Sunday 31 October 2021

முடிவு சரிதானா?

 

மலாக்கா மாநிலத்  தேர்தலில்  ம.இ.கா. தனது வேட்பாளரை நிறுத்துமா என்கிற கேள்விக்கு "ஆம்! நிறுத்தும்!"  என்று ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ  விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். வாழ்த்துகிறோம்!

இத்தனை  ஆண்டுகள் பாரிசான் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ம.இ.கா. இம்முறை பெரிகாத்தான் நேஷனல் சார்பில்  போட்டியிடும்  எனத் தெரிகிறது.

ம.இ.கா. தனது வழக்கமான தொகுதியில் போட்டியிடும் என்பதில் ஐயமில்லை. அந்த தொகுதி ம.இ.கா.வினர்,  ம.இ.கா. வேட்பாளாருக்காக பிரச்சாரம் செய்வார்கள் என்பதையும் நம்பலாம்.

ஆனாலும் சிக்கலும் தெரிகிறது. ம.இ.கா. காலங்காலமாக தேசிய முன்னணியின் ஓர் அங்கம்.  இந்த முறை அதன் கிளைத் தலைவர்களிடையே தாங்கள் யாருக்காக பிரச்சாரம் செய்கிறோம் என்பதைக் கூட அவர்களால் கணிக்க முடியுமா என்று தெரியவில்லை!

ம.இ.கா.வினரைப் பொறுத்தவரை அவர்கள் போட்டியிடுவது ஆளுங்கட்சியின் சார்பில் அவ்வளவு தான். மக்களைப் பொறுத்தவரை  அதைவிட இன்னும் தெளிவற்ற நிலை! இவர்கள் யார்? அவர்கள் யார்? என்பதிலே குழப்பம்! இரண்டும் ஆளுங்கட்சிகள் தான் என்று யோசிப்பவர்களும் உண்டு!  அப்படியென்றால் போட்டியிடுபவர்கள் ஏன் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிற குழப்பம் வேறு!

எப்படியோ அது பாரிசான் நேஷனலாக இருந்தாலும் சரி பெரிகாத்தான் நேஷனலாக இருந்தாலும் சரி ஒரே கட்சி என்கிற தோற்றத்தைத்தான் தரும். பெரிகாத்தான் சார்பிலும் ஒரு ம.இ.கா. வேட்பாளர் பாரிசான் நேஷனல் சார்பிலும் ஒரு ம.இ.கா. வேட்பாளர் என்கிற நிலை வரக்கூடும்!

தேசிய முன்னணி என்கிற ஒரு கூட்டணியில் தான் ம.இ.கா. இத்தனை ஆண்டுகள் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது. அது அதிகமாகவே மலாய் வாக்காளர்களை நம்பியே வளர்ந்து ஒரு கட்சி. ஆனால் இந்த முறை?  இப்போதுள்ள சூழல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!

ஒரு வேளை இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ம.இ.கா. தன்னை பெரிகாத்தான் நேஷனலில் இணைத்துக் கொள்ளக் கூடும். ஆனால் அதுவும் ஐயத்திற்குரியது தான். அது மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனலின் வெற்றியைப் பொறுத்து அமையும்!

இன்னொரு பக்கம் பாரிசான் நேஷனல் தான் ம.இ.கா. வினருக்கு ஏற்ற ஒரு கூட்டணி. காரணம் அப்படித்தான் இந்நாள் வரை அவர்களுக்கு அது சாதகமாக  அமைந்திருந்தது.  அங்கும் இப்போது ஒரு சில அம்னோ தரப்பு ம.இ.கா. வுக்கு சாதகமாக இல்லை. அப்படி அம்னோ எதிர்த்தாலும் அம்னோ கட்சியே பலவீனமான நிலையில் இருக்கும் போது எதிர்ப்பவர்களை அம்னோ சட்டைசெய்யாது என்று நம்பலாம்!

ம.இ.கா. வின்  நிலை சரிதானா என்று நமக்கும் தெரியவில்லை. பாரிசான் நேஷனலா அல்லது பெரிகாத்தான் நேஷனலா என்கிற போது தற்காலிகமாக  பெரிகாத்தானை ம.இ.கா. தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆனால் இது ஆளுங்கட்சியாக மாறுமா என்பதில் நமக்கும் ஐயப்பாடுகள்  உண்டு.

ஆனால் ம.இ.கா.வில் உள்ள அரசியல்வாதிகள் அரசியல் விற்பன்னர்கள்! அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும்  அது சரியாகத்தான் இருக்கும்!

Saturday 30 October 2021

அரசு ஊழியர்கள் மட்டும் தானா?

 வெள்ளைக்கொடி  ஏற்றும்  பெரியவர்.  எல்லாம் கோவிட்-19 தொற்றின் பாதிப்பு. "வேலை இல்லை. அதனால் சம்பாத்தியம் இல்லை. சோற்றுக்கு வழியில்லை, எங்களுக்கு உதவி தேவை"  என்பதைக் காட்டத்தான் இந்த வெள்ளைக்கொடி இயக்கத்தின் நோக்கம்.

அரசு சார்பற்ற நிறுவனங்கள், உணவகங்கள்,  தனிப்பட்ட மனிதர்கள் இன்னும் யார் யாரெல்லாம் உதவக் கூடிய நிலையில் இருக்கிறார்களோ  - இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த வெள்ளைக்கொடி ஏற்றும்  வீட்டினருக்கு உணவுகளைக் கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த வகையில் நாம் மலேசியர்களைப் பாராட்ட வேண்டும். "பசித்தவனுக்கு புசிக்க உணவு கொடு" என்பதை நாம் மறக்கவில்லை.

அரசாங்கம் எத்தனையோ விஷயங்களை மறப்பது போல இதனையும் மறந்து விட்டதனால் மக்கள் தான் இதற்கான தீர்வைக் காண வேண்டும்!

அரசாங்கம் வேறு வகைகளில் தனது பணிகளைச் செய்து வருகிறது. அரசு வேலையில் இருப்போருக்கு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகிறது!  அரசு வேலைகளில் இருப்போருக்கு சம்பளம் கிடைக்கிறது. அவர்கள் நிதி சுமைகளைச் சுமக்கவில்லை. எப்போதும் போன்ற வாழ்க்கை முறை. கவலைப்பட ஒன்றுமில்லை.

அது தான் அரசாங்கத்திற்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது! அவர்கள் பட்டினி கிடப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் தான் அவர்களுக்கு மேலும் மேலும் உதவிகள் கிடைக்கின்றன! கிடைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை!

அரசாங்க ஊழியர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கும் அரசாங்கத்திற்கு பின்னணியில் ஒரு நோக்கம் உண்டு. அடுத்த பொதுத் தேர்தலில் அரசு ஊழியர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஆளும் கட்சியினருக்குப் போய் சேரவேண்டும் என்கிற நோக்கம் அவர்களுக்கு உண்டு. காரணம் அவர்கள் இப்போது பெரும்பாலும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்!

அப்படி என்றால் மக்கள்  படுகின்ற கஷ்டத்தைப் பற்றியெல்லாம்  அவர்கள் கவலைப்படுவதாகத்  தெரியவில்லை. அவர்கள் ஒவ்வொரு நொடியும் அரசியல்வாதிகளாகவே சிந்திக்கிறார்கள்! செயல்படுகிறார்கள்! செயலாற்றுகிறார்கள்! பதவிக்காகப் போராடுகிறார்கள்! பணத்திற்காக பல்லிளிக்கிறார்கள்! மக்களைப் பற்றி மட்டும் அவர்களுக்கு ஞாபகம் வருவதில்லை!

அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் வேலையில்லாமல், சம்பாத்தியம் இல்லாமல் குடும்பத்தோடு பட்டினி கிடக்கிறார்களே அவர்களைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று தான் சொல்லுகிறோம். B40 மக்கள் மேல் வெறும் இரக்கம் மட்டும் போதாது. அவர்கள் படும் துன்பத்தில் நமது பங்கு என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.

B40 மக்களே நாட்டில் அதிகம். வாக்களர்களும் அதிகம். அவர்களைப் பகைத்துக் கொண்டு சரியானதொரு அரசாங்கத்தை அமைக்க முடியாது. அடுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கம் இன்னும் அடி வாங்க நேரிடம்  என்பதை மறந்துவிடக் கூடாது!

மிகவும் ஏழ்மையில் உள்ள மக்களை மறந்துவிட்டு அரசு ஊழியர்களை மட்டும் கவனிப்பது சரியாகாது! அரசு இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

Friday 29 October 2021

என்ன சத்தம் இந்த நேரம்!

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் மீது வழக்கு ஒன்றைப்  பதிவு செய்திருக்கிறார்!

டோமி தாமஸ் அவர்  எழுதிய "My Story: Justice in the Wilderness" புத்தகத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவாகவும் அவதூறாகவும் எழுதியிருப்பதாக கூறி டோமி மீது அவதூறு வழக்கை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அத்தோடு அவருடைய புத்தகத்தை பிரசுரம் செய்த அந்த நிறுவனத்தின் மீதும் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்.

நஜிப் வழக்குப் போடுவது என்பது ஒன்று புதிதல்ல. தன்னைப் புனிதன் என்று காட்டிக் கொள்ள இந்த வழக்குகள் அவருக்குத் தேவையாய் இருக்கின்றன! அரசியலில் இதெல்லாம் சர்வசாதாரணம்.

ஆனால் இந்த வழக்கை இந்த நேரத்தில் தொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் முன்பே சொன்னது போல அவர் தன்னைக் குற்றமற்றவன் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறார்! அதனை அடுத்த பொதுத் தேர்தலின் போது அப்படிக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. அது மக்களைக் குழப்புவது தவிர வேறொன்றுமில்லை!

ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் மலாக்கா மாநிலத் தேர்தல் வந்துவிட்டது. இன்னொரு எதிர்பாராத நிகழ்வு என்றால் மாநிலத் தேர்தலுக்கு அம்னோ கட்சியின் சார்பாக அவரே - நஜிப் அப்துல் ரசாக் - தலைமை ஏற்கிறார்.

இது அவருக்கு எதிர்பாராத அமைந்த ஒரு வாய்ப்பு.  இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சனை! மலாக்கா மாநிலத்தில் அம்னோ வெற்றி பெற்றால் நஜிபின் அரசியல் எதிர்காலம் கொடி கட்டிப்பறக்கும்! அப்படியே தோல்வியுற்றால்  அரசியலில் அது அவருக்கு இறுதிக் காலம்!

இப்போது இப்படி ஒரு வழக்கை டோமி மீது பதிவு செய்வதன் மூலம் தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது! இது தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்குக் கை கொடுக்கும் என அவர் நினைக்கிறார்! அம்னோ கட்சியினருக்கு இருக்கும் வாய்ப்பும் வசதிகளையும் வைத்துப் பார்க்கும் போது  இந்த வழக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பது அவர் கணிப்பு! யார் கண்டார்? அப்படியும் ஒரு விபத்து நடக்கலாம் அல்லவா!

நினைப்புத் தான் பொழப்பைக் கெடுக்கும் என்பார்கள்  ஆனால் நஜிப் விஷயத்தில் அது பொழப்பைக் கெடுக்குமா அல்லது பொழைப்பை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! எல்லாம் வாக்காளர்களின் மனநிலையைப் பொறுத்தது!

வருகின்ற மலாக்கா தேர்தலில் நஜிப்பின் சத்தம் கொஞ்சம் கூடுதலாகவே கேட்கும் என நம்பலாம்!

ஏன் இரண்டு வாரங்கள்?

 

                                             Filthy Tofu Factory Closed - Nibong Tebal
 நிபோங் திபால், பினாங்கு நகரில் உணவு தொழிற்சாலை ஒன்று  இரண்டாவது முறையாக இரண்டு வாரங்கள் அடைக்கும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருக்கின்றது!

அந்த உணவு எந்த உணவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?  ஆமாம் நாம் விரும்பி சாப்பிடும் அதே "தவ்வு" என்கிற உணவு தான்!  சீனர்கள் செய்கின்ற அதே தவ்வு தான்!

தொழிற்சாலை அடைப்பதற்கான காரணங்கள் என்ன?

1) உணவு தயாரிக்கும் பகுதி மிகவும் அருவருப்பாக உள்ளது!
2) தொழிற்சாலைக்குள் நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன!
3) எலிகளின் கழிவுகள் தாராளமயமாக்கப்பட்டிருந்தன!
4) ஈக்கள்,  கரப்பான் பூச்சிகள் வலம் வந்து கொண்டிருந்தன!
5) தொழிற்சாலை 12 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!
6) ஊராட்சி மன்றத்தின் வர்த்தக உரிமம் பெற்றிருக்கவில்லை!
7) பணியில் இருந்த மியன்மார் ஆடவர் ஒருவர் "டைபாய்ட்" ஊசி போட்டிருக்கவில்லை! உணவு தொழிற்சாலைகளுக்கான உடைகள் அணியவில்லை!
8) சுகாதார அமைச்சின் கணிப்பில் இது 200% விழுக்காடு சுகாதாரமற்ற உணவு தொழிற்சாலை!

