Friday 22 February 2019

நானும் எஜமானன் தான்..!

முன்னாள் பிரதமர் நஜிப், செமினி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

"நாட்டின் மக்களே எனது எஜமானர்கள்!" என்பதாக ஒரு செய்தியைக் கூறி வாக்காளர்களை மகிழ்ச்சி படுத்த முயற்சி செய்திருக்கிறார். வாழ்த்துகள்!

நானும்அவரின் ஓர் எஜமானன் என்பதாக எடுத்துக் கொண்டு அவரைப் பற்றியான எனது கருத்துக்களை இங்கு சொல்ல வருகிறேன்.  

முதலில்,  நான் உங்கள் எஜமானன் என்பதைப் புரிந்து கொள்ள ஏன் இத்தனை ஆண்டுகள் ஆயிற்று?  நீங்கள் மட்டும் அல்ல உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், இப்போது ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருக்குமே  நாங்கள்  தான்  எஜமானர்கள்.  நீங்கள் மட்டும் அல்ல இப்போது உள்ளவர்களும்  அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அரசியலில் தோற்றுப் போன பிறகு ஞானம் வருவது இயற்கை ஆனால் பதவியில் இருக்கும் போதே போதி மரத்து புத்தனின் ஞானம் வர வேண்டும்!  அப்போது தான் வாழ்க்கை இனிதாக அமையும். இல்லாவிட்டால் விசாரணை, சிறை என்று காலாகாலமும் அலைய வேண்டி வரும்!

நாங்கள் எஜமானர்கள் என்பது சரிதான். அது தான் ஜனநாயகம்.  ஆனால் எஜமானர்களின் பணத்தை யாரும் கொள்ளையடிப்பார்களா?  முடியுமா? முடியும் என்பதை நீங்கள் நிருபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.அதுவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல.  இன்றைய நிலையில் நாட்டின் கடன் என்பது ஒரு டிரில்லியன் கோடி என்கிறது நிதியமைச்சு!  இத்தனை கோடி கடன் என்றால் நீங்கள் ஆட்சியில் இருந்த போது  செய்த கில்லாடித்தனங்கள் விக்ரமாதித்தன் கதைகளையும் மிஞ்சி விட்டனவே!

உங்கள் எஜமானர்களுக்கு  நீங்கள் செய்த  துரோகங்கள் கொஞ்சமா, நஞ்சமா! இப்படி எல்லாம்  செய்ய  உங்களுக்கு  எப்படி  மனம்  வந்தது? எஜமானர்களாகிய எங்களை  மனிதர்களாகக்  கூட நீங்கள்  மதிக்கவில்லையே! எஜமான விசுவாசம் என்பது உங்களுக்குக்  கொஞ்சம்  கூட  இல்லையே! 

எங்களை எஜமானர்கள்  என்று  கூறிவிட்டு  எங்களைப் போட்டு மிதி மிதி என்று காலால் மிதித்து  துவம்சம் பண்ணி விட்டீர்களே!  உங்களுக்கு எங்கே அந்த எஜமான விசுவாசம் இருந்தது? இனியும் இருப்பதற்கு!

ஓர் எஜமானனாகக் கூறுகிறேன் கேளுங்கள்.  நீங்கள்  நீதிமன்றத்தில் மிதி மிதி என்று மிதிப்பட வேண்டும்!  கிழி கிழி என்று கிழிப்பட வேண்டும்! மொத்து மொத்து என மொத்துப்பட வேண்டும்! பிழி பிழி என பிழியப்பட வேண்டும்! கடைசியில் சீ சீ என சிறைப்பட  வேண்டும்!

இது தான் இந்த எஜமானனின் ஆசை!

No comments:

Post a Comment