Thursday 7 January 2021

ரஜினியின் சரியான முடிவு!


ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னார். அது அவர் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று சொன்னோம். ஆனால் அவர் தனது உடல்  நலனைக் கருதி அரசியலுக்கு வரவில்லை என்று இப்போது சொல்லுகிறார் அதனை வரவேற்கிறோம்.

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னது அவரது கருத்து அல்ல.  அவரை வற்புறுத்தி அரசியலுக்கு வர வைத்தவர்கள் அழிவு சக்திகள்.  இப்போதும் கூட, அவர் உடல் நலம் சரியல்ல என்று கூறியும் கூட, அழிவு சக்திகள் "அவர் வந்தே ஆக வேண்டும்!"  என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்! அவரின்  உடல் நலன் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்கிற மனோபாவம் தான் தெரிகிறது.

இருந்தாலும் தனது உடல் நலன் கருதி அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பது தெளிவு. ரஜினி 70 வயது ஆன ஒரு பெரியவர். இனி மேல் அவரால் ஓடி ஆடி வேலை செய்வது என்பது கடினம் என்பது நமக்குப் புரிகிறது. அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல.  அதைத் தாங்கக் கூடிய சக்தி அவருக்கு இருந்தாலும் அவரின் உடல் ஒத்துழைக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  ஆனால் அழிவு சக்திகள் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.

ரஜினி சினிமாவில் பல சாதனைகளைச் செய்தவர். அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலக அளவில் உண்டு.  அது அவர் சினிமாவில் செய்த சாதனை.

நான் சினிமா படங்களைத் திரை அரங்குகளில் பார்ப்பதில்லை. அப்படிப் பார்த்தாலும் அது ரஜினி-கமல் நடிக்கின்ற படங்களாகத்தான் இருக்கும். அவர்கள் நடித்த படங்களைத் திரை அரங்குகளில் பார்க்கத்தான் விரும்புகிறேன். நான் ரஜினியின் ரசிகன். அதே போல கமலின் ரசிகன் கூட. 

அதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் யாருக்கோ கூலிக்கு மாரடிக்கின்றனர் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளுகிறோம்!

ரஜினி தமிழ் நாட்டில் நல்ல புகழோடும் பொருளோடும் வாழ்ந்து வருபவர். அவர் தமிழரல்ல என்றாலும் அவரை  வாழவைத்துக் கொண்டிருப்பது தமிழரின்  பெருந்தன்மை. அவர் எந்த ஒரு பொதுச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இனி மேலும் ஈடுபடுத்திக் கொள்ளப் போவதில்லை.

பரவாயில்லை! அவர் தொடர்ந்து தனது சினிமாத் துறையில் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும். 

இப்போது, அவரின் உடல நலன் கருதி, அவர் எடுத்த முடிவை மதிக்கிறோம். பாராட்டுகிறோம்! அவரின் கலைப்பணி தொடரட்டும்!

No comments:

Post a Comment