Wednesday 31 August 2022

தலைவர் சொல்லுவது சரியா?

 

பாஸ் கட்சியின் தலைவர், அப்துல் ஹாடி அவாங் ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.

அதாவது, நாட்டில் இலஞ்சம் பரவலாக இருப்பதற்கு, முஸ்லிம் அல்லாதவர்களே காரணம் என்பதாக அவர் கூறியிருக்கிறார். அவர் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்குக் காரணம் கிளந்தான், திரெங்கானு போன்ற பாஸ் கட்சி ஆளுகின்ற,  அத்தோடு மலாய்க்காரர் அதிகம் உள்ள, அந்த இரண்டு மாநிலங்களிலும்  இலஞ்சம் இல்லை என்று அவர் சொல்லுவதாகவே எடுத்துக் கொள்ளலாம். அந்த மாநிலங்களைப் பற்றி அவர் அதிகம் அறிந்தவர்.  அதனால் அவர் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.

அவர் மத ரீதியாகவே  பேசியிருக்கிறார். அதாவது   கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள், சீக்கியர் இப்படி இஸ்லாம் அல்லாதவரே இலஞ்சத்திற்குக் காராணமானவர்கள் என்பது தான் அவரின் கருத்து. அவர் சொல்ல வருவது  இஸ்லாமியர்களைத்  தவிர்த்து  பிற மதத்தினருக்குப் போதுமான சமயக்கல்வி என்று ஒன்று இல்லாததால் அவர்களால் எளிதாக இலஞ்சத்தைக் கொடுக்க முடிகிறது. இலஞ்சத்தை அனுமதிக்க முடிகிறது. இலஞ்சத்தைப் பரவலாக்க முடிகிறது என்பது தான் அவரின் குற்றச்சாட்டின் சுருக்கம். ஒரு வேளை நீதிமன்றத்தால் நஜிப் ரசாக் குற்றவாளி என்று கூறப்பட்டதால்  அவருக்கு உடனடியாக நஜிப்பின் குருவாக இருந்த  ஜோ லோ,  ஹாடிக்கு நினைவுக்கு வந்திருக்கலாம்!

ஆனால் ஒன்றை ஹாடி நினைவு கொள்ள வேண்டும்.  சமயம் அறியாத பிற மதத்தினர் இலஞ்சம் கொடுத்தார்கள் அதனைச் சமயம் அறிந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பதும் உண்மை தான். இதில் எது நியாயம் என்பது நமக்கும் கேள்விக் குறியே! சமயம் அறியாதவர்களைவிட சமயம் அறிந்தவர்கள் "பெற்றுக்கொண்ட" அதைக் குற்றம் அல்ல என்று ஹாடி சொல்ல வருகிறாரா?

ஹாடி போன்ற தலைவர்கள் இலஞ்சத்தை சமயத்தோடு ஒப்பிடக் கூடாது என்பது தான் நாம் அவருக்குச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது அண்டை நாடான சிங்கப்பூரில் இலஞ்சம் பெரிய அளவில் இல்லாததற்குச்  சமயம் காரணமென்றால் அதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள் புத்தமதத்தினர். அவர்களின் எண்ணிக்கைதான் அங்கு அதிகம். அதனால் புத்தமத்தினர் அல்லாதவர்கள் தான் இலஞ்சத்திற்குக் காரணம் என்று சொல்ல முடியுமா அங்கு சமயம் என்பதே ஒரு பாடமாக பள்ளிகளில் இல்லை. வேறு என்ன சொல்ல?

பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் இலஞ்சம் வாங்கினால் கடும் சட்டங்கள் இருக்கின்றன. நமது நாட்டில் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  தவறு செய்தவன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன், எந்த இனத்தைச் சேர்ந்தவன், பணக்காரனா ஏழையா, அரசியல்வாதியா அவனது மகனா, மகளா - இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பிறகு தான் குற்றம் சாட்டப்படும் ஒரு நாட்டில் இலஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

இலஞ்சம் சமயத்தைப் பார்ப்பதில்லை! பணத்தைத் தான் பார்க்கும்!

Tuesday 30 August 2022

இலஞ்சத்தை விரட்டியடிப்போம்!


 நமது நாட்டில் இப்போது இலஞ்சம் என்பது தான் மலேசியர்களிடையே  அதிகம் பேசப்படுகிற ஒரு  விஷயமாகத் தெரிகிறது!

கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் இவர்களைச் சுற்றிச்சுற்றித் தான் இலஞ்சம் என்கிற விஷயமே  அதிகம் பேசப்பட்டது. அதற்கு முன்னர் இலஞ்சம் இல்லை என்று யாரும் சொல்ல வரவில்லை.

முன்பு இலஞ்சம் என்றால் உரிமம் இல்லாமல் கார் ஓட்டுவது, மோட்டார் சைக்கள் ஓட்டுவது, வேகத்தோடு ஓட்டுவது - இப்படி இவர்களைப் பற்றித் தான்  இலஞ்சம்  அதிகமாகப் பேசப்படும். போலீஸ்காரர்களுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்து அதை சரிபண்ண வேண்டும் என்கிற நிலை. நமது நாட்டில் இலஞ்சம் என்பதின் தொடக்கம் இப்படித்தான் இருந்தது.

இலஞ்சம் அதிகம் உலவிய காலகட்டம் என்றால் அது டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த காலகட்டம் தான். அவர் எப்போதும் வித்தியாசமாகவே சிந்திப்பவர்.  சீனர்களைப்போல் மலாய்க்காரர்களும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்கிற எண்ணம் உடையவர். அது தான் இலஞ்சத்தின் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் எல்லாத் துறைகளிலும் இலஞ்சம் வாங்குகின்ற பழக்கத்தின் ஆரம்பம்!

ஆனால் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் தான் அனைத்தும் கட்டுமீறிப் போனது என்பது தான் சோகம். அவர் பிரதமர் என்பதைவிட அவரது மனைவி ரோஸ்மா தான் நாட்டை ஆளுகின்ற பிரதமர் என்று பேசப்பட்டது! ரோஸ்மாவை மீறி, அரசாங்கத் துறையில்,  யாரும் செயல்பட முடியாது என்று பலவாறு பேசப்பட்டது! நஜிப் எப்படி அப்படி ஒரு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று இன்றும் புரியவில்லை.

ரோஸ்மா பல தனியார் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதாகப் பேசப்பட்டது. ஏன், நமது "பாபாஸ்" நிறுவனத்தைக் கூட  வாங்குவதாக  ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்பட்டது.

இலஞ்சம்,  இந்த இருவரைச் சுற்றி மட்டுமே அல்ல. பெரும்பாலான அம்னோ தலைவர்கள், ம.இ.கா. தலைவர்கள் - இப்படிப் பலர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினர். இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் அம்னோ தலைகள் தான்! இந்த. நஜிப் ரோஸ்மா, வழக்கே இத்தனை ஆண்டுகள் நீண்டுக்கொண்டே போனதால் மற்ற வழக்குகள் எல்லாம் முக்கியத்துவம் பெறவில்லை.  ஆனால் இனி  ஒன்று ஒன்றாக வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம்.

இலஞ்சம் என்பது விஷம். அது முற்றிலுமாக துடைத்து ஒழிக்கப்பட வேண்டும். இலஞ்சம் வாங்குவது பல விஷயங்களுக்குத்  தடைகளாக இருக்கின்றன. 

இலஞ்சமற்ற நாடாக மலேசிய விளங்க வேண்டும்! அதற்காக அத்தனை பேரும் சேர்ந்து கைகோப்போம்! இலஞ்சத்தை நம் மத்தியிலிருந்து விரட்டியடிப்போம்!

Monday 29 August 2022

சுற்றுப்பயணிகள் அதிகரிப்பர்!

 

இந்த ஆண்டு மலேசியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகள் அதிகரிப்பர் என்பதாக சுற்றுலாத்துறை மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறது.

இன்று பல நாடுகள்  வெளிநாட்டுப் பயணிகள் வருவதை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றன. சுற்றுப்பயணிகள் பணத்தோடு வருகின்றனர். கொண்டு வரும் பணத்தை இங்கே செலவு செய்கின்றனர். அதன் மூலம் நாடுகள் பயனடைகின்றன.

இப்போது நமக்கு ஸ்ரீலங்கா நாட்டைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் நாடு திண்டாடுகிறது. மக்கள் கஷ்டபடுகின்றனர். அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள் என்ன? கோவிட்-19 காலகட்டத்தில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்து போனதால் நாட்டுக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது  தான் காரணம் என்கின்றனர்.  ஆமாம்,  சுற்றுப்பயணிகளை அதிகம் நம்பிய நாடுகளில் அதுவும் ஒன்று.  ஒரு துறை பலவீனம் அடையும் போது அது நாட்டைப் பாதிக்கிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை முக்கியத் துறைகளில் ஒன்று.

இந்த ஆண்டு, நமது சுற்றுலாத்துறை,  வெளிநாடுகளிலிருந்து சுமார் ஒரு கோடிக்கு மேல் நாட்டுக்குள்  வருவார்கள் என நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். இப்போதெல்லாம் ஏதோ ஒன்று வந்து  நமது திட்டங்களைத் தகர்த்தெறிந்து விடுகிறது. அதுவும் வருகின்ற இடர்கள் அனைத்துமே நோய் சம்பந்தமாகவே இருக்கின்றன.

சான்றுக்கு எப்போதோ வந்து மிரட்டிய கோவிட்-19 இன்னும் ஒழிந்த பாடில்லை. இன்னும் மிரட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அது பற்றி பேசுவது குறைந்தால் இதோ இன்னொன்று: குரங்கு அம்மை. இது இன்னும் மிக மோசமான வியாதியாக காணப்படுகிறது.  பார்ப்பதற்கே அச்சத்தை  ஏற்படுத்துகிறது.

ஆண்டு முடிவதற்குள் இன்னும் என்னென்ன நோய்களைப் பரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று புரியவில்லை. ஆமாம்,  நோய்கள் பரப்பப்படுகின்றன என்பது தானே குற்றச்சாட்டு!

இந்த நிலையில் தான் சுற்றுப்பயணிகள் வரவேண்டும் என்று ஒவ்வொரு நாடும் திட்டமிடுகின்றன. எது நடந்தாலும் நடக்காவிட்டாலும்  சுற்றுப் பயணங்கள் தொடரத்தான் வேண்டும். அதனையே நம்பியிருக்கும் நாடுகளும் பிழைக்க வேண்டும்.

நமது நாடும் திட்டமிட்டபடி தனது இலக்கை அடைய வேண்டும்!

Sunday 28 August 2022

சட்டம் சரியாகவே வேலை செய்கிறது!

 

                      Azrene Ahmad,  daughter of Rosma Mansor from her previous marriage.                                                          She is married to celebrity chef Fazley Yaakob  

"நீதிமன்றம் எனது தாயாருக்குச் சரியான தண்டனையையே  கொடுத்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்" என்று கூறியிருப்பவர் ரோஸ்மாவின் முதல் கணவரின் மகள், அஸ்ரின்.

நீதிமன்றத்தைக் குறை கூறுபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.  நீதிமன்றம் சும்மா கண்ணை மூடிகொண்டு தீர்ப்புகளை வழ்ங்குவதில்லை. தீர்க்க ஆராய்ந்து தான் நீதிபதிகள் தீர்ப்புகளைக் கூறுகிறார்கள். யார் பக்கம் நியாயம் என்பது தான்  அவர்களுக்கு முக்கியம்.

இன்று ரோஸ்மா குற்றவாளி என்றாலும் அன்று அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்தால் அவர்  ஒரு மலேசியராகவே வாழவில்லை. சராசரி என்று வேண்டாம், காலங்காலமாக பணக்காரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கையைக் கூட வாழாமல் 'இது ஒரு வாழ்க்கையா?' என்று  எட்டி உதைத்தவர்! தன்னை இங்கிலாந்து அரசியாக நினைத்து வாழ்ந்தவர்! நமது நாட்டிலும் அரசர்கள், அரசிகள் வாழத்தான் செய்கிறார்கள். இவர்கள்  எல்லாம் எந்த வகையிலும் ரோஸ்மாவோடு ஒப்பிட முடியாதவர்கள்.

நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர் செய்த ஊழல்களைப் பற்றி செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. ஆனால் இப்போது தீர்ப்பு அளித்திருக்கிறார்களே இது யாராலும் மன்னிக்க  முடியாத ஒரு வழக்கு. கல்வி சார்ந்த எந்த ஒரு ஊழலையும் நம்மால் மன்னிக்க முடியாது. சரவாக் மாநிலத்தில் மிகவும் உட்புறத்தில் உள்ள பகுதிகளுக்குப் பிள்ளைகளின் கல்விக்காக சூரிய சக்தி மூலம் மின்சாரத் திட்ட தயாரிப்பில் தான் இந்த ஊழலை அவர் புரிந்திருக்கிறார். ஊழல் என்றால் சில இலட்சங்கள், சில கோடிகள் என்பதல்ல! சில நூறு  கோடிகள்!

