Tuesday 23 April 2024

மீண்டும் அதே தவறுகள் வேண்டாம்!

 

நமது சமுதாயத்தை ஏமாற்றுவது எளிது என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. இருக்கட்டும்!    

நமது தலைவர்களுக்கே அத்தகைய  எண்ணம் அதிகம் உண்டு.  அதனால் தான்  நம்மைப் பயன்படுத்திக் கொண்டு  அவர்கள்  முன்னேற்றம் அடைகின்றனர்.  தங்களது திறமையால் முன்னேறுபவர்களை  நாம் குறுக்கே நின்று தடை போடப்போவதில்லை.  கொள்ளையடிப்பதைத் தான் வேண்டாம் என்கிறோம்.

உணவு பொட்டங்களைக் கொடுப்பது,  சாராயத்தை ஊற்றுவது - இதெல்லாம்  இனி வேண்டாம்.   அப்படிக் கொடுப்பவர்களை எதைக் கழட்டி அடிப்பீர்களோ அது   உங்களின் வசதி!

இனி நமது தேவையெல்லாம் எங்களுக்கு இதெல்லாம் வேண்டும். முடியுமா?  முடியாதா?  என்கிற கேள்விகளோடு முடித்துக் கொள்ளுங்கள். எல்லாக் காலங்களிலும் கூட்டத்தைக் கூட்டுவது, அமைச்சர்களோடு பேசுவது,  மனுக்களைச்  சமர்ப்பிப்பது, அதிகாரிகளைப் பார்ப்பது - இவைகள் எல்லாம் இனி நமக்கு வேண்டாம்.

இத்தனை ஆண்டுகள் எத்தனையோ பேச்சுவார்த்தைகள், எத்தனையோ மனுக்கள்,  கோவில்கள் இடிக்கப்பட்டன, கோவில் சிலைகள் உடைக்கப்பட்டன,  நமது தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டன - இன்னும் இவைகள் நடந்து கொண்டு தான்  இருக்கின்றன.  முடிவே இல்லாத ஓர் எல்லையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்!  இவைகள் எல்லாம் தீர்க்க முடியாத அளவுக்கு  அம்மாம் பெரிய பிரச்சனையோ?

ஆனால்,  ஏன் சீனர்களுக்கு இந்தப் பிரச்சனை எழவில்லை? ஏன் மலாய்க்காரர்களுக்கு  இந்தப் பிரச்சனை எழவில்லை?  அவர்களுக்குப் பிரச்சனைகளே இல்லையோ?  ஏன் இந்தியர்களுக்கு  மட்டும்  எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்க முடியவில்லை?    மற்ற இனத்தவருக்குப் பிரச்சனைகள் இல்லையென்றால்  இந்தியர்களுக்கு மட்டும் ஏன் பிரச்சனைகள்?   நாங்களும் இந்நாட்டுக் குடிமக்கள் தானே?  எங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும்  இருக்கக் கூடாது  என்பது சரிதானே?

இனி நாம் நமது  கோரிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.  தேர்தல்களைப் புறக்கணிக்க மாட்டோம்.  நமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்போம்.  அதிலும் நமது கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும்.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் என்று காதில் பூ சுற்ற வேண்டாம்!

இந்த இடைத் தேர்தலிலிருந்து நமது உரிமைக்காகக் குரல் கொடுப்போம்!  இது ஆரம்பமாக இருக்கட்டும்!

No comments:

Post a Comment