Saturday 15 October 2022

பரவாயில்லை! தமாஷ்தான்!

 

ஒரு சில விடயங்களைத் தமாஷாக பேசுவதாக நினைத்து சிக்கலில் மாட்டிக் கொளவதை நாம் பார்த்திருக்கிறோம்!

அப்படித்தான் தேசிய முன்னணியின் தலைவர் ஸாஹிட் ஹமிட் தேவையில்லாமல் வாயைவிட்டுவிட்டு "எதிர்க்கட்சிகள் எனது உரையை திரித்துக் கூறுகின்றன" என்று அவர் பேசிய பேச்சுக்கு அவரே  மறுப்பும் தெரிவித்திருக்கிறார்!

அப்படி என்ன தான் சொன்னார்? அவர் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை போகாமல் ஏறக்குறைய இப்படித்தான் சொன்னார்: "எதிர்க்கட்சியினர் ஆட்சிக்கு வந்தால்  அம்னோ தலைவர்களை மட்டும் குறி வைப்பார்கள் என்று நினைக்காதீர்கள்! ம.இ.கா., ம.சீ.ச. தலைவர்களையும் குறி வைப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!"  என்பது தான் அவர் சொன்னதின் சுருக்கம்.  "குறி" என்றால் "ஊழல்"  என்பது  அதன் பொருள்!

இப்படிச் சொன்ன போது ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புன்னகைப்  பூத்தாராம்!  அப்போது தான் ஸாகிட் இப்படிக் கூறியதாகத் தெரிகிறது.

ஸாகிட் சொல்ல வருவதென்ன? 'அலட்சியமாக இருக்காதீர்கள்!  வெற்றி பெற கடுமையாக உழையுங்கள்' என்பதைத்தான் அவர் சொல்லுகிறார். தவறு ஏதும் இல்லை. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொண்டால் துவம்சம் பண்ணி விடுவார்கள் என்று அவர் தேசிய முன்னணி கட்சிகளுக்கு  ஆலோசனைக் கூறுகிறார்.

அவர் சொல்லுவதில் நியாயமுண்டு.  இருபத்திரண்டு மாத பக்காத்தான் கட்சியின் ஆட்சியில் அகப்பட்டவர் தான் நஜிப் ரஸாக். என்ன நடந்தது என்பது தெரியும். இப்போது மீண்டும் தேசிய முன்னணியின் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது என்ன நடக்கிறது என்பதும் தெரியும்.  அதனால் தேசிய முன்னணி ஆட்சிக்கு வராவிட்டால் எங்கேயாவது ஓடி ஒளிய வேண்டிவரும் என்பது அவருக்குத் தெரியும்!

தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் ஸாகிட் ஹாமிட்  புனிதரோ புனிதராகி விடுவார்! அவர் சார்ந்த கூட்டணியில் உள்ளவர்கள்   புனிதம் பெற்று விடுவர்.

இதையெல்லாம் வைத்துத்தான் அம்னோ ஒரு  கணக்கைப் போட்டு வைத்திருக்கிறது. மழை வருகிறது, வெள்ளம் வருகிறது என்றால் அந்தச் சூழல் ஆளும் தரப்பினருக்குச் சாதகமாக அமையும் என்று நினைக்கிறார்கள். எப்படி?  வெள்ளம், மழை என்றால் மக்கள் வாக்குச்சாவடிகளுக்குப் போவதைத் தவிர்க்க விரும்புவார்கள். ஆனால் அம்னோ வாக்காளர்கள் நூறு விழுக்காடு வாக்களிப்பார்கள் என்று அம்னோ நம்புகிறது! அதுவே அவர்களுக்கு வெற்றியைத்தரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

பரவாயில்லை! சும்மா  ஒரு தமாஷ் எப்படியெல்லாம் நம்மை யோசிக்க வைக்கிறது, பார்த்தீர்களா!

No comments:

Post a Comment