இப்படி ஒரு ஊழலைப் புரிந்ததன் மூலம் அவர் கொடுக்கின்ற செய்தி என்ன? சரவாக் காடுகளில் வாழ்பவர்களின் பிள்ளைகள் கல்வியே பெறக் கூடாது என்பதாகத்தான் இருக்க வேண்டும். கல்வி கற்காத ஒரு சமுதாயம் தான் அவர் விரும்புகிற  சமுதாயம். 

ஒரு பிரதமரின் மனைவியே இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி உருப்படும்? அவரின் கணவரோ பிரதமராக இருந்தவர், இங்கிலாந்தில் படித்தவர். இப்படி ஓர் உயர்கல்வியைப் பெற்றவரின் மனைவிக்கு   சரவாக் குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது என்கிற எண்ணம் எப்படி வந்தது?

நாம் சொன்னது போல இது பிள்ளைகளின் கல்வி சம்பந்தப்பட்டது. கல்வியில் கைவைப்பவர்கள் தக்க தண்டனைப் பெற வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கூடாது.

தண்டனைக் கிடைத்ததுவுடனே அவரை சிறையில் தள்ளிவிட முடியாது. மேல்முறையீடு நடக்கும். அதற்கு மேல் இன்னும் மேல்முறையீடு நடக்கும். பின்னர் அவரை மாற்று இவரை மாற்று என்று மேலும் மேலும் இழுத்தடிப்பு நடக்கும். இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.

எது நடக்கும் எது நடக்காது என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் குற்றவாளி என்று சொன்னார்களே, முப்பது ஆண்டுகள் சிறை என்றார்களே அதுவே நமக்கு மகிழ்ச்சி தான்!

Saturday 27 August 2022

சுதந்திர தினக் கொண்டாட்டம்!

 

இந்த ஆண்டு சுதந்திரதினக்  கொண்டாட்டம் (31.8.2022) மலேசியர்களிடையே எந்த அளவு வரவேற்பைப் பெற்றது?

எதிர்பார்த்தபடி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் கார்களில் கொடிகள் கொடிகட்டிப் பறக்கும். என்னன்னவோ ஜோடனைகள் கண்களைப் பறிக்கும். இந்த ஆண்டு கார்களில் எதனையும் காண முடியவில்லை. 

எங்கும் அமைதி. முன்பெல்லாம் கடைகள் அனைத்தும் விடுமுறை கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டு அதுவுமில்லை. பெரும் நிறுவனங்கள் தவிர மற்றபடி கடைகள் எல்லாம் திறந்திருந்தன.

மக்களிடையே எதிர்பார்க்கப்பட்ட  சுறுசுறுப்பு இல்லை. எதனையோ இழந்தது போல முகத்தில் கவலை.

முன்பு போல இப்போது கொரோனாவின் தீவிரம் இல்லையென்றாலும் அது ஏற்படுத்திய பாதிப்பு  இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் மக்கள் அதன் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வேலை இல்லையென்றாலும் ஏதோ வீடுகளில் உள்ளவர்கள் ஓரிருவராவது வேலை செய்து காப்பாற்றுகிறார்களே என்பது கொஞ்சம்  பிரச்சனைகளைக் குறைத்திருக்கிறது.

வங்கிகளின் மூலம் கடன் வாங்கி வீடுகள் வாங்கினார்களே, கார்களை வாங்கினார்களே இவர்களின் நிலை என்ன?  ஒரு சிலர் தப்பித்துக் கொண்டாலும் பெரும்பாலானோர் அடிப்பட்டுப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.   ஆலோங் செய்கின்ற வேலையைத் தான் வங்கிகளும் செய்கின்றன. பாவ புண்ணியம் என்பதெல்லாம் அவர்களிடம் இல்லை. ஆனால் சரியான திட்டங்களோடு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தங்களது மாதத் தவணையை நீட்டிக் கொண்டவர்களுக்குப் பிரச்சனைகள் குறைந்தன.

இப்படி மக்கள் சோர்ந்து போன நிலையில் இருக்கும் போது விலைவாசிகள் ஏற்றம், பொருள்களின் விலையேற்றம் - எல்லாமே விலையேற்றம் என்றால் ஒரு சராசரி மலேசியனால் என்ன செய்ய முடியும்?

ஒரு அரசியல்வாதி பெறுகின்ற சலுகைகள், அரசாங்க ஊழியர்கள் பெறுகின்ற சலுகைகள் - இவர்களையெல்லாம் நினைக்கும் போது ஒரு சாரார் எல்லாக் காலங்களிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்கள் தான் எல்லாக் காலங்களிலும் எல்லா நேரங்களிலும் பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுதந்திர தினம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன என்கிற உணர்வு தான் ஏற்படுமே தவிர மகிழ்ச்சி ஏற்பட  ஒரு சராசரி மனிதனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அதனாலென்ன? அடுத்த ஆண்டு மீண்டும் வரும்,  அப்போது பார்த்துக் கொள்வோமே! இந்த ஆண்டு அடக்கத்தோடேயே போய்விட்டது!

Friday 26 August 2022

மாநிலங்களின் அடைவு நிலை எப்படி?

 

இப்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களின்  கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றன. அவர்களின் அடைவு நிலையை விளம்பரப் படுத்துகின்றனர்.

குறிப்பாக இப்போது பி.கே.ஆர். ஆளும் மாநிலங்கள் தங்களை  விளம்படுத்திக் கொள்வது என்பது நடந்து கொண்டிருக்கிறது.  இப்படி செய்வதில் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

இன்றைய சூழலில் இப்படி விளம்பரப்படுத்தினால் தான் அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பொது மக்களுக்குத் தெரிகிறது. சமீபத்தில் எங்களது மாநிலமான நெகிரி செம்பிலான் மாநிலம் தங்களது அடைவு நிலை பற்றி ஓர் அறிக்கை  வெளியிட்டது.  அவர்களது சாதனையை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். இந்தியர்களைப் பொறுத்தவரை நமக்கு எதிர்க்கட்சி என்றால் அது ம.இ.கா. தான் அதாவது நெகிரி மாநிலத்தில்.  இந்த நான்கு ஆண்டுகள் ம.இ.கா.வினர் ஓர் எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை என்று நான் நினைப்பதுண்டு. காரணம் அவர்கள் அப்படி செயல்படுவதற்குக் காரணம் ஏதும் இல்லை.  எல்லாமே சரியாக நடக்கும் போது ம.இ.கா.வினர் என்ன குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியும்? என்று இப்படி அவர்கள் நினைக்கலாம். இன்னொரு பக்கம் குற்றம் செய்யாமல் ஓரு ஆட்சி நடக்க முடியுமா என்பதும் உண்மை தான்.

ஆனால் ம.இ.கா.வினருக்கு இரண்டு பக்கமும் அடி விழும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் எந்தக் கேள்வி எழுப்பினாலும் அதற்குக் காரணமானவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்! அப்புறம் எங்கே அவர்கள் கேள்வி எழுப்புவது? இத்தனை ஆண்டுகள் அவர்கள் தானே பதவியில் இருந்தார்கள்! யாரைக் குற்றம் சொல்லுவது?

சமீபத்தில் ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா.வினரைப் பார்த்து சில கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆட்சியில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் என்பதாக ம.இ.கா.வினருக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால் ஒரு சத்தத்தையும் காணோம்.  அவர்களால் எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப முடியவில்லை.

ஆக, நெகிரி மாநிலத்தைப் பொறுத்தவரை ம.இ.கா. வினரால் பெரிய குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியாது என்றே நினைக்கிறேன். அதனால்  ஆட்சியில் உள்ளவர்கள்  அனைத்தையும் சரியாகச் செய்கிறார்கள் என்று சொல்ல இயலாது பிரச்சனைகள் உண்டு. போகப் போக தெரியவரும்.

Thursday 25 August 2022

12 இலட்சம் சுற்றுப்பயணிகளா!

 

சீன நாட்டிலிருந்து வந்த சுற்றுப்பயணிகளில் சுமார் 12 இலட்சம் பேர் இன்னும் நாட்டிற்குள் இருக்கின்றனர் என்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் வியப்பு ஏதும்  ஏற்படவில்லை!

பொதுவாகவே அரசாங்கத்தில் பணி புரிபவர்களைப் பற்றி மக்களிடையே ஒரு கருத்து உண்டு. 'சோம்பேறிகள்! வேலை செய்ய லாயக்கற்றவர்கள்!!' என்று யாரைக்  கேட்டாலும் கூறுவதுண்டு. ஒரு சாரார் 'வேலை தெரிந்தால் தானே செய்வதற்கு!' என்று சொல்லுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது!

எல்லாவற்றையும் விட அக்கறையின்மை என்பது தான் அவர்களிடம் உள்ள ஒரு பிரச்சனை.

குடிநுழைவுத் துறை தான் இந்த எண்ணிக்கையைக் கூறுகிறது. அதாவது நாட்டுக்குள் வந்தவர்களில் சுமார் 12 இலட்சம் பேர் இன்னும் சீனா திரும்பவில்லை என்பது அவர்களின் கணக்கு. இந்த எண்ணிக்கை சரியானது அல்ல என்கிறார் உள்துறை அமைச்சர்.   "இப்போது நாங்கள் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பணி தொடங்கிவிட்டது" என்கிறார் உள்துறை அமைச்சர்!

இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் யாருக்கும் எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லை என்பது தான் உள்துறை அமைச்சர் தருகின்ற பதிலில் நமக்குத் தெரிய வருகின்றது.  இந்த பிரச்சனை வெளியே வராவிட்டால் இந்த சரிபார்த்தல், பணி தொடங்கிவிட்டது போன்ற பதிலே உள்துறை அமைச்சரிடமிருந்து வந்திருக்காது. அதுமட்டும் அல்ல இப்படி ஒரு பிரச்சனை உண்டு என்பதே உள்துறை அமைச்சுக்குத் தெரிந்திருக்காது.

வெளி நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளை நாம் வரவேற்கிறோம். இது எல்லா நாடுகளிலும் உள்ள ஒரு நடைமுறை. காரணம் சுற்றுப்பயணிகள் மூலம் நாட்டுக்கு வருமானம் வருகிறது. எந்த ஒரு கஷ்டமும் இல்லாத வருமானம். அதை எல்லா நாடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு வரவேற்கின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவிட வேண்டும். 

அவர்கள் திரும்பிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த நடைமுறைகள் உள்ளன. அது எல்லாக் காலங்களிலும்  உண்டு. புதிதாக ஒன்றுமில்லை. வேண்டியதெல்லாம் அந்த நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இப்போது கேள்வி எல்லாம் அந்த நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்பது தான்.  இப்போது  நிரந்தரமான அரசாங்கம் இல்லை என்பதால் எல்லாம் தாறுமாறாக நடக்கின்றனவா என்கிற ஐயமும் நமக்குண்டு.  அப்படியெல்லாம் நடப்பதற்கு வழியில்லை. அரசாங்கம் நிரந்தரமோ இல்லையோ அரசாங்கப் பணியாளர்களுக்கு அவர்களது கடமைகள் உள்ளன. அவைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். இதைத் தான் நாம் சொல்ல முடியும்.

எப்படியிருந்தாலும் 12 இலட்சம்  பேர் என்றால் தலை கிறுகிறுக்கிறது!

Wednesday 24 August 2022

தேர்தல் எப்போ..?

 

பொதுத்தேர்தல் 15-வது எப்போது வரும் என்று மலேசியர்களிடையே பேசுபொருளாக இப்போது மாறிவிட்டது.

அது நடக்க வேண்டிய காலத்தில் நடந்தால் இந்த கேள்விக்கெல்லாம் இடம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் காலம் வருமுன்னே நடத்தவேண்டும் என்று சாரார் நெருக்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டதால் தேர்தல் 'இப்போவா அப்போவா' என்று அனைவருமே பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது!

நாட்டிலோ விலைவாசி பிரச்சனைகளை அரசாங்கத்தால் தீர்க்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு ஒரு புறம். குற்றச்சாட்டு இருந்தாலும் பொருள்கள் கிடைக்கின்றனவே என்பதில் கொஞ்சம் திருப்தி அடைந்து கொள்ளலாம்.   விலைகள் கூடிவிட்டன என்பது உண்மை தான். கூடினவிலைகள் எக்காலத்திலும் குறைந்ததற்கான வரலாற்றுப் பின்னணி எதுவுமில்லை! ஏறிய விலை ஏறியது தான்!  அதனைக் குறைப்பதற்கு அரசியல்வாதிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கோழிகளை வாங்காமல் புறக்கணித்தோமே அப்போது கோழி விலை குறைந்ததே அது தான் பொது மக்களிடம்  உள்ள சரியான ஆயுதம்!

