்றனர்.  தொடர் முயற்சி வெற்றியைத் தரும். நமக்குப் பொறுமை இல்லை.  

உங்கள் கவனத்தை  இனி தெக்கூன் பக்கம் திருப்புங்கள். 

Tuesday 19 December 2023

இது தான் நமது செயல்திறன்!

 

                                     உடைப்பட்ட  ஸ்ரீ நாகம்மன் ஆலயம், செந்துல்

கோவில் பிரச்சனை என்றால் அது எல்லாகாலங்களிலும் நம்மைத் தொடரும் பிரச்சனையாகத்தான் இருந்து வருகின்றது!

இந்து சங்கம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அவர்களாலும்  முடியவில்லை.   கோவில் கணக்கெடுப்பு என்று ஒன்று எடுத்தால் அதற்குள் புதிதாக  கோவில்கள் முளைத்து விடுகின்றன!   நமது மக்களையும்  குறைசொல்ல முடியவில்லை. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க அவர்கள் தயாரில்லை.

சமீபத்தில் செந்துல் ஸ்ரீநாகம்மன் ஆலயம் சம்பந்தப்பட்ட   மேம்பாட்டு நிறுவனத்தாரால் திடீரென ஒரு நாள் காலை எந்த அறிவிப்பும் இன்றி உடைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இப்போது அரசியல்வாதிகள் கைகளில் ஆலயம் அகப்பட்டுக் கொண்டு 'நீயா நானா' போட்டி நடந்து கொண்டிருக்கிறது!

இதில் சவாரஸ்யமான செய்தி என்னவென்றால்  சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் இந்த ஆலயத்தை அப்புறப்படுத்தச் சொல்லி ஆலய நிர்வாகத்திற்குப்  பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னரே  அறிவிப்பு  செய்துவிட்டதாகச்   சொல்லப்படுகிறது.  

கோவில் நிர்வாகத்தை நாம்  கேள்வி கேட்க முடியாது.  நமக்குள்ளேயே சில  கேள்விகள் கேட்டுக் கொள்ளலாம்.  இவர்கள் ஏன் அப்போதே நடவடிக்க எடுக்காமல் விட்டனர்?  அப்போது அரியணையில் இருந்தவர்கள் ம.இ.கா.வினர் தான்.   பதிமூன்று  ஆண்டுகள் பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது நடப்பு அரசாங்கத்தின் மீது பழிபோடுகின்றனர். 

உண்மையைச் சொன்னால்  இதற்கும் அரசாங்கத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.  கோவில் நிலம் அமைந்திருப்பது  தனியார் நிலத்தில்.  அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எப்போதோ அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். 

கடந்த ஓர் ஆண்டாகத்தான் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதில் சில  முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஏன் மேம்பாட்டு நிறுவனம் திடீரென உடைக்கும் முடிவை எடுத்தது என்பது புரியவில்லை.  அதில் ஏதும் அரசியல் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.

பதின்மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு  இப்போது ம.இ.கா.வினர் கொதித்து எழுகின்றனர்!  என்ன செய்வது நமது அரசியல் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. கோவிலுக்கே இந்த நிலைமை என்றால்  எல்லாப் பிரச்சனைகளிலும்  இப்படித்தான் பதின்மூன்று ஆண்டுகள்  கழித்துத் தான்  செயல்படுவார்களோ!

கோவில் சொத்து குல நாசம் என்பார்கள். . எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள் என்று மட்டும் தான் சொல்ல முடியும்.

Monday 18 December 2023

இரண்டாவது இடம்!

 

ரொட்டி சானாய் என்றால் நம் நாட்டில் அறியாதவர் யார்? அந்த அளவுக்கு நாட்டில் பிரபலம்.

இந்த ரொட்டி மலேசியாவில் அறிமுகப்படுத்தியவர்கள்  நமது மாமாக் உணவகங்கள் தான். தமிழ் முஸ்லிம்கள் தான் இங்கு இதனை  அறிமுகப்படுத்தியவர்கள்.

அப்பொழுதெல்லாம்  இந்த ரொட்டியை பரோட்டா ரொட்டி என்று தான் அழைத்தனர்.   தமிழ் நாட்டில் இன்றும் பரோட்டா  தான்.  எங்களது பள்ளி காலத்தில் பரோட்டா தான் முக்கிய உணவு. சாப்பிட்டால் அவ்வளவு எளிதில் பசி எடுக்காது. விலையும் மலிவு. உண்மையைச் சொன்னால் ஆரம்ப காலத்தில் அது இந்தியர் உணவாகத்தான் இருந்து வந்தது. பின்னர் மலாய்க்காரர்களின் அமோக ஆதரவைப்பெற்ற ரொட்டியாக மாறிவிட்டது.  அவர்களின் உணவகங்களிலும் அது தலையாய  காலை உணவாக  ஏற்பட்டுவிட்டது.

அதன் பின்னர் ரொட்டி சனாய்  மலேசியர்களின்  தலையாய உணவாகவே மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம்  காலை நேர உணவு என்றால் அது பரோட்டா தான்.  அந்த அளவுக்குப் பெயர் பெற்று விட்டது.

எங்களைப் போன்றவர்கள் இன்னும்  அந்தப் பழைய மரபுப்படி  ரொட்டி சானாயைச் சாப்பிட்டு வருகிறோம்.  ஆனால் இப்போதோ சொல்ல முடியவில்லை. அதில் கோழியைப் பயன்படுத்தி பல வகைகளில் ரொட்டி சானாயைச் சாப்பிடுகின்றனர்.  காலை நேரத்தில் கோழி இறைச்சியா? ஐயோ! நம்மால் தாங்க முடியாது!  அது மட்டும் அல்ல. அதில் சீனியையும் சேர்க்கின்றனர்!

மலேசியர்களால்  மிகவும் விரும்பி சாப்பிடும்  காலை உணவு  ரொட்டி சானாய்  என்றாலும் அது உடல் நலனுக்கு உகந்ததா என்று பார்த்தால்  கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்.    உடல் நலனுக்கு ஏற்ற உணவு அல்ல என்பதுதான் பொதுவான கருத்து.  ஆதுவும் தினசரி சாப்பிடுவதால் வரும் கேடுகள் ஏராளம் என்கின்றனர்  விபரம் அறிந்தவர்கள்!

டாக்டர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. நல்ல உணவாக இருந்தால்  சாப்பிடுவதில்  எந்தத் தவறும் இல்லை. உடல் நலனுக்குக் கேடு என்றால்  கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான். 

இப்போது ஏன் ரொட்டி சானாய்க்கு  இந்த அறிமுகம் எல்லாம்?  உலகளவில் காலை நேர உணவகளில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. மலேசியர்களின் மனதை மிகக் கவர்ந்த உணவு.  இந்த உணவு பட்டியலை தயாரித்தவர்கள்  Taste/Adlas   என்னும்  உலக நிறுவனம். அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு  பற்றிய பட்டியலை கொடுத்திருக்கின்றனர். ஆனால் உடல் நலனுக்கு ஏற்ற உணவா என்பது அவர்களின் பட்டியலில் இல்லை!

நாம் சப்பிடும் உணவு  நமக்கு ஏற்ற உணவு தான்!

Sunday 17 December 2023

மீண்டும் கோவிட்-19!

 


மீண்டும் கோவிட்-19  அல்லது கோரொனா,  நாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பெருந்தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிற  இந்த வேளையில்  மரண எண்ணிக்கையும் கூடிக்கொண்டு தான் போகிறது.

நாம்  பெருந்தொற்று காலத்தில்  முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம்.  முகக்கவசம் அணிந்துகொள்வதில் கொஞ்சம்  பாதுகாப்பும்  இருக்கிறது  அதனை ஏன் நாம் அலட்சியம் செய்ய வேண்டும்?

முகக்கவசம் பாதுகாப்பு என்றாலும் ஏற்கனவே நமக்குச் சொல்லப்பட்ட  அவைகளையும் நாம் பின்பற்றலாம்.  பெருங்கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்க்கலாம்.  

