Monday 19 October 2020

அதனை நாம் ஏற்க முடியாது!

 அம்னோவுக்கு ஏற்கும் வகையில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட பிரதமர் முகைதீன் யாசின் முனைப்புக் காட்டி வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதாக அம்னோ கடந்த சில வாரங்களாக அடம் பிடித்து  வருகிறது என்பதை நாம் அறிவோம்.

அம்னோவின் முக்கிய தேவை என்பது ஒன்று:  துணைப் பிரதமர் பதவி.சட்டத்துறைத் தலைவர் பதவி, சட்டத்துறை அமைச்சர் பதவி  போன்ற பதவிகள் அவர்களுக்குத் தேவையானவை. 

இப்போது அம்னோ தலைவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன.  அந்த வழக்குகளிலிருந்து அவர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.  அதற்கு ஏற்றாற் போல அமைச்சரவை மாற்றங்கள் செய்ய வேண்டும்.

இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம். எதனையும் உறுதிப்படுத்த இயலாது.

ஒரு கட்சியின் நாடாளுமன்ற எண்ணிக்கையை வைத்துத் தான் அதன் வலிமை அளக்கப்படுகிறது.  அந்த வகையில் அம்னோவின் நாடாளுமன்ற எண்ணிக்கை  என்பது அதன் பலம். அதனால் இன்றைய அரசாங்கத்தை அவர்களால் ஆட்டிப்படைக்க முடிகிறது. தொடர்ந்து ஆட்டிப்படைக்க முடியும்.

இன்றைய பிரதமர் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் பார்க்கும் போது அவரது ஆட்சி  நீடிக்க அவர் எதனையும் செய்யத் தயார் என்று நமக்குப் புரிகிறது!

ஆனால் இன்னொருபக்கம் பார்க்கும் போது ஓர் இரண்டு பேரைக் கூடுதலாக வைத்துக் கொண்டு அவரால் இப்படி விருப்பம் போல அமைச்சரைவையில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது! 

இப்படி தனக்குச் சாதகமாக செயல்படுவதைத் தடுக்க பேரரசர் ஒருவரால் மட்டுமே முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.  அரசியல்வாதிகள் அனைவருமே தங்களைச் சுற்றி வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு சித்து விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்! ஆமாம் என்று சொல்லுவதற்கும் ஆளுண்டு! இல்லை என்று சொல்லுவதற்கும் ஆளுண்டு! அதற்கு ஏற்றாற் போல அவர்கள் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள் போலும்!

ஆனால் பிரதமர் முகைதீன் என்ன தான் மாற்றம் கொண்டுவந்தாலும் அம்னோவைச் சேர்ந்த ஒருவரை துணைப் பிரதமராக நியமித்தாரானால் அது ஏற்க முடியாத ஒன்று. அந்த நியமனம் ஏறக்குறைய பிரதமர் அந்தஸ்து உள்ள பதவியாகத்தான் பார்க்க முடியும். அப்படியென்றால் என்ன அர்த்தம்? பொதுத் தேர்தல் மூலம் அரசாங்கம் அமைக்க தோல்வியடைந்த அம்னோ இப்போது கொல்லைப்புற வழியாக அரசாங்கம் அமைத்ததாகவே பொருள்படும்! அது மிகவும்கேவலம்! கொள்ளைக்காரனைக் குளிப்பாட்டி, மகுடம் சூட்டி "நீயே ஆட்சி செய்!" என்று சொல்லுவதாக ஆகும்!

அப்படி நடக்காது என நம்புவோம்!

No comments:

Post a Comment