Friday 22 September 2017

71 - வது ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு


ம.இ.கா.வின் 71 - வது ஆண்டு  தேசியப் பேராளர் மாநாடு  வருகிற சனி, ஞாயிறு இரண்டு நாள்களுக்கு புத்ரா உலக வாணிப மையத்தில்   நடைபெறுகிறது.  தேர்தல் எந்த நேரத்தில் நடைபெறும் என்று உறுதி ஆகாத நிலையில் - ஆனால் வெகு சீக்கிரத்தில் நடைபெறும் - என்று எதிர்பார்ப்போடு இந்த ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது..

நாம் எல்லாரும் அனுமானிப்பது போலவே இது தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநாடு என்பதில் ஐயமில்லை. வழக்கம் போல பேராளர்கள் வருவார்கள், போவார்கள் என்பதைத் தவிர அவர்கள் ஒரே ஒரு பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் என்பதே நமது கணிப்பு.

யாருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் தான் முழுக் கவனமும் இருக்கும். இதனாலேயே பேராளர்கள் தங்கள் வாயைத் திறப்பதற்கு அஞ்சுவார்கள் என நம்பலாம். தலைவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்றால் அமைதியாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழியில்லை! அவர்களுக்குத் தொகுதிகள் கொடுக்கப்பட்டு தோற்றுபோனாலும் அது பாதகமில்லை.  தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அது அவர்களுக்கு ஒர் அனைத்துலக         கடப்பிதழக்குச் சமம்!  தோற்றுப் போனால் என்ன?  அவர்கள் மேல்சபையில் செனட்டர் ஆகலாம். மந்திரி பெசாரின் செயலாளர் ஆகலாம். மேல்சபை சபாநாயகர் ஆகலாம்,        டத்தோ, டான்ஸ்ரீ ஆகலாம், அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் கிடைக்கலாம், நகரசபைகளில் வாய்ப்புக்கள் கிடைக்கலாம் .....இப்படி நிறைய...லாம்...லாம்கள் உண்டு! அதனால் அவர்கள் கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்க வேண்டும். வேறு வழி? இதற்கெல்லாம் தாங்கள் லாயக்கில்லை என்று நினைப்பவர்கள் மட்டும் தான் கொஞ்சம் சத்தமாக வாயைத் திறப்பார்கள்! அது கணக்கில் வராத வெறும் காலி டப்பாக்கள்!

"சமூக நலம், பொருளாதாரம், கல்வி" இவைகளில் ஆதிக்கம் செலுத்தும் வியூகங்களை வகுக்க வேண்டும் என்றால் - இந்த வியூகங்களை எல்லாம் சாமிவேலு காலத்தில் காது குளிர கேட்டு விட்டோம்! -  புதிதாக வியூகங்கள் அமைப்பதை விட்டுவிட்டு இதுவரை அமைத்த வியூகங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்திருக்கின்றன என்று ஆய்வு செய்ய வேண்டும். காலாகாலாத்திலும் வியூகங்கள் என்று சொல்லி பேராளர்களை ஏமாற்ற வேண்டாம்! அல்லது சமீபத்தில் பிரதமர் அறிமுகப்படுத்திய  இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நீண்டகால பெருந்திட்டம் இதுவரை எந்த அளவுக்குப் பலன் தந்திருக்கிறது என்பதைப் பேராளர்களுக்கு விளக்க வேண்டும்.

எது எப்படியோ! நல்லது நடக்க வேண்டும்! அப்படி நடக்கவில்லை என்றால் அது இந்த சமுதாயத்தின் குற்றமல்ல! அதனை நீங்கள் புரிந்த்த்து கொண்டால் போதும்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment