Tuesday, 31 December 2024

ஆண்டின் கடசி நாள்!


ஆண்டின் கடைசி நாள். ஒரு வருடம் ஓடிவிட்டது. என்னத்தை  சாதித்தோம் என்று புரியவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் வரும் போகும். சாதித்தது  என்ன என்பது தான் புரியாத புதிர்!

சரி அதை விடுவோம். மலேசிய இந்தியர்கள்  இந்த ஆண்டு  என்ன  மனநிலையில் இருந்தார்கள் என்பதைக்   கொஞ்சம் பார்ப்போம். 

இந்த ஆண்டு  இந்தியர்கள் அதிகமாக உச்சரித்த பெயர் என்றால்  அது பிரதமர் அன்வாரின் பெயராகத்தான் இருக்க வேண்டும்..  அவரைப்பற்றி நல்லது பேச யாருக்கும் மனம் வரவில்லை.  திட்டி தீர்த்தவர்கள் தான் அதிகம்.

"தேர்தலுக்கு முன் எம்.ஜி.ஆர். வேடம் போட்டார். தேர்தலுக்குப் பின் எம்.என்.நம்பியாராக மாறிவிட்டார்!" என்பது தான் இந்தியர்கள் அவர் மீது  வைத்த பொதுவான  குற்றச்சாட்டு.  "எண்பது விழுக்காடு ஓட்டுப்போட்டு அவரைத் தேர்ந்தெடுத்தோம்  ஆனால் பதவிக்கு வந்த பின் நம்மை அப்படியே ஒரங்கட்டிவிட்டார்!" என்கிற கோபம் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது! 

அதுவும் உயர் கல்வி,  தமிழ் கல்வி, பொருளாதாரம் என்று வரும்போது எங்கோ போய்  ஓடி ஒளிந்துகொள்கிறார் என்று  இந்தியர்கள் குற்றம்சாட்டும் அளவுக்கு அவர் நடந்து கொள்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அன்று அவர் பேசியது வேறு. இன்று அவர் அரசியலில் தொடர்ந்து பேர்போட வேண்டுமென்றால் மலாய்க்காரர்களின் ஆதரவு அவசியம் என்னும் நிலைக்கு அவர் வந்துவிட்டார்.  அதனால் அவரின் அரசியல் பாதை மாறிவிட்டது.

இப்போது முன்னாள் பிரதமர் நஜிப் கொஞ்சம் நல்லவராக இந்தியர்களின் கண்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டார். நிறைய நல்லது செய்திருக்கிறார் என்கிறார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். எல்லாம் காரணமாகத்தான் ஆடும். அப்படி ஒரு சூழல் இருந்தபோது, அவரை வைத்து, நம் அரசியல்வாதிகள் பெரிதாக அப்படி என்ன சாதித்துவிட்டார்கள்? அவர்களுக்காக சாதித்துக் கொண்டார்களே  தவிர மக்களுக்கு என்ன சாதித்தார்கள்?

நாம் குறைகளைச் சொல்லியே வீழ்ந்து போன சமுதாயம்.  இருப்புவனை வைத்துக் கொண்டே மேலே ஏறுவதற்கு  என்ன செய்யலாம் என யோசிப்போம். நமது எண்ணங்களை மாற்றி சிறப்பாக வாழ முயல்வோம்.

Monday, 30 December 2024

இன்னும் விலை கூடலாம்!

                           தே ஓ அய்ஸ் லைச்சி    விலை   RM15.00

இன்றைய நிலையில் எந்த  உணவு  அல்லது பானம் எந்த விலையில் விற்கப்படுகிறது  என்பது  யாராலும் கணிக்க முடியாத நிலைமையில் தான் நாம் இருக்கிறோம்.  எல்லாமே 100 விழுக்காடு விலையேற்றம்  என்றால் யார் என்ன செய்ய முடியும்?  யார் தான் விலைகளைக் கட்டுப்படுத்த முடியும்? அதற்கென தனி அமைச்சு  இருக்கத்தான் செய்கின்றது.  இருந்தும் இது போன்ற விலையேற்றங்கள் நடந்து கொண்டு தானே இருக்கின்றன.  

விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்  அதற்கு எதற்கு தனி அமைச்சு? தனி அமைச்சர்? வேலை செய்ய ஏகப்பட்ட வேலையாட்கள்?  பணம் வீண் விரயம் என்பதைக் கூடவா அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை?

கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எடுப்பது மாதிரியும் தெரியவில்லை. எடுப்பார்கள் எனவும் நம்பிக்கையில்லை. என்னடா இது மலேசியர்களுக்கு வந்த சோதனை!

இப்போதெல்லாம் இந்திய.  மாமாக் உணவகங்களில்  விலையேற்றம் என்பது நாம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துவிட்டது.  சொல்லுகின்ற காரணம்: விலைவாசி ஏற்றம். நமக்கும் புரிகிறது.  விலையை ஏற்றிவிட்டீர்கள்.  விலையை ஏற்றிவிட்டு தரத்தைக் குறைத்துவிட்டிர்கள். இட்டிலி சிறிதாக மாறிவிட்டது.  மீகொரங்  வாங்கினால் ஒரு கீரை கூட கிடையாது.அளவும் குறைந்து போனது. விலையை ஏற்றிவிட்ட பிறகு  ஏன் இது போன்ற தரக்குறைவான வேலையைச் செய்கிறார்கள் என்பது இன்றுவரை  நமக்குப் புரியவில்லை.

ஒன்று விலையை ஏற்றுங்கள் ஆனால் தரம், அளவு அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்.  தரம், அளவு  போன்றவைகளைக் குறைத்தால் விலையேற்றம் தேவை இல்லை.  அது தான் தரம் குறைந்துவிட்டதே அப்புறம் ஏன் விலையேற்றம்?  ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?  தரம், அளவு அனைத்தையும் குறைத்துவிட்டு அங்கும் இலாபம் பார்க்கிறீர்கள்.   விலையையும் ஏற்றி இங்கும் இலாபம் பார்க்கிறீர்கள்.

எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் உங்களுக்கும் சேர்த்துத்தான் அந்த நியாயம்!

Sunday, 29 December 2024

அதிகாரம் கொடுத்த தண்டனை!

 

         முப்தி, டத்தோ முகமட் அஸ்ரி  ஸைனல் அபிடின், பெர்லிஸ் மாநிலம்

நாம் தான் குழம்பி விட்டோமோ? பொதுவெளியில் தண்டனை  என்றால்   அதற்கும் இஸ்லாமிய ஷாரியா சட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்று பெர்லிஸ் முப்தி அவர்கள் சொல்லி இருப்பது  உண்மையில் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!

பொது வெளியில் தண்டனை என்றாலே அது இஸ்லாமிய சட்டம்  என்று தான்  நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான் நாமும் இது போன்ற சட்டங்கள் வேண்டாம் என்று  சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது முப்தி அவர்கள் நமக்கு ஒர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அது இஸ்லாமிய சட்டம் அல்ல என்கிறார். அது அதிகாரத்தில் உள்ளவர்கள்  கொடுக்கும் தண்டனையே தவிர இஸ்லாமிய சட்டம் அல்ல  என்பது  நமக்கும் புதுமையாகத்தான் இருக்கிறது.

ஷரியா சட்டம் என்றால் அது இஸ்லாமிய சட்டம்  என்று தானே நாம் அர்த்தம் கொள்கிறோம்?   இஸ்லாமிய சட்டம் இல்லை என்றால்  அது எப்படி  இது போன்ற சட்டங்களை  ஷரியா நீதிமன்றம் விதிக்க முடியும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

ஷரியா நீதிமன்றம் சிவில் நீதிமன்றம் இரு நீதிமன்றங்களும்  ஒரே வித  சட்டதிட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது நமக்கு மேலோட்டமாகத் தெரியுமே தவிர  அதுபற்றிய ஆழ்ந்த அறிவு நமக்கு இல்லை. ஒன்று மட்டும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் கொடுக்கப்படும் தண்டனைகள்  இஸ்லாமிய சட்டம் என்பதாக ஊடகங்கள் மூலமாக  நமக்குக் கொடுக்கப்பட்ட செய்தி. அவ்வளவுதான்.

முப்தி அவர்கள் சொல்லுவதைப் பார்த்தால்  அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது போன்ற சட்டங்களை நிறைவேற்ற  அதிகாரம் உண்டா என்பது  உண்மையில் நமக்குத் தெரியவில்லை. சிவில் சட்டம் நீதிபதிகளால் தீர்மானிக்கப்படுகிறது. ஷாரியா சட்டம் அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறதா? புரியவில்லையே!