சுகாதார அமைச்சு சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அதனை யாரும் குறை சொல்லப் போவதில்லை.

ஆனால் மக்கள் அவர்கள் தயாரிக்கும் அந்த தொழிற்சாலை தவ்வு இன்றும் என்றும்  பெரும்பான்மை மக்களால்  விரும்பி சாப்பிடப்படும் உணவாயிற்றே! அது எப்படி 12 ஆண்டுகளாக இயங்கும் உணவு தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை உரிமம் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது? கேள்விகள் உண்டு! பதில் தர யாரும் தயாராக இல்லை!

இன்னொரு கேள்வியும் உண்டு. ஒரு முறை, இதே காரணத்திற்காக, கையும் களவுமாக பிடிப்பட்ட ஒரு தொழிற்சாலை மீண்டும் இரண்டாவது முறையும் அதே குற்றப் பின்னணியில் எப்படி இயங்க முடியும்?  அவர்களுக்கு அந்த தைரியத்தை ஊக்குவித்தவர்கள்  யார்?

கடைசியாக,  ஏன் இரண்டு வாரங்கள் கதவடைப்பு? முற்றிலுமாக அந்த தொழிற்சாலை தூக்கப்பட்டிருக்க வேண்டுமே! உணவகத் தொழிலுக்கே அவர்கள் இலாயக்கற்றவர்கள் என்று சுகாதார அமைச்சுக்கு இன்னுமா புரியவில்லை!

குற்றவாளி சுகாதார அமைச்சு தான்!

இரண்டு நாள் சாத்தியமே!

                                                            R.S.N. RAYAR, MP JELUTONG

தீபாவளிக்கு இரண்டு நாள் விடுமுறை  வேண்டும் என்கிற கோரிக்கை,   இப்போது அப்போது அல்ல,  நீண்ட நாள்களாக இந்திய சமூகத்தினர் கேட்டுக் கொண்டு வரும் ஒரு கோரிக்கை.

இப்போது இந்தப் பிரச்சனையை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என். ராயர் அவர்கள்.

இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம.இ.கா. வின் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களை இந்த பிரச்சனையில் கொஞ்சம் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவின் மூன்றாவது பெரிய சமூகம் என்றால்  அது இந்திய சமூகம் தான்.  இங்கு மூன்று  பெருநாள்களும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுவது  இயல்பே.  அதில் ஹரிராயா, சீனப் பெருநாள் இவை இரண்டும்,  இரண்டு நாள்கள் விடுமுறை.  இந்திய மக்களின் பெருநாள் என்பது ஒரே ஒரு நாள் தான். நிச்சயமாக இந்த ஒரு நாள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 

தீபாவளி போன்ற பெருநாள் காலங்களில் வெளியூர்களில் இருந்து பெற்றோர்களைப் பார்க்கப் போவது, சொந்தபந்தங்களைப் பார்க்கப் போவது என்பதெல்லாம் எல்லா இனங்களிலும் உள்ளது தான். இதில் யாரும் விதிவிலக்கல்ல. எப்படிப் பார்த்தாலும் ஒரே நாள் போதுமானதல்ல.

இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் மாண்புமிகு ராயர் அவர்கள். 

இந்தியர்களின் பிரதிநிதி என்றால் அது இன்றைய நிலையில் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் தான். அவர் தான் அமைச்சரவையில் உள்ளவர். அது மட்டும் அல்லாமல் இன்றைய அரசாங்கமும் இன்னும் நீடிக்கிறது என்றால் இன்னும் 15-வது தேர்தல் வரை நீடிக்கும் என்றால் அதுவும் எதிர்கட்சிகளின் ஒரு கூட்டு ஒப்பந்தத்தினால் தான்.

இதில் டத்தோ சரவணன் மட்டும் அல்ல மற்றைய எதிர்கட்சிகளும் ஒத்துழைப்புக் கொடுத்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் காண வேண்டும்.  தேசிய முன்னணி அரசாங்கத்தில்  ம.இ.கா.வால் இதனை நிறைவேற்ற முடியவில்லை. தேசிய முன்னணி அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது.  அப்போது ம.இ.கா. வாய் திறந்ததா என்றும் நமக்குத் தெரியவில்லை!  ஆனால் இன்றைய நிலையோ வேறு. ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் கைகோர்த்திருக்கின்றன.

இன்றைய நிலை நமக்குச் சாதகமாக உள்ளது. அணுகுமுறை சரியாக இருந்தால் "இரண்டு நாள் விடுமுறை" என்பது சாத்தியம் ஆகலாம்.

இரண்டு  நாள் விடுமுறை சாத்தியமே!

Thursday 28 October 2021

அரசாங்க ஊழியர்களுக்கு நினைவுறுத்து!

       முதல் சைனோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர்

அரசு ஊழியர்களுக்கு  மிகவும் பணிவான நினைவுறுத்தலை பொது சேவைத்துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ முகமட் கைருல் அடிப் அறிவித்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்.ஆனால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மிகச் சிலரே. ஆனால் அவர்களும் தடுப்பூசி போடுவது அவசியம் என்கிறார் தலைமை இயக்குநர். அப்படி போடாமல் இருப்பது சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அது மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்கள் மேல் பொது மக்களுக்கு அவமதிப்பையும் ஏற்படுத்தும்.

தடுப்பூசி போடாதவர்கள் அல்லது போட இயலாதவர்கள் சரியான காரணங்கள் இருந்தால் அதனை யாரும் குறை சொல்ல இயலாது. அதனை அரசாங்கம் புரிந்து கொள்ளும். ஆனால் எந்த காரணமுமின்றி தடுப்பூசி போடமாட்டேன் என்று சொன்னால் அது பிரச்சனையை உருவாக்கும்.

தடுப்பூசி போடாதவர்கள் வழக்கம் போல் வேலைக்குப் போகும் போது உடன் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நிச்சயமாக சங்கடத்தை ஏற்படுத்தும். பணியாளர்களின் நடுவே அவரும் வேலை செய்வது மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும். அது இயற்கை தான்.

பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களது பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு சிலர் தடுப்பூசி போடாமல் வேலை செய்வது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக பள்ளிகளில் தடுப்பூசி போடாமல் பணியாற்றும் ஆசிரியர்களால் பள்ளி மாணவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கோவிட்-19 அபாயம் அதிகமாகவே உண்டு. அதில் ஆசிரியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் மாணவர்களின் நிலை என்னாவது! ஆசிரியப் பெருமக்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

அதே போல  அரசு அலுவலகங்களின் பணிபுரிபவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி பொது மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்? அது பொதுமக்களை அவமதிப்பதற்குச் சமம் தானே! இதெல்லாம் சிக்கலான விஷயம்!

தடுப்பூசி போடுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் வேறு வகையான சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்காதவரை இப்போதைய முறையே சிறந்தது. இயற்கை முறை வைத்தியங்கள் சரியானது என்பதாக இன்னும் நிருபிக்கப்படவில்லை.

அரசு ஊழியர்களுக்கு நமது ஆலோசனை எல்லாம் அரசு கடைப்பிடிக்கும் இப்போதைய கொள்கைகளைப் பின்பற்றுங்கள். ஆளுக்கு ஆள் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் நமக்கு வேண்டாம்!

தலைமை இயக்குநர் நல்ல அறிவுறையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். பின்பற்றுவது உங்கள் கடமை!

புற்று நோயை ஏற்படுத்துமா?

 

நாம் தினசரி பயன்படுத்தும் பிஸ்கட்டுகள் இவை. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஏதோ ஒன்றை நமது வீடுகளில்  சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமீபத்திய செய்திகளின்படி இந்த பிஸ்கட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் Glycidol & Acrylamide ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக  செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த அபாய எச்சரிக்கையை முதலில் விடுத்தது South China Morning Post என்னும் ஹாங்காங் நாளிதழ்! அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரும் உறுதிப்படுத்துகிறது.

நமது மலேசிய சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அதனை மறுக்கவில்லை. ஆனால் அந்த ரசாயனங்கள் மிகச்சிறிய அளவிலேயே பயன்படுத்துப்படுவதாக  அவர் கூறுகிறார். அதனால் புற்றுநோய் அபாயம் என்பது பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று கூறுகிறார்! நாம் அவரை நம்புவோம்!

இந்த நேரத்தில் நாமும் ஒருசில ஆலோசனைகள் கூறலாம் என்றே நினைக்கிறேன். மலேசியாவில் தயாராகும் இந்த பிஸ்கட்டுகளில் ரசாயனம் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மேல்நாடுகளில் தயாராகும் பிஸ்கட்டுகளில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்பதும் உறுதியாகிறது. ஆக, மேல்நாடுகளில் ரசாயனம் கலக்காத பிஸ்கட்டுகள் தயாராகும் போது இங்கு நமக்கு மட்டும் ரசாயனம் ஏன் தேவைப்படுகிறது? தேவையில்லை என்பதே எனது கருத்து.

இந்தப் பிரச்சனையில் அரசாங்கம் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அந்த ரசாயனங்கள் மேல் நாடுகளில் தேவை இல்லை என்றால் இங்கு நம் நாட்டிலும் அந்த ரசாயனங்கள் தேவை இல்லை.

இந்த Cream Crackers பிஸ்கட் பற்றி ஒரு சின்ன செய்தி. தமிழ் நாட்டில் எனது நண்பர் ஒருவர்  வீட்டிற்குச் சென்றிருந்த போது அவர்கள் இந்த பிஸ்கட்டை தேநீரின் போது பயன்படுத்தினார்கள். எனக்கு ஆச்சரியம் தான். இது எப்படி இங்கே? என்று கேட்ட போது இந்த பிஸ்கட்டை அங்குள்ள மருந்தகங்களில் விற்கிறார்களாம். அதாவது இனிப்புநீர் வியாதிக்கு நல்லது என்று சொல்லி விற்கிறார்களாம்! 

கடைசியாக அரசாங்கத்திற்கு ஓர் அறிவுறுத்தல். புற்றுநோயை உருவாக்கும் என்று தெரிந்த பின்னர் அதனை ஏன் நாம் மடியில் வைத்துக் கொண்டு அழ வேண்டும்? தூக்கி எறிவது தான் சிறப்பு! நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது!


Wednesday 27 October 2021

இது சரியான நடவடிக்கை தானா?

 

                                                            மித்ரா நிதி முறைகேடு!

இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மித்ரா (முன்பு செடிக்) பற்றியான செய்திகள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில்  வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன!

நமக்குக் கிடைக்கும் செய்திகள் என்பது பத்திரிக்கைகளில்  வருகின்ற செய்திகள் மட்டும் தான். உள்ளே என்ன நடக்கின்றது என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நமக்குத் தெரிந்தது எல்லாம் அரசியல்வாதிகள் அல்லது பெரிய நிறுவனங்கள் மித்ரா நிதிகளை முழுமையாக சுருட்டி விடுகின்றனர். அதனால் கீழ் மட்டத்திலுள்ள சிறு நிறுவனங்களுக்கு எந்த நிதி உதவியும் போய்ச் சேருவதில்லை என்பது மட்டும் தான்.

இது இப்போது தான் நடக்கிறதா என்றால் இல்லை! செடிக் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே இது நடந்துகொண்டு தான் வருகிறது! ஆனால் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் செடிக் இருந்ததால் பொது மக்கள் வாய் திறப்பதில்லை!

ஆனால் இப்போது நாம் பார்ப்பது என்பது நம்மால் நம்ப முடியாத செய்தி. திடீரென கைது நடவடிக்கை! அதுவும் நேரம் காலம் இல்லாமல் நடவடிக்கை! ஏதோ கொலை குற்றவாளிகள் போல் நடவடிக்கை.  இதுவரை சுமார் 17 நிறுவனங்களில் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது நடவடிக்கையை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு நடவடிக்கையை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏதோ தேர்தல் கால நடவடிக்கை போல் இருக்கிறது!உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்!  இந்த நடவடிக்கையை நாம் ஆதரிக்கிறோம். அவ்வளவு தான்.

அரசாங்கம் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக ஆண்டு தோரும் 10 கோடி வெள்ளி  கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த பணம் இந்திய சமுதாயத்தின் கீழ் தட்டு மக்களுக்கோ அல்லது சிறு வியாபாரிகளுக்கோ போய்ச் சேருவதில்லை என்பது தான் நீண்ட கால குற்றச்சாட்டு. யாரிடம் போய் சேருகிறது என்பதிலும் தெளிவில்லை.

