Saturday 22 October 2022

இதுவே தகுந்த காலம்!

 

இதுவே தகுந்த காலம். ஆம்,  எதனையும் செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்த  அரசியல் அசகாய சூரர்களை மடக்குவதற்கு  இது தான் சரியான நேரம்.

கட்டடங்களைக் கட்டிவிட்டு பள்ளிகள் இயங்க இன்னும் அனுமதி கிடைக்கவில்லையா இது தான் சமயம். கழுத்தை நெரியுங்கள்! ஓடி வருவார்கள் உங்களுக்கு உதவிசெய்ய!  கல்வி அமைச்சைக் கதற வையுங்கள்! இது தான் சமயம்!  ஆனால்  வாக்களிக்கும் நாளுக்கு முன்பே  காரியத்தைச் சாதிக்க வேண்டும். அதன் பின்னர் என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகள்  காத்திருக்க வேண்டும்!

நிலங்களுக்கான பட்டா இன்னும் கிடைக்கவில்லையா? இது தான் சமயம்.  நெருக்குதலை ஏற்படுத்தினால் தான்  காரியம் கை கூடும். அவன் ஏதாவது பணமோ, பொருளோ கொடுக்க முயற்சித்தால் அதனை வாங்கிக் கொள்ளாதீர்கள். நிலப்பட்டாதான் வேண்டும் என்று அழுத்தம் கொடுங்கள். அவனிடம் பணம் வாங்கினால் ஆப்பு உங்களுக்குத்தான், மறந்துவிடாதீர்கள்!   ஒரு முறை பணத்தை வாங்கிக்கொண்டு  வாழ்நாள் நெடுகிலும் அவதிப்படாதீர்கள்!

சில்லறைத்தனமாக இந்த அரசியல்வாதிகள் எதையாவது கொடுத்துவிட்டு காரியம் சாதிக்கப்பார்ப்பார்கள். அவர்கள் எதைக் கொடுத்தாலும் தூக்கி எறியுங்கள்.  உங்களின், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

குடியுரிமைக்காக இருபது,  முப்பது ஆண்டுகளாகக் காத்துக் கிடக்கிறீர்களா இது நல்ல சமயம்.  உங்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லைதான் ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உரிமை இருக்கலாம்.   அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பியுங்கள்.  அது தான் அவர்களின் வேலை!

இப்போது நான் சொன்னவைகள் எல்லாம் நம்மை காலங்காலமாக ஆண்டு வரும் தேசிய முன்னணி கட்சியினரைப் பற்றித்தான்.  அவர்கள் தான் எல்லாகாலங்களிலும் இந்திய சமூகத்தை ஏமாற்றி வருபவர்கள். நம்மைப் போல் ஏமாந்தவர்கள் நாட்டில் இல்லை என்பதை அம்னோவினருக்கு நம்மைக் காட்டிக் கொடுத்தவர்கள் ம.இ.கா.வினர்.

இந்த முறை தேசிய முன்னணி எப்பாடுப்பட்டாவது வெற்றி அடைய வேண்டும் என்று விரதம் பூண்டிருக்கின்றனர்! அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கின்றனர். அதனால் இந்தியர்கள் இந்த முறை எல்லாவற்றையும் யோசிக்க வேண்டும். ஏதோ சில சில்லறைகளுக்காக உங்களை அடகு வைத்துவிடாதீர்கள்! உங்களையே கேவலப்படுத்திக் கொள்ளாதீர்கள்! கேவலப்பட்டுப் போகாதீர்கள்.

இது போன்ற நல்ல நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நமக்குக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இது போன்ற கெட்ட நேரம் அவர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும்.

நல்ல நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment