Thursday 16 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (17)


ஏதோ ஒரு திறன் நம்மிடம் இருக்க வேண்டும்!

வேலை வாய்ப்புக்கள் நாட்டில் நிறையவே  இருக்கின்றன. வேலை வாய்ப்புக்கள் இருக்கும் போது தொழில் வாய்ப்புக்களும் இல்லாமல் போகாது.

நாம் ஏதோ ஒரு துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எதுவுமே தெரியவில்லை! எதிலும் பயிற்சியில்லை என்றால் என்ன தொழிலில் உங்களால் இறங்க முடியும்?

நண்பர் ஒருவர் உணவகத் தொழில் உள்ளவர். மிகவும் எளிமையாக ஆரம்பித்தவர். பெரிய முதலீடு எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால் சாலை ஓரத்தில் இருந்தது அவரின் உணவகம். அவருக்கும் பெரிய அளவில் சமையல் தெரியாது. இருந்தாலும் அவருக்குப் பிடித்த தொழில் அது.  தொழிலைக் கற்றுக் கொண்டார்.  அரசாங்க உரிமம் கிடைப்பதில் பல தடங்கல்கள்.  எல்லாவற்றையும் சமாளித்து தொழிலில் நிலைத்து நிற்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று.

இதற்கிடையே அவருக்கு நல்ல  பெரிய உணவகத்தை நடத்த ஆசை.  நீண்ட காலம் தொழிலில் இருந்ததால் போதுமான பொருளாதார பலம் அவருக்கு இருந்தது. தொழிலை அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்ல வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது. காரணம் விரும்பி செய்த தொழில் அத்தோடு வியாபார நெளிவு சுளிவுகள் அறிந்த தொழில், நல்ல பணம் புரளும் தொழில் அதனை விட மனமில்லை.

மகனிடம் பேசி அவனுக்கும் ஆசையை ஏற்படுத்தினார். மகனும் கெட்டிக்காரன். புரிந்து கொண்டான். மேற்படிப்பு படிக்க ஹோட்டல் நிர்வாகத்துறையைத்  தேர்ந்தெடுத்தான். அவனது கல்வியை முடித்ததும் தந்தையோடு சேர்ந்து கொண்டான்.  இப்போது அவரது உணவகம் சாலை ஓரத்து உணவகம் அல்ல. நல்ல வியாபாரம் நடக்கும் இடத்தில் அவரது உணவகம் அமைந்திருக்கிறது. இப்போது தொழில் கொடி கட்டிப் பறக்கிறது!

பிள்ளைகளிடம் தொழிலை ஒப்படைக்கும் போது அவர்களுக்குப் போதுமான பயிற்சிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.   இந்த இளைஞன் தனது விடுமுறை காலங்களில் தந்தையோடு சேர்ந்து பயிற்சி பெற்றவன். அதனால் சமையல் தொழிலில் ஓரளவு பயிற்சி உள்ளவன்.

இப்படித்தான்  பயிற்சிகளை நாம் பெற்றிருக்க வேண்டும். பயிற்சிகள் இல்லை, எந்த திறனும் இல்லை! என்ன செய்யப் போகிறீர்கள்? 

கையில் ஒரு திறனை வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களை வாழ வைக்கும்!

No comments:

Post a Comment