இப்போது நடைபெறுகின்ற கைது நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது இது மேல்தட்டு வணிகர்களுக்குத் தான் போய் சேருகிறது என்பதைப் பார்க்க முடிகிறது! ஆமாம் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பெரிய வணிக நிறுவனங்களின் இயக்குநர்கள்.  நாம் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம். உண்மை நிலவரம் தெரியவில்லை.

இந்த கைது நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சந்தேகம் வருவதற்கும் சாத்தியம் உண்டு. நிறுவனங்களின் இயக்குநர்கள் என்றால் அரசியல் பின்னணி இருக்காமல் இருக்க முடியாது! அப்படி ஒரு பின்னணி இருந்தால் அவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை பெற்றுவிட முடியும்!

பொறுத்திருந்து பார்ப்போம்!

Tuesday 26 October 2021

இது தான் நமது அடையாளம்!

                                        அமரிக்க துணையதிபர் கமலா ஹாரிஸ்

என்ன தான் பெரிய பெரிய பதவிகளில் இருந்தாலும் உணவு விஷயத்தில் நமது அடையாளம் என்றால் அது இட்லி, தோசை தான்!

அந்த விஷயத்தில் அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிஸ் கூட விதிவிலக்கல்ல! இட்லி, தோசையை மறக்க முடிவதில்லை!

அது என்னவோ தெரியவில்லை. தமிழனாக பிறந்துவிட்டால் இட்லி தோசை தான் நமது காலை நேரத்து முதல் உணவு.  காலை நேரப் பசியாறல்.

நமது உணவகங்களில் போய் கொஞ்சம் உற்றுப் பாருங்கள் அதே இட்லி தான்! அதை தோசை தான்! தினமும் அதே இட்லி, தோசை தான்! கொஞ்சம் தாமதித்தால் இட்லி கிடைப்பதில்லை! முடிந்து போய் விடுகிறது. கைவிரித்து விடுகிறார்கள்!

இப்போது நமது "மாமாக்" கடைகளில் இட்லி,  தோசை போடுகிறார்கள். அதுவும் முடிந்து தான் போகிறது. என்ன செய்வது? அவர்கள் செய்கின்ற இட்லியையும். தோசையையும் "சிவனே!" என்று சாப்பிட வேண்டியிருக்கிறது!

ஊர்சமையல்காரர்கள் என்றால் - அதே தொழிலில் இருந்தவர்கள் என்றால் - அவர்களுக்கு உண்மையாகவே இட்லி செய்யத் தெரியும்.  கேரளாக்காரர்களுக்கு என்னவோ அரைகுறையாக செய்து பழக்கப்பட்டவர்கள் - நாமும் தலைவிதி என்று அவர்கள்  செய்வதையும்  தலையெழுத்தே என்று சாப்பிட வேண்டியுள்ளது! 

இங்கே நான் சொல்லுவது "மாமாக்" இட்லி, தோசைகள் தான்! நமது உள்ளூர் நாயர் கடைகளைப்பற்றி சொல்லவில்லை. இவர்கள் தொழில் தெரிந்தவர்கள். குறை சொல்ல ஒன்றுமில்லை!

ஒருமுறை - அதாவது முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் குளுவாங்கில் நடந்த சம்பவம் இது. அப்போது தான் அந்த மலையாள நண்பர் அந்த உணவகத்தை ஆரம்பித்திருந்தார். இன்னும் வேலையாட்கள் கிடைக்கவில்லை. கணவன் மனைவி மட்டும் தான். இதில் வேறு என் பையன்கள் "இது வேண்டும்! அது வேண்டும்!" என்று வரிசையாக அடுக்கிக் கொண்டு போனார்கள்! பாவம்! அவர்களால் முடியவில்லை! உண்மையைச் சொன்னால் அவர்களிடம் எதுவும் தயார் நிலையில் இல்லை! என்ன தான் உடனடியாகக் கிடைக்கும் என்று கேட்டு அதனை மட்டும் கொடுக்கச் சொன்னேன்! ஆர்வத்தோடு உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் நான். அதைத்தான் செய்தேன்.

இட்லி, தோசை கதை எங்கோ போய்விட்டது! எப்படியோ பாதை  ஓரங்களில் பாதை ஓரக் கடைகளில், சிறிய, பெரிய உணவகங்களில் அமர்க்களப்படும் இட்லி தோசைகள் இப்போது வெள்ளை மாளிகை உயரத்திற்குப் போயிருப்பது நமக்கும் பெருமை தான்!

ஆமாம்! இது தான் நமது அடையாளம்!


இந்தியா முன்னேறுகிறது!

 

                                                            இந்தியா முன்னேறுகிறது!

இந்திய பிரதமர் நரேந்திர மேடி ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் சொல்லுகின்ற வார்த்தை: "இந்தியா புது உத்வேகத்துடன் முன்னேறுகிறது!" 

நமக்கும் அதில் மகிழ்ச்சி தான்.  இந்தியா முன்னேறக் கூடாது என்று எந்த வெளிநாட்டு  இந்தியனும் விரும்ப மாட்டான்.  இந்தியா முன்னேறுவது அவனுக்கும் பெருமை தரும் விஷயம் தான்.

நமது சீன சகோதரர்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.  சீனாவின் முன்னேற்றம் அவர்களுக்குப் பெருமை தருகின்ற விஷயம் தானே! பொருளாதாரத்தை வைத்து இன்று பல நாடுகளைத் தங்களது கைக்குள் கொண்டு வந்து விட்டார்களே!

இந்தியாவின் படுவேக வளர்ச்சி என்பதை பிரதமர் மோடி எந்த கோணத்தில் பார்க்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை. 

பிரதமர் மோடி குஜாராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் மிகப் பெரிய கோடிசுவரர்களாக நாடெங்கிலும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம் மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அவர் பெரும்பாலும் மேல் தட்டு மக்களுடனேயே தனது உறவுகளை வைத்துக் கொள்வதால் "இந்தியா முன்னேறுகிறது!" என்று அவருக்குச் சொல்லத் தோன்றுகிறதோ என்று நாம் நினைக்கத் தோன்றுகிறது!

சமீபத்திய ஒரு புள்ளிவிபரம் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிப்படுத்தியிருக்கிறது. அவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்து இந்த புள்ளிவிபரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் எடை, குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சி, குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இதனை வைத்து பட்டினி பட்டியலில் இந்தியா  மொத்தம் 116 நாடுகளில் 101 வது இடத்தில் இருப்பதாக அந்த புள்ளிவிபரம் கூறுகிறது. அதாவது எத்தியோபியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேப்பாளம் போன்ற நாடுகளைவிட இந்தியாவின் நிலைமை மிக மோசம் என்பது தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது!

அதுவும் இந்தியா அதிகக் கோடிசுவரர்களைக் கொண்ட நாடு. சுமார் 81 கோடிசுவரகள் நாட்டில் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அரசு கோடிசுவரர்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுகிறதோ என்று தான் சொல்லத் தோன்றுகிறது! நாட்டு வளத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் அந்த வளம் பணக்காரர்களை மட்டும் குறி வைக்கிறதோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது!

கோடிசுவரர்கள் முன்னேறக் கூடாது என்பதல்ல குடிசையில் வாழ்பவனும் முன்னேற வேண்டும்  என்பது தான் நமது விருப்பம்! நடக்கும்! நம்புவோம்!

Monday 25 October 2021

அரசாங்கத்தால் முடியாது!

  ஏர் இந்தியா விமானம்  பற்றி  சமீபகாலமாக நிறைய செய்திகள்!

படித்தும் ஓய்ந்துவிட்டோம்! என்ன தான் ஓய்ந்து உலர்ந்து போனாலும் ஒரு செய்தி நம்மை உரக்க உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்று மனதில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஏர் இந்தியா விமானம் ஓர் தனியார் நிறுவனமாக டாட்டா குழுமத்தினாரால் 1932-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1953-ம் ஆண்டு தேசிய மயமாக்கல் சட்டத்தின்  கீழ் ஏர் இந்தியா அரசாங்க உடமையாகியது. இப்போது 2021 ஆண்டில் சுமார் 68 ஆண்டுகளுக்குப் பின்னர்  அரசாங்கத்தின் உடமையான ஏர் இந்தியா மீண்டும் டாட்டா குழுமத்திற்கே திரும்பிவிட்டது! அரசாங்கத்தால் நடத்த முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டது!  இது தான் ஏர் இந்தியாவின் வரலாற்றுச் சுருக்கும்!

இதிலிருந்து நமக்குள்ள பாடம் தான் என்ன? ஒரு தனியார் நிறுவனத்தை அரசாங்கத்தால் நடத்த முடியாது என்பது தான் முதல் பாடம். நிச்சயமாக முடியாது!

ஏர் இந்தியாவை ஆரம்பித்த போது அதன் நிறுவனர் ஜே.ஆர்.டி.டாட்டா முதல் வேலையாக  பயிற்சி பெற்ற  வணிக விமான ஓட்டி உரிமம் பெற  அதற்கான பயிற்சிகளைப் பெற்றார்.  விமானத்தின் முதல் பயணம் கராச்சி- பம்பாய். அவ்விமானத்தை ஓட்டியவர் சாட்சாத் ஜே.ஆர்.டி. டாட்டா அவர்களே தான்!

இது முக்கியம். காரணம் முதலீடு செய்தவனுக்குத் தான் அதன் வலி தெரியும். விழுந்தால் மரண அடி! அதனால் எல்லாமே "காசு பணம் துட்டு மணி!"  ஒவ்வொரு காசும் கணக்குப் பண்ண வேண்டி இருக்கும்!

அதையே அரசாங்கம் எடுத்தால் என்ன ஆகும்? விமானத்தைப் பற்றி தெரியாதவன், பணத்தின் அருமை தெரியாத எருமை!  இவர்கள் எல்லாம் உலகத்தையே சுற்றி வரும் விமானத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தால் இது தான் ஆகும்! ஆமாம்! 30,000 - 40,000 கோடி கடனில் தான் முடியும்!

நம் நாட்டிலேயே இதைப் பார்க்கிறோமே. நமது தேசிய விமானத்தை கரை சேர்க்க முடியவில்லையே! அரசாங்கம் பொறுப்பேற்றால் அது அப்படித்தான் இருக்கும்! காரணம் அவன் பணம் போடவில்லையே! பணம் போட்டால் தானே வலி, வேதனைத் தெரியும்!

அரசாங்கம் எதனை ஏற்று நடத்தினாலும் பணம் கொள்ளை போகுமே தவிர வெற்றி பெற முடியாது! ஏதோ ஒரு சிலருக்கு வேலை கிடைக்குமே தவிர இலாபம் கிடைக்காது! அரசாங்க ஊழியனும் அதைத்தான் விரும்புகிறான்!

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? அரசாங்கத்தால் எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்த முடியாது என்பது தான்!

Sunday 24 October 2021

திருப்பி விடலாமே!

இப்போதைக்கு அதிக பேசும்பொருளாக இருப்பது செடிக் அதன்பின் பெயர் மாற்றப்பட்ட மித்ரா,

ஆனால் பெயர் மாற்றத்தினால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் நிதர்சனம். திருட்டுத்தனங்களோ கொள்ளையடித்தல்களோ எந்தவகையிலும் குறைந்தபாடில்லை! 

அதுபற்றி நாம் நிறையவே பேசிவிட்டோம், எழுதிவிட்டோம்!

அடிக்கடி நம் காதுகளில் விழுகின்ற வார்த்தை ஒன்று "மாற்றியோசி!" சரி இப்படி யோசிப்போமே!

செடிக் அல்லது மித்ரா ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு விஷயம் பொது மக்களின் காதுகளுக்கு வந்து விட்டது. ரகசியம் எதுவுமில்லை. இந்தியர்களின் நலனுக்காக என்று ஒதுக்கப்பட்ட அந்த நிதி இதுவரை அது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அது மக்களுக்குச் சொல்லப்படவில்லை!

இந்த நிதியை எதிர்பார்த்து பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக வியாபாரத் துறையில் இருப்பவர்கள் - சிறு வியாபாரியினர், நடுத்தரத் தொழிலர் மற்றும் மேல்மட்டத்தில் உள்ள மேல்மட்ட தொழிலதிபர்கள். அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் கடனுதவிகள் தேவைப்படுகின்றன.
ஆனால்  இதில் அதிகம் நிதி உதவி தேவைப்படுவோர் சிறு வணிகர்கள்.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் பயன்படுத்தாமல் திருப்பி அரசாங்கத்திற்கு அனுப்பட்ட பணம் பல கோடிகள் என்பது நமக்கு தெரியும். அதாவது "பெற்றுக்கொள்ள யாரும் இல்லை!" என்கிற காரணத்தினால் அந்த நிதி மீண்டும் அரசாங்கத்திற்கே திருப்பிவிடப்பட்டது!

