Wednesday 24 July 2019

இது என்ன விளையாட்டா...?

நமது இளம் பெற்றோர்களைப் பற்றி என்ன சொல்லுவது? 

பலரும் அறிந்திருப்பர்.  ஜொகூரில் நடைப்பெற்ற சம்பவம் இது.  சின்னஞ் சிறிய பாலகன், இரண்டு வயது,  மது அருந்துகிற  காணொளி  ஒன்று வலைத்தளங்களில்  பகிரப்பட்டு வருகின்றது.


குழந்தை அவன். அறிந்தோ, அறியாமலோ செய்கிறான். யார் மீது குற்றம் சுமத்துவது?  பெற்றோர்களே அந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணமானவர்கள். வேறு யாரையும் சொல்லிப் பயனில்லை.

பெற்றோர்கள் சொல்லுகின்ற காரணங்களை எல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.  குற்றத்திலிருந்து  தப்பிக்க எதையாவது சொல்லலாம். அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

பிள்ளைகளைக் குடிக்க வைத்து வேடிக்கப் பார்ப்பது, இன்னும் இன்னும் என்று சொல்லி ஊக்கப்படுத்துவது, இப்படி செய்து சந்தோஷப்படுவதை எல்லாம் நாம் வரவேற்க முடியாது.

இந்திய சமுதாயம் குடிகாரச் சமுதாயம் என்று பெயர் எடுத்திருக்கிறோம். சீனர்களை விடவா நாம் குடிகாரர்கள்?  ஆனால் அவர்கள் குடிப்பது நம் கண்களுக்குத் தெரிவதில்லை.  ஆனால் நாம் குடிப்பது இந்த நாடே அறிந்திருக்கிறது! 

குடிகார நண்பர்களே! கொஞ்சம் யோசியுங்கள். குடித்துவிட்டு யோசிப்பதை விட, குடிக்கும் முன்பே யோசியுங்கள். நீங்கள் குடிப்பதமின்றி  உங்கள் பிள்ளைகளுக்கும் ஊற்றி விடுகிறீர்களே, இது எந்த ஊர் நியாயம்?

அட! அப்பன் தான் குடிகாரன்! அம்மாவுக்கு ஒரு பொறுப்பும் இல்லையா? தன் குழைந்தையைக் குடிக்க வைத்து வேடிக்கைப் பார்ப்பவர்களை சும்மா விட்டு விடுவதா!  நீங்கள் கண்டித்தால் இது நடக்குமா?  உங்கள் குழந்தை நாசமாய்ப் போவதை  நீங்கள் விரும்புகிறிர்களா?

இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு குடிகாரன் வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தக் குழந்தை குடிக்கும் விஷயம் தான்  அம்பலத்திற்கு வந்திருக்கிறது!

நண்பர்களே!  குழந்தைகளைக் குடிக்க வைத்து சந்தோஷப்படுவது  மிகப் பெரிய அயோக்கியத்தனம்! அதனைச் செய்யாதீர்கள்.  அவர்களுக்கும்  ஒரு வருங்காலம் இருக்கிறது. கவனத்தில் கொள்ளுங்கள்.

இது விளையாட்டல்ல!  விபரீதம்!

No comments:

Post a Comment