பாதுகாப்புக்காக முன்பு ஊசி போட வேண்டிய  கட்டாயம் இருந்தது. இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  அது இப்போது தேவை இல்லை. ஆனால் இரண்டாவது ஊசி போடாதவர்கள்  போட வேண்டிய நிலைமை வரும். ஊசி போடுவது பற்றி அப்படி இப்படி என்று பல விளக்கங்கள்  அப்போதே வெளியாயின.  நாம் சாதாரண மனிதர்கள்.  அரசாங்கM என்ன சொல்லுகிறதோ அதைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவரை டாக்டர்களும் அரசாங்கம் சொல்லுவதைத்தான் செய்கிறார்கள். அப்புறம் என்ன? 

ஊசி வேண்டாம் என்று சொல்லுபவர்கள் உண்டு.  தேவை இல்லை என்று சொல்லுபவர்கள் உண்டு.   குறைபாடுகள் உண்டு  என்று சொல்லுபவர்கள் உண்டு. ஆனால் ஏதொரு சம்பவம் ஏற்பட்டால் அப்போது நாம் என்ன சொல்வோம்?    நாம் அதனைச் செய்யவில்லையே, இதனைச் செய்யவில்லையே  என்று புலம்பிக் கொண்டிருப்போம்.   இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.  அதனால் அரசாங்கம் என்ன சொல்லுகிறதோ  அதனைக் காது கொடுத்துக் கேட்போம். அரசாங்கம் சொல்லுவதைக் கேட்போம். நல்லதோ, கெட்டதோ சுகாதார அமைச்சு சொல்லுவதைக் கடைப்பிடிப்போம்.

இடையில்  புகுந்து குழப்பம் விளைவிப்பவர்களை நம்ப வேண்டாம். இப்போதைக்குச் சுகாதார  அமைச்சு தான்  நமது உயிருக்கு உத்தரவாதம். அதனால்  யாரோ சொல்லுவதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல்  சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அதை மட்டும்  கேட்போம்.

வியாதிகள் வரும் போகும். நாம் தான் எசரிக்கையாக இருக்க வேண்டும்.

Saturday 16 December 2023

அது நமது வேலையல்ல!

 

மித்ராவின் செயல்பாடுகள் ஓரளவு  நமக்குத் திருப்தி அளிக்கின்றன.

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக  மித்ரா தொடர்ந்து பாடுபடும் என்பதாக  மித்ராவின் தலைவர்  டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்  உறுதியளித்திருக்கிறார்..    கல்லூரி மாணவர்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம்  அளிக்க வேண்டும்.  அளிப்பதாகவே நம்புகிறோம்.

ஆனால் ஒரு விஷயம் பளிச் எனத் தெரிகிறது.  மித்ரா என்பதே இந்தியரின் உருமாற்றுத் திட்டம் தான்.  அது ஆரம்பிக்கப்பட்ட போது  இந்தியர்களை வியாபாரிகளாக  உருவாக்க வேண்டும்  என்கிற பெருந்திட்டம் இருந்தது. அத்திட்டம் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது  போன்ற  தோற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதுவும் டத்தோ  ரமணன்  வந்த பிறகு  அவர் அதனைப் பின்னுக்குத்தள்ள முயற்சி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது.

அது அவரின் குற்றம் அல்ல.  சிறு வியாபாரிகளுக்கு உதவுவது  என்பது மிகச் சிக்கலான ஒன்றாகவே தோன்றுகிறது. சிறு வியாபாரிகள், குறு வியாபாரிகள்  இவர்களுக்கு  உதவுவது பிரச்சனைக்குரியதாக  இருந்தாலும் அதனை மித்ரா கைவிட்டுவிடக் கூடாது  என்பதே நமது ஆலோசனையாக இருக்கும்.  ஒவ்வொரு வருடமும் மித்ரா எத்தனை வியாபாரிகளை உருவாக்கிருக்கிறது  என்கிற  விபரமும் பொது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

இந்த நேரத்தில் மித்ரா  வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது ஏன் என்று கேள்வி கேட்பது சரியானதாக இருக்குமென்றே தோன்றுகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு இலட்சம் ரிங்கிட்  ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அது ஏன் என்று கேட்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

இந்தியர் உருமாற்றமும் தொகுதிக்கு ஒரு இலட்சம் கொடுப்பதும்  என்ன சம்பந்தம் என்பது  நமக்குப் புரியவில்லை.  இதில் என்ன 'லாஜிக்' என்பதும் விளங்கவில்லை. தொகுதிக்குப் பணம் கொடுப்பது  அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை ஏன் மித்ரா ஏற்றுக் கொண்டது என்பது   டத்தோ ரமணனுக்குத் தான் வெளிச்சம்.  ஏதோ எப்படியாவது  கொடுத்த பணத்தை  முடித்துவிட வேண்டும் என்கிற  கட்டாயம் தான்  ரமணனிடம்  தெரிகிறது.  அது சரியா?  என்றால் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக  சந்தேகப்படுவதற்கு நிறையவே வழி இருக்கிறது. பணத்தை 'இப்படிக் கொடுத்து அப்படி வாங்கக்கூடிய' சாத்தியம் உண்டு  அல்லவா? மக்கள் சந்தேகப்படுவதற்கு நிறயவே சாத்தியங்கள் உண்டு.  ஆனால் இதில் பிரதமர் துறை சம்பந்தப்பட்டிருப்பதால்  எதுவும் ஆகாது என்கிற நம்பிக்கையும் உண்டு.

ஆக, ஏற்கனவே சொன்னது போல  வியாபாரிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதே சமயத்தில் நாடாளுமன்றங்களுக்கு ஒரு இலட்சம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது நமது ஆலோசனை. பார்ப்போமே!

Friday 15 December 2023

கிறிஸ்துமஸ் வாழ்த்து தேவை இல்லை!

 

''ஜாக்கிம்'  அமைப்பு பல வேளைகளில் தனது எல்லையை மீறி செயல்படுவதாகவே நமக்குத் தோன்றுகிறது.

கேக் விற்பனையாளர்கள் தாங்கள் விற்கும் கேக்குகளில் 'மெரி கிறிஸ்துமஸ்'  என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது  என்று யார் கொடுத்த அதிகாரத்தில் அவர்கள் பேசுகிறார்கள்?

கிறிஸ்துமஸ் திருவிழா என்பது இந்நாட்டிற்குப் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட  ஒரு விழாவா?  எத்தனையோ ஆண்டுகளாக அந்தத் திருவிழா இந்நாட்டில்  கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மட்டும் அல்ல.  தீபாவளி, சீனப்புத்தாண்டு, ஹரிராயா போன்ற  திருவிழாக்கள்  காலங்காலமாக கொண்டாடப்படுகின்ற  திருவிழாகள்.  எல்லாப் பெருநாள்களிலும் பலவித கொண்டாட்டங்கள் உள்ளன. 

பெருநாள் காலங்கள்  என்றாலே  வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களைக் கவர பலவித அலங்காரங்கள் செய்வர்.  கேக் விற்பனை செய்கின்ற கடைகளில் அவர்களும் தங்களது பொருள் விற்பனைக்கு  இது போன்ற காலங்களில் 'மெரி கிறிஸ்மஸ்' என்று எழுத்துக்களில்  விளம்பரம் செய்வார்கள்.  இதெல்லாம் சாதாரண விஷயம்.  கிறிஸ்துமஸ் விழா என்பதை தவிர அதற்கு வேறு எந்த முக்கியத்துவமும்  கிடையாது.

