Saturday 11 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (12)


தொழில் செய்ய அனுபவம் தேவையா?

அனுபவம் இருந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம்.  அனுபவம் இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கி நமக்கு நாமே அனுபவங்களை தேடிக் கொள்ள வேண்டி வரும்!  

காலம் தாழ்த்தாமல் காரியங்கள் ஆக வேண்டும் என்றால் அனுபவம் முக்கியம்.  

அனுபவம் இருந்தால் தேவையற்றவைகளை எல்லாம் தவிர்த்து விடலாம்.

நீங்கள் என்ன துறையில் வெற்றிநடை போட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ  அந்த துறையில் அனுபவம் இருந்தால் உங்களின் வெற்றி வெகு சீக்கிரத்தில் அமைந்துவிடும்.

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் ஒரு நேரடித் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்துறையில் பணி புரிந்து  வந்தார்.  பின்னர் அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. அந்த இளைஞர் பின்னர் தானே சொந்தமாக ஒரு கடையைத் திறந்தார். முன்பு அவர் பணி புரிந்த அந்த நிறுவனம் விற்ற பொருள்களையே அவர் கடையில் வைத்தார்.  அவருக்கு ஒரு பிரச்சனையும் எழவில்லை.  பழைய நிர்வாகத்தில் ஏற்பட்ட அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது.  மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருள்கள் அனைத்தும் மலிவு விலையில் கிடைத்தன  பொருள்கள் இரண்டு மூன்று மாதங்கள் கடனில் கிடைத்தன. இலவச விளம்பரங்கள் கிடைத்தன. இப்போது அது ஒரு வெற்றிகரமான நிறுவனம். அந்த நிறுவனத்தோடு இன்னும் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இது தான் அவருக்குக் கிடைத்த அனுபவம்.

அனுபவம் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. இல்லாவிட்டால்...?  பொருள்களை அவர் தேடிப் போய் வாங்க வேண்டும். உண்மையான விலை தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். புதிய வியாபாரிகளுக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள். நாமே விளம்பரங்களைப் போட வேண்டும். நல்ல சரியான ஓர் அனுபவம் கிடைக்க ஒரு சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் ஒரு சிலருக்குப் பல ஆண்டுகள்!   அது தான் அனுபவம் என்பது!

மிகவும் வெற்றிகரமான மலேசிய தொழிலதிபர், ஏர் ஏசியா புகழ் டோனி ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு எதுவும் அனுபவம் உண்டா? ஆமாம் அவர் இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்த பின்னர் வெர்ஜினியா ஏர்வேஸ்  என்னும் மலிவு விலை விமான நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த அனுபவம் தான் அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தை வாங்கிய போது கை கொடுத்தது.  கையில் பணம் இல்லாத நிலையில் நொடித்துப் போன ஒரு விமான நிறுவனத்தை சூழியம் விலைக்கு வாங்கி இன்று வெற்றிகரமான மலிவு விலை விமான நிறுவனமாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது!

மேலே சொன்னது போல அனுபவம் இருந்தால் நல்லது. பல இடையூறுகளைத் தவிர்க்கலாம். வெற்றி பெறுவதில் கால தாமதத்தைக் குறைக்கலாம்!

அனுபவம் தேவை தான்!

No comments:

Post a Comment