Wednesday 27 March 2019

ஏன் இந்த புலம்பல்...?


சமீப காலமாக அன்வாரின் மகள் நூருல்  இசாவின் குரல் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பிரதமர் டாக்டர் மகாதிரைப் பற்றியான அவரின் விமர்சனங்களைத் தினசரி பத்திரிக்கைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்லுவதில் தவறு ஏதும் இல்லை தான்.

ஏற்கனவே டாகடர் மகாதிரைப் பற்றியான இந்தியர்களின் விமர்சனமும் அப்படித்தான் அமைந்தன.  அது மட்டும் அல்லாமல் கடந்த காலங்களில் அவர் சர்வாதிகார மனப்பான்மையோடு தான் நடந்து வந்திருக்கிறார். அவருக்குச் சாதகமாக இல்லையென்றால் எந்தத் தடையையும் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார். அவை நியாயமாக இருக்க வேண்டுமென்கிற  அவசியமில்லை! அது அவருக்குச் சாதகமாக இருக்க வேண்டும் அல்லது அவரது சமூகத்திற்கு  ஆதரவாக இருக்க வேண்டும்.  இப்படித் தான் அவரின் கடந்த கால செயல்பாடுகள் அமைந்திருந்தன.

எது எப்படி இருப்பினும்அவர் காலத்தில் தான் நாடு வளம் மிக்க  நாடாக  முன்னேறிக் கொண்டிருந்தது. வேலை வாய்ப்புக்கள்  அதிக அளவில் பெருகி வந்தன. ஆள் பற்றாக்குறையால்  வெளி நாட்டுத்  தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர் செய்த பல தவறுகள்  இந்த முன்னேற்றத்தின்  மூலம் மறக்கப்பட்டன என்பது தான் உண்மை.

மக்கள் தங்கள்  பிழைப்புக்குத் தான் முன்னுரிமை  கொடுக்கின்றனர்.  தங்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும்.   பிள்ளைகளுக்குக் கல்வியைக்  கொடுக்க வேண்டும்.   இப்படித் தான் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் அவனை வழி நடுத்துகிறது.

இன்றும் டாக்டர் மகாதிர் மக்கள் மனதிலே உயர்ந்து நிற்கிறார் என்றால் அவர் காலத்தில்  தான் மக்கள்  நலமுடன் வாழ வழி கிடைத்தது.

ஆனால் நஜிப் காலத்தில் என்ன நடந்தது?  வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் பறி போயின. அந்நிய தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. விலைவாசிகள் எகிறின.  அரசாங்கத்தால் எதனையும் கட்டுப்படுத்த இயலவில்லை. 

அதனால் தான் தேர்தல் மூலம் புரட்சி ஏற்பட்டது! அறுபது கால அரசியல் ஒரு முடிவுக்கு வந்தது. புதிய அரசாங்கம் அமைந்தது. அதுவும் டாக்டர் மகாதிர் தலைமைத்துவத்தில்! மகாதிர் அரசியல் நெளிவு சுளிவுகளை அறிந்தவர். தில்லுமுல்லுகளைத் தெரிந்தவர். அதனால் தான் அவரின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

நூருல் இசா ஒன்றும் அறியாதவர் அல்ல. அன்று டாக்டர் மகாதிர் இல்லை என்றால் ஒரு புதிய மாற்றம் நாட்டில் ஏற்பட்டிருக்காது  நஜிப் ஆட்சியாளர்களைத் தனது கையில் கொண்டு வந்திருப்பார்! மீண்டும் அரசாங்கம்  நஜிப் கையில் வந்திருக்கும்.

டாக்டர் மகாதிரிடம் சில கொள்கைகள் உண்டு.   எளிதில் அவர் மயங்கி விட மாட்டார். மிகவும் உறுதியான மனிதர். அவருடைய செயல்கள் சில சமயங்களில் நமக்கு வலிக்கும்.

டாக்டர் மகாதிர் நாட்டிற்கு வளப்பத்தைக் கொண்டு வந்தவர்.  அதனால் அவருக்கு இன்னும் பேரும் புகழும் உண்டு. இப்போதும் மக்கள் அவரை நம்புகிறார்கள்.

அவரின் நடவடிக்கைகள் நமக்கு வேதனையைக் கொடுக்கலாம். பொறுத்துத் தான் ஆக வேண்டும்!

No comments:

Post a Comment