Friday 20 May 2016

எல்லாம் நன்மைக்கே!


எல்லாம் நன்மைக்கே!

இதனைத் தெரிந்து கொண்டால் போதும். எந்தப் பிரச்சனையும் நமக்கு வராது. எது நடந்தாலும் அது நன்மைக்குத்தான். நாம் தீமை என்று எதை நினைக்கிறோமோ அது அந்தக் கணத்தில் நமக்குத் தீமையாகக் காட்சியளிக்கிறதே தவிர அது உண்மையில் அது தீமையல்ல! பின்னர் நாம் யோசித்துப் பார்க்கும் போது அது நன்மைக்குத் தான் நடந்தது என்பது நமக்குப் புரியும்.

ஒவ்வொரு கசப்பான அனுபவத்திலும் ஒரு நன்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது அப்போது நமக்குத் தெரிவதில்லை. அதனை விளாவாரியாகப் பிரித்துப் பிரித்துப் பார்க்கும் போது அங்கும் ஒரு ஒளி  உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கும். அதனைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்வதில்லை.

ஒரு நண்பர் இறந்து போனார். இதில் என்ன 'நன்மைக்கே'? சம்பாதிக்கும் வரையில் அவர் கவலையில்லாத மனிதர். 'தண்ணி' அடிப்பதில் பலே கில்லாடி! வேலை செய்ய முடியாத நிலை வந்தது. 'தண்ணி'' அடிக்கப் பணம் இல்லை! பிள்ளைகள் பணம் கொடுப்பதாக இல்லை. வெளியே சுற்றிக் கொண்டிருப்பார். அவ்வப்போது கையை நீட்டுவார். ஒரு நிரந்தர பிச்சைக்காரனாகும் முன்னேரே இறந்து போனார்! இதில் என்ன நன்மை?  அவர் பிச்சைக்காரர் ஆகவில்லையே! அது நன்மை. அவர் குடும்பத்திற்கு நிரந்தர பாரமாக இல்லாமல் - எந்த ஒரு பொறுப்பும் - இல்லாத நிலையில் போய் சேர்ந்தது அவருக்கு  அது நல்லது தான். இருந்திருந்தால் அவர் நிரந்தர துன்பத்திற்கு ஆளாகியிருப்பார். எங்கேயாவது அஞ்சடியில் படுத்துக் கிடந்திருப்பார். கால்வாய்களில் விழுந்து கிடந்திருப்பார். கடைசியில் அனாதை விடுதியில் அடைக்கலமாகியிருப்பார்!

இறப்பு மட்டும் என்பது அல்ல. எல்லாப் பிரச்சனைகளிலும் ஏதோ ஒரு வகையில் அதிலுள்ள நன்மைகள் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. தீமைகளைப் பெரிதுபடுத்துவதால் - தீமைகளை மட்டும் பூதக்கண்ணாடிப் போட்டுப் பார்ப்பதால் - நன்மைகள் நமது கண்களுக்குப் புலப்படாமல் ஒளிந்து கொள்கின்றன.

எல்லாவற்றையும் விட எது நடப்பினும் "எல்லாம் நன்மைக்கே!' என்னும் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். 'போனால் போகட்டும் போடா!' என்று கண்ணதாசன் பாடல் ஏன் சமயங்களில் நமக்கு நினைவிற்கு வருகிறது? அதற்கு மேல் செய்ய எனக்கு ஒன்றுமில்லை என்று ஒரு விரக்தியில் வருகின்ற பாடல் அது! ஆனால் எல்லாம் நன்மைக்கே என்பது விரக்தி அல்ல. ஆக்ககரமானது! இந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு; நல்லது உண்டு என்னும் நம்பிக்கையைக் கொடுக்கின்ற வரிகள் அவை.

வருவது வரட்டும்! எல்லாம் நன்மைக்கே! நடப்பது நடக்கட்டும்! எல்லாம் நன்மைக்கே!

மனந்தளராதீர்கள்! எல்லாம் நன்மைக்கே!

No comments:

Post a Comment