Thursday, 2 December 2021

சிறுத்தையுடன் போராட்டம்!

 

                                மகனுக்காக சிறுத்தையுடன் போராடிய தாய்!

தாயின் அன்புக்கு ஈடு, இணை இல்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதற்குப்  பழங்குடி தாயும்  விதிவிலக்கல்ல.

நாம் சமீபத்தில் தான் "ஜேபிம்" படம் பார்த்தோம். அவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் பார்த்தோம். காவல்துறை ஒரு பக்கம் என்றால் அவர்களின் உயிரை வாங்க விலங்குகள் ஒரு பக்கம்!

மேலே குறிப்பிட்ட அந்த நிகழ்வு இந்தியா, மத்திய பிரதேசத்தில் உள்ள  சித்தி மாவட்டத்தில்  நடந்தது. 

அந்த இளந்தாய் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டுக்கு வெளியே நெருப்பு பற்றவைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.  மடியிலே கைக்குழந்தை. அந்த நேரம் பார்த்து தீடீரென உள்ளே புகுந்த சிறுத்தை அவரின்  எட்டு வயது மகனைக்  கவ்விக் கொண்டு ஓடியது!

அதனைப் பார்த்த அந்தத் தாய் தனது பெரிய மகளிடம் கைக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு  அந்த சிறுத்தையைத் துரத்திக் கொண்டு ஓடினார். கையில் எந்த ஆயுதமும் இல்லை! தனி  ஆளாகத்தான் ஓடினார்!

சுமார் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம். இடையிலே இரண்டு முறை அந்தத் தாயைத் தாக்கியிருக்கிறது அந்த சிறுத்தை. இருந்தாலும் அவர் விட்டபாடில்லை. மூன்றாவது முறை சிறுத்தை தனது பிடியைத் தளர்த்திய போது மீண்டும் அவர் போராடியிருக்கிறார். அந்நேரம் பார்த்து மற்ற பழங்குடி மக்களும் தாரை தம்பட்டையுடன் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர்!

சத்தம் கேட்டதும் சிறுத்தை பின் வாங்கிவிட்டது. தாயும் மகனும் காப்பாற்றுப்பட்டனர். இப்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனிதனுக்கு ஆபத்து வரும் போது எதனையும் எதிர்க்கத் தயார் என்கிற ஒரு சூழல் உருவாகிவிடும். அந்த நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை.

அந்தத் தாய்க்கு அவருடைய மகன் தான் கண்முன்னே தெரிகிறான். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அது மட்டும் தான் அவருக்குத் தெரிகிறது. தன் மகன் உயிருக்காகப் போராடுகிறான். வேடிக்கைப் பார்க்க நேரமில்லை. கையில் எந்த ஆயுதமும் இல்லை. ஓடும் வழியில் என்ன கிடைக்கிறதோ அது தான் ஆயுதம்!

தாயே! நீ போற்றப்பட வேண்டியவர்! உன் மகனின் உயிரைக் காப்பாற்றியதோடு உன் உயிரையும் காப்பாற்றிக் கொண்டாய்! நீ நீண்ட நாள் வாழ வேண்டும்!

உனக்காக, உன் குடும்பத்துக்காக, உன் ஊர் மக்களுக்காக, உங்களின் நல்வாழ்வுக்காக வேண்டுகிறேன்!

'தல' இனி வேண்டாம்!

                                            'தல' இனி வேண்டாம்! அஜித் போதும்!

நடிகர் 'தல' அஜித் குமார்  தனக்கு இனி எந்த அடைமொழியும் வேண்டாம் என்று அறிக்கை  விட்டிருக்கிறார்!

என் இயற்பெயரான அஜித் குமார் என்று சொல்லுங்கள் அல்லது அஜித் என்றோ ஏகே என்றோ எழுதுங்கள், சொல்லுங்கள். அது போதும்! தல இனி வேண்டாம்!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அவர். இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்  என்று தெரியவில்லை.  இப்போதுள்ள நடிகர்களில் தங்களுக்கு ஏதாவது ஒரு பட்டப்பெயர் வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம்.  சினிமாவுக்குள் வந்துவிட்டால் தங்களது பெயருக்கு முன் ஓர் அடைமொழி வேண்டும். அது இருந்தால் தான் "நாங்களும் வளர்ந்துவிட்டோம்!"  என்று ரசிகர்களிடம் காட்டிக்கொள்ள அது அவர்களுக்கு ஓர் அடையாளம்!

