Saturday 19 January 2019

ஒரு பிரச்சனை இரண்டு தீர்வுகள்...!

சில சமயங்களில் சில பிரச்சனைகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! ஒரு பக்கம் சரி என்பதும் இன்னொரு பக்கம் சரி இல்லை என்பதும் பொது மக்களை மாக்களாக நினைக்கும் போக்கு சரியில்லை என்பதே நமது நிலை!

பினாங்கு தைப்பூசத்தில் காளைகளை  வைத்து தேர் இழுக்கத்  தடை விதித்திருப்பதாக இந்து  அறப்பணி வாரியத்தின் தலைவரும் , பினாங்கு துணை முதல்வருமான பி.இராசாமி கூறுகிறார்.  

அதற்கு அவர் கூறும் காரணம்:  "இது விலங்குகளுக்கு எதிரான வன்முறை. வேண்டுமானால் காளைகளை உடன் அழைத்துச் செல்லுங்கள். அவைகளை வைத்து தேர்களை இழுக்காதீர்கள். பக்தர்கள் தேரை இழுக்கலாம் அல்லது இழுவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். இலட்சக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஒரு திருநாளில் காளைகளை  வதை செய்வது கொடுமை!" என்கிறார்.

இன்னொரு பக்கம் பார்ப்போம்.  பினாங்கு நகரத்தார்  என்ன சொல்லுகிறர்கள்?  அவர்களின் வெள்ளி இரதம் தயார். இரதத்தை இழுக்க 16 ஜோடி காளை மாடுகளும் தயார். இந்து சமய நம்பிக்கையில் மாடுகளை வதை செய்வது என்று ஒன்றுமில்லை.  கோமாதா பூஜை செய்து அதற்கான மரியாதை செய்வதால்  எந்தப் பாதகமும் இல்லை  என்கிறார்கள்.

இதுவும் சரி அதுவும் சரி. ஆனால் எது சரி? காளைகள் வதை செய்வதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் இது வதையா? ஒரு இரதத்தை இழுப்பதற்கு அதன் எடையை வைத்துத் தான் எத்தனை காளைகள் தேவை என்று முடிவு செய்வார்கள். ஆக, அவைகள் அதிகமான பாரத்தை இழுக்க வாய்ப்பில்லை.  தாங்கக் கூடிய அளவு தான் இரதங்களை இழுக்கின்றன.

கோமாதா பூஜை அதற்கான மரியாதை என்பதெல்லாம் எந்த அளவுக்கு  காளைகளுக்குப் பயனாக இருக்கும்? அவைகளின் பாரத்தைக் குறைக்க  அது உதவுமா? பக்தர்களின் பாரத்தைக் குறைக்கத்தான் அனைத்து பூஜை, புனஸ்காரங்களும் நடக்கின்றனவே தவிர மாடுகளின் பாரத்தைக் குறைக்கவா பூஜைகள் நடைபெறுகின்றன! 

நமது நோக்கம் அதுவல்ல. நாம் அனைவருமே தலைவராக வேண்டும் என்னும் விரும்பும் சமூகம். அதனால் யார் சொன்னாலும் கேட்க மாட்டோம்.  யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்னும் தலைக்கனம் நம்மிடம் அதிகம்! அதனால் தான் சீபீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரம் ஒருவரின் மரணத்தில் முடிந்தது.

தலைமை என்பது ஒருவரிடம் தான் இருக்க வேண்டும். எது நல்லது,  எது மக்களுக்கு நல்லது,  எது அரசாங்கத்திற்கு  நல்லது, அரசாங்கத்தின் சூழல் என்று அனைத்தையும் அறிந்து ஓர் முடிவு எடுத்து விட்டால் அதன் பின் நமது கருத்து வேறுபாடுகளை மறந்து அந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு அதனால் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் அது முக்கியம் அல்ல. இது சமுதாயப் பிரச்சனை. சமுதாயத்திற்கு எது நல்லதோ அது தான் முக்கியம். 

இந்தப் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் முக்கியம் அல்ல. பொது நலனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் சமுதாய நலனுக்காக விட்டுக் கொடுக்கும் போக்கை நாம் அல்லது நமது தலைவர்கள் என்று சொல்லுபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வறட்டு பிடிவாதம் நமது சமுதாயத்தைப் பாதிக்கும். மக்களைப்  பாதிக்கும். உங்கள் சுயநலத்தினால் இந்த சமுதாயம் பாதிப்பதை நாம் அனுமதிக்க முடியாது.

காளை வதையா அல்லது பூஜையா? எது சரி?

No comments:

Post a Comment