பொதுத் தேர்தல் என்கிற போது  ஒரு விடயம் நமக்குப் புரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் தான் அவர்களால்  நடத்த முடியும். நாடாளுமன்றம் அம்னோவின் கையில் இருப்பதால் அவர்கள் குரல் ஓங்கி நிற்கிறது. அதனால் அவர்கள் 'தேர்தலை நடத்துங்கள் என்கிற நெருக்கடியைப் பிரதமருக்குக் கொடுக்கிறார்கள் என்று இன்று பரவலாகப் பேசப்படுகிறது. அது தான் உண்மையுங்கூட.

ஆனால் சட்டமன்றங்கள் நிலை வேறு. பல மாநிலங்கள் எதிர்க்கட்சிகளின் கைகளில் உள்ளன. தேர்தல் வேண்டுமா வேண்டாமா என்பது மாநிலங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் நடைமுறை விதி.  அதனை அவர்கள் செய்வார்கள். நாடாளுமன்றம் அம்னோவினர் கைகளில் இருப்பதால் வல்லான்  வகுத்ததே வாய்க்கால் என்கிற நிலைமை! இங்கு எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கின்றன. அதனால் அம்னோ தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறது. பிரதமரும் தனது அரசாங்கம் கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக அம்னோ பக்கம் சாய வேண்டிய நிலையில் உள்ளார். அது மட்டும் அல்லாமல் அவரும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர் தான். அவருடைய பிரச்சனை எல்லாம் தான் மீண்டும் பிரதமராக வரமுடியுமா என்பது மட்டும் தான்!  பிரதமர் பதவி அவருக்குக்  கொஞ்சம் ஆட்டமாக உள்ளது!

அதனால் தான் அரசாங்கம் தேர்தல் என்கிற பேச்சு வரும்போது இதோ இப்போ!    இதோ அப்போ! என்று பாடிக் கொண்டிருக்கிறது! ஆனால் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் என்று கணிக்கப்படுகிறது. அப்படி நடத்தாவிட்டால் எத்தனை பேர் ஜெயிலுக்குப் போக வேண்டி வருமோ  என்கிற பயம்  அம்னோவுக்கு உண்டு. எல்லாம் ஊழல் வழக்குகள்!

நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். இப்போது அவ்ருடைய மனைவி ரோஸ்ஸமாவும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தலைவர்கள் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது! 

இப்போது தேர்தல் நடந்தால் தேர்தலில் போட்டியிடலாம். அதையே அடுத்த வருடம் என்றால் பல தலைகள் உருண்டுவிடும்! தேர்தல் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும்!

அப்படியென்றால் தேர்தல் 'இப்போ' தானே!

Monday 22 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து..... (6)

                                     

                                                                   கடைசிப் பகுதி -

ஒரு காலகட்டத்தில் அதிசயம் ஒன்று நடந்தது. அது ஏன் என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

தாங்கள் இலங்கையர்கள் என்று கூறிவந்த அவர்கள் தீடீரென தங்களைத் தமிழர்கள் என்று மாற்றிக் கொண்டார்கள்! எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் அவ்வப்போது என்னிடம் உதவிக்கு வருவார். அவர் இலங்கைத் தமிழர். கொஞ்சம் வாய்க்கொழுப்பு அதிகம்.  பேச்சு வாக்கில் 'நாம் தமிழர்' என்கிற பாணியில் அவர் பேசியது எனக்குத் தூக்கி வாரிப்போட்டது! 'இதென்ன புதுசா இருக்கே, இவருக்கு என்ன ஆச்சு?' என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்னொரு ஆசிரியர் நண்பர். அவர் மனைவி நம் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் தீடீரென வேறு மாதிரி மாறிப் போனார். 'தமிழர், தமிழர்' என்று பேச ஆரம்பித்துவிட்டார்! நான் முன்பு சொன்னது போல எனக்கு அவர்களுடைய அரசியல் தெரியாது.  நமக்குத் தமிழ் நாடு அரசியல் ஏதோ கொஞ்சம் தெரியும்.

பின்னர் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது தான் அவர்களுடைய அரசியல் எனக்குப் புரிய ஆரம்பித்தது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், வன்முறைகள் எல்லாம் சேர்ந்து இங்கும் அவர்களைக் கொஞ்சம்  மாற்றிவிட்டது. 'இவர்களுக்குத் தேவை தான்' என்று மனதிற்குப் பட்டதே தவிர  அங்குள்ளவர்கள் மீது அனுதாபம் ஏற்படவில்லை.  ஆனால் பின்னர் பிரச்சனைகள் புரிய ஆரம்பித்தன. கருத்துகளும் மாறிவிட்டன.

ஆனால் இங்குள்ளவர்கள்  மீதான வன்மம் மாறிவிட்டதாகச் சொல்ல முடியாது. அவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனாலும்  'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன் பூங்குன்றானார் சொல்லிவிட்டுப் போனதை  வழக்கம் போல  நாம் ஏற்றுக்கொண்டு,  நாம் மாறிவிட்டோம்.

இந்தக் கட்டுரை எழுதும் போது எந்தக் குறிப்பையும் நான் தயார் செய்யவில்லை. அவ்வப்போது மனதில் ஏற்பட்ட ஒரு சில விஷயங்களை வைத்து நான் எழுதினேன். இதனை ஒரு மலேசிய இந்தியத் தமிழனின் கருத்து என்பது மட்டும் தான். பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் செய்யவில்லை. அதற்கு அவசியமுமில்லை.

"யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்தவர்கள்" என்கிற புத்தகத்தை எழுதிய எழூத்தாளர்  பல ஆராய்ச்சிகளோடும், ஆய்வுகளோடும் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கடினமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் சார்ந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதனை நாம் பாராட்டுவோம். தமிழன் எங்கிருந்தாலும் அவன் தமிழன் தானே!

யாழ்ப்பாணத்திலிருந்து (5)

                                                     

                                                                                - 5 -

அந்த காலத்தில் இருந்த அதிகாரங்கள் எல்லாம் இப்போது அவர்களுக்கு இல்லை. இப்போது எல்லாருமே படித்தவர்களாக இருக்கிறார்கள். அவனவன் பிழைப்பை  அவனவன் பார்த்துக் கொளவது தான் அவனவனுக்கு நல்லது என்கிற நிலை வந்துவிட்டது. அதனால் பிறர் விஷயத்தில் தலையீடு என்பது  எல்லாம் பழைய கதை.

என்னிடம் எப்போதுமே ஒரு கருத்து உண்டு. தேவாலயங்களில்  பாதிரியார்களைப் பற்றி நமக்கு ஓரளவு  தெரியும்.. அந்தப் பாதிரியர்கள் தமிழர்களாக இருந்தால் அவர்களிடம் எப்போதுமே ஒரு பெருந்தன்மை உண்டு. அவர்கள் பொதுவான மனிதர்களாகவே நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களே ஒர் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தால் அவர்களை மாற்றவே முடியாது. அவர்கள் மட்டும் அவர்களுடைய இனத்திற்குத் தான் சார்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

எனது தந்தையார் சொன்ன ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. ஆங்கிலப் பள்ளிகளில் அந்தக் காலத்தில் அதுவும் தோட்டப்பாட்டளிகளின் பிள்ளைகளைச்  சேர்ப்பது என்பது சிரமமான ஒரு விஷயம். அதற்காக எனது தந்தையார் பாதிரியாரிடம் சென்று சிபாரிசு கடிதம் கேட்டார். அவர் யாழ்ப்பாணத் தமிழர். அவர் சொன்ன பதில்: "நீ தோட்டத் தொழிலாளி. உளி பிடித்து பால் மரம் வெட்டுபவன். உன் மகன் பேனா பிடித்து எழுத வேண்டும் என்று ஆசைப்படலாமா?" என்று கேட்டு சிபாரிசு கடிதம் கொடுக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் எனது தந்தை அந்த பள்ளியில் அலுவலகராக பணிபுரிந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழருக்கு,  மாடு ஒன்றை விற்று, அவருக்கு இலஞ்சம் கொடுத்ததாக என்னிடம் கூறியிருக்கிறார்.

அந்த ஒரு பாதிரியாரை வைத்து நான் இதனைக் கூறவில்லை. இப்போதும் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம். அவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துவிட்டது.. இல்லை என்றே சொல்லலாம்.  இன்றும்  இந்தியத் தமிழர் மீதான வன்மம் அவர்களுக்குக்  குறைந்ததாகத் தெரியவில்லை! நாம் அடிமைகளாக வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்!

இப்போதும் அவர்கள் பல நல்ல பதவிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  பிரச்சனைகள் வருகின்ற போது உதவ வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் அவர்களுக்கு வருவதில்லை. இது இந்தியத் தமிழனின் பிரச்சனை என்பதாகத்தான் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.

அவர்கள் விரும்புகிறார்களோ விரும்பவில்லையோ இரு சாரார்களுக்கிடையே வளர்ச்சி என்பது என்னவோ இரு பக்கமும் உயர்ந்துவிட்டது. அன்று அவர்களுக்குக் கிடைத்த  மாலை மரியாதைகள்  எல்லாம் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை.

அடுத்து: கடைசிப்பகுதி

Sunday 21 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து.. (4)

 


பொதுவாக  மலேசிய இந்தியத் தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குமான உறவு முறைகள் எப்படி?

ஆரம்ப முதலே சரியான முறையில் அமையவில்லை என்பது தான் யதார்த்தம். இந்தியத் தமிழர்கள் தோட்டப்புறங்களில் அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.  யாழ்ப்பாணத் தமிழர்கள், அது தோட்டப்புறமாக இருந்தாலும், உத்தியோகம் பார்த்தவர்கள்.

இருவருக்குமே வாழ்க்கை முறையில் பெருத்த வித்தியாசம். அதாவது எஜமானன் - அடிமை போன்ற ஒரு பார்வை இருவருக்குமே இருந்தது. தோட்டப்புறங்களில் வாழ்ந்த தமிழர்கள் அவர்களுக்குக் கூலிகள். இவர்களுக்கு அவர்கள் எஜமானர்கள். 

இவர்கள் பேசிய தமிழ் அவர்களுக்குக் கூலிக்காரன் மொழி. அதனால் தமிழையும் வெறுத்தார்கள், தமிழனையும் வெறுத்தார்கள். ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் அமைத்து அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தமிழ் படித்தார்கள். அதே பள்ளிகளில் கூலிக்காரன் வீட்டுப் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிலை வந்த போது அவர்கள் அமைத்த பள்ளிகளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டார்கள். தங்கள் மொழியையும் புறக்கணித்து விட்டார்கள்! கூலிக்காரன் மொழியை நமது பிள்ளைகள் படிப்பதாவது என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள். அதனால் இப்போது அவர்கள் தமிழே வேண்டாம் என்று தமிழையே ஒதுக்கிவிட்டார்கள்.

ஆரம்பகாலந்தொட்டு இந்தியத் தமிழர்கள் இவர்களைக் குறிப்பதற்கு 'பனங்கொட்டை' என்கிற சொல்லைப் பயன்படுத்தினார்கள். இன்றும் அது தொடர்கிறது. ஆனால் அதன் பொருள் எனக்குப் புரியவில்லை. யாழ்ப்பாணத்தைப் பற்றியான சொற்ப அறிவு மட்டுமே எனக்குண்டு.

யாழ்ப்பாணத் தமிழர்கள் படித்தவர்கள் கல்வியே இவர்களுக்குப் போதையாகிப் போனதோ என்று நான் நினைப்பதுண்டு. கல்வி என்பது மனிதநேயத்தைப் போதிக்க வேண்டும். ஆனால் அவர்களிடம் மனிதநேயம் இல்லை. இந்தியத் தமிழர்கள் என்றாலே அவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. ஏதோ அடிமை என்கிற எண்ணம் இப்போதும் அவர்களிடம் உண்டு. ஆனால் இப்போது  இந்தியத் தமிழர்கள் அவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை! அது தேவைப்படவும் இல்லை! இரு பக்கமும் காதல் திருமணங்களும் நடக்கின்றன. கல்வி அவர்களை ஒன்று சேர்க்கிறது.

இளம் வயதில் அடிக்கடி ஒரு கேள்வி என்னுள் எழுவதுண்டு. இவர்கள் இந்த அளவுக்கு வன்மம் நிறைந்தவர்களாக இருக்கிறார்களே அவர்களின் இலங்கை நாட்டில் அந்த சிங்களவர்களோடு எப்படி இவர்களால் சேர்ந்து வாழ முடிகிறது என்கிற எண்ணம் வருவதுண்டு.   அப்போது எனக்கு அந்நாட்டின் சரித்திரம், பூகோளம், அரசியல் என்று  எதுவும் அறியாத போது அப்படி நான் நினைத்தேன்.

எனது பள்ளி காலத்தில் மாணவர்கள் கணக்கெடுப்பு  எடுக்கும் போது அவர்கள் இந்தியர் பட்டியலில் வரமாட்டார்கள். தங்களை சிலோனீஸ் என்று தான் அழைத்துக் கொள்வார்கள். அது தான் சரி. அப்போது அது எனக்கு விளங்கவில்லை.

