Friday, 1 February 2019

உதயா கொஞ்சம் யோசியுங்கள்..!

THR ராகா, உதயா செய்தது சரியில்லை தான். அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். 

ஆனால் நாம் சொல்லுவதை உதயா காது கொடுத்துக் கேட்க வேண்டும். யாரோ ஓர் உருப்படாதவன் - தமிழன் அல்லாதவன் - ஒரு கருத்தைச் சொல்லுகிறான் அதுவும் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு எதிரான ஒரு கருத்தைச் சொல்லுகிறான். அதனை மக்கள் மத்தியில் சொல்லுவதும், கிண்டல் அடிப்பதும் - எப்படிப் பார்த்தாலும் - அது தமிழர்களை அவமதிப்பது தான். சொன்னவன் யார் என்று தெரியவில்லை ஆனால் உதயா மாட்டிக் கொண்டார்.

உதயா ஊடகத் துறையில் உள்ளவர்.  அதுவும் தமிழ் சார்ந்த ஊடகத் துறையில் உள்ளவர்.  அவர் பத்திரிக்கை உலகில் இல்லை என்பதைத் தவிர அவர் சார்ந்த வானொலித் துறையும் தமிழர் சார்ந்தது தான். 

தமிழ்ப் பத்திரிக்கைகளை  வேறு மொழி பத்திரிக்கைகளோடு ஒப்பிடுவது சரியில்லை முதலில் உதயா அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக நமது பிரச்சனைகளை - தமிழர் சார்ந்த பிரச்சனைகளை - தமிழ்ப் பத்திரிக்கைகள் தான் வெளியிடும். கேள்வி எழுப்பும்.  வேறு மொழி பத்திரிக்கைகளுக்கு அது அக்கறை இல்லாத செய்தி; தேவை இல்லாத செய்தி.

நான் வாங்கும் ஒரு தமிழ் நாளிதழ் பற்றி பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.   ஆனால் அங்கு தான் தமிழர் சார்ந்த விஷயங்கள் கிடைக்கின்றன.  தமிழர் - இந்தியர் சார்ந்த பிரச்சனைகளில் எனக்கு எந்தவித  அக்கறையும் இல்லாதவனாக இருந்தால் நானும் ஒர் ஆங்கில பத்திரிக்கையின் வாசகனாகி விடுவேன். ஆனால் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்பதைத் தெரியாதவனாக இருப்பேன். அதனால் தான் தமிழ்ப் பத்திரிக்கையே எனது தேர்வு.

இன்றைய நிலையில் தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு எதிராக  சொல்லப்படுகிற கருத்துக்கள் பெரும்பாலும் தமிழர்களிடமிருந்து வருவதில்லை. நம்முடன் இருக்கும், நம்முடனேயே பழகும்,  நம் மொழியே பேசும் தமிழர் அல்லாதவரிடமிருந்தே  வருகின்றன என்பதை உதயா புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக, உதயா நீங்கள் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்.  அதுவும் தமிழ் ஊடகத் துறையைச் சேர்ந்தவர். இன்னொரு தமிழ் ஊடகத் துறையைக் குறை கூறுவது  சரியானது அல்ல. நீங்கள் பணி புரியும் ஊடகத்தைப் பற்றி எங்களுக்கும் சில அல்ல பல குறைபாடுகள் உண்டு. இளைஞர்களைச் சினிமா பைத்தியமாக ஆக்குகிறீர்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். அது மட்டும் அல்ல. ஆங்கிலம், மலாய், சீனம் வானொலித் துறையை விட நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியாது. மின்னல் வானொலியோடு தான் உங்களை ஒப்பிட முடியும். ஆனால் மின்னல் உங்களை விட தரமான ஒலிபரப்பு என்பதை மறவாதீர்கள்.

உதயா, தமிழ் உங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நீங்கள் தமிழோடு தான் இணைந்திருக்கிறீர்கள்!

தமிழுக்கு இடம் வேண்டும்...!

பெர்னாமா இணையதள செய்தி பிரிவில் தமிழுக்கும் இடம் வேண்டும் என்பதாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.  ஆங்கிலம், மலாய், சீனம், அரபு அத்தோடு ஸ்பெயின் மொழியிலும் அந்தச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதில் என்ன அதிசயம் என்றால் உள்நாட்டில் தமிழ் என்கிற ஒரு மொழி இருக்கிறது என்பதை பெர்னாமா அறிந்திராதது நமக்கு வியப்பை அளிக்கிறது.  அதாவது பெர்னாமா அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை!  ஒரு காரணத்தை நாம் அறிந்திருக்கிறோம்.  இந்த அதிகாரிகள் வெளி நாடுகளில் படித்தவர்களாக இருக்கலாம். அதனால் உள்நாட்டில் எத்தனை மொழிகள் இருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை! வெளிநாடுகள் என்று சொல்லுவதற்குக் காரணம் ஸ்பெயின் மொழியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதனால் மட்டுமே!

ஒரு செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். முன்பு பாரிசான் அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அப்போது வாயில்லா ஜீவன்கள்   நம்மைப் பிரதிநிதித்துக் கொண்டிருக்கின்றன என்பதாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்!.  அதில்  பல  ஜீவன்கள்  படிக்காத அரைகுறைகள். ஆனால் இப்போது  நிலைமை  அப்படி இல்லை. எல்லாம் படித்த மேதைகள்.  இப்போது என்ன கேடு வந்தது?

