Tuesday 8 November 2016

ஹின்ராப் இயக்கம் தேர்தலில் குதிக்குமா?


ஹின்ராப் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் பங்கெடுக்குமா  என்பதை  வெகு விரைவில் தீர்மானிக்கும் என்று அதன் தலைவர் வேதமூர்த்தி அறிவித்திருக்கிறார்.

அவர் ஆளுங்கட்சியில் கூட்டுச் சேர  வழியில்லை. எந்த ஆளுங்கட்சியும் அவரை வரவேற்கத் தயாராக இல்லை. அப்படியே அவர்கள் வருந்தி அழைத்தாலும் அவரும் போகத் தயாராக இல்லை.

ஒரு காலக்கட்டத்தில் இப்போதைய அரசாங்கத்தில் துணை அமைச்சராக இருந்தவர் பொன் வேதமூர்த்தி.  இந்தியர்கள் சார்பில் பிரதமருடன் ஒர் ஒப்பந்தம் போட்டுவிட்டு துணை அமைச்சரானவர். ஆனால் அவர் நினைத்தபடி எதனையும் அவரால் செயல்படுத்த முடியவில்லை!

நல்லதைச் செய்ய வேண்டுமென்று அவரிடம் ஆர்வம் இருந்தது. பிரதமரின் ஒத்துழைப்பும் ஒரளவு இருந்தது. ஆனால் அங்கு ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்} அவருக்கு இடையூறாக இருந்தது! அவர் செய்ய நினைத்த அனைத்துக்கும் அது தடையாக இருந்தது! அவரால் எதனையும் செய்ய இயலவில்லை. மனம் வெறுத்துப் போய் தனது துணையமைச்சர் பதவியை பதவிதுறப்புச் செய்துவிட்டார். பிரதமருக்கு ஒரு விஷயம் புரிந்துவிட்டது. இந்தியர்களுக்கு தான் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை. ம.இ.கா. இருந்தாலே நமக்குப் போதும். அவர்களே நாம் எதையும் செய்ய முடியாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள் என்று!

ஆளுங்கட்சியில் சேரமுடியாத ஒரு நிலையில் அவர் எதிர்கட்சியில் சேர நினைக்கலாம்.அவர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தேர்தல் என்று வரும் போது பெரிதாக அவர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது! ஒரு நாடாளுமன்ற இடம் கொடுத்தாலே அதுவே பெரிய சாதனை!

பொதுவாக ஹின்ராப் தனித்து ஓர் அரசியல் கட்சியாக இயங்க வழியில்லை.  முற்றிலும் அவர்கள் இந்தியர் சார்ந்த ஒர் அமைப்பு. இந்தியர்கள் எந்தத்தொகுதியிலும் பெரும்பான்மை இல்லாதவர்கள். அவர்கள் போட்டிப்போட நினைக்கும் ஒரளவு இந்தியர் சார்ந்த தொகுதிகள் அனைத்தும் ம.இ.கா. வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். எதிர்கட்சி இந்திய  வேட்பாளர்களும் அங்குக் களம் இறக்கப்பபடுவார்கள். தனித்து இவர்கள் போட்டியிட்டால் வேற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு.

நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது தான்.  இப்போது மட்டும் என்ன?  நமது குரல் ஒலிக்காமலா இருக்கிறது? எதிர்கட்சியினர் அதனைச் செய்கிறார்களே! ம.இ.கா.வினரைத் தவிர மற்றவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன!

நாங்கள் நாடாளூமன்றத்திற்குப் போனால் எல்லாவற்றையும் மாற்றிவிடுவோம் என்னும் வீண் நினைப்பால் யாருக்கும் பயனில்லை!

ஒன்று ஆட்சி மாற வேண்டும் அப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால் ஒரு வேளை ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வரலாம். கல்வி, வேலை வாய்ப்பு  போன்ற சில பிரச்சனைகள் நமக்குச் சாதகமாக இல்லை என்பது உண்மை தான்.

ஹின்ராப் தலைவர் வேதமூர்த்தி அவர்கள் தனது இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என்பது அவரது உரிமை. ஆனால் காலங்காலமாக ஏமாற்றுப்பட்டு வரும் நம் இனத்தவர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை என்பது தான் உண்மை!

ஹின்ராப் அரசியலில் குதிக்கட்டும்! கூத்தாடட்டும்! வாழ்த்துகிறோம்!

கடைசியாக,

எந்த ஓர் அரசியல்வாதியையும் நம்பிப் பயனில்லை!  நம்மை நாமே நம்புவோம்!


No comments:

Post a Comment