Sunday 14 February 2021

நான் தேடிய புத்தகங்கள்!

 என் வாழ்க்கையில் இரண்டு புத்தகங்களை முக்கியமான புத்தகங்களாக கருதுகிறேன்.  அப்படி சொல்லவும் முடியாது. அந்த புத்தகங்களுக்காக அலைந்தேன் என்று சொல்லலாம்!

முதல் புத்தகம் 1969-ல் டாக்டர் மகாதீர் எழுதிய Malay Dilemma.   அது முதலில் தடைசெய்யப்பட்ட புத்தகம். பின்னர் அதற்குத் தடையில்லை! இரண்டாவது புத்தகம் என்றால் இப்போது செய்திகளில் அதிக இடம்பெற்று வரும்  டான்ஸ்ரீ டோமி தோமஸ் எழுதியிருக்கும் My Story: Justice in the Wilderness. புத்தகம் இன்னும் தேடலில் இருக்கிறது! கைக்கு எட்டவில்லை! பயமுறுத்தல் நாடகம் தொடர்வதால் கொஞ்சம் சுணக்கம்!

பொதுவாக நான் ஒரு புத்தக பைத்தியம். விழுந்து விழுந்து படிப்பேன் என்று சொல்லலாம்! இப்போது  அந்த வேகம் குறைந்துவிட்டது! பாரவையில் கொஞ்சம் குறைபாடு! 

எனது இரசனையில் கொஞ்சம் வேறுபாடு உண்டு. நான் பெரும்பாலும்,  தமிழாக இருந்தாலும் சரி ஆங்கிலமாக இருந்தாலும் சரி,  தன்முனைப்பு புத்தகங்கள், சுய சரிதம், சுய முன்னேற்றம் சார்ந்த புத்தகங்கள் -  இவைகளில் அதிக நாட்டம் உடையவன்.

நான் இளமை காலத்திலிருந்தே டாக்டர் மகாதிரின் இரசிகன். அவரை எனக்குப் பிடிக்கும். அவரின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும். அவருடைய புத்தகமான Malay Dilemma வைப் படித்த போது உண்மையில் அவருடைய கருத்துகள் எனக்குப் பிடித்தமானவைகளாகத் தான் இருந்தன. அவர் சொன்ன கருத்துகள் இந்தியர்களுக்கும் ஏற்புடையவைகள்  தான்.  பிற்காலத்தில் அனைத்தும் தடம் மாறிவிட்டன!

இப்போது டோமியின் புத்தகத்தைப் படிக்க ஆசை இருந்தாலும் உடனடியாகக் கைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் கிடைக்கும்! பூதக்கண்ணாடி கொண்டு ஒவ்வொரு பக்கத்தையும் படிப்பேன் என்பது நிச்சயம்!

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன். படிக்க வேண்டும் என்றால் புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும். புத்தகங்கள் சும்மா ஏதோ வேலையற்றவன் எழுதியது அல்ல. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு அறிஞனோடு இருப்பது போல. பல புத்தகங்கள் என்றால் பல அறிஞர்கள் நம்மோடு இருப்பது போல.

எத்தனையோ புத்தகங்களை நான் தேடி தேடி வாங்கியிருக்கிறேன். ஆனால் இந்த இரண்டு புத்தகங்கள் விசேடமானவை!

தமிழர்கள் தொலைத்துவிட்ட தங்களது சரித்திரத்தை தெரிந்து கொள்ள படியுங்கள்! படியுங்கள்! படியுங்கள்!

No comments:

Post a Comment