ஆனால் அஜித் தனக்குள்ள அடையாளத்தை அனாவசியமாக தூக்கி எறிகிறார்! அவருடைய ரசிகர்களுக்கு எப்படிப்பார்த்தாலும் அது ஏமாற்றத்தைத் தான் கொண்டு வரும் என்பது ஐயமில்லை. அவர் எதைச் செய்தாலும் அதற்கும்  அவரது பணிவு தான் காரணம் என்று சொல்லுவது அவரது ரசிகர்களின் இயல்பு.

பொதுவாகவே அஜித்தைப் பற்றி தேவையற்ற செய்திகள் எதுவும் வருவதில்லை. மற்ற நடிகர்களைப் போல எந்த சர்ச்சையிலும் அவர் பெயர் அடிபடுவதில்லை.  அவரைப் பற்றி யாரும் தவறாகவும்  பேசுவதில்லை.

ஒரு வேளை 'தல' என்னும் பெயர் அவருக்கு ஏதோ ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். 'தல' என்று வைத்துக் கொண்டு அப்படி என்ன சாதித்துவிட்டோம் என்று கூட அவர் யோசித்திருக்கலாம். "நான் யாருக்கும் தலைவனாக இல்லை! அப்புறம் எதற்குத் தல?" என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

ஏதோ ஒரு காரணம் அவரை அலைக்கழித்திருக்கிறது! அதனால் தான் 'தல'யைத் தூக்கி எறிந்துவிட்டார்! நல்லது தான்! 

அவர் சொன்னால் ஊடகங்கள் கேட்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ரசிகர்கள் கேட்பாளர்களா?  கொஞ்ச நாளைக்கு அவர்கள் கேட்கமாட்டார்கள்1 பிறகு எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்!

ரசிகர்களே! தல இனி வேண்டாம்!

Wednesday, 1 December 2021

விமான நிலையம் சீனாவின் வசமா?

 

                         உகாண்டாவின் ஒரே விமான நிலையம் சீனாவின் கையிலா!

நமது தமிழ் திரைப்படங்களில் இதனைப் பார்த்திருக்கிறோம். கிராமங்களில் உள்ள பணக்காரர்கள் ஏழைகளுக்குக் கடன் கொடுப்பதும் பிறகு பல இலட்சம் பெறுமானமுள்ள அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதும்  நாம் பார்த்திருக்கிறோம். உண்மையாகவே அது நடப்பது தான்.

ஆனால் இது கிராமத்து வில்லன்கள்  செய்கின்ற வேலை! பெரும்பாலும் உள்ளூர்களில் நடக்கும்!

ஆனால் சீனா எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. எல்லா நாடுகளையும் மிஞ்சிவிட்டது! எந்த ஒரு நாடும் செய்யாத, செய்ய விரும்பாத, சில செயல்களைச் செய்து வருகிறது.  கிராமத்து வில்லன்கள் செய்கின்ற வேலையை இப்போது சீனா உலகளவில் செய்து வருகிறது!

கடைசியாகக்  கிடைத்த செய்தி இது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையம் எண்டெபே விமான நிலையம் ஆகும்.  இந்த விமான நிலையத்தின் விரிவாக்கதிற்காக சீனாவிடமிருந்து அந்நாடு கடன் வாங்கியிருந்தது. தவணைக் காலம் முடிந்தும் உகாண்டா தனது கடனைச் செலுத்த முடியவில்லை.

இரு நாடுகளுக்குமுள்ள ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட காலத்திற்குள் தவணையைக் கட்ட முடியவில்லையென்றால் சீனா அந்த விமான நிலையத்தைக் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது. ஆனால் உகாண்டா குறிப்பிட்ட  அந்த விதியை ஏற்றுக்கொள்ளவில்லை.  அந்த விதியை நீக்குமாறு உகாண்டா வலியுறுத்தியும் சீனா மறுத்து வந்துள்ளது.

இப்போது உள்ள நிலையில் ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அதனால் சீனா ஒப்பந்தத்தில் உள்ளபடி  உகண்டாவின் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்தாற் போலவே சீனா பல ஏழை நாடுகளை, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இந்த முறையைக் கையாண்டு வருகிறது. மலேசியாவிலும் இது நடந்திருக்கும். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதன் போக்கை மாற்றிவிட்டது. ஸ்ரீலங்காவில் இரண்டு துறைமுகங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன என்று கூறப்படுகிறது.

உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத இப்படி ஒரு செயலை சீனா செய்கிறது. கடன் கொடுப்பது வாங்குவது சரி.  அப்படித் தவறினால் அதனை வாங்க வேறு பல வழிகள் உள்ளன. 

ஆனால் சீனா பின்பற்றும் வழி என்பது புதுவிதமான வன்முறை!