ஒன்று புரியவில்லை. அன்று பாரிசான் அரசாங்கம். இந்தியர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு நன்மையையும்  கொண்டு வரவில்லை. அதில் மொழி புறக்கணிப்பும் ஒன்று.  அதனால் ஏற்பட்ட விளைவு  தான் அரசியல் மாற்றம். ஆனாலும் இப்போதும்  அதே பிரச்சனை. 

முன்னாளில் என்ன நடந்ததோ இபோதும்  அதே நடக்கிறது! அதே வேண்டுகோள்.  பக்கத்தான் அரசாங்கத்திலும் அதே கூக்குரல். சும்மா இருக்கும் இயக்கங்களும் "தமிழுக்கு இடம் கொடுங்கள்" என்று அறிக்கை விட ஆராம்பித்து விட்டார்கள். முன்பும் இதே தான் அவர்கள் பணியாக இருந்தது. இப்போதும் அதே தான் அவர்கள் பணியாக இருக்கிறது!

பெர்னாமா செய்தித்தளம் தொடர்புத் துறை அமைச்சின் கீழ் வருகின்றது. அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. இப்போது பிரதமர் துறை  அமைச்சர் வேதமூர்த்தியிடம் இந்தப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனாலென்ன எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்குக் கொண்டு செல்வது தவறில்லை. 

வேதமூர்த்தி அவர்கள் கோபிந்த் சிங்கிடம் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இந்த ஒரு பிரச்சனை அல்ல. இனி அவருடைய அமைச்சிலிருந்து வெளியாகின்ற அது இணயத்தளமோ அல்லது வேறு எதுவோ அங்குத் தமிழ் வேண்டும் என்பதாக ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நிரந்தரத் தீர்வு தான் முக்கியமே தவிர எப்போதும் நாங்கள் "இது வேண்டும்! அது வேண்டும்!" என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்க முடியாது!  

இன்றைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது பக்கத்தான் அரசாங்கத்திற்கு நல்லதல்ல! 

தீர்வு உங்கள் கையில்!

கேள்வி - பதில் (91)

கேள்வி 

ரஜினியின் "பேட்ட" பார்த்தீர்களா? 

பதில்

ரஜினியின் அரசியல் தான் எனக்குப் பிடிக்காது! மற்றபடி அவருடைய படங்கள் எனக்குப் பிடிக்கும்.

பேட்ட படம் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து. ரஜினியின் ரசிகர்கள் எதனை விரும்புவார்கள் என்று ஆய்ந்து, அறிந்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால் இயக்குனர் என்ன சொல்லு வருகிறார் அவரது நோக்கம் என்ன என்று பார்த்தால் அப்படி ஒன்றுமில்லை. "அப்படி நான் எதையும் சொல்லவும் வரவில்லை!" என்கிறார் இயக்குனர்.

ஒரு வகையில் பார்த்தால் படம் பா.ஜ.க. வின் ஆதரவு படமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று ஊகித்து அறியலாம். அவர் பா.ஜ.க. ஆதராவாளர்.  படத்தில் வன்முறை அதிகம். சென்சார் போர்டில் உள்ளவர்கள் பா.ஜ.க. சொல்லுவதைத் தான் கேட்க வேண்டும். அதனால் வன்முறைக் காட்சிகளை அவர்களால் வெட்ட முடியவில்லை. இதுவே வேறு நடிகர் நடித்த படமாக இருந்தால் வன்முறைக் காட்சிகளை வெட்டித் தள்ளியிருப்பார்கள்!

இந்த வன்முறைக் காட்சிகளோடு இந்தியாவில் நடக்கும் - மோடியின் ஆட்சியில் நடக்கும் - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதக் கலவரங்களை  ஒப்பிட்டுப் பாருங்கள். அத்தோடு ஒரு பெண்மனி காந்தி சிலையை சுடுவதும் இனிப்பு வழங்குவதும் பாருங்கள்.  இதனைச் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது.

பேட்ட படத்தில் வரும் கொலை, கொள்ளைகளுக்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல, எடுக்க முடியாது என்பதாகத்தான் காட்டுகிறார்கள்!  ரஜினி ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க. என்ன செய்கிறதோ அதைத்தான் நானும் செய்வேன் என்கிற அவருடைய அரசியல் முன்னோட்டத்தை இந்தப் படம் காண்பிப்பதாகவே தோன்றுகிறது!

ரஜினியின் கபாலி படம் ஒரு நோக்கம் இருந்தது.  பா.ரஞ்சித் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தாரோ அதனை அவர் சொல்லியிருக்கிறார். பேட்ட இயக்குனர் ரஜினியின் அரசியல் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வருகிறாரோ! அப்படித்தான் அவரது அரசியல் இருக்கும் என்றால் அவ்ருடைய அரசியலே வேண்டாம்!

படத்தின் கதையைத் தான் நான் விமர்சித்தேன். படத்தில் சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. ரஜினியின் இளமை, துள்ளல் அனைத்தும் உண்டு. அனிருத்தின் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது. பாடல்கள் சுமார்.

ரஜினி ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தைப் படைத்திருக்கிறார் இயக்குனர். படத்தைப்; பார்க்கலாம். வன்முறையை தியேட்டரிலேயே விட்டுவிட்டுச் செல்லுங்கள்!  அதுவே எனது பணிவான வேண்டுகோள்!