எஜமானனுக்கு ஓர் அடிமை இருந்தால் அவன் எப்படி அந்த அடிமையை நடத்துவானோ அப்படித்தான் அவர்கள் இந்தியத் தமிழர்களை நடத்தினார்கள். சீனர்களிடமோ, மலாய் மக்களிடமோ அவர்களால்  ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் அதிகாரத்தை அப்பாவித் தமிழர்களிடம் தான் காட்ட முடிந்தது.

இன்னும் வரும்

Saturday 20 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து .....(3)

    


                                                 

விளையாட்டுத்துறை என்று எடுத்துக் கொண்டால் ஒரு காலகட்டத்தில் அவர்களது பெயர் மிகவும் பிரபலம். அனைத்து மலேசியர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தனர்.

அன்று மணிஜெகதீசன் என்றால் ஓட்டப்பந்தயத் துறையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். அவர் படிக்கும் காலத்திலேயே கொடிகட்டிப் பறந்தவர். பின்னர் படித்து மருத்துவ டாக்டராக உயர்ந்தவர்.

பெண்களில்,  ஓட்டப்பந்தய வீரர் என்றால் ராஜாமணியை அறியாமல் இருக்க முடியாது. பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

அதே போல பூப்பந்து விளையாட்டு என்றால் பஞ்ச் குணாளன் மிகவும் பெயர் பெற்று விளங்கியவர்.

இவர்கள் எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர் வழி வந்தவர்கள். இவர்கள் காலத்துக்குப் பின்னர்  பலர் வந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் பெயர் தான் மறக்க முடியாத பெயர்களாக  இன்னும் விளங்குகின்றன.

மேற் குறிப்பிட்ட துறைகள் மட்டும் அல்ல இன்னும் பல விளையாட்டுத் துறைகளில் இவர்கள் பெயர் பதித்தவர்கள். குறிப்பாக ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் பெயர் பெற்றவர்கள்.  எனினும் அத்துறை சம்பந்தப்பட்டவர்களை நான் அதிகம்  அறிந்திருக்கவில்லை.

மலேசிய மக்களில் சிறு எண்ணிக்கையில் அவர்கள் இருந்தாலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திருக்கின்றனர். அவர்களின் சாதனைகளுக்கு அடிப்படை என்பது ஒன்றே ஒன்று தான். அது தான் கல்வி.

கையில் கல்வி என்று ஒன்று இருந்துவிட்டால் போதும் அவன் இந்த உலகையே ஆள முடியும். அந்த கல்வியை வைத்துக் கொண்டு தான் இன்று தமிழ்ச்சமுகம் உலகெங்கிலும் தனது ஆளுமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்வியின் பலத்தை நாம் தெரிந்து கொண்டோம்.

மலேசியாவில் யாழ்ப்பாணத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் ஒரே காலகட்டத்தில் இங்கு வந்தவர்கள் தான்.  ஒரு சாரார் கல்வியோடு வந்தவர்கள். அதனால் அவர்கள் உயர்வு பெற்றார்கள்.  ஒரு சாரார் கல்வி கற்காதவர்களாக இங்கு வந்தவர்கள். அதனால்  பெருந்துன்பத்துக்கு உள்ளானார்கள். படிப்படியாக, கல்விகற்று, இன்று இவர்களும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உயரம் அதிகம்.  இருப்பினும் தொடக்கூடிய அளவு தூரம் தான்!

இரு வெவ்வேறு  இடங்களிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்திற்கு  விளையாடுவதற்கான திடல் சமமாக  அமையவில்லை. இருந்தாலும் ஒரு சாராரின் வெற்றி தமிழ்ச்சமூகத்தின் வெற்றி தான்!

இன்னும் வரும்

Friday 19 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து ...... (2)

 

கல்வி கற்ற தமிழர்களாக இருந்தால் அவர்கள் எந்த அளவுக்கு அல்லது எத்தனை குறுகிய காலத்தில் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனார்.

அப்போது வாய்ப்புக்கள் நிறையவே இருந்தன. அதனை அவர்கள் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் கற்ற கல்வி அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது.

இன்று தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைப் 'படி! படி!' என்று வற்புறுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். கல்வியை வைத்தே மிக உயர்ந்த இடத்திற்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள். சரியான சான்றாக மக்களிடையே அவர்கள் விளங்குகிறார்கள்.

தமிழினம் கல்வியை வைத்துத்தான் முன்னேற முடியும்  என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களிடம் உண்டு. அவர்களுடைய பிள்ளைகள் கல்வியில் பிந்தங்குகிறவர்களாக இருந்தால் அவர்களை அவர்கள் விடுவதில்லை. அவர்கள் முறையான கல்வி கற்கும்வரை பெற்றோர்களின் பங்குக்  குறைவதுமில்லை. தகப்பன் இல்லையென்றாலும் தாய் பிள்ளைகளின் கல்வியை எப்பாடுப் பட்டாவது அவர்களின் கல்வி முடியும்வரை துணை நிற்பார்.

ஆனால் நம் தமிழ் மக்களிடையே இது போன்ற தியாகங்கள் குறைவு. தந்தை இறந்து போனால் தாயாரால் அந்தக் குடும்பத்தை நடத்த முடிவதில்லை. பிள்ளைகளை வேலைக்கு அனுப்பியே ஆகவேண்டும்  என்கிற ஒரே கருத்தைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. ஒரு வேளை தாய் படித்தவராக இருந்தால் பிள்ளைகள் தப்பித்தார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் பெண்களின் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கும் ஒரு காரணம் உண்டு. வரதட்சணை என்பது அவர்களிடையே உள்ள பெருங்கொடுமை.  பெண்களுக்குக் கல்வி இருந்தால் அவர்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்து கொள்வது எளிதாக இருக்கும். வரதட்சணை என்பதை தவிர்த்து விடலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடைசி காலம்வரை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பெண் எடுக்க வேண்டுமென்றால் அவர் அளவுக்கு அந்த பெண் வீட்டார் பணக்காரராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அளவு பணக்காரர் யாரும் இல்லை. அதனால் அவர் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

ஒன்றை இங்குக் குறிப்பிட வேண்டும். என்ன தான் அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் திருமணம் என்று வரும் போது  வரதட்சணை என்பதை அவர்களால் கைவிட முடிவதில்லை. அவர்கள் அளவுக்கு ஈடாக இருக்க வேண்டும்.  அதனால் பெரிய குடும்பங்களிலிருந்து வரும் பெண்கள் காதல் திருமணங்களையே விரும்புகின்றனர்.

அது அந்த சமூகத்தின் பலவீனமா என்று நம்மால் சொல்ல முடியவில்லை. எல்லா சமூகத்தைப் போல அவர்களிடம் பலமும் உண்டு பலவீனமும் உண்டு.

இன்னும் வரும்...

Thursday 18 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள்!


 "அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள்" என்கிற தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகம்  ஆங்கிலத்தில் வெளியீடு கண்டிருக்கிறது.

புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை.

யாழப்பாணத் தமிழர்களின் முன்னேற்றத்தைப்பற்றி நம்மால் ஓரளவு யூகிக்க முடியும். அவர்கள் மலேயா நாட்டிற்குள் அடியெடுத்து  வைத்த போதே  கல்வியோடு வந்தவர்கள். ஆங்கிலமும் தமிழும் கற்றுத் தேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருந்தனர்.

"ஏழைகளின் ஆயுதம் கல்வி" என்பார்கள். அவர்கள் ஏழைகளாகத்தான் வந்தார்கள். அவர்களிடம் கல்வி இருந்ததால் அவர்கள் முன்னேற்றம் சீராக  அமைந்ததில் வியப்பேதும் இல்லை. 

அவர்களிடம் இருந்த கல்வி வெகுவாக அவர்களை உயர்த்திவிட்டது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள், மருத்துவமனை செவிலியர்கள்,  தோட்ட சிப்பந்திகள், அரசாங்க அலுவலகர்கள் - இப்படி  எல்லாத் துறைகளிலும் அவர்களின் ஆக்கிரமிப்பு  அடங்கியிருந்தது.

ஒரு சமூகம் படித்திருந்தால் அவர்களின் முன்னேற்றம்  எப்படி அமையும் என்பதற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் சரியான உதாரணம்.

இன்றைய நிலையில் அவர்கள் படித்தவர்கள் என்பதைவிட இன்னொருபடி மேலே போய்விட்டார்கள். அனைவரும் பட்டதாரிகள் அதுவும் வெளிநாட்டுப் பட்டதாரிகள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியளார்கள், தொழிலதிபர்கள் - இப்படி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர். பலர் வெளிநாடுகள் சென்று குடியேறிவிட்டனர். அங்கு அரசியலிலும் மிளிர்கின்றனர்.

சுமார் எழுபது எண்பது ஆண்டுகளில் அவர்களின் முன்னேற்றம் என்பது வெறும் கல்வியை வைத்து மட்டும் தான் அமைந்திருக்கிறது. வேறு மந்திரம் தந்திரம் எதுவுமில்லை. கல்வி மட்டும் தான் மந்திரம் தந்திரம்!

தொழில் அதிபர்கள் என்கிற போது யார் நம் கண்முன்னே நிற்கிறார்கள்? மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்கிறார்களே  ஆனந்தகிருஷ்ணன் - அவர் தான்  யாழ்ப்பாணத் தமிழர்களில்  உலகின் பணக்காரர்களின் ஒருவராக வலம் அவ்ருகிறார். இன்னொருவர் கப்பல்களை ஓட்டும் யாழ்ப்பாணத் தமிழரான ஞானலிங்கம் நமக்கு மிகவும் அறிமுகமானவராக இருக்கிறார். இருவருமே மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்கள்.

மலேசிய அரசியலிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. சீனிவாசகம் சகோதரர்களை யாரும் மறக்க இயலாது. கிரிமினல் வழக்கறிஞர்கள். அவர்கள் காலத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள்.

இப்படி இன்னும் பல துறைகளில் பெயர் போட்டவர்கள் மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்கள்.

இன்னும் வரும்..


Wednesday 17 August 2022

நமது அனுதாபங்கள்!

                                    முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்

 அனுதாபங்கள்! என்று சொல்லுவதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு!

நாட்டின் பிரதமராக இருந்தவர் நஜிப் அப்துல் ரசாக். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை.  அப்படி ஒரு நிலைமை வரவேண்டும் என்று எதிர்பார்த்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது நடக்காது என்று எதிர்ப்பார்த்ததும் உண்மை. மலேசிய அரசியலில் அப்படியெல்லாம் நடப்பது வாய்ப்பே இல்லை!

நடக்காது என்று எதிர்ப்பார்த்ததற்கு  முன்னைய உதாரணங்கள் உண்டு. நம்மை வைத்து கொள்ளயடித்த தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களை எந்த வகையிலும் தண்டனைக்கு உட்படுத்த முடியவில்லை. கடைசிவரை தங்களது பட்டம் பதவிகளை உயர்த்திக் கொண்டார்களே தவிர நீதியின் முன் அவர்களை நிறுத்த முடியவில்லை! இது தான் மலேசிய அரசியல்!

தன்னை யாரும் அசைக்க முடியாது என்றிருந்த ஒரு  முன்னாள் பிரதமரை அசைத்திருக்கிறது நீதிமன்றம்.  அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை 12 ஆண்டுகள். இப்போதே அவரை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அவருக்கு அரச மன்னிப்பு கிடைத்தால் வெளியே வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதுவும் மாமன்னர் இன்றோ நாளையோ உடனடியாகக்  கொடுத்துவிடுவார் என்றும் நம்புவதற்கு இடமில்லை. 

மாமன்னரும் உடனடியாக 'எஸ்! நோ!' என்று  சொல்லும்  நிலையில் இல்லை. நஜிப்புக்கும் இன்னும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அரச மன்னிப்பு என்று வரும்போது இனிவரப்போகும் வழக்குகளைப் பற்றியும் யோசிக்க வேண்டிய சூழலில் அவர் உள்ளார்.

நஜிப் மட்டும் அல்ல இன்னும் அவருடைய சகபாடிகள்  ஊழல்  வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன! அவர்களுக்கும் சிறை தண்டனை என்றால்.........?  அவர்களும் அரச மன்னிப்புக்காக  மாமன்னரிடம் மனு செய்ய வேண்டிவரும்! ஆக, அரச மன்னிப்பு என்பதற்கு என்ன தான் பொருள்? கொள்ளையடிப்பவர்களைப் பாதுகாப்பதா அவரின் வேலை?

அரசியல்வாதிகள் நாட்டையே கொள்ளையடிப்பார்கள் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தான்  மாமன்னரின்  வேலையா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்யும். தெரியாமல் செய்பவர்களை மன்னித்து விடலாம். தெரிந்து செய்பவர்களை..........?