ஆனால் ஒரு சாதாரண ஜாக்கிம் என்கிற  அரசாங்க அமைப்பு எப்படி இது போன்ற நிறுவனங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? அவர்களுடைய வேலை எல்லாம்  உணவு பொருட்களில்  தடை செய்யப்பட்டவைகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது தான். அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அதனை மீறி செயல்படுகிறார்கள் என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

அதை எழுதக்கூடாது, இதை எழுதக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக் கூடாது  என்றெல்லாம் உத்தரவு போட இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

கிறிஸ்துமஸ் திருவிழா என்பது யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அன்றைய தினம் நாட்டில் விடுமுறை தினம்.  உல்கெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்கள். அதே போல மலேசியாவிலும் உண்டு. இதில் வர்த்தகர்களின் பங்கு அதிக,ம்.  வர்த்தகர்களுக்குத்  தங்களது பொருள்களை விற்பனை செய்வதில்  அதிக அக்கறை உண்டு.  ஆண்டு கடைசியில்  மிச்சம் மீதி இருப்பவைகளை விற்றுத் தீர்க்க வேண்டும்.

ஓர் அரசாங்க அமைப்பான ஜாக்கிம்  வர்த்தர்களின் தொழிலில் தலையிடுவது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே இருக்கக் கூடாது என்பது போல நடந்து கொள்வது, அதற்கு அப்புறம் பெருநாட்களே கொண்டாடக் கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடிய வாய்ப்புக்களை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்! அவர்களைக் கேட்பவர்கள் யார்?

நமக்குத் தெரிந்தவரை   அவர்கள் வேலையெல்லாம்  ஹோட்டல் ஹோட்டாலாகப் போய் அறை கதவுகளைத் தட்டுவதுதான். மற்றவைகள் எல்லாம் அவர்களே இழுத்துப் போட்டுச் செய்வதாகத்தான்  நாம் எடுத்துக் கொள்வோம். 

எல்லை மீறுவதை நம்மால் வரவேற்க முடியாது!

Thursday 14 December 2023

இனி நீண்ட காற்சட்டை!

 


இனி மலேசிய ஆண்கள் நீண்ட  சிலுவார்களை அணிந்து தான்  வெளியே  செல்லவேண்டும்   என்கிற கட்டாயம் ஏற்படும் போல் தோன்றுகிறது.

நாம் அரசாங்க அலுவலகங்களுக்கு வேலையாகப் போனால்  நாம் அதற்கேற்றவாறு உடை அணிந்து செல்லலாம்.  ஆனால்  நாம் தினசரி அலுவலில் இருக்கிறோம்.  எல்லாருமே நீண்ட காற்சட்டை அணியும்  வேலையில்லை.  பலர் அரைக்கால் சிலுவார்  அணியும் வேலைகளில் இருக்கின்றனர். குறிப்பாக தோட்டப்புறங்களிலே  நிர்வாகத்தில் வேலை செய்வோர் அரைக்கால் சிலுவார் தான் அணிவர்.  அதே போல என்ஜினியர்கள் பலர் அரைக்கால் சிலுவார் அணிவதும் உண்டு.

இவர்கள் எல்லாம் ஒரு வேலையாக அரசாங்க அலுவலகம் போகும் போது  நீண்டகாற்சட்டை தான் அணிந்து கொண்டு  போக வேண்டும்  என்பது  சுத்த பைத்தியக்காரத்தனம்  அல்லவா?  சில வேலைகளுக்கு அரைக்கால் சிலுவார் அணிவது  தான் மரபு. சிலர் வேலையில் இருக்கும் போது அப்படியே அரசாங்க அலுவலகங்களுக்குப் போவார்கள்.  அவர்களைத் தண்டிப்பது சரியா?

ஒன்றும் புரியவில்லை.  இளம்  பெண்கள் அரைக்கால் அணிவது சரியில்லை  என்று சொல்லுவதை நாம் புரிந்து கொள்ளுகிறோம்.அதற்காக வயதானவர்களைக் கூட நாங்கள் விட்டுவைக்க மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு  கல்லெறிவது சரியான செயலாகத் தெரியவில்லை.  ஆண்கள் அப்படி ஒன்றும் கவர்ச்சியாக உடை அணிவதில்லை.

சும்மா ஏதையாவது சொல்லி குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற  போக்கு இப்போது  அதிகமாகத் தோன்றுகிறது.   முதலில் பெண்கள். சும்மா சொல்லக் கூடாது.  ஒரு சில பெண்கள் மிக மோசமாக உடை  அணிவதை நாம் பார்க்கிறோம்.  நாமும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் வயதானவர்கள், வயதான ஆண்கள் கூட  ஆபாசமாக உடை அணிகிறார்கள் என்று சொல்லுவதில் எந்த வகையில் நியாயம்  என்று  நமக்கே புரியவில்லை. 

வயதானவர்களைக்  கைலியைக் கட்ட சொல்லி வற்புறுத்துவது  சரியானதாகத் தோன்றவில்லை. அந்தக் கைலியை இதுவரை எத்தனை பேர் கட்டியிருப்பார்களோ தெரியவில்லை.   அதனைப் பாவித்த பின்னர்  சலவைக்குப் போடுவார்களா? அதன் மூலம் வியாதியும் பரவக் கூடிய சாத்தியம் உண்டு.

சும்மா ஒரு கைலியைக் கொடுத்து 'இந்தா அணிந்து கொள்' என்று சொல்லுவது முட்டாள்தனம். அதன் பின்னர் அந்தக் கைலியை அந்த நபருக்கே கொடுத்து விடுவார்களா? அதைவிட இனி மலேசியர்கள் நீண்ட காற்சட்டையே அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவது  நல்லதாக இருக்கும்!

Wednesday 13 December 2023

இனி நமது வேலையைப் பார்ப்போம்!

 

பிரதமர் அன்வாரின் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுவிட்டது.  தமிழர் பலருக்கு அதிருப்தி   தமிழரல்லாதாருக்குப் பரம திருப்தி.

இருந்தாலும் அமைச்சரவை மாற்றம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.  நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இது தான் அமைச்சரவை.  வேறு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  ஏற்றுக் கொள்ளுங்கள்.  அதனைப் பிரதமரும் உறுதிப்படுத்திவிட்டார்.

இனி நமது வேலையை நாம் பார்க்க வேண்டியது தான். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசியல்வாதிகளின் பக்கம் போகாதீர்கள். வெளியே இருந்து கூக்குரலிட்டுக் கொண்டிராதீர்கள்.  அது நமது வேலையல்ல.  அரசியல்வாதியின் உதவி தேவை என்றால் உங்கள் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாடுங்கள். உங்கள் பிரச்சனையை 'நான் கேட்கமாட்டேன்' என்று அவர்கள் சொல்லப்போவதில்லை.

நாம் எப்போதுமே தமிழர்களை நம்பியே வாழ்ந்த கூட்டம். அதனால் தான் 'தமிழன்! தமிழன்!'  என்று கூப்பாடு போடுகிறோம்.  அடுத்த நான்கு ஆண்டுகளில் நாமும் பழகிக் கொள்ளுவோம். பழக்கத்திற்கு வந்துவிட்டால்  அது இயல்பு ஆகிவிடும்.  அது சீனராக இருக்கலாம் அல்லது மலாய்க்காரராக இருக்கலாம். யாராக இருந்தால் என்ன? அவர்கள் நமக்குச் சேவை செய்யத் தான் இருக்கிறார்கள். சேவையும் செய்வார்கள்.

அதனால் அரசியல் பேசிக் கொண்டிருப்பதைவிட நமது வேலையில் கவனம் செலுத்தினால் நாலு காசு நாம் பார்க்கலாம்.   நமது உழைப்பில் கவனம் செலுத்தினால்  நாம் உயர்ந்து நிற்கலாம்.  அரசியல்வாதி நம்மை உயர்த்திவிடப் போவதில்லை. அவனை உயர்த்திவிடும் வேலை நம்முடையதல்ல.  அவனை உயர்த்திக் கொள்ள ஆயிரம் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.  ஆனால் நம்மை உயர்த்திக் கொள்ள தனி ஆளாக நாம் தான் போராட வேண்டும்.