அப்படி திருப்பிவிடப்பட்ட பணம் மீண்டும் ஏன் இந்தியர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக்கூடாது? திருப்பிவிடப்பட்ட பணம் இன்னும் அரசாங்கத்தில் தானே இருக்கிறது?  சும்மா கிடக்கும் அந்தப் பணத்தை மீண்டும் இந்தியர்களின் நலனுக்குப் பயன்படுத்தலாமே! இப்போது கிடப்பில் போடப்பட்டிருக்கும் அந்தப் பணத்தை தூசி தட்டி எடுத்து தகுந்த ஆளை வைத்து வணிகர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை நான் முன்வைக்கிறேன்.

பணம் இல்லை என்று கைவிரிக்க முடியாது  இருக்கும் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை!

மலாக்கா மாநிலத்தில் நடைபெறப்  போகும் சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதிக்கப்படும் என்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்!

இந்த தடை உத்தரவு நாளை (25.10.2021) தொடங்கி  நவம்பர் 27-ம் தேதி வரை நீடிக்கும் என்கிறார்  சுகாதார அமைச்சர்.

இப்போது இது பற்றியான விவாதங்கள் சூடுப்பிடிக்கத் தொடங்கி இருக்கின்றன! இது அரசியல்.  இப்படியும் அப்படியும் பேசுவார்கள்.  எது நடந்தாலும் அவதிப்படுகிறவர்கள் பொதுமக்கள் தான்.

இங்கு நாம் அரசியல் பேசுவதாக இல்லை. சுகாதாரம் தான் முக்கியத் தேவை. ஏற்கனவே சபாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்ன நடந்தது என்பது  நமக்குத் தெரியும்.  அது இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பீடை என்று சொல்லலாம்.  அப்போது ஏற்பட்ட அந்த பீடை இது நாள்வரையில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

சுகாதார அமைச்சர் சொல்லுவதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தல் என்று சொல்லி மாநிலத்தை மட்டும் தான் குட்டிசுவர் ஆக்குவார்கள் என்று சொல்ல முடியாது. அரசியல்வாதிகளைப் பற்றி நமக்குத் தெரியும். பொறுப்பற்றவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

மற்றவர்களுக்கெல்லாம் புத்தி சொல்லுவார்கள். அவர்கள் எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றுவதில்லை! அதனை நாம் கண்கூடாகப் பார்த்தோம். முகக்கவசம் போடாமல் வெளியே சுற்றுவது, உணவகங்களுக்குப் போவது - இது தான் அரசியல்வாதிகளுக்கு உள்ள பழக்கவழக்கங்கள்! தங்களுடைய அத்துமீறல்களுக்காக அரசாங்கத்தில் அதற்கான தண்டனையும் பெற்றவர்கள்!

நாம் வாய் மூடி பேசாமல் இருந்தால் அவர்கள் அஞ்சடித்தனமாக நடந்து கொள்வார்கள் என்று சமீபகாலங்கலில் நாம் கண்முன் கண்ட நிகழ்வுகளே போதுமானது!

சுகாதார அமைச்சர் "தடை" என்று சொன்னதை நாம் ஆதரிக்கிறோம். கூட்டங்கள் கூடும்போது யாரும் இடைவெளியைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்!  மலேசியர்களின் பரம்பரைக் குணமே அப்படித்தான்! சிறிய அறைகளிலே நடைபெறும் "செராமா" என்று சொன்னாலும் அங்கும் மட்டும் என்ன வாழப்போகிறது? தனித் தனியே சந்திப்போம் என்று சொன்னாலும் வாக்குக் கேட்பவர் ஒரு பெரிய கூட்டத்தையே தன் பின்னால் கூட்டிச்செல்வார் என்பது நமக்குத் தெரியாதா!

யார் வேண்டுமானாலும் திருந்துவார்கள் ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் திருந்த வாய்ப்பில்லை! கோவிட்-19 அதிகரிக்கும் போது அதனையே அரசியலாக்கி தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள்!

தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு!

இந்து மதத்தை தழுவுகிறார் சுகர்னோபுத்ரி!

                                 SUKMAWATI  SUKARNOPUTERI - FROM ISLAM TO HINDUISM

 இந்தோனேசியாவின் முதல் அதிபரான  சுகர்னோவின் மூன்றாவது மகளான சுக்மாவதி சுகர்னோபுத்ரி இஸ்லாமிய மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறுகிறார்.

இந்த மத மாற்றத்திற்கான அதிகார பூர்வ சடங்குகள் அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடபெறுமன அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்கள் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருக்கின்றன. கோவிட்-19 காலக்கட்டம் என்பதால் ஒரு சிலர்  மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.


அவருடைய மத மாற்றம் நடைபெறுகின்ற நாளும்  அவருடைய 70 வது பிறந்த நாளும் ஒரே நாளில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுக்மாவதிக்கு  இந்து மதம் என்பது புதிதல்ல. இவரது பாட்டி இந்து மதத்தைச் சேர்ந்தவர். பாலி தீவே இவர்களது பூர்வீகம். சுக்மாவதி இந்து மதத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்.

இது போன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் அடிக்கடி நடைபெறுகின்ற சம்பவங்கள் தான். அதிசயம் ஒன்றும் இல்லை. இந்த மத மாற்றத்தில் சம்பந்தப்பட்டவர் முன்னாள் அதிபர் சுகர்னோவின் புதல்வி  என்பதால் இந்த செய்தி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தோனேசியா உலகிலேயே அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட ஒரு நாடு. மதமாற்றம் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அவர்களிடையே எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை.

நாமும் வரவேற்போம்!

யாரும் தப்பிக்க முடியாது!

 நாம் அனைவருமே இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். கோவிட்-19 தொற்று என்பது அலட்சியம் படுத்தக் கூடிய ஒன்றல்ல.

அரசாங்க ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வேலையை விட்டு நீக்கப்படலாம் என்கிற எச்சரிக்கையே போதும் தொற்றினால் வரும் அபாயம் எத்தகையது என்பது.

கோவிட்-19 தொற்று என்பது ஆள் பார்த்து வருவதில்லை.  யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். 

சமீபத்திய செய்தி ஒன்றைப் படித்திருக்கலாம். ஏர் ஏசியா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ கமாருடின் அவரது மனைவி டத்தின் சித்தி முனாஜாட் இருவரும் கோவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த செய்தி கூறுகிறது. ஒன்றை கவனியுங்கள். அவர்களுக்குப் பணத்துக்குப் பஞ்சமா?  ஆனாலும் அவ்வளவு பெரிய பணக்காரர்களுக்கு அந்த தொற்று வரத்தான் செய்கிறது! அதைத்தான் சொன்னேன். ஆள் பார்த்து வருவதில்லை அல்லது கொல்லைப் புறத்து வழியாகவும் வருவதில்லை கொரோனா!

இன்னொரு செய்தியும் உண்டு. ஜொகூர் பட்டத்து இளவரசர் துங்கு  இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவருக்கும் கோவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டு இப்போது நலமாக உள்ளார்.

சமீபத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். பல அரசியல்வாதிகள்,அமைச்சர்கள் உட்பட் பலர் பலவித நோய்களினால் பீடீக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இனிப்பு நீர், இரத்த அழுத்தம் இப்படி பல நோய்கள். இவர்கள் மக்களைச் சந்திக்கப் போகும் போதோ அல்லது கூட்டங்களுக்குப் போகும் போதோ முகக்கவசம் அணிவதில்லை. இதனால் அவர்கள் கோவிட்-19 தாக்குதலுக்கு மிக எளிதாக ஆளாகின்றனர். அதனால் அவர்கள் - அமைச்சர்கள் - கண்டிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் நண்பர்களே! கோவிட்-19 யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இவர்க்கு மட்டும் தான் என்பதாக யாரையும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு வரையறைக்குள்  அந்த தொற்று இல்லை.

அரசாங்கம் சொல்லுவதைக் கேளுங்கள். தடுப்பூசி மிகவும் அவசியம். பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட வேண்டும். ஆசிரியர்களும் தடுப்பூசி போட வேண்டும். மாணவர்களும் தடுப்புசி போட வேண்டும்.

நீங்கள் தப்பிக்க நினைத்தால் அது நடக்காது! ஏதோ, எங்கோ நீங்கள் பிடிபடுவீர்கள்! அதைவிட தடுப்பூசியே மேல்!

Saturday 23 October 2021

ஒழிக்க முடியாத ஒரு நரிக்கூட்டம்!


 மித்ரா என்றாலும் சரி செடிக் என்றாலும் சரி நம்மைச் சுற்றி ஒரு நரிக்கூட்டம் வலம் வந்து கொண்டேயிருக்கிறது!

இவர்களின் கொள்கை என்ன? "எல்லாமே எங்களுக்குத் தான்!"  அதைத் தவிர வேறு கொள்கைகள் அவர்களுக்கு இல்லை!

இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய நினைத்தால் உடனே இந்த நரிக்கூட்டம் தான் முன் நிற்கிறது!  அரசாங்கத்திடம் நாங்கள் தான் இந்தியர்கள்! நீங்கள் எதனைச்  செய்ய நினைத்தாலும் எங்களைத் தாண்டி உங்களால் செல்ல முடியாது என்று அவர்கள் காலில் நெடுஞ்சான்கிடையாக  விழுந்து அழுது புலம்புகிறது!

யார் என்ன செய்ய முடியும்? அந்தப் பக்கத்துக்குத் தேவை எல்லாம் அவர்களுக்கான பங்கு. அது போதும்! அது கிடைத்துவிட்டால் மித்ரா இந்தியர்களுக்குப் போய் சேர்ந்துவிட்டது என்பது பொருள்!

கடைசியில் என்ன ஆகிறது? இந்தியர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை! ஆனால் அந்த நரிகளுக்கு எல்லாமே ஆகிவிடுகிறது. கிடைக்க வேண்டியது கிடைத்துவிடுகிறது. மித்ரா எங்கே போய் சேர வேண்டுமோ அங்கே போய் பத்திரமாக சேர்ந்து விடுகிறது. 

தங்களது தேவைகள் பூர்த்தியடைந்த பின்னர் மித்ரா என்ன ஆகிறது? அது இன்னொரு கொடுமை.  "கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டோம். இனி எங்கள் சமுதாயத்தில் நிதியுதவி பெற வேண்டியவர்கள் யாரும் இல்லை. அதனால் பெருமனம் கொண்டு நீங்கள் பயன்படுத்தப்படாத பணத்தைப் பெற்றுக் கொண்டு உங்க புள்ளைக்குட்டிகளோடு மகிழ்ச்சியாக வாழுங்கள்! உங்களுக்குப் புண்ணியமாய் இருக்கும்!" என்று சொல்லி வாழ்த்தி வணங்கி  மீண்டும் எங்கிருந்து வந்ததோ அங்கே திருப்பி அனுப்பிவிடப்படுகிறது!

ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் நடக்கிறது என்கிறார்கள் ஆண்டு அனுபவித்தவர்கள்!

ஏன் நமது இனத்தில் இனப்பற்றுள்ளவன் யாருமே இல்லையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அந்த இனப்பற்றுள்ளவர்களை ஓரங்கட்டிவிடுகிறது இந்த நரிக்கூட்டம்.  அவர்களைக் கிட்டையே அண்ட விடுவதில்லை இந்த  நரிகள்.

இவர்களைப் பேசவிட்டால் இவர்களைப் போல யோக்கியர்கள் இந்த உலகில் யாருமே இல்லை என்பதை மணிக்கணக்காக கதை அளப்பார்கள்!

என்ன செய்வது? இந்த நரிக்கூட்டத்தை எப்படி அடக்குவது? அரசியலிலிருந்து இவர்கள் துரத்தியடிக்கப்பட வேண்டும். புதிதாகவும் நரிக்கூட்டங்கள் வரலாம்! எச்சரிக்கையாய் இருப்பது நமது கடமை.

நரிக்கூட்டத்தை ஒழிக்கும் நேரம் வந்துவிட்டது. இனி ஒழிந்துவிடும் என நம்பவும் இடமிருக்கிறது.

ஒழிப்போம்! ஒழிப்போம்! ஒழிப்போம்!

வாழ்த்துகள் நண்பரே!


                               
                            GOPAL'S CORNER,  MARKET HALL, VICTORIA, LONDON

உணவகம் நடத்துவது என்பது சாதாரண காரியம் அல்ல, அதுவும் லண்டன் மாநகரில், அதுவும் வெற்றிகரமாக! அது மட்டும் அல்ல நமது மாமன்னர் தம்பதியர் அந்த உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டதும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் பேறாகவே நாம் கருதலாம்!