நஜிப் அவர்களின் எதிர்காலம் பற்றி நம்மால் கணிக்க முடியவில்லை. இன்றைய நிலையில் அது மாமன்னரின் கையில். அவர் 12 ஆண்டுகள் சிறையில் இருப்பாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவர் தனது ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு 'என்னை யார் என்ன செய்துவிட முடியும்?' என்று சவால் விட்டுக் கொண்டிருந்தாரே அதற்கு அவர் 12 நாள்கள் சிறையில் இருந்தாலும் அது அவருக்குப் பெருத்த அவமானம் தான்! அந்த கறையை அவரால் என்றென்றும் நீக்க முடியாது!

Tuesday 16 August 2022

என்ன காரணம் தெரியவில்லை!

 

இங்கு சொல்லப்படுகின்ற  செய்திகள் அனைத்தும் நாளிதழ்களில் வருகின்ற செய்திகள் தான்.

ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருந்து வருகின்ற செய்திகள். ஏதோ ஒரு பள்ளிக்கூடம்,  அதுவும் குறிப்பாக  தமிழ்ப்பள்ளிக்கூடம், கட்டிமுடிக்கப்பட்டும் மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்டவை. கட்டடத்தைக் கட்டிய குத்தகையாளர் அவர் வேலையை முடித்துவிட்டு, கிடைக்க வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, கொடுக்க வேண்டிய கமிஷனையும் கொடுத்துவிட்டு அடுத்த பள்ளிக்கட்டட வேலைக்குப் போய்விட்டார்! அவர் ஏதும் தவறு செய்யவில்லை. தவறு செய்திருந்தால் அவருக்குப் பணம் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் ஏன் பயன்படுத்த முடியவில்லை என்பதற்குக் காரணம் தெரியவில்லை. குத்தைகையாளர் தவறு செய்திருந்தால் கல்வி அமைச்சு அவர்க்குப் பணத்தைக் கொடுத்திருக்கக் கூடாது. எல்லாம் சரி என்பதால் தான் அவர்க்குப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஏதோ ஒரு காரணம்.  கட்டடம் ஒன்றுமில்லாமல் சும்மா கிடக்கிறது!

இது போன்று நிறைய பள்ளிக்கூடங்கள். பெரும்பாலானவை தமிழ்ப்பள்ளிக்கூடங்கள். இப்படி ஒரு நிலைமை தேசிய பள்ளிகளுக்கு உண்டா என்றால்  இருக்க வழியில்லை. காரணம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஏறி மிதித்து விடுவார்கள்! 

தமிழ்ப்பள்ளிகளில் அது நடப்பதில்லை!  கேள்வி கேட்டால் "மாற்றிவிடுவோம்! ஜாக்கிரதை!"  என்று பயமுறுத்தி வைத்திருப்பதால்  எல்லாமே இப்படி இழுத்துக் கொண்டே போகிறது.  பள்ளி நிர்வாகம் என்ன செய்யும்? ம.இ.கா. காரனும் பயமுறுத்துகிறான்! கல்வி அமைச்சில் உள்ளவனும் பயமுறுத்துகிறான்! அதனால் கட்டடங்கள் கட்டியும் பல ஆண்டுகளாக கேட்பாரற்று நாறிக்கிடக்கின்றன!

இப்படி நடப்பதற்கான அடிப்படைக்  காரணங்கள்  என்ன?  இலஞ்சம், ஊழல் - இதைவிட வேறு காரணங்கள் என்ன இருக்க முடியும்? ஊழல் என்றால் அரசியல்வாதிகள் தான் நம் கண்முன் நிற்கிறார்கள். பதவியில் உள்ள அமைச்சர்களும், பெரும்புள்ளிகளும் நம் கண்முன்னே நிற்கிறார்கள். 

ஆனால் அரசாங்க அதிகாரிகள், கல்வி அமைச்சின் கல்வியாளர்கள் யாரும் நம் கண்முன்னே வருவதில்லை! கல்வி அமைச்சு என்றாலே நாம் மரியாதைக்குரியவர்களாகவே பார்க்கிறோம். ஆனால் அவர்களும் சராசரிகள் தான் என்பதைக் காட்டிவிடுகிறார்கள்! இலஞ்சம் இல்லாமல் அவர்களால் நாட்களை நகர்த்த முடியாது!

இதைத்தான் நாம் 'தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!' என்கிறோம். நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இலஞ்சம். 

நமக்குள்ள ஆதங்கம் எல்லாம் கல்விக்கூடங்களிலும் இலஞ்சம் தலைவிரித்தாடுகிறதே  என்று நினைக்கும் போது 'பாவம்! இந்த வஞ்சகர்களின் எதிர்காலம்!'  என்று அனுதாபம் தான் வருகிறது!

Monday 15 August 2022

தேர்தல் களம் எப்படி ...?

 

வருகின்ற 15-வது பொதுத் தேர்தல் களம் எப்படி இருக்கும்?

"எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்!" என்று சொல்லிவிட்டு சும்மா இருக்க முடியவில்லை!  நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதையும் அலட்சியப்படுத்திவிட முடியாது!

நாட்டின் அரசியல் அயோக்கியர்களின் கைக்குப் போனால் என்ன ஆகும் என்பதை இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் நமது இனம் இன்னும் விஷேசம். இருப்பதையும் இழந்த ஒரு சமூகம்!

தேர்தல் களம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது?  களை இழந்துவிட்டதா? அம்னோ கட்சியினர் பிரதமருக்குக் கொடுத்த நெருக்குதல் தொடருமா? தடம் புரளுமா என்று தீர்மானமாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை!

முன்னாள் பிரதமரின் சிறைவாசம் அவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று என்பது மட்டும் உறுதி.  அதெப்படி அவரைச் சிறையில் அடைக்க முடியும்? அவர் சாதாரண ஆளா என்ன? பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சிறையிலா? ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

எது எப்படி என்றாலும் நீதிக்கு முன் அனைவரும் சமம். நஜிப்-பாக இருந்தாலும் நம்பியாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் யாரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட முடியாது! ஏதோ கொஞ்சம் ஆட்டம் காட்டலாம். அது சில நாளைக்குத்தான் உதவும், அவ்வளவு தான்!

ஆக, அம்னோ தரப்பு இப்போது தேர்தல் வேண்டும் என்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். உடனே தேர்தல் என்றால் அது அம்னோவுக்கு 'அனுதாப அலை' வீசலாம்! அல்லது அம்னோவினர் மாபெரும் துரோகிகள் என்கிற முத்திரை விழலாம்! அது மலாய்க்காரர்களின் கையில் தான் இருக்கிறது!

இன்னொரு பக்கம் ம.இ.கா. வும் தனது பங்குக்கு சில ஆலோசனைகளைக் கூறி வருகிறது. 'எங்களுக்கு வெற்றி பெறும் தொகுதிகளைத் தாருங்கள்!' என்று அம்னோவிடம் கூறி வருகிறது!

இத்தனை ஆண்டுகால தேர்தல்களில் இல்லாத ஒன்றை ம.இ.கா.வினர் இப்போது கூறி வருகின்றனர். அம்னோவின் வெற்றியே நிச்சயம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது ம.இ.கா. விற்கு  எப்படி வெற்றி பெறும் தொகுதிகள்? அது அவர்களுக்குத்தான் வெளிச்சம்!

ம.இ.கா.வினர் சிரமப்பட்டு வெற்றி பெற்ற காலத்தில் கூட அவர்கள் தொகுதியை மறந்துவிட்டு மல்லாக்க தூங்கிக் கொண்டிருந்தவர்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டு. இந்த நிலையில் எளிதாக வெற்றி பெற எங்களுக்கான தொகுதிகளைத் தாருங்கள்  என்றால் அது எப்படி என்று தான் நாமும் கேட்க வேண்டி உள்ளது! எளிதான வெற்றி என்றால் தொகுதி பக்கமே வராமாட்டார்கள் என்பது நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!

ம.இ.கா. கேட்பதைப் போலவே அம்னோவில் உள்ளவர்களும் கேட்கலாம் அல்லவா? எளிதான வெற்றியை யார் தான் வேண்டாம்  என்று சொல்லுவார்கள்?  மலாய்க்கரர்களின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும்?  முன்னேற்றம் என்பது அப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்போது வயிற்றுப்பாடு என்று ஒன்று இருக்கிறதே அதை எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடியும்?

எப்படியோ தேர்தல் களம் என்பது இன்றோ நாளையோ நாம் அறியோம். இந்த முறை கொஞ்சம் கடினமாகவே இருக்கும். பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை எப்படி யாரால் சமாளிக்க முடியும் என்பதற்கான தீர்வு உள்ளவர்கள் தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு தலைவனை நம்பியோ, ஒரு தொகுதியை நம்பியோ யாரும் இல்லை. உங்களின் பங்களிப்பு என்ன என்பது தான் உங்களின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

Sunday 14 August 2022

இலஞ்சத்தை ஏற்றுக்கொள்கிறோம்!

 

வெளிநாட்டுக் கலைஞர்கள் என்றாலே நமது "பாஸ்"  கட்சியினருக்கு எப்போதுமே ஏதோ ஒரு வகையான தீண்டாமை  அவர்கள் மேல் உள்ளது!

அவர்களால் நமது கலாச்சாரம், பண்பாடு அனைத்துக்கும் ஆபத்துகள் ஏற்படுகின்றன என்கிற விதத்தில் கூறி வருகின்றனர்! உண்மையைச் சொன்னால் நமது உள்நாட்டுக் கலைஞர்கள் வெளிநாட்டுக் கலைஞர்களை விட எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. வாய்ப்புகள் கொடுத்தால் அவர்களையும் மிஞ்சகின்ற அளவுக்கு இவர்களாலும் செயல்பட முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இங்குள்ள கலைஞர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.  அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர அவர்களுக்கு வழியில்லை. அல்லது அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதில்லை.  அவர்களைக் குறை சொல்லியே அவர்களை நசுக்கி விடுகிறோம்! உள்நாட்டில் அனைத்துக்கும் தடை.

நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வெளி நாடுகளிலிருந்து  எல்லாக் குப்பைகளும் வந்து விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. உங்களால் என்ன செய்ய முடிந்தது?

எல்லாக் குப்பைகளையும்விட மிகப் பெரிய குப்பை என்றால் அது  பதவியில் உள்ளவர்கள் இலஞ்சம் வாங்குவது தான்! ஒவ்வொரு அரசியல்வாதியும் இலஞ்சம் வாங்குகிறான்! ஏன்,  பாஸ் கட்சியினர் மட்டும்  என்ன அதற்கு விதிவிலக்கா? இல்லவே இல்லை! சமீப காலத்தில், இன்றைய அரசாங்கத்தில்,  இவர்களின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாதா? இவர்கள் இலஞ்சம் வாங்குவதில்லை என்று இவர்களால் சத்தியம் செய்ய  முடியுமா? 

பணம் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு கேப்மாரி என்பது உலகத்துக்கே தெரியும்! அதுவும் நமது முன்னாள் பிரதமர், நஜிப் ரசாக்  மிகவும் தவறான காரியத்துக்காக உலகப் புகழ்பெற்ற ஒரு நபராக உலக அளவில் இன்று விளங்கி வருகிறார்! அவர் என்ன சமய அறிவு இல்லாதவரா? எல்லாக் காலங்களிலும் சமயப் புத்தகங்களைப் படித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டவர் தானே! ஏன்?  தனது கடைசி நேர முயற்சியாக பள்ளிவாசலில் சத்தியம் செய்தாரே!   அப்படியென்றால் நீதிமன்றத்தில் அவர் செய்த சத்தியம் என்னவாயிற்று?

இன்று நாட்டிற்குத் தேவையானது எதுவோ அதற்காக பாஸ் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும். வெளிநாட்டுக் கலைஞர்கள் வருவது போவது, பாடுவது ஆடுவது - இதெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. இன்று நாட்டை ஆட்டிவைப்பது இலஞ்சம்! இலஞ்சம்! இலஞ்சம்! இலஞ்சம் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முடியவில்லை!

ஓர் ஏழை,  ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கினால் இலஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. வேறு எங்குமல்ல நமது நாட்டில் தான்! சிங்கப்பூர் நாடு சமயம் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களால் எப்படி இலஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது?  பதவியில் உள்ளவன் ஏன் இலஞ்சம் வாங்குவதில்லை?

ஒன்று மட்டும் நிச்சயம். சமயத்திற்கும் இலஞ்சத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை.  தனி மனித ஒழுக்கம். அது தான் இலஞ்சம் வாங்குவது தவறு  என்று சுட்டிக்காட்டும். அப்பன் தவறு செய்தால் மகனும் தவறு செய்வான்! தனி மனிதனின் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றால் "நாங்கள் இலஞ்சத்தை ஆதரிக்கிறோம்!"  என்று சொல்லுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! 

அது பாஸ் கட்சிக்கு மட்டும் அல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்!

Saturday 13 August 2022

நாம் தோற்றிடுவோம்! பயமாயிருக்கு!