நம் வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். நாம் வெற்றி பெறுவது தான் நமக்கு  முக்கியம்.  நாம் ஒரு வளமான சமுதாயம் என்றால் அரசியல்வாதி நம்மை ஏமாற்ற மாட்டான்.  ஆனால் நாம் அரசியல்வாதியோடு சேர்ந்தால்  அவன் தான் உயர்வான். நாம் தாழ்வோம். இது நிச்சயம்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நமது உயர்வைப்பற்றி நாம் சிந்திப்போம். வாழ்த்துகள்!

Tuesday 12 December 2023

அமைச்சரவை மாற்றம்

 


சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில் நடந்தது என்ன?  புதிதாதக நான் எதையும் சொல்லிவிடப் போவதில்லை. எல்லாருடைய கருத்தும் ஒன்றாகத்தான்  இருக்கிறது.   தமிழர்களைப் பொறுத்தவரை இது பெரிய ஏமாற்றம் தான்.

சரி, அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தின் நியாயத்தையும்  நாம் ஆராய வேண்டியுள்ளது.

இத்தனை ஆண்டுகள் அதாவது அறுபது ஆண்டுகளுக்கு மேல் யார் பதவியில் இருந்தார்கள்?  அவர்கள்  எல்லாரும் தமிழர்கள் தான். .  ஓயாமல் அவர்களைக் குறை கூறியவர்களும் நாம் தான்!  அவர்கள் சய்த பல தவறுகளின் காரணத்தினாலே தான்   அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்  என்கிற  எண்ணமே நமக்கு ஏற்பட்டது.

அப்படி ஒரு சூழ்நிலை வந்ததால் தான்  நாம் அவர்களை எதிர்த்தோம்.  அவர்கள்  அன்று சரியான பாதையைப் போட்டுக் கொடுத்திருந்தால்  இந்த சமுதாயம் இந்த அளவுக்குச் சீரழிந்து போய் இருக்க நியாயமில்லை.  

ம.இ.கா. பல வழிகளில் இந்தியர்களுக்கு உதவியிருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும்  அதே சமயம் பல வழிகளில் நம்மை வீழ்த்தியும் இருக்கிறது.

முக்கியமாக கல்வி, பொருளாதாரம்  - இவைகள்  தான் நாம் காலங்காலமாகப்  பேசி வரும்  விஷயம்.    மிக மிக முக்கியமான விஷயத்தில்  நம்மைக் கவிழ்த்தவர்கள் ம.இ.கா.வினர் தான்.  துன் சம்பந்தன் அவர்கள் ஆரம்பித்த தேசிய நிலநிதி கூட்டுறவு  சங்கத்தோடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது நமது பொருளாதார  முயற்சி.  அதற்குப் பிறகு வந்தவை அனைத்தும்  நம்மை முன்னுக்குப் போக விடாமல்  பின்னுக்கும் இழுக்கும் முயற்சி தான்.  டாக்டர் மகாதிர் தான் அதன் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.  இந்தியர் முன்னேறுவதை  அவர் விரும்புவில்லை. அதற்கான ஒத்துழைப்பு ம.இ.கா. தலைமைத்துவம்  அவருக்குக் கொடுத்தது.

கல்வியிலும் அரசாங்கம் கொடுத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு  நமது உரிமகளை விட்டுக்கொடுத்தவர்கள் ம.இ.கா.வினர்.  தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட மாநியங்கள், நிலங்கள் அனைத்திலும் கைவைத்தவர்கள் ம.இ.கா.வினர்.   ஆழமாகப் போனால் அங்கே துரோகச் செயல்கள்  அநேகம்.  

இந்த துரோகச் செயல்களினால் தான்  இன்று மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது  நமது சமுதாயம்.  இதையெல்லாம் கூட இருந்து பார்த்தவர்  தான் இன்றைய பிரதமர்.  தமிழர்களை நம்ப முடியவில்லை என்பதால் தான் இன்று அவர் ஒரு தமிழரற்ற அமைச்சரைவையை அமைத்திருக்கிறார்.  இது எப்படிப் போகிறது என்று பார்ப்பதற்குதான்    இப்போதைய அமைச்சரவை.

இந்த மாற்றம் நமக்குப் பெருமை அளிப்பதாக இல்லை என்பது உண்மை தான்.  ஒரு வேளை இதுவே நமக்குச் சரியான பாதையாகக்  கூட இருக்கலாம்.  ஒரு பாதை சரியாக அமையவில்லை என்றால் இன்னொரு பாதை  அமைத்துப் பயணம் செய்வது தான் புத்திசாலித்தனம். அவ்வளவு தான்.  இது சரியா தவறா என்பதை  இப்போது சொல்ல முடியாது. காலந்தான் சொல்ல வேண்டும்.  இன்னும் நான்கு ஆண்டுகளில் இதற்கான பதில் தெரியும்.

அதுவரை பொறுமைக் காப்போமே!

Monday 11 December 2023

ஜ.செ.க. தடம் மாறுகிறதா?

 


ஜனநாயக செயல் கட்சி தடம் மாறுகிறதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

இத்தனை ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக தங்களது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட  தமிழர்கள் இன்றைய தலைமைத்துவத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்  என்று அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில்  சீக்கியர் ஒருவரை முழு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது  நமக்கு  எந்த ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் மனிதவள அமைச்சராக  தமிழர் ஒருவரை நியமித்திருந்தால்  அது ஏற்புடையதாக இருக்கும்.   ஆனால் ஜ.செ.க.  அதனைச் செய்யவில்லை. சீனர் ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

ஜ.செ.க. வின் ஆரம்பகாலம் என்பது முற்றிலுமாக - முதன்மையானவர்களாக  இருந்தவர்கள் தமிழர்கள்.  இன்றைய தலைவர்கள் அதனை உணரவில்லை.  இது நான்றிகெட்டத்தனம்  தான்.  ஆனால் என்ன செய்வது?  அதிகாரம் அவர்கள் கையில்.  வளமும் அவர்கள் கையில்.  நம்மை அவர்கள் அலட்சியம் செய்கின்றனர் என்பது புரிகிறது. அது தான்  சீனர்களின்  வழிவழியாக  வரும் குணம்.  முதலின் அணைப்பது.  வளர்ந்த பின் எட்டி உதைப்பது என்பது சீனர்களின் குணம்.  அது ஒரு கட்சியாக இருந்தாலும் அதைத்தான் அவர்கள் செய்வார்கள்.

இன்னொரு முக்கிய துரோகமும் இந்த மாற்றத்தில் நடந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் அவர்களை - ஒரு முன்னாள் அமைச்சராக இருந்தவரை  - துணை அமைச்சராக  இந்த மாற்றத்தில் பதவி இறக்கம் செய்திருப்பது  ஜ.செ.க. வின் கேவலமான செயல்.  ஒரு சீனரை அவர்கள் இப்படி செய்ய முடியுமா? குலசேகரன்  இதனை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது  தான்.  அப்படி அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்  இதோடு அவரைக் காலி செய்து விடுவார்கள்.   எல்லாம் ஒரு வற்புறுத்தல்  என்பதைத் தவிர வேறு என்ன? 

ஆமாம் நம்முடைய பலம் என்பது எதிலும் இல்லை.  அரசியல் கட்சிகள் வாக்கை வைத்துத்தான்  நம்மை எடை போடுகிறார்கள். ஆனால் இது போன்ற நன்றிகெட்டத்தனம் சீனர்களிடம் மட்டும் தான் இருக்கும்.  அரசியலில் மட்டும் அல்ல. எந்தத் துறையாக இருந்தாலும்  அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

நாம் சீனர்களிடம் தொங்கிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அவர்களால் நமது சமூகத்திற்கு  எந்த ஒரு  நல்லதும் நடக்கப்போவதில்லை. அது அரசியலாக இருந்தாலும் அதே கதிதான்.

மீண்டும் அதே கேள்வி தான்.  நாடாளுமன்றத்தில் எத்தனையோ  ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த  தமிழர்கள் இருக்கிறார்கள்.   அவர்கள் யாரும் அமைச்சராக வருவதற்குத்  தகுதி இல்லாதவர்களா என்று நானும் அந்தக் கேள்வியைக் கேட்கிறேன். அப்படி இல்லையென்றால் தகுதியானவர்களைச்  செனட்டராக ஆக்கிவிட்டு அமைச்சராகப் போடலாமே?

