Thursday 25 July 2019

நூறு நாள் பிரச்சனை முடிவுக்கு வந்தது...!

குடியுரிமை இல்லாத 3,00,000 இந்தியர்களின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகத் தோன்றுகிறது!

கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த "நூறு நாள்களில் தீர்ப்போம்" என்று பக்காத்தான் வழங்கிய உறுதி மொழி இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டதாகவே நமக்கு எண்ணத் தோன்றுகிறது!

ஆமாம், சமீபத்தில் ஜனநாயக செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று உள்துறை அமைச்சர், டான்ஸ்ரீ மொகிதின் யாசினை சந்தித்த போது  அவர் இந்த குடியுரிமை பிரச்சனைக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்து விட்டார் என நம்பலாம்!

கொல்லைப்புற வழியாக குடியுரிமை தரப்பட மாட்டாது என அவர் கூறியிருக்கிறார்.  மத போதகர் ஜாகிர் நாயக் அல்லது வங்காள தேசிகள் போன்ற எவருக்குமே கொல்லைப்புற வழியாக குடியுரிமை வழங்கப்பட வில்லை என்பதாகவே நாமும் எடுத்துக் கொள்ளுவோம். 

நம்முடைய நூறு நாள் தீர்ப்பு என்னவாயிற்று?  சமீப காலங்களில் சிலருக்கு, அதுவும் குறிப்பாக எழுந்து நடக்க முடியாத வயதானவர்களுக்கு, பக்காத்தான் அரசாங்கம் குடியுரிமை கொடுத்திருக்கிறது என்பது உண்மையே! அதனை மறுப்பதற்கில்லை!

பல இளைஞர்கள், நடுத்தர வயதினர் இவர்களையெல்லாம் பக்காத்தான் அரசாங்கம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்கத்தான் நினைக்கிறோம்.  அதையும் கேட்க முடியவில்லை.  நீதி, நியாயம் பேசும் அரசாங்கத்திடம் எப்படி கேள்வி எழுப்புவது?

முன்பு பாரிசான் அரசாங்கம் என்ன காரணங்களைச் சொன்னதோ அதே காரணங்கள் தான் இப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தலின் போது சொல்லப்பட்ட காரணங்களோ வேறு.  இந்தியர்களுக்குக் குடியுரிமை என்பது ஒரு சாதாரணப் பிரச்சனை. அதனைத் தீர்க்க நூறு நாள்கள் போதும்!   ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கல். நாங்கள் நூறு நாள்களில் முடித்து வைக்கிறோம் என்று சொன்னவர்கள் இப்போது ஏன் தடுமாறுகிறார்கள்? 

உண்மையைச் சொல்லப் போனால் பக்காத்தான் தேர்தல் காலத்தில் சொன்னது போலவே இது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல.  இது நூறு நாள் பிரச்சனை தான்.  ஏன் இவர்களால் தீர்க்க முடியவில்லை? ஒரு வேளை இதனை அடுத்த தேர்தல் நெருங்கும் போது இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால் இந்தியர்களின் வாக்கு இவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ!

எதுவும் சொல்ல முடியவில்லை. அரசியல்வாதிகள் எப்படி யோசிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுவது கடினம்!

எதுவும் அசையவில்லை என்றால் இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததாகவே எடுத்துக் கொள்ளலாம்!


No comments:

Post a Comment