Wednesday 25 January 2017

சிங்கத்தமிழன் சிம்பு..!

நடிகர் சிம்புவை வெறும் விளையாட்டுப் பையனாகத் தான் பார்த்தோம். நடிகர் ராஜேந்திரனுக்கு ஒரு தறுதலை வந்து பிறந்திருக்கிறதே என்று தான் நினைத்தோம்.

ஆனால் பாருங்கள்,  ஒரே நாளில் அவரைப் பற்றிய அத்தனை அபிப்பிராயங்களும் மறக்கடிப்பட்டுவிட்டன!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற  மாணவர்களின் தன்னெழுச்சியைத் தான் சொல்லுகிறேன்.

சினிமா நடிகர்கள் கலந்து கொள்ளுவதை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விரும்பவில்லை. காரணம் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது 'சுயவிளம்பரத்தை'  தேடுவதாகவே அது அமையும் என்பது தான் அவர்களது நிலைப்பாடு. அது உண்மை தான். அதுவும் நடந்தது என்பதும் உண்மை.

ஆனால் மாணவர்களின் போராட்டத்திற்குக் கொஞ்சம் அட்டகாசமாகக் குரல் கொடுத்தவர் சிம்பு தான். 'நான் தமிழன் டா' என்று ஒங்கி ஒலித்தவர் அவர் தான்!

அவருடைய ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது! பல மாணவர்களையும், இளைஞர்களையும் அவரது குரல் ஈர்த்தது என்பதை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

தமிழ் நாட்டில் அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் தன்னைத்  தமிழன் என்று சொல்ல மாட்டான். காரணம் அவன் தமிழனாக இது நாள் வரை வாழவில்லை! வளரவில்லை! ஒரு தெலுங்கர், ஒரு மலையாளி, ஒரு கன்னடர் போல் தமிழன் மட்டும் தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்டுவதில்லை! காரணம் அவன் தமிழ்ச் சூழலில் வாழவில்லை! ஏதோ ஒரு கலப்பினத்தாரோடு வாழ்வதாகவே அவன் வளர்க்கப்பட்டு விட்டான்! திராவிடக் கட்சிகள் அப்படித்தான்  தமிழர்களை வளர்த்து விட்டன!

இந்தச் சூழலில் சிம்பு 'நான் தமிழன் டா'  என்று துணிந்து சொன்னது - அதுவும் ஒரு எழுச்சியை மாணவர்களிடையே ஏற்படுத்தியது என்பதும் உண்மை தான். அதன் பின்னர் தான் மெரினா கடற்கரையில் நாம் பார்த்தோம். ' நான் தமிழன் டா! நான் தமிழச்சிடா!' என்னும்  கோஷங்கள்!

இதனிடையே ஒரு பெட்டிச்செய்தி:  சென்னையில் சிறு வியாபாரம் செய்யும் ஒரு மலையாளப் பெண்மணி,   மாணவர்களுக்குக் குளிர்பானங்கள் விற்க மறுத்து விட்டாராம். காரணம், 'புதுசா என்னா தமிழன், தமிழன்னு சொல்லுறீங்க' என்று அவர்களைப் பார்த்து ஏசினாராம்! இப்போது புரிகிறதா? தமிழன் என்னும் சொல்லே தமிழ் நாட்டுக்கே புதிதாகப் போய்விட்டது! தமிழனை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலைமையில் தமிழன் இருக்கிறான்! தமிழன் என்று சொல்லுவதைக் கூட தமிழ் நாட்டில் உள்ள தமிழர் அல்லாதார் விரும்பவில்லை! அந்த அளவுக்குத் தமிழர்களை தலைகுனிய வைத்து விட்டார்கள் திராவிட ஆட்சியினர்!

இந்த நிலையில் தான் சிங்கத்தமிழன் சிம்பு சொன்ன 'நான் தமிழன் டா" என்னும் வார்த்தை  தமிழரிடம் வீறு கொள்ள வைத்து விட்டது என்பது உண்மையே! அதனைத்தான் மாணவர்கள் கடற்கரையில் எதிரொலித்தார்கள்!

இது ஆரம்பம் தான். இன்னும் போகப் போகத்தான் தெரியும் தமிழன் யார் என்று. அவன் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. தனது சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனம் என்றால் அது தமிழ் இனம் தான்.

திராவிடர்களின் ஆட்சியில் தனது மொழியை இழந்தான்! தனது கலாச்சாரத்தை இழந்தான்!  தனது பெருமைகளை இழந்தான்!  இழந்தான்! இழந்தான்! அனைத்தையும் இழந்தான்! இன்று இழந்தவைகளுக்காகப் போராட்டம் நடத்த சொல்ல வேண்டிய  நிலைமையில் இருக்கிறான்! இது தான் தமிழன் நிலை!

சிம்புவை போல தலை நிமிர்ந்து சொல்லுங்கள் 'நான் தமிழன் டா' என்று!






No comments:

Post a Comment