இனி ஜ.செ.க. வில்  உள்ள தமிழர்கள் மூட்டையைக் கட்டலாம்!

Sunday 10 December 2023

மீண்டும் டிங்கி காயச்சலா?

 

நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக  சுகாதார அமைச்சின்  தலைமை இயக்குநர் அறிவித்திருக்கிறார்.

ஒரு பக்கம் கொரோனா பயம்; அதுவும் அதிகரித்துக் கொண்டே  வருகிறது என்பதாக செய்திகள் வருகின்றனர்   இப்போது டிங்கியும் சேர்ந்து கொண்டது.   மக்கள் நாம்,  அலட்சியமாக இருக்கும் வரை  வியாதிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். 

கொரோனா தொற்று  வேண்டாமென்றால் பாதுகாப்பாக இருங்கள்   முகத்தில் முகக்கவசம்  அணிந்து கொள்ளுங்கள்.  கூட்ட்ம் உள்ள இடங்களைத் தவிருங்கள்.  வெளியே சுற்றாதீர்கள். இப்படி  சில கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தால் கொரோனாவினால் வரும் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். 

டிங்கி என்பது  தேங்கி நிற்கும் நீரால் வருவது.  வீட்டுக்கு வெளியே  ஏதாவது தண்ணீர் தேங்கி நிற்கிறதா பாருங்கள்.  காலி டப்பாக்காள், கொட்டாங்குச்சிகள், உடைந்த மங்குகள் - இவைகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதா பாருங்கள்.  அவைகளின் தண்ணீர் தேங்காதபடி  அவைகளைக் கவிழ்த்துப் போடுங்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் தான் டிங்கி கொசுக்கள்  உற்பத்தியாகும்  இடம்.   அவைகளை வாழ விட்டால் அவை நமது வாழ்வுக்கு வேட்டு வைத்து விடும்!

சுகாதார அமைச்சு அவ்வப்போது கொரொனா பெருந்தொற்றை தவிர்ப்பது எப்படி,  டிங்கியின் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்று அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறது.  நாம் தான் அதனை அலட்சியம் செய்கிறோம்.  தாக்குதல் வரும்வரை  அலட்சியப்படுத்துவதும்  வந்த பிறகு 'ஐயோ! ஐயகோ!  என்று கூப்பாடு போடுவதும்  நாம் தான்!  யார் என்ன செய்ய முடியும்?  அப்படியே பழகி விட்டோம்.  நம்மால் நம்மை மாற்றிக்கொள்ள  முடியவில்லை.  எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைக்  குறை சொல்லுவதையே  வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.  பிறரையே குறை சொல்லுவது என்கிற பழக்கத்தை நாம் கொண்டிருப்பதால் நமது குறை என்னவென்று நமக்குத் தெரிவதில்லை!

குறிப்பிட்ட அந்த இரண்டு வியாதிகளையும் தவிர்க்க எளிமையான வழிகளைக் கூறியிருக்கிறேன்.  வேறு பல வழிகளும் உண்டு.  மருத்தவர்கள் தான் சரியான வழிகளைக் கூறவேண்டும்.

எப்படியோ மீண்டும் டிங்கி பரவுகிறது. கொரோனா பெருந்தொற்று அதுவும் சிறகடித்துப் பறக்கிறது!  நாம் அதனை முறியடிப்போம்!

Saturday 9 December 2023

மணி கட்டுவது யார்?

 

        There are no 'pendatang' says Sultan of Selangor,  Sultan Sharafuddin Idris Shah.

சமீபத்திய The Star  நாளிதழுக்கு சிலாங்கூர் ஆட்சியாளர்  சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா  அவர்கள் கொடுத்த  நேர்காணலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ளும்படியான  செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

'வந்தேறிகள்' என்பதாக யாருமில்லை. அனைவரும் இந்நாட்டு மக்கள் அதிலே எந்த சந்தேகமும் வேண்டாம் என்று  கூறியிருக்கிறார்.  இதனை அரசியல்வாதிகள் தான் அரசியல் காரணங்களுக்காக இதனைப் பெரிது படுத்தி வருகின்றனர். 

இந்த உண்மையைப் பலர் பலமுறை கூறியிருக்கின்றனர். ஆனாலும் அரசியல்வாதிகளுக்கு அப்படி சொல்லுவதில் ஒரு 'கிக்' இருப்பதாகத் தோன்றுகிறது.  அதாவது அசிங்கப்பட்டுப் போன அரசியல்வாதிகளுக்கு அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க வந்தேறிகள், மதம் இவைகள் தான்  முக்கியத் தூணகளாக விளங்குகின்றன. யார் இதனை மறுப்பார்?

சுல்தான் அவர்கள் சொல்லுவதில் யாருக்கும் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் அது மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகிறதே  யார் என்ன செய்ய முடிகிறது?  யாராலும் எதுவும் செய்ய முடியவில்லையே!

நமக்குத் தெரிந்தவரை  வெறும் கண்டிப்பு என்பது மட்டும் போதாது. தண்டனையும் சேர்த்து வரவேண்டும்.  அதுவும் கடும் தண்டனை. இதைப் பேசுபவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள். அவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஆயுட் காலம் வரை  தேர்தலில் நிற்க முடியாது என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால்  போதும். ஒருவனும் அதைபபற்றி பேசவே மாட்டான்!  அது தான் அரசியல்வாதிகளின் குணம்!

அரசியல்வாதிகள் நல்லவர்கள் தான்.  ஆனால் அவர்கள் எதைப்பற்றி பேசினால்  வாக்காளர்களைக் கவர முடியும் என்பது பற்றி தான் அவர்கள்  யோசிப்பார்கள். அதனைப் பேசத் தான் அவர்கள் முயற்சி செய்வார்கள். அது சமயங்களில் அளவை மீறிப் போய் விடுகிறது.

சுல்தான் அவர்களின் இந்த அறிவிப்பை நாம் வரவேற்கிறோம். ஏன்? அரசியல்வாதிகளும்  வரவேற்கத்தான் செய்வார்கள்.  ஆனால் இது பயனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும். இது சிலாங்கூர் மாநிலத்திலாவது  நடக்குமா  என்று பார்ப்போம்.

இது பூனைக்கு மணி கட்டும் பிரச்சனை தான்!  நடக்கும் என நம்புவோம்!

Friday 8 December 2023

பதிவு ரத்தாவது ஏன்?

                                                                                                                                                       
சங்கங்களின் பதிவு  ரத்தாவது பற்றி  நாம் அடிக்கடி நாளிதழ்களில் பார்த்துத் தான் வருகிறோம்.

பலர் பல சங்கங்கள், இயக்கங்கள், மன்றங்கள் என்று என்னன்னவோ பெயரில் ஆரம்பிக்கிறார்கள்.  ஆனால் நமக்குத் தெரிந்ததெல்லாம்  அதில் பலர் நாடாளுமன்ற /சட்டமன்ற உறுப்பினர்களிடம் கையேந்துவதைத்  தான் கொள்கையாக வைத்திருக்கின்றனர்!

சரி அதைச் சொன்னால் வேறு யாரிடம் வாங்குவது என்பார்கள்! நமக்கு வாங்குவதில் தான் குறி இவர்கள் எல்லாம்  தலைவர் பதவியில் இருந்து கொண்டு அவர்களே கடைசி காலம்வரை ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அதன் பின்னர் அது தானாகவே அந்த இயக்கத்தின் பதிவு ரத்தாகிவிடும். இது நமக்கு ஒன்றும் எந்த வியப்பையும் அளிக்கவில்லை.

ஆனால் கோவில் நிர்வாகங்கள் என்பது வேறு  அதன் பதிவு ரத்து  ஆகிறதென்றால்   அங்கு நிச்சயமாக ஏதோ தில்லுமுல்லு வேலைகள்  நடந்து கொண்டிருக்கின்றது  என்பது தான் பொருள். கோவில்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பது தான் எனது கொள்கை.

