Saturday 22 June 2019

கேள்வி - பதில் (103)

கேள்வி

தமிழ்த் திரை  உலகின் நாயக நடிகர் கேப்டன் விஜயகாந்த்தின் சொத்துகள் ஏலத்திற்கு வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே!

பதில்

உண்மை தான.  செய்திகள் அப்படித்தான் கூறுகின்றன. 

நாயக நடிகர்களில் விஜயகாந்த் வித்தியாசமானவர்.  நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவர் சினிமாவிற்கு வரும் போதே நல்ல நிலையில் இருந்தவர். 

அவர் அரசியலுக்கு வந்ததே அவருக்குக் கெட்ட நேரமாகி விட்டது.  அரசியலுக்கு வந்ததே மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கம் தான் காரணம். அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது.

நல்ல மனிதர்கள் அரசியலில் பேர் போட முடியாது என்பதற்கு விஜயகாந்த் ஓர் உதாரணம்..  அதற்கெல்லாம் ஒரு வில்லத்தனம் வேண்டும். 

சினிமாவில் அவர் தொடங்கியதே கதாநாயகனாகத் தான்.  அதன் பிறகு எல்லாமே வெற்றி வெற்றி தான்.  அப்படியே அவர் இருந்திருந்தால் இன்று அவர் எப்படியோ போயிருக்கலாம்.

அரசியலுக்கு அவர் வந்தது கூட தவறில்லை.  ஆனால்  அவர் மனைவி பிரேமலதா ஏன் அரசியலுக்கு வந்தார் என்பது தான் புரியாத புதிர். அதோடு நிற்கவில்லை. பிரேமலதா  தனது தம்பியையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்!

கோடிக்கணக்கில் விஜயகாந்த் சேர்த்து வைத்த சொத்துக்களை நிர்வாகம் செய்ய ஆளில்லை என்கிற நிலைமை. பிரேமலதாவும் அவர் தம்பியும் நிர்வாகத்தில் அக்கறை காட்டவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். 

விஜயகாந்த் அரசியலில் கட்டிய கோட்டையையும் நிர்மூலமாக்கியவர் பிரேமலதா! 

ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்திற்கும் கால்கள் உண்டு. கைகள் உண்டு. இறக்கைகள் உண்டு.  அதனைப்  பாதுகாக்கா விட்டால் அது பறந்து போகும்!

பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உலகக் கோடிசுவரர் ஒருவர் பதில் சொன்னாராம்: "நான் பெரிய கோடிசுவரன் என்பது உண்மை தான். நான் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள இன்னும்  நான் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் இருக்கும் இடம் தெரியாமல்  போய்விடுவேன்!"

நமக்குத் தெரிந்த துறையை விட்டு தெரியாத துறைக்குப் போனால் என்ன ஆகும்? எல்லாமே ஆகும்!

No comments:

Post a Comment