Friday 15 September 2017

சமயப்பள்ளியில் தீ..


பள்ளிகளில் தீ சம்பவங்கள் என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  அதுவும் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் பள்ளிகள் என்றால் இன்னும் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். தீ சம்பவங்கள் நடந்து விட்டப் பிறகு யார் யார் மேலோ குற்றம் சொல்லுவது வழக்கமாகி விட்டது. அதிலும் கடவுள் மேல் குற்றம் சொல்லுவது நமது இயல்பாகி விட்டது!

கடைசியாக, டத்தோ கிராமாட் சமயப்பள்ளியில் நடந்த தீ விபத்து மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தீ விபத்து என்று சொல்லலாம். 21 மாணவர்களும் 2 வார்டன்களும் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் அதிர்ச்சியான செய்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஒரே நேரத்தில் பலியாகி இருக்கின்றனர். 10 வயது, 11 வயது, 13 வயது. தகப்பனை இழந்த பிள்ளைகள். தாயாரின் வேதனை .....வார்த்தைகள் இல்லை சொல்ல.




பொதுவாக சமயப்பள்ளிகள்  என்றாலே பல விஷயங்களை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. அதையும் அவர்கள் ஒரு சலுகையாகவே எடுத்துக் கொள்ளுகின்றனர். முதலில் அந்தச் சமயப்பள்ளியின்  கட்டடம் கல்வி கற்பதற்கான ஏற்ற இடமல்ல என்று நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. இருந்தும் பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்!  கற்க முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு அங்கு எப்படி தங்கிப் படிக்க முடியும்? ஆனாலும் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறுகிறது. தீ ஏற்பட்டால் அதற்குப் போதுமான பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாததனால் தான் 23 பேர் கருகி மாண்டிருக்கின்றனர். 

சமயப்பள்ளிகள் என்னும் போது பெற்றோரிடையே ஒரு மதிப்பும் மரியாதையும் உண்டு.  அங்குப் படித்துக் கொடுப்பது வெறும் சமயக்கல்வி மட்டும் அல்ல. மாணவரிடையே ஒழுக்கம், கட்டொழுங்கு, சட்டத்தை மதித்தல் பெரியவரைப் பேணுதல், நல்ல குடிமக்களாக வாழுதல் ... என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவைகள் அனைத்தையும் படித்துக் கொடுக்கும் பள்ளியில் அவர்களே சட்டத்தை அணுசரிக்கவில்லையே என்னும் போது - இது சரியாகப் படவில்லை. நிர்வாகத்தினரே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் இவர்கள் எப்படி மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்?

இது ஒரு மிகவும் சோகமான சம்பவம் என்பதில் ஐயமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது முக்கியம். அப்பள்ளியின் தலமை ஆசிரியர் சொல்லுவது போல "சமயத்திற்காக உயிர் துறந்தனர்" என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டு விட்டு, அதனைக் கடவுள் மேல் மேல் பழி சுமத்துவது போல் தான் இது. ஏற்கனவே இது போல் நடந்திருக்கிறது என்றால் மீண்டும் மீண்டும் அது நடக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல.

அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யவில்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

No comments:

Post a Comment