 "ஐயோ! பொதுத் தேர்தலை உடனே நடத்துலேனா நாங்க தோத்துப் போவோம்! உடனே நடத்துங்க!"

இது தான் அம்னோ கட்சியில் உள்ள ஒரு  தரப்பினரின் அபயக்குரல்!  அந்தக் கட்சியின் இன்னொரு தரப்பு அதனை விரும்பவில்லை.  "உடனே!" என்று சொல்லுகின்ற தரப்பு, தப்பு செய்துவிட்டு நீதிமன்ற வழக்குகளில்  மாட்டிக் கொண்டிருக்கும் தரப்பு!

அம்னோ பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் நீதிமன்ற வழக்குகளைப்பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை! நீதி தமது கைக்கு வந்துவிடும்! 

இன்னொரு தரப்பு  அம்னோ கட்சி பல மலாய்ப் பெரியவர்களால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி. அதன் நோக்கம் மலாய்க்காரர்களை முன்னேற்றுவது.  ஊழல் செய்யும் அரசியல்வாதிகளால்  அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.  மலாய்க்கரர்களின் முன்னேற்றத்திற்கு ஊழல்வாதிகளான இவர்கள் தான்  தடையாக இருக்கின்றனர்! 

கல்வியில் மாபெரும் முன்னேற்றம் என்றாலும் இன்னும் "தூக்கிவிடுகின்ற"  போக்குத்  தான் நிலவுகிறது என்பதில் ஐயமில்லை.  சமீபத்திய மெட்ரிகுலேசன் வரை இன்னும் தகுதி அடிப்படையில் தெர்ந்தெடுக்கப்படுவதில்லை!   ஏதோதோ பெயரில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது!

இதற்கெல்லாம் யார் காரணம்? ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் தான் காரணம் என்பது தான் குற்றச்சாட்டு! ஊழல்வாதிகள் பிழைப்பு நடத்த இத்தகைய "ஊழல்" போக்கைக் கல்வியிலும் கைவைக்கின்றனர்! மாணவர்களின் எதிர்காலத்தைவிட  ஊழல்வாதிகளின் எதிர்காலமே முக்கியம் என்பதாக அவர்கள் நினைக்கின்றனர்! 

ஊழல்வாதிகளால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?  எல்லாத்துறைகளிலும் ஊழல்கள் ஏற்பட்டுவிட்டன! "தலைவர்கள் செய்கிறார்கள்! நாங்களும் செய்கிறோம்!" என்கிற போக்கு அதிகமாக நிலவுகிறது!

சமயம் என்று ஒன்றிருந்தே இந்த அளவுக்கு ஊழல்கள் என்றால் சமயம் என்கிற ஒருபாடமே இல்லையென்றால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை!

நம்மிடம் கேட்டால் அரசியல்வாதிகள் எந்த ஒரு காரணத்திற்காக அரசியலுக்கு வந்தார்களோ அந்த ஒரு காரணமே  அவர்கள்  வெற்றி பெற போதுமானது. மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள் தானே?  பின்னர் மக்களை மறந்துவிட்டு அவர்களின் குடும்பத்திற்குத் தொண்டு செய்யப் போனது அவர்கள் குற்றம் தானே!

மக்களுக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள் இப்போது பாதை மாறிப்போய்  "நாங்கள் வெற்றி பெற வேண்டும்! தேர்தலை வையுங்கள்!" என்று குத்தாட்டம் போட்டால் யாரைக் குற்றம் சொல்லுவது?

பாதை மாறிப்போன நீங்கள் தேர்தலில் தோற்றுப் போனால் நமக்குச் சந்தோஷமே!



Friday 12 August 2022

கள் வாங்கிக் கொடுத்தால் போதும்!

 

சமீபத்தில்  நெகிரி செம்பிலான் ம.இ.கா. பேராளர் மாநாட்டில்  ம.இ.கா. தேசியத் தலைவர், டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்  மாநிலத்தில் இன்னும் ஒரு கூடுதல் தொகுதி கோரவுள்ளதாகக்  கூறியிருந்தார். அநேகமாக  அவர் சட்டமன்றத் தொகுதியைத்தான் குறிவைக்கிறார் என்று சொல்லலாம். கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

இங்கு அதுபற்றி நான் பேசப்போவதில்லை. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி எனக்கு மிகவும் பரிச்சையமான தொகுதி.  பழைய நினைவுகளைக் கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறேன்.

எனக்குத் தெரிந்து போர்ட்டிக்சன் தொகுதி தொன்றுதொட்டு ம.இ.கா. வின் தொகுதி தான்.  அதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்  டத்தோ மகிமா சிங்.  தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார். டத்தோ பத்மநாபன் அந்த தொகுதிக்கு வந்த பிறகு மகிமா சிங் விடைபெற்றுக் கொண்டார்.

நான் 1970-ஆண்டு அங்கு வேலை மாற்றலாகிப் போனேன். அந்த காலகட்டத்தில்  மகிமா சிங் அவர்களைப்பற்றி பரவலாகப் பேசப்பட்டது. அன்று அவர் இந்தியர்களைப்பற்றி என்ன சொன்னாரோ அதனை அப்படியோ ம.இ.கா. தலைவர்கள் இன்றுவரை பின்பற்றுகின்றனர்!  அவர் சொன்ன பொன்மொழி: 'இந்தியர்களுக்குக் கள் வாங்கிக் கொடுத்தால் போதும் ஓட்டுப் போடுவார்கள்!'  என்பது தான்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் சொன்னது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது! இப்போது கள் கடைகள் இல்லை! அதற்கென்ன  மாற்றுவழிகளா இல்லை?  சென்ற தேர்தலில் பூக்கூடைகள் கொடுத்தார்களாம்! அதாவது பால்டின், சாடின், ஆட்டிறைச்சி, அரிசி, பருப்பு - இப்படி சில மிக மிக அத்தியாவசிய தேவைகளைக் கொடுத்ததாக  செய்திகள் வெளியாயின!  இது போன்ற பம்மலாட்டம் எல்லாம்  சீன, மலாய் வாக்காளர்களிடம் செல்லுபடியாகாது என்பது ம.இ.கா.வினர்க்கே தேரியும்.

சென்ற தேர்தலில் ம.இ.கா. தோற்றுப்போனது! அதன் பின்னர் எந்த சத்தமும் அவர்கள் பக்கமிருந்து வரவில்லை! இப்போது தான் வெளியே வந்திருக்கிறார்கள்! இப்போதும் அதே பாணியை அவர்கள் தேர்ந்தெடுத்து, ஒரு வேளை அவர்கள் வெற்றிபெற்றால், அதன் பின்னர் அவர்களைத்  தொகுதி பக்கம் எதிர்பார்க்க முடியாது! காரணம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துத் தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் அவர்களைக் குறை சொல்ல முடியாது!

இங்கு நான் போர்ட்டிக்சன் தொகுதிபற்றி மட்டுமே பேசுகிறேன், டத்தோ மகிமா சிங் பெரும் செல்வந்தர். நிறைய பஞ்சாபிய இளைஞர்களுக்கு உதவியிருக்கிறார். ஆனால் ஏனோ தமிழர்களைக்  குடிகாரராகி விட்டுப் போய்விட்டார். நல்லது செய்ய யாருக்கும் அக்கறை இல்லை. கெடுதல் செய்ய எத்தனை ஆண்டுகளானாலும் காத்துக் கிடக்கிறார்கள்!

நான் சொல்லுவது எல்லாம் குறுக்கு வழி  பயன் தராது என்பது மட்டும் தான்!

Thursday 11 August 2022

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!


 எஸ்.டி.பி.எம். பரிட்சை முடிவுகள் இன்று (18.8.22) வெளியாகிருக்கின்றன.

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும்  பாராட்டுகளும். அதிலும்,  சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலுமொரு கூடுதலான பாராட்டு.

எஸ்.டி.பி.எம். படிக்கின்ற மாணவர்களுக்கு இருப்பதெல்லாம் ஒரே இலட்சியம் தான். அவர்கள் நோக்கம் பல்கலைக்கழகம் போவது மட்டும் தான். வேறு காரணங்களுக்காக அவர்கள் எஸ்.டி.பி.எம். படிக்கப் போவதில்லை. 

ஒரு காலகட்டத்தில் எஸ்.டி.பி.எம். படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் இருந்தன. குறைவான பல்கலைக்கழக பட்டதாரிகள் இருந்த அந்த காலகட்டத்தில் இவர்கள் தான் பட்டதாரிகளின் இடத்தை நிரப்பினர். அதன் கல்வித்தரமும் அதிகம். வெற்றி பெறுவது சுலபமல்ல. இப்போதும் அதன் தரம் அதிகம்  தான் என்றும் சொல்லுகிறார்கள். அதனால் தான் மலாய் மாணவர்கள் மெட்ரிகுலேஷன்  கல்விக்குப் போட்டிப் போடுவதாக சொல்லப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் படித்துவிட்டு வெளியேற வேண்டுமென்றால்  வெளியேறலாம்.  வேலைவாய்ப்புகளுக்கு  அந்த சான்றிதழ் எடுபடாது. அது குப்பையாகத்தான் பயன்படும். ஆனால் எஸ்.டி.பி.எம். தேர்வு என்பது அப்படியல்ல. அதற்கான மரியாதை இன்னும் உண்டு. வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். வேலைக்குப் போக வேண்டும் என்கிற நிலைமையில் அவர்கள் இருந்தால் எஸ்.டி.பி.எம். படிக்கும் தேவையே ஏற்பட்டிருக்காது.

இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார்  67% (விழுக்காடு) B40  எனப்படும் வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை  நாம் வாழ்த்தியே ஆக வேண்டும். 

மீதம் 33% விழுக்காடு மாணவர்களில் பலர் வெளிநாடுகளில் படிக்க ஏற்பாடுகள் நடந்திருக்கும்.  இன்னும் பலர் உள்நாட்டுத் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விடுவார்கள். வசதி உள்ளவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. 

வசதி இல்லாத மாணவர்கள் தான் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும். அரசாங்கப்  பல்கலைக்கழகங்கள்  கைவிரித்தால் தனியார் ப'கழகங்கள் தான் கைகொடுக்கும். செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும்.  கடனோ உடனோ வாங்கித் தான் பெற்றோர்கள் பிள்ளைகளின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்.  அல்லது நிறையவே கல்வி கடனுதவிகள், இலவச கல்வி உதவிதொகை - இப்படி உதவிகள் கிடைக்கின்றன.

ஆனாலும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்புக்கள் நிறையவே  இருக்கின்றன. கதவுகள் இழுத்து மூடப்படவில்லை. மூடியிருந்தால் தட்டுங்கள்! மீண்டும் மீண்டும் தட்டுங்கள்!

வெற்றிபெற வாழ்த்துகள்!


Wednesday 10 August 2022

பகடிவதைகளைத் தடுக்க வேண்டும்!

 

ஒரு சில விஷயங்களில் அரசாங்கம் கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!

மூன்று குழந்தைகளுக்குத் தாயான தனித்து வாழும் பெண்மணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது  எந்த வகையிலும்  ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.  

என்ன தான் நடந்தது?  அந்த பெண்மணியின்  டிக் டாக் செயலியில் ஏற்பட்ட  விமர்சனங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த  விமர்சனங்கள் அவரை மனம் உடைய வைத்துவிட்டது; மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது. கடைசியில் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் செய்தது சரியா தவறா என்பது பற்றி நாம் பேசப் போவதில்லை. இணையதளங்களில் பங்கு பெறுவோர் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவெளிக்கு நீங்கள் வந்துவிட்டால்  விமர்சனங்கள் எப்படியும் வரலாம். நல்லது வந்தால் உங்களுக்கு சந்தோஷம். தவறானவை வந்தால் உங்களுக்கு மனக்கஷ்டம்.  இது தான் நமது பிரச்சனை. குறிப்பாகப் பெண்கள்  நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது போல் கெடுதலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில்லை.

விமர்சனங்களை எழுதுபவர்களில் பெரும்பாலனவர்கள் அரைகுறைகள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எது பற்றியும் கவலையில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். எவரையும் விமர்சனம் செய்வார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என்கிற பாகுபாடு அவர்களிடம் இல்லை. அதுவும் பெண்கள் என்று தெரிந்துவிட்டால் ஏகப்பட்ட நக்கல் நையாண்டிகள்  வந்து விழும். படிக்கவே கூசும் அளவுக்கு நம்மைத் திணறடிப்பார்கள். இங்கு நான் சொல்ல வருவது பெரும்பாலும் தமிழில் எழுதுபவர்களைத்தான் சொல்லுகிறேன். ஆங்கிலம், மலாய் மொழிகளிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

அரசியலில் ஈடுபடும் நமது இந்தியப் பெண்கள் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுகிறார்கள்  என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொண்டாலே  போதும். நம்மால் இதனையெல்லாம் தவிர்த்துவிட முடியும். ஆனால் அவர்கள் அதனை எழுத்து வடிவில் படிப்பதில்லை. அதனால் அவர்களுக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை.

