Thursday 29 November 2018

வழக்கறிஞர்களின் அராஜகம்...!

சீபீல்ட் ஆலய விவகாரத்தில் ஏற்கமுடியாத ஒரு செய்தி. மேம்பாட்டாளர்களின் வ்ழக்கறிஞர்களே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறியிருப்பதானது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

படித்தவர்கள், பண்புள்ளவர்கள் என்று பொது மக்களால்   புகழப்படும் இந்த வழக்கறிஞர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய எப்படி இவர்களால் முடிந்தது என்கிற கேள்விகள் இப்போது நாடெங்கிளும்  ஒலித்துக் கொண்டிருக்கிறது!

குண்டர் கும்பல்களை ஏவி  காரியங்களைச்  சாதிக்க நினைப்பது படித்தவர்கள் செய்யக்கூடிய வேலை அல்ல! அரைகுறை அரசியல்வாதிகளுக்குத் தான் குண்டர் கும்பல்கள் தேவை  தங்களது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு!  இப்போது வழக்கறிஞர்களும்  இதே  பாணியைத் தான்  பின் பற்றுகிறார்கள் என அறியும் போது  மகாகவி பாரதி சொன்னாரே: "படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்"  என்பது தான்  ஞாபகத்திற்கு வருகிறது.  அவன் மட்டுமா போவான்? கூடவே அவன் குடும்பமும் சேர்ந்து போகும்!

கோவி.ல் என்றாலே புனிதம்.  மாற்று மதத்தினரை சில சமயத் தலங்களில் அனுமதிப்பதில்லை.  

சீபீல்டுஆலயத்திலோ நடந்தது வேறு. குண்டர் கும்பலை வைத்து  ஆலயத்தை தகர்க்கும்  முயற்சியில்  ஈடுபட்டிருக்கின்றனர். அதுவும் அந்த குண்டர் கும்பல் மலாய்  இளைஞர்கள் என்று தெரியவரும் போது அது பிரச்சனையைத் திசை திருப்பிவிட்டது. காரணம்  மலாய்  இளைஞர்கள் இந்து  கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள்  வலுகட்டாயமாக உள்ளே  புகுந்து  கோவிலில் உள்ள சிலைகளை உடைத்திருக்கின்றனர். அதன் பின்னர்  என்ன  நடந்தது  என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.  இரகசியம் ஒன்றுமில்லை.

ஆனாலும்  இங்கு  நாம்  கவனிக்க வேண்டியது மலாய்  இளைஞர்களை வழக்கறிஞர்கள் அடாவடித்தனமான வேலைக்கு அமர்த்தியிருப்பது. இப்போது இந்தப் பிரச்சனை  கட்டுப்பாட்டில்  இருந்தாலும் இவர்களுடைய உந்துதலால் தான் மலாய் இளைஞர்கள் இந்தத் தவறை செய்திருக்கின்றனர். பொதுவாகவே வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி அல்லது அரசியல்வாதிகளாக இருந்தாலும்  சரி  கூலிக்கு  ஆள் அமர்த்தி தங்களது காரியங்களைச்  சாதிக்க  நினைப்பது  மிகவும்  கேவலமான  செயல். 

அந்த இளைஞர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்களின் போக்குவரத்துக்குப் பணம் கொடுத்து  ஒரு  கோவிலைப்  போய்  உடையுங்கள் என்று  உத்தரவிடுவது  படித்தவர்களின் அநாகரிகச் செயல். இதற்கு இவர்கள் பிச்சையே  எடுக்கலாம்.  அப்பன் பெயரைக் கெடுத்து, அம்மா பெயரைக்  கெடுத்து  இப்படி  ஒரு  வாழ்க்கை  வாழ்வது  அவசியம் தானா என்று  கேள்வி  எழுப்பினால் ஒன்றும் தவறில்லை!

வெகு விரைவில்  நீதிமன்றத்தில் இவர்களின்  முகத்திரை  கிழியும்  என எதிர்பார்க்கலாம்.

நடக்கட்டும்!  நீதியே வெல்லும்!

Tuesday 27 November 2018

அமைதி காக்க..!

சீபீல்ட் ஆலயப் பிரச்சனை ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியிருக்கிறது. 

அடிதடி, அடாவடித்தனம், வெட்டுக்குத்து என்று அனைத்தும் நிறைவேறியிருக்கின்றன. மிகவும் வேதனைக்குறிய சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

கேட்பதற்கு எதுவும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.

ஒன்றை மட்டும் நினவுபடுத்தலாம். நாம் ஓரு ஒற்றுமையற்ற சமூகம்.  சுயநலம் அதிகம். பொது நலத்தைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள். இவைகள் தான் மெத்த படித்தவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம்!  சுயநல வாதிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம்!

இந்த ஆலய விவகாரத்தில் நமது பக்கம் நியாயம் இருந்தாலும் ஒரு சில காரணங்களைக் காட்டி நமது பக்கம் அந்த நியாயம் எடுபடாமல் போய்விடும். இது நாள் வரை நமது பக்கம் உள்ள நியாயங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் வரலாறு. இனியும் அது தொடரலாம். காவல்துறை சொல்லுவது தான் சட்டமாகக்  கருதப்படும்.

பல ஆலயங்கள் இப்படி தெருப் போராட்டத்திற்கு வந்து விட்டன.  இந்த நேரத்தில் ஒன்றை நினைவு படுத்துகிறேன். யாழ்ப்பாணத் தமிழர்களின் கோவில்களில் இது போன்ற பிரச்சனைகள் இல்லை. செட்டியார் கோயில்களில் இந்தப் பிரச்சனைகள் இல்லை.

ஏன் நமக்கு மட்டும்?  நமது கோயில்களின் வரலாறு தோட்டப்புறத்தில் இருந்து ஆராம்பமாகிறது.  அந்தக் கோயில்களின் உரிமை நம்மிடம் இல்லை.   அன்று நமது சாமிவேலு மட்டும் கொஞ்சம் விழிப்புடையவராக இருந்திருந்தால் அதனை மாற்றி அமைத்திருக்கலாம். கோயில்களை முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்திருக்கலாம். பள்ளிகளைக் கூட அரசாங்கத்தில் பதிவு செய்திருக்கலாம். எதுவும் செய்யவில்லை!  அது நம்முடைய துரதிர்ஷ்டம்!

அன்று நமது தலைவர்கள் அசட்டையாக இருந்ததால் இன்று நாம் அரசாங்கத்துடம் மோத வேண்டிய சூழல். 

இந்த சீபீல்ட்  ஆலயப் பிரச்சனையில் நாம் என்ன செய்யலாம்?  ஒன்று அந்த கோயில் நிலத்தை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நிலத்தை வாங்கி கோயில் சொத்தாக மாற்றி அமைக்க வேண்டும்.  சொந்தமாக்கிக் கொள்ள முடியாத சூழல் என்றால்  கோயிலை வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல மாற்று இடம் காண வேண்டும். வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. நிலம் யார் பெயரில் இருக்கிறதோ அவன் தான் அதன் உரிமையாளன்.  அவனை நம்மால் ஒன்று செய்ய முடியாது! சட்டம் அப்படித்தான் சொல்லுகிறது. நமக்கு நாலு அமைச்சர்கள் இருந்தாலும் அல்லது நாற்பது அமைச்சர்கள் இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது!  இறுதி தீர்ப்பு என்பது நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் அமைதி காக்க வேண்டும். நமது நீதிமன்றம், நமது தலைவர்கள், நமது பிரதமர் - இப்படிப் பலர் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கின்றனர்.  எதையாவது சொல்லி இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டு போவது நமக்கு நல்லதல்ல. பிரச்சனை ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இனி வருங்காலங்களிலாவது இருக்கின்ற கோயில்களை முறையாக பதிவு செய்யுங்கள்.  சுயநலம் வேண்டாம். பொதுநலம் நாடுங்கள்.

