Friday 14 July 2017

ஷரியா ......வரவேற்க முடியாது!


கிளந்தான் மாநில சட்டமன்றம் ஒரு திருத்தப்பட்ட  மசோதாவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அது என்ன? கிளந்தானில் இனி குற்றவாளிகள் பொது இடத்தில் பகிரங்கமாக சவுக்கடி கொடுப்பதற்கு இந்த ஷரியா திருத்தம் வழிவகை செய்கிறது.

ஓர் இஸ்லாமிய கட்சியான, பாஸ் கட்சியின் ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலம் இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து பல இனங்கள் வாழ்கின்ற - சீன, இந்திய - கிறிஸ்துவ, புத்த, இந்து சமயத்தினர்  - என்று பல்லினங்கள்,மதத்தினர்,  வாழ்கின்ற ஒரு நிலையில் இப்படி ஒரு சட்டத்திருத்தம் தேவை தானா  என்று யோசித்ததாகத் தெரியவில்லை. இஸ்லாமியச் சட்டம் என்று  பெருமையாக எண்ணுகின்றார்களே தவிர, நடைமுறையில் இல்லாத ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து எதனைச் சாதிக்கப் போகிறார்கள் என்பது நமக்கும்  புரியவில்லை.

சட்டம் அமலாக்கப்பட்டால் ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். ஏய்த்துப் பிழைக்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் எந்தப் பாதிப்பும் வராது என்பது மட்டும் உறுதி. மிகச் சாதாரண ஏழை இளைஞர்கள் தான் இந்தச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கோ, பணம் படைத்தவர்களுக்கோ இந்தச் சட்டம் எதனையும் கொண்டு வரப்போவதில்லை. அவர்கள் வழக்கம் போல் தங்களின் லீலைகளை நிறுத்தப் போவதுமில்லை!!

இது போன்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நாடுகளில் குற்றச் செயல்கள் குறைந்து விட்டனவா, என்ன? இல்லை! நமக்குத் தெரிந்தவரை பெண்கள் தான் பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர்.  இஸ்லாமிய சட்டம் என்றாலே அது பெண்களுக்குத் தான் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் பாக்கிஸ்தான்,  வங்காளதேசம் போன்ற நாடுகள் அப்படி என்ன வளர்ச்சிகளைக் கண்டுவிட்டன?  அரபு நாடுகள் எண்ணைய் வளத்தால் பேர் போடுகின்றன.  அத்தோடு மக்கள் ஆட்சி என்பது அங்கு இல்லை. இந்த ஷரியா சட்டத்தினால் பெரிய மாறுதல் நடந்து அங்கு மக்கள் எல்லாம் புத்தம் புது புனிதர்களாக மாறிவிட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! ஷரியா சட்டத்தைக் கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டையும் சுட்டிக்காட்டும் அளவுக்கு  -  முன்னுதாரணமாகக் கொள்வதற்க்கு - எந்த ஒரு இஸ்லாமிய நாடும் இல்லை!  இந்த  நிலையில் இப்படி ஒரு சட்டத் திருத்தம் தேவை தானா என்பதை இஸ்லாமிய அரசியல்வாதிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறும் இஸ்லாம் என்பதற்காகவே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து மக்களைப் பயமுறுத்துவது சரியான செயல் அல்ல.

ஏன், முன்னாள் தகவல் அமைச்சர், ஜைனுடின் மைடின் கூட இது பற்றி கிண்டலடித்திருக்கிறார். இதனை அவர் ஒரு காட்டுமிராண்டித்தனமான ஒரு தண்டனை என வர்ணிக்கிறார். என்ன தான் முஸ்லிம்களுக்கு மட்டுமான தண்டனையாக இருந்தாலும் வேற்று இனத்தவரிடையே அது மனசஞ்சலத்தை ஏற்படுத்தவே செய்யும்..

இந்த சட்டத் திருத்தத்திற்கு முன்னர் எப்படி தண்டனை நிறைவேற்றப்பட்டதோ அதுவே சிறந்த வழி.  சிறையில் நிறைவேற்றுங்கள். 

மனிதன் வாழும் வரை குற்றங்கள் இருக்கத்தான் செய்யும். எந்தச் சட்டத்தினாலும் குற்றச்செயல்களை மாற்றி விட முடியாது. அது சமயம் சார்ந்ததாக இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். மனிதனைத் திருத்துவதற்கு ஏதாவது வழிகள் இருக்கிறதா,  பாருங்கள். புனிதமான சட்டங்களைக் கொண்டு வந்து புனிதமற்றதாக ஆக்காதீர்கள்.

கடைசியாக ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் இருக்கும் வரை குற்றச்செயல்கள் இருக்கவே செய்யும். குற்றச் செயல்களுக்கு ஆணி வேர் அரசியல்வாதிகள். அவர்கள் திருந்தினால் மக்கள் திருந்துவர்கள்.

ஷரியா......நாம் வரவேற்கவில்லை!


















No comments:

Post a Comment