சமீபத்தில் ஓரு கோவில் நிர்வாகத்தில் இதே பிரச்சனை தான். பதிவு ரத்தாகும் நிலை.  ஏன் அந்த கோவில் நிர்வாகம் பதிவை புதுப்பிக்கவில்ல? அவர்கள் சொல்லுகின்ற காரணம் முந்தைய நிர்வாகம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்காததினால்  தங்களால் புதுப்பிக்க முடியவில்லை என்பது இவர்களின் பதில்.

இந்த இடத்தில் யார் என்ன செய்ய முடியும்?  அவர்கள் ஏன் ஒப்படைக்க மறுக்கிறார்கள்? அவர்கள் கோவில் நடைமுறைகளை, புதிய நிர்வாகம்,  எதுவும் நடைமுறைப் படுத்தக் கூடாது என்பது தான் அவர்கள் பக்கத்தின்  நோக்கமாக இருக்கிறது.

பொதுவாகவே நிறைய கோவில்களில் இது போன்ற பிரச்சனைகள் எழுவதை நாம் பார்க்கிறோம்.  அதனால் தான்  செட்டியார்கள், யாழ்ப்பாணத் தமிழர்கள், தங்கள் கோவில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.   ஏன் தமிழர் கோவில்களில் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன?  இங்குத் தமிழர்கள் மட்டும் அல்ல.  மிகப் புத்திசாலிகளான மலையாளிகள், தெலுங்கர்களும் இருக்கின்றனர்!  அதனால் தான் தமிழர்களால் எந்த ஒரு கோவிலையும் நிம்மதியாக நடத்த முடிவதில்லை.

இப்போது சம்பந்தப்பட்ட அந்த கோவில் நிர்வாகத்தில் கொஞ்சம் நுழைந்து பாருங்கள்.  அப்போது தான் பிரச்சனை உங்களுக்கு விளங்கும்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு அவசியம் கோயில் வேண்டும். அதனால் தான் அவர்கள் தலையாட்டிகளாகவே இருக்கின்றனர். அதனைப் பிற இனத்தவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். சிவன் சொத்து குல நாசம் என்று தெரிந்தும் "இருந்துவிட்டுப் போகட்டும்" என்று சொல்லுபவர்களை  என்ன செய்வது?

Thursday 7 December 2023

மஞ்சள் கருவில் புழுக்கள்!

 

நாட்டில் உணவுப் பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது உண்மை தான். அதற்காக கெட்டுப்போன முட்டைகள் என்று தெரிந்தும் அதனை வியாபாரத்திற்குக் கொண்டு வருவது மிக மிக கண்டிக்கத்தக்கது.  முட்டை வியாபாரிகள் அதனைத்தான் செய்கின்றனர். அதனைக் குறைவான விலையில் வாங்கி வந்து  சிறு வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். எல்லாம்  ஓரளவு தெரிந்து தான் நடக்கிறது. வாடிக்கையாளர்களுக்குத் தான் தெரிவதில்லை!

இதோ நாசி லெமாக்  பொட்டலத்தை ஆர்வத்தோடு பிரித்த ஓர் ஆடவர்  ஆடித்தான் போனார்.   ஐந்து வெள்ளி போட்டு  வாங்கிய நாசிலெமாக் பொட்டாலம்  பாதி சாப்பிட்டும் முடித்து விட்டார். அப்போது முட்டையின் மஞ்சள் கருவில்  உயிரோடு  நெளிந்து கொண்டிருந்த  புழுக்கள் கண்ணில் பட்டுவிட்டது.  அவ்வளவு தான்!   அதன் பின்னர்  என்ன நடந்திருக்கும்  என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

நம்மிடையே நிறைய பெண்கள் சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  நாசிலெமாக் நமது உணவாக இல்லாவிட்டாலும்  நமது பெண்களும் இந்த வியாபாரத்தில்  பலர் ஈடுப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இது போன்ற செய்திகள் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில்  தான் நாமும் இதை எழுதுகின்றோம்.  நாசிலெமாக் இன்று அனைத்து மலேசியர் உணவாக மாறிவிட்டது.  எல்லாருமே தான்  விரும்பி  சாப்பிடுகின்றோம்.

இது போன்ற புழுக்கள் உள்ள பொருள்களை விற்று  நம்மால் பேர் போட முடியாது. காரணம் நாம் தவறு செய்தால்  இந்நேரம் ஒரு படையே வந்து இறங்கியிருக்கும்!  சுகாதார அமைச்சு உங்களைச் சும்மா விடாது.  முட்டையை வாங்கினீர்களா அல்லது உங்கள் வீட்டுக்  கோழி முட்டையா என்று கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுப்பார்கள்!  அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி  சங்கடத்துக்கு உள்ளாகதீர்கள்  என்பது தான் நமது நோக்கம்.

சிறு சிறு தொழில்களில் வளர்ந்து வரும் சமுதாயம் நாம்.  நம் பெயரை நாம் கெடுத்துக்கொள்ளக் கூடாது.  கடையில் வாங்குகின்ற போது நல்ல பொருளாகப் பார்த்து வாங்குங்கள்.  இன்றைக்கு முட்டை என்று செய்தி வருகிறது.  நாளை வேறு ஏதாவது, கீரை வகைகளாக இருக்கலாம்.  அல்லது கோழி இறைச்சியாகக் கூட இருக்கலாம்.   சீன வியாபாரிகள் எதனையும் தயங்காமல் விற்பனைச் செய்யும் ஒரு கூட்டம்.  சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் நாம் தான்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வளர்ந்து வரும் நிலையில் நமது மேல் உள்ள நம்பிக்கையை நாம் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது செய்தி. வாழ்க! வளர்க


Wednesday 6 December 2023

சரியான நடவடிக்கையா?


                                      Minister of  Education  Fadhilna Sidek

பினாங்கில் நடைபெற்ற  தமிழ் நிகழ்வு ஒன்றில் கடவுள் வாழ்த்துப்  பாடுவதை தடை செய்த சம்பந்தப்பட்ட  கல்வி அதிகாரி,   வேறு ஒரு துறைக்கு மாற்றப்பட்டதாக  அமைச்சரின் உதவியாளர்  தியாகராஜ்  தனது  முகநூலில்  வெளியிட்டிருப்பதாக  "வணக்கம்  மலேசியா"  செய்தி வெளியிட்டிருக்கிறது. 

அது நடந்ததா நடக்கவில்லையா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்ல. ஏதோ அவர்கள் சொல்லுகிறார்கள். நாம் கேட்டுக் கொள்ளுகிறோம். அவ்வளவு தான்.  

பொதுவாக   அரசாங்கத்தில் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது  இது போன்ற செய்திகள்   தொடர்வதும்  இயல்பு தான்.  அவர் மாற்றப்பட்டார்! அவ்வளவு தான்! பிரச்சனைக்குத் தீர்வு கண்டாயிற்று! இனி மேல் எதையும் பேச வேண்டாம்!

பொது மக்களைப் பொறுத்தவரை  இந்த "மாற்றப்பட்டார்"  என்று சொல்லுகிறார்களே அது  எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிய வாய்ப்பில்லை. என்னவோ சொல்லுகிறார்கள். நாமும் கேட்டு வைக்கிறோம். இப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறார்கள்!  ரொம்பவும் புத்திசாலிகள்!