அமைதி காக்க என்பதே நமது வேண்டுகோள்!

Friday 23 November 2018

வேதமூர்த்தி பதவி விலகலா...!

பொதுவாக அரசியலில் முட்டாள்கள் அதிகம்! அதைவிட மூடர்கள், அறிவற்றவர்கள்  இன்னும் அதிகம்!

இது இன்று நேற்றல்ல, எல்லாக் காலங்களிலும் இதே நிலை தான்! ஏதோ ஒரு பிரச்சனை! உடனே "பதவி விலகு!" என்னும் ஓங்கி ஒலிக்கும் சத்தம்!

அரசியல்வாதிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல! அது எங்கேயாவது ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! இந்த நிமிடமும் நமது நாட்டில் அது ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது!

காரணம் அரசாங்கத்தில் உள்ளோர் இந்த இசர்ட் (ICERD)  மூலம் பூமிபுத்ராக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று   சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒரு சில அரசியல்வாதிகளிடம் இல்லை!

உண்மையைச் சொன்னால் "எங்களுக்குக் கிடைக்கும் எல்லாச் சலுகைகளும் போய்விடுமே" என்று அவர்கள் அழவில்லை! அது நடக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தப் பக்காத்தான் அரசாங்கம் எதனைக் கொண்டு வந்தாலும் அதனை   எதிர்த்தே தீர வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர்! அதைத் தான் அவர்கள் செய்கின்றனர்!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொ.வேதமூர்த்தி "இசர்ட்" க்கான விளக்கங்களைக் கொடுத்து அது நாட்டுக்கு நன்மையைக்  கொண்டு வரும் என்று சொன்னதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம்!

வேதாவை பதவி விலகச் சொல்லுவதற்கு இது ஒன்றும் மட்டும் தான் காரணமா? இல்லை! வேறு பல காரணங்களும் உண்டு. சமீப காலங்களில் இந்தியர்களுக்காக தொடர்ந்தாற் போல குரல் கொடுத்து வந்தவர் வேதமூர்த்தி. தானைத் தலைவன் என்றால் அது வேதமூர்த்தி தான். ஹின்ராப் போராட்டத்தின் போது பலர் வந்தார்கள். பின்னர் பின் வாங்கி விட்டார்கள்! ஆனால் வேதா மட்டுமே தொடர்ந்து வந்தவர். பாரிசான் ஆட்சியின் போதும் பிரதமரிடம் பேசியவர்.  பக்காத்தான் ஆட்சி அமைப்பதற்கும் உறுதுணையாக இருந்தவர். அவரே தொடர்ந்தாற் போல இந்தியர்களின் பிரச்சனையைக் கையில் எடுத்தவர். கடந்த பொதுத் தேர்தலில் 85 விழுக்காடு இந்தியர்களின் வாக்குகளைப் பக்கத்தானின் பக்கம் திருப்பியவர்.

இது ஒன்றே போதும் எதிர்தரப்பினர் அவரை எதிர்ப்பதற்கு. காலங்காலமாக இந்திய்ர்களின் வாக்குகளை அனுபவித்து வந்தவர்கள்  தீடீரென இந்த மாற்றத்திற்குக் காரணமான  வேதாவை வெறுப்பதின் காரணம் இப்போது புரியும். 

இன்றைய நிலையின்  வேதாவின் உதவி இந்திய மக்களுக்குத் தேவை. அவர் அப்படி எல்லாம் பதவி விலகி விட  முடியாது.  அவர் இந்தியர்களின் நலனைக் காப்பதற்காகவே பதவியில் அமர்த்தப்பட்டவர்,

அவர் பதவியில் தொடர்வார்! தொடர்வார்! தொடர்வார்!

Thursday 22 November 2018

வாரியத் தலைவர்கள் யார்..?

நாளிதழ் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. தமிழ்ப்பள்ளிகளில் பள்ளியின் வாரியத் தலைவர்களாக தகுதிப் பெற்றவர்கள்  யார்?

ஜொகூர், சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் நடந்த நிகழ்வு ஒன்றில் அந்தப் பள்ளியின் வாரியத் தலைவரைப் பற்றியான செய்தி:

1) வாரியத் தலைவர் 15 ஆண்டுகளாக அந்தப் பதவியில்         இருக்கிறார்.

2) 'இரு'க்கிறார்! மற்றபடி எதுவுமில்லை!

3) பள்ளி வாரியம் கொண்டு வரும் நல்ல  திட்டங்களுக்கும்   தடையாக இருக்கிறார்.

4) பள்ளியின் மேம்பாட்டுக்காக எதனையும் செய்வதில்லை!

5) ஒரு நவீன மண்டபம் கட்டுவதற்கான பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை! தடையாக இருக்கிறார்!

இந்தச்  செய்தியைப் படித்த போது மனம் வலிக்கிறது. இப்போது தான் முதன் முதலாக இது போன்ற ஒரு செய்தியைப் படிக்கிறேன். 

இது போன்ற வாரியத் தலைவர்கள் பலர் இருக்கலாம். வெளியே தெரியவில்லையே தவிர நமக்குத் தெரியாமல் பலர் இருக்கலாம்.

அப்படி என்றால் இந்த வாரியத் தலைவர் பதவிக்கு யார் தகுதி படைத்தவர்கள்? மேற் குறிப்பிட்ட பள்ளி மேம்பாடு அடைய வேண்டுமானால் அந்தத் தலைவர் பதவி விலக வேண்டும். அது நடக்கும் காரியமா, தெரியவில்லை! காரணம் அவர் முன்னாள் ஏதேனும் அரசியல்வாதியுடன் தொடர்பு உள்ளவராக இருக்கலாம்! இப்போது அவர் பலம் இழந்தவராக இருந்தால் அது சாத்தியம்.

தகுதி பெற்றவர்கள் யார் என்றால்  முதலில் அவர் தமிழ்ப்பள்ளியில் படித்தவராக இருக்க வேண்டும். தமிழ் இன உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். மொழிப்பற்று உள்ளவராக இருக்க வேண்டும்.

இப்போதைய நிலை என்ன?  இயக்கங்கள், மன்றங்கள்  - இவைகளில் உள்ள தொண்டர்களைப் பாருங்கள். அனைவரும் தமிழர்கள். ஆனால் அந்த இயக்கங்களின் தலைவர்களைப் பாருங்கள். ஒருவனும் தமிழனாக இருக்க மாட்டான்! ஆனால் அவன் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவான்! இங்கிருந்து தான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. தமிழைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை! தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு பற்றி அவனுக்குக் கவலையில்லை. இன்றைய நிலையில் தமிழ் மொழிக்கு எதிராக இருப்பவர்கள் இந்தத் தலைவர்கள் தான்! தலைமை ஆசிரியர்கள் தான்!

இவர்களை எப்படி களையெடுப்பது என்பது பற்றி  யோசிக்க வேண்டும்.

வாரியத் தலைவர்கள் இனி தமிழராகவே இருக்க வேண்டும்! அதனை உறுதி செய்வோம்!

Tuesday 20 November 2018

நேர்வழி தான் தேவை...!

ம..இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் மீது ஒரு குற்றச்சாட்டு. விமான நிலயத்தில் வி.ஐ.பி. அறையைப் பயன்படுத்திய போது அவர் காலில் சிலிப்பர்  அணிந்து  கொண்டு போனார் என்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஒரு குற்றச்சாட்டை கொண்டு வந்தார். 

அப்போது இன்னொரு ம.இ.கா. தலைவர்,   "விக்னேஸ்வரனை கேட்கிறீர்களே இதே கேள்வியை டையிம் சம்சுடீனை பார்த்துக்  கேட்பீர்களா"  என்று எதிர் கேள்வியை எழுப்பினார்!

அது தான் ம.இ.கா.! நான் தவறு செய்வேன். என்னை யாரும்  கேள்வி கேட்கக்  கூடாது! அப்படி கேட்டால் நீங்கள் மட்டும் யோக்கியமா என்று எதிர் கேள்வி கேட்பேன்! அதிலும் அடாவடித்தனமான கேள்வி!

இதில் யார் சரி யார் தவறு என்பதல்ல கேள்வி. தவறு செய்தால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் நாங்கள் இப்படித்தான் செய்தோம். யாரும் எங்களைக் கேள்வி கேட்கவில்லை. இப்போது மட்டும்  என்ன கேள்வி என்று கேட்பது சரியான பதிலாகாது!

நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு நடந்து கொள்ள வேண்டும் என்றால் பொது மக்கள் பயன்படுத்தும் அறையைப் பயன்படுத்துங்களேன். என்ன குறைந்து போய்விட்டது?  நீங்கள் குறைந்து போகவில்லை,  நாட்டிம் முக்கியமான மனிதர் என்று நீங்கள் நினைத்தால் ஏன் நாட்டின் சட்டதிட்டங்களைப் பின்பற்றக் கூடாது?  

ஒரு கட்சியின் தலைவர் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.  மேல்சபை சபாநாயகருக்கென்று ஒரு மரியாதைஉண்டு. அதனால் தான் அதற்கு ஏற்றவாறு உடைகளை அணிய வேண்டியுள்ளது. அப்படி அணியாவிட்டால் பதவிக்கு மரியாதை இல்லை.  ஏன் வெளியில் அவர் சபாநாயகர் இல்லை தான். அதற்காக பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ள முடியாது! காரணம் அவர் சபாநாயகர் என்கிற அந்த கௌரவம் அவர் பதவியில் இருக்கும் வரை இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கேற்றாற் போல, அந்தப் பதவிக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டியுள்ளதால், எந்நேரமும் தனது உடைகளில், நடையுடை பாவனைகளில் கவனம் செலுத்தித்தான் ஆக வேண்டும்.

இன்னும் கொஞ்சம் நாளைக்குத் தானே இந்தப் பதவி என்று அலட்சியம் காட்ட முடியாது. பதவியில் இருக்கும் வரை அதன் கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும்.
 
தலைவர்கள் என்பவர்கள் மற்றவர்களால் பின்பற்றப்பட வேண்டியவர்கள்.  தயவு செய்து அவர்களைத்   தவறான பாதைக்கு அழைத்து செல்லாதீர்கள். நீங்கள் காட்டுகின்ற வழியைத்தான் அவர்கள் பின்பற்றுவார்கள். உங்கள் வழி நேர்வழி என்றால் தொண்டர்களின் வழியும் நேராக, நேர்மையாக இருக்கும். இல்லையெனில் பாதை திசை மாறிப் போகும்.

தலைவர்களே! நேர்மை என்னும் நேர்வழியைத் தேர்ந்தெடுங்கள்! அது தான் அனைவருக்கும் நல்லது!

Monday 19 November 2018

ஜ.செ.க. இனவாதக் கட்சியா..?

பொதுவாக ஜனநாயக செயல் கட்சி என்றாலே அது ஒரு இனவாத கட்சி என்பதாகவே இது நாள்வரை தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. அதுவும் மொழி என்று வந்து விட்டால் அந்தக் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளாது என்பதும் உண்மை.

சிலாங்கூர் மாநில சுல்தான் அவர்கள் சமீபத்தில்  சிலாங்கூர் அரசாங்கத்திற்கு உத்திரவு ஒன்றினை  பிறப்பித்துள்ளார்.


அதாவது சாலை வழிகாட்டி  பலகைகள் இனி தேசிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  அது சுல்தானின் உத்தரவு. நாம் அது பற்றி ஒன்றும் கருத்துரைக்க முடியாது.

ஆனால் இந்த இரண்டு மொழி வழிகாட்டிகளை நான் எதிர்பார்க்கவில்லை. சீனம், தேசிய மொழி என்பது கூட என்னைப் போன்றவர்கள் அறியாமல் இருக்கிறோம்!  ஜ.செ.க. நேர்மையான ஒரு கட்சி என்றால்  இந்தப் ப்லகைகள் மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தமிழையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.  இவர்களின் ஆளுகைகைக்கு உட்பட்ட  மற்ற இடங்களில் இப்படித்தான் செயல்படுகிறார்களா என்பதும் தெரியவில்லை.

அம்னோவை பார்த்துப்  பயப்படுகின்ற போக்கு ம.இ.கா. வினரிடைய நிலவி வந்தது.  அதுவே ஜ.செ.க. தலைவர்களைப் பார்த்துப் பயப்படுகின்ற போக்கு இந்தியத் தலைவர்களுக்கும் இருப்பதாகவே தோன்றுகிறது! எல்லாம் பதவி செய்கின்ற பம்மாத்து வேலைகள்! நமது இந்திய தலைவர்களிடமிருந்து இது போன்ற இந்திய மக்களை ஏமாற்றும் வேலைகளை நாம் எதிர்பார்க்கவில்லை!

நமது  ஜ.செ.க. இந்திய தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ம.இ.கா.காரன் படிக்காதவன் என்பதால் அம்னோ வைப் பார்த்து கூனிக்குறுகினான்!  ஆனால் நீங்கள் அப்படி அல்ல. அனைவருமே படித்த பட்டதாரிகள்.  பெரும்பான்மையோர் வழக்கறிஞர்கள். இன்னும் நல்ல கல்வித்தரம் உடையவர்கள். நீங்களும் இந்தப் பதவிக்காக  இந்நாட்டு இந்தியர்களை கூனிக் குறுக வைக்காதவர்கள்!

ஜ.செ.க. சீனர்களின் கட்சி என்பதற்காக நீங்களும் கூனிக்குறுக வேண்டாம்!  நீங்கள் கூனிக்குறுகினால் நாங்கள் எப்படி தலை நிமிர முடியும்?

Sunday 18 November 2018

டாக்டர் ஸ்ரீராம் தான் பொருத்தமானவர்..!

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் டாக்டர் ஸ்ரீராம் வேட்பாளாராக நிறுத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் விருப்பமாகும். அங்குப் போட்டியிட வேறு ஒரு வேட்பாளரைத் தேடிக் கொண்டிருப்பது சரியான தீர்வாக இருக்காது என்பதை கட்சியின் தலைமைத்துவம் உணர வேண்டும். 

ரந்தாவ் என்பது கணிசமான இந்தியர்களைக் கொண்ட தொகுதி. ரந்தாவ் தொகுதி என்றாலே அது இந்தியர்களின் தொகுதி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒரு வேளை தேர்தல் எல்லை சீரமப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ரந்தாவ் என்கிற பெயர் இந்தியர்களோடு ஒட்டிக் கொண்ட ஒரு பெயர். இதற்கு முன்னர் ஆளுங்கட்சியின் சார்பில் இந்தியர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஒரு கால கட்டத்தில் அய்யாக்கண்ணு, வேலு, முத்துப்பழனியப்பன் போன்றோர் ம.இ.கா. வேட்பாளர்களாக இதே தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர்.

அது மீண்டும் இந்தியரின் தொகுதியாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது ஒன்றும் கேலிக்குறிய விஷயமோ அல்லது எதிர்ப்பார்க்கக் கூடாத விஷயமோ அல்ல. நடந்து முடிந்த தேர்தலில் எந்த ஒரு மலாய்க்காரரும் வேட்பாளாராக நிறுத்த முடியாத  சூழலில் பி.கே.ஆர். டாக்டர் ஸ்ரீராமை தேர்ந்தெடுத்து நிறுத்தியது என்பதை மறந்து விட வேண்டாம். பொதுத் தேர்தலில் அவர் ஏமாற்றப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.  நீதிமன்ற போராட்டங்களுக்குப் பின்னர் தான் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது.

