Wednesday 29 June 2016

கேள்வி-பதில் (21)


கேள்வி

பூச்சோங் ஜெயா, I.O.I Boulevard, Movida Restaurant -ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாத கும்பலுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமோ?

பதில்

இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே  பலமுறை நடந்திருக்கின்றன. புதிது என்று சொல்லுவதற்கில்லை. காவல்துறையினர் அதனைத் தொழில் போட்டி அல்லது பொறாமை காரணமாக நடைப்பெற்ற சம்பவங்களாக வகைப்படுத்தினர்.

ஆனால் இப்போது நமது பார்வை மாறிவிட்டது! காவல்துறை சொல்லுவதை இப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! காரணம் சமீபத்தில் ஐ.எஸ்.ஐ.யின் மிரட்டல் - இன்னொரு பக்கம் பகாங் மாநில முப்தியின் மிரட்டல் - இது போன்ற மிரட்டல்களுக்கிடையே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்திருக்கின்றனர்.  ஒரு இந்திய இளம் தம்பதியினர் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். கணவர் ஜெயசீலன்,  கழுத்து, கால் மற்றும் முகம் ஆகியப் பகுதிகளில் கடுமையானக் காயங்களுக்கு உள்ளாகி அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவரின்  மனைவி பவானி கையில் ஏற்பட்ட முறிவுக்காக சிகிச்சைப் பெற்று வருகிறார். இருவரும் தங்களது இரண்டாம் ஆண்டு திருமண நிறைவு நாளைக் கொண்டாட முதன் முதலாக அந்த உணவுவிடுதிக்குச் சென்றிருந்தனர்.

இதற்கிடையே இந்தக் குண்டுவெடிப்புக்குத் தாங்களே காரணம் என ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதக் கும்பலின் மலேசியப்பிரிவு  அறிவித்திருக்கிறது.  "இது உங்களுக்கு முன் எச்சரிக்கை"  என அறிவித்துள்ளது. இவர்கள் சொல்வது உண்மையோ பொய்யோ ஆனால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த வெடிக்குண்டு சம்பவங்களால் இந்த அளவு மனித பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது தான் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. இரவு உணவுக்காக உணவகங்களுக்குச் செல்லலாம். ஆனால்  நேரத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். காலை, அதிகாலை என்று இழுத்துக்கொண்டு போகாதீர்கள். இந்த வெடிப்புச் சம்பவம் காலை 1.45 க்கு நடந்திருக்கிறது என்பதை மனதில் வையுங்கள்.

பயங்கரவாதக் கும்பல்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது! அவர்கள் உலக அளவில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நமது காவல்துறையோ இது போன்ற சம்பவங்களை இதுவரை எதிர்நோக்கியதில்லை! ஆனாலும் நமது காவல்துறையினர் மீது நமக்கு நம்பிக்கை உள்ளது.

நமது நாடு அமைதியான நாடாகத் தொடர்ந்து திகழ இறவைனைப் பிரார்த்திப்போம்! வாழ்க மலேசியா!


No comments:

Post a Comment