மலேசிய இந்தியரான சுகன் கோபால் அந்த உணவகத்தை நடத்தி வருபவர். சுகன் பேராக் மாநிலத்தைச்  சேர்ந்தவர். இப்போது அவரது "Gopal's Corner"  லண்டனில் மலேசிய, சிங்கப்பூர் மக்களிடையே மிகவும்  பெயர் பெற்ற உணவகம். அவருடைய ரொட்டி சனாய் (பரோட்டா) கரி கப்பலா ஈக்கான் (மீன் தலை கரி)  இவைகளோடு நமது பாரம்பரிய தோசை இத்யாதிகளும் மிகவும் பிரசித்திப் பெற்றவை.

சமீபத்தில் நமது மாமன்னர் தம்பதியர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது - கடந்த 22.10.2021 அன்று - தங்களது மதிய உணவுக்காக கோபால்'ஸ் உணவகத்திற்கு திடீர் வருகை புரிந்தனர்! மாமன்னர் எப்போதுமே திடீர் திடீரென ஆச்சரியத்தை ஏற்படுத்துபவர் என்பது நமக்குத் தெரியும். அது போலவே அந்த உணவகத்திற்கும் சென்று அந்த மதிய வேளையில்  சுகனையும் அவரது குழுவினரையும்  மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க வைத்தார்!

மாமன்னர் தம்பதியினர் அந்த உணவகத்திற்கு வருகை தந்த பின்னர் இப்போது இன்னும் பிரபலம் என்னும் நிலைமைக்கு அந்த உணவகம் விளங்குகிறது!

முதலில் நாம் சுகன் கோபாலுக்கு  நன்றி தெரிவிக்க வேண்டும். மலேசியாவில் உணவகம் நடத்துவதற்குப் பல சிக்கல்களை எதிர்நோக்கும் நமக்கு எங்கோ ஒரு நாட்டுக்குப் போய் அங்கே ஓர் உணவகத்தை வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் சவலான விஷயம். அதனை அவர் வெற்றிகரமாகச் செய்கிறார்! வெற்றி தோல்வி அனைத்தும் நமது எண்ணங்களைப் பொறுத்தது! பல சோதனைகளைக் கடந்து தான் இன்று அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்!  வாழ்த்துகள் நண்பரே!

நீர் இன்னும் வாழ்க்கையில் உயர வாழ்த்துகிறேன்!                                      

தூய்மைப்பணியாளர்


 தமிழ் நாடு திருவொற்றியூர் எனும் ஊரைச் சார்ந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவரைப் பற்றியான செய்தி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

குப்பையில் கிடந்த 100 கிராம் தங்கத்தை காவல்துறையினரிடம் கொண்டு போய் சேர்த்தார். அதன் பின்னர் அந்தத் தங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு எல்லாம் சுபமாக முடிவடைந்தன.

இதனை ஒட்டி இன்னொரு செய்தியும் அமர்க்களப்படுகிறது என்பது தான் கூடுதலான செய்தி.

ஆமாம், தமிழ் நாடு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அந்தப் பெண்மணியை வாழ்த்தி கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் தான் இப்போது பிரமாதப்படுத்தப்படுகிறது!  அவர் எழுதிய அந்தக் கடிதம் மிகவும் நேர்த்தியாக ஏதோ கணினியைப் பயன்படுத்தி எழுதப்பட்டது போல இருப்பது தான் எல்லாருடைய கவனத்தையும் அது ஈர்த்திருக்கிறது.

நம்முடைய கையெழுத்து எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவோம்! உண்மையைச் சொன்னால் என்னுடைய கையெழுத்தை நானே படிக்க சிரமப்படுவேன்! அது தான் என் கையெழுத்து!

நான் வேலையில் இருந்த போது ஒரு வெள்ளைக்கார நிர்வாகியின் கடிதத்தை தட்டச்சு பண்ண வேண்டிய சூழல். உண்மையைச் சொன்னால் அந்தக் கடிதத்தை நான் மட்டும் அல்ல என்னைச் சுற்றி இருந்தவர்களில் யாராலும் படிக்க முடியவில்லை!  அந்த நிர்வாகி அவரின் கையெழுத்தைப் பற்று நன்கு அறிந்தவர்! அதனால் அவரே நேரடியாக வந்து அந்தக் கடிதத்தை அவரே படித்துக் காட்டினார்! பின்பு தான் புரிந்தது!

ஓரிராண்டுகளுக்கு முன்னர் நேப்பாளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கையெழுத்தைப் படிக்க நேர்ந்தது. சும்மா சொல்லக்கூடாது. அது தான் அவரின் கையெழுத்து என்றால்  நம்பவே முடியாது. ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த, ஆங்கிலத்தைத்  தாய்மொழியாக அல்லாத ஒரு மாணவி,  கணினியில் டைப் செய்யப்பட்டது போலவே இருந்தது அவரின் கையெழுத்து. அதாவது அந்தக் கையெழுத்துக்கு நூறுக்கு நூறு மார்க் போடலாம்!

சரி,  இவ்வளவு சொல்லியாகிவிட்டது. கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?  உண்மை தெரியவில்லை.

தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் கையெழுத்தைப் பார்க்கும் போது அப்படித்தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

Friday 22 October 2021

வெள்ளோட்டமோ!

                                              முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்
மலாக்கா மாநிலத் தேர்தல் வருகின்ற மாதம் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதெல்லாம் பழைய செய்திகள். ஏற்கனவே படித்துவிட்டோம்! புதிதாக ஏதேனும்.......உண்டா? உண்டு!

ஒன்று மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் 15-வது பொதுத் தேர்தலின் வெள்ளோட்டமாகப் பார்க்கப்படுகின்றது. எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது இந்த மாநிலத் தேர்தல் மூலம் ஓரளவு நம்மால் கணிக்கப்படும்.

ஆட்சி  அமைப்பது அம்னோவின் தேசிய முன்னணியா அல்லது பக்காத்தான் கட்சியா அல்லது இன்னொரு புதிய கூட்டணியான பெரிகாத்தான் நேஷனலா - என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி. அம்னோ வழக்கமான தனது கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ தனித்துப் போட்டியிடும். எந்த மலாய்க் கட்சிகளுடனும் கூட்டுச் சேராது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது அந்தக்கால சிந்தனையுடன் அல்லது தனது முன்னாள் செல்வாக்குடன் நாம் இன்னும் இருக்கிறோமா என்று சோதித்துப் பார்க்க விரும்புகிறது.

அதோடு மட்டும் அல்லாமல் தேர்தல் பிரச்சாரத் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ கட்சியினருக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். அம்னோ கட்சியினர் அம்னோவின் செல்வாக்கு மட்டும் அல்ல நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கும் எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்க விரும்புகின்றனர்.

நஜிப் பல வழக்குகளினால் பல சிக்கல்களை எதிர்நோக்குகிறார். எல்லாம் ஊழல் பிரச்சனைகள்.  ஆனால் தனக்கு இன்னும் மலாய்க்காரர்களின் ஆதரவும் மலாய்க்காரரிடையே செல்வாக்கும்  இருப்பதாக நம்புகிறார். அதனை எப்படி உறுதிப்படுத்துவது? அதற்கு இந்த மாநிலத் தேர்தல் அவருக்கு ஒரு சோதனைக்களமாக விளங்கக்கூடும்.

இந்த மாநிலத் தேர்தலின் அம்னோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால்  நஜிப் ரசாக்  மலேசிய அரசியலில் மீண்டும் ஜொலிப்பார் என்று நம்பலாம். அப்படி தோல்வி அடைந்தால் அத்தோடு அவருடைய அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்!

அம்னோ கட்சியினருக்கு எல்லா வகையிலும் இந்தத் தேர்தல் ஒரு வெள்ளோட்டம்!

தற்கொலை செய்து கொள்ளும் நேப்பாளிகள்!

                           தற்கொலை செய்து கொள்ளும் நேப்பாளத் தொழிலாளர்கள்

 நமது மலேசிய நாட்டில் கடந்து மூன்று வருடங்களில் தற்கொலை செய்து கொள்ளும் நேப்பாளத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மையில் கவலை அளிக்கிறது.

அதற்காக மற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களோ ஏன் மலேசியத் தொழிலாளர்களோ தற்கொலை செய்து கொள்வதில்லை என்று சொல்லிவிட முடியாது. தகவல்கள் இல்லை! அவ்வளவு தான்!

கடந்து மூன்று ஆண்டுகளில் சுமார் 140 நேப்பாளத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மனித உரிமை ஆணையமான சுஹாக்காம் கூறுகிறது. இந்த 2021 ஆண்டுக்கான எந்த தகவல்களும் இதுநாள் வரை கிடைக்கவில்லை.

இந்த தற்கொலைகளுக்கான காரணம் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வேலை இல்லை என்பதே பிரதான காரணமாக விளங்குகிறது. வேலை இல்லை. தொற்றினால் பயம். சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல அனுமதியில்லை. அங்கும் இல்லை. இங்கும் இல்லை. முச்சந்திக்கு வந்தாயிற்று. சாப்பாட்டுக்கு வக்கில்லை. இப்படி பல காரணங்கள் நேப்பாளிகளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகின்றன.

ஆனால் நமது கேள்வி எல்லாம் நேப்பாள நாட்டு தூதரகம் ஏன் மௌனம் சாதிக்கிறது என்பது தான். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டியவர்கள் கோவிட்-19 என்று சொல்லி கள்வர்கள் கூடாரங்களில் ஒளிந்து கொள்வது போல இவர்களும் ஒளிந்து கொண்டிருக்கிறார்களோ!

இந்த தற்கொலைகளுக்கு எல்லாத் தரப்பினர்களுக்கும் பங்கு உண்டு. முதலில் அவர்களின் முதலாளிகள்.  நேப்பாளத்  தூதரகம். மலேசிய அரசாங்கம். அவர்களால் பயன்பெற்ற- பணம் சம்பாதித்த முதலாளிகள் அந்தப் பொறுப்பினை  எடுத்திருக்க வேண்டும். இறந்த போன தொழிலாளர்களுக்குப் பதிலாக மீண்டும் அவர்களால் நேப்பாளத்திலிருந்து வேறு தொழிலாளார்களை வரவைக்க முடியும்! அவ்வளவு எளிதில் அவர்களுக்குத் தொழிலாளர்கள் கிடைத்து விடுகின்றனர்! அந்த அளவுக்கு மலேசிய அரசாங்கம் ரொம்பவும் 'தாராளமாக' ஆடு மாடுகளை  இறக்குமதி செய்வது போல நேப்பாளத்திலிருந்து தொழிலாளர்கள் 'இறக்குமதி'  செய்ய அனுமதி கொடுத்து விடுகின்றனர்.

இந்த நிலையில் முதலாளிகள் 'இருந்தால் என்ன! இறந்தால் என்ன!' என்கிற போக்கைத் தான் கடைப்பிடிப்பார்கள். அதில் சந்தேகமில்லை!

வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பது தான் இந்த செய்தியில் இருந்து நமக்குத் தெரிய வருவது.

இதில் யார் பொறுப்பு?  ஒருவருமே இல்லை என்பது தான் நிதர்சனம்!

அங்கள்! என்னை உட்டுப் போறிங்களா!

 

தமிழ் நாடு,   நீலகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது.

ஒரே மாதமான குட்டி யானை ஒன்று வழி தடுமாறி அத்தோடு ஒரு குழியிலும் விழுந்து வெளியே வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த குட்டி யானையை வனத்துறையினர் காப்பாற்றி அதற்கு சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முடிந்த பின்னர் அந்தக் குட்டியை தாயிடம் சேர்க்க வேண்டும். தாயைத் தேடி குட்டி யானையோடு வனத்துறையினர் அலையோ அலை என்று அலைந்து திரிந்தனர்.  

சுமார் ஏழு மணி நேர அலைச்சலுக்குப் பிறகு தாய் யானையைக் கண்டு பிடித்தனர். வனத்துறையினருக்கு மிக சந்தோஷம்.  குட்டியாருக்கு அம்மாவைப் பார்த்ததில் இன்னும் ரொம்ப சந்தோஷம்.

அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் குட்டி யானை "அங்கள்! என்னை விட்டுட்டு போறிங்களா! வேணாம்! வேணாம்!" என்று அவரை தனது தும்பிக்கையால் கட்டிப்பிடித்துக் கொண்டது!

என்ன செய்வது! கண்ணீரை வரவழைக்கும் காட்சி தான். வனத்துறையினருக்கு அவர்களின் கடமை முடிந்தது! தாயோடு அந்தக் குட்டியைச் சேர்ப்பது அவர்களின் கடமை!

