Wednesday 29 June 2022

ஏன் தாமதம்?

 

பொதுவாக மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் அரசாங்கத்தால் நாசமாக்கப்படுகிறது என்பதை அறியும் போது  நாட்டின் குடிமகன் என்னும்   முறையில் நமக்குக் கோபம் தான் வருகிறது.

ஆனால் இந்த கோபம் ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஏன் வருவதில்லை? காய் அடிக்கப்பட்ட இவர்களால் இந்த சமுதாயத்திற்கு என்ன இலாபம் என்று கேள்வி எழுப்புவதில் எந்த தவறுமில்லை.

ஆளுந்தரப்பினரிடையே சவடால் தனம் அதிகம்.   அவர்களுடைய பின்னணியைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் 'மக்களுக்காக நாம்' என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்ததே இல்லை. முன்னாள் தலைவனிலிருந்து இந்நாள் தலைவன் வரை ஒரே மாதிரியான கொள்கைப்பற்று உள்ளவர்கலாகத்தான் இருக்கிறார்கள்!

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கட்டப்பட்ட ஐந்து தமிழ்ப்பள்ளிகள் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இன்னும் திறக்கப்படாமல் யாருக்காகவோ காத்துக் கொண்டிருக்கின்றன! குறிப்பாக ரீஜன்  தமிழ்ப்பள்ளி, சாகா தமிழ்ப்பள்ளி,  நீலாய் டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி, ஜெலுபு சிம்பாங் பெர்த்தாம் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன. குத்தகையாளர்களை அவர்களே கொண்டுவந்தனர். அதற்கான வாக்கரிசியும் வாங்கிக் கொண்டுவிட்டனர்! ஆனால் பள்ளிகள் மாணவர்கள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படவில்லை! இதற்குக் காரணம் பள்ளிகளைப் பயன்படுத்துவதற்குத் தகுதி சான்றிதழ்கள் இன்னும் பெறப்படவில்லையாம்!

இப்போது நமது கேள்வி எல்லாம் கட்டடங்களில் குளறுபடிகள்  இருந்தால் குத்தகையாளர்களைக் கூப்பிட்டு அதனைச் சரி செய்ய வேண்டும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. குத்தகையாளர்கள் யாரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. எல்லாம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தான். சரிசெய்வதில் அப்படி என்ன பிரச்சனை?

இதனை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு பள்ளிகளைத் திறக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பது வடிகட்டின முட்டாள் தனம்! மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது! பாரிசான் ஆட்சியில் பணம் எப்படியெல்லாம் பாழடிக்கப்படுகிறது!

நமது பெரிய அண்ணன் ம.இ.கா.வுக்கு இது பற்றி ஒன்றுமே தெரியாதா? இந்த பள்ளிகள்  அமைந்த இடங்களில் ம.இ.கா. கிளைகளே இல்லையோ!  இப்போது மத்தியில் பாரிசான் கட்சி தானே ஆள்கிறது? அமைச்சர்களாக இருக்கிறீர்கள் தானே! செனட்டர்களாக இருக்கிறீர்கள் தானே! மித்ராவை வளைத்துப் போட்டிருக்கிறீர்கள் தானே! எல்லாப் பதவிகளும் வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும். ஆனால் நாங்கள் எதனையும் செய்யமாட்டோம்! இந்தியர்கள் ஓட்டுப்போட வேண்டும்! இது தானே மக்களுக்கு நீங்கள் சொல்ல வருவது!

அடுத்த  தேர்தல் வருவதற்கு முன்பதாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் ........ அப்புறம் மக்கள் கையில்!

No comments:

Post a Comment