Monday, 3 February 2025

நுழைவு தேர்வில் தளர்ச்சி!


 நாட்டில் தாதியர் பற்றாக்குறை  மிக மோசாமான சூழலை அடைந்திருப்பதால்  இரண்டு ஆண்டுகளுக்கு (2025-2026+  -ம் ஆண்டுகளில் கல்வியில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் எஸ்.பி.எம். தேர்வில் ஐந்து கிரடிட் பெற்றவர்களே தகுதி பெற்றவர்களாக  அறியப்பட்டனர்.  இந்த நடப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் மூன்று பாடங்களில் கிரடிட் பெற்றவர்கள்  தகுதி பெற்றவர்களாக ஏற்கப்படும் என சுகாதார அமைச்சர்   அறிவித்திருக்கிறார். கிரடிட் பெற வேண்டிய அந்த மூன்று பாடங்கள்: மலாய், கணிதம், அறிவியல். சாதாரண தேர்ச்சி பெற வேண்டியவை: ஆங்கிலம் அத்தோடு இன்னொரு பாடம்.

இந்தத் தளர்வு என்பது  இரண்டு  ஆண்டுகள் மட்டுமே என்பதைக் கவனிக்க. எத்தனை இந்தியப்  பயிற்சி  தாதியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்  என்பது தெரியவில்லை.  இங்கும் கோட்டா, மெரிட் அனைத்தும் இருக்கத்தான் செய்யும்.  ஏதோ ஒன்று இரண்டு நமக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பலாம்.

ஆனாலும் நாம் மனம் தளர்ந்து விடக்கூடாது  என்பதை மட்டும்  மனதில் வையுங்கள்.  கிடைக்கின்ற வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்வது  நமது கடமை.  நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் நாம் இருக்க முடியாது.  அவர்களை நாம் உயரத் தூக்கிவிட்டோம். இனி நம்மை நாமே தூக்கிக்கொள்வது நமது கடமை. 

ஒரு சில மாணவிகளுக்கு இந்தத் தாதியர் டிப்ளோமா பயிற்சி  நல்லதொரு வாய்ப்பாக அமையலாம்.  அந்தத் தகுதிகள் உங்களுக்கு  இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில்  இந்த வாய்ப்பை விடாதீர்கள்.  இந்தத் தளர்வு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே.   உங்களின் தகுதி இதற்கு ஏற்றமாதிரி இரூக்குமாயின்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாய்ப்புகள் வரும் போது நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. பிறகு குறை சொல்லுகிறோம்.  யாரும் நமக்காக பேசப்போவதில்லை. நமக்கு நாமே தான்  உதவிக்கொள்ள வேண்டும்.

யார் கண்டார்? இதுவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம்!

Sunday, 2 February 2025

சம்பளம் உயருகிறது!

இந்த மாதத்திலிருந்து தனியார் துறைகளில் சம்பளம் கூடுகிறது  என்பது தற்போதைக்கு நல்ல செய்தியாகத்தான் தோன்றுகிறது. 

சிக்கனமாக வாழத் தெரிந்தவர்கள் எல்லாச் சூழலிலும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள். மிச்சம் பிடிக்கவும் செய்வார்கள்.  ஆனால்  வியாபாரிகள் சும்மா இருப்பார்களா?  அவர்கள் ஒரு பக்கம் விலைகளைக் கூட்டத்தான் செய்வார்கள். அது அவர்களின் இயல்பு. 

வியாபாரிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. காரணம் சம்பளம் கூடும்போதெல்லாம்  விலைகளும் ஏற்றங்காணும். இது ஒன்றும் புதிதல்ல.  பின் நோக்கிப் பார்த்தால் அது புரியும்.

அநேகமாக உணவுகளின்  விலை ஏற்றம்  எந்தக்காலத்திலும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை.  அதுவும் குறிப்பாக குழந்தைகளின் பால்மாவுகளின் விலை ஏற்றத்தைத் தடுப்பது, கடந்தகால அனுபவத்தின்படி,  மிகவும் கடினம் தான். குழந்தைகளின் பால்மாவு ஏற்றத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

வியாபாரிகள், விலை ஏற வேண்டும் என்பதற்காக  ஒரு சில பொருள்களைப்  பதுக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். இது எப்போதும் நடப்பது தான்.  அங்கும் இலஞ்சம் முக்கியமான காரணியாக விளங்குவதால்   முன்பு இப்படி நடந்தது.  ஆனால்  அரசாங்கம் இப்போது கொஞ்சம்  எச்சரிக்கையாய் இருப்பதால்  தவிர்க்க முடியும் என  நம்புகிறோம்.

எந்தச் சூழலிலும்  பணம் என்று வரும் போது அலட்சியமாக இருந்து விடாதீர்கள். சேமிப்பு, காப்புறுதி இவைகள் எல்லாம் தேவையே.   அலட்சியமாக இருந்தால் பணமும்   உங்களை உதாசீனம் செய்துவிடும்

சம்பள உயர்வை வரவேற்கிறோம்!

Saturday, 1 February 2025

பாராட்டுகிறோம்!


 பிரதமர் அன்வார் அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று  அங்குள்ள முதலீட்டார்களைச் சந்தித்து அவர்களை ஈர்த்து முதலீடுகளை நாட்டுக்குக்  கொண்டுவருவது  பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை.  ஒப்பந்தம் போட்டுவிட்டால் அனைத்தும் வந்துவிடும்  என்று பொருளல்ல. ஒரு சில வரலாம் ஒரு சில வராமல் போகலாம். வந்தால் நல்லது வராவிட்டால் கைநழுவி போய்விட்டது! அவ்வளவுதான்!

ஆனால் இதனாலெல்லாம்  சராசரி மலேசியர்களுக்கு என்ன இலாபம்? இதுபற்றியெல்லாம் அவர்களுக்கு  எநதக் கவலையுமில்லை. மக்களைப் பொறுத்தவரை அன்றாடப் பிரச்சனை தான் அவர்கள் முன் இருப்பது. முதலீடுகள் வரும்வரை காத்திருந்தால்  அவனும் அவனது குடும்பமும் பட்டினியோடு  சாக வேண்டியதுதான். அவனுடைய தேவையெல்லாம் அவனுடைய அனுதின உணவு அவன் மேஜைக்கு வரவேண்டும்.  அப்போது தான்  அவன் உயிரோடு வாழ முடியும்.

இன்றைய விலைவாசி ஏற்றம்  அவன் கழுத்தை நெரிக்கிறது. பொருள்களின் விலை குறைந்தபாடில்லை.  புதிய முதலீடுகள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?  அது எப்போதோ வரும். இன்றைய பிரச்சனையை எப்படி தீர்ப்பது? 

இதோ இந்த மாதத்திலிருந்து சம்பளம் கூடும் என்கிறார்கள்.  அதற்குச் சமமாக  பொருள்களின் விலையும் ஏறிவிடும். அதற்காகவே வியாபாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்! என்னத்தைக் கூட்டி என்னத்தைச் செய்ய! ஒரு பக்கம் ஏற்றினால் இன்னொரு பக்கமும் ஏறிவிடுகிறது!

இந்தச் சூழலில் பிரதமரைப் பாராட்டுகிறோம். அவருடைய கடமையை அவர் செய்கிறார். அவரைக் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.  அரசாங்கப் பணியாளர்களும் தங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கும் பிரதமர் தான் பொறுப்பு.

பிரதமரைப் பாராட்டுகிறோம்!