இப்போது அந்தத் தொகுதியில்  போட்டியிட 'நீயா, நானா' போட்டிகள் நடக்கலாம். ஆனால் அந்தத் தொகுதிக்காக பெரும்பாடுப்பட்ட டாக்டர் ஸ்ரீராமை அவ்வளவு எளிதில் தூக்கி வீசுவது பி.கே.ஆருக்கு நல்லதல்ல.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் குறிப்பிட வேண்டும். போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியை இப்போது இந்தியர்களின் கைகளிலிருந்து போய்விட்டது.  குறைந்து போன ஒரு நாடாளுமன்ற தொகுதியை குறைந்த பட்சம் ஒரு சட்டமன்ற தொகுதியை வைத்து ஈடுகட்டலாம். எல்லாம் பி.கே.ஆர் கையில்.

பி.கே.ஆர். சார்பில்  டாக்டர் ஸ்ரீராமே வேட்பாளராக நிறுத்தப்பட  வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. 

எங்களது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். 

Saturday 17 November 2018

மீண்டும் ரந்தாவ் சட்டமன்ற தேர்தல்...!

ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கு  மீண்டும் தேர்தல்! 

கடந்த 14-வது  பொதுத் தேர்தலில் பக்காத்தான் சார்பில் ரந்தாவ் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீராம் தொடுத்த வழக்கில்  நீதிமன்றம் அவருக்குச் சார்பான தீர்ப்பை வழங்கியதன் மூலம் வெற்றி பெற்றதாக முன்னர் அறிவிக்கப்பட்ட முகமது ஹாசானின் வெற்றி செல்லாது எனக் கூற,  ரந்தாவ் தொகுதியின் தேர்தல் ஒரு முடிவுக்கு வந்தது!  மீண்டும் அங்கு இடைத் தேர்தல் நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!

இங்குப் போட்டியின்றி வெற்றிபெற்றதாக பொதுத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்டவர்  முன்னாள்  நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் முகமது ஹாசான். ஆள் பலம், அதிகார பலம், பொருளாதார பலம் என்று இரும்பு மனிதராக வலம் வந்தவர் முகமது ஹாசான்.  ஆனாலும் ஏமாற்றித் தான் வெற்றி பெற வேண்டும் என்னும் சூழலில் அவர் இருந்தார்! போட்டியிட்டால் தோல்வியைத் தழுவ  வேண்டும் என்பதை அப்போதே அவர் அறிந்தவர்!

இப்போது மீண்டும் ஒரு இடைத் தேர்தல்.  கடந்த ஆறு மாதங்களில் நான்கு இடைத் தேர்தல்களைச் சந்தித்து விட்டோம். இப்போது நான்காவது இடைத் தேர்தல். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இது இரண்டாவது இடைத் தேர்தல்.

அம்னோ மீண்டும் தனது முன்னாள் மந்திரி பெசாரான முகமது ஹாசானை அவருடைய தொகுதியில் நிறுத்தும் என எதிர்பார்க்கலாம். இப்போது தான் அவர் தனது உண்மையான பலத்தை நிருபித்தாக வேண்டும்! பொறுத்திருந்து பார்க்கலாம்.

பி.கே.ஆர் சார்பில் யார் அந்த வேட்பாளர் எனக் கட்சி முடிவு செய்யும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் டாக்டர் ஸ்ரீராமை அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கி எறிந்துவிட முடியாது. டாக்டர் ஸ்ரீராம் அந்தத் தொகுதியில் தனது அயரா உழைப்பின் மூலம் நல்ல செல்வாக்கைப் பெற்றவர். அது மட்டும் அல்ல. ரந்தாவ் தொகுதி நீண்ட காலம் இந்தியர்களின் தொகுதி என பெயர் பெற்றது.

மற்றவர்கள் போட்டியிடுவதை விட டாக்டர் ஸ்ரீராம் போட்டியிடுவதே சிறப்பு. யார் அங்குப் போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம் என்னும் நிலை இப்போது. ஆனாலும் முன்பு போலவே அந்த இந்தியப் பாரம்பரியம் தொடர வேண்டும். என்பதே நமது எதிர்பார்ப்பு. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு இந்திய வேட்பாளரை இடைத் தேர்தலின் மூலம் நாம் இழந்தோம். இந்தச் சட்டமன்றத் தொகுதியிலும் நாம் இழந்து விட முடியாது. 

அதனால் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் ஸ்ரீராம் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அதுவே நமது எதிர்பார்ப்பு.

பி.கே.ஆர். நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்!

Tuesday 13 November 2018

உணவகங்களில் புகை பிடிக்கத் தடை..!

உணவகங்களில் புகைப் பிடிப்பதை அடுத்த ஆண்டு  முதல் அரசாங்கம் தடை செய்வதை  வரவேற்கிறோம்.

தடை செய்ய வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை.  உணவகங்களில் புகைப் பிடிப்பது என்பது அராஜகமான செயல். உணவகங்களுக்கு வருபவர்கள் பெரியவர்கள் மட்டும் அல்ல ; ஆண் பிள்ளைகள் மட்டும் அல்ல; பெண்கள், குழந்தைகள் இன்னும் புகைப் பிடிக்காத ஆண்களும் உண்டு, முதியவர்களும்  உண்டு. இவர்களுக்கெல்லாம் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வரவேற்கிறோம்!

புகைப் பிடிப்பது  என்பது மிகவும் அராஜகமான - மிகவும் காட்டுத்தனமான - ஒரு செயல்.  மக்களை அலட்சியப் படுத்துகின்ற ஒரு செயல். பாவப் புண்ணியம் பார்க்காத ஒரு செயல். மற்றவர்களை மனிதராகக் கூட பார்க்காதவர்கள் இந்தப் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்! பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ளுவது என்கின்ற நாகரிகம் தெரியாத நாசகாரக் கூட்டம் இந்த புகைப் பிடிக்கும் கூட்டம்!

உணவகங்கள் சொல்லுகின்ற காரணங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. உணவகங்கள் சிகிரெட்டுக்களை வைத்துத் தான் பிழைக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. சிகிரெட் விற்பனை செய்யாத உணவகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களுக்கும் வியாபாரம் நடக்கத்தான் செய்கின்றது.

உணவகங்கள்,  வாடிக்கையாளர்கள் உணவு உண்ண ஒரு சுகாதாரமான சூழலை  உருவாக்க வேண்டுமே தவிர உணவகங்களில் நரகத்தை உருவாக்கக் கூடாது. நெருப்போடும், அனலோடும் உணவு உட்கொள்ள வேண்டும்  என்கிற தலைவிதி வாடிக்கையாளர்க்கில்லை!

உணவகங்கள் கடுமையான எதிர்ப்புக்களைக் காட்டுகிறார்கள் என்றால் அவர்களை யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள் என நாம் நினைக்க வேண்டியுள்ளது. அது சிகிரெட் நிறுவனங்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை.

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அரசாங்கம் அமலுக்குக் கொண்டு வரும் இந்த நடவடிக்கையை நாங்கள் முழு்மனதுடன் ஆதரிக்கிறோம். புகை இல்லா உணவகங்களே நமக்குத் தேவை! தடை தடையாகவே இருக்கட்டும்!

அமைச்சரவையில் மாற்றமா...?

அமைச்சரவையில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா? மாற்றங்கள் வருமா?  என்றெல்லாம் காற்றுவாக்கில் வருகின்ற செய்திகள்.

