Sunday 11 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (27)

வளர்ச்சி பெற்ற சமுதாயமாக மாறுவோம்!


                                            (Tan Sri G.Gnanalingm - Westports Holdings Bhd.)
வளர்ச்சி என்பது என்ன? எப்படிப் பார்த்தாலும் அது கடைசியில் போய் முடிவது பொருளாதார வளர்ச்சி என்பதில் தான். பொருளாதார வளர்ச்சி தவிர்த்து வேறு எதனையும் வளர்ச்சி என்பதாக இன்றைய உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை!

அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியை நாம் வெறுமனே பாரவையாளராக பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

நாம் களத்தில் இறங்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் பலர் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் பெரும்பாலான மனைவியர் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். அதுவே அவர்களுக்கு தொழிலில் இறங்குவதற்கு ஊக்கத்தை அளிக்கின்றது. ஓரளவு அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது. அதுவே அவர்களுக்கு அதிகப் பலத்தையும் கொடுக்கிறது. 

இன்று நம்மிடையே உள்ள பெரிய பயம் என்பது "தொழிலில் தோற்றுவிட்டால்?" அடுத்த என்ன செய்வது என்பது தான் பயத்திலும் பெரும் பயம்.  உண்மை தான். குடும்பத்தை வைத்து சூதாட்டம் ஆட முடியாது!  ஆனால் குடும்பத்தில் ஒருவர் வேலையில் இருந்தால் அதுவே நமக்குச் சாதகமாக அமையும். ஏதோ ஒரு வகையில் நமக்கு வருமானம் வருகிறது என்கிற போதே நமக்குத் துணிச்சல் தானாகவே வந்து விடும்!

மனிதனாகப் பிறந்து விட்டோம். ஒரு வேளை நாம் ஏழ்மையான சூழலில் பிறந்திருக்கலாம். அது நமது குற்றம் அல்ல! ஆனால் ஏழையாக மட்டும் சாகக் கூடாது. அது நமது குற்றம்!  எப்படிப் பார்த்தாலும் அடுத்தக்கட்ட வளர்ச்சி நமக்கு இருக்க வேண்டும். பிறக்கும் போது வீடு இல்லை, வேலை இல்லை என்று பல குறைபாடுகள் இருக்கலாம்.  ஆனால் அந்த குறைபாடுகளைப் போக்கி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு நம்மை நாம் நகர்த்திக் கொண்டு போக வேண்டும்.

அடுத்தக்கட்ட நகர்வு என்னும் போது ஒரு சொந்த வீடு, ஒரு வேலை நம்மை வளர்த்துக் கொள்ள சிறு முதலீடுகளைப் பெருக்கிக்கொள்ள  - இவைகள் எல்லாம் நமக்குத் தேவை  நம்மை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்ட செல்ல.  முதல் தலைமுறை ஏழ்மை, இரண்டாவது தலைமுறை ஏழ்மையை அகற்றல், வேலை அல்லது சிறு தொழில்களில் ஈடுபாடு. 

ஆனால் இரண்டாவது தலைமுறையே தொழிலில் ஈடுபாடு காட்டி தொழில் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். வழி வழி வணிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் சிறு முதலீட்டை வைத்துக் கொண்டே தொழிலுக்கு மாறி விடுகிறார்கள். 

எனக்குத் தெரிந்த ஒரு செட்டியார் குடும்பம். செட்டியார்கள் தோட்டத்தில் வேலை செய்ததை நான் பார்த்ததில்லை. தந்தை வயதானவர். நான்கு அண்ணன் தம்பிகள். முன்று பேர் பால் மரம் வெட்டும் வேலை. ஒராண்டு ஆன பின்னர்  பெரிய அண்ணன் மளிகைக் கடை ஆரம்பித்துவிட்டார். மற்ற இரண்டு பேர் இரண்டு ஆண்டுகளில் அவர்களும் தொழிலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றமவர் மிக இளம் வயது. கல்வியில் கவனம் செலுத்தி இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டியது. அப்பா எப்படியோ நொடித்துப் போனார். அவருடைய மகன்கள் ஒரு சில ஆண்டுகளில் மீண்டும்  தங்களை வணிகம் சார்ந்த சமூகமாக மாற்றிக் கொண்டனர், தங்களை வளர்த்துக் கொண்டனர். தங்களைத் தோட்டத் தொழிலாளர்கள்  என்கிற அடையாளத்தை  அவர்கள் விரும்பவில்லை.

இது தான் வளர்ச்சி. ஏன் எப்போதும்  தொழிலாளர் பரம்பரை என்கிற அடையாளம்?  மற்றவர்கள் நமது சமூகத்தைப் பார்த்து பெருமைப் பட வேண்டும். ஏதோ ஒரு தொழில், ஏதோ ஒரு சிறு தொழில், ஏதோ ஒரு நேரடித் தொழில் என்று ஈடுபாடு காட்டி நமது தொழில் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.வளர வேண்டும். வளர்ச்சி அடைய வேண்டும்.

நமது வளர்ச்சி நமது சமூகத்தின் வளர்ச்சி! நமது சமுதாயத்தின் வளர்ச்சி!

No comments:

Post a Comment