Tuesday 4 April 2023

வேலை செய்யாம எப்படி இருக்கிறது?

 

                                    "சும்மா இருந்துபாரு தெரியும் கஷ்டம்!"

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவார்: "சும்மா இருந்து பாருங்கடா! அப்பத்தான்டா அந்தக் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்!"

உண்மையாகவே மேலே படத்தில் உள்ள பெண்மணிக்கு வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. வசதிகள் இருக்கின்றன. பெட்டியில் பணம் இருக்கின்றது.  கார் இருக்கின்றது. ஆனால் அதற்காக வீட்டில் சும்மா முடங்கிக் கிடக்க வேண்டுமா என்ன?   வேலை செய்யாமல் எப்படி சும்மா இருக்கிறது என்கிற கேள்விக்கு  அவருக்குத் தெரிந்த ஒரே பதில்:  போய் உன்  வேலையைச்  செய்! என்பது மட்டும் தான்.

அதைத்தான் செய்தார் சீனா, சிசூவான் மாநிலத்தின் செங்டு நகரத்தில் உள்ள பெண்மணி ஒருவர்.  அவருக்குத் தெரிந்த வேலை என்பது உணவகங்களில்  உணவுத்தட்டுகளைக் கழுவுகிற வேலை தான். உணவுத்தட்டுகள் மட்டும் அல்ல இன்னும் உணவகத்தைச் சுத்தம் செய்வது, கழிவறைகளைக் கழுவுவது போன்ற வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது அவரது வாடிக்கை. அதிலே அவருக்கு ஒரு திருப்தி. "என்னால் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவாமல் இருக்க முடியாது. அது எனது தினசரி வேலையாக பழகிப் போய் விட்டது" என்கிறார் அவர்.

அவர் இப்படியொரு வேலை செய்வது எப்படி வெளிச்சத்திற்கு வந்தது? காலையில் வேலைக்கு வரும் போது தினசரி   அவர் Bentley காரில் வந்திறங்குவதை பத்திரிக்கை நிருபர்  ஒருவர் கவனித்துவிட்டார்  அப்படி வந்து இறங்கும் போது பத்து பாத்திரங்கள் கழுவும் உடையோடும்  கால்களில் கறுப்பு நிற  தடித்த பூட்ஸ்களோடு  வந்து இறங்குவதைப் பார்த்து  அதை செய்தியாக்கிவிட்டார்! பின்னர் அது உலக செய்தியாக மாறிவிட்டது!

இந்தப் பெண்மணியின் மகள் என்ன சொல்லுகிறார்?  "என் தாயாரால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. அவர் வேலைக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் விரும்பியதைச் செய்யட்டும் என்று நான் விட்டுவிட்டேன். இப்போது ஓர் உணவகத்தில் அவர் வேலை செய்கிறார். நான் தான் அவரை எனது Bentley காரில் காலையில் உணவகத்திற்குக் கொண்டு செல்வதும் திரும்பவும் மாலை நேரத்திலும்  கொண்டு  வருவதுமாக இருக்கிறேன்.  அவர் என்ன விரும்புகிறாரோ  அதை செய்யட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை!" என்கிறார்.

சீனர்கள் பொதுவாகவே சும்மா இருக்க விரும்புவதில்லை. நம் நாட்டில் கூட அதனை நாம் பார்க்கிறோம். தங்களால் முடியும்வரை வேலை செய்கிறவர்கள் அவர்கள். வயதாகி விட்டது. ஓய்வு எடுக்கலாம் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.  ஓய்வு எடுக்கும் கலாச்சாரம் அவர்களிடம் இல்லை.

வழக்கமாக சொல்லுவதைப் போல சீனர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது  நிறையவே உள்ளன! கற்றுக்கொள்ள முயற்சி  செய்வோம்!

No comments:

Post a Comment