               "கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ!                                                                            கடமை முடிந்தது கல்யாணம் ஆக!"

ஏனோ கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இந்தப் பாடல் எனது ஞாபத்திற்கு வருகிறது!


Thursday 21 October 2021

இந்த விருதுக்கு நான் தகுதியல்ல!

 

                                                        ராணி இரண்டாம் எலிசபத்

பிரிட்டனின்  பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று கொடுத்த  விருதினை ராணி இரண்டாம் எலிசபெத் வேண்டாமென உயரிய மரியாதையோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்.           

  "ஆண்டின் வயதானவர்" என்கிற அந்த விருது தனக்கு ஏற்ற விருது அல்ல என்பதாகக் கூறி அந்த விருதனைப் பெற  மறுத்துவிட்டார்!

ராணி எலிசபத் அவர்களுக்கு வயது 95.   இருப்பினும் "வயதானவர்" என்கின்ற அந்த விருதினைப் பெறுகின்ற தகுதி  தனக்கு இல்லை என்பதாக அவர் கூறுகிறார்! அந்த விருதுக்குத் தகுதியானவரை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அவருக்கே அந்த விருதை கொடுத்து விடுங்கள். நான் தகுதியானவள் அல்ல என்பதே அவரின் நிலைப்பாடு! 

அரசி சொல்லுவது சரிதான். அவர் தினசரி தனது அலுவல்களைக் கவனிக்கிறார். மக்களைச் சந்திக்கிறார்.  அரச தந்திரிகளைச்  சந்திக்கிறார். தூதுவர்களைச் சந்திக்கிறார். தேவை என்கிற போது தனது கையெழுத்தைப் போடுகிறார்.  அவர் வேலையில் அவர் சரியாகவே  நடந்து கொள்கிறார்.

அவரிடம் முதுமை இல்லை.  அப்படி இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை. எப்போதும் அவருக்கு ஏற்ற வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.

ஒருவர் வேலையில் சுழன்று கொண்டிருக்கும் போது வயது பற்றி கவலை இருப்பதில்லை. நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரும் ஒரு 95 வயது நபர் தான். ஆனால் அவர் இன்னும் அரசியலில் ஈடுபாட்டுடன் தானே இருக்கிறார். அவர் வயதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.  நாம் தானே கவலைப்படுகிறோம்.

ஆக, அரசி சொல்லுவது சரிதான்! முதுமை என்பது ஏதோ எண்களை வைத்து கணக்குப் பண்ணுவது  அல்ல! அது மனம் சம்பந்தப்பட்டது!

அந்த விருதுக்கு "நான் தகுதியானவள் அல்ல!" என்று அரசி கூறுவது சரியே!


முதல்வர் பதவி நமக்கு வேண்டும்!

 

             An old image of Thaneermalai Murugan Temple,Penang, established 200 years ago.

இதுவரை நமது பினாங்கு மாநிலத்தில் இந்தியர் ஒருவர் மாநில முதல்வராக வந்ததாக சரித்திரம் இல்லை.

அதனாலென்ன? இனி மேல் சரித்திரம் படைக்கலாமே! அப்படி ஒரு சரித்திரம் படைப்பதற்கு மாநில ஜனநாயக செயல் கட்சி மனம் வைத்தால் அது நடக்கலாம். 

பெரும்பாலும் மாநில முதல்வராக இருந்தவர்கள் சீனர்கள் தான்.  ஆனால் இந்தியர்கள் வரமுடியும் என்கிற எண்ணமே இதுநாள் வரை நமக்கு ஏற்பட்டதில்லை.  நமது தாழ்வுமனப்பான்மையே அதற்குக் காரணம்! நாம் இப்படித்தான், இதற்கு மேலே நமக்கு இடமில்லை, இவைகளையெல்லாம் நம்மால் எட்ட முடியாது என்கிற எண்ணத்தோடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அப்படி ஒரு எண்ணத்தை நமது தலைவர்கள் நமக்கு ஏற்படுத்திவிட்டார்கள்!

ஆனால் அவைகளில் எதுவும் உண்மையில்லை! ஒருவனின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் உண்மை. இன்று இல்லை என்றால் நாளை கிடைக்க வாய்ப்பு உண்டு. நாம் முயற்சியே செய்யாத போது அது எப்படி நமக்குக் கிடைக்கும் என்கிற கேள்வியில் உண்மை உண்டு.

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறார்! ஒரு சிறிய கோடு போட்டிருக்கிறார். அதற்கு மேல் நாம் தான் அதற்கான வேலைகளைச்  செய்ய வேண்டும்.

பொதுவாக ஜ.செ.க. சீனர்களின் கட்சி என்பதாகவே சொல்லப்படுவதுண்டு. அதில் உண்மை இல்லை என்றாலும் அது தான் உண்மை என்று சம்பவங்கள் அடிப்படையில் கூறலாம். அவர்கள் இந்தியர்களைப் புறக்கணிப்பவர்கள் தான்! நேரத்திற்குத் தகுந்த மாதிரி நமது வாக்குகளுக்காக நம்மை மதிப்பவர்கள்! அதன் பின் நம்மை மிதிப்பவர்கள்! 

அவர்கள்,  நாங்கள் எல்லா மலேசியர்களுக்கும் பொதுவானவார்கள்  என்று அவர்கள் சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமானால் அவர்கள் அதனைச் செயலில் காட்ட வேண்டும். அதுவும் அடுத்த பினாங்கு மாநில முதல்வர் பொறுப்பு ஓர் இந்தியருக்குக் கிடைக்க வேண்டும்.

கட்சித் தேர்தலில் இந்தியர்கள் வெற்றி பெற சீனர்கள் விடமாட்டார்கள்.  எல்லாக் காலங்களிலும் அது தான் உண்மை. அதனால் இது போன்ற பதவிகள் வரும் போது தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியரோ, மலாய்க்காரர்களோ ஜ.செ.க. வில் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது!

அடுத்த நமது இலக்கு மாநில முதல்வர் பதவி தான்! "நாங்கள் அனைத்து மலேசியர்களுக்கான கட்சி" என்பதை ஜ.செ.க. செயலில் காட்ட வேண்டும்!

இது அயோத்திதாசரின் மண்!



                                                அயோத்திதாசர் -  1845 - 1914 (68 வயது)

சமீபத்தில் நமது மலேசிய மண்ணில் பெரியாரின் 143-வது பிறந்த நாளை பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினரால் அதுவும் இளைஞர்களால் விமர்சையாகக் கொண்டாப்பட்டதாக செய்திகளைப் படித்தோம்.

பெரியாரைப் பற்றி நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரது சேவையை அறியாதார் யாருமில்லை.  அவரது சேவையை நாம் மதிக்கிறோம்.

தொடர்ந்தாற் போல அவரது திராவிட கட்சியினர் தான் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.  அவரது கட்சியினரே சாதிமத ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கின்றனரே தவிர ஒழித்ததாகத் தெரியவில்லை! ஒழிப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை! எல்லாம் பேச்சோடு சரி!

ஆனால் அவரைப் பெரிய சாதனையாளராக திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செய்திகளைக் கொடுத்து வருகின்றன. அவரது கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை! ஆனாலும் பெரியார், பெரியார் என்று நாள் தவறாமல் அவரது பெயரை ஓதி ஓதி ஒழுகுகின்றனர்! அங்கேயே அப்படி என்றால் இங்கே எப்படி!

ஒரு தமிழரான பண்டிதர் அயோத்திதாசர் தமிழ் நாடு, நீலகிரி மாவட்டத்தில் பிறந்தவர்.  தமிழ் நாட்டின்  முதல் சாதி எதிர்ப்புப் போராளி. தமிழ் நாட்டின் முதல் குரல் அவரது குரல். ஆனால் பின் வந்தவர்களால் அவரது சேவைகள் முழுமையாக மறைக்கப்பட்டன. தமிழன் என்றாலே அவனது சேவைகள் மறைக்கப்படும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு  வருகிறோம்!

பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றி தெரிந்து கொள்ள விக்கிபிடியாவைத் தான் நாம் நாட வேண்டியுள்ளது. அவர் சமூக சேவையில் நாட்டமுள்ளவர். தமிழறிஞர். தமிழன் இதழை நடத்தியவர் என்று அவரைபற்றியான பல குறிப்புகள் காணப்படுகின்றன.

இன்றைய இளைஞர்கள் முடிந்தவரை தமிழர்களுக்காகப் போராடிய தமிழர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதுமட்டும் அல்ல. நம் நாட்டில் உள்ள எந்தவொரு இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது கோவில் தலைவர்கள் போன்றவர்கள் கூட தமிழர்களாக இருக்க முடியவில்லை. உங்களைச் சுற்றிப் பாருங்கள்.  தமிழர் அல்லாதார் தான் தமிழர்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்! இதே போன்ற இழிவுகளை நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

இளைஞர்களே! தமிழர்களை அடையாளங் காணுங்கள். அவர்களுக்கு உங்களின் ஆதரவுக் கரத்தை நீட்டுங்கள்.

இது பெரியார் மண் என்று சொல்லுவதைவிட பண்டிதர் அயோத்திதாசர் மண் என்று  சொல்லுங்கள். எல்லாக் காலங்களிலும் நம் இனத்தைப் பாராட்டுவதைவிட பிற இனத்தாரைப் பாராட்டுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டோம்.

இனி நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம்!

Wednesday 20 October 2021

அம்மாடி! என்னா உயரம்!

                                                உலகிலேயே உயரமான பெண்
உயரம் என்பது வெறுக்கத்தக்கது அல்ல! நாமெல்லாம் ஓரளவு என்ன உயரம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம்.  ஆனால் நம்மவிட ஒருவர் உயரம் என்றால் நமக்கு அது அதிசயத்தை தருகிறது! அல்லது குள்ளமாக இருந்தாலும் அதே நிலை தான்!

மேலே படத்தில் காண்பவர் "அம்மாடியோவ்! இவ்வளவு உயரமா!" என்று ஆச்சரியப்பட வைப்பவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ரூமேசா கெல்கி என்கிற பெண். அவரது வயது 24. அவரது உயரம் 7 அடி 7 அங்குலம்! உலக கின்னஸ் சாதனை அமைப்பு அதனை உறுதிப்படுத்துகிறது.

அவருடைய உயரம் என்பது இயற்கையானது அல்ல என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். உடலில் ஏற்பட்ட வியாதியின் காரணமாக அவரது எலும்புகள் எதிபாராத வகையில் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டன!  எப்படியிருப்பினும் இன்று உலகில் உயரமான பெண் என்பதில்  அவருக்கு மகிழ்ச்சி தான்! உலகிலேயே உயரமான ஆணும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட வேண்டும். சுல்தான் கோசன் என்னும் பெயர் கொண்ட அவரின் வயது 40,  உயரம் 8 அடி 9 அங்குலம்!

இந்த நேரத்தில் எனது அனுபவத்தையும் கூறுகிறேன்.  தனது கண்களைச் சோதித்துக் கொள்ள  நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் நான் அசந்து போனேன். அந்த உயரத்தில் இது நாள்வரை நான் யாரையும் பார்த்ததில்லை! அந்த அறைக்கதவைத் திறந்த போது அவர் அந்த கதவு உயரத்திற்கு இருந்தார்! அவரே குனிந்து கொண்டு போனார்!  அவரைச் சோதிக்க வந்த மலாய்ப் பெண்மணி "என்னா! இவ்வளவு உயரமா!" என்று ஆச்சரியப்பட்டுப் போனார்! "எங்க வீட்டுல எல்லாம் இந்த உயரம் தான்!" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்!  அன்று மாலை அவரது தங்கையும் கண்களைச் சோதிக்க வந்தார்.  அவரும் அதே உயரம் தான்!

நாமெல்லாம் ஏறக்குறைய ஒரே அளவு உயரம் தான். அதனால் தான் அதிக உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! அதிக குள்ளமாக இருப்பவர்களைக் பார்க்கும் போது அதுவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

அதனால் தான் உயரமாக இருப்பவர்களைப் பார்த்தால் "அம்மாடியோ என்னா உயரம்!" எனவும் குள்ளமாக இருந்தால் "என்னா இவ்வளவு குள்ளம்!" என்றும் விமர்சனம் பண்ணுகிறோம்!

இணையம் சரியான தேர்வு தானா?

 

இப்போது மலேசியாவில் இணையதள மூலமாக வியாபாரங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அந்த ஆய்வு எந்த அளவுக்கு உண்மையானது என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை.

ஆய்வுகள் என்றுமே  ஒருதலைபட்சமானது! ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவைகள் செயல்படுகின்றன! அது போதும்!

