Thursday 16 June 2016

நோன்பு தானே! அதனால் என்ன....?


நோன்பு மாதம் இஸ்லாமியர்களுக்குப் புனிதமான மாதம். உலகளவில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து அந்த நோன்பின் பயனை உடல் ரீதியுலும் ஆன்ம  ரீதியிலும் பெற்று பயனடைகின்றனர் என்பதே அதன் சுருக்கும்.

நாம் அதுபற்றி இங்குப் பேசப்போவதில்லை.  நமது மலேசிய நாட்டில் இந்த நோன்பு மாதத்தில் எந்த அளவுக்கு நம் கண் முன்னே நிகழும் வீணடிப்புக்களைப் பற்றி - அதுவும் உணவுகள் வீணடிக்கப்படுவதை -   நாம் புரிந்து கொள்ளுவோம்.

 இதை நாம் மட்டும் சொல்லவில்லை. அரசாங்கமே சொல்லத்தான் செய்கிறது. இதனை எப்படி தவிர்ப்பது என்பதைத்  தான் நாம் மாற்றி  யோசிக்க வேண்டியுள்ளது!

ரமலான் மாதத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும்  சுமார் 9,000 டன் உணவுகள் குப்பைகளுக்குப் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி என்றால் ரமலான் மாதத்தில் மட்டும் சுமார் 2,70,000 டன் எடையுள்ள உணவுகள் தூக்கி வீசப்படுகின்றன.

நாம் தினசரி குப்பைகளுக்குப் போடும் உணவுகள் 15,000 டன் என்றால் அதில் சாப்பிடும் அளவுக்குத் தரமான உணவுகள் 3,000 டன் என்று (SWCorp) ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

ஆனால் இந்த ரமலான் மாதத்தில் வீணடிக்கப்படும் உணவுகள் பலவற்றை பல  சிறுவர் இல்லங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன என்பது ஒரளவு திருப்தி அளிக்கும் செய்தி. இந்த நல்ல காரியங்களைச் சில அரசு சாரா இயக்கத்தினர் செய்கின்றனர்.. ஆனால் இந்த உணவுகள் எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல்கள், உணவகங்கள், ரெஸ்டாடாரண்டுகளிலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு குடும்பங்களிலிருந்தும் குப்பைக் கூடைகளுக்கு வழி அனுப்பப்படுகின்ற உணவுகள் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட வில்லை!  இவைகள் எல்லாவற்றையும் மிஞ்சி விடும்! குடும்பங்களில் தானே அதிக வீணடிப்புக்கள்! நம்மைச் சுற்றிப் பார்த்தாலே போதும்; கண்களிலே தானகவே நீர் ததும்பும்!

நாம் கேட்டுக்கொள்ளுவதெல்லாம் ஒன்று தான். புனித மாதத்தில் உலகில் வறுமையில் வாடும் மனிதர்களை நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ இஸ்லாமிய நாடுகள் பசியால், பட்டினியால் வாடுகின்றன. நாம் கொடுத்து வைத்தவர்கள்! கொடுத்து வைக்காதவர்கள் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கின்றனர்.

நோன்பு நோற்பது புனிதம்; நோன்பு துறப்பதும்  புனிதம் தான்!


1 comment:

  1. fasting restricted eating has a focus to understand the pains of individual hunger but also brings to our attention social/political poverty created more by our greed as individuals and as communities..As leaders/humanistz like Nelson Mandela had said poverty is a social and economic construct..creation in general..let us go one more step on this sacred penance and understand our social responsibilities with regard to our resources..God bless..

    ReplyDelete