Tuesday, 9 November 2021

ஒரே காரின் மீது மழை!

                                                                   

                                                                Rain falling on a single car!

இது மாயமா மந்திரமா என்பது நமக்குத் தெரியாது! ஆனால் இப்படி ஒரு செய்தி வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை!

இப்போதெல்லாம் எந்த செய்தியாக இருந்தாலும் அதன் நம்பகத்தன்மை கேலிக்குறியாதாகி விட்டது  என்பது நமக்குத் தெரியும். கொஞ்சம் கற்பனைத் திறன் உள்ளவர்கள் இப்படியெல்லாம் செய்திகளை உண்மைச் செய்திகள் போல கொண்டு வந்துவிடுவார்கள்!    

  சந்தேகங்களை எல்லாம் விட்டுவிட்டு இந்த செய்தியை மட்டும் பார்ப்போம்.  இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படும் இடம் Cikarang, West Java, Indonesia  சுமார் பகல் 12.00 மணி அளவில் அங்குள்ள ஒரு ஹொட்டலுக்கு எதிரேயுள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் நடந்திருக்கிறது. எதேச்சையாக அங்கு போன Uryanriana என்னும் நபர்  தொடர்ந்து ஒரே ஒரு "தோயோத்தா எம்.பி.வி." கார்  மீது மழை பெய்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிசயத்துப் போய்  அதனைப் படம் எடுத்து வைராலக்கி விட்டார்!

இப்போது அவர்கள் நமது குடுகுடுப்பைக்காரர்கள் போல் "நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!" என்று குடுகுடுப்பயைக் கொஞ்சம் பலமாக ஆட்ட ஆரம்பித்துவிட்டார்கள்! எல்லாம் கடவுள் செயல் என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!

நமக்கு ஒன்றும் அதில் ஆட்சேபணையில்லை. இந்தோனேசியாவில் நல்லது நடந்தால் நமக்கும் நல்லது தானே! நமது அண்டை நாடு பலமாக இருக்க வேண்டும். வளமாக இருக்க வேண்டும். இந்தோனேசியர்கள் நல்ல உழைப்பாளிகள். அவர்கள் மீது நமக்கு நல்ல மரியாதையுண்டு.

ஆனாலும் இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறது! குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்யலாம். ஆனால் ஒரே ஒரு கார் மீது மழை என்பதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பது தான்  அவர்களின் முடிவு.

எப்படியிருப்பினும் அந்த காணொளியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் வரை நாமும் நமது நம்பிக்கையைத் தள்ளி வைப்போம்!                                                                                                                                        

Monday, 8 November 2021

வீரத்தாய் பார்வதி ராசாக்கண்ணு!



 

                                   நிஜ கதாபாத்திரம்: பார்வதி ராசாக்கண்ணு

ஜேய்பீம் திரைப்படம் பற்றியான விமர்சனங்கள் மக்களிடையே இப்போது பேசும்பொருளாக மாறியிருக்கின்றன. இந்த விமர்சனங்களின் மூலம் அல்லது இந்த திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் நம்மில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம். ஏற்பட வேண்டும். மனிதர்களாக பிறந்துவிட்டோம். சக மனிதர்களை மனிதர்களாக மதித்தால் போதும். மிதிக்க வேண்டாம்  அது தான் இந்த படத்தின் ஒருவரிக்கதை.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பவரின்  பெயர் லிஜோமோள் ஜோஸ்.நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு என்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்றிருக்கிறார்.

ஆனால் இங்கு நடிக்கத் தேவையில்லாத ஒரு பெண்மணியை மறந்துவிடக் கூடாது. அவர் தான் மேலே காணப்படும் பார்வதி ராசாக்கண்ணு. நேரடியாக துயரத்தை அனுபவித்தவர். கணவர் பட்ட துன்பங்களையும் நேரில்  பார்த்தவர். உதவ ஆளில்லை. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  வயிற்றிலும் அடித்துக் கொள்ள முடியாத ஒரு சூழல். இருளர் மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லை.

அப்படித்தான் அவர் வாழ்ந்திருக்கிறார்.  தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று பதிமூன்று ஆண்டுகள் அதிகாரத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் எதுவும் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை! நீதி மட்டுமே தேவை என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த நேரத்தில் படத்தில் வரும் ஒரு வசனத்தை  நினைவூட்டுகிறேன். "நான் வேலை செய்யுறேன். நான் ஏன் திருட வேண்டும்?" இப்படி ஒரு கேள்வியை பழங்குடியினரால் மட்டுமே கேட்க முடியும்! வேறு யாராலும் கேட்க முடியாது!

அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது என்பது சாதாரண விடயமல்ல. அதுவும் ஓர் இருளர் பெண்ணாள்.  அதனால் தான் அதிகார வர்க்கத்தினர்  கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ஊரை விட்டே ஓடிவிடும் பழக்கம் இதற்கு முன்னாள் நடந்திருக்கிறது. இப்போதும் நடக்கலாம். ஆனால் இனிமேல் நடக்காது என நம்பலாம். அதற்குக் காரணம் மேலே படத்தில் காணப்படும் வீர இருளர் பெண்மணி தொடுத்த வழக்கு; நீண்ட நாள் போரட்டம்.  13 ஆண்டுகள் காத்திருப்பு.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது ஓரளவு இந்த படத்தின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நிச்சயமாக  பெருமைப்படலாம்!

Sunday, 7 November 2021

வட்டி முதலைகள்!


 வட்டி முதலைகள் பற்றியான செய்திகளைப் படிக்கும் போது நமக்கு அவர்கள் மீது வருவது மிக மிகக் கடுமையான கோபம் தான்.

அந்த அளவுக்கு அவர்கள் மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் ஒரு கும்பல் என்பது நமக்குத் தெரிகிறது. எங்குப் பார்த்தாலும் அவர்களின் விளம்பரங்கள் கண்களுக்குத் தெரிகின்றன.

இவர்களின் விளம்பரங்களைப் பார்க்கின்ற போது அவர்கள் மீது நமக்கு எந்த வித சந்தேகமும் வருவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் சந்தேகப்பட முடியாத அள்வுக்கு அவர்கள் நல்லவர்களாகவே தெரிகின்றனர்.

ஆனால் அவர்களிடம் பணம் வாங்கிய அடுத்த நிமிடமே அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்! முதலையின் வாயில் அகப்பட்ட பிறகு தப்பிக்க எந்த வழியும் இல்லை! அவர்களிடமிருந்து வாங்கிய அசலும் வட்டியும் கட்டி முடித்த பின்னரும் அவர்கள் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அவர்களிடம் வாங்கிய கடனுக்கும் முடிவே  கிடையாது! கொடுக்கவில்லை என்று சொல்லி   வீட்டு  சுவர்களில்  சிகப்பு சாயம் அடிப்பது கார்களின் மேல் சாயத்தை அடிப்பது - இவைகளெல்லாம் தொடர் கதையாகவே நடந்து கொண்டிருக்கும்!

அதனால் தான் இந்த வட்டி முதலைகளின் மீது ஏதேனும் வன்முறை நடந்தால் நமக்கு அவர்கள் மீது எந்த அனுதாபமும் ஏற்படுவதில்லை. ஆகக் கடைசியாக படித்த ஒரு செய்தி வட்டி முதலை ஒருவர் பாராங் கத்தியால் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி நமக்கு எந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தவில்லை.

நமது கோபம் எல்லாம் காவல்துறை மீது தான்.  எத்தனையோ ரகசியக் கும்பல்களை எல்லாம் பிடித்து விடும் காவல்துறை ஏன் இவர்களை மட்டும் விட்டு வைத்திருக்கிறது என்பது புரியாத புதிராகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இன்னும் வளர்க்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதும் மிக வருத்ததிற்குரிய செய்தி.

இந்த கும்பல் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் நாம் கொடுக்கும் செய்தி. ஏற்கனவே பலர் இவர்களைப்பற்றி குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. காவல்துறை கடுமையாக இல்லை என்றால் அரசாங்கம் அவ்வளவாக நெருக்குதல் கொடுக்கவில்லை என்பது தான் பொருள்!

வட்டி முதலைகளிடமிருந்து பெறும் கடன் பெரும்பாலும் அரசியல்வாதிகளிடமிருந்து வெளியாகின்ற  பணம் என்பதாகத்தான் மக்களிடையே பேசப்படுகின்றது. ஆக அரசாங்கம் இது பற்றி கண்டு கொள்ளப் போவதில்லை.

மக்களைச் சுரண்டும் இந்த தொழில் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!