ஆனால் இணையதளவாசிகள் நேரடியாகவே  அந்த விமர்சனங்களைப் படிக்கிறார்கள். அது அவர்களைப் பாதிக்கிறது.  பெண்களே! நீங்கள் இந்த விமர்சனங்களை எல்லாம்  - தேவயற்றவைகளை  எல்லாம் - தூக்கி ஏறிந்துவிடுங்கள். எல்லாவற்றையும் தமாஷாகவே எடுத்துக் கொள்ளுங்கள். மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். எடிட் செய்ய முடிந்தால் எடிட் செய்து விடுங்கள். தொடர்ந்து அவர்களைப் புறக்கணித்தால்  அவர்கள் அதன் பின்னர் தலைகாட்டமாட்டார்கள். 

வெகு விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் என நம்பலாம்.

Tuesday 9 August 2022

கடும் தண்டனை தேவை!

 

நாட்டில் நடக்கும் சில விஷயங்களைப் படிக்கும் போது "ஐயோ! மனிதர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா?" என்று நாமும் சேர்ந்து புலம்ப வேண்டியுள்ளது.

குழந்தைகளுக்கு மதுபானங்களைக் கொடுத்து குடிக்க வைப்பது என்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. இப்படிச் செய்பவர்கள்  மொடாக் குடியர்களாகத்தான் இருக்க வேண்டும். அதுவுமின்றி அம்மையும் அப்பனும்  இருவருமே குடிகாரர்களாக இருந்தால் தான்  இப்படியெல்லாம் செய்ய முடியும்!

இன்றைய நிலையில் குழந்தைகள் பலவகைகளில்  துன்புறுத்தப் படுகிறார்கள் என்பது உண்மை.  பல காணொளிகளைப் பார்க்கின்ற போது நமது கண்களில் இரத்தக்கண்ணீர் தான் வரும்.  அந்த அளவுக்குக் குழந்தைகளுக்குக் கொடுமைகள் நடக்கின்றன. யார் என்ன செய்ய முடியும்?   பேச முடியாத குழந்தைகள்.

குழந்தைகள் துன்புறுத்தல் என்பது பல தரப்புகளிலிருந்தும் வருகின்றன. வேலைக்காரப் பெண்கள் மூலம்,  கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத தாய், குடிகாரத் தந்தை, வளர்ப்புப் பெற்றோர்கள் - இப்படிப் பல தரப்பு மனிதர்கள் இந்த குழந்தைகளின் துன்புறுத்தல்களுக்குக் காரணமாக அமைகின்றனர்.  தொடர்ந்து காணொளிகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றன, பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இப்போது உள்ள குழந்தைகள் மகா மகா சுட்டிகள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதனால் விளையாட்டுத்தனம் அதிகம். அவர்களைச் சரியான பாதையில் கொண்டு செல்வது பெற்றோர்களின் கடமை.  ஆனால் வேலைக்காரர்கள் எதுபற்றியும் கவலைப்படுவது இல்லை. அவர்களும் கொடுமை செய்கின்றனர். குழந்தைகளால் ஒன்றும் செய்ய இயலாது.

ஆனால் குழந்தைகளுக்கு மதுபானம் கொடுப்பது என்பது அதிகமாக நாம் பார்ப்பதில்லை.  ஆனால் அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நமது பார்வைக்கு வருவதில்லை, அவ்வளவு தான்.

ஒரு முறை நான் பார்த்த காணொளியில் தொட்டியில் படுக்கப் போட்டிருக்கும் ஒரு குழந்தைக்கு அப்பன்  மதுபானத்தை வாயில்  ஊற்றுகிறான்.  குழந்தை சப்பு சப்பு என்று சப்புகிறது.  அதைப் பார்த்து அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஏகப்பட்ட சந்தோஷத்தோடு சிரி சிரி என்று சிரிக்கிறார்கள். என்னத்த சொல்ல!

இப்போது நமது பத்திரிக்கைகளில் வந்த செய்தி அதிர்ச்சியான செய்தி. சொல்ல என்ன இருக்கிறது?  ஒரு சிறுவனிடம் மதுபானத்தைக் கொடுத்து குடிக்க வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும். ஏற்கனவே நமது சமுதாயம் குடிகார சமுதாயம் என்று பெயர் எடுத்தவர்கள்.  இப்போது சிறு குழந்தையிலிருந்தே  குடிப்பழக்கத்தை ஏற்படுத்த இளம் பெற்றோர்கள்  முயற்சி செய்கிறார்கள் என்பதாகாத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

மற்ற இனத்தவர்கள் இது போன்று செய்ய வாய்ப்பில்லை. நம் ஆள் தான் இதையெல்லாம் செய்வான். ஏதோ ஒரு செய்தி இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. நமக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு என்ன என்ன கொடுமைகள் நடக்கிறதோ?

சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடும் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத்தவிர நாம் சொல்ல வேறு ஒன்றுமில்லை!

Monday 8 August 2022

அலட்டிக் கொள்ளாதீர்கள்!

 



                                                       தேர்தல் காலம் நெருங்குகிறது என நமக்குத் தெரியும். அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

எததனையோ தேர்தல்கள் வந்து போய்விட்டன. அல்லது புதிதாக வாக்கு அளிப்பவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் தேவையெல்லாம்  ஒன்று தான்.  இத்தனை ஆண்டுகள் வாக்களித்தோம் நம் சமுதாயம் எந்த அளவு பயன் அடைந்தது. அல்லது நமது வீட்டுக் குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி கிடைத்ததா, வேலை வாய்ப்புக்கள் கிடைத்ததா என்று ஒரு சிறிய ஆராய்ச்சி போதும் நீங்களே ஒரு முடிவு எடுத்துவிடலாம்.   

  புதிதாக, முதன் முதலாக வாக்களிப்பவர்கள் வருகிறார்கள். பள்ளி வாழ்க்கையில் என்ன நல்லது நடந்தது, கல்லூரிகளில் இடம் கிடைத்ததா, வேலை வாய்ப்புக்களில் புறக்கணிக்கப்பட்டோமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.  இப்படி ஒரு சில கேள்விகளோடு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.  நீங்கள் என்னதொரு முடிவுக்கு வருகிறீர்களோ  அவர்களுக்கு வாக்களியுங்கள்.  வாக்களிப்பதோடு உங்கள் அரசியலை முடித்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கைகால்களில் விழுவார்கள்! அதெல்லாம் அரசியல் விளையாட்டில் ஒரு பகுதி. அவர்களின் நடிப்பில் ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு நாம் தான் அவர்களில் கால்களில் விழ வேண்டும்!

இன்னும் சில அரசியல்வாதிகள் மகா கெட்டிக்காரர்கள். ஏதோ நாம் சாப்பாடே இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது போல அரிசி, பருப்பு, பால்டின்,சாடின் - இப்படி சிலவற்றைக் கொடுத்து வாக்களியுங்கள் என்று காலில் விழுவார்கள்! கணவர்களுக்குத் தண்ணி அடிப்பதற்குச் சாராயம் வாங்கிக் கொடுக்கும் வேட்பாளர்களும் உண்டு!

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இதையே அவர்கள் மலாய்க்காரர், சீன வாக்காளர்களிடம் செய்ய முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அடிதான் விழும்!

இந்திய வாக்களர்களுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால்  இதனைச் செய்யுங்கள். அடையாளக்கார்டு இல்லாமல், குடியுரிமை இல்லாமல் நாடற்றவர்கள்  என்று சொல்லிக் கொண்டு  பிறந்ததிலிருந்து இங்கு வேலைவெட்டி இல்லாமல்  இருக்கிறார்களே அவர்களுக்கு உதவி செய்யுங்கள். 

சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்குக் கடனுதவி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் அந்த உதவி  கூட இவர்களுக்குப் போய் சேர்வதில்லை.. தேர்தல் காலத்தில் கூட அதனைச் செய்யலாம்.

அதனால் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு எது நல்லதோ அதைச் செய்யுங்கள். ஒரு சில அரசியல்வாதிகளிடமிருந்து உங்களுக்கு  ஏதோ சில உதவிகள் கிடைத்திருக்கலாம். அவர்களுக்கு உங்களின் நன்றியைக் காட்ட அவர்களுக்கு வாக்களிப்பது இயல்பு தான்.

வாக்களிப்பது நமது உரிமை. அதனைச் சரியாக செய்யுங்கள் என்பதே நமது வேண்டுகோள்!


Sunday 7 August 2022

பிரச்சனைத் தீர்ந்ததோ?

 

ஒரு சில நாள்களுக்கு முன் மெட்ரிகுலேஷன் கல்வி பயில இந்திய மாணவர்கள் புறக்கணிப்படுவதாக செய்திகள் வெளியாயின.

அது உண்மைதான் என்பதாக பலர் தாங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தினர். தமிழ்ப் பத்திரிக்கைகள்  அந்த செய்தியை அமர்க்களப்படுத்தின. நாமும் அது உண்மை தான் என்பதை எல்லாரையும் போல நம்பினோம்.

ஆனால் தீடீரென அனைத்தும் மறைக்கப்பட்டுப் போனதோ என்று நினைக்கும் அளவுக்கு இப்போது அது சம்பந்தமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை!

என்ன நடந்தது?  ஏன் இப்போது எந்த செய்தியும் வெளியாகவில்லை? நமக்குத் தெரிந்த அளவில் ஏதோ ஒரு சில ஊகங்களை வெளிப்படுத்தலாம். ஆனால் அது வெறும் ஊகங்கள் தாம். உண்மை என்னவென்று வெளிப்படையாகத் தெரியவில்லை.

ஒன்று: புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

இரண்டு:  அது பற்றியான செய்திகளை நாளிதழ்கள் அம்பலப்படுத்தக் கூடாது  என்று நாளிதழ்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கலாம்.

முதலாவதைப் பார்ப்போம். அப்படி அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் இந்நேரம் ம.இ.கா. பெரியதொரு அறிக்கையை வெளியிட்டு தாங்கள் சாதித்துவிட்டதாக துள்ளிக் குதித்திருப்பார்கள்!  நாளிதழ்களிலும் செய்திகளைப் போட்டு அமர்க்களப் படுத்தியிருப்பார்கள்! ஆனால் எதனையும் காணோம்!

இரண்டாவது:  மெட்ரிகுலேஷன் சம்பந்தமான செய்திகளைப் போட வேண்டாம் என்று ம.இ.கா.வினர் நாளிதழ்களுக்கு 'அன்பு' கட்டளையிட்டிருப்பார்கள்! அரசாங்கம் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் ம.இ.கா. செய்யும்.  ம.இ.கா.வின் ஏம்ஸ்ட் கல்லூரிக்கு மாணவர்கள் தேவை. அதேபோல பல தனியார் கல்லூரிகள் இயங்குகின்றன. அவர்களுக்கும் மாணவர்கள் தேவை. இவர்களின்  கல்லூரிகளின் இயங்க  இந்திய மாணவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்!

ம.இ.கா. இப்படி செய்யுக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்கு எங்கு இலாபம் உண்டோ அங்கே மொய்க்கும் தனமை உடையவர்கள்! பெரும்பாலான சீன, இந்திய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் பயில்கின்றனர். சீனர்கள் பலமுறை ஆராய்ந்து பார்த்து சீனர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு  ஏற்படும் செலவு என்பது அதிகமாக இருக்கும். இந்திய மாணவர்கள் குறைவான கட்டணமுடைய இந்தியர்கள் நடத்தும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதெல்லாம் ஓர் ஊகம் தான்.மெட்ரிகுலேஷன் பிரச்சனைத் தீர்க்கப்பட்ட ஒன்று என்றால் நமக்கு அதில் மகிழ்ச்சியே! இல்லையென்றால் நமது கருத்தை நாம் மாற்றிக் கொள்ளவில்லை என்பதே பொருள்!

Saturday 6 August 2022

அட! நீயும் மனிதனா?

 

இந்த காட்சியைப் பார்க்கம் போது  "அட மடையா! நீயும் மனிதனா?"  என்று பாடத் தோன்றுகிறது!

பசு மாடுகளை நாம் ஏதோ ஒரு மிருகமாகப் பார்ப்பதில்லை. விவசாயிகளுக்கு அதன் அருமை தெரியும்.  மாடுகள் சாதுவான பிராணிகள். அதனைத் துன்புறுத்துவது  என்பது மிக மிகக் கேவலமான ஒரு செயல்.

சமீபகாலமாக மலேசியரிடையே ஏனோ வன்மம் தலைவிரித்தாடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் படாதபாடுகளை அனுபவிக்கின்றன.

