Friday 23 October 2020

ஒரு வழி தானா? எத்தனையோ வழிகள் உண்டு, நண்பா!

 "விடாக்கண்டன் கொடாக்கண்டன்" என்பார்களே அது தான் இப்போது நமது அரசியலில் நடந்து கொண்டிருக்கிறது!

"உனக்கு என்ன ஒரு வழி தானே! எனக்குப் பல வழிகள்,  நண்பனே!"  என்கிற எக்காளம் தெரிகிறது!

இவர்களைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கலாம்.  விழுந்து விழுந்தும் சிரிக்கலாம்! ஆனால் நட்டம் என்னவோ நமக்குத் தான்.! அவதிப்படப் போவது ஏழை எளியவர்கள் தான்.

இரு பக்கத்தினருமே கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதான் அவர்கள் நில நடுக்குத்துக்கும் தாங்கக் கூடிய தங்க மாளிகையில் வசிப்பவர்கள் ஆயிற்றே!

"என்ன சொல்லுங்கள்,  இப்போது எனது ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நான் கூப்பிட்டால் யாரும் என் கூட வருவார்கள். நான் யாரையும் சந்திக்கலாம். நான் என்ன சொன்னாலும் 'ஆம்!' போட ஆள்கள் இருக்கிறார்கள்!  அது போதாதா எனது செல்வாக்கையும், எனது பதவியையும் தற்காத்துக் கொள்ள! இல்லையா நண்பனே!" 

"நான் சர்வாதிகாரியா? இருந்துவிட்டுப் போகட்டும்! டாக்டர் மகாதிர் தனது 22 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தார்? அவரைப் பள்ளக்கில் தானே சுமந்து கொண்டு போனீர்கள்? எதிர்கட்சிக்காரர்களையெல்லாம் துவம்சம் பண்ணினாரே அது என்ன ஜனநாயகமா? நீதித்துறையை நீச்சல் அடிக்கவைத்தாரே  அது என்ன ஜனநாயகமா?"

"நண்பனே! ஜனநாயகம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குக் குட்டை என்றால் என்னவென்று தெரியும்.  மட்டை என்றாலும் என்னவென்று தெரியும். நாம் மட்டை அடித்து கோட்டைக்கு வந்தவர்கள்! மாட்டையும் அடிக்கலாம்! கோட்டையும் உடைக்கலாம்!  யார் கேட்கப் போகிறார்? குட்டையைக் கோபுரம் ஆக்குவது எப்படி என்று நமது தலைவர் சொல்லிக் கொடுத்த பாடம்! அதனால் குட்டையைக் குழப்பலாம்! குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்! குழப்பத்தை ஏற்படுத்த கைக்கூலிகள் இருக்கிறார்கள்! எனக்குப் பயமில்லை!"

"நண்பா! ஜனநாயகத்தை மலரச்  செய்ய எத்தனையோ வழிகள்! உமக்கு ஒரே வழி மட்டும் தான்! இப்போது நான் தான் ஆட்சி! அதிகாரம்! அதனால் எனக்கு எத்தனையோ வழிகள்!"

"நம் தலைவர் செய்யாத கோமாளித்தனமா! அவரை யாரும் கோமாளி என்று சொல்லவில்லையே! நானும் அப்படித்தான்! இந்த கோமாளித்தனத்தோடு அடுத்த தேர்தல் வரை  பதவியில் இருந்துவிட்டால் போதும்!  பிரதமராக நானும் இருந்தேன் என்கிற திருப்தியே போதும்!"

"மக்களைத் திருப்தி படுத்த முடியாது. அவர்களே அவர்களின் புத்தியைப் பயன் படுத்த வேண்டும், என்னைப் போல! "

"எவ்வழி கோணல் வழி அதுவே என் வழி!"

No comments:

Post a Comment