Monday 17 January 2022

புறக்கணிப்போம்!


 டீ சட்டைகள் யார் வேண்டுமானாலும் அணியலாம். அதற்கெல்லாம் யாருடனும் நாம் சண்டைக்குப் போக முடியாது.

பலவிதமான எழுத்துக்களைக் கொண்ட டீ சட்டைகள் விற்பனையில் உள்ளன. ஒரு சில நமக்கே கூச்சத்தை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் நாச்சம், கூச்சம் என்பதெல்லாம் என்னவென்று தெரியாத ஒரு சமுதாயமாக மாறிவிட்டோம்!

ஆனாலும் கூட டீ சட்டைகளில் கடவுள் படங்களுடன் வெளியாகும் போது மட்டும்  நாம் அசட்டையாக இருந்துவிடுகிறோம். அது நமக்கு உறைப்பதில்லை! நமது தோல் தடித்துப் போய்விடுகிறது!

இப்போது சமீபத்தில் தைப்பூசத்திற்காக  நாடெங்கும் டீ சட்டைகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாவித கடவுள் படங்கள். முருகர், கணேசர், சிவன், கிருஷ்ணர், அம்மன் போன்ற படங்கள் அச்சிட்டு விற்பனையில் இருக்கின்றன.

இங்கு ஒன்றை நாம் குறிப்பிட வேண்டும்.  தவறு எங்கோ இல்லை. நம்மிடம் தான் உள்ளது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாரையும் குற்றம் சாற்றுவதைவிட குற்றம் நம்மீது தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடவுள் படம் அச்சிடப்பட்ட டீ சட்டைகளை நிச்சயமாக ஒரு பக்தர் என்பவர் வாங்கத்தான் செய்வார். தவறு ஏதும் இருப்பதாக அவர் நினைப்பதில்லை. நாமும் நினைப்பதில்லை.  கடவுள் படம் உள்ள டீ சட்டைகளை அணிவதில் அப்படி என்ன தப்பு? கேட்கத்தான் செய்வார்கள்.

ஆனால் வாங்கிய பிறகு, நாம் அணிந்த பிறகு, அது பழைய குப்பையாகும் போது என்ன நடக்கும் என்பது தான் ஆன்மீகவாதிகளின் கேள்வி. சராசரி பக்தன் அது பற்றி யோசிப்பதுமில்லை நினைப்பதுமில்லை!

கடவுள் படங்கள் கொண்ட டீ சட்டைகள் காலில்  மிதிபடுவதையோ, குப்பைகளில் வீசப்படுவதையோ ஆன்மீகவாதிகள் விரும்புவதில்லை. ஏன்? யாருமே விரும்ப மாட்டார்கள்! ஏன்? சாதாரண தமிழ் எழுத்துக்களைக் கொண்ட பத்திரிக்கைகளைக் கூட காலில் மிதிப்பதை நாம் அனுமதிப்பதில்லை. அப்படி ஒரு பின்னணி நமக்கு உண்டு.

இதற்கான முடிவு தான் என்ன? நமக்குத் தெரிந்தவரை கோயில்கள் தான் அதற்குத் தகுந்த இடம். கோயில்களில் அது பற்றி பேச வேண்டும்.இதில் இரகசியம் ஒன்றுமில்லை. இளைய சமுதாயத்திற்குச் செய்தி போய் சேர வேண்டும். வீடுகளில் அது பற்றி பேச வேண்டும். வீடுகளில் கடவுள் வழிபாடு நடத்தும் போதெல்லாம் இந்த செய்தி பிள்ளைகளுக்குப் போதிக்கப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளும் இதனை வற்புறுத்த வேண்டும்.

அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென்பது நல்லது தான். அவர்கள் செய்வார்கள் என நம்புவதற்கு இடமில்லை. கட்டுப்பாடு என்பது நம்மிடமிருந்து புறப்பட வேண்டும். ஓரிருமுறை நாம் இது போன்ற டீ சட்டைகளைப் புறக்கணித்தால்  அப்புறம் அது  தானாகவே காணாமல் போய் விடும்!

No comments:

Post a Comment