நாய்களை அடித்துக் கொல்கிறார்கள். கார்களின் பின்னால் வைத்து இழுத்துச் செல்லுகிறார்கள். பூனைகளை  துணி துவைக்கும் இயந்திரங்களில்  உள்ளே போட்டு அரைத்து விடுகிறார்கள். இதோ, இப்போது ஒரு காட்சியைப் பார்க்கிறோம். மாட்டின் வாலைப் பிடித்து இழுத்து செல்லுகிறார்கள். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா?  அதனை அடித்து, துன்புறுத்தி லாரியில் ஏற்றியதாகச் சொல்கிறார்கள்.

பசுக்கள் என்ன அத்தனை கொடூரமான பிராணிகளா? அதுவும் அந்த இரண்டு மாடுகளும் சினை மாடுகள் என்கிறார்கள். அவர்கள் அரசாங்க ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு என்ன இரண்டு கொம்புகள் முளைத்திருக்கிறதா?  நடவடிக்கை என்பது அந்த மாடுகளை வளர்ப்பவர்கள் மேல் எடுத்திருக்க வேண்டும். அந்த மாடுகளைத் துன்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

சிங்கப்பூரில்  வீதிகளில் குப்பை போடக்கூடாது என்கிறார்கள். அதனை நூறு விழுக்காடு மக்கள் பின்பற்றுகிறார்கள். நம் நாட்டில் மாடுகளை வீதிகளில் சுற்றவிடக்  கூடாது என்றால்  ஏன் அதனைச் செயல்படுத்த முடியவில்லை? குற்றம் யார் மீது? அரசாங்கத்தின் மீது தான். ஒரு சிறு கடுதாசியை வீதிகளில் போடப்  பயப்படுகிறான் சிங்கப்பூரில். ஆனால் இங்கோ ஒரு மாடு வீதிகளில் சுற்றுவதை தடுக்க முடியவில்லை. அந்த அரசாங்கத்தால் முடியும் போது  இந்த அரசாங்கத்தால் முடியவில்லை!

ஆமாம், நமது நாட்டில் எதுவுமே முறையாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை என்பது தான் காரணம். இங்கு எதனைச் செய்தாலும் 'யார் அவர்?' என்பது தான் முதல் கேள்வியாக இருக்கிறது! அவர் மலேசியர் என்பது முன்னிறுத்தப்படுவதில்லை. அது தான் பிரச்சனை.

இப்போது இந்த மாடுகளுக்கு ஏற்பட்ட  இந்த கொடூரத்தை வைத்துப் பார்க்கும் போது  இந்த மாடுகள் நிச்சயமாக இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான  மாடுகளாகத்தான்  இருக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் "சம்பந்தப்பட்டவர் யார்?" என்று பார்க்கிறார்களே தவிர சரி, தவறு, நீதி, நியாயம் என்று பார்ப்பதில்லை! இது தான் நம் நாட்டில் உள்ள பிரச்சனை.

இந்த கொடூர செயல்களைப் புரிந்த அந்த மாநகர் மன்ற ஊழியர்களுக்கு  நிச்சயமாக ஏதேனும் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். இவர்கள் செய்த செயல்களுக்குச் சட்டம் நிச்சயம் எதிராகத்தான் இருக்கும்.

அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

Friday 5 August 2022

வெளிநாடுகளுக்குவேலைக்குப் போகிறீர்களா?

 

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வது நமக்கு ஒன்று புதிதல்ல. இன்றைய நிலையில்  நமது இளைஞர்கள் பலர் பல  நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

இப்படி வேலை செய்வது மலேசியர்கள் மட்டும் அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் இன்றைய தலைமுறை  இளைஞர்கள் இன்னொரு நாட்டுக்குப் போய் வேலை செய்வதை ஓர் அனுபவமாக எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததைவிட  வருமானமும் அதிகம்.  மரியாதையும் கிடைக்கிறது.  பலருக்கு,  அந்த நாடுகளைப் பிடித்துப் போய்,  அப்படியே தங்கிவிடும் இளைஞர்களும் உண்டு.

வெளிநாடுகளில் வேலை செய்யப்போகும் இளைஞர்களுக்கு நாம் சொல்லும் ஓர் சிறிய அறிவுரை என்றால்  ஏஜெண்டுகளை நம்பி பண விஷயத்தில் ஏமாந்து விடாதீர்கள் என்பது தான்.  வெளிநாடுகளுக்குப் போகும் இளைஞர்களுக்குப் பெரிய எதிரிகள் என்றால் இந்த ஏஜெண்டுகள் மூலம் பயணம் செய்பவர்கள் தான். வேண்டுமானால் அவர்களின் சேவைகளுக்காக ஒரு சிறிய தொகையே போதுமானது. அதைவிட்டு பெரிய அளவில் யாரிடமிருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியல் இல்லை.

படித்த இளைஞர்கள் படித்தவர்கள் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். படித்துவிட்டு இப்போது தான் வெளி உலகத்திற்கு வருகிறீர்கள். தவறு செய்வது இயல்பு தான். அதற்காக  ஒரேடியாக ஏமாந்துவிடக் கூடாது.

எங்கு வேலை செய்யப் போகிறீர்களோ அங்குள்ள நிறுவனத்தோடு  தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது உங்கள் கடமை. அவர்களும்  உங்களுக்கான பதிலை கொடுப்பதில் கடமைப்பட்டவர்கள். இதில் பணம் ஏதும் சம்பந்தப்பட்டிருக்க வழியில்லை. சந்தேகமிருந்தால்  அந்த நாட்டு தூதரகத்துடன் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். நீங்கள் வேலை செய்யப் போகும் நிறுவனம் உண்மையா போலியா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதெல்லாம் நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏமாற்றுவதையே தொழிலாக கொண்ட பல ஏமாற்று நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  உங்களுடைய விபரங்களைக்  கொடுக்கின்ற போது  உங்களுடைய வங்கி விபரங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள். அப்படி அவர்கள் கேட்டால் அது ஒரு ஏமாற்று நிறுவனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

இன்று பெரும் பெரும் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் அதில் சிக்கி விடாதீர்கள். சிக்கினால் உங்களிடமுள்ள அனைத்தும் பறிபோகும். இப்போது நாளிதழ்களில் நிறையவே அதைப் பற்றி பேசுகிறோம்.

வெளிநாடுகளுக்கு வேலை செய்யப் போகிறீர்களா நீங்கள் அங்குள்ள நிறுவனங்களோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு  ஆக வேண்டியதைக் கவனியுங்கள். அவர்கள் பணம் கேட்டார்களானால் அதை ஓர் ஏமாற்று நிறுவனம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நலமே சென்று வாருங்கள்! 

Thursday 4 August 2022

சுத்தம் செய்யும் ஒரு துணி கூட போதும்!

 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது நம்மிடையே புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி. மிகவும் அனுபவமிக்க  பழமொழி.

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் நமது பெரியவர்கள்.  நெதர்லாந்து நாட்டில்  சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

பேக்கரி கடை ஒன்றில் ஒரு திருடன் புகுந்துவிட்டான். மிக எளிதாக கொள்ளையடித்து விடலாம். அங்கு இருப்பது ஒரு பெண்  தானே என்று சாதாரணமாக நினைத்து கடையினுள் புகுந்து தனது 'வேலை'யை ஆரம்பித்துவிட்டான். 

அப்போது  கண்ணாடிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த கடையின் முதலாளியான பெண்மணி ஒரு கணம் ஆட்டம் கண்டு தான் போனார்! ஒரு நிமிடத்தில் சுதாகரித்துக் கொண்ட அவர் கையில் வைத்திருந்த,  துடைத்துக் கொண்டிருந்த துண்டை,  ஆயுதமாகப் பயன்படுத்தி அந்த திருடனைத் தாக்க ஆரம்பித்தார். அவன் முகத்திலேயே  அடி அடி என்று  அடிக்க ஆரம்பித்தார்!

இங்கே நாம்  கவனிக்க வேண்டியது அந்தப் பெண்மணி கையில் வைத்திருந்த அந்தத் துண்டு நன்றாக தூசி படிந்திருந்தது. அத்தோடு மருந்தும் கலந்து தூண்டு கனமாகவும் ஒருவித வாடையும் வீசிக் கொண்டிருந்தது!  அந்தத் துண்டால் அவனை அடித்தபோது அவனால் நாற்றத்தையும் தாங்க முடியவில்லை! அடியையும் தாங்க முடியவில்லை. துண்டும் கனத்து இருந்ததால் நல்ல செம அடி வேறு! அது போதும் அவனை விரட்டி அடிப்பதற்கு!  துண்டைக் காணோம்! துணியைக் காணோம்! என்று ஓட ஆரம்பித்தான்!

புல்லும் ஒர் ஆயுதம் என்று நாம் சொன்னோம். இந்தப் பெண்மணியோ  ஓர் அழுக்குத்  துண்டும் ஆயுதம் தான் என்று நிருபித்து விட்டார்!

ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி திகைத்துப் போய் நின்று விட்டிருந்தால் அல்லது பயந்து போயிருந்தால் திருடன் அவனது காரியத்தைச் சாதித்திருப்பான்! இருந்த பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ஒடியிருப்பான்!  ஒரு பெண் தானே என்று அலட்சியுமாக உள்ளே வந்தவன் கடைசியில் அடிவாங்கிக் கொண்டு வெளியே ஓடினான்!

எந்தப் பெண்ணும் தனது பணம் கொள்ளையடிக்கப்படும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஒரு சோம்பேறி  கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்?

ஒரு சோம்பேறிக்கு நல்ல பாடம்! அந்தத் தாய் நீண்ட நாள் வாழ வேண்டும்!

Wednesday 3 August 2022

பொதுத் தேர்தல் 15-வது

 

அடுத்த பொதுத் தேர்தல் வருவதற்கான ஒரு கட்டாயத்தை அம்னோ கட்சியினர் அரசாங்கத்திற்கு  ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

தேர்தலை நடத்துவதற்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் போது இந்த அவசரம் காட்டத் தேவையில்லை தான். பிரதமரும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர். தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் தான் பிரதமர் என்பதாக அம்னோ உறுதி அளித்திருக்கிறது! அதனால் பிரதமரும்  அம்னோவின் பேச்சை நம்புகிறார்!

தேர்தலை வேண்டாம் என்று சொல்லுபவர்களுக்கு ஒரு காரணம் உண்டு. முதலில் விலைவாசிகளைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். வேலை வாய்ப்புக்களை அதிகரியுங்கள் என்பது தான் மக்களின் கோரிக்கை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 'தேர்தலை நடத்துங்கள்' என்பது அம்னோவின் கோரிக்கை.  அந்த கட்சியில் உள்ள பலருக்குப் பல வழக்குகள் இருக்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதன் பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் பூஜ்யம் ஆகிவிடும்! அது தான் அவர்கள் எதிர்பார்ப்பு! வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள். நம்பட்டும்!

இந்த 15-வது பொதுத்தேர்தலில் புதியதொரு இளைஞர் பட்டாளம்  உருவாகியிருப்பது மனதுக்கு ஆறுதலான விஷயம். இளைஞர் கூட்டம் என்றால் படித்தவர்கள். நாட்டின் பிரச்சனைகளை அறிந்தவர்கள்.  இந்த இளைய தலைமுறையை சும்மா மயக்கும் சொற்களால் ஏமாற்றிவிட முடியாது.

இளைஞர் பட்டாளம் என்றால் 18 வயதிலிருந்து 21 வயது வரை  மட்டும் சுமார்     12 இலட்சம் வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.  நாட்டின் பிரச்சனைகளை அதிகம் அறிந்தவர்கள் இளைஞர்கள். நாட்டின் விலைவாசி, வேலை வாய்ப்பு போன்ற பிரச்சனைகளை அவர்களும் அறிவார்கள். இன்று வேலை வாய்ப்புக்களுக்குச் சிங்கப்பூரை நம்பித்தான் இளைஞர்கள் இருக்கின்றனர். அது ஒன்றே போதும் நாடு என்ன நிலையில் இருக்கிறது என்பதைக் காட்ட!

மேலும் இப்போது நாடு உள்ள நிலையில் தேர்தல் நடத்த அவசரம் காட்டுவதே வீண் வேலை. இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் போது இப்போது நடத்துவதே வீண் பண செலவு. ஆனால் யார் என்ன செய்ய முடியும்? அதிகாரத்தில் உள்ளவர்கள் எதையும் செய்ய முடியும் என்கிற  மனப்போக்குத் தான் இன்னும் நிலவுகிறது! அம்னோவின்  ஆணவம் இன்னும் அடங்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது!

எப்படியோ அடுத்த பொதுத்தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கும் என்று ஊகிக்க முடிகிறது. நடந்தால் நடக்கட்டும். நாம் நமது ஜனநாயக கடமையைச் செய்வோம்.  இந்தியர்கள் குறைவான எண்ணிக்கை உடையவர்கள் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அறுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள்  நாம் எங்கு சாய்கிறோமோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நாம் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்ல. சக்தி உடையவர்கள் தான்!

தேர்தலை வரவேற்போம்!