Saturday 5 November 2016

கபாலி ....ஒரு கண்ணோட்டம்!



கபாலி திரைப்படம் வெளியாகி மூன்று மாதங்கள் மேல் ஆகிவிட்டன. 100 நாள்கள் மேல் ஒடி முடிந்துவிட்டது..

இந்த நிலையில் ஒரு கண்ணோட்டமா?  அதனாலென்ன? படம் வெளியானதும் அடித்துப்பிடித்து விமர்சனம் செய்கிற அளவுக்கு எனக்கு ஒன்றும் அவசரமில்லை!

இதனை ஒரு பெரிய விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய கண்ணோட்டத்தில் சில கருத்துக்கள். அவ்வளவு தான்!

அதுவும் கபாலி மலேசியாவைக் களமாக கொண்ட ஒரு திரைப்படம். அதனை மனதில் கொண்டு சில கருத்துக்கள்.

முதலாவது கபாலி நமக்குச் சீனர்களை எதிரியாகக் காட்டுகிறது. அது உண்மை தான் என்றாலும் நமக்குப் பெரிய எதிரி அரசாங்கம் தான். அந்த உண்மையைச் சொல்ல முடியவில்லை.  அதனால் சீனர்கள் மேல் பழிபோடுவது என்பது எளிதாகப் போய்விட்டது!

அரசாங்கக் கொள்கைகள் அனைத்தும் நமக்கு எதிரானவை.  மேற்கல்வி  தடைச் செய்யப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் நாம்  விரும்பிய கல்வி கிட்டுவதில்லை. தனியார் கல்வி நிலையங்களில் படித்து வந்தாலும் வேலை கிடைப்பதில்லை. வெளி நாடுகளில், சொந்தப்பணத்தில், தரமான மருத்துவக் கல்வி கற்று வந்தாலும் அது தரமில்லை என்று குப்பையில் போடுவது. இப்படி எல்லாவற்றிலும் கதவடைப்பது. இவைகளையும் மீறித்தான்  ஒரு சிலர் வெற்றி பெறுகிறார்கள். திறமைக்கு எந்த மரியாதையும் இல்லை.

அரசாங்க வேலை வாய்ப்புக்கள் நமக்கு மறுக்கப்படுகின்றன. தனியார் துறைகளிலும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களும் திறமைக்கு ஏற்ப அமையவில்லை. அரசாங்கமும் இதனை கண்டு கொள்ளவில்லை. நாட்டின் மூன்றாவது இனம் என்னும் முக்கியத்துவம் இல்லை. எல்லாத் துறைகளிலும் கதவடைத்தால் எப்படி முன்னேறுவது?  வங்காள தேசத்தவனுக்கு உள்ள சலுகைக் கூட நமது இனத்தவருக்கு இல்லை!

சீனர்களின் நிலையோ வேறு. அரசாங்க உதவி அவர்களுக்குத் தேவை இல்லை. தனியார் துறை அவர்களைச் சார்ந்தது. நாடே அவர்களை நம்பித்தான் இருக்கிறது! சீனர்களிடம் ஒரு குணம் உண்டு. சீன இனத்தவரை ஒரு மாதிரியாகவும் மற்ற இனத்தவரை வேறு மாதிரியாகவும் பார்க்கின்ற குணம் அவர்களுடையது. அவர்கள் இனத்திற்கு ஒரு விலை, ஒரு சம்பளம்! நம்மைவிட அவர்களுக்குக் கூடுதலான சம்பளம். கடைகளில் அவர்களுக்கு என்று ஒரு விலை! நமக்கென்று  ஒரு விலை!  என்னதான் அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தாலும், கொண்டு வந்தவர்களையே கையில் போட்டுக்கொண்டு, அவர்கள் அத்தனையையும் முறியடித்து விடுவார்கள்!

அபின், கஞ்சா என்பதெல்லாம் சீனர்களிடமிருந்து  வருவது தான். நம் இனத்தவர் எல்லாம் அவர்களுக்குக் கீழே தான். ஆனால் அவர்கள் யாரும் தொட முடியாத இடத்தில் இருப்பார்கள். அகப்படுபவன் உதைப்படுபவன் எல்லாம் நம் இனத்தவன்!