இது போன்ற  செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான தீர்வு அவர்களை வேறு ஒரு துறைக்கு மாற்றுவது தான்.  இப்படி ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்த எந்தப் புண்ணியவானோ  தெரியவில்லை!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒருவன் தவறு செய்தான். அப்படியென்றால் அவனுக்கு அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் தெரியவில்லை. அதனைத் தெரிந்து கொள்ளவும் அவன் முயற்சி செய்யவில்லை. ஒன்றும் தெரியாத உதவாக்கரை அவன். அப்படியிருக்க அவன் ஏன் பதவியில் தொடர வேண்டும்?  அவனுக்கு ஓர் ஆண்டு சம்பளம் இல்லா விடுப்புக்  கொடுத்து, அரசாங்க நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள,  அவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இப்போது நம் நாட்டில் எதனால் இது போன்ற சம்பவங்கள்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன?  காரணம்  அவன் வயிறு தொடர்ந்து நிரம்பி விடுகிறது!  வேறு ஒரு துறைக்கு மாற்றினாலும்  அங்கேயும் அவன் தவறுகள் தொடரத்தான் செய்யும்.  அவன் எப்போது  ஒரு நல்ல குடிமகனாக மாறுவது?

இப்படி மாற்றுவது எல்லாம் சும்மா யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.  ஏற்ற தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.  தண்டனைக் கடுமையாக இல்லை என்றால்  இது போன்ற அதிபுத்திசாலித்தனமான  செயல்கள் எல்லாம்  தொடரத்தான் செய்யும்!  தட்டிக்கேட்க ஆள் இல்லை என்றால் இது நடந்து கொண்டே தான் இருக்கும்.

இது சரியான நடவடிக்கையாக நான் கருதவில்லை!

Tuesday 5 December 2023

ஓட்டுநர் உரிமம் பெற இப்படியா?


 நம் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இப்படியும் நடக்கிறது என்பது நமக்கு ஆச்சரியமான ஒன்று தான்.

ஓட்டுநர் உரிமம் பெற  நாம் எத்தனை முறை முயற்சி செய்திருப்போம்? இரண்டு மூன்று முறை இருக்கலாம்!  நான் இரண்டாவது முறை.  முதல் முறை நிச்சயம்  வெற்றி பெற முடியாது என்று முன்னமே தகவல் கிடைத்துவிடும். அதனால்  இரண்டாவது முறை தான். முதல் முறையே வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான சில வழிமுறைகள் உண்டு. அதற்கு நாம் தயார் என்றால் அதுவும் கிடைத்துவிடும்.

ஆனால்  லண்டனில் வெளியான செய்திகளின் படி பலர் பலமுறை தோல்வி கண்டிருக்கின்றனர். அதிலே ஒருவர் சுமார் 59 முறை தோல்வி கண்டு 60-வது முறை வெற்றி கண்டிருக்கிறார்!  

நான் அதனைக்கண்டு ஆச்சரியப்பட்டாலும் ஒரு விஷயத்தைக் கொஞ்ச ஆழமாகப் பார்க்கிறேன்.  ஓட்டுநர் உரிமம் பெற அவ்வளவு கடினம் என்றால்  அங்கு மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது பொருள்.  நம் நாட்டில் விபத்துகள் அதிகம் நடக்கிறது என்றால்  மனிதர் உயிருக்கு என்ன ஆனால் என்ன என்கிற அலட்சியம்  அதிகம் தெரிகிறது.

நம் நாட்டில் உரிமம் என்பது பல வடிவங்களில் கிடைக்கிறது.  எப்படி வேண்டுமானாலும் பெற்று விடலாம்  என்பது  சாதாரணமாகவே அனைவருக்கும் தெரியும்.  நான் உரிமம் எடுக்கும் போது  உணவகத்தில் வேலை செய்த ஒரு நபர்  தனக்கு நேரம் இல்லாததால்  பயிற்சி  எதுவும் எடுக்காமலே, கொஞ்ச கூடுதல் பணம் கொடுத்து, உரிமம் எடுத்துவிட்டார்! அந்த வசதிகள் எல்லாம் இங்கே உண்டு. அதனால் தான் எப்போது பார்த்தாலும்  எங்கேயாவது  விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

இருந்தாலும் ஒருவர் 59 முறை என்பது ரொம்ப ரொம்ப அதிகம் தான். ஆனால் என்ன செய்வது?  அரைகுறைகளுக்கு உரிமம் கொடுத்துவிட்டு  அதன் பின் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?  நாம் தானே?  நமது மக்கள் தானே?  ஒவ்வொரு நாளும் இங்கே விபத்து, அங்கே விபத்து  என்று பத்திரிக்கைகளில் பார்க்கும் போது  மனதுக்கு  எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறது.  

நம் நாட்டில் இன்றைய சூழல்  எனக்குத் தெரியவில்லை.  ஆனால் நடக்கின்ற விபத்துகளைப் பார்க்கும் போது  இன்றும் அந்த பழைய முறை மாறாமல்  காப்பாற்றப்படுகின்றது  என்று தான் தோன்றுகிறது.  இல்லாவிட்டால் ஏன் இத்துணை விபத்துகள்? 

எப்படியோ!  59 முறை தோல்வியடைந்து 60- ஆவது முறை வெற்றி பெற்றவரைப்  பாராட்டுகிறேன்!  காரணம் எந்த குறுக்கு வழியும் அவரிடம் இல்லையே!

Monday 4 December 2023

அதன் பின் நடந்தது என்ன?

 


பினாங்கு மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற செந்தமிழ் விழாவில்  கடவுள் வாழ்த்தும், தமிழ் வாழ்த்தும்   பாட முடியாதபடி தடை செய்தவர் யார்  என்று கல்வி அமைச்சர் தேடிக் கொண்டிருப்பது போல  நாமும் இந்த தமிழ்ச்சமூகமும்  அவரோடு சேர்ந்து அனைத்து மக்களும்   தேடிக் கொண்டிருக்கிறோம்!

இதில் பல கேள்விகள் பலரால் கேட்கப்பட்டு  அதற்கு எந்த பதிலும்  இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. கல்வி அமைச்சு மௌனத்தைக் கடைப்பிடிக்கிறது என்பதிலே சந்தேகமில்லை. காரணம்  மௌனத்தைக் கடைப்பிடித்தால்  இந்த பிரச்சனையை விரைவில் இந்தியர் சமுதாயம் மறந்து விடுவர் என்பதிலே அவர்களுக்கு வலுவான ஆதாரங்கள் உண்டு.

கடைசியாக இந்தப் பிரச்சனையை மேல்சபையில் எழுப்பியவர்  செனட்டர் லிஙேஸ்வரன்.  அவரையும் நாம் வாழ்த்துவோம்.  இப்போது இந்த பிரச்சனை மேல்சபை, நாடாளுமன்றம் அனைத்து உயர்  சபைகளிலும்   எழுப்பப்பட்டு விட்டது.  ஆனால் பதில் இதுவரை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இப்போது நம்மிடையே ஒரு கேள்வி. மேல்சபையில் கேள்வி எழுப்புவது, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது  இதனால் எந்தப் பயனும் உண்டா என்பது தான்.  இதுவரை அவர்கள் கேள்வி எழுப்பி  என்ன தான் சாதித்தார்கள்?  ஒன்றுமில்ல!  

இந்த இரு சபைகளிலும் கேள்வி எழுப்புவதை  சும்மா ஒரு மரபாகத் தான் வைத்திருக்கிறார்கள்  நமது பிரதிநிதிகள்.  அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் என்று நாம் கேட்டாலும்  அவர்களும் வேறு என்ன தான் செய்ய  வேண்டும் என்று அவர்கள் யோசிக்க வேண்டும்.  சும்மா ஒப்புக்காக நாங்கள் இதனைப் பேசினோம்  என்று  அலட்சியமாக இருக்க முடியாது.  பலருக்கு,  நாங்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினோம் என்று  தங்களது பேச்சு அவைக்குறிப்பில்  இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்! அது போதாது. வெளியே உள்ளவர்களும் அதைத்தான் செய்கிறார்கள்.  அப்படியென்றால் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம்  அவைகளில்  கேள்விகளை எழுப்பினீர்கள்.  அத்தோடு உங்கள் வேலை முடிந்ததா? அதன் பின்னர் என்ன நடந்தது?  நேரடியாக அமைச்சரைப் பார்த்து  மீண்டும் அந்த கேள்வியை எழுப்பி  அவரோடு சந்திப்பு நடத்தி தொடராக ஏதேனும் வேலை நடந்ததா?  அப்படி நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால்  ஒன்று தெரிகிறது.  நீங்கள் உண்மையானவர் இல்லை.  எல்லாம் வெளி வேடம் என்று புரிகிறது.