எல்லாத் துறைகளிலும் ஏமாற்று வேலை உள்ளது போல நிச்சயமாக இந்த இணையதளங்களில் ஒருசில நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் தண்ணிக் காட்டுகின்றன என்பதை நான் அறிவேன்.

நல்ல நிறுவனங்கள், பெயர் பெற்ற நிறுவனங்கள் இவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று நீங்கள் நம்பும் நிறுவனங்கள் - இவைகளிடம் நீங்கள் பொருள்களை வாங்குவது உங்களுக்கு நட்டம் வராது. பொது மக்களை ஏமாற்றும் நிறுவனங்களும் நிறையவே இருக்கின்றன. அவர்களிடம்  நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த சீனப்பெண்மணி ஒருவர் இணையதளம் மூலம் நிறையதடவை ஏமாந்து போயிருக்கிறார். விலை குறைவு என்று ஏமாந்தது தான் மிச்சம். விலை குறைவு என்று ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் கிடைத்ததோ தரமற்ற, பயன்படுத்த முடியாத ஒரு பொருள். அவைகளை மாற்றவும் வழியில்லை.  அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காது!

புகழ் பெற்ற நிறுவனங்கள் ஏமாற்றுவதில்லை. அவர்களுக்குத் தொடர்ச்சியான வியாபாரம் வேண்டும். அதனால்  அவர்கள் தங்களது நிறுவனத்தின் பெயர் கெடுவதை விரும்பமாட்டார்கள்.

பலருக்கு இணையதளங்கள் ஆபத்து, அவசர நேரத்தில் கை கொடுக்கின்றன என்பது உண்மை தான். ஊரடங்கு நேரத்தில் எங்கும் போக வழியில்லை. அப்போது பெரும்பாலான வியாபாரங்கள் இணையதளங்கள் மூலமாகவே நடைப்பெற்றன. இன்றும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கணினி வியாபாரங்கள் பல இணையதளங்களின் மூலமாக நடைபெறுகின்றன.

இன்றைய நிலையில் ஏமாற்று வேலை என்பது இணையதளங்களில் அதிகம் தான். அது நாம் எந்த நிறுவனத்தில்  நமது பொருள்களை வாங்குகிறோம் என்பதைப் பொறுத்தது. நமக்குத் தெரியாத, அறியாத நிறுவனங்களில் பொருள்களை வாங்குவது நமக்கு ஏமாற்றத்தைத் தரும்.

நாம் தேடும் ஒரு பொருள் இணையத்தில் கிடைக்கும் என நாம் நிச்சயம் நம்பலாம். யாரோ ஒருவரிடம் அந்தப் பொருள் இருக்கும். அது தான் இணையதளத்தின் விசேஷம்! கடை கடையாய் போய் தேடுவதை விட இணையத்தில் ஒரு சில மணி நேரங்களில் நாம் தேடி கண்டுபிடித்து விடலாம்!

இணையதள வியாபாரம் தேவை தான்! அதே போல எச்சரிக்கையும் தேவை!

கடவுளின் தேசம்!

 

                                        வெள்ளத்தில் சாய்ந்து விழும் இரண்டு மாடி வீடு

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் கேரள மாநிலம் இப்போது என்ன ஆயிற்று என்று கேட்கத் தோன்றுகிறது. கடவுளின் கோபத்திற்கு ஆளாகியிருக்குமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் ஆன சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. பொருள்களை மீட்டு விடலாம். ஆனால் போன உயிர்கள்...? யார் என்ன செய்ய முடியும்? போனது போனது தான்!

கேரளா மாநிலத்தைப் பற்றி நான் அதிகம் அறியாதவன். ஆனால் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் என்னால் மறக்க முடியாத மாவட்டம். அந்த மாவட்டத்தின் பெயர் 'பத்னமத்திட்டா" என்னும் பெயர் கொண்டது.

நான் முன்பு வேலை செய்த தோட்டமொன்றில்  தலைமை அலுவலராக பணிபுரிந்தவர் அந்த பத்னமத்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கடிதம் எழுதும் போதெல்லாம் அந்த மாவட்டத்தின் பெயர் வரும். அந்த பெயர் ஏனோ என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது! அதனால் கேரளா என்றால் வேறு எதையும்விட பத்னமத்திட்டா இயல்பாகவே வந்துவிடும். உடனே அவர் ஞாபகம் அவரது குடும்பத்தினரின்  ஞாபகம் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்! பாவம்! அவரது குடும்பம் என்ன ஆகியிருக்குமோ என்றெல்லாம் மனதில் ஓடும்!

இந்த கடவுளின் தேசத்திற்கு இதற்கு முன்பு இப்படி ஒர் சேதம் ஏற்பட்டிருக்குமா என்பது  தெரியவில்லை. இந்த முறை ஏற்பட்டிருப்பது மிகவும் கடுமையான சேதம்.

2018-ம் ஏற்பட்ட சேதம் இதைவிட அதிகம் என்கிறார்கள். ஆனால் இப்போது இன்னும் மழை நீடிக்கிறது. மழை நின்றபாடில்லை. பாலங்கள் பல காணாமல் போய்விட்டன. தடுப்பணைகள் போன இடம் தெரியவில்லை. பல குடும்பங்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. பலர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். யாராலும் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழல். இயற்கையின் கோபம் தணிந்தால் அன்றி மனிதனால் எதுவும் செய்ய இயலாது.

ஒரு சில தினங்களுக்கு முன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி திரிந்த சின்னஞ்சிறுசுகள் இன்று இல்லை. சோகத்தின் விளிம்பில் மக்கள்.

முன்னேற்றம் என்கிற பெயரில் இயற்கையை அழித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம். கேரளாவிற்கு மட்டும் அல்ல உலகிற்கே இது பாடம். ஆனால் இதனாலெல்லாம் மனிதன் திருந்திவிடுவானா என்றால்,  இல்லை, திருந்தமாட்டான்! அவனின் படைப்பு அப்படி!

அந்த மாநில மக்களுக்காக நாம் பிரார்த்திப்போம்! அது தான் நம்மால் முடிந்தது!

Tuesday 19 October 2021

நல்லுறவு நீடிக்கும் என்பதே நமது நம்பிக்கை!

 

மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பலவித காரணங்களுக்காக அங்கே போகின்றனர்.

கல்வி என்பது தான் முதன்மையான காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனக்குத் தெரிந்தவர்களில் பலர் மருத்துவம் பயில 1960-களிலேயே அந்நாட்டிற்குச் சென்றிருக்கின்றனர். அந்த அளவுக்கு அந்நாட்டின் மருத்துவக் கல்வி புகழ் பெற்றது. போனவர்களில் பலர் திரும்பி வரவேயில்லை. அங்கேயே திருமணம் செய்து கொண்டு பலர் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கான உறவுகள் சிறப்பாகவே இருக்கின்றன. இங்கிருந்து போனவர்கள் திரும்ப இங்கு வருவதில்லையே தவிர அங்குள்ளவர்கள் இங்கு வர வாய்ப்பில்லை. அதனை அவர்களும் விரும்புவதில்லை இவர்களும் வரவேற்பதில்லை!

பழம் பறிக்கும் தொழிலாளர்கள் அல்லது ஏதோ ஒரு துறையில் திறன் பெற்றவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்புக்கள் சிறப்பாகவே இருக்கின்றன. அப்படிப் போன குடும்பங்களையும் எனக்குத் தெரியும்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பழம் பறிக்கும் தொழிலாளர்களாக போனவர்களின் வீட்டுப் பிள்ளைகள்  அங்கே கல்வி கற்று, மேற்கல்வி முடித்து,  இப்போது நல்ல வேலைகளில் இருக்கின்றனர். அங்கு பெரும்பாலும் தகுதி அடிப்படையே முக்கியம் என்பதால் வேலை என்பதெல்லாம் கல்வித் தகுதியை வைத்தே அளவிடப்படுகின்றன. 

ஒவ்வொரு நாட்டின் கொள்கைகள் வேறுபட்டிருப்பது இயல்பு தான். நமது நாட்டின் கொள்கை என்பதை வேறு.  ஆஸ்திரேலியா படித்தவர்களை வரவேற்கும் நாடு. முன்னேற்றமே அவர்களின் குறிக்கோள். நமது நாடு படிக்காத வங்காளதேசிகளை வரவேற்கும் நாடு. சொர்க்கமே நமது நாட்டின் குறிக்கோள்! நாட்டுக்கு நாடு கொள்கைகள் வித்தியாசப்படுகின்றன!

ஆனால் சமீப காலங்களில் இந்தியர்களின் வேலை வாய்ப்புக்கள் வங்காளதேசிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. இந்நாட்டு குடிமக்களான இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதனால் வெளிநாடு வேலை தேடி போகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் போகும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். இக்கரையே கறைபட்டுப் போனால் அக்கரைக்குத் தான் அனைவரும் அக்கறை காட்டுவார்கள்!

வருங்காலங்களிலும் இரு நாடுகளுக்கான நல்லுறவு தொடரும் என்பதே நமது நம்பிக்கை!

விமான விபத்துகளைத் தடுக்கும் பன்றிகள்!

 

        மேலே படத்தில் காணப்படுவது பன்றிகளே தான்! ஐயம் வேண்டாம்!

ஆனால் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை தான் மகா பெரிய வேலை!

கடவுள் உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்துத்தான் இருக்கிறார். அதனைப் புரிந்து கொண்டு அந்த வேலையைக் கொடுத்துவிட்டால் அனவைருக்கும் மகிழ்ச்சி!

பன்றிகளைப் பற்றி நமக்கென்ன தெரியும்?  நமக்குத் தெரிந்தது ஒன்று: காட்டுப்பன்றிகள்.  இன்னொன்று: சீனர்கள் வளர்க்கும் நாட்டுப்பன்றிகள். இரண்டுமே மனிதர்களின் உணவுக்குத்தான் பயன்படுகின்றன. சீனர்கள் வளர்க்கும் பன்றிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன 

சரி! நமது கதைக்கு வருவோம்.  நெதர்லாந்து நாட்டின் அமர்ஸ்டாடம் விமான நிலையத்தில் தீர்க்க முடியாத  ஒரு பிரச்சனையை இருபது பன்றிகளைக் கொண்டு தீர்த்து வைத்திருக்கின்றனர்!

விமான நிலையத்தின் ஓடுதளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சக்கரவள்ளிக் கிழங்கு பயிரிடுகின்றனர்.   அறுவடை செய்கின்ற நேரங்களில் கிழங்குகள் முழுமையாக வெளியாகாமல் மண்ணுக்குள்ளே புதைந்து கிடக்கும். இந்த கிழங்குகளை உண்ண பறவைகள் படையெடுப்பது வழக்கமான ஒன்று.

உணவுகள் தாராளமாக கிடைப்பதால் பறவைகள் ஓடுதளத்தின் அருகிளேயே கூடுகளைக் கட்டுவதும், சுற்றித் திரிவதும் விமானங்களுக்குப் பெரிய மிரட்டலாக இருந்ததை எப்படி சமாளிப்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி இருந்த நேரத்தில் இப்படி ஒரு அபாரமான பொறி அவர்களுக்குத் தட்டியது!

ஆமாம்! பன்றிகளை அங்குள்ள விவசாய நிலங்களில் கொண்டு வந்து விட்டால் அந்த பன்றிகள் கிழுங்குகளை முழுமையாக தின்று தீர்த்துவிடும்! பறவைகளுக்கு அங்கு வேலையில்லாமல் போய்விடும்! அது தான் அவர்களின் கண்டுபிடிப்பு!  இப்போது அது அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. பறவைகள் வேறு விவசாய நிலங்களுக்கு இடத்தை மாற்றிக் கொண்டு விட்டன!

சென்ற ஆண்டு மட்டும் இந்த பறவைகளினால் சுமார் 50 விமான விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றனவாம்.

பறவைகளும் விமான விபத்துக்களை ஏற்படுத்த முடியும்! பன்றிகளும் விமான விபத்துகளைத் தடுக்க முடியும்!

Monday 18 October 2021

மலாக்கா மாநிலம் தேர்தலை சந்திக்கிறது!

 

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தீடீரென  நாடோடிகளாக மாறிவிட்டதால் சட்டமன்றத்தில் போதுமான பலமின்றி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இப்போது அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதாக தேர்தல் ஆணையம்  அறிவித்திருக்கிறது. தேர்தல் நவம்பர் 20-தேதி என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தேர்தல் நடைபெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனாலேயே இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல்வரை இந்த மாநில கூட்டணி தொடர்ந்திருக்கலாம்.  ஆனால் அரசியல்வாதிகள் எந்த காரணத்திற்காக "ஓடுகிறார்கள்! ஒடியார்கிறார்கள்!"  என்பது நமக்குத் தெரிய நியாயமில்லை. பொதுவாக நமக்குத் தெரிந்தெல்ல்லாம்  இந்த கவிழ்ப்பில் பணம் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்  என்பது மட்டும் தான்! அது தானே அரசியல்!

