Wednesday 5 April 2023

அதிகாரத்தைக் காட்ட வேண்டாம்!

 


கம்போடியா:  புத்த ஆலயங்கள் 5,000 என கணிக்கப்படுகின்றது.

உலகம் எங்கிலும்  புத்த ஆலயங்கள், புத்தரை வழிபடும் மக்கள் பல கோடிகள் இருக்கின்றனர். நம நாட்டிலும் பெரும்பாலும் சீனர்கள் புத்த மதத்தினரே.

ஆனால் கம்போடியாவில் மொத்த மக்கள் தொகையில் புத்தரை வழிபடுபவர்கள் சுமார் தொண்ணூறு  விழுக்காட்டினர்   என்பதாகவும், மீதம் பத்து விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்பதாகவும்  சமீபத்தில்  நடந்த ஒரு நிகழ்ச்சியில்    பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார். 

அவர் ஏன் அதனைக் கூறினார் என்பது தான் முக்கியம். தொண்ணூறு விழுக்காடு புத்த சமயத்தினர்  வாழ்கின்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை.  அவர்கள் நாட்டின் எல்லாத்  துறைகளிலும் பணிபுரிகின்றனர். அரசாங்கத்துறைகள், தனியார் துறைகள்,  தொழில் துறைகள்  - இப்படி அனைத்து துறைகளிலும் அவர்கள் கம்போடியர் என்னும் வகையில் எந்தவித பாகுபாடுமின்றி பணிபுரிந்து வருகின்றனர். புத்த மதத்தினர் அவர்கள் மீது  எந்த காழ்ப்புணர்ச்சியும் கொண்டிருக்கவில்லை. தங்களது எண்ணிக்கையை வைத்து அந்த மக்கள் மீது  தங்களது அதிகாரத்தைக் காட்டவில்லை. இது கம்போடியாவில். 

அதே சமயம் மலேசியாவில் என்ன நடக்கிறது என்பதைத்தான் பிரதமர் சுட்டிக்காட்டினார். இங்கு சிறுபான்மை மக்கள் மீது, சிறுபான்மை மதத்தினர் மீது  பல வழிகளில் அவர்கள் நசுக்கப்படுகின்றனர் இன்னும் ஒடுக்கப்படுகின்றனர். அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதைத்தான் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதுவும் குறிப்பாக இந்தியர் சிறுபான்மையினர். சுமார் ஏழு விழுக்காட்டினார்.  அவர்கள் பல வழிகளில் அதிகார வர்க்கத்தினரால் பழி வாங்கப்படுகின்றனர்.  இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பதற்கு யார் காரணம்? குடியுரிமை இல்லாததற்கு யார் காரணம்? நீல அடையாளக்கார்டு இல்லாததற்கு யார் காரணம்? அரசாங்க வேலைகள்  மறுக்கப்படுவதற்கு யார் காரணம்? உயர்கல்வி மறுக்கப்படுவதற்கு யார் காரணம்? அவர்களது எண்ணிக்கை தானே காரணம்! அவர்களது அதிகாரம் தானே காரணம்!

பிரதமர் சரியான நேரத்தில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நாம் அனைவரும் மலேசியர் என்கிற எண்ணம் நம்மிடம் இல்லை. அதுவும் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் உடையவர்களிடம் இல்லை. ஒரு நாட்டின் முன்னேற்றம் அனைவரின் கையிலும்  இருக்கிறது. தனியாக முன்னேற்றிவிட முடியாது! விதண்டாவாதம் பேசலாம்!  ஆனால் வீழ்ந்து போகும்!

அதிகாரம் வலிமையானது. அதனை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என்பது அறிந்து, புரிந்து பயன்படுத்துவோரே புண்ணியம் அடைகிறார்கள்!


No comments:

Post a Comment