செய்தியில் உண்மை இருக்குமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பெரும்பாலும் காற்று வாக்கில் வருகின்ற செய்திகள் பின்னர் உண்மை செய்திகளாக மாறுகின்றதை நாம் பார்க்கின்றோம்.

முதலில் அது வதந்தி பின்னர் அது நிஜம்!

உண்மையோ பொய்யோ  அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அப்படி ஒர் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் வழக்கம் போல நாம் கேட்க வேண்டியதை கேட்டுக் கொண்டு தான் இருப்போம்.  காரணம் பாதிக்கப்படுபவர்கள் நாம் தானே!

ஒரு கல்வித் துணை அமைச்சர் பதவி நமக்குத் தேவை என்பதாக பக்கத்தான் அரசாங்கம் எப்போது அமைந்ததோ அப்போதிருந்து நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

ஏற்கனவே நாம் வெறுத்து ஒதுக்கிய பாரிசான் அரசாங்கம் கூட ஒரு கல்வித் துணை அமைச்சர் பதவியை இந்தியர் ஒருவருக்குக் கொடுத்ததை நாம் மறுக்க முடியாது. அது ஒரு பொம்மை பதவி என்று சொன்னாலும் அந்தத் துணை அமைச்சரோடு நமது கல்வியாளர்கள் அவரோடு உட்கார்ந்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்ததை நாம் மறுக்க இயலாது.  

ஆனால் இன்றைய நிலை என்ன? கல்வி அமைச்சரோடு நமது கல்வியாளர்கள் உட்கார்ந்து பேச வாய்ப்பில்லை! அவருக்கு நேரம் இல்லை.  அப்படியே பேச வேண்டுமானால் அவரது உதவியாளர்களோடு தான் பேச வேண்டும். அந்தப் பேச்சு வார்த்தைகள் அவ்வளவு திருப்திகரமாக அமையாது என்பது நமக்கும் தெரியும். 

ஓர் அமைச்சர் அல்லது ஒரு  துணை அமைச்சர் - இவர்களோடு நேரடியாகப் பேசுவதென்பது என்பது வேறு.  அவர்களுடைய உதவியாளர்களோடு பேசுவதென்பது வேறு. இன்று சீனக் கல்வியாளர்கள் அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சீன துணைக் கல்வி அமைச்சரிடம்கொண்டுசெல்கின்றனர். அதைத்தான் சீனக் கல்வியாளர்கள் விரும்புகின்றனர். இந்தியக் கல்வியாளர்களும் அதைத்தான் விரும்புவர். 

நாங்கள் இந்தியர்களுக்கு நான்கு அமைச்சர் பதவி  கொடுத்து விட்டோம் என்று சொல்லி கைகழுவுகிற வேலை வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளுகிறோம். கல்விக்காக ஓர் அமைச்சர் கிடைக்கும் வரை அல்லது குறைந்தபட்சம்  கல்விக்காக ஒரு நாடாளுமன்ற செயலாளர்  கிடைக்கும் வரை  அல்லது பிரதமர்  துறையில் தமிழ்ப்பள்ளிகளுக்காக  ஒரு இணை அமைச்சர் கிடைக்கும்வரை-ஒன்றைச் சொல்லலாம்-இந்தியர்களின் கோரிக்கை  நிறைவேற்றப்படவில்லை என்று பக்கத்தான் அரசாங்கத்திற்கு ஆணித்தரமாக சொல்லலாம்.

நமக்கு வேண்டியதெல்லாம் இனி எந்த மாற்றம் வந்தாலும் இந்தியர்களுக்கு கல்வித் துறை சார்ந்த ஒரு பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் பக்கத்தான் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அமைச்சரவை மாற்றமா - எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Monday 12 November 2018

மீண்டும் ஜாகிர் நாயக்....!

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் - இப்போது மலேசிய பிரஜை -  என்னும் கம்பீரத்தோடு மீண்டும் ஊடகங்களில்  வலம் வர ஆரம்பித்திருக்கிறார்.

அவருக்கு பெர்லிஸ் மாநிலம் கைக் கொடுத்திருக்கிறது. பலவேறு இஸ்லாமிய அமைப்புக்கள் அவருடைய உரையைக் கேட்க  வரிசைப் பிடித்து நிற்கின்றன!

பெர்லிஸ் மாநிலம் ஏன் இப்படி ஒரு நிலையை எடுத்திருக்கிறது? மலேசியாவில் ஒரு சிறிய மாநிலமான பெர்லிஸ்,  சமய ரீதியில் சமீப காலத்தில்  மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை. காரணம் சொல்ல வேண்டுமானால் சமயக் கல்வி என்பது 'ஏனோ, தானோ' போக்கில் அல்லது சும்மா போகிற போக்கில் கற்பிக்கப்படுகிறது என்பது தான் உண்மை நிலை என்றே தோன்றுகிறது.

ஆமாம்.  பெர்லிஸ் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார், முன்னாள் பிரதமர் துறை  அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் - இப்படி பன்முகம் கொண்ட  டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம்  என்ன செய்தார் என்பதை நமது ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டன. ஒரு பதினைந்து வயது சிறுமியை  மானபங்கம் செய்தார் என்பதாக அவர் மீதுள்ள குற்றச்சாட்டு.

ஷாஹிடான் வகித்த பதவிகள் என்பது சாதாரணமானது அல்ல. பெர்லிஸ் மந்திரி பெசாராக (முதலமைச்சர்) நீண்ட காலம் இருந்தவர். அதாவது பெர்லிஸ் மாநிலத்தின் முதன்மை மனிதர். அந்த மாநிலத்தின் குடிகள் அனைவரும் அவருக்குக் கீழ் இருந்தவர்கள்.  அவர் தான் தலை.  தனது குடிமக்களுக்குத் தலைவராக இருந்தவர். 

ஒரு தலைவர் என்பவர் குடி மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்.  தலைவரே இப்படி என்றால் குடி மக்கள் என்ன செய்வார்கள்? அந்தச் சிறுமி முதலில் காவல்துறைக்குச் சென்றிருக்கிறார்.  பின்னர் வாபஸ் வாங்கியிருக்கிறார்.  இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்திருக்கும் என ஊகிக்கலாம். அவ்வளவு தான்.

இப்போது நமக்கு ஒன்று புரிந்திருக்க வேண்டும். ஜாகிர் நாயக் பெர்லிஸ் மாநிலத்தில் ஏன் சமயப் பிரச்சாரம் செய்யப் போயிருக்கிறார் என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். தலைமுதல் கால்பாதம் வரை சமயம் தலைகீழாக மாறிப் போயிருக்கிறது. அதனைச்  சரி செய்ய வேண்டும். அதற்குப் பொறுத்தமானவர் ஜாகிர் நாயக் என்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

ஜாகிர் நாயக்கின் சமயப் பிரச்சாரத்தை வரவேற்போம்! அவர் மூலம் பெர்லிஸ் மாநிலம் இழந்து போன தனது கௌரவத்தை மீண்டும் புத்துயிர்  பெற  அவரது சமயப் பிரச்சாரம் தேவை என உணர்கிறோம்.

வாழ்த்துகிறோம்!

கல்வி மீதான தாகம்...!

இந்தியாவின் கேரள மாநில மக்களின் கல்வித் தாகம் நம்மை வியக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பள்ளிக்கூடமே செல்லாத ஒரு பாட்டியின் கதையைக் கேளுங்கள். அவர் பெயர் கார்த்தியாயினி அம்மாள். வயது 96. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவருடைய வயது.

நம்மைப் போன்ற சராசரி மனிதன் என்ன சொல்வான்?  இந்த வயதில் படித்து என்ன கிழிக்கப் போகிறீர்கள்; காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது என்பது சராசரிகளின் எண்ணம். ஆனால் சாதனை செய்ய நினைப்பவர்களுக்கு வயது ஒரு தடையே அல்ல!

