Wednesday 9 November 2016

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்!


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட்  ட்ரம்ப் வெற்றி பெற்றார்!

உலக அளவில் இந்தச் செய்தி எப்படி வரவேற்கப்படும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய உலகம் அதனை வரவேற்கவில்லை என்று ஆரம்பச்  செய்திகள் கூறுகின்றன.  ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நான் ட்ரம்பின் விசிறி.  அவருடைய ரசிகன். என்னுடைய இளமைக்காலத்தில் அவரை நான்  எனது சுப்பர் ஸ்டாராக நினைத்தவன். எனக்குச் சினிமா நடிகர்களில் யாரும் சுப்பர் ஸ்டார் இல்லை!

நான்  சொல்லுபவை எல்லாம் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு - பல ஆண்டுகளுக்கு முன்பு! அவர் அரசியலில் இல்லாத காலத்தில்!

அவர் முதன் முதலில் எழுதிய "The Art of the Deal" என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் படித்திருக்கிறேன். அதன் பின்னரும் நான் படித்திருக்கிறேன். இப்போதும் நான் படிக்கிறேன். இன்னும் அவர் எழுதிய ஒருசில புத்தகங்களையும் நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் தொழில் சம்பந்தமானவை. அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் சந்தேகமில்லை. ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர். எதனையும் பெரிய அளவில் நினைத்துப் பார்ப்பவர். நினைத்துப் பார்ப்பவர் மட்டும் அல்ல. அதனைச் செயல்படுத்தியவரும் கூட. திறமையானவர்.

ஆனால் அவருடைய அரசியல் எப்படி?  அவர் உதிர்த்த சில கருத்துக்கள் மக்களிடையே பலவித எதிர்மறை எண்ணங்களை உருவாக்கியிருக்கின்றன என்பது உண்மை தான். அதுவும் குறிப்பாக முஸ்லிம்களிடையே அவருடைய கருத்துக்கள் ஏற்கக்கூடியவையாக இல்லை.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். தேர்தலில் போது அவர் உதிர்த்த கருத்துக்கள் தேர்தல்கால கருத்துக்கள்! அவைகளுக்கு எந்த அளவுக்கு மரியாதை உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அது முற்றிலும் ஓர் அரசியல்வாதியின் பேச்சாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக அளவில் அதற்கு ஈடு இணை இல்லை! அந்த  அளவு உயர்ந்த பதவி. அந்தப் பதவியை வைத்துக்கொண்டு ஓர் அதிபர் தனது விருப்பத்திற்கு எதனையும் செய்துவிட முடியாது! அவரைக்  கட்டுப்படுத்தவும் அவர்களுடைய செனட்டுக்கு அதிகாரமுண்டு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப்,   நான் விரும்பிய ஒரு 'கதாநாயகர்'  என்பதால் அவர் பதவிக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!  அதே சமயத்தில் அவர் காலத்தில் உலகில் அமைதி நிலவ அவர் பாடுபட வேண்டும். அது நடந்தால் இன்னும் மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment