Saturday 26 August 2017

உழைப்பதில் தான் இன்பம் ..என் தோழா!


என்ன தான் சொல்லுங்கள், மனிதன் உழைக்கும் போது தான் இன்பம் காண்கிறான். உழைப்பே இல்லாமல் வெறுமனே, பூமிக்குப் பாரமாக இருப்பவன் துன்பத்தைத் தான் அனுபவிப்பானே தவிர இன்பத்தைக் காணப் போவதில்லை!

சும்மா இருப்பது என்பது  இன்பம் அல்ல; துன்பம்! ஒவ்வொரு மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் உழைக்கத் தான் வேண்டும். அந்த உழைப்பில் கிடைக்கும் நிறைவு வேறு எதிலும் அவனுக்குக் கிடைப்பதில்லை.

இன்று பெரும்பாலும் வயாதாகி விட்டால் உடனே ஓய்வு எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். வேலையிலிருந்து ஒய்வு எடுத்த பின்னர் "அக்கடா" என்று ஏதோ ஒரு சில நாள்களுக்கு ஒய்வு எடுக்கலாம். ஒரு மனிதன் முப்பது, நாற்பது ஆண்டுகள் வேலை செய்த பின்னர் அவனால் சும்மா இருக்க முடிவதில்லை. அவன் தொடர்ந்து ஏதாவது செய்தாக வேண்டும். அப்போது தான் அவனால் எப்போதும் போல் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லாவிட்டால் அவனுடைய மூளை மட்டும் அல்ல உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களும் மழுங்கிப் போகும்.

நமது சுற்றுப்புறத்தில் உள்ள சீனர்களைப் பாருங்கள். அதிலும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சீனர்களைப் பாருங்கள். அவர் சாகும் வரையில் அவர்கள் ஏதாவது செய்து கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் உடல் ஒத்துழைக்கும் வரை அவர்கள் வேலை செய்வதை யாராலும் நிறுத்த முடியாது. ஒரு சீன நண்பர் பத்திரிக்கை, மாத, வார இதழ்கள் விற்பனை செய்யும் பெரிய முதலாளி. வயதானவர்.  அவருக்கு என்ன வியாதி என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவருடைய தலை நிமிர்ந்த வாரே இருக்கும். அவர் அப்படியே தான் இன்னும் தனது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். எனது தமிழ் முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய வயது 90 ரை நெருங்குகிறது. கடையில் பலர் வேலை செய்தாலும் அவரும் இப்படியும் அப்படியுமாக ஏதாவது வேலை செய்து கொண்டு தான் இருப்பார். எனது மலாய் நண்பர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தினசரி பள்ளிவாசலுக்குப் போய், பள்ளிவாசலைச் சுத்தம் செய்வது, பெருக்குவது இன்னும் என்ன என்ன வேலைகள் இருக்கின்றனவோ அத்தனையும் செய்கிறார்.

இதன் மூலம் அவர்களுக்கு என்ன இலாபம்? பணம் அங்கு முதன்மைப் பெறவில்லை. அவர்களுடைய வயோதிகத்தை தங்களின் வேலைகளின் மூலம் தள்ளிப் போடுகிறார்கள் என்பது தான் உண்மை. போட்டி இல்லை, புலம்பல் இல்லை.  இருக்கும் வரையில் ஏதோ ஒன்றில் ஒர் ஈடுபாடு.  நம்மில் சிலர் புலம்புவது போல "காடு வா! வா! என்கிறது; வீடு போ! போ! என்கிறது" என்று புலம்பல் இல்லை! அது வரும் போது வரட்டும். அது வரை புல்ம்பலை விரட்டி அடிப்போம்! 

எந்த வயாதானாலும் உழைப்பு மட்டும் தான் நமக்குத் திருப்தியைத் தரும்.  உழைப்பு மட்டும் தான் நாம் இன்னும் உயிரோடு  இருக்கிறோம் என்பதற்கு அடையாளம்!

இருக்கும் வரை "உழைப்பதில் தான் இன்பம்! என் தோழா!" என்று உழைப்பில் மகிழ்ச்சி காண்போம்!

No comments:

Post a Comment