ஆனால் ஏற்கனவே நடந்த சபா மாநிலத்தில் நடந்த தேர்தலில் கோவிட்-19 தொற்றை நம்மால் இன்னும் மறக்க முடியவில்லை. அதன் பின்னர் தானே நமக்கு எல்லாக் கஷ்டங்களும் நஷ்டங்களும் நம்மைத் தேடிவர ஆரம்பித்தன! அதனைப் பயன்படுத்தித்  தானே ஒருவரால் நீண்ட நாள் எதற்கும் உதவாத  பிரதமராக இருக்க முடிந்தது! இந்த நாட்டின் பிரதமராக இருந்தவர்களில் "கரும்புள்ளி" என்றால் அது அவர் தானே!

மாநிலத் தேர்தல் வரும் முன்னரே 90 விழுக்காடு மக்கள் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள் என்பது நல்ல செய்தி தான். ஆனால் எதனையும் முற்றும் முழுவதுமாக நம்பிவிட முடியாது என்பதும் எச்சரிக்கையாய் இருப்பதும் நமது கடமை. எதுவும் நடக்கலாம். ஆனானப்பட்ட அமெரிக்காவே கோவிட்-19 தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது!

அதனால் ஒரு சில கட்டுப்பாடுகள் நமக்கும் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வாக்களிப்பவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் வாக்களிக்க முடியாது என்பதை முதலிலேயே அறிவித்துவிட வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை உடன் கொண்டுவர வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் கடமை.

தனிப்பட்ட மனிதர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் தேவை. முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளி  -  முடிந்தவரை இதனை நாம் கடைப்பிடிப்பது பொது மக்களாகிய நமது கடமை.

மாநிலத் தேர்தல்,  நோய் பரவாமல் தடுப்பது, தேர்தல் ஆணையத்தின் கடமை! 

Saturday 16 October 2021

மாதா பிதா குரு தெய்வம்

 

மாதா பிதா குரு தெய்வம் - இது ஆன்றோர்களின் வாக்கு.

ஆனால் குரு என்று வரும்போது தான் சமயங்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது! அந்த வரிசையே சரிதானா என்று யோசிக்க வைக்கிறது!

மேலே காணும்  காட்சி தமிழ் நாடு, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனை அடிக்கிறார், தாக்குகிறார், உதைக்கிறார் - தன் சக்திகேற்ப அனைத்தையும் செய்கிறார்!

அந்த மாணவன் செய்த தவறு ஒரு சில பாடத்தின் போது வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே சுற்றுவது, அவரது பாடம் உட்பட!  பாடம் போதிக்கும் ஆசிரியரின் திறமையைப் பொறுத்து அமைவது அது! தனது வகுப்பை மாணவர்கள் புறக்கணிக்கின்றார்கள் என்கிற கோபம் வேறு அவரை மிருகமாகி விட்டது!

ஆசிரியருக்கே நாம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சரியாக பாடம் நடத்தினால் மாணவர்கள் வகுப்பை புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படியோ மாணவன் ஒருவன் இந்த 'வன்முறை' காட்சிகளைப் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கிவிட்டான்! ஆசிரியர் மாட்டிக் கொண்டார். கைதாகி இப்போது சிறை அவருக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது!

குரு என்றாலே  நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம்.  குருவை மதிக்கும் சமூகம். அவரை நாம் ஒரு வழிகாட்டியாக நினைக்கிறோம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது தான் நமது முன்னோர்கள் நமக்குச் சொன்னது. அதில் தவறு ஏதும் இல்லை.

ஆசிரியர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களாக இருந்ததால் தான் இன்று அவர்கள் அந்த புனித பணியைச் செய்கிறார்கள்.

மாதா பிதா குரு தெய்வம். அது சரி தான்!

Friday 15 October 2021

நடவடிக்கையில் தயக்கம் ஏன்?


 ஏற்கனவே நடந்த ஒன்று தான். முதன் முறை, யாரும் எதிர்பார்க்கவில்லை- என்று எப்படியோ நமக்குள் சமாதானம் செய்து கொண்டோம்!

மலேசியரிடையே தவறான பழக்க வழக்கங்கள் உண்டு. தவறு செய்பவன் பெரிய வீட்டுப் பிள்ளையாக இருந்தால் அந்த செய்தியை முற்றிலுமாக முடக்கி விடுகின்றோம். நீதி என்பது பெரிய வீட்டுப் பிள்ளைகளின் பக்கம்!

இயங்கலை வகுப்பு நடந்து கொண்டிருந்த  போது முதல்முறையாக ஆபாச விடியோ  இடையில் நுழைந்ததாக செய்திகள் வெளியாயின.  அது ஒரு விபத்து. இரண்டாவது முறையாக இப்போது அரங்கேறியிருக்கிறது அதே விபத்து! இதனை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது நமது கையாலாகத்தனம்! விபத்து அல்ல!

முதல் முறை ஏற்பட்டபோது நாம் என்ன தண்டனையை அவர்களுக்குக் கொடுத்தோம்? கொடுத்தோமா, மன்னித்தோமா? எதுவும் தெரியவில்லை! கொடுத்த தண்டனை என்னவென்பது யாருக்கும் தெரியவில்லை என்றால் அந்தத் தண்டனைக் கொடுக்கப்படவில்லை என்பது தான் பொருள்!

சரி,  மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறிவிட்டது! இப்போது மலேசியர்களின் நிலை என்ன? "விடுங்கப்பா! ஏதோ சின்ன பசங்க! தெரியாம செய்திட்டாங்க! அதைப் பெரிசு படுத்தாதீங்க!" என்று சொல்லப் போகிறோமா? அப்படியும் சொல்ல யாரும் முன்வரப் போவதில்லை!

நம் வீட்டுப் பிள்ளையாக இருந்தால் கண்டிக்கலாம்! ஊரான் வீட்டுப் பிள்ளை! அவனைக் கண்டித்தால் அப்பன் சண்டைக்கு வருவான்! இது ஒரு சிக்கலான பிரச்சனை!

இன்றைய தலைமுறையினர் இணையத்தைப் பொறுத்தவரை பலவற்றைத் தெரிந்து வைத்திருக்கின்றனர். நல்லதைக் கற்கும் ஆர்வம் குறைந்து அல்லாததைக் கற்கும் ஆர்வம் அதிகம்!  படித்துக் கொடுக்க யாரும் ஆசிரியர்கள் தேவையில்லை! அவர்களாகவே  கற்றுக் கொள்கின்றனர்!

ஆனால் எது நடந்தாலும் சரி. இது போன்ற செயல்களை மன்னிக்க முடியாது. அவர்கள் செய்கின்ற இந்த செயல்  ஆயிரக்கணக்கான மாணவர்களைப் போய் சேரும் என்பதை அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள் வீட்டுப் பிள்ளைகள் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள்! இவர்களால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட முடியும்.

முதல்முறை செய்தி வந்த போது ஒரு நடவடிக்கையும் இல்லை! இந்த முறை மட்டும் அப்படி என்ன பெரிசா வந்துவிடப் போகிறது? பார்ப்போம்! 

மலிவு வீடுகள் என்ன ஆயிற்று?

 

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலிவு வீடுகள் என்பது மிகவும் பேசப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது எனலாம்.

உழைக்கும் ஏழை  மக்களுக்கு மலிவான விலையில் கட்டப்பட்ட வீடுகள் அவை. ஆனால் பெரும்பாலான வீடுகள் ஏழை மக்களை விட ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என்று பலர் பங்குப் போட்டுக் கொண்டனர்! இவர்களில் பலர் அவர்களது வீடுகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தனர்! ஆனாலும் அது நடந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக இந்த வீடுகள் தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய நிலையில் வீடு என்பது பணக்காரர்கள் அல்லது மேல்தர நடுத்தர குடும்பத்தினரின் தான் வாங்க முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. வருங்காலத்தில் வீடுகள் வாங்குபவர்கள் பணக்காரர்கள் அல்லது மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர். அப்படியென்றால் ஏழைகள் வீடு பற்றி கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

அதற்காக ஏழைகளுக்கு வீடு  வேண்டாம் என்று அவர்களை ஒதுக்கிவிட முடியாது.  மனிதன்  தங்குவதற்கு "தலைக்கு  மேல் ஒரு கூரை தேவை" என்பது நமது நம்பிக்கை. மனிதனின் முக்கியத் தேவைகளில் வீடும் ஒன்று.

நமக்குச் சொந்த நிலம் இருந்தால் அங்கே நம் வசதிக்கேற்ப எப்படியோ நாம் விரும்பியபடி ஒரு வீட்டைக்கட்டிக்  கொள்ளலாம். அதற்கும் நமக்குக் கொடுப்பனை இல்லை. ஒரு சிலருக்கு இருக்கலாம். இருந்தால் அவர்கள் வீட்டுக்காக அலைய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வாழத் தெரிந்தவர்கள்.

மலிவு  விலை வீடுகளை அரசாங்கம் நிராகரிக்கக் கூடாது என்பது தான் நமது கோரிக்கை. ஏழைகளாக இருந்தாலும் எல்லாக் காலங்களிலும் அவர்கள் வாடகை வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  குடும்பத்தைக் காப்பாற்ற வேலை வேண்டும் அதே போல அந்தக் குடும்பம் தங்கிக் கொள்ள ஒரு வீடு வேண்டும்.

அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ மலிவு விலை வீடுகள் கட்ட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே வீடு என்றால் அந்த பணம் படைத்தவர்கள் வாழ உழைப்பவர்கள் ஏழைகள் தான். பணக்காரர்கள் வாழ்க்கையில் உயர ஏழைகள் தான் உழைக்கின்றனர். உழைக்கும் அந்த ஏழைகள் வாழ, தங்க அவர்களுக்கு வீடு என்பது தேவையான ஒன்று. 

மலிவு விலை வீடுகள் என்பது அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது என்பதே அரசாங்கத்திற்கு நமது கோரிக்கை!

Thursday 14 October 2021

சிறப்பு விசாரணை

திருமதி இந்திராகாந்தியின் வழக்கை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கிறோம்.

சுமார் 12 ஆண்டுகளாக தனது மகளுக்காக காத்துக்கிடக்கும் தாய் அவர். இது நாள் வரை அவரது மகள் பிரசன்னாவை அவரால் பார்க்க முடியவில்லை.  மகளைக் கடத்திக் கொண்டு போனவர் அவரது தந்தை பின்னர் இஸ்லாத்திற்கு மாறியவர்.

பிரசன்னாவின் தந்தையை  கைது செய்ய நீதிமன்ற உத்தரவிட்டும் ஒன்றும் ஆகவில்லை!  காவல்துறையினர் தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்து விட்டனர்!

தாய் இந்திராகாந்தி எத்தனையோ முயற்சிகள் எடுத்தும்  அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இப்போது அவருக்கு இருக்கும் இன்னொரு வழி:   அவரது பிரச்சனையை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக்  குழுவை அமைக்க வேண்டும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரியை   அவர் இப்போது வலியுறுத்தி வருகின்றார்.  இதன் மூலம் காவல்துறையின் செயலற்ற தன்மைக்கும் இயலாமைக்கும்  என்ன காரணம் என்பது தெரிய வரும்.

ஒரு காலக் கட்டத்தில் "இதோ மகள் வந்துவிடுவார்! கொஞ்சம் பொறுத்திருங்கள்!" என்றெல்லாம் ஆசை காட்டினர். நம்பிக்கையான வார்த்தைகளால் உறுதி அளித்தனர். ஆனால் அத்தனையும் வெற்று வாக்குறுதிகள்  என்பது பின்னர் தெரியவந்தது! இந்த செய்திகள் அனைத்தும் பத்திரிக்கைகளில் வெளிவந்து அமர்க்களப்பட்டன!

ஒரு தாயை ஏமாற்றுவதற்கு என்ன என்ன வழிகளையெல்லாம் காவல்துறை பின்பற்றியது என்பதை இந்த நாடே அறியும்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய கட்டிடத்திலிருந்து  மர்மமான முறையில் இறந்து போன தியோ பெங் ஹாக் மரணமும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இதுவும் 12 ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற தீர்க்கப்படாத ஒரு வழக்கு.

தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிம்  முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் போன்றவர்களின் வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது போல இந்திராகாந்தியின் வழக்கையும் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே.

நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவைகளுக்கும்  ஒரு தீர்வைக் காண முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

இந்திராகாந்தி பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்பட இன்றைய அரசாங்கம் பிரச்சனையைக்  கையில் எடுக்க வேண்டும் என நாமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.