Wednesday 4 November 2020

iஇது சரியா? தெரியவில்லை!

"உங்களுக்குக் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி உடனடியாக வேண்டுமென்றால் எங்கள் சீன நாட்டு மீனவர்கள் அத்துமீறி கடலுக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்களை  விடுதலை செய்யுங்கள்!" என்பதாக சீன வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது!

இதற்கு முன்னர் வேறு ஏதேனும் நாடுகள் இது போன்ற கோரிக்கைகள் வைத்ததுண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. 

இது கோரிக்கை என்பதை விட பயமுறுத்தல் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 

இதனை நமது நாடு ஏற்றுக் கொண்டால் பிற நாடுகளுக்கு  நாம் ஒரு புதிய பாதையைக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் ஒன்று.  எல்லாவற்றுக்கும் சீனாவையே நம்பியிருக்கும் நாடுகளுக்கு இது போன்ற கோரிக்கைகள் புதியதோர் மிரட்டல்.  சான்றுக்கு பாக்கிஸ்தான்,  ஸ்ரீலங்கா இன்னும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த அனுபவம் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம்.  வேறு வழியில்லை! அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

மேற்கத்திய நாடுகள் என்றால் ஏதோ நீதி நியாயம், சட்டம் என்று வாய் கிழியப் பேசுவார்கள்!  ஆனால் சீனர்கள் எதனையுமே மதியாதவர்கள். மிரட்டல் ஒன்று தான் அவர்களின் பலம்! அதனை எப்படிக் கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். 

இந்த நேரத்தில் டாக்டர் மகாதிர் போன்றவர்கள் பிரதமராக இருந்தால் இப்படி ஒரு கோரிக்கையே வந்திருக்காது.  அது டாக்டர் மகாதிரின் பலம்.
ஆனால் இன்றைய நமது அரசாங்கமோ இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது. இது ஒர் இழுபறி அரசாங்கம்! எந்நேரத்திலும் கவிழலாம் என்கிற நிலையில் இருக்கும் அரசாங்கம்! இவர்கள் தங்களது பதவியில் நீடிப்பதற்கு நாட்டிற்கு எந்த துரோகத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் அரசாங்கம்! இந்த நேரத்தில் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது சீன அரசாங்கம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை!

இன்று பல நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது சீன அரசாங்கம்.  தனது பொருளாதார பலத்தை வைத்து மற்ற நாடுகளை தனது வலைக்குள் சிக்க வைக்கிறது என்பது தான் உண்மை.

அது மட்டும் அல்லாமல் மற்ற நாடுகளில் வியாபாரம் என்னும் பெயரில் ஒரு சில இடங்களையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. சான்றுக்கு பக்காத்தான் அரசாங்கம் இடையிலே ஆட்சிக்கு வராதிருந்தால் பகாங், குவந்தான் நகரத்தில் ஒரு பகுதி சீனாவுக்குச் சொந்தமாகியிருக்கும்! அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த பகுதியில் வேலை செய்தவர்கள் அனைவரும் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள்! உள்ளூரில் உள்ள  அரசாங்க அதிகாரிகள் கூட உள்ளே புக முடியாத அளவுக்குத் தங்களது கட்டுப்பாட்டில் அந்தப் பகுதியை வைத்திருந்தார்கள்! இது நஜிப் பிரதமராக இருந்த போது நடந்தது!

சீனா மற்ற நாடுகளின் உரிமைகளை மதிப்பதில்லை. முடிந்த வரை தங்களது பொருளாதார வலிமையை வைத்து  இலஞ்சம் தலைவிரித்தாடுகிற நாடுகளில் உள்ளே புகுந்து விடுகின்றனர். 

அந்த மனநிலையில் தான் இப்போது நமது நாட்டிலும் சீனா நடந்து கொண்டிருக்கிறது. தனது வலிமையைக் காட்டி பயமுறுத்தலில் ஈடுபடுவதாகவே எடுத்துக் கொள்ளலாம். 

சீன மீனவர்களை விடுவிப்பது சரியா என்பது தெரியவில்லை! சரியில்லை என்பது தான் சரியாக இருக்கும் என நம்புகிறேன்!

No comments:

Post a Comment