Friday 27 May 2016

பணம் பத்தும் செய்யும்!


பணம் பத்தும் செய்யும்! இது அனுபவ மொழி!

யாருக்குத்தான் தெரியாது? பணம் பத்தும் மட்டுமா செய்யும்? அடாடா! எத்தனையோ செய்யும்! எல்லாமே செய்யும்!  என்னன்னவோ செய்யும்!

பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்! எங்கும் பாயும்! எதிலும் பாயும்!

நம் நாட்டில் நமது தமிழ் மொழி பல இடங்களில் புறக்கணிக்கப் படுகின்றது. அதே சமயத்தில் சீன மொழிக்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை.. காரணம் என்ன? தமிழ்,  பணம் இல்லதவர்களின் மொழி. சீனம்  பணம் உள்ளவர்களின் மொழி.

தேசிய மொழி பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனல் தமிழ் மொழி இல்லை. சீன மாணவர்கள் இருக்கிறார்கள். சீன மொழி உண்டு.

அது தான் பணம் பத்தும் செய்யும் என்பது. இப்படிப் பத்தும் செய்யும் பணத்தை நாம் அலட்சியம் செய்ய முடியுமா? ஆனால் நாம் அலட்சியம் செய்கிறோம். குடித்தே பணத்தை அழிக்கத் தயாராய் இருக்கிறோமே தவிர பணம் நமக்கு வலிமையான ஆயுதம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

சொந்த வீடு நமக்குத் தேவை. ஆனால் நாம்  வாங்கிய கடனை வங்கியில் கட்டிய  பின்னரே அது நமது வீடு. அது வரையில் அந்த  வீடு வங்கியுனைடய வீடு. அதை நாம் மறந்து விடக்கூடாது!

சொந்தக் கார் என்பது நமது தேவைக்குத்தான். அது சொத்து அல்ல வீட்டின் மதிப்பு ஏறும். காரின் மதிப்புக்  குறையும்.  வீடும் சரி, காரும் சரி, நமது மாதாந்திர தவணையைக் கட்டாவிட்டால் இரண்டும் நம்மை விட்டுப் பறந்து போகும். அவைகள் வங்கியினரின் சொத்துக்கள்!

எல்லாம் பணம் தான்! ஏ.டி.எம். (ATM) -ல் தமிழைக் காணோம் என்று அடிக்கடித் தேடிக் கொண்டிருக்கிறோம். பணம் இல்லாதவனை எவன் மதிப்பான்? தமிழர் சமுகம்,  பொருளாதார ரீதியில் வலிமையான சமூகமாக இல்லாவிட்டால் இந்தச் சமூகம் ஒரு தீண்டத் தகாத  சமூகமாகிவிடும்.

நான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம் பணத்தின் முன் அடிபட்டுப் போகும். பணம் உள்ளவன் தான் மதிக்கப்ப்டுபவன். பணம் இல்லாதவன் மிதிக்கப்படுபவன். அதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பணம் பத்தும் செய்யும்; பல கோடியும் செய்யும். அது நம் கையில் இருக்க வேண்டும்; நமது பையில் இருக்க வேண்டும். வங்கியில் வைப்புத்தொகையாக இருக்க வேண்டும். நிறுவனங்களில் நித்தியமாக இருக்க வேண்டும். நிதி மையங்களில் பங்குகளாக மிளிர வேண்டும்.

பத்தும் செய்ய பணத்தை பத்திரமாகப் பாதுகாப்போம்! பத்திரப்படுத்தி வைப்போம்! பரவலாகப் பயன் படுத்துவோம்! பாதுகாப்பாக வாழ்வோம்!

பத்தும் செய்யும் பணமாக இருக்க வேண்டுமானால் அது நமது பணமாக இருக்க வேண்டும்!

பணமே பலம்! பத்தும் செய்யும் பணம்  நமக்குப் பலமே!


No comments:

Post a Comment