அரசாங்கம் அறிமுகப்படுத்திய முதியோர் கல்வியைத் தனக்கு ஒரு வாய்ப்பாக கருதினார்.  அந்த வகுப்பில் கலந்து கொண்டார். பரிட்சையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார்.  அதிக மதிப்பெண்களைப் பெற்று "நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மகராசி!" என்று நல்ல பெயரையும் எடுத்து விட்டார்!

கல்வி கற்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதிலும் படிக்கலாம். கல்வி கற்கலாம். இங்குத் திரும்பி பார்க்கிறேன். ஆறாம் வகுப்பு வரை பள்ளியில் படித்தவன் தன்னைப் படிக்காதவன் என்கிறான்! தனது பெயரை எழுதத் தெரியவில்லை என்கிறான்!  "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்பார்கள்.  அவனுக்கு அது புரியவில்லை, என்ன செய்வது?

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  பகத்சிங் அவர் சிறையில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருந்த போது கூட ஏதாவது புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பாராம்.  தூக்குத் தண்டனை நிறைவேற்றப் போகும் நேரத்தில்  அதிகாரிகளிடம் ஒரு பத்து நிமிடம் அவகாசம் கேட்டு அந்தப் பத்து நிமிடத்தில் ரஷ்ய புரட்சியாளர் லெனின் எழுதிய "அரசும் புரட்சியும்" என்னும் புத்தகத்தைப் படித்துவிட்டு வந்து தண்டனையை ஏற்றுக் கொண்டாராம். அவர் சொன்ன காரணம்: "சாகும் போது நான் முட்டாளாகச் சாக விரும்பவில்லை. புதிதாக ஒன்றைத் தெரிந்து கொண்டோம் என்னும் திருப்தி எனக்குப் போதும்" என்றாராம்.

இதனைத் தான் கார்த்தியாயினி பாட்டியும் செய்திருக்கிறார். சாகும் போது தான் கல்வி கற்றவராக இருக்க வேண்டும் என்னும் அந்த கல்வித் தாகம் தான் அவரை நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைக்க வைத்திருக்கிறது!

கல்விக்கு வயதில்லை. கற்பதற்கு வயதில்லை. நேரங்காலம் இல்லை. ஒவ்வொரு நாளும் கல்வியே!

Saturday 10 November 2018

கேள்வி - பதில் (88)

கேள்வி

விஜய் அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்படுகிறதே!

பதில்

ஆமாம்! பழ கருப்பையா அப்படி சொல்லியிருக்கிறார்! இப்படி பேசுவதெல்லாம் இப்போது ஒரு பெருமையாக நினைக்கிறார்கள்!

ஏற்கனவே ரஜினி 'வருகிறார்! வருகிறார்!' என்று மணி ஓசை கேட்கிறதே தவிர 'வருவாரா! வரமாட்டாரா!' என்கிற சந்தேக ஓசையும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது!

ரஜினியைத் தொடர்ந்து விஷால் 'வருகிறேன்! வருகிறேன்!'  என்று சொன்னார்! இப்போது ஒரு சத்தத்தையும் காணோம்!

கமல்ஹாசன் வருகிறேன் என்று சொன்னார். சொன்னபடியே செய்தும் காட்டி விட்டார். கூட்டத்தைப் போட்டார். கட்சிக்கு ஒரு பெயரைச் சூட்டினார். அவர் ஒரு கட்சிக்குத் தலைவராகி விட்டார்!  கட்சியின் பெயரைச் சொல்லி கருத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை விட இவர் பரவாயில்லை. வழ வழ வென்று இழுத்துக் கொண்டிராமல் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்!

விஜய் நிலைமை இன்னும் மோசம். மிகப் பெரிய குழப்பத்தில் அவர் இருக்கிறார்! முடியுமா முடியாதா, வேண்டுமா வேண்டாமா, போவோமா போகவேண்டாமா இப்படி எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் திண்டாடுகிறார்! இவர் வர மாட்டார் என்றே தோன்றுகிறது! இவர் சினிமாவில் அரசியல் பேசுவதோடு சரி. வர மாட்டார்!

என்னைக் கேட்டால் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லுவேன். இத்தனை ஆண்டுகள் நடிகர்கள்  தானே  தமிழ் நாட்டை ஆண்டார்கள்? தமிழ் நாட்டுக்கு என்ன முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார்கள்?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சினிமா நடிகர்கள்.  கருணாநிதி நாடக நடிகர். அனைவருமே நடிகர்கள் தாம். இவர்கள் தான் தமிழ் நாட்டை அதிக ஆண்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள். இவர்களால் தமிழ் நாட்டுக்கு விளைந்த நன்மைகள் என்ன?  இவர்கள் மூவருமே தமிழர்கள் அல்ல!  தமிழர்களைச் சாராயம் குடிக்க வைத்து தள்ளாட வைத்தவர்கள். தமிழ் மொழியை அழித்தவர்கள்.  ஆங்கிலத்தை தனியார் கையில் கொடுத்து கமிஷன் வாங்கியவர்கள். .  தமிழ் நாட்டைச் சுரண்டி தமிழர்களை ஏழையாய் ஆக்கியவர்கள். இவர்களால் எந்த ஒரு நல்ல காரியமும் தமிழ் நாட்டில் நடக்கவில்லை!

இந்த மூன்று முதலமைச்சர்களும் செய்ய முடியாத, செய்ய இயலாதவற்றை இனி புதிதாக வரவிருக்கும் இந்த  சினிமா முதலைமைச்சர்களால் என்ன செய்ய முடியும்? 

இனி தமிழ் நாட்டுக்கு எந்த சினிமா நடிகனும் முதலமைச்சராக வரக்கூடாது! முதலமைச்சரை சினிமா தியேட்டரில் தேட வேண்டாம் என்று தான் நானும் சொல்லுகிறேன்.

தமிழ் நாட்டுக்கு நல்லதொரு முதலமைச்ச்ரை - அதுவும் ஒரு தமிழனை - தேர்ந்து எடுங்கள் என்பது தான் எனது வேண்டுகோள்!

Wednesday 7 November 2018

அவன் முதலாளியா....?

ஒரு சில விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!  யார் முதலாளி? 

ஒருவன் 48 தமிழகத் தொழிலாளர்களைக் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியிருக்கிறான். அதுவும் கடந்த நான்கு மாதங்களாக! காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! இதுவே பாரிசான் ஆட்சி என்றால்  நம்மால் புரிந்து கொள்ள முடியும். அங்குப் பணம் விளையாடும்! ஆனால் இப்போது புதிய அரசாங்கம். இது போன்ற பிரச்சனைகளே வரக்கூடாது - வராது - என்பது தான் நமது நம்பிக்கை.  இனி மேல்  வராது என நம்புவோம். இனி மேலும் இது தொடர்ந்தால் காவல்துறை கண்காணிக்கப்படவில்லை   என நாம் ஏற்றுக் கொள்ளாலாம்!

"முதலாளி" என்கிற அந்த வார்த்தை உண்மையான முதலாளிகளை மனம் நோகச் செய்கிறது என்பது தான் உண்மை. ஒருவன் தனது கீழ் பணி புரியம் தொழிலாளர்களை கொத்தடிமையாக வைத்திருக்கிறான் என்றால் அது எப்படி நாம் அவனை முதலாளி என்று ஏற்றுக்கொள்ளுவது? ஒருவன் தனது தொழிலாளர்களுக்கு நான்கு மாதங்கள் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் அவனை எப்படி நாம் முதலாளி என்று ஏற்றுக்கொளவது? அதுவும் அவர்களை மிரட்டி வேலை  வாங்குபவன் என்ன முதலாளியா? அதுவும் உங்களைக் கொன்று விடுவேன் என்று சொல்லுபவன் முதலாளியா? 