 கபாலியில் குண்டர் கும்பல் தலைவனாக ஒர் உயர் ஜாதி தமிழன் தலமை தாங்குவதாக காட்டப்பட்டிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. அதனை நான் நம்பவில்லை என்றாலும் இயக்குனர்  ரஞ்சித் இந்தத் தகவலை எங்கு பெற்றார் என்பது தெரிந்தால் தான் அதன் நம்பகத்தன்மை தெரியவரும். ஆனால் கபாலி, வில்லனைப்  பார்த்து பேசுகின்ற அந்த உச்சக்கட்ட காட்சியின் வசனங்களைத் தேவையான ஒன்றாகவே கருதுகிறேன். ஆனால் அது முற்றிலும் தமிழ் நாட்டு நடப்பைப் பேசுகிறது!  மலேசிய நடப்பை அல்ல!

படத்தில் கபாலி உடுத்துகிற உடைகளைப் பற்றி பல இடங்களில் பேசுப்படுகிறது. ஆனால் இவைகள் முற்றிலும் தமிழகப் பின்னணிக் கொண்டவை. இங்கு மலேசியாவில் உடைகள் உடுத்துவது பற்றி எந்த ஏற்றத்தாழ்வுகளும்  இல்லை! மிகச் சாதாரணமானவன் கூட நல்ல  தரமான உடைகளைத்தான் அணிகிறான்.மேலும் நமது நாட்டில் யார் தாழ்ந்தவன், யார் உயர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடிப்பது?     நான் தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்று யார் சொல்லிக் கொண்டு திரிகிறார்?  ஒருவருமில்லை!  ஒருவரின் குடும்பப் பின்னணி   நமக்கு நேரடியாகத்  தெரிந்தால்  ஒழிய அதனையெல்லாம் அவ்வளவு எளிதில் நாம் கண்டுபிடித்துவிட முடியாது.

மேலும் கோட்-சூட் போடுபவரெல்லாம்  உயர்ந்தவர்கள் என்னும்  கலாச்சாரம்  தமிழகக் பின்னணி கொண்டவை.  இங்கு இது பிரச்சனை அல்ல. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காயர்கள், ஆசிரியர்கள்  என்று எடுத்துக் கொண்டால் அனைத்துப் பிரிவினரும் இதில் உள்ளனர்.  அது மட்டும் அல்ல. காப்புறுதித்துறை, விற்பனையாளர்கள், நேரடித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்  அனைவருமே கோட்-சூட் போடுபவர்கள் தான். உடை அணிவதில்  சாதியப்பிரச்சனை என்று ஒன்று  இருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது கலப்புத் திருமணங்கள் அதிகம். குறிப்பாக மருத்துவத்துறை, சட்டம்  பயிலுபவர்கள்  பலர் காதல் திருமணங்கள் செய்கின்றனர். ஒரே துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் இங்கு சாதியம் அடிபட்டுப் போகிறது.  நடுத்தர வட்டத்தில் வேண்டுமானால் இன்னும் இந்தப் பிரச்சனை இருக்கலாம். ஆனால் காதல் என்று வரும்போது சாதியம் தகர்க்கப்படுகிறது.  இதை நான் நேரடியாகவே பார்க்கிறேன்.

தமிழ் சினிமா உலகில் கபாலி ஒரு வித்தியாசமான படம் என்பது உறுதி சொல்ல வந்த கருத்துக்கள் உண்மையானவை. அதுவும் இயக்குனர் ரஞ்சித் அவர் சொல்ல வேண்டிய செய்திகளை ரஜினி மூலம் சொல்ல வைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.  ரஜினிக்கு மிக உயர்ந்த குணம். தனக்கும் இந்த சமூகத்தின் மேல் அக்கறை உண்டு என்பதை அவர் காட்டியிருக்கிறார். வாழ்த்துகள், ரஜினி சார்!

கபாலி மலேசியப் பின்னணியைக் கொண்ட படம் என்றாலும் அது தமிழகப்பிரச்சனையையும்  பேசுகிறது என்பது தான் உண்மை. அது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. யாராவது, எங்கேயாவது அதனை பேசித்தான் ஆக வேண்டும். இது ஒரு ஆரம்பம்! இது தொடர வேண்டும் என்பது எனது நிலைப்பாடு!

இயக்குனர் ரஞ்சித்திடம் இன்னும் பல சமூக மாற்றத்திற்கான படைப்புக்களை   எதிர்பார்க்கிறோம்.

கபாலி ஒரு வெற்றிப் படைப்பே!


No comments:

Post a Comment