Friday 22 July 2016

பதவி வரும் போது பணிவு வரவேண்டும் தோழா...!


"பதவி வரும் போது பணிவு வரவேண்டும்,  துணிவும் வரவேண்டும் தோழா!" என்பது கவிஞர் வாலியின் என்றும் வாழும் பாடல்; என்றென்றும் பாடும்  பாடல்.  எம்.ஜி.ஆர். அவர்களுக்காகப் பாடிய பாடல்.

பதவியில் இருப்பவர்கள் என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய பாடல். எம்.ஜி.ஆர். வாரிசுகளே அதனைப் பின் பற்றவில்லை என்பதால் அந்தப் பாடலின் வலிமை குன்றிவிடவில்லை!.

நமது நாட்டில் இந்தியர்களில் பலர்  பல  பெரிய பதவிகளில் இருந்திருக்கின்றனர்' இருந்தும் வருகின்றனர். இதில் சில அரசியல் பதவிகள்; சில கல்வித்தகுதியின்  அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவிகள். ஆனாலும், அவைகள் அனைத்தும், இந்தியர்களின் சார்பாக உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவிகள். இந்தியர்களை நீங்கள் பிரதிநிதிக்கிறீர்கள்.  அதிலே நீங்கள் ஐயப்பட ஒன்றுமில்லை!

எந்தத் தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டாலும் நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். அந்தப் பதவியின் மூலம் நீங்கள் இந்தியர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன. அதனை நீங்கள் செய்யத் தவறினால் அந்தப்பெரும் இழப்பு நீங்கள் பிரதிநிதிக்கும் சமுதாயத்திற்குத்தான். உங்கள்  சமுதாயம்  சாக்கடையில் கிடக்கும் போது நீங்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழ நினைத்தால் உங்களின் பெயர் சொல்ல  எதுவும் இல்லாமல் போகும். இழிவு ஒன்று தான் உங்கள் பெயராக இருக்கும்; என்றும் உங்களைத் தொடரும்!

யாரிடமோ நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குக் கிடைக்கின்ற சலுகைகளை நிறுத்துவது, நமக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை பிறருக்கு மாற்றுவது,  உயர்கல்விக்கூடங்களில் தமிழ்க்கல்வியை மூட வைப்பது   - இவைகளெல்லாம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை மேலும் வீழ்ச்சியடையவே செய்யும்.  துரோகிகள் துரைமார்களாக வாழ முடியாது! கறைபடிந்தவர்களாகத்தான் கசிந்து போவார்கள்!

துன் சம்பந்தன் அவர்கள் பத்து பத்து வெள்ளியாகச் சேர்த்து தோட்டங்களை வாங்கினார். அதனால் பலர் பயன் பெற்றனர். அவர் பெயர் என்றென்றும் நம்மிடையே நிலைத்து நிற்கும். டத்தோ பத்மநாபன், பி.எஸ்.என். வங்கியின் இயக்குனர் குழுவில் இருந்த போது நிறைய இந்தியர்களை வேலைக்கு அமர்த்தினார்.  இன்றும் அது தொடருகிறது. அது அவர் செய்த ஒரு மாபெரும் சேவை. குறைந்த காலமே பதவியில் இருந்த டத்தோ பழனிவேலு  தனது பதவி காலத்தில் கல்வித் துறையில் மாபெரும் சேவை செய்துள்ளார். இன்றும் நிறைய இந்திய மாணவர்கள் உயர்க்கல்விக் கூடங்களில் சேர்க்கப்படுகின்றனர். அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்! சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் காலத்தில் நிலக்குடியேற்றத்திட்டத்தில் நிறைய இந்தியர்களைச் சேர்த்து விட்டார். பலரின்  நல்வாழ்வுக்குத் துணையாக இருந்தார்! டத்தோ மலர்விழி குணசீலன் பெரிய பதவியில் இல்லை.  ஆனாலும் இருக்கும் பதவியில் நிறைவான சேவை செய்கிறார். வாழ்த்துகள்!

ஆம்! நீங்கள் பதவியில் இருக்கும் போது உங்களுக்குப் பணிவு வரவேண்டும்.  அதே சமயத்தில் துணிவோடும் பணி செய்ய வேண்டும்! உங்கள் மூச்சு முடிந்த பின்னரும் உங்களைப் பற்றிய பேச்சு நிலைக்க வேண்டும்!

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா!


No comments:

Post a Comment