சரி, இப்போது என்ன தான் நடக்கிறது?  ஒன்றுமே நடக்கவில்லை. பிரச்சனை முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். இது நாள்வரை ஒன்றும் நடக்கவில்லை என்றால்  இனிமேலா நடக்கப் போகிறது? வழக்கம் போல இனி என்ன செய்யலாம்  அன்று அவர்கள் தரப்பு புதிதாக  ஏதாவது பிரச்சனையைக்  கிளப்பிக் கொண்டு தான்  இருப்பார்கள்!

நடந்தது சரி! அதன் பின் என்ன  என்ன நடக்கிறது, என்ன நடந்தது? என்று உங்களைப்போலவே  நமக்கும் ஆசை!

Sunday 3 December 2023

பலகாரத்தில் பின்!

 

                    பலாப்பழ பலகாரத்தில்  ஸ்டேப்லர் பின்!

என்ன செய்யலாம்? ஒன்றும் செய்ய இயலாது!

வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள்  அலட்சியம் காட்டினால் இது தான் நடக்கும். பெரியவர்கள் சாப்பிடும் போதே பல இடையூறுகளைக்  காண்கிறோம்.  சிறியவர்கள் அறியாமல், தெரியாமல் சாப்பிட்டால் என்ன ஆவது?

இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.  வியாபாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது.  ஒன்று மட்டும் அவர்கள் புரிந்து கொண்டால்  போதும்.  பலகாரங்கள் செய்கின்ற இடத்தில் இது போன்ற ஆபத்தான ஸ்டேப்லெர் பின்களுக்கு என்ன வேலை என்பது தான்.  அந்த இடத்தில் அது தேவையற்றது.  எங்கு தேவையோ அந்த இடத்தில் மட்டும் வைத்திருந்தால்  இது போன்ற பிரச்சனைகள் வரவழியில்லை.

நாம் பார்ப்பதோ பலகாரத்தின்  உள்ளே அந்தப் பின்னைக்  காண்கிறோம். அங்கே அந்த பின்னுக்கு எந்த வேலையுமில்லை.  அது எப்படி போனது என்பதை நாம் எப்படி வேண்டுமானாலும் கற்பனைச் செய்யலாம். காரணம் அந்தப் பின்னுக்கு அங்கு வேலை இல்லை.

இது சிறு வியாபாரிகளின்  அலட்சியப் போக்கு என்று சொல்ல முடியாது. எங்கோ தவறு நடந்திருக்கிறது. ஆனால் அந்தத் தவறு எம்மாம் பெரிய தவறு என்பதை வியாபாரிகள் புரிந்து கொண்டால் மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை சிறு வியாபாரிகளுக்கு  சுகாதார அமைச்சு  வகுப்புகள் எடுக்க வேண்டும்.  நல்லது கெட்டது என்பதைப்பற்றி அறிந்து கொள்ள  அவர்களுக்குச் சில பயிற்சிகள் தேவை.   அவர்கள் பெரும்பாலும் காசநோய் இருக்கிறதா என்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர்.

பெரிய நிறுவனங்களாக இருந்தால் அவர்கள் உணவு தயாரிக்கும்  முறைகளை எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றனர்.  அவர்கள்  சட்ட திட்டங்களைக் கடைப்பிடித்தே  ஆகவேண்டும் என்கிற கட்டாயம் உண்டு. அப்படி முறையாகத் தயாரித்தும் அங்கும் கூட  சமயங்களில்  பிரச்சனைகள் எழுவதுண்டு.

ஒரு முறையும் இல்லாமல் உணவு பொருள்களைத் தயாரிக்கும் சிறு வியாபாரிகள் மீது  - என்ன குற்றத்தைச் சொல்லுவது?  அவர்களாகவே பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால்  அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.   குழந்தைகளுக்கும் நல்லது.

பொறுப்பை உணராமல் நடந்தால் கடைசியில் கெடுவது அவர்களின்  வியாபாரம்  தான்!

Saturday 2 December 2023

துடைப்பைக் கட்டையும் துப்பாக்கி தான்!

ஒரு வயதானப் பெண்மணியின் வீர்தீரச் செயலைப் பாருங்கள்.

இது நடந்தது  இந்தியா,  அர்யானா, ரோடாக், தபர்  காலனியில்.  அந்தப் பெண்மணியின் பெயர்  சகுந்தலா தேவி.   அவரது கடைசி மகனைச்  சுட வந்த    துப்பாக்கிக்காரர்கள்  கடைசியில் ஏமாந்தது தான்  மிச்சம். அவர்களது பாச்சா பலிக்கவில்லை!

அவர்களது துப்பாக்கிச் சூடு தவறியதால்  அவரது மகன் தப்பி வீட்டினுள்  ஓடி ஒளிந்து கொண்டார்.  துப்பாக்கிகாரர்கள் அவரைத் துரத்திக் கொண்டு வீட்டை நோக்கி ஓடிய போது  அவரது தாயாரான சகுந்தலாதேவி 'என்னவோ ஏதோ' என்று நினைத்து தன் கையிலிருந்த  துடைப்பைக்கட்டையுடன்  வெளியே வந்த போது ஏதோ விபரீதம் என்று  தெரிந்து கொண்டார்.  உடனே துடைப்பைக்கட்டையுடன்  அந்தத் துப்பாக்கிக்காரர்களைத் தாக்குவதற்குத் தயாரானார்.  வீட்டினுள் போக முடியாமல் அவர்களைத் தடுத்துவிட்டார்.   துப்பாக்கிக்காரர்களும் தொடர்ந்து எதுவும் செய்ய முடியாமல்  பின் வாங்கிவிட்டனர்!

அந்த வீரத்தாயின் மகன்,   அரிகிசன், துப்பாக்கிச் சூட்டின் போது  ஏற்பட்ட காயங்களுக்காக இப்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்தத் தாக்குதலின் பின்னணி  என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது. " சீறி வந்த புலியந்தனை முறத்தில் அடித்துத் துரத்தினாலே"  பெண்ணொருத்தி  அது எந்த அளவு உண்மை என்பது மட்டும் புரிகிறது.  ஆபத்து என்று வரும் போது  சீறிவரும் புலியாவது  துப்பாக்கியாவது எதையும் எதிர்கொள்ள தயார் என்பது தான் நமது பெண்களின்  இயல்பு.   அதனைச் செய்து காட்டிவிட்டார் அந்தத் தாய்.

தனது மகனுக்கு ஆபத்து என்றதும் சீறி எழுந்திருக்கிறார்  அந்தத் தாய். அது தாயின் இயல்பு. பொங்கி எழுந்ததும் அல்லாமல் அவர்களையும்  துடைப்பக்கட்டையிலேயே தாக்கியிருக்கிறார்.  அந்தத்  தீயவர்கள் அதனை எதிர்பார்க்கவில்லை. அதற்கு மேல் அங்கிருந்தால் ஆபத்து  என்று பின்வாங்கிவிட்டார்கள்!

ஆமாம், துப்பாக்கிக்கும் துடைப்பைக்கட்டைக்கும் என்ன தான் சம்பந்தம்? ஒன்றுமில்லை.  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அது போலத்தான் இதுவும். அந்த நேரத்தில்  துடைப்பைக்கட்டை தான் அவர் கையில் இருந்தது.  அதனை அவர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.  அந்த நேரத்தில் அது தான் அவரின் துப்பாக்கி!  வீரம் எப்படியும் வரலாம். எந்த உருவத்திலும் வரலாம். கையில் என்ன இருக்கிறது அது போதும் அப்போதைய அபாயத்தை எதிர்நோக்குவதற்கு!

துடைப்பைக்கட்டையும்  ஒரு துப்பாக்கி தான்!