Monday 3 April 2023

மாணவர்கள் புகைபிடிக்கிறார்களா?

 

புகைபிடிப்பதறகும் புற்றுநோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ அப்படி ஒரு சம்பந்தம் இருப்பதாக நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், படித்துக் கொண்டும் வருகிறோம்.

இப்போது நமது நிலை என்னவென்றால் சிகிரெட் என்றால் புற்றுநோய், புற்றுநோய்  என்றால் சிகிரெட். இது தான் நமது புரிந்துணர்வு. அதில் தவறில்லை என்பதும் நிதர்சனம்!

இப்படி ஒரு நிலையில் சிகிரெட் பிடிப்பது அவசியமா என்று கேள்விகள் எல்லாம் அனாவசியம்.  தந்தை பிடிப்பதை மகன் பார்க்கிறான். டாக்டர் சிகிரெட் பிடிப்பதை ஒரு  நோயாளி பார்க்கிறான். பெரிய மனிதர்கள், மிக மிகப் பெரிய மனிதர்கள் சிகிரெட் பிடிப்பதை இந்த உலகமே பார்க்கிறது.

இப்படியெல்லாம் சிகிரெட்டுக்கு நல்ல விளம்பரம் கொடுத்துவிட்டு  "பிள்ளைகளே நீங்கள் சிகிரெட் பிடிக்காதீர்கள்" என்று சொன்னால் நாமே தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஆமாம் நமது நாட்டு இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சுமார் 43,000 பள்ளி மாணவர்கள் சிகிரெட் பிடிக்கிறார்களாம்! இதனை ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அந்த புள்ளிவிபரத்தை நான் நம்பவில்லை.  இன்னும் அதிகமான மாணவர்கள் இருக்க வேண்டும் என்பது தான் எனது கணிப்பு. 

இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க வேண்டும்?  மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்  சிகிரெட்டுகள் நாடு முழுவதும் பெரிய, சிறிய அஞ்சடி கடைகள்வரை மிக மிகத் தாராளமாகக் கிடைக்கும் என்பது தான்! எத்தனையோ சாமான்கள் நாம் தேடித்தேடி பார்த்தாலும் கிடைப்பதில்லை. ஆனால் சிகிரெட்டுகளுக்கு அத்தகைய துன்பங்கள் ஏற்படுவதில்லை! எல்லாகடைகளிலும் கிடைக்கும். நாடு முழுமையும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால் அது சிகிரெட் தான்! இது ஒன்றே போதும் நமது மாணவர்கள் சிகிரெட்டுகளின் அடிமைகள் ஆவதற்கு.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் உதாரணமாக இருக்க வேண்டும்.  அதெல்லாம் நடக்கிற காரியமாக இல்லை.  பள்ளி அசிரியர்கள் தான் மாணவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டியவர்கள்.  இன்றைய நிலையில்  அவர்கள் அப்படி இருக்கிறார்களா என்பது கேள்விக் குறியே. அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை. "எங்களுக்கென்ன!"  என்கிற அலட்சியம்  அதிகம்!

சரி அவர்களை விடுங்கள்.  வீட்டில் இருக்கும் பெரியவர்களாவது ஓர் உதாரணமாக நடந்து கொள்கிறார்களா என்றால்  அதுவுமில்லை.  அவர்களே பிள்ளைகளிடம் சிகிரெட் வாங்கி வரச்சொல்லி கடைகளுக்கு அனுப்புவதும் குழந்தைகளுக்கு முன்னால் சிகிரெட் பிடிப்பதும்  எல்லாமே தலைகீழாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது.  தந்தை என்ன செய்கிறாரோ அவரைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள். சொல்லுபவற்றை அல்ல செய்பவற்றுக்குத்தான்  பிள்ளைகள்  முதலிடம் கொடுப்பார்கள்!

என்ன தான் சொன்னாலும் எழுதினாலும் யாரும் புகைபிடிப்பதை யாரும்  நிறுத்தப் போவதில்லை. பெற்றோரும்  நிறுத்தப் போவதில்லை! ஆசிரியர்களும் நிறுத்தப் போவதில்லை! உடலுக்குக் கேடு என்று சொல்லும் டாக்டர்களும் நிறுத்தப் போவதில்லை!

மாணவர்கள் மட்டும் நிறுத்திவிடப் போகிறார்களா?

No comments:

Post a Comment