Thursday 26 May 2016

இப்படியும் ஒரு வழியிருக்கு...!


தேசியப் பள்ளியில் ஒர் மலாய் ஆசிரியர் மாணவிகளிடம் விஷமத்தனம் பண்ணினால் அந்த ஆசிரியரை என்ன செய்வார்கள்?

அந்த ஆசிரியர் அங்கேயே  இருந்தால் அந்தப் பள்ளியில் உள்ள மலாய்க்காரப் பெற்றோர்கள் அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக்கி பின்னர் அதனையே தேர்தல் பிராச்சாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்! அந்த ஆசிரியர் தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே இருந்தால் - அல்லது பிரச்சனை பெரிதாக்கப்பட்டால் -  அந்தப் பள்ளியின் பெயெர் கெடும்; பெற்றோர்கள் பிள்ளைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்! பெற்றோர்கள் பள்ளியைப் புறக்கணிக்க வேண்டி வரும்!

இதனையெல்லாம் தவிர்க்க கல்வி அமைச்சு ஒரு புதிய வழிமுறையைக் கண்டுப்பிடீத்திருக்கிறது. மிகவும் சுலபமான முறை! பள்ளியின் பெயரும் கெடாது! பிரச்சனையும் தணிந்து விடும்!

சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றப்படுவார்! இதுவே மிகச்சிறந்த வழி என கல்வி அமைச்சு கண்டுபிடித்திருக்கிறது!

அப்படி என்ன சிறந்த வழி? தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பவதால் அவர் திருந்திவிடுவாரா அல்லது திருத்தப்படுவாரா? இரண்டுமே இல்லை! அந்த ஆசிரியர் தொடர்ந்து தனது லீலைகளைத் தொடரத்தான் செய்வார்! ஆனால் இங்கு கேட்கத்தான் ஆளில்லை! பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்வார்கள். பின்னர் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலையிடும்.தலைமை ஆசிரியர் தலையைச் சொறிந்து கொண்டு கல்வி அமைச்சை கை காட்டுவார்! அதற்கு மேல் அவரால் ஒன்னும் செய்ய முடியாது! அவர் தலையிட்டால் அவரை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள்! ஏன் அந்த வம்பு?

கல்வி அமைச்சிடம் புகார் செய்யும் போது அவர்கள் தலையாட்டுவதோடு சரி! எந்த நடவடிக்கையும் எடுக்க  மாட்டார்கள்! காரணம்,  காரணர்களே அவர்கள் தானே!  காவல்துறைக்கும் புகார் செய்ய பெற்றோர்கள் பயப்படுகிறார்கள். அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வரும் என்பது அவர்களது பயம்!

அவர் ஒரு  மலாய் ஆசிரியர் என்னும் ஒரே காரணத்திற்காக மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை அனவருமே அவருக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது!

 பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள். எந்த வம்புதும்புக்கும் போகாதவர்கள்! ஒன்று செய்யலாம். அவர்கள் இருக்கும் இடத்திலுள்ள மலாய்க்கார சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற  உறுப்பினரை அழைத்து இந்தப் பிரச்சனைக்கு ஒரு
 தீர்வு காணலாம்.

அதுவே வழி! முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்! இன்னொரு வழியும் உண்டு. ஒரு தமிழ் ஆசிரியர் இப்படி செய்திருந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ அதனைச் செய்யலாம்!

No comments:

Post a Comment