Friday 29 December 2023

ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆபத்தா?


பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆபத்து என்பதாக அடிக்கடி  செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  அதாவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது.

ஆனால் பிரதமரோ அது பற்றி வரும் கேள்விகளுக்கு அது பற்றி சிந்திக்க தமக்கு நேரமில்லை என்பதாகச் சொல்லி  கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கேள்விகளைப் புறந்தள்ளிவிடுகிறார்!

அவர் சொல்லுவது சரிதான். தேவையற்ற கேளவிகளுக்குப் பதில் சொல்லத் தேவை இல்லை தான்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது  அதனைக் கவிழ்ப்பது, இடைஞ்சல் கொடுப்பது  என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று.

இந்த பிரதமரின் அரசாங்கத்தில் தவறு நேர்ந்தால் அதனைச் சுட்டிக் காட்டுங்கள்.  கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டால்  அதற்கான நடவடிக்கை எடுங்கள்.   வீதி ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பது  அல்லது  ஜனநாயகத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள்.   அது தான் எதிர்கட்சிகளின் வேலை. 

தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்பது  மக்களின் கடமை. அதனையும் செய்யும் உரிமை நமக்கு உண்டு. எல்லாம் ஜனநாயக ஆட்சியில் அனைத்தும் உண்டு.

இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தான்  எங்கள் வேலை என்று அதற்காகவே பிறந்தோம் என்பது போல செயல்படுவது சிறுபிள்ளைத்தனமாகவே நமக்குத் தோன்றுகிறது. அன்று பட்டுக்கோட்டையார் சொன்னாரே 'ஆளும் வளரணும்  அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி'  என்பது போல  அறிவு வளர வேணடும்.  சும்மா என்னவோ பெரிய மனிதர்களைப் போல ஆடை அணிந்துவிட்டால் அறிவு வளர்ந்து விட்டதாக  பொருளில்லை.

ஏதோ ஒரு காலகட்டத்தில் ஷெரட்டோன் நடவடிக்கை என்று சொல்லி  அரசாங்கத்தைக் கவிழ்த்தார்கள்.  அதிலிருந்து பதவி என்றால் என்ன என்கிற  ஆசை, ஆர்வம் எல்லாம் எதிர்கட்சியினருக்கும்  வந்துவிட்டது போலும்.  இப்போது துபாயில் கவிழ்க்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.  நடக்கட்டும்.   நமக்கு என்னவோ வேலையற்ற வீணர்களின் வீணான வேலை என்பதாகத்தான் படுகிறது.

நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும்  என்பது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை.  எப்படியாவது  மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும். பொய்களைப் பரப்பியாவது பதவிக்கு வரவேண்டும்.

ஒற்றுமை அரசாங்கம் மீதமுள்ள இன்னும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யும்.  அது தான் நடக்கும்!

No comments:

Post a Comment