எப்படி தலைகீழாக நின்று பார்த்தாலும் மேலே குறிப்பிட்ட நபர் முதலாளி என்கிற வரையறையின் கீழ் வரவில்லை என்பது தான் உண்மை.  குண்டர் கும்பல்களின் கைநாட்டுகளை எல்லாம் முதலாளி என்று சொல்லி முதலாளிகளைக் கேவலப்படுத்துவது சரியான நடைமுறை அல்ல!

கம்பிகள் எண்ண வேண்டியவனை  முதலாளி என்கிறோம். கோவில் சிலைகளைத் திருடுபவனைத்  தொழிலதிபர் என்கிறோம். மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவனை மாண்புமிகு என்கிறோம்.

அடாடா! திருடர்களுக்கெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அடைமொழிகள்! மரியாதை மொழிகள்!

இப்போது இந்த 48 தொழிலாளர்கள் நிலைமை என்ன? அவர்கள் தமிழகத்திற்கே  திருப்பி அனுப்பப்படுவர் என நம்புகிறோம். அவர்களுக்குக் குறைந்தபட்சம் ஐந்து மாத சம்பளம் கொடுத்து அனுப்பப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இப்போது சொல்லுங்கள் அவன் முதலாளியா? மூதேவியா?  அல்ல அவன் மொள்ளமாறி!

Sunday 4 November 2018

தீப ஒளி ஒளிரட்டும்...!

நாளை (6.11.2018) உலகெங்கிளும் உள்ள இந்து பெருமக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ஒரு சில நாடுகளில் அமைதியும், பல நாடுகளில் அமைதியின்மையும் நிலவுகின்ற இன்றைய சூழலில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

நமது மலேசிய நாட்டைப் பொறுத்தவரை நமக்கு அமைதி என்பது எப்போதும் உண்டு.  ஆனால் இந்தியர்களின் வாழ்க்கை முறையில் அமைதி என்பது எப்போதுமே இல்லை! ஆனால் இது கடந்த கால பாரிசான் கட்சியின் ஆட்சியில். 

கடந்த கால பாரிசான் ஆட்சியில் பல துன்பங்கள்,  பல சோதனைகள்   ஆனால் இத்தனைக்கும் நமது இனத்தைச் சேர்ந்த நமது தலைவர்களே காரணம். வேறு யாரும் நம்மை ஏமாற்றவில்லை. நம் இனத்தவனே நம்மை ஏமாற்றினான்!

இப்போது நாம் அதனை மறப்போம்.  கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் நாம் அந்த நரகாசுரர்களை ஒழித்துக் கட்டி விட்டோம்!  61-ஆண்டுகால ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்கு தேர்தலில் நம்முடைய பங்களிப்பு அதிகம்!  ஆமாம் இந்தியர்களின் 85 விழுக்காடு வாக்குகள் ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்பது புதிய செய்தி அல்ல. உறுதிபடுத்தப்பட்ட செய்தி.

இனி நாம் நல்லதை எதிர்பார்ப்போம். அரசாங்கத்திற்கு அவகாசம் கொடுப்போம். உடனடி மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது  எளிதல்ல. 

ஆனாலும் இந்தத் தீபாவளி திருநாளில் நம்முள் சில மாற்றங்களைக் கொண்டு வருவோம். தீபாவளி என்றால் குடிகார தீபாவளி என்கிற அடையாளத்தை மாற்றுவோம். இந்தியர்கள் என்றால் குடிகாரர்கள் என்கிற தப்பான எண்ணத்தை தகர்த்தெறிவோம். காலங்காலமாக குடிகரார்கள் என்னும் அவப்பேயரை தாங்கி வந்திருக்கிறோம். 

உண்மையில் நம் நாட்டில் குடிகாரர்கள் என்றால் யாரைக் குறிக்கும்? அந்த வார்த்தை நம்மைத்  தான் குறிக்கும். ஆனால் பெரிய குடிகாரர்கள் என்றால் அது சீனர்கள் தான்.  இந்தியர்கள் அல்ல! அதிகம் குடிக்கும் அவர்களை யாரும் குடிகாரர்கள் என்று சொல்லுவதில்லை! நாம் தான் குறிப்பிடப்படுகிறோம்! காரணம் நாம் தான் குடிகாரர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்! குடித்துவிட்டு  எங்கேயாவது வீழ்ந்து கிடக்கிறோம். வம்பு சண்டைகளை வளர்க்கிறோம்! அடிதடியில் இறங்குகிறோம்!

அதனால் தான் நாம் குடிகாரர்கள் என்னும் இழிப்பெயரோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

இந்தத் தீபாவளி திருநாளன்று உறுதிமொழி எடுப்போம். குடியை ஒழிப்போம். குடி கெடுக்கும் குடியை கொன்றொழிப்போம்.

தீபாவளி வாழ்த்துகள்!

வரலாறு காணாத......!

நடந்த முடிந்த ம.இ.கா. தேர்தலில் வரலாறு காணாத தில்லு முல்லுகள் நடந்திருப்பதாக துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு  தோல்வியடைந்த டான்ஸ்ரீ ராமசாமி கூறியிருக்கிறார்!

பொதுவாக தோல்வியடைந்தவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதைத்தான் அவரும் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் கொஞ்சம் அதிகமாகவே சொல்லியிருக்கிறார்! என்றாலும் அதில் உண்மை உண்டு என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இத்தனை ஆண்டுகள் ம.இ.கா. வில் இருந்தவருக்கு இது ஏதோ புது அனுபவம் போன்று சொல்லுவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!  ம.இ.கா. வில் தில்லுமுல்லுகள் என்பதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். அவர்கள் எந்தக்  காலத்தில் நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்?  தில்லுமுல்லுகள், ஊழல் என்பதெல்லாம் ம.இ.கா. வினருக்கு ஒரு பிரச்சனையே அல்ல! ஒருவரே பல ஆண்டுகள் கட்சித் தலைவராக இருக்க முடியும் என்றால் அது எப்படி? அவர் அப்படி என்ன நேர்மையைக் கடைப்பிடித்தார்? வெறும் தில்லுமுல்லு மட்டுமா, அடி, கடி,முடி என்பதும் இருக்கத்தானே செய்தது! அப்போது மட்டும் யார் என்ன செய்தார்? வலுத்தவன் யார் என்றால் யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ  அவன் தான்  வலுத்தவன்! அரசே தவறாக இருந்தால் ஆளுங்கட்சியில் உள்ளவன் வைத்ததுதானே சட்டம்! அது தானே நடைமுறை!

டான்ஸ்ரீக்கு ஒரு வேண்டுகோள். ம.இ.கா. இப்போது அந்திம காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு இனி எதிர்காலமில்லை.  இருப்பவர்களில் யாரும் நான் நேர்மையானவன் என்று சொல்லக்கூடியவர் யாரும் இல்லை! தலை நிமிர்ந்து,  நான் இந்த சமுதாயத்தை வழி நடத்துவேன்,  என்று சொல்ல யாருமில்லை!  அப்படி சொல்லுபவர் யாருமிருந்தால் பக்கத்தில் ஏதோ ஒரு கும்பலை தன்னுடன் வைத்துக் கொண்டு தான் பேசுவார்!

இந்தத் தேர்தல் வரலாறு காணாத ஒரு சோகம்! இதுவும் வழக்கம் போல!  ஆட்சியில் இருந்த காலத்திலேயே அவர்கள் ஒன்றும் செய்யவில்லை! இனி மேல் என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றுமில்லை! இருக்கிற மிச்சம் மீதிக்காக இப்போது ஒரு தலைமை செயல்படுகிறது! இந்த சமுதாயத்திற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை!  அவர்களாவது பிழைத்து போகட்டும்! ஏற்கனவே பலவற்றை சுரண்டி விட்டார்களே, நம்மால் என்ன செய்ய முடிந்தது?

அதனால் சொல்லுகிறேன், வரலாறு இனி அவர்களுக்கு இல்லை! வரலாறு இனி அவர்களைக் காரித்துப்பும், அவரகளைக் காணடித்து விடும்! அது தான் அவர்களுக்கான தண்டனை!

Thursday 1 November 2018

பெர்சே சொல்லுவது சரியே....!

அம்னோ பக்கம் இருந்து இழுத்து வரப்படும் அம்னோ எம்பி க்களை நாம் எப்படி வரவேற்கவில்லையோ அதே போல பெர்சே வும் ஆதரவு கரம் நீட்டவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி!

கடந்த  தேர்தலின் பாரிசான் கூட்டணி தோற்கடிப்பட்டதற்கான காரணம் என்ன? நாம் அறிந்தது தான். ஊழல், லஞ்சம் பெருக்கெடுத்து ஓடின. விலைவாசிகள் ஏற்றம் குறைவதாக இல்லை. பொய்களைச் சொல்லியே அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் மலாய் அரசியவாதிகளும் சரி,  இந்திய அரசியல்வாதிகளும் சரி  மகாராஜா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்! மக்களைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரமில்லி!  இந்த சூழலில் தான் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனார்.

அப்படி ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்களை  இப்போது அவர்கள் எதிர்பார்த்த அரச வாழ்க்கை அஸ்தமானதும் அவர்களைப் பக்காத்தான், பெர்சாத்துவில்  அழைக்க நினைப்பதும், இணைய வைப்பதும் சரியல்ல என்பதுதான் அனைத்து மலேசியர்களும் எண்ணுகின்றனர். அது ஒன்றும் தவறானது அல்ல.  அவர்கள் துரத்தி அடிக்கப்பட வேண்டியவர்களே தவிர வாழ்த்தி வர வேற்கப்பட வேண்டியவர்கள் அல்ல!

ஆனாலும் இப்படி ஒரு சூழல் அமைவதற்கு முக்கிய காரணியாக இருப்பவர் டாக்டர் மகாதிர் தான் என்பதே பலரின் கருத்து. டாக்டர் மகாதிரின் கருத்து என்பது வேறு. அவர் அம்னோவை அடியோடு அழித்தொழிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.   பக்காத்தானின் ஆட்சி காலத்தில் மக்கள் பயன் பெறுபவர்களானால் அடுத்த தேர்தலில் அம்னோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும்! அதுவே நேர்மையான வழி. அதனை விடுத்து அவர்களை வரவேற்பதும் , வாழ்த்துவதும் சரியான தீர்வாகாது!

இதிலும் டாக்டர் மகாதீருக்கு உள் நோக்கம் ஏதேனும் உள்ளதோ என்பதும் நமக்குத் தெரியவில்லை. அவர் எல்லாக் காலங்களிலும் மலாய் மேலாதிக்கத்தை விரும்பவர். தனது கட்சி பெர்சாத்துவில்,   தவறு செய்யும் அம்னோ எம்பி க்களின் மூலம், பெர்சாத்துவில் மலாய் ஆதிக்கத்தைக் கொண்டு வந்து,  அதை வைத்து அடுத்த  பொதுத் தேர்தலில் பிரச்சனைகளை உருவாக்குவாரோ என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது!

நாம் சொல்லுவது:  அந்த அம்னோ எம்பி க்கள் தொடர்ந்து அவர்களின் கட்சியிலேயே இருக்கட்டும். அவர்களின் கட்சியினர் தான் அவர்களைத் தெர்ந்தெடுத்தனர். அதனால் அவர்களின் சேவை அவர்களைத் தெர்ந்தெடுத்தார்களே அவர்களுக்கே இருக்கட்டும்.

பெர்சே சொல்லுவதில் தவறு இல்லை!

மர்ம நிதி ஒதுக்கிடு...!

முன்னாள் பிர்தமர் நஜிப் பதின்மூன்று  தமிழ்ப்பள்ளிகளுக்கு 39.7 மில்லியன் வெள்ளி  ஒதுக்கப்பட்டிருப்பதாக  சொல்லுகிறார்.  அது என்னாயிற்று என்று கேள்வி எழுப்புகிறார். இப்போதைய கல்வி அமைச்சர்,  நஜீப் நீங்கள் ஒதுக்கிய அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள்?  எங்கே கொண்டு போனீர்கள்? என்று இவரும் கேள்வி எழுப்புகிறார்!

இந்த நேரத்தில் தமிழ்க்கல்வியின் காவலர் கமலநாதன் தனது தலைவர் நஜிப்புக்காக ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார். அந்தப் பணம் ஒதுக்கப்பட்டது என்பது உண்மை தான். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கு 'மாதிரி' காசோலைகள்  கொடுக்கப்பட்டதும்  உண்மை தான். கடந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால்  இந்நேரம் அந்தப் பதின்மூன்று பள்ளிகளும் பல்கலைக்கழகங்களாக மாறியிருக்கும் என்று பெருமிதம் கொள்ளுகிறார்!

ஆமாம், என்ன தான் நடந்தது?  தேர்தல் நேரத்தின் போது  எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கத்தோடு,  இந்தியர்கள ஏமாறவேண்டும் என்னும் எண்ணத்தோடு,  பிரதமர் நஜிப் தனது ம.இ.கா. பரிவாரங்களோடு ஆங்காங்கே சென்று பல உறுதிமொழிகளைக்  கொடுத்தார்.  அவைகள் அனைத்தும் வெறும் வெற்று மொழிகளே! அதனை ம.இ.கா. வினரும் அறிவர். ஆனாலும் இப்போதும் அவர்களுக்கு மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாகப் பேசுகின்றனர்!

ஏற்கனவே பாரிசான் ஆட்சி காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு வாரி வாரி கொடுத்ததாக.கணக்குக் கொடுத்திருக்கிறார்கள்! எந்தத் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்தீர்கள் என்றால் மட்டும் யாரும் வாய்த் திறப்பதில்லை! இத்தனைக்கும் அவைகள் எல்லாம் அமைச்சரவை அங்கீகரித்து, நிதியமைச்சு அங்கீகரித்து - இந்தனை அங்கீகாரம் கிடைத்தும் அந்தக் கோடிகள் பள்ளிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

ஆனால் இந்த முறை - பொதுத் தேர்தலுக்கு முன்பாக பல அதிசயங்கள் நடந்தன. அதில் தான் இந்த அதிசயமும்!  இந்த 39.7 மில்லியன் வெள்ளி அமைச்சரவையில் பேசப்படவில்லை! நிதியமைச்சு எந்த ஒதுக்கிடும் செய்யவில்லை. ஆனால் 'மாதிரி' காசோலையெல்லாம் கொடுத்து ம.இ.கா.வினரையும் தமிழ்ப்பள்ளிகளையும் பிரதமர் மனதைக் குளிர வைத்துவிட்டார்! அப்படியே அவர்கள் வெற்றி பெற்று பதவிக்கு வந்திருந்தாலும் அந்தப் பணம்  தமிழ்ப்பள்ளிகளுக்குப் போய்ச் சேராது  என்பது ஊரறிந்த ரகசியம்!

எப்போது அந்தப் பள்ளிகளுக்கு நிதி உதவி போய்ச் சேரும்?  இப்போது சொல்லுவதற்கில்லை! அரசாங்கத்திடம் பணம் இல்லை!

பொறுத்திருப்போம்!